Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வண்ணங்கள் - 22

Advertisement

TNWContestWriter098

Well-known member
Member
மாலையாகிவிட தன் மகளை கோவிலுக்கு கிளம்ப சொன்னார் வடிவு.

"நீங்க மட்டும் போங்களேம்மா... நான் ஆத்தா கூட இருக்கேன் ." சோர்வுடன் கூறினாள் கண்மணி.

"இன்னிக்கு நம்ம வீடு சார்பில் பூச நடக்குது கண்ணு ..நம்ம போனா தான் ஆச்சு."

தன்னை திரும்பிப் பார்த்த பேத்தியை வாஞ்சையுடன் நோக்கிய பொன்னுத்தாயி.. "போயிட்டு வா கண்ணு. உன் கலியாணம் நல்லபடி அமையனுன்னு வேண்டிக்கிட்டு வா சாமி " என்றார்.

மனமின்றி கிளம்பி தன் தாயுடன் கோவிலுக்கு சென்ற கண்மணிக்கு மனதினுள் பல குழப்பங்கள் !

ஏன் தங்கள் குடும்பங்களில் காதலுக்கு இத்தனை எதிர்ப்பு? காதல் என்றால் அது கவுரவ குறைச்சலாக அல்லவா பார்க்கப்படுகிறது?

இரு உள்ளங்களின் அன்பாக ஏன் பார்க்க படுவதில்லை?

வாழ்வின் அடித்தளம் அன்பு தானே .. அது இல்லாமல் பணம், வசதி, அந்தஸ்து ,உறவுகள் என்று எது இருப்பினும் அந்த வாழ்வு முழுமை அடையுமா ?

தன் கனவு நிறைவேறுமா என்பது பெரும் கேள்விக்குறியாக மாறிவிட்டதே!

நான்கு நாட்கள் முன்பு இந்த ஊருக்குள் நுழையும் போது எவ்வளவு உற்சாகமும் புத்துணர்வும் பொங்கியதோ இப்போது அத்தனை வேதனையும் நிராசையும் நெஞ்சில் நிரம்பி இருந்தது.

கோவிலில் அம்மனின் முன் நின்றவள் "தாயே ! என் மனக்குழப்பங்கள் நீங்கி மனம் விரும்பியவனுடன் வாழ வேண்டும் . கதிருக்கு தாயாகவும் தாரமாகவும் இருந்து அவன் வாழ்வை வண்ணமயமாக்க வேண்டும். அதற்கு அப்பா அம்மாவின் ஆசீர்வாதமுடன் எங்கள் திருமணம் நடக்க வேண்டும்" என்று வேண்டுதல் வைத்து கண்கள் திறந்து பார்க்க எதிர் வரிசையில் இளம் புன்னகையுடன் நின்றிருந்தான் அவளது கதிர்.

தன்னவளின் முகம் வெகுவாக குழம்பி சோர்ந்திருப்பதை கண்டவன் லேசாக விழியசைத்து 'நான் இருக்கிறேன் ' என்று தைரியம் சொல்ல ..பாவையின் மனமும் சற்றே ஆறுதல் பட்டது.

தாமரையும் பூஜைக்கு வந்திருந்தார் .
முன்னாள் நின்றிருந்த வேலனும் வடிவும் பூஜை நடைமுறைகளில் ஆழ்ந்திருக்க பின்வரிசையில் நின்றிருந்த தாமரையின் விழிகள் இவ்விருவரின் பார்வை நாடகத்தை கவனிக்க பொன்னுத்தாயி சொன்னது அவரது நினைவில் ஆடியது.


பூஜை நிறைவுற்று அனைவரும் பிரகாரம் சுற்றி முடித்து ஆசுவாசமாக அமர்ந்திருக்க, வேலன் முதலில் கிளம்பிவிட்டார்.."வேலை இருக்கு வடிவு . நான் முன்னால போறேன் ..நீயும் கண்மணியும் பின்னால வாங்க " என்றபடி.

அவர் சென்றபின் "ஏங்கண்ணு ஒரு மாதிரி இருக்க ?" என்றார் வடிவு.

கண்டிப்பாக இருந்த போதிலும் மகளின் மீது அளவில்லா பாசம் கொண்டிருந்த அந்த தாயுள்ளம் இந்த சில நாட்களாக மகளது மனம் ஒரு அல்லாட்டத்திலேயே இருப்பதை வெகு சீக்கிரத்தில் உணர்ந்து கொண்டது.

"ஆத்தாவுக்கு சீக்கிரம் குணமாயிரும் ..நீ கவலைப்படாதே கண்ணு " தன் மகளின் முக வாட்டத்திற்கு காரணம் தன மாமியாரின் உடல் நிலையோ என்று நினைத்து அவர் சொன்னார்.

வடிவு சிங்காரவேலனின் சொந்த மாமன் மகள் தான் ..பொன்னுத்தாயியின் அண்ணன் மகள் !

