Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாயகனோ நானறியேன்- நாயகன் 1

Advertisement

Kokilavaniarjunan

Well-known member
Member
சீரிய செங்கமலாய மேவுந்திரு வெழின்மிழிக்
காரிரு வோருட கூடிக் கலந்தந்தகவய் பொருட்டாற்
போரியல் வேல்விழி யிற்தாரணி நாயகன் பொன்னொடுபூ
மாரிபொழிந்து மீரோடு சூழ்கொங்கு மண்டலமே.


என பனிரெண்டாம் நூற்றாண்டிலேயே பாடப்பட்ட கொங்கு மண்டலத்தின் சிறப்புக்குரிய ஊர்களில் ஒன்று ஈரோடு.. மஞ்சள் மாநகரம்.. அதைச் சுற்றிலும் இன்றளவும் நகரத்தின் நாகரிக பூச்சுக்கள் அதிகம் படியாத எண்ணற்ற கிராமங்கள் உண்டு..

கிராமங்கள்.. தன்னுள் கொண்ட பழமையையும் பாரம்பரியங்களையும்.. போற்றி பாதுகாத்து அதை அப்படியே அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தும் வல்லமை கொண்டது.. அப்படிப்பட்ட ஒரு ஊர் தான் பூம்பொழில்.. வயலும் வயல் சார்ந்த இடமுமான மருத நிலம்.

பூம்பொழில்.. உழுதுண்டு வாழும் மேன்மக்கள் நிரம்பிய ஊர்.. கீழ்பவானி ஆற்றின் தாராள மனதை தனதாக்கி மண்ணை பொன்னாக மாற்றித் தரவல்ல ஊர்.. நகரத்தின் நிழல் லேசாக விழத்தொடங்கி விட்ட போதும்.. தன்னியல்பை இழக்காமல் இருக்கும் சொர்க்கபுரி.. இணையத்தின் பயன்பாடுகள் பரவலாக விளங்கும் இந்த நூற்றாண்டில் கூட தனக்கென தனி கட்டுப்பாடுகள் கொண்டிருக்கும் ஊர்.

ஸ்னூஸ் ஆப்ஷன் வைக்க முடியாத உலகின் ஒரே அலாரமாம் சூரியன்.. வெகு சுறுசுறுப்பாய் விழித்தெழிந்து அனைவரையும் 'நேரம் ஆச்சு சுட்டிக் கண்ணா.. விடிஞ்சாச்சு சுட்டிக் கண்ணா' என விரட்டிக் கொண்டிருக்கும் பங்குனி மாதத்தின் பளிச்சென்ற ஒரு காலைப் பொழுது அது.

புள்ளினங்களுக்கு நிகராய் பூம்பொழில் மக்களும் ஆரவாரமாய் தங்கள் காலை நேரத்தை தொடங்கியிருக்க.. நான்கு தலைமுறைகள் கண்டும்.. சற்றும் கம்பீரம் குறையாமல் நெடிதுயர்ந்து நிற்கும் அந்தப் பெரிய வீட்டின் கொல்லைப் புறத்தில்..

"இங்க பாரு மடனோ செல்லம்.. நானெல்லாம் எவ்வளவு பெரிய ஆளாகியிருக்க வேண்டியவன் தெரியுமா.. இந்தப் பட்டிக்காட்டுல பொறந்து ரொம்ப சிரமப்படறேன்.. நீயாவது மாமனோட கெத்தைப் புரிஞ்சுகிட்டு ஒழுங்கா நில்லு பாக்கலாம்" சரியா என டீல் பேசியபடி இருந்தான் மணி.

மடோனாவோ தன் கடல் போன்ற கண்களால் அவனை விழி விரித்துப் பார்த்து 'ரீல் அந்து போச்சுடா சாமி' என கவுண்டர் விட முடியாமல் தலையை இருபுறமாகவும் அசைக்க "என் நிலைமையை கண்டு உனக்கே கஷ்டமா இருக்குல்ல.. நான் யாரு என் ரேஞ்சு என்ன.. என்னைப் போய் இப்படி" என அவன் வராத கண்ணீரைத் துடைத்தபடி இருக்க

"இப்ப எந்த ஜில்லாக் கலெக்டர் ஆபிசுல துரையை வா வான்னு கூப்பிடறாங்க" என்ற வெங்கலக் குரலில் அதிர்ந்து போய் நின்ற மணியை மடோனா பாவமாகப் பார்த்தது.. அந்த வீட்டின் மூத்த குடிமகள் அமிர்தவதி தான் வருகை தந்திருந்தார்..

