Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தாலாட்டும் தென்றல்...1

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 1



மாலை நேரம். சிறிய அந்த நகரத்தின் சந்தடிகள் உச்சக் கட்டத்தில் இருந்தன. ஆபீஸ் விட்டு வருவோரும், டீக்கடைகளில் டீ அருந்துவோரும் என அந்தத் தெரு கலகலவென இருந்தது. சங்கரி தன் வேலைகளை முடித்துக் கொண்டு கைகளை நைட்டியில் துடைத்தபடி சற்று நேரம் பால்கனியில் வந்து நின்றாள். வயது 28 ஆகி விட்டது. அழகான முகம் தான், இளமைக்கும் குறைச்சல் இல்லை. ஆனாலும் கல்யாணம் ஏனோ ஆகவில்லை. வறுமையா? அப்படியும் இல்லை. ஓரளவு வசதியான குடும்பம் தான் சங்கரியுடையது. வெளியில் வந்து நின்று அண்ணியின் குழந்தைகள் அந்தக் காம்பவுண்டுக்குள் விளையாடுவதை சற்று நேரம் வேடிக்கைப் பார்த்தாள். மாலையில் அந்த நேரம் அவளுக்கு மிகவும் பிடித்த நேரம். பகல் மூழ்வதும் வேலை நெட்டி வாங்கும். மதிய நேரத்தில் சற்றே ஓய்வு கிடைக்கும் தான். ஆனாலும் அந்த நேரத்தில் வாசல் பால்கனியில் வந்து நின்றால் அண்ணி கனகா கத்துவாள். "யாரைப் பிடிக்க இப்படி நின்னு பார்க்குறே?" என்று நாக்கில் நரம்பில்லாமல் கேட்பாள். அந்த அவமானத்துக்கு பயந்து கொண்டு சங்கரி பால்கனிப்பக்கமே வர மாட்டாள். மாலை நேரத்தில் கனகா டிவியின் முன்னால் தவம் இருப்பதால் இவள் என்ன செய்கிறாள் எனத் தெரியாது. அப்பா அண்ணியையோ அண்ணனையோ எதிர்த்து எதுவும் கேட்க மாட்டார். அப்படிக் கேட்டால் அடுத்த வேளை சோற்றுக்கே தாளம் போட வேண்டியது தான். வயிற்றுப் பசிக்கு முன்னே மகளாவது, மகனாவது? ஒரு வேளை அம்மா இருந்திருந்தால் எனக்கும் சரியான நேரத்தில் கல்யாணம் ஆகியிருக்குமோ?



"அத்தை! பசிக்குது! திங்குறதுக்கு ஏதாவது குடேன்" என்ற அண்ணன் மகன் நிதின் குரலில் கலைந்தாள்.



நிதின் அண்ணன் சுந்தரின் மூத்த மகன். இளையவன் ராகுல். இருவருமே குணம் சாயல் இரண்டிலும் அப்படியே தன் அன்னையைக் கொண்டிருந்தனர். ஏதாவது வேண்டுமென்றால் நைச்சியமாகப் பேசி காரியம் சாதித்துக்கொண்டு விட்டு பிறகு கண்டு கொள்ளவே மாட்டார்கள். வீட்டின் பெரியவர்கள் யாரும் சங்கரியை மதிக்காததால் அவர்களுக்கும் அத்தை என்றால் சற்று இளப்பம் தான்.



"கொஞ்சம் முறுக்கு இருக்கு. தரவா நிதின்?"



"ஐய! முறுக்கு, கிறுக்கு இதெல்லாம் வேண்டாம். எனக்கு ஏதாவது புதுசா, ரோல், கட்லெட் இந்த மாதிரி செஞ்சு தாயேன்? எப்பப் பார்த்தாலும் முறுக்கு, சீடை இதானா?" என்று எரிந்து விழுந்தான்.



சங்கரிக்கும் அப்படிப்பட்ட தின்பண்டங்களை செய்து கொடுக்க வேண்டும் என்று ஆசை தான். ஆனால் அண்ணி வாங்கும் மளிகை சாமானில் இதெல்லாம் கட்டி வராது. அதை எப்படிச் சொல்ல?



"இப்ப முறுக்கு சாப்பிடுப்பா! நாளைக்கு கட்லெட் செஞ்சு தரேன். உங்கம்மா கிட்ட சொல்லி ரஸ்க், உருளைக் கிழங்கு, மசலா இதெல்லாம் வாங்கித்தரச் சொல்றியா?" என்றாள் மெல்ல.



