Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தாலாட்டும் தென்றல் 2....

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 2.

தனக்கும் கல்யாணம் நிச்சயமாகி விட்டது. இன்னும் எண்ணி பத்தே நாட்களில் திருமணம் நடக்கப் போகிறது என்ற கற்பனையில் மூழ்கி இருந்தவளை அண்ணியின் கத்தல் நிகழ் காலத்துக்குக் கொண்டு வந்தது.

"உங்க தங்கச்சி என்ன நினைச்சுக்கிட்டு இருக்கா? வந்தவங்க எதிர்லயே தனக்கு சம்மதம்னு சொல்லறாளே? இவளுக்குக் கல்யாணம் பண்ண நம்ம கிட்டப் பணம் இருக்கா இல்லையான்னு கூட அவ தெரிஞ்சுக்க நினைக்கலியே?" என்று கத்தினாள்.

"நமக்கு என்ன செலவு கனகு? எல்லாத்தையும் தான் அவங்க பார்த்துக்கறேன்னு சொல்லிட்டாங்களே?" என்றான் அண்ணன் சுந்தர் சமாதானப்படுத்தும் விதமாக.

"என்ன உளறுறீங்க? நமக்கா செலவு இல்ல? அவங்க ரொம்ப சாமர்த்தியமா நகை, சேலைன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. கல்யாணம்னா அது மட்டுமா? பாத்திரம் வாங்கணும், பூ வாங்கணும், கோயிலுக்குப் பணம் கட்டணும், பத்திரிக்கை அடிக்கணும்...நமக்கு நம்ம பசங்களுக்கு புதுத்துணி எடுக்க வேண்டாமா?" என்று அடுக்கிக் கொண்டே போனாள்.

அதிசயம், எரிச்சல் கோபம் எல்லாம் கலந்த மன நிலையில் இருந்தாள் சங்கரி. இவையெல்லாம் என்ன பெரிய செலவுகள்? பூவும், பத்திரிக்கை அடிப்பதும் பெரிய செலவா? கோயிலுக்கு எவ்வளவு கட்டப் போகிறார்கள்? இதற்கு அண்ணா என்ன சொல்கிறார் எனப் பார்க்கலாம். என நினைத்துப் பேசாமல் சுவரோடு சுவராக ஒட்டிக்கொண்டாள்.

"இதைப் பாரும்மா கனகா! நானும் என் மகன் அமைதியாக் குடும்பம் நடத்தட்டுமேன்னு பேசாம இருந்தேன். நீயும் என் மக கல்யாணத்தைக் கலைச்சு விட்டுக்கிட்டே இருந்த. ஆனா இதை விட நல்ல இடம் என் மகளுக்குக் கிடைக்காது. நான் இப்பவே போயி கோயில்ல எவ்வளவு பணம் கட்டணும்னு கேட்டுட்டு வரேன். " என்று சொல்லி விட்டுக் கிளம்பினார். சென்றவர் நாலடி நடந்ததும் திரும்பி வந்தார்.

"எப்படியும் எல்லாச் செலவும் சேர்ந்து 25,000க்கு மேல ஆகாது. இவ கல்யாணத்துக்காகவே நான் இது வரையில 30,000 ரூவா சேர்த்து வெச்சிருக்கேன். அதைத்தரேன். மேற்கொண்டு ஆனா அதை உன் புருஷன் எனக்குக் கடனா கொடுக்கட்டும். " என்று சொல்லி விட்டு துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு போய் விட்டார்.

ஆச்சரியத்தில் சங்கரிக்கு நாவே எழும்பவில்லை. அப்பாவா? 30,000 ரூப்பாய் சேர்த்து வைத்திருக்கிறாரா? அவருக்குப் பென்ஷன் கூடக் கிடையாதே? எப்படி முடிந்தது? என்று யோசித்தாள். ஆனால் அதற்கு அண்ணி கனகா இடம் கொடுக்கவில்லை.

"என்ன சொல்லிட்டுப் போறாரு உங்கப்பா? அவருக்கு ஏது 30,000 ரூபா? இத்தனை நாள் நம்ம கிட்ட சொல்லாமே மறைச்சிருக்காரா?"

"அவரு தன் மக கல்யாணத்துக்கு சேர்த்து வெச்சிருக்காரு. நமக்கு பணச் செலவு இல்லையே? அதை நெனச்சு நீ சந்தோசப் படேன்" என்றான் சுந்தர். அடி நாக்கு வரை கசந்தது அவன் பேச்சு.

"சரி! அது போகட்டும். மேற்கொண்டு காசு செலவாச்சுன்னா, நம்மைக் கொடுக்கச் சொல்றாரே?"

"கடனாத்தானே கேக்குறாரு கனகு?" என்றான் சுந்தர் சமாதானமாக.