அவன் திருதிருவென விழிக்கவும் "என்றா மணியா.. சீக்கிரமா வேலையை முடிச்சுட்டு கல்லக்கா காட்டுல மயில முடுக்கப் போன்னு சொன்னா.. இங்க என்னடா பண்ணிட்டு இருக்க" என மிரட்டல் போலக் கேட்க

"இதோ ஆச்சுங்கம்மா.. பகுதிக்கு பகுதி கறந்துட்டேனுங்க.. இன்னும் நாலு கறவை தான் மீதி.. இப்ப முடிச்சுடறேன்" என தோளில் போட்டிருந்த துண்டை மீண்டும் உருமாக் கட்டு கட்டியபடி விட்ட இடத்திலிருந்து வேலையை மணியன் தொடர்ந்தபடி 'எனக்குத் தகுந்த வேலை எதாவது கொடுக்கறாங்களா பாரு.. மாடு மேய்க்கனும்.. மயிலு முடுக்கனும்.. நீ வேணா பாரு செல்லம் ஒரு நாள் இதெல்லாம் சரித்திரத்தில வரும்' என முனகினான்.

அவன் மெதுவாகச் சொன்னதும் அவர் காதில் விழுந்துவிட "அதுக்குத் தான்டா ஆட்டுக்கு வாலை அளந்து வச்சிருக்கான்.. வெட்டி வாய் பேசாம சீக்கிரம் வேலையை முடி" என அவனைத் திட்டியபடி.. தன்னை நோக்கி குரல் கொடுத்த த்ரிஷா.. நயன்தாரா.. மடோனா ஆகியோருக்கு கோந்தாழை எடுத்து போட்டபடி நெற்றி நீவி விட்டார்.

அதற்குள் மணியன் வேலையை முடித்து விட்டு அவரிடம் சொல்லிக் கொண்டு காட்டைப் பார்க்க கிளம்ப.. அவனைத் தடுத்து நிறுத்தியவர் "ஏன்டா.. உங்கக்கா பிரசவத்துக்கு வந்திருக்கால்ல.. உள்ளாற போய் மருமக கிட்ட பாத்திரம் வாங்கி.. பால் எடுத்துட்டுப் போய் வீட்ல கொடுத்துட்டு அப்புறம் போ" என உரைத்துவிட்டு தன் அடுத்த வேலையை கவனிக்கச் சென்றார்.. கண்டிப்பிற்கு நிகராக பாசத்தையும் காட்டுவதில் அவருக்கு நிகர் அவரே தான்.

அந்த ஊரில் ஒரு வயதிற்கு உண்டான குழந்தைகள் இருக்கும் அனைத்து வீட்டிலும் பால் ஊற்றிவிட்டு.. மீதம் இருந்ததை சொசைட்டிக்கு எடுத்துச் செல்வர்.

வீட்டை ஒரு சுற்றுச் சுற்றிப் பார்வையிட்டவர்.. தன் மகன் ராகவன் எழுந்து வெளியே அமர்ந்திருக்கக் கண்டு.. சமையலறைக்குள் நுழைந்தவர் மருமகளிடம் மகன் எழுந்து விட்டதைக் கூறி.. காஃபி எடுத்துச் செல்லச் சொன்னார்.

எப்போதும் தனலட்சுமி மெச்சிக் கொள்ளும் மாமியாரின் செய்கைகளில் இதுவும் ஒன்று.. மகன் மருமகளிடையே எக்காரணம் கொண்டும் தலையிட மாட்டார்.

