காதல் ஏ ஐ - Episode 2

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 2:

சஞ்சயும், நந்திதாவும் சந்திக்க ஆரம்பிச்சு 3 மாசம் ஆயாச்சு. தன் மனசுல உள்ளதை அப்படியே தெரிஞ்சிக்கிட்டு பேசுறானேன்னு அவளுக்கு சஞ்சய் மேல ஒரு மரியாதை, அன்பு. அதைக் காதல்னு சொல்லலாமா?னு கேட்டா சொல்ல முடியாது. ஏன்னா காதல் அப்படீங்குற ஒரு உணர்வே பொய்யானது, ரொம்பவுமே மிகைப்படுத்தப்பட்டதுன்றது நந்திதாவோட கருத்து. இவனை கல்யாணம் செஞ்சுக்கிட்டா நம்ம வாழ்க்கை நல்லா இருக்குமா? அவ்வளவு தான் விஷயம். அதைத் தாண்டி ஒருத்தன் இன்னொருத்திய நெனச்சுக்கிட்டு உருகுறது, அவங்க காதலிச்சவங்களைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றது எல்லாமே சினிமாத்தனமானதுன்னு அவளோட அபிப்பிராயம்.

அன்னைக்கும் சனிக்கிழமை சஞ்சயை சந்திச்சுட்டு வீட்டுக்கு வந்தா. அவங்க அம்மா கவுரி அதிசயமா ஹால்ல உக்காந்து டிவி பாத்துட்டு இருந்தாங்க.

"நந்து! வாம்மா சாப்பிடலாம்"னு அவங்க சொன்னதும் ஆச்சரியத்துல பேச்சே வரல நந்திதாவுக்கு. வீட்டுல சமையல் செய்ய ஆட்கள் யாரும் இல்ல. அவங்க அவங்களுக்கு வேணும்கிறதை அவங்க செஞ்சு சாப்பிட்டுக்கணும், சில சமயம் அவங்க அம்மா நிறைய செஞ்சு வெச்சுட்டு இதுல இருந்து எடுத்து சாப்பிட்டுக்கோன்னு மெசேஜ் அனுப்பிருவாங்க. இல்லைன்னா இருக்கவே இருக்கு ஸ்விக்கி. இது தான் அவங்க வீட்டு வழக்கம். ஆனா இன்னைக்கு அதிசயமா வீட்டுக்கு வரும் போது அவங்கம்மா ஹால்ல உக்காந்திருந்ததும் சாப்பிட வான்னு கூப்பிட்டதும் அதிசயமா இருந்தது.

"என்னம்மா ஆச்சு உங்களுக்கு? சாப்பிடக் கூப்பிடுறீங்க?"னு கேட்டதுமே அவங்க அம்மாவோட மொகம் வாடிரிச்சு. டக்குன்னு சரி பண்ணிட்டாங்க.

"தனியாவே சாப்பிட்டு ....பிடிக்கவே இல்ல. அதான் நீயும் வரியான்னு கேட்டேன்"னாங்க கவுரி. சென்னையில ரொம்ப பிரபலமான கைனகாலஜிஸ்ட்.

"இல்லம்மா நான் சாப்பிட்டுட்டு வந்துட்டேன். நீங்க சாப்பிடுங்க"ன்னு சொல்லிட்டு தன்னோட ரூமுக்குப் போகத் திரும்புனா.

"கொஞ்சம் நில்லு நந்து! வந்து இப்படி உக்காரேன். நீயும் நானும் பேசியே ரொம்ப காலம் ஆச்சு. உங்கிட்ட ரொம்ப முக்கியமான விஷயம் பேசணும்"னாங்க கவுரி.

யோசிச்சா நந்திதா. சஞ்சயை நான் பாத்து பழக ஆரம்பிச்சு 3 மாசம் ஆயாச்சு. அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டிய வேளை வந்தாச்சு. அவனை வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்து அம்மாவை அறிமுகப்படுத்தணும். அதனால இப்ப அவனைப் பத்தி சொல்ல நல்ல சான்ஸ்"ன்னு நெனச்சுக்கிட்டு ஹால்ல அம்மா உக்காந்திருந்த சோஃபாவுக்கு பக்கத்துல இருந்த சேர்ல உக்காந்தா.

"யூ ஆர் அன் அடல்ட் நந்து. உனக்கு நல்லது கெட்டது தெரியும்னு நான் நம்பறேன். ஆனாலும் ஒரு அம்மாவா நான் உன்னைக் கவனிக்கணும்! நானும் கொஞ்ச நாளாப் பாக்கறேன் வாராவாரம் சனிக்கிழமை இல்லை ஞாயித்துக் கிழமை நீ எங்கேயோ போயிட்டு கொஞ்சம் லேட்டா வர. நீ யாரையாவது லவ் பண்றியா? சொல்லு. சாதி, மதம் எதுவுமே தடை இல்ல. உனக்குப் பிடிச்சிருந்தாப் போதும்" கவுரியோட குரல் உணர்ச்சியினால கொஞ்சம் கம்மிரிச்சு.

