Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வண்ணங்கள் - 28

Advertisement

TNWContestWriter098

Well-known member
Member
நூலக வளாகத்தில் தனித்து நின்றிருந்தாள் விசாலாட்சி.. ராகினி ஊருக்கு சென்றிருந்தாள்..

உள்ளுக்குள் ஒரு நடுக்கம் ரிக்டர் கணக்கில் பரவி கொண்டிருந்தது .. அவன் வருவானோ மாட்டானோ ..எவ்வளவு நேரம் நிற்பது ? ..நெற்றியில் வியர்வை பூத்து நிற்க தன் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டாள்.

முதல் முதலாக ஒரு அந்நிய ஆணை சந்திக்க போகிறாள்...

அதுவும் தன்னந்தனியாக !

ராகினி இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அவளோ ஒரு திருமணத்திற்காக குஜராத் சென்றிருந்தாள்.அவள் ஊருக்கு செல்வது தெரிந்ததும் தான் இவளுக்கு ஒரே பதட்டம் "அய்யயோ ராகினி ...நாளைக்கு நீ வர மாட்டியா? "

"கியூன் விசு ? ஒரு மேரேஜ் இருக்கு சூரத்தில .. போன வாரமே சொன்னேனே "

"ஆமாண்டி ..மறந்துட்டேன் "

"மேரே பியார் ..ஒரு நாள் கூட என் பிரிவை உன்னால் தாங்க முடியவில்லையா? நான்கே நாட்கள் தான் ..உன்னை காண ஓடோடி வந்து விடுவேன் மேரி ஜான் " என்று நாடக பாணியில் கூற ..

"நாளைக்கு .. அந்த புக் குடுத்தோமே ..அதாண்டி அந்த சண்முகம் ..அவர் புக்க திருப்பி தரேன்னு சொன்னாரே "என்று இழுக்க "அதுக்கு ?" என்று நக்கல் குரலில் ராகினி கேட்க

" நீயில்லாம தனியா எப்பிடிடி போறது ..பயமா இருக்கு "

"அதான பாத்தேன் .. என்னை பாக்க முடியாம கஷ்டப்படுவியோன்னு நினைச்சிட்டேன் ..உனக்கு குடை பிடிக்க ஆளில்லாம போச்சேன்னு வருத்தப்படறே " என்று முகத்தை தூக்கி கொள்ள

"ஹே அப்படியில்லப்பா ..நான் இதுவரை எந்த பையன் கிட்டயாவது பேசி பாத்துருக்கியா ? அந்தளவுக்கு தைரியம் கிடையாதுப்பா . ஏதோ அன்னிக்கு நீ இருந்த தைரியத்தில் தான் பேசிட்டேன் "

"அப்ப ஒழுங்கா இன்னிக்கே போய் வாங்கியிருக்கலாம் இல்ல ..நீதான நாளைக்கு வாங்கிக்கறோம்னு சொன்ன ?"

"நீயே யோசிச்சு பாரு ஒரே நாள்ல எப்படி அந்த புக்க படிக்க முடியும்? எப்படியும் நம்ம பஸ் ஸ்டாண்டு கடையில தான் ஜெராக்ஸ் போட்டாகணும் ..கண்டிப்பா அவன் ரெண்டு நாள் ஆக்கிடுவான்,, அதனால் தான் ரெண்டு நாள் கழிச்சு வாங்கிக்கிறோம்னு சொன்னேன் "

ராகினியின் விழிகள் வியப்பில் விரிந்தன " பரவாயில்லேயே ..என் மக்கு விசுவுக்கு கூட இப்படியெல்லாம் மூளை வேலை செய்யுதே "

"நான் மக்காடி?" என்று முகத்தை தூக்கிக்கொள்ள .."இல்லடி செல்லம் ..நீ என் அறிவு களஞ்சியம் .." என்று அவள் முகவாயை பிடித்து கொஞ்சியபடி "நான் எடுத்திட்டு வந்த புக்க நீ தானம் பண்ண பாரு.. அதிலேயும் ஒரே நாள்ல தரேன்னு சொன்னவனை ரெண்டு நாள் கழிச்சு தர சொல்லி குடுத்தியே ..உன்னோட தாராள மனசையும் அறிவையும் என்ன சொல்றது ?" என்று வஞ்ச புகழ்ச்சியணி பாடினாள் ராகினி.

"ஹி ஹி ." அசடு வழிந்தாள் விசு.

