Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன் வசந்தன்-அத்தியாயம் 22

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 22

குன்னூர் மலைப்பாதையின் கொண்டைஊசி வளைவுகளில் , அடர்த்தியான பனித்திரையைக் கிழித்துக்கொண்டு அந்த கார் விரைந்துகொண்டிருந்தது… மலைகளின் பின்னே சூரியன் ஒளிந்துகொண்டு கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தது.. வைகறை வேளையில் அந்த மலைபிரதேசம் ஏதோ தேவலோகம் போல காட்சியளித்தது, அபி ஜன்னல் கதவை லேசாக திறந்து பனிக்காற்றை முகத்தில் மோதவிட்டு அந்த சிலிர்ப்பை ரசித்தாள், குளிரில் உடல் நடுங்க, கைககளை குறுக்கே கட்டிக்கொண்டு அனிச்சையாக தன்னருகில் இருந்தவனை நெருங்கி அமர்ந்து அவன் கதகதப்பான தோளில் சாய்ந்து கொண்டாள்..

ஒன்றே போல் சீராக வெட்டப்பட்டு பச்சை பட்டாடையை விரித்தால் போல் காட்சியளித்த தேயிலை தோட்டங்கள் .. யூகலிப்டஸ் மரங்கள்.. பனிபடர்ந்த மலைகள் ..அந்த உயரதிலிருந்து நிலமடந்தையை அணைக்க வேகமாக பாயும் பாலருவிகள், நாசியில் நுழைந்து நாளங்களை உயிர்க்க செய்யும் மூலிகை வாசம், தோளில் கிள்ளையாக தொற்றிக்கொள்ளும் பாவை என்று தான் இழக்கும் இத்தனை இன்பங்களையும் அறியாமல் ஆழ்ந்த நித்திரையில் லயித்திருந்தான் அருண்…

அபி இந்த இடத்திற்கு எத்தனையோமுறை வந்திருக்கிறாள், ஆனால் ஒவ்வொரு முறை வரும் போதும் இந்த இயற்கை அன்னையின் அழகை வியந்து ரசிக்காமல் கடக்க முடிவதில்லை அவளால்.. அபியின் குடும்பத்திற்கு சொந்தமாக குன்னூரில் தோட்டத்துடன் கூடிய ஒரு சிறிய வீடு இருந்தது, ஒவ்வொரு விடுமுறைக்கும் அங்கு வந்து செலவிட்ட இனிய நினைவுகளில் அவள் கண்கள் பனித்தது, இப்போது அவை அனைத்தும் கானல் நீராகி போன வேதனை நெஞ்சை அழுத்த ஆதரவாக அருணின் தோளில்இன்னும் நன்றாக சாய்ந்து கொண்டாள்,அதே சமயம் அருணின் கரம் அவளின் தோளினை சுற்றி வளைத்து தன்னோடு சேர்த்து ஆறுதலாக அணைத்துக்கொண்டது.. திடுக்கிட்டு போய் அவனை முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்அபி, அவன் கண்கள் மூடி இருப்பதை பார்த்து சற்றே ஆசுவாசப் பெருமூச்செறிந்தாள்..

மீண்டும் தன்னுடைய சோகக்கடலில் மூழ்கிவிடும் முன் ,தனக்கு மிகவும் பிடித்த இடத்திற்கு தனக்கு மிகவும் பிரியமானவனுடன் முதன் முதலில் வருகிறாள் என்பது உறைத்தது அபிக்கு…அந்த எண்ணமே புது உற்சாகத்தை தந்தது, மனம் லேசாக காற்றில் மிதப்பதுபோல் ஆனந்தத்தை உணர்ந்தாள், கண்களில் மையலுடனும் ,முகத்தில் சிறு நாணத்துடனும் அவள் அருணை நிமிர்ந்துபார்த்தாள் ,எந்தவித கவலையும் இல்லாமல் அமைதியாக உறங்கும் அவனை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருந்தது , திடீரென அவன் விழிப்பதற்கு ஆயத்தம் போல லேசாக அசையவும் சட்டென்று விலகியமர்ந்து, வெளியே வேடிக்கை பார்க்கும் சாக்கில் முகத்தை திருப்பிக்கொண்டாள்…