கோவிலுக்குச் செல்வதற்காக தேங்காய், பழக் கூடையுடன் கிளம்பியவர்.. பேப்பரில் தலையைப் புதைத்திருந்த மகனிடம் சொல்லிவிட்டுச் சென்றார்.. நடையிலேயே ஒரு துள்ளல் தெரிந்தது.. சும்மாவா இன்று அவர் செல்லப் பேத்தி மகிழினி தன் படிப்பை முடித்துவிட்டு ஊருக்கு வர இருக்கிறாள்.. இனி எப்போதும் இங்கு தான் என்ற ஆனந்தம்.

வியாழக்கிழமை என்பதால்.. கோவிலில் கூட்டம் அவ்வளவாக இல்லை.. விநாயகர், அய்யனார் என வெளிச்சுற்று தெய்வங்களை வணங்கியவர் நீண்டிருந்த திருக்கொண்டத்தையும் வணங்கிவிட்டு உள்ளே நுழைந்தார்.

அவருக்கு முன்பே அங்கே நின்றிருந்த சாரதாவைக் காண.. முகத்தை அஷ்டக் கோணலாக்கியவாறு எதிரில் சென்று நின்றார்.. உள்ளிருந்து வந்த பூசாரியிடம் பூஜைக் கூடையைக் கொடுத்தவர் "மகிழினி.. சிம்மராசி.. மகம் நட்சத்திரம்" என்க.. அவரது குரலில் சாரதா வெட்டும் பார்வையுடன் அவரை முறைத்துவிட்டு நகர்ந்து சென்றார்.

மஞ்சள் நிற காட்டன் புடவையில்.. பூமியில் தவறி விழுந்த வெய்யோனின் துகளென உள்ளே நுழைந்தாள் முத்தமிழ்.. பூமுகம்.. மென்மையான குணம்.. யாருக்கும் கெடுதல் நினைக்காத மனம்.. வெளியில் பேச வேண்டியதை மைன்ட் வாய்சில் பேசிக் கொள்ளும் தைரியசாலி.. இன்று தான் தனது இருபத்து நான்காம் அகவையில் அடியெடுத்து வைக்கிறாள்.

தன் மனம் நிறைந்தவன் எங்கேனும் தென்படுகிறானா என தேடியவாறே வந்தவளுக்கு.. எப்போதும் போல இம்முறையும் அவன் ஏமாற்றத்தைப் பரிசளிக்க.. சற்றே வாடிய வதனத்துடன் உள்ளே நுழைந்தவளை "முத்து" என்ற குரல்கள் தடுத்து நிறுத்தியது.

என்னடா எக்கோ அடிக்குது என சத்தம் வந்த திசையில் திரும்பியவளுக்கு அதிர்ச்சி.. ஒரே தூணில் இந்தப் புறமும் அந்தப் புறமுமாய் சாய்ந்திருந்த அமிர்தவதியும், சாரதாவும் தான் அழைத்திருந்தனர்.

அழைத்த பின்பு தான் அவர்களே அறிந்தனர் இருவரும் ஒரே தூணில் சாய்ந்திருப்பதை.. இருவரும் முறைத்துக் கொள்ள.. அவளுக்கு 'கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா.. அங்க' இதற்கு மேல் நினைக்க அவர்கள் வயது தடுக்க.. வேகமாய் அவர்களை நெருங்கினாள்.

இரு பாட்டிகளும் எழுந்து நிற்க.. அமிர்து பாட்டியிடம் சம்பிரதாயமாக "என்ன அம்மத்தா கோவிலுக்கா" என வழக்கமான மில்லியன் டாலர் கேள்வியைக் கேட்க

அவரும் "ஆமா முத்து.. இன்னைக்கு கண்ணா ஊருக்கு வரால்ல.. அதான் கண்ட கண்ணெல்லாம் அவ மேல படக்கூடாதுன்னு அர்ச்சனை வைக்க வந்தேன்" என்க.. சற்றுத் தள்ளி நின்றிருந்த சாரதா பாட்டியின் காதுகளில் திவ்யமாய் அந்த வார்த்தைகள் விழுந்தது.

"யாரடி ஜாடை போடற.. எங்களுக்கு உன் பேத்தி மேல கண்ணு வைக்கறத தவிர வேற வேலை இல்லையா" என சண்டைக்குக் கிளம்பி விட்டார்.