"பாவம்டி ..புக்கு வாங்க காசில்லாமல் தானே கேக்குறாங்க ..ஏதோ நம்மால முடிஞ்சா சமூக சேவை டி "

"பரவாயில்லடி தேறிட்ட.. நான் ஊருக்கு போகும்போது ட்ரைன்ல படிக்க தான் எடுத்தேன் ..இனி எங்க ? அந்த பையனை இன்னொரு நாலு நாள் வேணும்னாலும் வச்சிக்க சொல்லு .. நான் ஊர்ல இருந்து யிருந்து வந்தப்பறம் வாங்கிக்கலாம் " என்றிருந்தாள்.

அதைச்சொல்லவே அங்கு வந்து காத்திருந்தாள் விசாலாட்சி..

அவளை வெகு நேரம் காக்க வைக்காமல் மதில் சுவரின் மீது அதே விழிகள் தெரிந்தன .

சுற்றும் முற்றும் யாரும் பார்க்கிறார்களா என்று பார்த்தவள் மதிலை நோக்கி சென்றாள்.. "ரொம்ப நன்றிங்க ..." என்றபடி புத்தகத்தை நீட்டினான் சண்முகம்.

"ஜெராக்ஸ் எடுத்திட்டிங்களா? கரெக்ட்டா திருப்பிடீங்களே "

"ஜெராக்ஸா ? நீங்க வேற ..அதுக்கு காசு இருந்தா பேசாம புத்தகத்தையே வாங்கிடலாமே."

"அப்போ என்னதான் பண்ணீங்க ?"

"படிக்காதாங்க செஞ்சேன் "

"சரி அப்போ இன்னும் நாலு நாளைக்கு இது தேவைப்படாது ..அதுவரைக்கும் வச்சி இன்னும் நல்லா படிங்க "

"இல்லைங்க ..ஏற்கனவே நல்லா படிச்சு நோட்ஸும் எடுத்திட்டேன் " என்றதும் விசாலாட்சியால் நம்ப முடியவில்லை 'புருடா அடிக்கிறானோ ..எப்படி ஒரு புத்தகத்தையே இரண்டு நாளில் படிக்க முடியும் ? அவளால் தலை கீழாக நின்றாலும் ஒரு மாதம் ஆனால் கூட முடியாதே '

"நான் தப்பா நினைக்க மாட்டங்க ..வச்சுக்கோங்க "என்று அவனை சமாதான படுத்த முயல "இல்லைங்க ..உண்மையாத்தான் சொல்றேன். ராத்திரி முழுக்க உக்காந்து காலேஜ் கூட போகாம படிச்சேங்க ..பாருங்க நோட்ஸு ..."என்று ஒரு நோட்டு புத்தகத்தை காட்ட வியப்பில் கோழி முட்டையை விரிந்த விழிகளால் அவன் முகத்தை ஏறிட்டு பார்க்க ..கீழ்வானத்து சூரியனாய் செக்க சிவந்திருந்த அவனது கண்கள் அவன் கூறியது சத்தியம் என்றன.

அவனது அறிவையும் படிக்கும் ஆர்வத்தையும் கண்டு வாயடைத்து போனது விசாலாட்சிக்கு!

கூடவே அவன் அறிவின் மேல் ஒரு வியப்பு..முயற்சியின் மீது மரியாதை ..படும் கஷ்டங்களினை கொண்டு பச்சாதாபம்.. அதை மீறி ஒரு அபிமானம் ..சின்னதாய் ஒரு பிடித்தம் என்று அத்தனையும் உண்டானது .

"வேற புஸ்தகம் ஏதாவது தேவைன்னாலும் சொல்லுங்க " என்றபடி விடை பெற்று தன்காரில் ஏறியவளின் மனம் மட்டும் அங்கேயே நின்றுவிட்டது.


இதற்கு பின் செவ்வெனே இருவரின் காதல் பயிர் செழித்து வளர ஒரு வருடம் கடந்திருந்தது.

அப்போது சண்முகம் படிப்பை முடித்திருந்தான். மேல் படிப்பா வேலையா என்ற யோசனையில் இருக்க ..ஒரு நாள் அவன் தந்தை உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். அவருக்கு பதில் அவரது வேலைக்கு சென்றவன் ..படிப்பு முடிவடைந்ததில் இருந்து விசாலாட்சியை காணமுடியவில்லை . தோப்பில் வேலை செய்து கொண்டிருந்தபோது தான் வெகு நாள் கழித்து அவளை பார்த்தான்.. அதுவும் தோப்பின் எஜமானரின் மகளாய்.