ஓன்னு சிரிச்சா நந்திதா.

"லவ்வா? நான் யாரையும் லவ் பண்ணல. ஆனா ஒருத்தனை டேட் பண்ணிக்கிட்டு இருக்கேன். அவன் சரிப்பட்டு வருவான் போல இருக்கு. இது வரைக்கும் என் மனசுக்குப் பிடிச்சா மாதிரி தான் பேசுறான், நடந்துக்கறான்."

கொஞ்ச நேரம் மௌனமா இருந்தாங்க கவுரி. மகளுக்கு காதல் வரலைன்னு புரிஞ்சிக்கிட்டாங்க.

"நமக்கு சரிப்பட்டு வருவானா? நம்ம குணத்துக்கும் அவனுக்கும் மேட்ச் ஆகுதான்னு பாக்கணும் தான். ஆனா எல்லாத்துக்கும் மேல இவன் தான் நமக்கு புருஷன்னு நம்ம மனசு சொல்லும். அதான் நந்து காதல். அது இருந்தா தான் வாழ்க்கை ரொம்ப சந்தோசமா இருக்கும்"

திரும்பவும் ஓன்னு சிரிச்சா நந்திதா.

"ஏம்மா! உங்களுக்கு அப்படியெல்லாம் தோணிச்சு இல்லியா? அதனால தானே அப்பாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? அப்புறம் அந்தக் காதல் எங்கேம்மா போச்சு? ஏன் டிவோர்ஸ் பண்ணுனீங்க?"

மகள் கேட்டதும் மனசுல இருந்த ஆறாம லேசா பொருக்கு தட்டிப் போயிருந்த ;புண்ணை கிளறி விட்டா மாதிரி ஆகிடிச்சு கவுரிக்கு. மனசு வலி கண்ணுல தண்ணியா வந்தது.

"சாரிம்மா! உங்களை ஹர்ட் பண்ணனும்னு நான் சொல்லல்ல. காதல், லவ், இதெல்லாம் சும்மாம்மா. வாழ்நாள் பூரா ஒருத்தன் கூட வாழணும்னா ரெண்டு பேரும் தனித்தனி நபர்கள், அவங்களுக்குன்னு சில விருப்பு வெறுப்புகள் இருக்குன்னு புரிஞ்சிக்கணும். தமிழ் சினிமாவுல வரா மாதிரி என் புருஷனுக்கு இது பிடிக்காது அதனால எனக்கும் வேண்டாம்னு பொண்ணு சொல்றதும், என் ஓய்ஃபுக்குப் பிடிக்காது அதனால நான் உங்க கூட பார்ட்டிக்கு வர மாட்டேன்னு பசங்க சொல்றதும் சுத்த முட்டாள் தனம். கல்யாணம் ஆயிட்டா அவங்க ரெண்டு பேரும் லைஃப் ஸ்டைலை மாத்திக்கணுமா என்ன? இப்படியெல்லாம் இந்த சொசைட்டி ஒரு இல்யூஷனை கிரியேட் பண்ணி வெச்சிருக்கிறதால தான் டிவோர்ஸ் ஜாஸ்தியா நடக்குது"

மகளை ஏறிட்டுப் பாத்தாங்க கவுரி.

"நீ சொல்றது சரியா இல்லையான்னு சொல்லத் தெரியல. ஆனா ஒண்ணு நந்து. அன்பு காதல் இதெல்லாம் இல்லாம ஒருத்தன் நமக்கு பிடிச்சா மாதிரி நடந்துக்கறான்னு அதை மட்டுமே ஒரு கிரைட்டீரியாவா வெச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டா வாழ்க்கை மெக்கானிக்கலா இருக்கும்."

"வாழ்க்கை மெக்கானிக்கலா இருந்தா எனக்கு ஓகே தான். சண்டையோ, மனக்கஷ்டமோ, வேதனையோ இல்லாம இருந்தாப் போதும். கல்யாணம் சந்தோசத்தையும் தர வேண்டாம், வேதனையும் தர வேண்டாம். மன நிம்மதியக் குடுத்தா போதும்."