இவர்களது கார் ட்ரைனிங் சென்டர் ஐ அடைந்தது, அந்த இடமே மிகவும் ரம்மியமாக இருந்தது , நகரத்தில் பரபரப்புகளில் இருந்து விலகி, அமைதியாக இயற்கை சூழலில் அமைந்திருந்தது.. அபிக்கு அந்த இடத்தை பார்த்த நொடியில் பிடித்துவிடுவிட்டது.. விவேக்கின் மற்றுமொரு டீமும் இவர்களுடன் இந்த பயிற்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தனர் ,மொத்தம் 15 பேர் கொண்ட குழு அவர்களுடையது…

அவர்களின் பிரதான பயிற்சி இடத்திற்கு செல்லும் முன் அனைவருக்கும் முதலில் தயார் ஆவதற்காக தற்காலிக இடம் ஒதுக்கப்பட்டது, அனைவரும் ரெடி ஆகி உணவருந்திய பின்னர் அவர்களது பயிற்சி இடத்திற்கு ஜீப்பில் அழைத்து செல்லப்பட்டனர்.. காடுகளுக்கு நடுவில் இருந்த மைதானமும் ஒரு சிறு குடில் போன்ற அமைப்பும் தான் அவர்களின் பயிற்சிப்பட்டறை..

முதலில் அவர்களது பயிற்சியாளர் ,அனைவரையும் சிறு குழுக்களாக பிரித்து, ஒவ்வொருஅணியினரையும் தனித்தனியாக அவர்களுக்கான டென்ட்டை எப்படி கட்டுவது என்று விளக்கினார் ,பிறகு அவர்களையே செய்யவைத்தார் ,எல்லாரும் மிக ஆர்வமாக பங்கேற்றனர் ,புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ளும் ஆர்வம் அனைவரிடமும் தெரிந்தது ,தவறு நேரும்போது சிரித்து,கேலிகிண்டலாக வேலை பார்த்தது ,இடையில் நேரும் சிக்கல்களுக்கு சமயோஜிதமாக யோசித்து தீர்வுகாண்பது ,அதே சமயம் ஒருவருக்கொருவர் ஊக்கமளித்துக்கொண்டு வேலை பார்த்தது சேர்ந்து அணியாக வேலை செய்தது இவை அனைத்தும் அனைவருக்கிடையே ஒரு பரஸ்பரபுரிதலையும், குழுவுணர்வினையும் அதிகரித்தது ..
இதேபோல அவர்களின் உடல் மன வலிமையை சோதிப்பது போல்பல விளையாட்டுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன..
அவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவும் பாரம்பரிய இயற்கைஉணவாக இருந்ததது, துரிதவுணவுகளின் ருசிகண்ட நாக்கிற்கு இது புது அனுபவமாக இருந்தது..


செங்குத்தான பாறையில் ஏறுவது , சிறு மரபாலத்தில் நடப்பது போன்று உடல் வலிமையை சோதிக்கும் விளையாட்டுகள், புதிர்கள் போன்று அறிவிற்கு சவால் விடும் விளையாட்டுக்கள் என்று பலவிதமாக வடிவமைக்கப்பட்டிருந்தன, இவை அனைத்தும் குழுவாக செய்வதாகவும் ,ஒருவருக்கொருவர் உதவுதல் மூலம் பூர்த்தி அடைவது போலவும் அமைந்தது ,அந்த நாள் முடிவில் தனது சக டீம் மேட் ஐ பற்றி மேலும் தெரிந்து கொண்டதாக ,அவர்களுடனான நட்பு அதிகரித்ததாக உணர்ந்தனர்..

பழக்கமில்லாத உடல் பயிற்சிகளால் உடல் களைத்து எப்போது படுக்கையில் விழுவோம் என்று ஏங்கி கொண்டிருந்த போதும் மனதின் உற்சாகம் மட்டும் மட்டுப்படவில்லை யாருக்கும்..

அவர்கள் அமைத்த டென்ட்டில் தான் அவரவர் உறங்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.. டென்ட் என்றால் ஏனோ தானோ என்று இல்லாமல் நல்ல இடவசதியுடன் ,மூன்றுபேர் உறங்குவதற்கு தாராளமாக இருந்தது..படுக்கைவசதியும் கொடுக்கப்பட்டிருந்தது..

