Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன் வசந்தன்-அத்தியாயம் 25

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 25

“நாளைக்கு எனக்கு கல்யாணம் …”என்ற அபியின் வார்த்தைகள் கூத்தீட்டிகளாக மாறி அருணினின் காதுகளைத் துளைத்தது…அவள் பேசும் பாஷையே புரியாதவன் போல் மலங்க விழித்தான் …காலுக்குகீழே பூமிநழுவுவது போல் உணர்ந்து மூச்சுவிடவும் மறந்து அவளை வெறித்தான் .

“ஆக்சுவலா என்னோட கல்யாணமா இருந்திருக்க வேண்டும் ,ஆனா இப்போ அது என்னோடது இல்லை …வேற யாருதோ ..”

அபியின் இந்த வார்த்தைகளை கேட்ட பின்னர் தான் அருணுக்கு போன உயிர் திரும்பியது போல் இருந்தது..

இப்படி ஒருவனது மனதில் சூராவளியாய் புகுந்து ஓருகணம் அவனது அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்த்ததையோ,அல்லது மறுகணமே பூந்தென்றலாக வீசி அவனை ஆசுவாசப்படுத்தியதையோ எதையும் அறியாமல் அபி நேரே பார்த்து இலக்கில்லாமல் வெறித்தபடி பேசிக்கொண்டிருந்தாள்.

“ஒன்னு தெரியுமா அந்த யாரோ யாருன்னு ?என்னோட கூடப்பொறந்த சிஸ்டர்”
என்றாள் ஒரு கசந்த முறுவலுடன் .

“அபி ..”என்று அழைத்துஏதோ சொல்லப் போனவனை தடுத்து

“இல்லை அருண் ,எதுவும் பேசாத ,நான் முழுசா சொல்லி முடிச்சிடுறேன்..இந்த சந்தர்ப்பத்தை விட்டா இனிமேல் இதை சொல்ற மன நிலையும் சூழ்நிலையும் இன்னொரு முறை அமையுமான்னு தெரியலை.சோ நான் பேசிடறேன்..”

என்று தன்னுடைய கதையை கூறத்தொடங்கினாள் அபி.

நானும் என்னோட சிஸ்டர் அனுராதாவும் ஐடென்டிக்கல் டுவின்ஸ்…அப்பா ,அம்மா நாங்க ரெண்டு பேரும்ன்னு எங்களோடது ஒரு அழகான குடும்பம் ..அப்பா ராஜ சேகர் டெக்ஸ்டைல்ஸ் பிசினஸ் பண்றார்,அம்மா ஜெயலக்ஷ்மி ஹோம் மேக்கர்..

நான் அப்பா செல்லம் ,அவ அம்மா செல்லம் ,

நாங்க பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும் குணாதிசயத்துல அப்படியே எதிர் துருவங்கள், நான் ரொம்ப பேசமாட்டேன் ரிசர்வ்ட்டு டைப், அனு கல கலன்னு பேசுற டைப் ,எப்பவும் அவளை சுத்தி ஒரு கூட்டம் இருக்கும், அப்படியே காந்தம் மாதிரி இழுத்துடுவா ..

எல்லா ரெட்டை பிள்ளைகள் போலவும் நாங்களும் ரொம்ப க்ளொஸ்,என் மனசுல நெனைக்கறத நான் மனம்விட்டு சொல்ல கூடிய ஒரே ஆள் அவ தான் , அவளும் அப்படிதான் ..எங்களுக்குள்ள ஒளிவு மறைவே இருந்ததில்லை.

ப்ளஸ் 2 முடிச்சப்புறம் ,நான் பீ ஈ சேர்ந்தேன் ..அவ ஃபேஷன் டிசைனிங் படிச்சா..

