Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுகமதி'யின் விரல் மீறும் நகங்கள் - 01 ( PART 02 )

Advertisement

உங்களின் ஆதரவிற்கு நன்றி FRIENDS :)


சீறிப்பாய்ந்த வாகனம் அந்த பெரிய வீட்டின் முன்பு சென்று நின்றது. வேக எட்டுகளில் வீட்டுக்குள் நுழைந்த வெற்றிச்செல்வனின், நலுங்கிய தோற்றத்தைக்கண்ட அவனுடைய பாட்டி ராஜேஸ்வரி,

“என்ன கண்ணு பள்ளிக்கூடத்துக்கு போகனும்ன்னு கிளம்பி போனீங்க. இப்போ இப்படி வந்து இருக்கீங்க?” என வெற்றிச்செல்வனைப் பார்த்துக் கேட்டவர்,

“ஏன்டா என்ன பிரச்சனை?” என வீரமணியிடம் அதட்டலாகக் கேட்டார்.

‘வெளிய நம்மள கண்டா ஊரே நடுங்குது. இந்த ஆத்தாவுக்கு மரியாதை தெரியுதா?’ என எண்ணிய போதும், ‘கேள்வியை நம்மகிட்ட கேட்குதே என்ன சொல்லி சமாளிக்க…’ என வீரமணியின் மனம் புலம்பிக் கொண்டிருந்தது.

ராஜேஸ்வரியோ மீண்டும், “உம்மகிட்ட தானே கேக்கறேன். அவன் பார்த்த வேலையா இது?” என வெற்றிச்செல்வனை ஆராய்ந்தவாறே கேட்டார். நல்ல ஆளுமையான தோற்றமும், கம்பீரமான குரலும் அவருக்கு.

அதை துளி கூட பொருட்படுத்தாதவன், “அப்பச்சி விடுங்க நான் பாத்துக்கறேன்” என பொதுவாகக் கூறியபடி, மாடிப்படிகளில் ஏறியிருந்தான்.

“அவனுக்கு எல்லாம் கொம்பை வளத்து விட்டது நம்மதானே… இப்போ அனுபவிக்கிறோம்” என பாட்டி புலம்பியது, செல்லும் அவனுக்கும் கேட்டது. அதனை கண்டுகொள்ளாமல் அறைக்குச் சென்று வேகமாக குளித்து, கிளம்பி வந்தான்.

மாடியிலிருந்து கீழே வரும்போதே “பாண்டி வண்டியை எடு…” என சத்தமிட்டபடியே வர,

பாண்டி இவனது அழைப்பைக் கேட்டதும், “இதோ கிளம்பிடலாமுங்க ஐயா…” என்று காரில் ஏறியிருந்தான்.

பின்னால் அமர்ந்திருந்த வீரமணி, “மில்லுக்கு தானுங்க ஐயா?” என இந்தமுறை வெற்றிச்செல்வனையே கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ள நினைக்க,

“ஸ்கூலுக்கு…” என்றிருந்தான் அவன்.

“அது… ஏற்கனவே சின்னச்சாமி ஐயாவை?” என தயக்கமாக வீரமணி இழுக்க,

“நேரம் தாமதம் ஆகிடக்கூடாதுன்னு தான் அவரை தலைமை தாங்க சொன்னது. வரேன்னு வாக்கு தந்துட்டு போகாமல் இருக்க இல்லை” என பதில் வந்த தொனியில் வீரமணி வாயை மூடிக்கொண்டான்.

பள்ளி வளாகத்தை வாகனம் நெருங்கியதுமே, வெறிச்சோடிக் கிடந்த வளாகம் சொன்னது, இவர்கள் வருவார்கள் என்று அங்கே யாரும் நினைக்கவில்லை என்று. கிராமப்புற பள்ளிக்கூடம் என்பதால் வாட்ச் மேன் எல்லாம் யாரும் இருக்கவில்லை.

விழா நடக்கும் கூடத்திற்கு வேக எட்டுகளில் சென்று கொண்டிருந்த வெற்றிச்செல்வனின் கால்கள், உள்ளே கேட்ட உரையில் அப்படியே நின்றது.

‘வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போ மென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்’
என்று பாடிய மகாகவி பாரதியார் கூட, இன்று இருந்திருந்தால் என்ன கூறியிருப்பார் தெரியுமா?

‘வீட்டுக்குள்ளே பெண்களை மட்டுமல்ல, மழலைகளையும் பூட்டி வைத்து விடுங்கள்;
இங்கே வாழும் மிருகங்களின் காமப்பசிக்கு இறையாக்கி விடாதீர்கள்;’
என்று யாசகம் கேட்டிருப்பார்.

அத்தனை பாதுகாப்பான சூழலில் பெண்கள் இருக்கிறார்கள்.