"நான் பொதுவாச் சொன்னேன்.. குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுங்குது" என அலட்சியமாகப் பார்த்தார் அமிர்து பாட்டி.

"தினமும் உலைக்கு போடற அரிசியில கைப்பிடி எடுத்து வைச்சிட்டு போடறவ தான உன் மாமியா.. பின்ன மருமக நீ மட்டும் எப்படி இருப்ப" என சாரதா சீண்ட

"எல்லா பால்ல தண்ணி கலந்தா உம்மாமியா தண்ணில பாலைக் கலப்பா.. நீ எல்லாம் பேசவே கூடாது" என இருவரும் என்னவோ நேற்றுத்தான் திருமணமாகி வந்ததைப் போல.. அதுவும் படுவினமாய் ஒருவர் மாமியாரை ஒருவர் திட்டிக் கொண்டிருந்தனர். (மாமியார் இல்லை என்ற தைரியம் தான்)

இவர்கள் இருவரது சண்டையை என்ன கூறி நிறுத்துவது என்றே முத்துவுக்குத் தெரியவில்லை.. பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிப் போய்விடலாம் என்றாலும் ஒரு பாட்டி இந்நாள் உறவு.. இன்னொரு பாட்டி வரும் நாள் உறவு.

'பொறந்த நாள்னு கோயிலுக்கு வந்தது ஒரு குத்தமா.. பேசமா மதம் மாறிடுவோமா.. என்னைக் காப்பாத்த யாருமே இல்லையா.. கடவுளே' என அவள் மனதில் புலம்பல் கேட்டது போல அங்கே பிரசன்னமானான் முகிலன்.. தன் பாட்டியும் பக்கத்து வீட்டு அம்மத்தாவும் சண்டையிடுவதையும்.. முத்து கையைப் பிசைந்து கொண்டு நிற்பதையும் கண்டவன்.. மானசீகமாக தலையில் அடித்தவாறே அவர்களை நோக்கி வந்தான்.

பேரன் வந்தது கூட தெரியாமல் இருவரும் வார்த்தையாட.. அவன் கோவம் பக்கத்தில் இருந்த பிள்ளைப் பூச்சியின் மேல் திரும்ப "இவங்க ரெண்டு பேர் சண்டைக்கு ரெஃப்ரீ வேலை பாக்கத்தான் கோவிலுக்கு வந்தியா" என பல்லைக் கடித்தவாறே கேட்க

அவனைக் கண்டதிலேயே அகமகிழந்து இருந்தவள்.. அவன் கேள்வியில் முகம் சுருங்க நிற்க.. அவன் அதை கருத்தில் கொள்ளாமல் "வயசுக்குத் தகுந்த சவகாசம் இருக்கா உனக்கு" எனத் திட்ட 'நியாயம் தான்.. நீ தான் கூட சேர்த்துக்க மாட்டிங்கிறியே' என அவனை ஏக்கமாகப் பார்க்க.. அதெல்லாம் அவனை எட்டவே இல்லை.

"எப்ப பாரு மைன்ட் வாய்ஸ் தான்.. பிள்ளைங்களுக்கு பாடமாவது வாய்விட்டு சொல்லித் தருவியா.. இல்லை அதையும் மனசுக்குள்ளயே சொல்லிக்குவியா.. உன்கிட்ட பிள்ளைங்க படிச்சு உருப்பட்ட மாதிரி தான்" என கடித்துவிட்டு.. தன் பாட்டியின் கையைப் பிடித்து இழுத்தவாறே "என்ன வ்வா.. இது.. எல்லாரும் பாக்கறாங்க வா.. வீட்டுக்குப் போலாம்" என நகர்ந்தான்.

அப்போது தான் நியாபகம் வந்தவராய் அவன் பாக்கெட்டில் இருந்து நூறு ரூபாய் எடுத்து.. முத்துவை நெருங்கிய அமிர்து பாட்டி பாசமாக அவள் தலையை தடவி "இன்னைக்கு உனக்கு பொறந்த நாளாமே.. சந்தோஷமா இருக்கோனும்" என வாழ்த்த.. முகில்
யாரோ என்னவோ என்ற பாவனையில் நின்றிருக்க.. சற்று வருத்தமாகத்தான் இருந்தது.

