Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 3.1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் மூன்று :

சபரிமலை பயணம் அதன் பிறகு எந்த பேச்சுக்களும் மனோவிடமோ, ராஜராஜனிடமோ இன்றி சென்றது. அய்யன் தரிசனம் மட்டுமே பிரதானமாய் இருக்க, விகாஸோ விடாது அவ்வப் போது ராஜராஜனிடம் பேச்சுக் கொடுக்க,

அதுவும் மலையேறும் போது மனோவின் தோள் மேல் இருந்தவனை ஒரு இடத்தினில் மனோ கீழே இறக்கி விட்டு இளைப்பாறவும், “என்னை நீங்க தூக்குங்க மாமா” என்று அவன் முன் வந்து தூக்கு என்பது போல கையை நீட்ட,

“சிறுவனிடம் என்னடா உனக்கு வேற்றுமை” என்று மனசாட்சி ஒரு குத்து விட, அவனையும் மீறி தூக்கி கொண்டான் ராஜராஜன்.

பின்பு என்ன மாமன் தோளில் சவாரி தான் அவனிற்கு!

அவர்கள் சிறிது தூரம் நடந்த உடனே “என்கிட்டே அவனை குடுக்கறதுன்னா குடுங்க” என்று மனோ கேட்க,

“ஏன், என்னால தூக்க முடியாது சொல்றியா?” என ராஜராஜன் பேச,

“என்னவோ செய்து கொள்ளடா நீ” என்ற பார்வையோடு மனோ நகர்ந்து விட்டான்.

ராஜராஜன் குழந்தையோடு சகஜமாய் பேசினான் என்று சொல்ல முடியாது, ஆனால் ஒரு இணக்கம், ஒரு கவனிப்பு, ஒரு கனிவு ஒட்டிக் கொண்டது.

விகாஸ் வாய் ஓயாமல் பேசிக் கொண்டு வந்தான், எதிர்பட்ட எல்லாவற்றையும் என்ன? என்ன? என்று கேட்டான், மலைப்ரதேசம் ஆட்கள் அதிகம் இல்லாத சமயம், இவர்களை போல ஒன்றிரண்டு குழுக்கள் மட்டுமே, ஓரிடத்தில் பெரிய மலைப் பாம்பு ஒன்று அவர்களை கடக்க, எல்லோரும் அப்படியே நின்று விட்டனர்.

அது இரையை ஏதோ உண்டிருக்க, மெதுவாய் கடந்தது.

“மாமா நாம அதை போய் தொடலாமா? அதோட டம்மி ஏன் பெருசா இருக்கு” என்ற கேள்வி வேறு, இப்படியாக ஐயனை தரிசித்ததும் ராஜராஜனின் தோளில் தான்.

மனோ வியந்து தான் பார்த்தான், புது ஆட்கள் யாரிடமும் போகாத விகாஸ், ஒன்றிரண்டு முறை பெரிய பாட்டியால் மாமா என்று காண்பிக்க பட்டவனிடம் எப்படி ஒட்டிக் கொண்டான் என.

ரத்த பந்தங்கள் என்பது இதுதானோ என்று தோன்ற,

மலையில் இருந்து இறங்கும் போது உறங்கிவிட்ட விகாஸை ராஜராஜன் கொடுக்கவில்லை, “அவன் கண் விழிக்கட்டும் கொடுக்கறேன்” என்று விட்டான்.

இப்படியாக ஊர் வந்து சேர்ந்தனர்..

அவரவர் வீட்டிற்கு பிரியும் போது அவனிடம் வந்த விகாஸ் “மாமா நாளைக்கு நாங்க ஊருக்கு போறோம், நீங்க வீட்டுக்கு வாங்க” என்று கூப்பிட,

பதில் பேசாமல் செல்லமாய் அவனின் கன்னம் தட்டி அனுப்பினான்.

மனோவிடம் சென்ற வேகத்திற்கு திரும்ப வந்த விகாஸ் “அத்தையை பார்த்துக்கோங்க, அப்பா சொன்னாங்க” என,

அவனின் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்த ராஜராஜன் “உங்க அத்தையை யாரும் பார்த்துக்க தேவையில்லை. அவளை அவளே பார்த்துக்குவா, சீக்கிரம் உங்கப்பாவை உங்க அத்தையை கூட்டிட்டு போகச் சொல்லு, எங்க பாட்டி இல்லாம எங்க வீடே நல்லா இல்லை, அவங்களை அனுப்பி விடுங்க” என்று சொல்ல,

இதற்கு என்ன சொல்வது என்பது போல அப்பாவை பார்த்தான் விகாஸ்.