என்னிடம் இரண்டு நாட்களுக்கு முன்பு, தலைமை ஆசிரியர் கூறினார், ‘பெண்கள் பாதுகாப்பில் ஆண்களின் பங்கு என்ன? என்று பேசுங்கள்’ என்று. நானும் தலையை நன்றாக ஆட்டிவிட்டு வந்து விட்டேன்.

இப்பொழுது உங்களிடமே அந்த கேள்வியை வைக்கிறேனே! எங்கே கூறுங்கள் பார்ப்போம். பெண்களின் பாதுகாப்பிற்கு ஆண்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?” செந்தாமரையின் குரல் இம்முறையும் உரத்து, இனித்து ஒலித்துக்கொண்டிருந்தது.

அரங்கத்தில் இருந்த அனைவருமே அவளது குரலிலும், பேச்சிலும் விழியசையாது அவளிலேயே கவனம் பதித்திருக்க,

வெளியில் நின்றிருந்த வெற்றிச்செல்வனும் அங்கிருந்த ஜன்னல் கம்பிகளின் வழியே அதையே தான் செய்து கொண்டிருந்தான்.

செந்தாமரை தன் கேள்விக்கான பதிலிற்காக அங்கிருந்த மாணவர்களைப் பார்க்க,

“பெண்களுக்கு ஏதாவது உதவி வேணும்ன்னா நாம செய்யணும் டீச்சர்” என்றான் ஒரு மாணவன்.

“யாராவது அவங்ககிட்ட வம்பு செய்தா, நாம காப்பாத்தணும் டீச்சர்”

“ஆமா டீச்சர்”

ஆங்காங்கே ஒவ்வொரு மாணவன் எழுந்து எதையாவது சொல்வதும், சிலர் ஆமோதிப்பதுமாய் இருந்தனர். மாணவர்களின் பதிலில், அவர்களுக்குள் சினிமாவின் தாக்கம் எந்தளவு என்பது புரிந்தது.

அனைத்தையும் நிதானமாக, ஒருசில பதில்களில் மென்னகையோடு கேட்டுக்கொண்டிருந்த செந்தாமரை அவர்கள் அனைவரும் சொல்லி முடித்ததும், “ஆனால், எனக்கு வேற மாதிரி தோணுதே…” என பீடிகையோடு இடைவெளி தந்தாள்.

செந்தாமரையின் குரலா, பாவனையா, ஆளுமையா என்று தெரியவில்லை. ஆனால், எதுவோ ஒன்று, அதற்கு பெயர் கூட இருக்கிறதா என்று தெரியாத ஒன்று அவளிடத்தில் வெற்றிச்செல்வனை கட்டிப் போட்டிருந்தது.

ஏன் அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறான்? அவனுக்குத் தெரியாது. ஏன் இன்னமும் விழா மேடைக்குச் செல்லவில்லை? அவனுக்குத் தெரியவே தெரியாது.

ஆனாலும், கட்டுண்டிருந்தான்! அவளது உரையிலா? அவளிலா? என்றுதான் தெரியவில்லை. ஒரு மாதம் முன்பு, அவர்களுக்குள்ளான முதல் சந்திப்பின் போதும் அவன் நிலை இதுவே தான்.

செந்தாமரையின் பீடிகையில் அனைவரும் ஆவலாய் அவளையே பார்த்திருக்க அவளோ கூட்டத்தில் தன் பார்வையைச் சுழலவிட்டு, “ஆண்கள் பெண்களைப் பாதுகாக்க நினைத்தார்களாயின்… அவர்கள் எதுவுமே செய்யாமல் இருப்பது உத்தமம்” என்று கூறினாள்.

எத்தனை பொருள் பதிந்த வார்த்தை, அவளது வார்த்தையின் பொருளைப் புரிந்து கொண்ட வெற்றிச்செல்வனுள் செந்தாமரையின் ரசிகன் ஒருவன் உடனடியாக முளைத்து, வெளியேறிக் குதிக்கத் தயாராய் இருந்தான்.

அந்த ரசிகனுக்கு இப்பொழுதே கைதட்டி, விசில் அடித்து ஆராவாரம் செய்ய வேண்டும் என்றொரு வேகம்! அந்த ரசிகனை கட்டுப்படுத்துவதற்குள் வெற்றிச்செல்வன் ஒரு வழியானான் என்றே கூறலாம்.

அந்த ரசிகன் வெற்றிச்செல்வனின் பார்வையைத் தன்வசமாக்கி இருக்க, அவனது பார்வையில் தெரியும் ஆர்வமும் பல மடங்கு அதிகரித்திருந்தது.

அந்த பார்வையின் வீரியம் செந்தாமரையை உறுத்த, ஒரு நொடி தடுமாறினாள். பார்வையை மேலோட்டமாக சுழலவிட்டவளுக்கு யார் பார்வையும் வித்தியாசமாகப் படவில்லை.