"அதெல்லாம் முடியாது. நீயே கேட்டுக்கோ! இப்ப எனக்கு கொஞ்சம் நூடுல்ஸ் செஞ்சு குடு" என்றான் அதிகாரமாக. அவன் கேட்டதை செய்து கொடுத்து விட்டு அடுத்த வேலையில் ஆழ்ந்தாள். இரவுக்கு பூரி பொரித்து கிழங்கும் தயார் செய்தாள். அண்ணனுக்கு பூரியோடு எப்போதும் தேங்காய் சட்னி வேண்டும் என்பதால் அதையும் அரைத்தாள். அன்று அண்ணன் வரும் போதே மிகவும் சந்தோசமாக வந்தான்.



"சங்கரி! இந்தா இந்தப் பூவை தலையில வெச்சுக்கோ! உனக்கு ஒரு நல்ல நியூஸ் சொல்லப் போறேன்" என்றான்.



இதுவும் ஒன்றும் சங்கரிக்குப் புதிதல்ல 21 வயது முதல் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக பல முறை நல்ல செய்தி என்று சொல்லி யாராவது பெண் பார்க்க வருவதைச் சொல்வான். அவர்களும் வருவார்கள். பெண்ணையும் பிடிக்கும். ஆனால் அண்ணி எதையாவது கேட்டு அவர்களை அவமானப்படுத்தி அனுப்பி விடுவாள். அதையும் மீறி ஒருவன் வந்தால் அவனுக்கு 50 வயதுக்கு மேல் ஆகியிருக்கும் அல்லது இரண்டாம் தாரமாக இருக்கும். அவர்களை சங்கரியே அனுப்பி விடுவாள். இன்று யாரோ? எவரோ? எண்ணியபடியே பூவை ஃப்ரிட்ஜில் வைத்தாள். நாளை சாமி படத்துக்குக் கொஞ்சம் போட்டு விட்டு அண்ணியிடம் கொடுத்து விடலாம். இல்லையென்றால் அதற்கும் ஏதாவது கத்துவாள். என்று எண்ணியபடியே பேசாமல் நின்றிருந்தாள். அண்ணி உள்ளே இருந்து வந்தாள்.



"நீங்க எவ்வளவு சந்தோஷமா சொல்றீங்க? ஆனா இவ? அப்படியே மரம் மாதிரி நிக்குறா. ஹூம்! இன்னும் எத்தனை நாள் தான் இந்த பாரத்தைத் தாங்கணுமோ?" என்று அலுத்துக் களைத்தவள் போல பேசினாள் கனகா.



"கவலைப் படாதே கனகா. உன்னோட கஷ்டம் எல்லாம் தீரப்போகுது. நம்ம சங்கரிக்கு நல்ல இடம் ஒண்ணு கெடச்சிருக்கு. நாம பத்து காசு கூட செலவு பண்ண வேண்டாம். அவங்களே எல்லாச் செலவுகளையும் ஏத்துக்கறாங்க" என்றால் மகிழ்ச்சியாக.



மனம் சோர்ந்தது சங்கரிக்கு. இப்படிச் சொல்கிறார்கள் என்றால் ஒன்று மாப்பிள்ளைக்கு வயது அதிகம் இருக்கும், அல்லது மூன்று முறை விவாகரத்து ஆனவனாக இருப்பான். எதுவாக இருந்தால் என்ன? பேசாமல் கழுத்தை நீட்டி விட வேண்டியது தான். என்று முடிவு செய்து கொண்டாள்.



"யாருங்க அவங்க? எந்த ஊரு?"



"பக்கத்துத் தெருவுல சண்முகம் குடும்பத்தைத் தெரியும் இல்ல?"



அதிர்ந்தது சங்கரியின் உள்ளம். சண்முகம் குடும்பம் என்றால் அந்தப் பகுதியிலேயே அனைவருக்கும் பயம். அவரும் அவரது மூன்று மகன்களும் வம்புச் சண்டைக்குப் போவதோடு மட்டுமல்லாமல் அடிதடி என்று இறங்கி விடுவார்கள். பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால் அலட்டல் அதிகம்.



"ஆங்! தெரியும். சொல்லுங்க"



"அதுல மூத்தவனுக்கு கல்யாணம் பேசுறாங்களாம். வயசு 35 ஆகுதாம். படிச்ச ஆனா வீட்டு வேலை தெரிஞ்ச பொண்ணா இருக்கணும்னு பாக்குறாங்களாம். அப்பத்தான் என் நண்பன் விநாயகத்துக்கு சங்கரி நினைவு வந்து அவங்க கிட்ட சொன்னானாம். அவங்களும் வர ஞாயிற்றுக்கிழமை பொண்ணைப் பார்க்க வரேன்னு சொல்லிட்டாங்க"



"ஏங்க! இத்தனை ஆண்டுகளா இல்லாம இப்ப என்ன திடீர்னு அந்த ஆளுக்குக் கல்யாணம் செய்யுறாங்க?"



