Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சலசலக்கும் சொந்தங்கள்-அத்தியாயம்8

Advertisement

BelsyPrabhu

Active member
Member
பிரண்ட்ஸ், நான் எப்ப ஒரு முழு நாவல் முழுசா எழுதி முடிப்பேன்னு ஆர்வமா இருக்கேன், அதுவுமில்லாம இந்த லாக்டவுன் பீரியட்ல ஃப்ரீயா இருக்குபோதே, ஆசைய நிறைவேத்திக்கனும்னு, அதுக்காக தான் தினமும் ஒரு பதிப்பு வெளியிடுறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி.


சலசலக்கும் சொந்தங்கள்

அத்தியாயம் 8

வெளியே வந்தவள் ஆட்டோ பிடித்து, அந்த பிரபலமான மருத்துவமனையை அடைந்து, போன் செய்து எந்த ரூம் எனக் கேட்டு அங்கு சென்றாள். அறைக்குள் சென்றவள் கையில் டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க கண்மூடி படுத்திருந்த பீட்டரையே கண்டாள். யாரோ நிற்கும் உணர்வு தோன்ற, பேட்ரிக் வாசலை நோக்க, அங்கு நின்றிருந்தவளை, “அண்ணி உள்ள வா, இவனுக்கு இப்ப ஒண்ணுமில்ல, பயப்பட வேண்டாம்”.

பேட்ரிக் சத்தம் கேட்டு கண்விழித்து வாசலில் பார்வையை ஓட்டினான் பீட்டர். அங்கு தான் செல்லியும், ஆரோக்கியசாமியும் இருந்தனர். அறைக்குள் வந்தவள் பேட்ரிக்கிடம், “டாக்டர் என்ன சொன்னார்” என்றாள்.

செல்லியோ, ‘கொஞ்சங்கூட பதற்றமே இல்லாம, எப்படி கேள்வி கேக்குறா பாரு’ என திட்டிக் கொண்டிருந்தார். அவருக்கு தெரியவில்லை பேட்ரிக் போனிலேயே முழு விவரமும் சொல்லியதால் தான் இப்படி ரிலாக்ஸாக இருக்கிறாள் என்று. ஆமா, பீட்டரிடமிருந்து போன் வரவும், அட்டென்ட் செய்தவளிடம், பேட்ரிக், “நா பேட்ரிக் பேசுறேன், அண்ணன ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கோம், இப்ப நல்லா இருக்கான், ஃபுட் பாய்ஸன் ஆகிடுச்சு, டிரிப்ஸ் ஏத்திட்டு இருக்காங்க, முடிஞ்சதும் வீட்டுக்கு போகலாம்னு டாக்டர் சொல்லிட்டார்” எனக் கூறி மருத்துவமனை பெயரையும் சொல்லியே வைத்திருந்தான்.

பேட்ரிக்கிடம் கேள்வி கேட்டாலும் பீட்டரையே பாத்து கொண்டிருக்கவும், அவர்களின் கண்ணாமூச்சி ஆட்டத்தை தெரிந்திருந்தவன், “அதை உன் வீட்டுகாரன்டயே கேளுமா” என்று விட்டு, “அம்மா, அப்பா நாம கேண்டீன் வரைக்கும் போயிட்டு வருவோம்” என்று சொல்லி முன்னால் நடக்கவும், அவர்களும் அவன் பின்னே சென்றான்.

நிம்மி அங்கிருந்த ஸ்டூலில் அவன் பெட் அருகில் உட்கார்ந்தாள். யார் முதலில் பேசுவது என தயங்கி, பின் நாமளே பேசுவோமா என்று நிம்மி யோசிக்கும் கேப்பில் பீட்டரே பேசினான்.

பீட்டர், “உன்னோட லஞ்ச் டைம்ல போன் பண்ணியிருக்கான் போல சாப்ட்டியா”.

நிர்மலா, “அதுகென்ன நா சாப்ட்டு முடிக்கும் போதுதான் போன் வந்தது” என்றவள் “ஆமா உங்களெல்லாம் ரொம்ப கொழுப்புதான், வீட்டு சாப்பாட எடுத்துட்டு போனா என்ன, குறஞ்சா போயிடுவீங்க, ஆசைக்கு என்னைக்கோ ஒரு நாள் ஹோட்டல்ல சாப்டா பரவாயில்லை, இது என்ன பழக்கமோ, எப்பவும் வெளியதான்”.

பீட்டர், “ஏய் அப்படியெல்லாம் இல்ல, எங்களுக்கு பழகிடுச்சு” எனவும், நிம்மி, “என்ன பழகிடுச்சு?” என்றாள் கோபமாக.