இத்தனை நாட்களில் ஒரு தரம் கூட தன் மனம் அவனுக்குப் புரியவில்லையா என சலித்து வந்தாலும்.. பெரியவர் முன்பு எதுவும் காட்டிக் கொள்ளாமல்.. அவர் காலில் விழப் போக "கோயில்ல சாமியை மட்டும் தான் கும்பிடனும்.. வரேன்" என்ற செல்லக் கண்டிப்புடன் விலகி நடந்தார்.

திரும்பியும் பாராமல் போகும் அவனை ஒரு பெருமூச்சுடன் பார்த்தவள்.. வேறு யாருடனே பேசிக் கொண்டிருந்த சாரதா பாட்டியை நெருங்கி "வா அப்பத்தா.. நான் உன்னை வீட்ல விட்டு போட்டு போறேன்" என அழைத்துக் கொண்டு சென்றாள்.

செல்லும் வழியில் சாரதா பாட்டி "எப்ப வராளாம் அந்த குண்டம்மா பேத்தி" என பேச்சைத் துவங்க.. அவர் விளிப்பில் சிரித்தவள் "இன்னைக்கு கடைசி பரிட்சைன்னு சொன்னா அப்பத்தா.. அநேகமா இன்னைக்கு நைட்டே வந்துடுவா" என்றாள் முத்து.

"ஓஹோ.. சும்மாவே ஆடுவா இந்த குண்டம்மா.. பேத்தி வந்தா தலைகீழா நிப்பா" என சிலிர்த்துக் கொள்ள.. சிரிப்புடனே வீட்டு வாசலில் இறக்கிவிட்டு.. அருகில் இருந்த வீட்டில் முகில் நடமாட்டம் தென்படுகின்றதா என கவனிக்க.. சாரதா பாட்டி வீட்டிற்குள் அழைத்தார்.. பள்ளிக்கு நேரமாவதாகக் கூறி மறுத்துவிட்டு.. வேகமாக நகர்ந்து விட்டாள்.

சமையல் அறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மருமகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு.. மகனைத் தேட.. சரவணப் பெருமாள்.. நெற்றி நிறைய விபூதிப் பட்டையுடன் பூஜையறையில் இருந்து வெளியே வந்தார்.

"சரவணா" என்ற அம்மாவின் அழைப்பில்.. அவர் அமர்ந்திருந்த சோஃபாவில் அருகில் சென்று அமர.. மாமியாரின் சத்தத்தில்.. அவருக்கான டீயை எடுத்து வந்தார் அந்த வீட்டின் மருமகளும்.. சரவணப் பெருமாளின் மனைவியுமாகிய சகுந்தலா.

அதை வாங்கிக் கொண்டவர் "ராஜா எழுந்துட்டானா" என கேட்க.. இல்லை என சகுந்தலையை தலையசைக்க விடாமல்.. தன் அறையில் இருந்து வெளிவந்தான் யது நந்தன்.. வீட்டில் ராஜா.

யது நந்தன்.. ஆறடிக்கும் சற்றே உயரம்.. மை வண்ணத்து அரக்கியை வென்ற.. மழை வண்ணத்து அண்ணலின் நிறம்.. திராவிட முகம்.. தென்னாட்டு உடற்கட்டு.. பேதை, பெதும்பை தொடங்கி அரிவை, தெரிவை வரை பூம்பொழிலின் அனைத்து பெண்களையும் ஒரு சேர திரும்பி பார்க்க வைக்கும் ஆணழகன்.