"அவர் பேரு சபாரத்தினமாம். சபான்னு கூப்பிடுவாங்களாம். அவங்கப்பாவுக்கு ரொம்ப உடம்பு முடியலையாம். இன்னும் ஒண்ணோ ரெண்டோ மாசம்னு சொல்லிட்டாங்களாம். அதான் மூத்தவன் கல்யாணத்தையாவது பார்த்துட்டுச் சாகலாம்னு நினைக்கிறாரு போல" என்றான் அண்ணன்.



வயது 35 அது கூடப் பரவாயில்லை. ஆனால் அடிதடிக்குப் பெயர் போன குடும்பம் ஆயிற்றே? நான் எப்படி அங்கே குடும்பம் நடத்துவேன்? அதிலும் அவர்களின் தந்தை திருமணமானதும் இறந்து விட்டால் என்ன பேசுவார்களோ? என்று எண்ணினாள் சங்கரி.



"ஏங்க! அவங்களுக்கு ஒரு தங்கச்சி உண்டுல்ல? பேரு கூட ....?"



" ராணி! அவங்க தங்கச்சி பேரு ராணியாம். அந்தப் பொண்ணு ஏதோ படிக்குதாம். அதனால அதுக்கு இப்போதைக்கு கல்யாணம் செய்யுற ஐடியவுல அவங்க இல்லை போல"



"எப்படியோ போங்க! இந்த இடம் முடிஞ்சா நல்லது தான். பாவம் சங்கரியும் எவ்வளவு நாள் தான் சாப்பிட்டு சாப்ப்பிட்டு பொழுதை ஓட்டுவா? அவளுக்குன்னு வீடு, குடும்பம் வேண்டாமா?" என்றாள் கனகா ரொம்ப நல்லவள் போல.



அதன் பிறகு அண்ணனும், அண்ணியும் அறைக்குள் நுழைந்து ஏதேதோ மெல்லப் பேசிக்கொண்டனர். அண்ணனின் குரலிலிருந்து இந்த இடத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என நினைக்கிறான் எனப் புரிந்தது. வருவது வரட்டும் என தன்னைத் தயார் செய்து கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள் சங்கரி.



ஞாயிற்றுக்கிழமை பொழுது விடிந்ததுமே அண்ணியின் அலம்பல்கள் ஆரம்பமாயின. இதைத் துடை, அங்கே தூசி தட்டு என ஆணைகள் பிறப்பித்த வண்ணம் இருந்தாள். தன்னைத்தான் பெண் பார்க்க வருகிறார்கள் என்பதையே மறந்து விட்டார்களோ என எண்ணி தனக்குள் சிரித்தபடி சொன்ன வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள் சங்கரி. ஒரு வழியாக மாலை வந்தது. மனதை என்ன தான் வலுவாக வைத்துக்கொண்டலும் பயமும் பதற்றமும் அவ்வப்போது எட்டிப் பார்த்தது. அண்ணி அவளை உள்ளே போகச் சொல்லி விட்டாள். வெளியே பேச்சுக்குரல்கள் கேட்டன.



"வாங்க வாங்க! வந்து உக்காருங்க" என்று அண்ணன், அண்ணி அப்பா மூவரும் பலமாக உபசரித்துக்கொண்டிருந்தனர். குழந்தைகள் நிதின், ராகுல் இருவரும் நண்பர்கள் வீட்டுக்குப் போய் விட்டனர் போலும். நல விசாரிப்புகள் முடிந்தது.



"உங்க வீட்டைப் பத்தி எனக்குத் தெரியும். உங்க தங்கச்சியையும் கோயில்ல, கடையில அங்க இங்கேன்னு பார்த்திருக்கோம். ரொம்பப் பொறுப்பான பொண்ணு. அந்த மாதிரி பொண்ணு தான் எங்க வீட்டுக்கு வேணும்னு வந்திருக்கோம்" என்றார் சண்முகம். பேசும் போதே மூச்சிறைத்தது.



"ஆஹா! கடவுள் அருள் அப்படி தான்னா நாம செய்துர வேண்டியது தானே? கனகா! போயி நம்ம சங்கரியை அழைச்சுக்கிட்டு வாம்மா" என்றான் அண்ணன்.



எந்த விதமான எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் ஹாலில் நுழைந்தாள் சங்கரி. சட்டென அமைதியானது அந்த இடம்.