பீட்டர், “சரி, டென்ஷன் ஆகாத, உண்மைய சொன்னா, நானும் பேட்ரிக்வும் வீட்டு சாப்பாடு சாப்ட நாட்கள ரொம்ப ஈஸியாக எண்ணிருலாம், உனக்கே தெரியும் நாங்க ஹாஸ்டல்ல படிச்சோம்னு”

நிர்மலா, “ஹாஸ்டல்ல படிக்கிறவங்க எல்லாம் வீட்டு சாப்பாடு சாப்ட மாட்டாங்களா”.

அவளைப் பார்த்த பீட்டர், அவள் கைப் பிடித்து கொள்ள, அவளுக்கு குறுகுறுக்கவும், அவள் தன் கையை உருவ முயல, “ஷ்ஷ், சும்மா, இரு, நமக்கு கல்யாணமாகி இரண்டு மாசம் ஆயிடுச்சு, நானே இப்ப தான் கைய பிடிக்கிறேன், உனக்கென்ன, அமைதியா சொல்றத கேளு, மூணு வயசுல என்ன போடிங் ஸ்கூலுக்கு அனுப்பினாங்க, பின்னாடியே ஒரு வருஷத்துல பேட்ரிக்கும் வந்தான். எனக்கு அந்த வயசுல ஒண்ணும் தெரியாது, ஆனாலும் அவன் வந்தப்ப நான் சப்போட்டா இருந்தேன். ஆனா எனக்கு?, அதுக்கப்பறம் நாங்க ரெண்டு பேரும் தான், லீவுக்கு வீட்டுக்கு வருவோம், அக்கா, ஜென்சி, ஜென்னி, செபியா, டேனி எல்லாரும் இங்கயே இருந்ததால அவங்கக்குள்ள எப்பவும் நெருக்கம் இருக்கும், எங்கள எப்பயாவதான பாப்பாங்க, அப்படி இருக்க மாட்டாங்க, ஒரு தடவ செபியாவை பேட்ரிக் தள்ளிவிட்டதுல கால்ல அடிப்பட்டு இரத்தம் வரவும், அப்பா அவன அடி பின்னி எடுத்துட்டாரு, அதுலேயிருந்து யார் பக்கமும் போகறதில்ல, என்னன்னா என்ன அப்படின்ற லெவல்லதான் எங்க பேச்சு இருக்கும், லீவுக்கு வர பிள்ளைகள வெளிய கூட்டிட்டு போவோம்னு பாதிநாள் வெளி சாப்பாடுதான், அப்பறம் காலேஜ், வேலை எல்லாத்துக்கும் வெளியூர், வெளிநாடு, நான் எங்க போறேனோ அங்க பின்னாடியே ஒரு வருசத்துல பேட்ரிக் வந்துருவான், உண்மைய சொன்னா பேரண்ட்ஸ் எங்களுக்காக செய்ததுனாலும், நாங்க அம்மா, அப்பா, வீட்ல உள்ளவங்க அத்தன பேரையும் ரொம்பவே மிஸ் பண்ணினோம், அது அவங்களுக்கு தெரியாது, சின்ன வயசுல சொல்லத் தெரியல, இப்ப சொல்லி ஒண்ணும் ஆகப் போறதில்லை, என் வாழ்க்கைய திரும்பி பாத்தா அதுல பேட்ரிக்தான் இருப்பான், ம்ம்ம்…கொஞ்ச வருசமா நீ”.

நிம்மி, “என்ன சொன்னீங்க, கொஞ்ச வருசமாவா?”

பீட்டர், “அப்படியா, சொன்னேன், டங்க் ஸ்லிப்பாயிடுச்சு, கொஞ்ச நாளா, சரியா?”.

உண்மையில், நிர்மலாக்கும், அவன் சொல்லவும், அவன் சிறு வயதில் எப்படி சின்ன குழந்தையாய் தன் வேலைகளைத் தானே செய்து கஷ்டப்பட்டிருப்பான் என்று மனம் அவனுக்காக உருகத் தொடங்கியது.

நிம்மி, “நம்ம பிள்ளைய நான் போடிங் ஸ்கூலுக்கெல்லாம் அனுப்ப மாட்டேன், ஊரு பிள்ளைக்கெல்லாம் சொல்லி தரேன், என் பிள்ளைக்கு சொல்லி தர மாட்டேன்னா” எனவும்,

பீட்டர் “இந்த விஷயத்துல, நீ சொல்றததான் நான் கேட்பேன்” என்று கூறவும், “சத்தமாவா சொன்னேன், மனசுக்குள்ள சொல்லல்ல” என கேட்டாள்.