முதலில் காட்டுக்கு நடுவில் எப்படி உறங்குவது என்று யோசனை இருந்தது ஆனால் அங்கே பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக நன்றாக இருப்பதை அவர்களுக்கு தெரிவித்தனர் ,அந்த இடம் முழுவதும் மின்வேலிகள் அமைக்கப்பட்டு ,பாதுகாக்க பட்டிருந்தது மேலும் வனவிலங்குகள் எறிவருவதற்கு சிரமமாக சற்று மேட்டுப்பாங்கான இடத்தில் தான் அவர்களது முகாம் அமைந்திருந்தது, எனவே அனைவரும் அச்சம் நீங்கி ,எங்கோ யானை பிளிறும் சத்தமும் ஓநாய்களின் ஊளையிடும் சத்தமும் ஒருங்கே கேட்டு மயிர்கூச்செரிய செய்தபோதும் அவர்கள் எதிர்கொள்ளப்போகும் புதுவிதமான அனுபவத்திற்காக ஆர்வமாகவே காத்திருந்தனர்..

இரவில் குளிருக்கு இதமாக கேம்ப் ஃபயர் கொளுத்தப்பட்டது , சில வேடிக்கை விளையாட்டுகள், ஆடல் பாடல்களுக்கு பிறகு ,பெரும்பாலோனோர் உறங்க சென்றுவிட,நம் நால்வர் குழுமட்டும் உறக்கம் பிடிக்காமல் தங்களுக்கான தனி விளையாட்டில் ஈடுபட்டனர்..

விக்கி தான் மறைத்து வைத்திருந்த ஒரு பியர் பாட்டிலை கையில் எடுத்தான், அதை கண்டதும் “டேய் என்னடா இது..?”என்று அருண் அதிர்ந்தான்..

“பயப்படாத டா இது குடிக்கறதுக்கு இல்லை..நாம இப்போ கேம் விளையாட போறோம், எல்லாருக்கும் தெரிஞ்ச கேம் தான் ட்ரூத் ஆர் டேர், உங்களுக்கு ரூல்ஸ் தெரிஞ்சிருக்கும் இருந்தாலும் சொல்றேன், நான் இந்த பாட்டிலை நடுவில வச்சி சுத்திவிடுவேன் அது யாரை பாயிண்ட் பண்ணுதோ அவங்கள ட்ரூத் ஆர் டேர் ச்சூஸ் பண்ணலாம் மத்தவங்க அவங்க என்ன பண்ணனும்னு சொல்லணும் சரியா..?”என்று விதிமுறைகளை விளக்கினான் விக்கி..
மற்ற மூவரும் சரி என்று கூறவும் ,விக்கி முதலில் பாட்டிலை சுத்திவிட்டான் அது பூர்ணாவை நோக்கி நின்றது..
“ஹேய்ய்..” என்று ஒரு உற்சாக கூச்சல் கிளம்பியது ,விக்கி அவளிடம்

"பூர்ணா.. ட்ரூத் ஆர் டேர் எதை ச்சூஸ் பண்ண போற..?”என்றான் ஆர்வமாக

பூர்ணா சிறு யோசனையின் பின் “டேர்..” என்று கூறவும் அங்கே மீண்டும்ஒரு ஆரவாரம் கிளம்பியது..

பூர்ணாவுக்கு என்ன டேர் சொல்லலாம் என்று விக்கி யோசிக்கும்போது ,அபி "பாட்டுப்பாட சொல்லலாமா? என்றாள்…

அவளை வினோதமாக பார்த்துவிட்டு விக்கி "என்ன அபி நீங்க இன்னும் LKG யே தாண்டாம இருக்கீங்க !!!அது மட்டுமில்லாம பூர்ணாவை பாடச்சொல்றது அவளுக்கு டேர் இல்லை கேக்குற நமக்கு தான்..” என்று சொல்லி சிரிக்க..

பூர்ணா அவனை முறைக்க அவன் கப்பென்று வாயை மூடிக்கொண்டான்..