"நூறாயுசு.. வாப்பா" என அகமும் முகமும் மலர அழைத்த சாரதாவைப் பார்த்து இவனும் ஒரு புன்சிரிப்பை சிந்திவிட்டு "என்ன அப்பத்தா.. சீரியல் பல்ப் சாப்ட்ட மாதிரி முகம் மின்னுது.. இன்னைக்கு ஒன்னுக்கு ரெண்டு பேர் கூட சண்டையோ" என வம்பிழுக்க

"போடா படவா.. இன்னைக்கு மேற்கால ஊட்டு குண்டம்மா கூடத்தான் சண்டை.. அவ கூட சண்டைப் போட்டா இந்த ஊரோட போட்டதுக்கு சமம்" என முகத்தைத் திருப்பிக் கொள்ள.. எழுபது வயதிலும் எல்கேஜி பாப்பா போல கோள் சொல்லும் பாட்டியைப் பார்த்து சிரிப்பு தான் வந்தது ராஜாவுக்கு.

அதுவரை பாட்டியும் பேரனும் பேசக் கேட்டிருந்தவர் "ஏம்மா அவங்க கூட எப்ப பாரு சண்டை.. சும்மா இருக்கவே மாட்டியா நீ" என முகம் கடுக்க.. "நீ சும்மா இரு.. உனக்கு ஒன்னும் தெரியாது.. அவ என்ன என்னைய ஏப்ப சாப்பனு நினைச்சாளா.. என்னவோ ஊரில இல்லாத பேத்தி வராளாம்.. ஜாடை போடறா.. அதான் பொங்கிட்டேன்" என காரணம் சொல்ல.. இருவரைப் பற்றி அறிந்தவராதலால் 'உங்களைத் திருத்த முடியாது' என்ற லுக்கில் அதைக் கடந்தவர்.. அவர் பேச்சின் சாராம்சத்தை மெதுவாக உணர்ந்து "என்னம்மா சொன்ன.. கண்ணா வராளா.. எப்ப" என வினவினார்.

பாட்டியின் சேட்டையைக் கண்டு சிரிப்புடன் அமர்ந்திருந்த ராஜாவும்.. அவர் சொன்னதை எண்ணி முகம் இறுகிப் போய் இருக்க.. பார்வையை எதிரில் சந்தன மாலையுடன்.. ஆளுயரப் புகைப்படத்தில் தன் வெள்ளை உடைக்குப் போட்டியான புன்னகையுடன் இருந்த தன் தாத்தா குமாரசாமியின் மீது பதித்திருந்தான்.

அவன் சத்தம் இல்லாமல் போக.. திரும்பிப் பார்த்த இருவரும்.. அவன் பார்வையில் அதிர்ந்து போயினர்.. மீண்டும் ஏதேனும் ஏடாகூடமாக செய்து விடுவானோ என.. அப்படி ஒரு எண்ணம் அவன் மனதில் இருந்தால்.. அதை இப்போதே அழிக்க வேண்டும் என எண்ணிய சாரதா "ஏதோ இன்னைக்குத் தான் கடைசிப் பரிட்சையாம்.. இனி இங்க தானாம்.. ஏற்கெனவே பண்ணது எல்லாம் போதும்.. நீ கொஞ்சம் அமைதியா இருக்கனும் ராஜா.. ஏன்னா போனது உசிரு.. அதுக்காவது மதிப்பு குடு" என எழுந்து தன் அறைக்குள் சென்றுவிட்டார்.

தந்தையைப் பார்க்க அவரும் அதே எச்சரிக்கையை கண்ணில் தாங்கி.. அமர்ந்திருக்க.. அலட்சியமாகத் தோலைக் குலுக்கியவன்.. வெளியே கிளம்பப் பார்க்க.. ஒரு நொடி நின்று.. "அத்தை'' என அழைக்க.. அதுவரை சமையல் அறையில் ஏதும் பேசாமல் இருந்த ரேவதி வெளியே எட்டிப் பார்த்தார்.

வெளுத்துப் போன கலரில்.. காட்டன் புடவையும்.. நெற்றியில் விபூதிக் கீற்றுமாய்.. துடைத்து விட்டாற் போல வந்து நின்ற ரேவதியை ஒரு முறை பார்த்துவிட்டு.. தன் தந்தையைப் பார்த்தான்.. அவர் எதுவும் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

ரேவதியிடம் திரும்பியவன் "நான் போய்ட்டு வரேன் த்தை" என்றவன் "சாப்பிடலையா ராஜா.. நேரம் இருக்கே" என கடிகாரத்தைப் பார்த்தவாறே கேட்ட சகுந்தலையின் கேள்விக்கு.. "பசியில்லைம்மா.. அப்பாரைப் பார்த்துட்டு அப்படியே ஸ்கூலுக்குப் போறேன்" எனக் கூறிவிட்டு வேகமாகச் சென்றுவிட்டான்.