அதிலிருந்தே அவன் மனதில் ஒரு மாற்றம் ..அவள் யாரென்று இது வரை அவன் தெரிந்து கொள்ளவே இல்லையே ..இப்போது பெரிய வீட்டு பெண் .. இவனால் நினைத்து கூட பார்க்க முடியாத செல்வ செழிப்பு ..இனத்திலும் அப்படிதான் ..வேறு ஆட்களுக்கு கட்டிக்க கொடுக்க மாட்டார்களே !

இதெல்லாம் யோசித்தவன் அதன் பின்னர் அவளை தவிர்க்கவே ஆரம்பித்தான் அப்போது ஒரு நாள்..


மோட்டார் அறையின் பின்புறமிருந்து மெல்ல எட்டி பார்த்தாள் விசாலாட்சி!

விடியலின் அருகில் இருந்த வானம் மேகமூட்டத்துடன் இருக்க ..கோவிலுக்கு போவதாக சொல்லி இங்கு வந்துவிட்டாள்.

அவள் அந்த குடும்பத்தின் செல்ல பிள்ளையாதலால் அவளை கட்டுப்படுத்துவோர் யாருமில்லை..

அப்படிதான் அவள் நினைத்துக் கொண்டிருந்தாள்.

அதுவும் அவர்களது சொந்த தோப்பிற்குள் வந்து போக அவளுக்கு கெடுபிடி உண்டா?

வழக்கமாக இந்நேரம் தோட்டக்காரன் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சியபடி இருப்பான் ..அவனுக்கு இரு நாட்களாக உடல் நிலை சரியில்லாததால் அவனது மகன் சண்முகம் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தான்.

மெல்ல அடிமேல் ஆதி வைத்து நடந்தவிசாலாட்சி அவன் பின்னால் சென்று பின்புறமிருந்து இருக்க கட்டி கொள்ள .. அவன் உடலில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது போலொரு அதிர்வு பரவ .. பதறி அடித்து அவளை உதறியவன் சுற்றும் முற்றும் பார்க்க யாரும் இல்லை என்ற பின்பே ஆசுவாசமடைந்தான்.

"ஏனுங்க இப்படி பண்றீங்க?"கவலையும் பதற்றமும் இருந்தாலும் மிகுந்த மரியாதையாகவே வந்தது அவன் குரல்.

ஊர் பெருந்தனக்காரரின் மகளல்லவா அவள் ? அவளிடம் ஒரு சாதாரண தோட்டக்காரன் கோபித்து பேசிவிட முடியுமா? அருகில் யாரேனும் இருந்தால் பேசுவது கூட பெருங்குற்றமாக பார்க்கப்படும் . அதிலும் இவர்கள் பக்கத்துக்கு ஊரை சேர்ந்தவர்கள் .. அரசாங்கத்தின் பட்டியலில் இடம் பெற்றவர்கள் என்பதால் இன்னுமே தவறுகள் பூதாகாரமாக்க படும்.



"மொதல்ல இங்கிருந்து போங்க " என்றவன் திரும்பி கருமமே கண்ணாக தென்னைகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சற்று நேரம் ஓசையிந்தி இருக்க அவள் போய்விட்டாளே என்ற சோக பெருமூச்சு அவனிடமிருந்து எழ .. அமைதியாக பின்னே நின்றிருந்தவள் "இப்படி பெருமூச்சு விடத்தான் என்னை விரட்டுனீங்களா? " என்று கேட்க மறுபடி பதறியவனாய் "இன்னும் நீங்க போகலையா அம்மணி ?" அவனது கண்கள் யாரும் பார்த்து விடுவாரோ என்ற பதைப்பில் நாலாபுறமும் சுழன்றன.


"நீங்க சொல்ல வேண்டியதை சொன்னா நான் போய்டுவேன் " அசால்டாக நின்றபடி அவள் சொல்ல அவனுக்குத்தான் பதட்டம் தலைக்கேறியது.


"என்னங்க சொல்லோணும் ?" அறியாதவனை போன்ற அவன் கேள்வியில் செல்ல முறைப்படி வெளியிட்டவள் அவனை போன்றே "போன வருஷம் இதே நாள்ல என்சொன்னேங்களோ அதையே அப்படியே திருப்பி சொன்னா போதுங்க "எனவும் " இல்ல இன்னிக்கு என்ன நாள்னு மறந்து போய்ட்டிங்களா?"

அவனா மறப்பவன் ?


அவன் நெஞ்சுக்கினியவளின் பிறந்தநாள் அல்லவா இன்று ? சொல்லிவிடலாம் தான் .. சென்ற வருடம் அவளது விரல்களைத் தயக்கத்துடன் பற்றி "ஹாப்பி பர்த்டே விசாலி " என்று செல்ல பெயர் கொண்டு அவளை அழைத்து தன மனமுருக வாழ்த்தியது போல் இப்போதும் சொல்லிவிடலாம் தான் .ஆனால் சென்ற வருடம் இவன் அறியாததை இப்போது அறிவானே!