“வா” என்பது போல விகாஸை பக்கத்தில் அழைத்தவன் எதோ சொல்லி அனுப்ப,

அவனிடம் ஓடி வந்த விகாஸ் “அத்தையை கூட்டிட்டு போக ட்ரை பண்றாங்களாம்” என்று சொன்ன சின்னவனுக்கு பின்பு அப்பா சொன்னது மறந்து போக,

மனோவே ராஜராஜன் அருகில் வந்து “நான் மேக்சிமம் கூட்டிட்டிப் போக முயற்சி பண்றேன், அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியலை. என்ன பன்றான்னும் தெரியலை, எங்கப்பா அம்மாவை பார்த்து ரெண்டு வருஷமாகுது, நான் தான் வந்துட்டு போறேன், ஒரு வேலை அவ வரலைன்னா, நீங்க பேசி இந்த உறவை முடிச்சி விடுங்க, இங்க இருக்குற வரை அவளை பார்த்துக்கங்க” என்று முடித்தவன் திரும்பி நடந்தான்.

“இவன் என்னடா அவன் தங்கைக்கு சொல்லாம எனக்கு சொல்லிட்டு இருக்கான். நான் அவளை போ போன்னா சொல்ல முடியும். முதல்ல அவ என் கூடவே இல்லை. இந்த ஊர்ல ஒரு இடத்துல இருக்கா, அவளை இந்த ஊரை விட்டு போன்னு சொல்ல முடியுமா?” என்று தோன்ற,

“ஏன் இங்க இருக்கா?” என்ற எப்போதும் போல விடைதெரியாத கேள்வியும் மனதோடு தோன்ற,

“சுவாமி சரணம்” என்று சொல்லிக் கொண்டவன் வீடு நோக்கி நடந்தான்.

கோவிலுக்கு போய்விட்டு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட அன்று தான் மில்லிற்கு வந்தான். அரிசி மில் அவர்களது. அது மட்டுமே மிஞ்சி இருந்தது. அண்ணன்கள் இருவரும் இவன் கோவில் செல்வதால் அந்த நேரம் பிள்ளைகளின் விடுமுறையும் கூட என்பதால் வந்திருந்தனர்.

அவர்களின் வாசம் சென்னையில், இருவருமே சாப்ட்வேர் எஞ்சினியர்கள், அண்ணிகள் இருவரும் கூட அண்ணனை போன்ற வேலையில் தான் இருந்தனர்.

சொல்லப் போனால் இருவரும் வெளிநாட்டில் இருந்தனர், இப்போது ஒரு வருடம் முன்பு தான் இந்தியாவே வந்திருந்தனர். கிட்ட தட்ட இருவருமே பத்து வருடத்திற்கும் மேல் வெளிநாட்டில் இருந்ததினால் நல்ல சம்பாத்தியம்.

இதோ அவர்கள் தான் இந்த மில்லை புதுப்பித்து இரண்டு வருடம் முன் ராஜராஜனிடம் கொடுத்து இருந்தனர். அவனின் திருமணம் முடிந்த பிறகு அவன் கௌரவமாய் இருக்க வேண்டும் என்பதற்காக.

ராஜராஜனிற்கு படிப்பில்லை, அண்ணன்களை போல படிக்கவில்லை. பன்னிரெண்டாவது முடியவுமே உழைக்க வந்து விட்டான் வீட்டின் சிரமம் கருதி, ஆம், ஒரு அண்ணன் படித்து அப்போது தான் முடித்திருக்க, இன்னொரு அண்ணன் கடைசி வருடத்தில் இருக்க, ஒரு அக்காவை திருமணம் செய்து கொடுத்த கடன் நீண்டு இருக்க , இன்னொரு அக்கா திருமணதிற்கு நிற்க,

இவர்கள் இத்தனை பேரின் ஜீவனம் இருக்க, இருக்கும் நிலத்தில் நெல் விளைவிக்கிறேன் என்று அப்பாவும் சித்தப்பாவும் இருக்க, தாத்தா படுக்கையில் இருக்க, அப்பாவும் சித்தப்பாவும் யாரிடமும் வேலை செய்து பழக்கமில்லாததால், பின்பு விருப்பமில்லாததால், இருக்கும் சிறிது சொத்துக்களை விற்று பிள்ளைகளை படிக்க வைப்பது என்று சமாளித்து கொண்டிருக்க,

ராஜராஜன் பதினெட்டு வயதில் வீட்டினை கருத்தில் கொண்டு உழைக்க வந்து விட்டான். அவன் வீட்டினை பார்த்துக் கொண்டதால் தான் இரு அண்ணன்களால் படிப்பை முடித்து நல்ல வேளையில் அமர்ந்து இப்போது நன்றாக இருக்க முடிந்தது. அவர்கள் மீது குடும்ப பாரம் இல்லை.