படிச்சி முடிச்சதும் எனக்கு வேலைக்குப்போகணும்ன்னு ஆசை ,ஆனா அப்பாவுக்கு ஊருக்கெல்லாம் போய் வேலைப்பார்க்கறது பிடிக்கலை…அவரு பார்த்திருக்கற மாப்பிள்ளையை கட்டிகணும்ன்னு சொன்னாரு ..மொதல்ல கொஞ்சம் யோசிச்சேன் ..நான் எப்பவுமே அப்பாவ எதிர்த்து பேசினதில்லை,அவரு கொஞ்சம் அழுத்தி சொன்னாருன்னா சரின்னு கேட்டுப்பேன்..ஆனா என்னோட சிஸ்டர் அப்படி கெடையாது,அவளுக்கு வேணும்ங்கறதை அடம்பிடிச்சாவது நடத்திக்குவா… அப்பா வார்த்தையை மீற தைரியம் இல்லாம என்னோட கனவுகளையெல்லாம் விட்டுடு அவரு சொன்ன பையன கட்டிக்க ஒத்துகிடேன், அவன் பேர் கார்த்திக் ..

நல்ல இடம் ,பையனுக்கு பெங்களூருல வேலை ,அவங்களா தேடி வராங்கன்னு ஏகப்பட்ட பில்டப்புகளோட வந்தார் அந்த கார்த்திக் …

பார்க்க நல்லா தான் இருந்தார் ,முதல் முறை பார்க்கறவர் மாதிரி இல்லாம ரொம்ப தெரிஞ்சவர் மாதிரி சகஜமா பேசினார் ,என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னார், எனக்கும் பெருசா குறைபட ஒன்னும் இல்லை ,அப்பா கேட்டதுக்கு நானும் சரின்னு சொல்லிடேன் ..

கூட படிச்சவங்கலாம் விஷயத்த கேள்விப்பட்டு கொஞ்சம் பொறாமையா பேசும்போது மனசுக்குல்ல எனக்கு கொஞ்சம் பெருமையா கூட இருந்தது…
நிச்சயதர்த்தம் முடிவு பண்ணினாங்க ,நானும் அவரும் ஃபோன்ல பேச ஆரம்பிச்சோம்,.. என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு மெதுவா ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சிக்க ஆரம்பிச்சோம்..,


என்ன தான் அபி சொல்வதெல்லாம் அவளது கடந்த காலமாக இருந்தாலும் அருணுக்கு இதயத்தில் முள்தைத்தது போல் வலித்தது.. அபிக்கு வேறு யாருடனோ நிச்சயம் ஆகியிருந்ததையே அவனால் தாங்க முடியவில்லை,ஒருவேளை அவள் அவனை விரும்பியிருந்தால்?அவனுக்கு மண்டை வெடித்து விடும்போல இருந்தது,இருப்பினும் வெளியே அமைதியாக் காட்டிக்கொண்டான் ..

அபி அவனது தவிப்பை அறியாமல் தன் போக்கில் தொடர்ந்தாள்..

“ஆனா ஒரே ஒரு குறை தான் என்னைப் பெண்பார்க்க வந்தப்ப அனு இல்லை,அவ ஃப்ரெண்ட்ஸோட கொல்லி ஹில்ஸ்க்கு கேம்பிங்க் போய் இருந்தா.. ஒருவழியா அவ திரும்பிவந்ததும் எனக்கு அவ்ளோ சந்தோஷம் ,வாழ்க்கையே ஒரு நாள்ல தலைகீழா மாறின குழப்பம் ,முதல்முதலா ஒரு பையன்கிட்ட பேசுற குறுகுறுப்பு, பரபரப்பு இப்படி அவ கிட்ட பகிர்ந்துக்க எனக்கு அவ்ளோ விஷயம் இருந்தது

அவகிட்ட கார்த்திக்க பத்தி சொன்னேன் ,அவனை பிடிச்சிருக்குன்னு சொன்னேன், அவளும் ரொம்ப ஆர்வமாகிட்டா,என்னை கிண்டல் பண்ணி ஒருவழியாக்கிட்டா,

எல்லாமே நல்லா தான் போட்டு இருந்த து, ஆனா நிச்சயத்துக்கு நாள் நெருங்க நெருங்க எனக்கு உள்ளுக்குள்ள் ஏதோ தப்பா நடக்கப் போற மாதிரியே தோணிட்டு இருந்தது ,ஆனா அதை மற்றவங்களுக்கும் சொல்லி அவங்களையும் கலவரப்படுத்த வேணான்னு நான் எனக்குள்ளையே அந்த ஃபீலிங்ஸ மறைச்சிக்கிடேன் ..