காரை ஓட்டிக் கொண்டிருந்த ராஜா என்ன மனநிலையில் இருக்கிறான் என அவனுக்கே தெரியவில்லை.. அவள் வருவதைக் கேட்டதும்.. தான் பட்ட இழப்புகளும் அவமானங்களும் வரிசை கட்டி கண் முன் நிற்க.. கண்களை இறுக மூடித் திறந்து அந்த நினைவை எல்லாம் ஓட்டினான்.

தானா அப்படி நடத்து கொண்டோம் என இப்போது வரையில் அவனால் நம்ப முடியவில்லை.. தன் பழியுணர்விற்கு தன் பக்கத்தில் இருந்து இழந்தது ஒரு உயிர்.. அதுவும் தான் நேசித்த உயிர்.. கடந்த நான்கு வருடங்களில் அவள் இங்கு வராமல் எல்லாம் இல்லை.. இவனுக்குத் தான் அவள் முகத்தில் விழிக்கப் பிடிக்கவில்லை.

இப்போது பாட்டி 'வேண்டாம்' என்று சொன்ன போது.. முதலில் தோன்றியது பழி உணர்வு தான்.. அதுவும் அத்தையின் விதவைக் கோலம் அவனை மனிதனாக இருக்க விடுவதில்லை.. ஆனால் அவள் வருகையை எண்ணிப் பார்க்கும் போது.. பாலை நிலத்தில் விழும் மழைத் துளியைப் போல.. சட்டென்று அந்த மகிழ்வை உறிஞ்சிக் கொள்கிறது மனம்.

யோசித்தவாறே வந்தவன்.. காரை நிறுத்திவிட்டு.. இறங்கி நடக்க.. மூங்கில் படல் திறந்து இருக்கக் கண்டவன்.. போகவே சற்றுத் தயங்கினான்.. ஆனாலும் நிலையில்லாத மனம் அவனை உந்தித் தள்ள.. உள்ளே நுழைந்தான்.

அங்கே அடிக்கடி பார்க்கும் காட்சி தான்.. "டேய் சாமி" என அழைத்து என்னவோ பேசியபடி இருந்த நாராயண சாமி.. காலடிச் சத்தம் கேட்டதும் நிமிர்ந்து இவனைப் பார்த்தார்.. எண்பத்து நான்கு வயதிலும் கூர் பார்வை.. அங்கே தன் பார்வையில் தந்தையைக் கட்டிப் போட்டவன் இங்கே இவரின் பார்வையில் தலை தாழ்ந்தான்.

தன் ஆருயிர் நண்பனும்.. பேரனும்.. அமைதியாய் நிற்பதை.. ஏற்கெனவே அங்கு அமைதியாய் அடங்கியிருந்த குமாரசாமி பார்த்துக் கொண்டிருந்தார் மீளாத் துயிலில் ஆழ்ந்தபடியே..

ஆம்.. அது நந்தாவின் தாத்தா குமாரசாமியின் நினைவு மண்டபம் தான்.. நாராயண சாமி மகிழினியின் தாத்தா.. இரு குடும்பத்துக்கும் தீராத.. தீர்க்க முடியாத சண்டை.. சச்சரவுகள்.. பகை என அனைத்தும் இருக்க.. நாராயண சாமி இங்கு வருவதை யாரும் தடுக்கமாட்டார்கள்.

ஏனெனில் இருவருக்கும் அத்தகைய நட்பு.. பிறப்பில் இருந்தே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள்.. தங்கள் மகன்களால் பிரிந்தவர்கள்.. தினமும் காலையோ மாலையோ தனக்கு வசதிப்படும் நேரம் இங்கு வந்து நண்பனை "ஏன்டா போறேன்னு சொல்லியிருந்தா நானும் வந்திருப்பேனே" என பேசிவிட்டுத் தான் செல்வார்.