பிறகு வழக்கம் போல் தனது உற்சாக குரலில் பேசத்தொடங்கினான் விக்கி..
“ஓகே நான் சொல்றேன் ..பூர்ணா.. நம்ம இன்ஸ்ட்ரக்டர் இருக்கானே அந்த மாங்கூஸ் மண்டை. .அவன் காலைல இருந்து விசில் அடிச்சி அடிச்சி என்னை சாவடிச்சிட்டான்… அங்க நிக்குறான் பாரு .. கர்ணக்கு கவசகுண்டலம் மாதிரி இவன் அந்த விசிலை கழட்டவே மாட்டேங்கறான் …நீ அந்த விசில உஷார் பண்ணிட்டு வரணும். .இங்கபாரு கேட்டுலாம் வாங்கிட்டு வரகூடாது ..அவருக்கு தெரியாம சுடனும் …”

“இவ்ளோ தானே இதோ வரேன்..
” என்று விட்டு பூர்ணா அவர்களது பயிற்சியாளரை நோக்கி சென்றாள், இவர்கள் மூவரும் தூரத்திலிருந்து கண்கொட்டாமல் அவளை பார்த்திருந்தனர்..

பூர்ணா சிறிதுநேரம் அவருடன் பேசிவிட்டு திரும்பி வந்தாள்..

“என்ன பூர்ணா டேர்ல தோத்துட்டியா..” என்று அவளை கிண்டலடித்தான் விக்கி..

“யாரு தோத்தது..? எங்க பரம்பரைக்கே முன் வச்ச காலை பின் வச்சி பழக்கம் இல்லை..” என்று அந்த விசிலை எடுத்து அவர்கள் முன் ஆட்டிக்காட்டினாள்..
மூவரும் நம்பமுடியாத அதிசயத்தில் திகைத்துப்போயினர்..

பூர்ணா தனது இல்லாத காலரை தூக்கிவிட்டு பெருமையடித்தாள்..

“எப்படி பூர்ணா..? நீ எடுத்ததை நாங்க பார்க்கவே இல்லையே..” என்றாள் அபி அப்போதும் பிரமிப்பு விலகாமல்

"அது தான் பூர்ணா … நான் போனேன் அவன் தோளை தொட்டேன் ,அவன் சுத்தினான் நான் சுட்டுட்டேன்..” என்றாள் விளையாட்டாக..

விக்கி அருணின் காதுகளில் கிசுகிசுத்தான் "மச்சான் இவ சரியான கேடியா இருப்பா போல, ட்ரைனிங் எடுத்தா கூட இவ்ளோ பெர்ஃபெக்ட்டா திருட முடியாது "

“ஆமான்டா மச்சி.. நீ எதுக்கும் பூர்ணா கிட்ட கொஞ்சம் கேர்ஃபுல்லா இரு" என்று விளையாட்டாக கூற ,விக்கி அதை உண்மையாகவே கருதி பூர்ணாவை சிறு பயத்துடன் பார்த்தான் …
அடுத்து அருண் பாட்டிலை சுழற்ற அது அபியை நோக்கி நின்றது ,

“ஓகே அபி.. உங்க டர்ன் சொல்லுங்க ட்ரூத் ஆர் டேர்..?”

அவள் சற்று தயங்கி பிறகு “ட்ரூத்..” என்றாள்..

அருண் ஏதோ கேட்க முயல அவன் கையை பிறர் அறியாமல் பற்றி தடுத்து விக்கி..

மச்சி.. இப்ப பாரு நான் எப்படி அசத்தறேன்னு...நான் பண்ணப்போற வேலையை பார்த்து நீ என்னை தலைல தூக்கி வச்சி கொண்டாட போற பாரு..” என்று பெருமையடித்தான்

“மொதல்ல நீ கேளு.. அப்புறம் பார்க்கலாம்..” என்றான் அருண்

“அபி நீங்க யாரையாவது லவ் பண்ணி இருக்கீங்களா ? என்றான் விக்கி

“என்ன இப்படிலாம் கேக்குறீங்க..!!” என்று முகம் சினுங்கினாள் அபி

“நோ..நோ.. கேம் னா கேம்தான் நீங்க பதில் சொல்லிதான்..” ஆகணும் என்றான் விக்கி விடாப்பிடியாக..