என்னோட சிஸ்டரையும் பார்க்கவே முடியலை ,எனக்கிருந்த குழப்பமான மன நிலைமையில அதை பெருசா நான் கண்டுக்கல,அவ ஏதோ ப்ராஜெக்ட் விஷயமா பிஸியா இருக்கா போலன்னு நெனைச்சிகிட்டேன் ..

கார்த்திக்கும் எனக்கு கால் பண்றதை நிறுத்திட்டார்..நானா கூப்பிட்டு பேசுற அளவுக்கு தைரியமும் எனக்கில்லை, என்னோட கவலை ,குழப்பம் இதைஎல்லாம் ஷேர் பண்ணிக்க அனுவும் கூட இல்லை ..

இப்படி தவிப்பும் இனம் புரியாத பயமுமாக அந்த நாள்விடிந்தது..

எங்க பெரிய வீடு முழுக்க அவ்ளோ சொந்தபந்தங்கள், மாமா ,அத்தை,சித்தி,பெரியப்பா, தாத்தா ,பாட்டி ,நண்டு சிண்டுகள்ன்னு வீடே ஜேஜேன்னு இருந்தது ..நான் முழுக்க அலங்காரத்தோட ,கை சிவக்க மருதாணி ,அதைவிட சிவந்த முகமா நடுநாயகமா உக்காந்திருக்கேன் ,என்னோட வாழ்க்கைல ஒரு முக்கியமான தருணத்துக்காக நெஞ்சு படபடக்க காத்திருக்கேன் ..

நேரம் போய்ட்டே இருக்கு வரவேண்டிய மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரலை ,கொஞ்சம் கொஞ்சமா வந்த ஜனங்கள் முணுமுணுக்க ஆரம்பிச்சாங்க ,

எனக்கு பதற்றம் அதிகமாகுது,அப்போ எங்கிருந்தோ “மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க “என்று கேட்ட குரல் என்னோட போன உயிர திரும்ப கூட்டிவந்தது .

ஆனால் தடல்புடலாக விருந்தினர் புடைசூழவராமல் கார்த்திக் மட்டும் தனியாக வந்தான் ,மாப்பிள்ளையாக இல்லை ,வெறும் சேதி சொல்லுபவனாக,

அவனுக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லையாம் ,என்னுடைய தங்கை அனுவை தான் அவனுக்கு பிடித்திருக்கிறதாம் …அதனால இந்த நிச்சயம் நடக்காதாம்..

அருண் என்னோட தங்கை அனுவோட வசீகரம் அந்த மாதிரி, அவளை ஒரு முறை பார்த்தவங்களால அவளை மறக்கவே முடியாது ,துருதுருன்னு சட்டென்று எல்லாரையும் கவர்ந்திழுக்கும் ஷக்தி அவளுக்கு எப்பவுமே உண்டு ,ஆனால் அந்த காந்த சத்திக்கு கார்த்திக்கும் மயங்கி போனது தான் என்னோட துரதிஷ்டம் ..

நான் வீட்டில இல்லாத ஒரு நாள் என்னைப் பார்க்க வந்த கார்த்திக் நான்ன்னு நெனைச்சி அனுகிட்ட பேசி இருக்கார் ,அப்போ அவளை ரொம்ப புடிச்சிபோச்சாம், அனுவுக்கும் அப்படித் தானாம், லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்ன்னு சொன்னாங்க..” என்றாள் ஒரு கசந்த முருவலுடன் ,இதெல்லாம் அப்புறமா நான் தெரிஞ்சிக்கிட்ட விஷயம் .
.
எனக்கு ஒன்னுமே புரியலை ,எப்படி ரியாக்ட் பண்றதுன்னு கூட தெரியாம உறைஞ்சி போய் நின்னுட்டேன் …

இப்படிலாம் சினிமாவுலதான் நடக்கும்ன்னு கேள்விப்பட்டிருக்கேன் ,என்னோட லைஃப் ல நடக்கும்ன்னு கனவுலையும் நெனைச்சதில்லை ..வந்திருந்த உறவுக்காரங்களெல்லாம் அவங்கவங்களுக்கு உகந்த படி ,அங்கலாய்தோ , பரிதாப்பட்டோ,ஆறுதல் கூறியோ,ஏதோ சம்பரதாயமாக பேசிவிட்டு அவர்களது கடமை முடிந்தது என்று கிளம்பிச்சென்றனர் .