அவன் சிரித்துக் கொண்டே, “ஆமா, பிள்ளையே இல்ல, அதுக்குள்ள ஸ்கூல் பத்தி பேசுறது நாமளதான் இருப்போம்”.

அவளுக்கும் சிரிப்பு வர, ஆனாலும் நினைவு வந்தவளாய், “நீங்க என்ட்ட எப்ப உண்மைய சொல்லுவீங்க” எனக் கேட்க,

ஒரு மாதிரி குரலில் அவன், “சந்தேகப்படுறீயா? எனவும்,

அவள், “உலகத்துல இருக்கறதிலே பெரிய வியாதி சந்தேகம் தான், எனக்கு அந்த வியாதி கிடையாது, ஆனா ஒரு ஆர்வம்தான், ஒன்னு செய்யாதனு சொன்னா நாம அத செய்ய முயற்சிக்கற மாதிரி, நீங்க என்னனு சொல்லாததால வந்த க்யூரியாசிட்டி மட்டுந்தா, வேற எதுவுமில்ல”.

நிம்மதி பெருமூச்சு விட்டவன், “உன்ட்ட மறைக்கனு எந்த விஷயமும் இருக்கக் கூடாதுனு நா நினைக்கிறேன், கட்டாயமா அத சொல்லுவேன், ஆனா இப்ப இல்ல, இது அத சொல்றதுக்கான நேரமும் இல்ல, இடமும் இல்ல”, அவள், “ஓக்கே, உங்களுக்கு எப்ப தோணுதோ அப்ப சொல்லுங்க, இப்ப நா நர்ஸ கூட்டிட்டு வரேன், கைய விடுங்க”

கையை விடாமல், “எதுக்கு அவங்க”, நிம்மி, “டிரிப்ஸ பாருங்க, அது முடிய போகுது, ரிவஸ்ல பிளட் ஏறிற போகுது, நான் போயி அவங்கள கூட்டிட்டு வரேன்” என்று சொல்லவும் நர்ஸ் உள்ளே வரவும் பிடித்திருந்த கையை விட்டுட்டு, “அங்க பாரு பேட்ரிக் நர்ஸோட வரான்”.

உள்ள வந்த நர்ஸ் டிரிப்ஸ் முடிய காத்திருந்து அதை நிறுத்தி, கையில் இருந்த ஊசி, பேண்டைட்-ஐ அகற்றி விட்டு, பேட்ரிக்கிடம், “டாக்டர பாத்துட்டு வாங்க” என்றார்.

நிம்மி, “நானும் வரேன், பேட்ரிக் மாமா” எனவும், ‘மாமாவா’ என திகைத்த பேட்ரிக் பீட்டரைத் திரும்பி பார்க்க, அவன் புன்னகையுடன் தலையசைக்கவும், இவனும் புன்சிரிப்புடன், “சரி வா” என்றான்.

பின்ன இவ்வளவு நாள்ல ஒரு நாள் கூட நிம்மி, பேட்ரிக்கை முறை வைத்தெல்லாம் கூப்பிட்டதில்லை, பொதுப்படையான பேச்சுதான், அவனுக்கு உண்மையில் உரிமையாக பேசும் நிம்மியை ரொம்ப பிடித்திருந்தது. தன் தங்கை இவள்தான் என்றே எண்ணினான்.

இருவரும் டாக்டர் காட்டிய இருக்கையில் உட்கார்ந்ததும், டாக்டர், “படிச்சவங்களுக்கே விழிப்புணர்வு இல்லேனும் போது என்ன சொல்றதுனு தெரியல, இப்ப மிஸ்டர் பீட்டர் நல்லாயிருக்காரு, சாப்பாட்டு விஷயத்துல எப்பவும் அலட்சியம் இருக்கக் கூடாது” என்று அவர் முழுதாக சொல்லி முடிப்பதற்குள், நிம்மி, “டாக்டர், இனி மேல் அவருக்கு இந்த மாதிரி ஆகாம நான் பாத்துகிறேன்” எனவும், “சரிங்க, பில் செட்டில் பண்ணிட்டு கூட்டிட்டு போங்க” என்ற டாக்டரிடம் இருவரும் விடை பெற்று வந்து, பீட்டரையும் அழைத்து கொண்டு வீடு வந்து சேர்ந்திருந்தனர்.

இவர்கள் அனைவரும் ஒன்றாக வருவதைக் கண்ட பீட்டர் அப்பாயி, “என்ன எல்லோரும் ஒண்ணா வரீங்க, என்ன விஷயம்?”.