“ஆமா பண்ணி இருக்கேன்..” என்றாள் சிறுகுரலில்

அதை கேட்டு பூர்ணாவும் விக்கியும் பெரிதாக கூச்சலிட்டு கொண்டாட அபிக்கு மிக தர்மசங்கடமாக இருந்தது…
“பண்ணி இருக்கேன்னா என்ன அர்த்தம்..? அப்போ இப்ப பண்ணலையா..? கொழப்பாதீங்க அபி, நீங்க யாரை லவ் பண்றீங்கன்னு தெளிவா பேர் சொல்லுங்க..” என்றான் விக்கி

பூர்ணாவும் “ஆமா அபி…அது யாருன்னு சொல்லு..” என்று ஊக்கினாள்.

அருண் இந்த சம்பாஷணையை ஆர்வம் இல்லாதவன் போல் அமர்ந்திருந்தாலும் அவனும் அவள் சொல்லப்போகும் வார்த்தையை கேட்க ஆவலாக காதை தீட்டிக்கொண்டு காத்திருந்தான்..

ஒரு கணம் அவன் முகத்தை கடைக்கண்ணால் பார்த்தவள் ,ஒரு விஷம புன்னகையுடன் விக்கியிடம் திரும்பி அபி...
"நீங்க கேட்ட முதல் கேள்வியோட உங்க கேம் முடிஞ்சிடுச்சி, அடுத்த கேள்விக்கு பதில் சொல்லணும்னு உங்க ரூல்ஸ்ல இல்லை
..” என்றாள் ஏளனமாக..

அருண் விக்கியை கொன்றுவிடுவான் போல முறைத்தான்..

விக்கி மன்னிப்புக்கோரும் விதமாக முகத்தை பாவமாக வைத்துக்கொண்டான்..

"இது தான் உன்னோட மாஸ்டர் பிளான் ஆ, போடா நீயும் உன்னோட உதவாக்கரை மூளையும் ஒழுங்கா உருப்படியா நானே ஏதாவது கேட்டிருப்பேன், பெரிய இவனாட்டம் வந்துட்டான்...இப்ப அவ யாரையோ லவ் பண்ணி இருக்கேன்னு பாஸ்ட்டென்ஸ்ல சொல்லி என்னை இன்னும் காண்டாக்கினது தான் மிச்சம்..” என்றான் எரிச்சலாக..

“சாரி மச்சி கொஞ்சம் டைமிங் மிஸ் ஆகிடுச்சு..” என்றான் விக்கி சோகமாக

அடுத்து பூர்ணா பாட்டிலை சுழற்ற அது விக்கியை நோக்கி நின்றது ..

“ஹேய்ய்ய் எஸ்ஸ்..”என்று குதித்தான் விக்கி..

"கேக்றதுக்கு முன்னாடியே சொல்லிடறேன் எனக்கு டேர் தான்..” என்று பெருமையாக அறிவித்தான்

“செத்தடி செங்கமலம்..” என்று பூர்ணா மனதிற்குள் சிரித்துக்கொண்டே..

“ஓகே விக்கி, உன்னோட டேர் என்னன்னா நீ அலைபாயுதே மாதவன் மாதிரி ப்ரோபோஸ் பண்ணனும்..” என்றதும் விக்கி குதூகலமானான்..

"இதுவல்லவா டேர் இதற்கு தானே ஆசை பட்டேன் பாலகுமாரி..” என்று பூர்ணாவிடம் வசனம் பேசவும்,

அவள் "ஹே நான் ப்ரோபோஸ் பண்ணனும்ன்னு தான் சொன்னேன் என்கிட்ட பண்ணனும்னு சொல்லலை..” என்று அவனது தறிகெட்டு ஓடிய மனதிற்கு கடிவாளமிட்டாள்…

“பின்னே..?” என்று குழப்பத்துடன் வினவினான் விக்கி..

“அதோ அவருகிட்ட பண்ணனும்..” என்று சற்று தொலைவில் யாரையோ கை காட்டினாள் அவள் சுட்டிக்காட்டிய திசையில் பார்த்தவன் முகத்தில் ஈயாடவில்லை..