இருவரும் பேசிக் கொண்டிருந்ததை ராஜதுரை கண்டுவிட ..அடுத்த அரை மணியில் விசாலாட்சிக்கு திருமண ஏற்பாடுகள் தொடங்கின வேறு மாப்பிளையோடு.

இதனை அறிந்தும் சண்முகத்தால் ஏதும் செய்ய முடியவில்லை. இப்போது தான் அவர்கள் கிராமம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது. இதில் இந்த பிரச்னை வேறா என்றிருந்தது. அவள் யாரென்று தெரிந்திருந்தால் தன் காதலை சொல்லியிருக்கவே மாட்டான்.

இதற்கிடையில் எப்படியோ வீட்டை விட்டு வெளியேறி சண்முகத்தின் வீடு தேடி வந்துவிட்டாள் விசாலாட்சி. அவளை அழைத்து வந்தது தாமரையும் அவளது முறை மாமனும் தான்.

சண்முகத்திற்கோ என்ன செய்ய என்ற பதட்டம்.


அவன் தந்தை தான் தேற்றினார்.. "சண்முகம் ...இனி யோசிக்கறதுல பயனில்லை ..அந்த புள்ள நடு ராத்திரில நீதான் வேணும்னு இங்க வந்துருச்சு ..இனி திருப்பி அனுப்ப முடியாது..அனுப்பினா அதை உயிரோடவே பாக்க முடியாது.. நான் தெனம் தெனம் தண்ணி பாய்ச்சுற அதே தோப்பில் எத்தனை உசுரு போயிருக்கு தெரியுமா ..அந்த நெலம உங்க ரெண்டு பேருக்கும் வர வேணாம் ..இங்கேருந்து போயிருங்க .எது வந்தாலும் நாங்க சமாளிச்சிக்கிறோம்" என்று இருவரையும் தேற்றி அனுப்பினார்.

அங்கிருந்து நடு இரவில் கிளம்பியவர்கள் நேராக சென்றது ராகினியின் இருப்பிடத்திற்கு . அவளது தந்தைக்கு மணிப்பூருக்கு மாற்றலாகியிருக்க ..இவர்கள் சென்ற இடம் யாராலும் கண்டுகொள்ள முடியவில்லை. தங்களுக்கும் தெரிய வேண்டாம் என்று சொல்லியிருந்தார் சண்முகத்தின் தந்தை. அவ்வபோது போன் மூலம் பேசிக் கொள்வர் ..அதுவும் ராகினி தந்தையின் அலுவலகத்தில் இருந்து.


இவர்கள் கிளம்பிய பின்னால் ராஜதுரை , தனசேகர் , கந்தவேள் மூவரும் அந்த ஊரையே படாத பாடு படுத்தியது வேறு விஷயம்.இருந்தும் இவர்கள் இருவரின் இடம் கண்டுபிடிக்க முடியவில்லை.. மாநிலத்தையே அலசி விட்டனர்..ஆனாலும் முடியவில்லை..மணிப்பூரெல்லாம் அவர்கள் சிந்தனை வட்டத்திலேயே இல்லை.

திருமணம் செய்து இருவருடங்கள் அங்கேயே இருந்தவர்கள் கதிரும் பிறந்துவிட்ட நிலையில் கஷ்ட ஜீவனம் என்றாலும் சந்தோஷமாகவே இருந்தனர்!

அப்போது பார்த்து சண்முகத்தின் தந்தை இறந்த செய்தி வர ..இவர்கள் ஊருக்கு வரும் சூழல்!


வரும் செய்தி அறிந்தவுடன் ..ரத்தம் கொதிக்க அமர்ந்திருந்தனர் வேலனும் அவர் தம்பிகளும். சிங்கமுத்துவுக்கோ சொல்லவே வேண்டாம் . தன் தாயின் உருவம் செல்ல பெண் என்றெல்லாம் தோன்றவில்லை ! வேற்று ஜாதி பையனுடன் சென்றுவிட்டாள் என்பது மட்டுமே மனதில்!
 
Last edited:
அடப்பாவிகளா.. இத்தனை வருஷம் வெறியோட கத்துக்கிட்டு இருக்கானுங்க... ?
 
பிரச்சனை என்று தெரிந்தும் இவங்க வந்து இருக்க கூடாது தானே 😢
சூப்பர் 😀
 
Top