இப்போது நன்றாய் இருக்கவும் குடும்பத்திற்கு செய்கிறார்கள். பழையபடி எல்லா சொத்துக்களையும் வாங்கி விட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்கிறார்கள்.

ராஜராஜனுக்கும் அப்படி எண்ணம் எல்லாம் இருந்தது. ஆனால் இப்போது அவனுக்கு என்ன எண்ணம் என்று அவனுக்கு தெரியவில்லை.

மனதினில் எப்போதும் ஒருத்தி இந்த ஊரில் அமர்ந்து வண்டாய் அவன் காதில் சத்தமிட, அவளினது அத்தியாயம் என்ன என்று தெரிந்த பிறகே வேறு அவனால் செய்ய முடியும் என்று விட்டு விட்டான்.

அந்த அத்தியாயம் எழுதப்படுமா இல்லை அழிக்கப் படுமா இதுவே அவன் கவனம் முழுவதும், அதனால் வரும் வேலையைச் செய்தான், புதிதாய் எதுவும் முயற்சிக்கும் எண்ணமில்லை.

ஓரிரண்டு முறை அங்கையர்கண்ணியோடு பேச முயன்றிருகின்றான் அவளின் நோக்கம் என்ன என்று தெரிந்து கொள்வதற்காக.

அவள் பிடி கொடுக்கவில்லை, அந்த பேச முயன்றதே வீட்டினருக்கு தெரியாமல், இதில் அவள் பேசாமல் தவிர்த்து செல்ல, போடி என்ற எண்ணம் தான்.

வீட்டில் பெரியப்பா வேறு அனுதினமும் “அந்த பொண்ணு நம்ம வீட்டுக்குள்ள வரக் கூடாது. எங்கம்மா வேணும்னே அங்க உட்கார்ந்து அழிச்சாட்டியம் பண்ணுது. எப்படி இருந்த நாம இப்படி ஆனதுக்கு காரணம் அவ தான்” என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

அவருக்கு எதிராய் அவர்களின் வீட்டினில் வாய் திறப்பவர் யார்? மற்றோர் திருமணம் என்று ஒன்றான பிறகு அது முறிந்து போக வேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால் அவருக்கு எதிராய் யாரும் பேசவில்லை.

என்ன அப்போதும் அவர்களுமே ராஜலக்ஷ்மியுடன் இணக்கம் காட்டிட விரும்ப மாட்டர் , அவளின் பெண் வேண்டுமானால் பெற்றோருடன் உறவை முறித்து இங்கு வந்து கொள்ளட்டும் என்ற எண்ணம் தான்.

இன்னம் அவளை பற்றிய ஒரு விபரமும் யாருக்கு தெரியாது, அதாகப்பட்டது படிப்பு என்ன என்பதாக. இங்கு எதற்கு இருக்கிறாள் தற்போது என்ன செய்கிறாள் இப்படியாக.

அவளோடு இருக்க ஆரம்பித்ததில் இருந்து நாச்சியுடனும் யாரும் பேசுவதில்லை. அவருடன் பேசக் கூடாது என்பது சுவாமிநாதனின் கட்டளை.

கோவிலுக்கு சென்று வந்ததில் இருந்து என்னவோ மனது சஞ்சலமாக இருந்தது. விகாஸ் என்னவோ அப்படி நினைவிற்கு வந்தான். அவனின் அண்ணன்கள் அவனிடம் மிக நெருக்கம் . அவனின் மக்கள் இவனிடம் சித்தப்பா என்று பிரியமாய் பழகினாலும், இப்படி விகாஸ் போல உரிமையும் நெருக்கமும் காண்பித்ததில்லை.

அவனுக்கு தெரியவில்லை விகாஸ் அவனின் அத்தையை போல என்று.


ஆக்கமும் எழுத்தும்
மல்லிகா மணிவண்ணன்
 
???

அதைக்கும் மருமகனுக்கும் உள்ள ஒற்றுமை ராஜராஜனை இழுக்குதா???
குட்டி பையனை மிஸ் பண்ணுறான் போல.......
குடும்ப பிரச்சனை காரணமா பிரிவு......
இவனுக்கு விருப்பம் இல்லாதது போல தெரியலை......

இவன்படிக்கலை.... அவள் மேஜர் பொண்ணு படிச்சிருப்பா.......
வேணும்னா அம்மா அப்பாவை விட்டுட்டு வரட்டும்......
இங்கே தனியா இருந்தும் ஏன் வரலை......
பேசவும் பிடிகொடுக்கலை.......

தாத்தாவின் பேத்தி அவர் ஆசையை நிறைவேற்ற இப்படியிருக்காளா???
அம்மாவையும் பொண்ணையும் ஏத்துக்கணும்னு......
 
Last edited:
Top