கார்த்திக்கின் மறுப்பு ஒரு அடி என்றால் ,அதற்கு மேலான இடி அன்று இரவு விழுந்தது..அன்னிக்கு நாங்க வீட்ல யாருமே தூங்கலை ,யாரும் யார் கிட்டையும் பேசிக்கவும் இல்லை ,திடீரென்று நாங்க நாலுபேருமே அன்னியப்பட்டு போன மாதிரி ஆகிடுச்சி..தூக்கம் வராம தவிச்சிட்டு இருந்த நான் ,வீட்டுக்குள்ள மூச்சு முட்டுற மாதிரி இருக்கவே மொட்டைமாடிக்கு காத்துவாங்க போனேன் ,அங்க எங்க அப்பாவும் அம்மாவும் பேசுவதைக் கேட்க நேர்ந்தது ..அப்போ தான் புரியாத பல விஷயங்கள் எனக்கு புரிஞ்சது ..

“ஏங்க ,அந்த பையனையே அனுவுக்கு கட்டி வச்சிடலாம்ங்க “என்ற அம்மாவின் குரல் அமிலத்தை தெளித்தது போல் இருந்தது.

“என்ன பேசுற லட்சுமி? அபிய பத்தி யோசிக்க வேண்டாமா? இது அப்பாவின் கண்டனக்குரல்.

“நீங்க ஒரு பொண்ண மட்டும் பார்க்குறீங்க ,இன்னொரு பொண்ணை யாரு பார்க்கறது?அனு இன்னிக்கு கையை வெட்டிக்க பார்த்தா.. நான் சரியான நேரத்துக்கு போனதால காப்பாத்த முடிஞ்சது ,இல்லைனா என்ன ஆகியிருக்கும்?பேசாம அவ விருப்பபடி இந்த மாப்பிள்ளைக்கே கட்டி வச்சிடலாம்ங்க..நம்ம அபிக்கு வேற நல்ல மாப்பிள்ளை பார்க்கலாம், இந்த சம்பந்தம் வேண்டாம்ன்னு சொன்னா ரெண்டு பொன்ணுங்களோட வாழ்க்கையும் வீணாப் போய்டும்,எனக்கென்னமோ அனு வேற யாரையும் கல்யாணம் பண்ணிப்பான்னு தோணலை.."

"அப்போ அபிக்கு துரோகம் பண்ண சொல்றியா ?"

"இது எப்படிங்க துரோகம் ஆகும் ?அவளை வேண்டாம்ன்னு சொல்ற மாப்பிள்ளைக்கு கட்டி வச்சா தாங்க அது துரோகம் ,இன்னிக்கு நீங்க அதை தான் பண்ணப் பார்த்தீங்க ?நல்ல வேளை அந்த தம்பி உண்மைய சொல்லிடுச்சி ,இல்லாட்டி நீங்க அடம் புடிச்சி இந்த கல்யாணத்த நடத்திவச்சி ,மூனு பேரோட வாழ்க்கையையும் பாழடிச்சிருப்பீங்க …
இங்க பாருங்க அபி நீங்க சொன்னா கேட்டுப்பா ,நாம அவளுக்கு வேற இடத்துல கல்யாணம் பண்ணிட்டு அப்புறமா அனுக்கு பண்ணலாம் எந்த பிரச்சனையும் வராது ,அபிக்கு என்னோட அண்ணன் பையன் சுரேஷ கூட கட்டலாம் நல்ல பையன் ,நான் மொதல்லையே சொன்னேன் நீங்க தான் வேண்டாம்ன்னு சொல்லிடீங்க ,இப்ப என்ன சொல்றீங்க ?"


அப்பா ஒரு நீண்ட மவுனத்திற்கு பிறகு சம்மதமாக தலையாட்டவும் .அதன் பிறகு ஒரு கணம் கூட அங்கு நிற்கவில்லை நான் ..

அப்போ அவங்க எல்லாருக்குமே ஏற்கனவே தெரிஞ்சிருக்கு ,அந்த கார்த்திக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னு ,அப்புறம் எதுக்காக என்னை பொம்மை மாதிரி அலங்காரம் பண்ணி நடுவீட்ல நிக்கவச்சி மூக்கறுத்தாங்க ?