யாரிடம் எதுவும் சொல்லாததால், நடந்ததை தன் தாயிடம் விளக்கினார் ஆரோக்கியசாமி, உடனே அவர், “என்ட்ட சொல்லியிருந்தா, நானும் ஹாஸ்பிட்டல் வந்திருப்பேன்ல” என்றார்.

நிர்மலா, “அம்மாச்சி, அவருக்கு ஒண்ணுமில்ல, ஏன் எல்லாரும் குடும்பமா ஹாஸ்பிட்டல்ல உட்காருந்திருந்தா பிடிக்குமோ” என்றவள், அவர் வாய் திறப்பதற்குள், “செலின் ஆன்டி, இங்க வாங்க” என்றழைக்க, அவர் வந்ததும், “நாளையில இருந்து எனக்கு மட்டுமில்ல, இவங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து மதிய சாப்பாடு செய்யனும், நீங்க கொஞ்சம் காலையில சீக்கரம் வாங்க, நானும் உங்க கூட வந்துருவேன், அப்பறம் இவங்க காலையில சாப்பிடாம போனா எனக்கு சொல்லனும், சரியா?”

செல்லி, “அவ்வளவு அக்கறை இருக்கறவ காலை சாப்பாட புருஷனுக்கு கூட இருந்து கொடுக்க வேண்டியதுதான்” என்று முணுமுணுத்தார்.

நிர்மலா, “அதெல்லாம் எங்களுக்கு தெரியும், செலின் ஆன்டி நா சொன்னத பாலோ பண்ணிருங்க, புரிஞ்சுதா, சரி, நீங்க போங்க” எனக்கூறி விட்டு, “ஹாஸ்பிட்டல்லே இருந்து வந்து அப்படியே இருந்தா நல்லாயிருக்காது, வாங்க, ரூம் போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு ரெஸ்ட் எடுங்க” என்று அவனை அங்கிருந்து கிளப்பிக் கொண்டு போனாள்.

அடுத்த நாளில் இருந்து பீட்டரும், பேட்ரிக்கும் வீட்டு சாப்பாடு கொண்டு செல்வதை அறிந்த ஜென்னியும் தன் கணவனுக்காக கிச்சன் வந்து ஹெல்ப் செய்தாள். சில நேரங்களில் யார் முன்னெடுப்பது என்று இருக்கும், யாராவது முன்னெடுத்தால் மற்றவர்கள் பின்பற்றுவர், அப்படிதான் நிம்மி முன்னெடுக்கவும் ஜென்னி உடன் இணைந்துக் கொண்டாள்.

அன்று பால்கனியிலிருந்து ரோட்டை வேடிக்கைப் பார்த்தவளின் கவனத்தை, தன் அம்மா, அப்பா, அண்ணனுடன் நடந்து போய் கொண்டிருந்த சிறுப்பெண்ணை கண்டதும், அவளுக்கும் தன் வீட்டார் பற்றிய எண்ணம் அதிகமாகியது. அவர்களுடன் அடிக்கடி வீடியோ காலில் பேசுகிறாள்தான். இருந்தாலும் நேரில் பார்க்க மனது ஆவல் கொண்டது. அதற்கேற்றாற் போல் அவள் மொபைல் இசைத்தது. அதில் அப்பாவின் எண் ஒளிரவும், போனை எடுத்து பேசியவளிடம், அவள் தந்தை ‘நாங்க அங்க வந்துட்டு இருக்கோம், நீ வீட்ல இருக்கியானு தெரிஞ்சுக்கதான் பேசினேன்’, என்றுரைத்து வைத்திருந்தார்.

தங்கள் அறைக்குள் சென்று பீட்டர் முன்னால் நின்றாள். லேப்டாப்பில் எதையோ செய்து கொண்டிருந்தவன் நிமிர்ந்து, கைபிடித்து இழுத்து அருகில் அமர்த்தி விட்டு, “என்னனு சொன்னாதான தெரியும்?”.

நிம்மி, “அப்பா, இங்க வரேன்னு சொன்னாங்க”, “ஓ..” என்றவன், மேல பேசுவதற்குள், கதவு தட்டப்படவும், நிம்மி போய் கதவைத் திறக்க, செலின், “பாப்பா, உங்க வீட்லயிருந்து வந்திருக்காங்க, பெரியம்மா, கீழ வரச் சொன்னாங்க” என்று சொல்லி சென்று விடவும், லேப்டாப்பை மூடியவன், “வா, போகலாம்” என்று அழைத்தான்.
 
Top