"கடன் தான். ஆனா அதை அவரால எப்படித் திருப்பிக் கொடுக்க முடியும்? அவருக்கென்ன அரசாங்க பென்ஷனா வருது?"

"30,000 ரூவாய்க்குள்ள தான் செலவாகும். அதை நான் பார்த்துக்கறேன்" என்றான் அண்ணன்.

சே! என்ன மனிதன் இவன்? சொந்தத் தங்கையின் கல்யாணத்தில் அவனுக்குக் கடமை இல்லையா? 10,000 கூடவா கொடுக்கக் கூடாது? என்று நினைத்துக் கொண்டாள். வெளியே போன அப்பா திரும்பி வந்தார். முகமெல்லாம் புன்னகை.

"கோயில்ல விசாரிச்சுட்டேன் சுந்தரா! 1000 ரூவா கட்டுனாப் போதுமாம். அவங்களே மேளம் ஏற்பாடு செஞ்சு தாராங்களாம். அந்தக் கோயில் ஐயரே மந்திரம் சொல்றேன்னு ஒத்துக்கிட்டாரு. எல்லாம் சேர்ந்த்து காண்டிராக்டா அந்த ஐயர் 5000 ரூவா கேக்குறாரு. பேசி முடிச்சுட்டு நாளைக்கு அட்வான்ஸ் தரேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்." என்றார்.

மலர்வதற்குப் பதில் அண்ணியின் முகம் மேலும் சுருங்கியது. அதை லட்சியம் செய்யாமல் மகளை நோக்கிப் பேசினார் ஞானமணி.

"சங்கரி! நான் நாளைக்குப் பணம் எடுத்துட்டு வரேன்மா! உனக்கு வேணும்ன்ற நைட்டி, பாவாடை இன்னும் என்னென்ன வேணுமோ வாங்கிக்க. ஏன்னா கல்யாணம் ஆகிட்டு அங்க போயி நீ கிழிஞ்ச உடை போட்டுக்கிட்டு நிக்கக் கூடாது. மரியாதை போயிரும். என்ன?" என்றார்.

மகிழ்ச்சியோடு தலையாட்டினாள் சங்கரி.

"ஏயப்பா! ஏற்பாடெல்லாம் பலமாத்தான் இருக்கு. இத்தனைக்கும் பாக்கி இருக்குற 20,000 போதுமா? பாத்திரம் வாங்க வேண்டாமா?" என்றாள் அண்ணி வன்மத்துடன்.

"கனகு! உனக்கு ஏம்மா இந்த எரிச்சல்? என் மக காலம் பூரா கன்னியா உனக்குப் பாரமா இருக்கணுமா?" என்றார் பரிதாபமாக.

அண்ணிக்கு கோபம் வெடித்தது.

"நான் ஒண்ணும் இரக்கமத்த பாவி இல்ல! இத்தனை நாளும் என் கண்ணுக்குள்ள வெச்சுப் பார்த்துக்கிட்டேன். அதுக்கு எனக்கு இந்தப் பேச்சு தேவைதான். ஹூம்! என் தலையெழுத்து! புகுந்த வீட்டுல மாமனார், நாத்தின்னு வடிச்சுக்கொட்டி வடிச்சுக்கொட்டியே சாகணும்னு என் விதி. அதை மாத்தவா முடியும்? இதுல கெட்டபேர் வேற" என்று கண்ணைக் கசக்க ஆரம்பித்தாள்.

அன்று அப்பா ஏதோ ரு முடிவுக்கு வந்தவரைப் போலக் காணப்பட்டார்.

"இந்தம்மா கனகு! நீ என்னைக்கு எனக்கும், என் மகளுக்கும் வடிச்சுக்கொட்டுனே? என் மகளுக்கு வேலை கெடச்சும் அவளைப் போக விடாமத் தடுத்து, சம்பளமில்லாத வேலைக்காரியாத்தானே வெச்சிருக்கே? இப்ப அதுக்கு ஆபத்து வந்துட்டுதோன்னு பயப்படுறியா?" என்றார் சற்றே குரலை உயர்த்தி. சங்கரிக்கு தன் தந்தையா பேசியது? என்ற எண்ணமே தான்.

"இப்ப என்ன சொல்றீங்க? நானா உங்க மகளை வேலைக்காரி மாதிரி நடத்துனேன்?" என்று சண்டைக்கு வந்தாள் அண்ணி கனகு.

"இப்ப எதுக்கு அந்தப் பேச்செல்லாம்? இதைப் பாரு சுந்தரா! எனக்கு ராமகிருஷ்ணா மடத்துல கணக்கு எழுதுற வேலை கெடச்சிருக்கு. அங்கேயே மத்த சாமியாருங்களோட தங்கிக்கலாம், சாப்பிட்டுக்கலாமாம். சொல்லிட்டாங்க. அதனால என்னைப் பத்தி நீங்க கவலைப் பட வேண்டாம். சங்கரிக்குக் கல்யாணம் முடிஞ்ச கையோட நான் மடத்துக்குப் போயிருவேன். அதுவும் இந்த ஊர்ல இல்லை. திருச்சியில. அதனால என்னால உங்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது" என்றார்.