“நோ பூர்ணா.. நீ என் வேலைக்கு வேட்டு வைக்க பாக்குற,முடியாது..” என்றான் அழாக்குறையாக ..

"நீதானே கண்ணா டேர் ச்சூஸ் பண்ணின, கம் ஆன் பீ எ பிரேவ் பாய் அண்ட் ஃபேஸ் தி சேலேன்ஜ்..”

அருணும் அபியும் பொங்கிவந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு விக்கியின் பரிதாபமான முகத்தை பார்த்தனர்..

“விக்கி நீ இன்னிக்கு செத்தடா..” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு வேண்டா வெறுப்பாக தனது டேர் ஆன "மிஷன் ப்ரோ போஸிங் டு விவேக் ஐ “ முடிக்க கிளம்பினான்..

விக்கி தயங்கி தயங்கி விவேக் நின்ற இடத்திற்கு வந்தான் ..அவன் மொபைலில் ஏதோ நோண்டிக்கொண்டிருந்தான்.. விக்கி பரிதாபமாக ஒரு முறை தன் நண்பர்கள் பக்கம் திரும்பி கண்களால் கெஞ்சினான் ஆனால் பூர்ணா ஒரு விரலை காட்டி "ஒழுங்கா போடா "என்று அவனை மிரட்ட வேறுவழியில்லாமல் இருந்த தைரியத்தையெல்லாம் திரட்டி கொண்டு விவேக்கின் மொபைலை வெடுக்கென்று பிடிங்கினான்..

அதிர்ச்சியடைந்த விவேக் ,கோபமாக இவன் புறம் திரும்பி "வாட் தி ஹெல் மேன்.." என்று கோபமாக கத்தியவன் விக்கியின் முகத்தில் தெரிந்த அசட்டு புன்னகையை கண்டு காரணம் புரியாமல் முகம் சுளித்தான்..

“விவேக்…” என்று ரொமான்டிக்காக அழைத்து அவனது போனை திருப்பி அவனிடமே கொடுத்தான் விக்கி..

விவேக்.. நீ அழகா இருக்கேன்னு நினைக்கலை..” என்றான் விக்கி மாதவனை போல் பேசமுயன்று..

விவேக் பதறிப்போய் "வாட்..?” என்றான்..

"உன்னை விரும்பலை…” விக்கி தொடர்ந்தான்..

“வாட் தி ஹெல் ஈஸ் ராங் வித் யூ விக்கி..?” என்று கோபத்தில் கத்தினான் விவேக்..

“உன்மேல ஆசை பாடலை…”

“என்ன தண்ணி அடிச்சிருக்கியா..? ஜ..ஜஸ்ட் கெட் லாஸ்ட்..”
என்று அச்சுறுத்துவது போல்கூறினாலும் அவன் குரல் சிறிது திக்கியது..

“உன்னை லவ் பண்ணனும்னு நினைக்கலை..” அவனது மிரட்டலை சற்றும்பொருட்படுத்தாமல் விக்கி உணர்ச்சி பொங்க பேசினான் …

“ஷாட் அப் யூ ஃபூல் உன்னோட உளறலை மொதல்ல நிறுத்து.. இன்னும் ஒரு வார்த்தை பேசினா உன்னை வேலைய விட்டு தூக்கிடுவேன் பார்த்துக்கோ..”
என்று கூறிக்கொண்டே அவனிடமிருந்து விலகி நடக்க தொடங்கினான் விவேக்…

விக்கியும் அவனை விடாமல் துரத்தி சென்று "ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கலை… "என்று தொடர

"நோ..நோ.. விக்கி நீ தப்பா புரிஞ்சிட்டு இருக்க..நீ நெனைக்கற மாதிரி ஆள் கெடையாது நான்…” என்று விவேக் பதற்றத்துடன் கூறினான், அவன் கைகள் லேசாக நடுக்கமெடுக்க விக்கியை விட்டு தள்ளி வேகமாக கிட்டத்தட்ட ஓடினான் என்று கூறலாம்..

இருப்பினும் விக்கி "ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு யோசிச்சி சொல்லு விவேக்..” என்று தனது இறுதி வசனத்தை கூறி முடிக்காமல் அவனை விடவில்லை...