இயல்பாகவே எல்லோர் மீதும் அன்பும் கரிசனமும் காட்டும் பெண்மணி அவர் ..தன் பாசமிகு அத்தையின் மீது..இணக்கமான மாமியார் மீது.. பாசமாக இருப்பது இயற்கை தானே !

தன் பாட்டியின் உடல் நிலையைவிட தன் தந்தையின் மனநிலையே அவளுக்கு பெரும் கவலை அளித்தது.

தன் தாய்க்கும் இது குறித்து தெரியாமல் இருக்காது என்று தோன்றவே "அம்மா! அப்பா நம்ம கிட்ட இருக்க மாதிரி தான் எல்லார் கிட்டேயும் இருக்காங்களா ?"

மகளின் கேள்வி வடிவிற்கு அதிர்ச்சியளிக்கவில்லை!

ஒரு நாள் இந்த வினா தன் முன் நிற்கும் என்பதை அறிவார். ஏனிப்படி கேட்டாய் என்பதை பார்வையிலேயே காண்பிக்க "நேத்து அஜித் அண்ணனும் அவங்களும் பேசுனதை கேட்டேன் ..லட்சுமி லவ் பண்ண பையன இவங்க தான் அடிச்சி போட்டிருக்காங்க .அவன் இப்போ தப்பிச்சி போய்ட்டானாம்." என்றவள் சற்று நிறுத்தி தன் தாயின் முகம் பார்க்க ..அவருக்கு இது புதிய செய்தி!

லட்சுமி வீடு பிரச்சினை குறித்து அறிவார்.. அவள் கணவரும் அவளது காதலுக்கு எதிராக இருக்கிறார் என்பதை அறிவார்..காலங்காலமாக நடப்பது தானே !

இவரும் சொல்லி பார்த்துவிட்டார் ..அது அவரவர் வீடு விவகாரம் அதனை ஊர் விவகாரமாக மாற்றுவது சரியல்ல என்று. ஆனால் கேட்டுக் கொண்டுவிட்டால் அவரது கௌரவமும் மரியாதையும் என்னாவது ..அவர் ஊர் தலைவரல்லவா.. இன்று வீட்டுக் கொடுத்துவிட்டால் ஊருக்குள் அவர் பேச்சிற்கு மதிப்பிருக்காது ..நாளை ஊருக்குள் வேற்று ஜாதியினர் நுழைந்துவிடுவர் இதை கொண்டே ... இப்படி பற்பலவும் சொல்லி அவரது மூளையை சலவை செய்ய அவரது தம்பிகள் காத்திருந்தனரே!

சிங்காரவேலன் சூட்சுமங்கள் அறியாத மனிதர் ..கொஞ்சம் எடுப்பார் கைப்பிள்ளை என்றே சொல்லலாம் ..அதனால் அவரது தம்பிகள் எப்போதும் தூபம் போட்டபடியே இருப்பர்.

உடன் பிறந்தவர்கள் இல்லையென்றாலும் .. அப்படி அவர் மேல் பாசம் காட்டுவதாக அவர்கள் சொல்வது வெறும் வாய் வார்த்தைதான் என்பதை வடிவின் பெண்களுக்கே உள்ள சூட்சும அறிவு உணர்த்தியது. அதிலும் ராஜதுரையும் அவரது மூத்த மகன் அஜித்தும் வினயமானவர்கள்.. தன் கணவரை பல வகையிலும் உபயோகித்துக் கொள்கிறார்கள் என்பதையும் அறிவார்.

இரண்டாவது தம்பி தனசேகரும் மூன்றாவது தம்பி கந்தவேல் சற்றே பரவாயில்லை என்றாலும் .. ராஜதுரையை எதிர்க்க மாட்டார்கள்.

இளையவர் கந்தவேல்.. தன்யஸ்ரீ சோபிதாவின் தந்தையோ இப்போது உயிருடன் இல்லை.

ஆனாலும் தன் கணவர் தம்பிகளின் மீது உடன்பிறந்தவர்கள் போலவே பாசம் காட்டி வருகிறார் என்பதும் ..பெற்றோர் எப்படி இருந்தாலும் அஜித்தை தவிர மற்ற பிள்ளைகள் ஒருவருக்கொருவர் பாசமாகவும் பிரியமாகவும் பழகுவது அவர் மனதுக்கு சமாதானமாக இருந்தது.

இருந்தும் என்றாவது ஒரு நாள் தன் கணவரின் இந்த எடுப்பார் கைப்பிள்ளை குணம் தங்கள் குடும்பத்திற்கே ஆபத்தாக வருமோ என்ற பயம் அவரது அடி மனதில் உண்டு.ஏற்கனவே ஒரு முறை அவ்வாறு நடந்தது தானே .

தன் விடையை எதிர்நோக்கி இருந்த மகளுக்கு மௌனத்தையே தாய் பதிலாக அளிக்க .."சொல்லுங்கம்மா ..நம்ம கிட்ட ஒரு மாதிரி வெளிய ஒரு மாதிரி அப்பா என் நடக்கணும்?"