உனக்கு தெரியுமா ?அவ்ளோ பேர் முன்னாடி ,அவன் என்னை பிடிக்கலைன்னு சொல்லும்போது அந்த அவமானத்தை தாங்கிட்டு நிக்கும் போது எவ்ளோ கூனிகுறுகி போனேன்னு ?அப்படியே பூமிகுள்ள புதைஞ்சி போய்டமாட்டோமான்னு ஏங்கினேன் தெரியுமா?ஆனா என்னோட வலி அவமானம் எதுவும் அவங்களுக்கு முக்கியம் இல்லை ,நான் எப்படி உணருவேன் ,எவ்வளவு உடைஞ்சி போய் இருப்பேன்ங்கறத பத்தி கவலை இல்லை ,அந்த நிமிஷம் நான் நொறுங்கி போனேன் அருண் ,

கார்த்திக்கோட மறுப்பின் வலி ,சொந்த தங்கை முதுகுல குத்தின ரணம் ,பெத்தவங்களோட துரோகம் எல்லாதையும் அன்னிக்கு நான் தாங்கினேன் ..
என்று கண்களில் கண்ணீருடன் மனதில் வேதனையைத் தாங்கி அபி பேசுவது பொறுக்காமல் அருண் ஏதோ சொல்ல முனைய

“வேணாம் அருண் ,என் மேல பரிதாபப்படாத, அதை நிறைய பார்த்துட்டேன்..”
சிலர் எள்ளி நகையாடியதை கூட பொறுத்துகொண்ட அபியால் ,நெருங்கிய உறவுகளின் பச்சாதாபத்தை தாங்க முடியவில்லை,அப்படி பிறர் பார்த்து பரிதாபப்படும் நிலையில் தான் நிற்பதே பெருத்த அவமானமாக இருந்தது அவளுக்கு.

அவள் விரும்பியதெல்லாம் அவளுடைய குடும்பம் ஒன்றாக சேர்ந்து ஓரணியாக நின்று அந்த கார்த்திக்கிற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை தான் ,ஆனால் அவளது குடும்பம் இருபக்கமும் சாதகமாக சுமூகமாக விஷயத்தை முடிக்கவே முனைந்தனர் ..

“ஏதோ நான் உணர்ச்சி செத்த ஒரு ஜடம் போல நினைத்துக்கொண்டு எனக்கு அடுத்த கல்யாணத்திற்கு திட்டமிட்டதை எப்படி என்னால் தாங்க முடியும் ?

என்னை பொறுத்தவரை என் குடும்பம் தான் என் உலகம்… அன்று என் உலகமே அழிந்து போனதாகத்தான் நான் உணர்ந்தேன் ,என் குடும்பம் போல வருமா என்று நான் கொண்ட கர்வத்திற்கு அன்று மரணாடி விழுந்த து..அன்றோடு என் குடும்பத்தோடு என்னை பிணைத்திருந்த பாசவலையாவும் அறுந்தது.

கடல் சூழ்ந்த தீவில் யாருமில்லாமல் அனாதையாக நிற்கற மாதிரி இருந்ததது..இனி ஒரு நாளும் எனக்கு துரோகம் இழைத்தவர்களுடன் இருக்ககூடாது என்று முடிவெடுத்தேன் ..

ஏற்கனவே இன்ஃபொடெக்கில் இருந்து எனக்கு வேலைக்கான ஆஃபர் லெட்டர் வந்திருந்தது ,ஆனால் இந்த உலகமகா மாப்பிள்ளைக்காக அதை ஒப்புக்கொள்ளாமல் இருந்தேன் ,அன்று இரவே நான் வேலையில் சேர்வதாக மெயில் அனுப்பினேன் ..என்னோட ஃப்ரெண்ட் காவ்யா கூட ஊருக்கு போக டிக்கெட் புக் பண்ணிட்டு, மறுநாள் கிளம்புவதற்கு பெட்டியுடன் தான் நான் அறையைவிட்டே வெளியேவந்தேன்..