இந்த கண்கொள்ளா காட்சியை பார்த்து மற்ற மூவரும் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தனர்..

“அந்த விவேக் ஜென்மத்துக்கும் நீ இருக்கற பக்கம் கூட தலைவச்சி படுக்க மாட்டான்டா..” என்று விக்கியின்முதுகில் தட்டி கொடுத்தான் அருண்..

“ஐயோ அந்த விவேக் முகத்தை பார்க்கணுமே.. கோடி ரூபாய் குடுத்தக்கூட இப்படி ஒரு ரியாக்ஷன பார்க்க முடியாது..” என்று பூர்ணா கூறி சிரித்தாள்…

“நல்லா வேணும் அந்த டிராகுலாக்கு எத்தனை வாட்டி நம்மள இப்படி ஓட வச்சிருப்பான்..” என்றாள் அபி கொதிப்புடன்.

“மொதல்ல எனக்கும் கொஞ்சம் பயமாதான் இருந்தது ஆனா போக போக அவனோட முகத்தை பார்க்கணுமே, என்னால சிரிப்பை அடக்க முடியலை நிஜமாவே பயந்துட்டான்டா..” என்று கூறி சத்தமாக சிரித்தான் விக்கி..

“ஓகே கைஸ்.. நெக்ஸ்ட் பாட்டிலை சுத்த வேண்டாம் அருண் மட்டும் தான் இருக்கான், மச்சான் உனக்கு கண்டிப்பா டேர் தான் நான் ஏற்கனவே யோசிச்சிவச்சிட்டேன்..” என்றான் விக்கி..

“சரி என்னன்னு சொல்லி தொலை..” என்றான் அருண்..

“இந்த கேம் இதோட முடியறதால இந்த பாட்டிலை எடுத்து ஓபன் பண்ணி கடகடன்னு ஒரே மூச்சுல குடிச்சிட்டு பார்க்கலாம்..” என்றான் விக்கி

"டேய் நான் ட்ரிங்க்ஸ் பண்ணமாட்டேன்னு உனக்குதெரியும் தானே..” என்றான் அருண்..
"தெரியும் டா அதனால தான் உனக்கு இது டேர், கம் ஆன் டோன்ட் பீ எ ஸ்பாயில் ஸ்போர்ட் சும்மா ஜாலிக்கு தானே..சரிடா ஃபுல் பாட்டில் கூட வேண்டாம் ஒரு நாலு கல்ப் அடி போதும்..” என்று விதிமுறையை சிறிது தளர்த்தினான் விக்கி..

அருண் ஏதும் மறுத்து பேசுவதற்குமுன் அபி இடைபுகுந்து,
"போதும் நிறுத்துங்க விக்கி.. அதான் அவன் குடிக்க மாட்டேன்னு சொல்றான்ல அப்புறம் எதுக்கு வற்புறுத்தறீங்க..? ட்ரிங்கிங் ஈஸ் இஞ்சூரியஸ் டு ஹெல்த்னு தெரியாதா..” என்று சீறினாள்…

விக்கி ஏதோ சொல்ல தொடங்கவும் அவனை அமைதியாக இருக்கும் படி சைகை காட்டிவிட்டு அருண் அந்த பாட்டிலை கையில் எடுத்தான்..

சரி டா விக்கி.. நான் குடிக்கிறேன், என்னை பத்தி யாரும் கவலைப்பட வேண்டாம்..” என்றான் குறிப்பாக அபியை பார்த்து..

அபி அவனது கையை பிடித்து தடுத்தாள் அவன் அவளது கையை தட்டிவிட்டு விட்டு பாட்டிலை திறந்து குடிக்க வாயினருகில் எடுத்து செல்ல,அபி அதை அவனிடமிருந்து பலவந்தமாக பிடுங்கி
"என்னை பழி வாங்க உனக்கு இந்த வழி தான் கெடைச்சதா..?”என்றாள்

“நான் குடிக்கறதால உனக்கு என்ன ப்ராப்ளம்..? என்றான் கோபமாக

“ஓஹ் அப்படியா..? சரி அப்போ நானே குடிக்கிறேன்..” என்று அவள் குடிக்க முயல அருண் சட்டென்று அதை பிடுங்கி தூர வீசினான் அந்த பாட்டில் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்து நொறுங்கியது..