அமைதியாக இருந்தது அந்த இடம்.

ஓ! வேலை கிடைத்து, தங்கும் இடமும் கிடைத்த தைரியத்தில் தான் அப்பா பேசினாரா? என எண்ணினாலும் நெஞ்சில் ஒரு வலி பிறந்தது. பிறந்த வீடு என்று ஓஹோ என்ற ஆதரவு இல்லாவிட்டாலும் தகப்பன் என்ற ஒருவன் இருப்பதே ஆசுவாசமாக இருந்தது. இப்போது அவரும் மடத்தோடு போகப் போகிறார். இனி எனக்குப் பிறந்த வீடு என்பதே இல்லை. என்ற எண்ணம் அவளைக் கொஞ்சம் காயப்படுத்தியது.

அண்ணி முண முணவென்று ஏதோ பேசினாள். அதைக் காதில் வாங்காமல் அப்பா நேராக சங்கரியை நோக்கி வந்தார். மகளின் தலையை வருடியபடி பேச ஆரம்பித்தார்.

"அம்மா! சங்கரி! உனக்கு நான் ஒண்ணும் புதுசா சொல்லப் போறது இல்லைம்மா! உங்கம்மா இறந்து போனதுல இருந்து நானும் நீயும் தனித்தனி தீவுகளா ஆகிட்டோம். உனக்கு ஆதரவா நான் இல்லைன்னு நீ நெனச்சிருக்கலாம். எனக்கு அப்ப தைரியம் இல்லம்மா. இப்பத்தான் வந்திருக்கு. கவலைப் படாதே சங்கரி! உனக்கு நல்லதே நடக்கும். போற இடத்துல நல்ல பேர் வாங்கணும். என்ன?" என்றார். அவரது கரிசனம் கண்களில் நீரை வரவழைக்க அழுதாள் சங்கரி. ஏதோ ஒன்று தன்னை விட்டுச் செல்வது போல உணர்ந்தாள்.

"ஹூம்! இப்ப எதுக்கு இப்படி சீன் போடுறீங்க? ரெண்டு தெரு தள்ளியிருக்குற வீட்டுக்குப் போகப் போறா. அதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா?"

"ரெண்டு தெரு தள்ளியோ இல்ல ரெண்டு வீடு தள்ளியோ? மகளைக் கல்யாணம் பண்ணிக்குடுக்குற எல்லா அப்பனும் என்னை மாதிரி தான் அழுவான்" என்று சொல்லி விட்டு வாசலை நோக்கிப் போய் விட்டார்.

அடுத்து வந்த நாட்கள் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தன. நல்ல துணிகள் வாங்கவும், பேக் செய்யவும் என பரபரப்பாகக் கழிந்தது. அப்பாவின் வேட்டி சட்டைகளை நன்றாகத் துவைத்து இஸ்திரி போட்டுக் கொடுத்தாள். அவற்றை தன் பெட்டியில் பத்திரப்படுத்தினார். அண்ணிக்கு அப்பா தன் செலவில் 5000 ரூபாய்க்குப் பட்டுப்புடவை எடுத்துக்கொடுத்ததால் அண்ணி அதிகம் முகம் தூக்காமல் வளைய வந்தாள்.

கல்யாண நாளும் வந்தது. வீட்டை விட்டுக் கிளம்பும் போது ஏனோ நெஞ்சை அடைத்துக் கண்ணீர் வந்தது சங்கரிக்கு. இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்த வீடு. அப்பா, அண்ணன், அண்ணி, குழந்தைகள் என்று சொந்த பந்தத்தோடு வளைய வந்த வீடு. போகும் இடம் எப்படியோ தெரியவில்லை. இனி எனக்கும் இந்த வீட்டுக்கும் சம்பந்தமே இல்லை. என்று நினைக்க நினைக்க நெஞ்சை அடைத்தது.

"சங்கரி! மனதை சந்தோஷமா வெச்சிக்கோம்மா! உனக்கு எல்லாமே நல்லதா தான் நடக்கும். நீ பொறுப்புத் தெரிஞ்ச பொண்ணு. வந்து கார்ல ஏறும்மா" என்றார் அப்பா.

கோயிலில் பத்து மணிக்கு சங்கரி கழுத்தில் தாலி கட்டினான் சபா என்கிற சபா ரத்தினம். அவளைப் பார்த்து சிரித்தான். கண்ணீரினூடே தன் புன்னகையை அவனுக்கு உரித்தாக்கினாள் சங்கரி.
 
Top