“என்னம்மா எங்க கிளம்பிட்ட ?”அப்பா அதிர்ந்த குரல்

“நான் சென்னைக்கு போறேன் …எனக்கு அங்க வேலை கெடைச்சிருக்கு ,என்னொட ஃப்ரெண்ட் காவ்யா வீட்ல தங்கிப்பேன் ,அங்க போனதும் அட்ரெஸ் மெசேஜ் பண்றேன் ,ஆனா அது வெறும் ஃபார்மாலிடிக்கு தான் தயவு செஞ்சி யாரும் வந்துடாதீங்க ..”என்றாள் உணர்ச்சி மரத்தகுரலில்..

“அம்மாடி அபி ,ஏன்மா இப்படியெல்லாம் பேசுற?” என்றார் அப்பா தழுதழுத்த குரலில்..

“வேற எப்படி பேசுறது? என்னைப் பத்தி கொஞ்சம் கூட கவலைப் படாத ஃபாமிலில எனக்கு என்ன வேலை?

இந்த மாப்பிள்ளை போனால் என்ன ?உனக்கு ராஜா மாதிரி வேற மாப்பிள்ளை பார்க்கறேன் மா…”

“எதுக்கு திரும்ப ஊரைக்கூட்டி வச்சி என்னை அவமானப்படுத்தவா?”

என்றாள் ஆவேசமாக
அவளது அப்பா வேதனையில் தலைகவிழ்ந்தார்.

“ஏன்ப்பா இப்படி பண்ணீங்க?அந்த கார்த்திக் என்னைப் பிடிக்கலைன்னு வந்து சொன்னதும் நீங்க அவன் கழுத்தை பிடிச்சி வெளியே தள்ளுவீங்கன்னு நெனைச்சேன் ,அனு அவன் சொன்னதெல்லாம் பொய்ன்னு சொல்லுவான்னு எதிர் பார்த்தேன் ..ஆனா அப்படி எதுவுமே நடக்கலை.உங்க எல்லாருக்கும் மொதல்லையே இந்த விஷயம் தெரிஞ்சிருக்கு ,இருந்தும் எங்கிட்ட சொல்லாம மறைச்சிருக்கீங்க ..ஏன் எங்கிட்ட சொல்லனும்ன்னு ஒரு முறை கூட தோணலையா? ஏன் பா இப்படி பண்ணீங்க ?என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நானே விட்டுக்கொடுத்திருப்பேனே..என் கூடப் பொறந்தவளுக்காக நான் உயிரையே கொடுப்பேன் ,அஃப்டர் ஆல் இந்த கல்யாணத்தை விட்டுக்கொடுத்திருக்கமாட்டேனா?

இவ்ளோ பெரிய அவமானத்தை தவிர்த்திருக்கலாம் …ஆனா நீங்க என்ன பண்ணீங்க? என்னை அலங்காரம் பண்ணி நடுவீட்ல உக்கார வச்சி ,ஊர் பார்த்து சிரிக்கற மாதிரி செஞ்சிடீங்க..”


அவர்கள் மூவரும் வாய் பேசகூட முடியாத அளவுக்கு குற்ற உணர்வில் தவித்துகொண்டிருந்தனர் .

“ஏன் பா இப்படி பண்ணீங்க ?உங்க மூனு பேரையும் நான் எவ்வளவு நம்பினேன் ,எவ்வளவு பாசம் வச்சிருந்தேன் …எல்லாத்தையும் ஒரு நிமிஷத்துல தூள் தூளா நொறுக்கிடீங்களே பா..”

என்று அவள் பேச பேச கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது .பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவளாக முகத்தை துடைத்துக்கொண்டு ,

“சரி ,அனுவுக்கே அந்த மாப்பிள்ளையை கட்டி வைங்க ,எனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை,ஆனா இனிமேல் நீங்க யாரும் என்னைப் பார்க்க வராதீங்க.நானும் வரமாட்டேன் ..இனி உங்களுக்கு ஒரு பொண்ணுதான்னு நெனைச்சிகோங்க …நான் போறேன் ..”
என்று கூறி விட்டு அன்று வீட்டை விட்டு வெளியேறியவள் தான் இப்போ எட்டுமாசத்துக்கு மேல ஆகுது ..
தொடரும் …
 
Last edited:
அடப்பாவிபளா
குடும்பமே ஏமாத்தி இருக்காங்க
 
Top