“நான் குடிச்சா இப்போ உனக்கு என்ன ப்ராப்ளம்..?” என்று திருப்பி கேட்டாள் அபி

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முறைக்க.. விக்கியும்,பூர்ணாவும் செய்வதறியாமல் விழித்தனர்..

அடுத்து என்ன நடந்திருக்குமோ தெரியாது, அதற்குள் விசில் சத்தம் கேட்டது அவர்களது தூங்கும் நேரத்திற்கான கடைசி அறிவிப்பு என்று அறிந்து அனைவரும் களைந்து சென்று அவரவர் கூடாரத்திற்குள் அடைந்துகொண்டனர்..

“பாரு பூர்ணா.. அவன் வேணும்னே என்னை எப்படி வெறுப்பேத்துறான்னு..” என்று பூர்ணாவிடம் புகார் செய்தாள் அபி..

“சரி விடு.. நீ மட்டும் அவனை கொஞ்சமாவா படுத்தின..?எல்லாம் சரி ஆகிடும், நீ இப்போ தூங்கு காலைல சீக்கிரம் முழிக்கணும்..” என்றுவிட்டு போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு தூங்கினான் அவள்…

அபி தூக்கம் பிடிக்காமல் புரண்டு கொண்டிருந்தபோது, அந்த இருளின் அமைதியை கிழித்து ரத்த நாளங்களை சில்லிட செய்வது போன்று பலத்த விசில் சத்தம் அந்த காடு முழுவதும் எதிரொலித்தது..

கேம்ப் பின் தொடக்கத்திலேயே இத்தகைய ஒலி அபாயத்தை குறிக்கும் என்று அவர்களுக்கு அறிவிக்கபட்டிருந்தது ,மேலும் இந்த தொடர் விசில் சத்தத்தை கேட்ட உடன் அனைவரும் ஓரிடத்தில் கூட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்..

ஓரிரு நிமிடத்தில் அனைவரும் ஓரிடத்தில் கூடி இருந்தனர் ,தூக்கம் மறையாத கண்களில் லேசாக திகிலுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்…

இவர்களது பயிற்சியாளர் உரத்த குரலில் பேசினார்

கைஸ், எங்க வாட்ச் மேன் யாரோ ஒரு வெளி ஆளை தடை செய்யபட்ட பகுதியில் பார்த்ததா தகவல் அனுப்பி இருக்கார்.. ஒருவேளை அது உங்க கேம்ப்ல யாராவதான்னு சந்தேகம் இருக்கு ஏதோ போனை கையில் வைத்துக்கொண்டிருந்ததா சொல்றார்,ஒருவேளை சிக்னல்காக கூட போய் இருக்கலாம் ஆனா அது வனவிலங்குகள் நடமாடும் மிக ஆபத்தான பகுதி, சோ உங்க பாதுகாப்பை உறுதி செய்யறதுக்காக தான் இப்போ உங்களை இங்க கூட்டி இருக்கோம்…இப்போ ஹெட் கவுண்ட் பண்ணி பார்த்து நீங்க எல்லாரும் இருக்கீங்களான்னு செக் பண்ணுங்க..” என்றார்.

அபி திடுக்கிட்டு போய் சுற்றும் முற்றும் தேடினாள், அருணை காணாமல் கலவரமடைந்தாள்.

அதே நேரம் அந்த வாட்ச்மேன் கூறிய அடையாளங்களும் அவனுடன் ஒத்துப்போக அருண் தான் காணாமல் போனது என்பதும் உறுதி செய்யப்பட்டது..

அருணைக் காணவில்லை..” என்று அனைவரும் அதிர்ச்சியடைகையில்

அபிக்கு தலையை சுற்றிக்கொண்டு வந்தது..கால்களுக்கு கீழ் பூமி நழுவி விழுவது போல் உணர்ந்தாள், செய்வதறியாது பீதியடைந்த கண்களுடன் அப்படியே உறைந்து போய் நின்றுவிட்டாள்..
தொடரும்
 
Last edited:
அருமையான
விவேக் கலக்கத்தில் ???
அருண் எங்க
 
Top