ஒரு வேற்று புன்னகை உதழ்களில் நெளிய "எல்லார் கிட்டேயும் பாசமா இருக்கறது தான் அவரோட இயல்பு .அப்படிதான் உங்க ஆத்தா அவரை வளத்துருக்காங்க ..ஆனால் ரொம்ப பலகீனமான மனசும் அறிவும் உங்கப்பாவுக்கு .எது சரி தப்புன்னு யோசிச்சு செய்ய மாட்டார் ..இந்த உலகத்தில பல பேர் இப்படி பட்டவங்கதான் கண்மணி. உள்ளுக்குள்ள நல்லவங்களா இருந்தாலும் சுத்தி இருக்கறவங்க அவங்கள நல்லவங்களா இருக்க விட மாட்டாங்க ..அந்த அழுத்தத்துக்கு பணிஞ்சு போற ஒரு பலகீனமான மனுஷன் தான் உங்கப்பா ." இவர்கள் பேசிக் கொண்டிருக்கையிலேயே பூசாரி வந்து பிரசாதத்தை தந்து செல்ல அவரிடம் நன்றியுரைத்து கிளம்பியவர்கள் வீடு நோக்கி நடந்தனர்.

சற்று நேர மௌனத்திற்கு பின் மகள் மெல்ல ஆரம்பித்தாள் "அம்மா ..நீங்களும் தாமரை அத்தையும் பிரெண்ட்ஸா ?"

"வெறும் பிரெண்ட்ஸ் மட்டுமில்ல கண்மணி ..உயிர் தோழமைன்னு சொல்வாங்களே ..அப்பிடி ..எனக்கொண்ணுன்னா துடிச்சிடுவா ..ஒன்னாவே தான் ஸ்கூல் படிச்சோம் ...அப்போல்லாம் பொம்பள பிள்ளைங்களை ஸ்கூலுக்கு அனுப்ப ரொம்ப யோசிப்பாங்க ..எங்கப்பாலாம் ரொம்ப ஸ்ட்ரிக்டு ..தாமரையோட அப்பா அப்படி இல்லை ..ரொம்ப சுதந்திரம் கொடுப்பார் ..அவர் சம்சாரத்தோட தம்பி தான் சொக்கலிங்கம் வாத்தியாரு ..அவரோட போதனை தான் எல்லாம் . தாமரையை கூட காலேஜுக்கெல்லாம் படிக்க அனுப்புறேன்னு சொன்னாரு ..அவளுக்குத்தான் பயம் ..இந்த ஸ்கூல் படிப்பே முடிக்க இந்த பாடு பட வேண்டியிருக்கேன்னு ..இதில காலேஜ் வேறயா ? நான் போக மாட்டேன்னு ஒத்தக் கால்ல நின்னுட்டா. கலியாணத்துக்கு பிறகு சொக்கலிங்கம் வாத்தியாரும் எவ்வளவளோ முயற்சி பண்ணாரு படிக்க வைக்க ..மாட்டேன்னுட்டா .."


சொல்லிக் கொண்டே வந்தவரின் உள்ளம் தன்னை அறியாமல் தன் குழந்தை பருவத்துக்கு சென்று விட .."சின்ன வயசுல எவ்வளோ சந்தோசமா இருந்தோம் தெரியுமா ? எப்பவும் ஒன்னாவே சுத்துவோம் நாங்க மூணு பே.."சொல்லிக் கொண்டே வந்தவர் சட்டென்று ஏதோ நூலறுந்ததுபோல் நிறுத்திவிட எதிரில் தாமரை நின்று கொண்டிருந்தார் .
பொன்னுத்தாயி கதிர் யார் என்பதை அறிந்துகொண்டதும் அதன் பின்னர் சொன்ன விஷயங்களும் வடிவிடம் பேசியே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தவராய் நின்று கொண்டிருந்தார்.
"வடிவு ..உன் கூட கொஞ்சம் பேசணும் " என்றபடி நின்ற தாமரையை பார்த்த கண்மணிக்கு ஆச்சரியம் தான். அவளுக்கு விவரம் தெரிந்த நாளாக இன்று தான் தாமரை தன் தாயிடம் பேசி பார்க்கிறாள் . வடிவு பதில் சொல்லாமல் சுற்றிலும் நோக்க .."யாரும் இல்ல பயப்படாதே " என்றவர் "கண்மணி நீ வீட்டுக்கு போ கண்ணு " எனவும் தன் தாயின் முகத்தை நோக்கியவள் அதில் தெரிந்த சம்மதத்தையும் தாமரையின் முகத்தில் தெரிந்த தீவிரத்திலும் ஒன்றும் பேசாமல் வீட்டை நோக்கி நடந்தாள்.
 
Last edited:
ஜாதி வெறி பிடிச்சவங்களுக்கு எதிரா ஒரு பெண்கள் கூட்டணி உருவாகிட்டு இருக்கு.... அருமை.. ?
 
கதிரின் அம்மா தானா மூணாவது தோழி
சூப்பர் 😀
 
Top