"இதாம்மா என் மகன் சபா! நல்லா பார்த்துக்கோ" என்று ஒரு பெண் குரல் ஒலித்தது. அது தான் மாப்பிள்ளையின் தாயாக இருக்க வேண்டும் என எண்ணியபடி நிமிர்ந்து பார்த்தாள். கண்ணில் தெரிந்த முகம் அவள் நெஞ்சில் மின்னல் பாய்ச்சியது. இது வரையில் இல்லாத ஏதோ ஒரு தாக்கம் மனதில். தலை நிறைய முடியோடு, லேசான இளந் தொந்தியும் வலுவான புஜங்களுமான அமர்ந்திருந்தான் சபா. அவனது பார்வை சங்கரியின் கண்களில் நிலைத்திருந்தது. இவனை...அல்ல அல்ல இவரை எங்கோ பார்த்திருக்கிறோமே? என எண்ணினாள். ஆனால் எங்கே என நினைவு வரவில்லை.



"ஏம்மா சங்கரி! உனக்கு என் மகனைப் பிடிச்சிருக்கா?" என்று மீண்டும் அதே பெண் குரல். இப்போது அந்தத் தாயை நோக்கினாள். அகலமான பொட்டு, முழுவதும் ஜரிகையிட்ட சேலையைச் சுற்றிக் கொண்டு அமர்ந்திருந்தாள் தங்கம்மாள். முகத்திலிருந்து எதையும் ஊகிக்க முடியவில்லை. தரையை நோக்கிக் குனிந்தாள்.



"என்ன அண்ணி? இப்படி வெக்கப்படுறீங்க?" என்று ஒரு இளம் குரல் ஒலிக்க ஆச்சரியத்தோடு நிமர்ந்தவள் கண்களில் அழகான நீல நிறத்தில் பாட்டுப்பாவாடையும் பிளசும் அணிந்து தங்க வண்ண தாவணி போட்ட ஒரு சிறு பெண்ணின் முகம் தெரிய அப்படியே வாயைப் பிளந்தாள். இந்தப் பெண்ணையும் பார்த்திருக்கிறோமே? என எண்ணி நின்றாள்.



"என்னம்மா அப்படிப் பார்க்குற? இது என் மக. பேரு ராணி. " என்றாள் தங்கம்மாள். முதல் பார்வையிலேயே ராணியை மிகவும் பிடித்துப் போனது சங்கரிக்கு.



"சபா! உன் அபிப்பிராயம் என்ன? உனக்குப் பெண்ணைப் பிடிச்சிருக்கா?" என்றார் சண்முகம்.



"எனக்குப் பிடிச்சிருக்கு! அவங்களுக்கு சம்மதமான்னு கேட்டு சொல்லுங்க"என்றான் பட்டென. மகிழ்ச்சியில் துள்ளிய இதயத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு அமைதி காத்தாள்.



"கனகு! சங்கரியை உள்ளே கூட்டிக்கிட்டுப் போயி கேளும்மா" என்றார் அப்பா.



"இங்கேயே சொல்றேனே! எனக்கு உங்க குடும்பம் முழுசையும் ரொம்பப் பிடிச்சிருக்கு" என்று தானும் பட்டென போட்டு உடைத்தாள் சங்கரி. தன் தங்கையா பேசியது என அனலாகக் காய்ந்தான் அண்ணன்.



"அப்புறம் என்ன? இன்னும் பத்தே நாள்ல நல்ல முஹூர்த்தம் இருக்கு. அதுலயே கல்யாணத்தை முடிச்சுக்கலாம். பொண்ணுக்கு வேணும்ன்ற நகைங்களை நாங்களே போட்டுடறோம். கல்யாணச் சேலை எடுத்துடறோம். சாப்பாட்டுச் செலவு எங்களுது. கோயில்ல கல்யாணத்தை முடிச்சிடலாம். அதுக்குண்டான ஐயர், மத்த செலவுகளை மட்டும் நீங்க பார்த்துக்குங்க" என்றார் சண்முகம் மூச்சு இறைப்பினூடே.



"அப்படியே செஞ்சுக்கலாம் சம்பந்தி" என்றார் அப்பா, அண்ணனை முந்திக்கொண்டு.



"அப்ப தட்டை மாத்திக்கலாம்" என்றூ சொல்லி இரு குடும்பத்தாரும் பாக்கு வெற்றிலை பழங்கள் நிறைந்த தாம்பாளத் தட்டுக்களை மாற்றிக் கொண்டனர். தனக்கா கல்யாணம் என்ற பிரமிப்பில் இருந்த சங்கரியிடம் சொல்லிக் கொண்டு அனைவரும் விடை பெற்றனர். ராணி முத்தமே கொடுத்து விட்டாள். மனம் முழுக்க மகிழ்வோடு சிரித்தாள் சங்கரி.
 
Top