தன்னை நிதானித்து, “நான் சொல்வது சரி தானே?” எனச் செந்தாமரை கேட்க,

“டீச்சர்…” என கோரஸ் பாடி இழுத்தனர் மாணவர்கள்.

“சரி தானேப்பா? பசங்க எல்லாம் ஒதுங்கி இருந்தாலே பெண்களுக்கான பிரச்சனைகள் வராது இல்லையா?” என்று மெல்லிய புன்னகையோடு மீண்டும் கேட்டாள்.

மேலும் தொடர்ந்து, “பொதுவாகவே எதையோ மனம் தேடிக்கொண்டே இருக்கும். அதுவும் இந்த பதின்வயதில் மனதிற்குள் ஒரு குறுகுறுப்பு இருந்துகொண்டே இருக்கும். அதை கடந்து வர முயற்சி செய்யுங்கள். நிச்சயம் வாழ்க்கையில் ஜெயிக்கலாம்.

அந்த காலத்தில் அனைவரும் முறையாக வளர்ந்தது பெரிய விஷயமே இல்லை. இந்த காலத்தில், கெட்டுப்போகச் சுத்தியும் ஆயிரம் வழி இருந்தாலும் நீங்க கவனம் சிதறாமல் வளர்ந்தால் அதுதான் சாதனை. உங்கள் எல்லாரையும் சாதனையாளராகப் பார்க்க ஆசைப்படறேன்” என்று கூறி நன்றி சொல்லி தனது உரையை முடித்தாள்.

எதையும் திணிக்கவில்லை; அதிகம் இழுக்கவில்லை; ஆனால் முறையாகப் பேசினாள். சரியான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டாள்.

அவள் மீது பதித்த பார்வையை விலக்கும் வழி தெரியாமல், வெற்றிச்செல்வன் தவித்திருக்க, வெகுநேரமாய் அவனை விசித்திரமாகப் பார்த்திருந்தனர் வீரமணியும், பாண்டியும்.

“ஐயா… ரொம்ப நேரமா இங்கேயே நிற்கிறோம்…” என வீரமணி தயக்கமாகக் கூற,

சட்டென்று தெளிந்தவன், “அது…” என்று திணற தொடங்கினான். பிறகு நொடியில் தன்னை நிதானித்து, தொண்டையை செருமி, “பேசும்போது ஏன் குறுக்க போகனும்ன்னு தான்…” என்று கூறிவிட்டு அவர்களை வேகமாக கடந்து முன்னே சென்றான்.

“ஏன் பாண்டி ஒருவேளை ஊருக்குள்ளே பேசிக்கறாங்களே அது நிஜம் தானோ?” என வீரமணி பாண்டியின் காதை கடிக்க,

“இருங்கண்ணே ஐயாவையே கேட்டுப்புடுவோம்” என்று புத்திசாலித்தனமாய் பதில் கூறினான் பாண்டி.

“அடேய் அப்படி எதுவும் கேட்டுப்புடாத… அப்பறம் நமக்கு உப்புக்கண்டம் தான்” என அவனது வாயை அடக்கி உள்ளே அழைத்துச் சென்றான் வீரமணி.

வெற்றிச்செல்வனை அங்கே யாரும் எதிர்பாராததால் அனைவருக்கும் சற்றே இன்ப அதிர்ச்சி. கூடவே பலத்த வரவேற்பும். அவன் சென்ற பிறகுதான் சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள் தொடங்கிற்று. அதிலேயே நேரம் இழுத்துக் கொள்ள, அங்கேயே தான் இருந்தான். விழா முடியும் நேரம் கைப்பேசி அழைப்பொன்று வர, அவன் உடனேயே செல்ல வேண்டியதாய் இருந்தது.

அனைவரிடமும் விடைபெற்று வெற்றிச்செல்வன் கிளம்ப, பின்னேயே சென்றிருந்தாள் செந்தாமரை.

அவனது வேக நடையோடு போட்டியிட்டபடி கொலுசொலிகள் கேட்க, அவனது நடைக்கு ஈடாய், அதே வேகத்தில் ஜதி சேர்த்த ஒலியில் பின்னால் திரும்பி பாராமலேயே வருவது யாரென வெற்றிச்செல்வன் புரிந்து கொண்டான்.

‘இவள் ஏன் பின்னாடியே வருகிறாள்?’ என மனம் ஆராய்ந்த போதும், ‘வேறு எங்காவது செல்வாளாயிருக்கும்’ என சுய சமாதானத்தோடு வாகனம் நிறுத்தியிருந்த இடத்திற்குச் சென்றிருந்தான். அது வரையிலுமே அவனது நடைக்கு அவளது கொலுசுகள் ஜதி சேர்த்திருக்க, அந்த இசையில் அவனுக்கு உறுதியான விஷயம் அவள் தன்னிடம் எதையோ பேச வந்திருக்கிறாள் என்பது.


-- தொடரும் ...
Starting epi supet
 
Top