இதற்கு பகை உண்டாக்கிய சரவணப் பெருமாளோ.. இல்லை ராகவனோ ஒன்றும் சொல்வதில்லை.. இன்று பேத்தி வரும் விசயத்தை காலையிலேயே சொல்ல ஓடி வந்திருந்தார்.. ராஜாவைக் கண்டதும் அவர் அமைதியாக வெளியேற.. ஒரு பெருமூச்சுடன் அங்கேயே தனது மனபாரம் குறையும் மட்டும் அமர்ந்துவிட்டு பள்ளிக்குச் சென்றான்.

அவர்களின் பிரதான தொழில் விவசாயமாக இருந்தாலும்.. தன் தாத்தாவின் ஆசைக்காக.. நந்தாவின் அப்பா உருவாக்கியது தான் 'சாரதா வித்யாஸ்ரமம்'.. கல்வி வியாபாரமாகிவிட்ட நிலையில்.. தரமான கல்வியும்.. நியாயமான கல்விக் கட்டணத்துடன்.. இந்த முப்பது வருடங்களில் நல்ல பெயரை அவர்களுக்குப் பெற்றுத் தந்திருந்தது.. அதன் தற்போதைய பொறுப்பு முழுவதும் நந்தாவிடம் இருந்தது.

ஏப்ரல் மாதம் என்பதால்.. ஆனுவல் எக்ஸாம் நடந்து கொண்டிருந்தது.. காரை அதற்குரிய இடத்தில் விட்டவன்.. வழியில் எதிர்ப்பட்டோரின் வணக்கத்தைப் பெற்றவாரே.. அலுவலகக் கட்டிடத்தை அடைந்தான்.. வரும் வழியில் பறித்திருந்த மஞ்சள் மந்தாரைப் பூவை விநாயகர் சிலையின் கீழ் வைத்தவன்.. தனது அறைக்குள் சென்றான்.

அதன்பின் முத்துவை அழைத்து அவளுக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லியவனிடம்.. தயக்கமாக "மகிழ் இன்னைக்கு வராளாம் அண்ணா" என்றாள் வெளிவராத குரலில்

முத்து அவனிற்கு சித்தப்பா பெண் தான்.. யாரும் இல்லாத சமயங்களில் அவள் அண்ணாவென்றே அழைப்பாள்.. தெரியும் என்பது போல் தலையசைத்தவனிடம்.. மேற்கொண்டு என்ன பேசுவது என தெரியாமல்.. தனக்கு வகுப்பு இருப்பதாக கூறி விடைபெற்றுச் சென்றுவிட்டாள் முத்து.

'எல்லாப் பக்கமும் அவளே தானா.. முடியலை' என முனகியவன்.. அடுத்தடுத்த வேலைகளில் கவனம் செலுத்தத் துவங்கினான்.. அடுத்த ஆண்டில் சிபிஎஸ்சி இங்கே அறிமுகம் செய்யலாம் என முடிவு செய்திருக்க.. அதற்கான கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்தது.

மதிய நேரம்.. அதை மேற்பார்வையிடச் சென்றவன் திரும்பி வரும்போது.. அவனையறியாமல் வழக்கம் போல அவன் பார்வை.. ஜன்னலைத் தொட்டு மீண்டது.. அவனை ஏமாற்றாமல் அங்கே நான்கு வயது வாண்டு ஒன்று.. சுற்றுப்புறம் மறந்து தன் கட்டைவிரலை வாயில் வைத்து சுவைத்தபடி.. அரைக்கண் திறப்பதும் பின் மூடிக் கொள்வதுமாக இருக்க.. அவன் இதழ்கள் புன்னகையுடன் "மயிலு" என முனுமுனுத்துக் கொண்டது.

நாயகன் வருவான்..
 
உங்களுடைய "நாயகனோ
நானறியேன்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
மதுகிருஷ்ணா @ கோகிலவாணிஅர்ஜுனன் டியர்
 
Last edited:
Top