மகளோட பதில் அவங்க மனசை அசைச்சுட்டது. ஏதேதோ பழைய நினைவுகள் அவங்க கண்ணுல வந்து போச்சு. நெஞ்சு அடைக்கிறா மாதிரி இருந்தது. கண்ணை மூடி கடவுளை நினைச்சு தன்னை கொஞ்சம் நிதானப்படுத்திக்கிட்டாங்க. அம்மாவுக்கு இப்படி மூச்சு முட்டுது தவிக்கிறாங்கன்னு பாத்துக்கிட்டே பக்கத்துல கூட வராத மகளைப் பாத்து இன்னும் கொஞ்சம் வேதனை வந்தது. எல்லாத்தையும் சமாளிச்சுக்கிட்டு கண்ணைத் தொறந்தாங்க.

"ஓகே நந்து! எப்பவுமே நீ உனக்குன்னு நீ செலக்ட் பண்ணுன வழியில தான் போவ. ஒரு அம்மாவா நான் உனக்கு சொல்லணும். அதான் சொல்றேன். கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோ. நான் சொல்றது எல்லா விதத்துலயுமே ஜாக்கிரதையா இருன்னு சொல்றேன். நீ செலக்ட் பண்ணி இருக்கிற ஆள் உண்மையிலேயே உன் மனசுல இருக்கிறா மாதிரி இருக்கனா?னு உறுதி பண்ணிக்கோ. அப்புறம் காதல், அன்பு இதெல்லாம் ரெண்டு மனசு சம்பந்தப்பட்டது உனக்கு அவன் மேல லவ் இல்லாம இருக்கலாம். ஆனா அவனுக்கு உன் மேல லவ் வரலாம் இல்ல? அப்படி வந்தா அதையும் நீ அனுமதிச்சு தான் போகணும். அவனை நோகடிச்சிரக் கூடாது."

அம்மாவோட வார்த்தைகள்ல உண்மை இருக்குறதா அவளுக்குப் பட்டது. ஓகேன்னு சொல்லிட்டு தன்னோட ரூமுக்குப் போயிப் படுத்துட்டா.

"அம்மா சொல்றதுலயும் பாயிண்ட் இருக்கு. எனக்கு சஞ்சய் மேல லவ் இல்ல, ஆனா ஒருவேளை அவனுக்கு என் மேல இருக்கலாமோ? லவ், அப்படி இப்படின்னு அசட்டுப் பேச்சு பேசுவானோ? கட்டுனா உன்னைத் தான் கட்டுவேன், என் மனசுல உன்னைத் தவிர வேற யாருக்கும் இடமில்லைன்னு டயலாக் பேசுவானோ? அப்படின்னா எனக்கு சரிப்பட்டு வராது."

யோசிச்சுக்கிட்டே வந்தவளுக்கு 3 மாசமா அவங்க பல எடங்கள்ல சந்திச்சு பேசினாலும் இது வரை காதல், கல்யாணம் இதைப் பத்திப் பேசவே இல்லன்றது அப்ப தான் உரைச்சது. ஒருவேளை இந்த விஷயத்துல அவனும் லவ்னு வழிவானோ? காதல் என்ற உணர்வு வந்துட்டாலே பிரச்சனை தான். உணர்வு பூர்வமா வாழ்க்கையை அணுகுனா நிச்சயம் மனசு கஷ்டம், வேதனை இதெல்லாம் தான் மிஞ்சும். ஒருத்தருக்கொருத்தர் மரியாதை குடுத்து, உனக்குப் பிடிச்சா மாதிரி நீ இரு, எனக்குப் பிடிச்சா மாதிரி நான் இருக்கேன்னு வாழறது தான் வாழ்க்கை. கல்யாணத்துக்கு அப்புறம் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒலகமே மாறிடறா மாதிரி இருந்தா அதுக்கு கல்யாணமே வேண்டாமே? சுயபுத்தியும், சுய கௌரவமும் உள்ள ரெண்டு பேரு சட்டப்படி சேர்ந்து வாழ்ந்து, குழந்தை பெத்துக்கிட்டு சண்டை இல்லாம இருக்குறது தான் கல்யாணம். அதுல உணர்வுகளுக்கு இடம் குடுக்கக் கூடாது. என்னோட பழக்க வழக்கம் இது, நான் இப்படித்தான் இருப்பேன்னு மொதல்லயே பேசி முடிவெடுத்து கல்யாணம் பண்ணிக்கிறது பெட்டர். அடுத்த வாரம் சஞ்சுவை மீட் பண்ணும் போது இதைப் பத்திப் பேசணும்னு முடிவு செஞ்சிட்டு அவனுக்கு குட் நைட் மெசேஜ் அனுப்பினாள் நந்திதா. அந்த மெசேஜைப் படிச்சா ப்ரஹான் முகத்துல சின்ன சிரிப்பு.
 

Advertisement

Advertisement

Back
Top