Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலால் காதலாய் 1

Advertisement

TNWContestWriter017

Well-known member
Member
அத்தியாயம் 1


"போன் பிக் பண்ண இவ்ளோ நேரமா? எங்க இருக்க ஜெய்? எவ்வளவு நேரம் தான் வெயிட் பண்றது?" போனை எடுத்த அடுத்த நொடி பொரிந்து தள்ளினாள் அஞ்சலி.

"நான் ஹாஸ்பிடல்ல இருக்கேன்.. என்னால கால் அட்டன் பண்ண முடியாது.. ஒரு எமெர்ஜென்சி.. அப்புறமா பேசுறேன்" என்று வைத்துவிட்டான் அவன்.

"ஹெலோ.. ஹெலோ!" என்றவள் மறுமுனை தூண்டிக்கப்பட்ட சத்தத்தில் கொதித்து போனாள்.

"என்ன அதிசயம்! அஞ்சலி ஒன்பது மணிக்கெல்லாம் டிபன் சாப்பிட வந்தாச்சு?" என்றபடி அவள் அன்னை காஞ்சனா தட்டினை அவள் முன் வைக்க, எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள் அஞ்சலி.

"கார்டு செலக்ட் பண்ண போறதா சொன்னியே அஞ்சலி! எப்ப போறீங்க? நல்லா மங்களகரமா பார்த்து செலக்ட் பண்ணு" என்று அவர் கூற,

"ம்மா! கொஞ்ச நேரம் பேசாம இருக்கீங்களா?" என்றவள் முகம் கோபத்தில் இருப்பதை அதன் பின் தான் கண்டு கொண்டார் காஞ்சனா.

"என்னாச்சு அஞ்சலி? ஏன் கோபமா இருக்க?" என்று கேட்க,

"ம்மா! ப்ளீஸ்!" என்ற நேரம் அறைக்குள் இருந்து வந்தார் குணசீலன்.

"குட் மார்னிங் அஞ்சலி! ஜெய் வர்றான்னதும் சீக்கிரமே எழுந்தாச்சு போல" என்றபடி அவரும் சாப்பிட அமர,

"ஆமா! அவனுக்காக தான் எழுந்தேன்.. ஆனா அவனுக்கு தான் என்னை நியாபகமே இல்லை போல.." என்றாள் கோபமாய்.

"என்ன டா சொல்ற? என்னாச்சு?" என்று குணா கேட்க,

"எனக்கும் தெரியலைங்க.. வந்ததும் இப்படி தான் கோபமா இருக்கிறா" என்றார் காஞ்சனா.

"இன்னைக்கு தானே அஞ்சலி கார்ட் செலக்ட் பண்ண போறதா சொன்ன? ஏன் போகலையா? அதான் கோபமா?" என்று தந்தை கேட்க,

"அது மட்டுமா! ஜெய் ரொம்ப பன்றான் பா.. நான் போன் பண்ணினா கூட உடனே அட்டன் பண்ண மாட்றான்.. அட்டன் பண்ணினாலும் மதிக்க மாட்டுறான்.. நேத்தே சொல்லிட்டேன் இன்னைக்கு கார்டு செலக்ட் பண்ணிடலாம்னு.. இப்ப கால் பண்ணினா ஹாஸ்பிடல்ல இருக்கேன்னு சொல்றான்" என்று கூறியவள் முகம் அத்தனை எரிச்சலைக் காட்டியது.

"என்ன நினைச்சுட்டு இருக்கான் அவன்? நீ கூப்பிட்டும் வர்லனு சொல்றானா?" என அவளுக்கு நிகராக குணாவும் பேச,

"நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க!" என்ற காஞ்சனா,

"அஞ்சலி! ஜெய்க்கு எதாவது அவசர வேலை இருந்திருக்கும்.. இதுக்கெல்லாம் கோபப்படலாமா? இன்னைக்கு இல்லைனா நாளைக்கு செலக்ட் பண்ணிக்கலாம் டா" என்றார்.

"ம்மா! இன்னும் ஒரு மாசம்! ஒரே ஒரு மாசம் தான் இருக்கு மா மேரேஜ்க்கு.. எனக்கு எவ்வளவு ஆசை இருக்கும்.. புரிஞ்சிக்கவே மாட்டுறான்னு சொல்றேன்.. நீங்க என்னை சமாதானப்படுத்துறீங்க?" என்று அஞ்சலி கேட்க,

"என்ன பேசுற காஞ்சனா? ஏன் அவனுக்கு தெரியாதா? அதான் நேத்தே சொல்லி இருக்கா இல்ல.. அப்புறமும் என்ன திமிர் இது?" என்று மகளுக்கு பரிந்து வந்தார் குணா.

"வேலை இருந்தா என்ன செய்ய முடியும்? நீங்க அவளுக்கு எடுத்து சொல்றதை விட்டுட்டு நீங்களே இப்படி பேசலாமா?"

"நீ பேசாம இரு! உனக்கு ஒன்னும் தெரியாது.. நான் ஜெய் அப்பாகிட்ட பேசிக்கிறேன்.. நீ சாப்பிடு அஞ்சலி.. நாளைக்கு கண்டிப்பா ஜெய் வருவான்.." என்றார் குணசீலன்.

'அப்பாக்கும் பொண்ணுக்கும் இதே வேலை.. அப்படி என்ன தான் மிரட்டி சாதிக்க போறாங்களோ!' என நினைத்த காஞ்சனாவிற்கு அதை அவர்களிடம் கூறி விட தான் முடியவில்லை.

கூறினால் மட்டும் காது கொடுத்து கேட்கவா போகிறார்கள் என்ற எண்ணத்தில் அமைதியாகிவிட்டார்.

"நான் பிரண்ட்ஸ் கூட வெளில போய்ட்டு வரேன்.. ஜெய் என்ன சொல்றான்னு எனக்கு கேட்டு சொல்லுங்க ப்பா.. இனிமேல் நான் அவனுக்கு கால் பண்ண போறதில்ல" அஞ்சலி கூற,

"சரி ம்மா! அதான் அப்பா சொல்றேன்ல.. கண்டிப்பா நாளைக்கு வருவான்.. அவனே சாரி கேட்டு உன்னை கூட்டிட்டு போவான்" என்றார் குணசீலன்.

"நேத்து என்ன சாப்பிட்டிங்க குட்டிமா?" என்று ஜெய் கேட்க,

"சப்பாத்தி!" என்றது அந்த குழந்தை.

"சப்பாத்திக்கு தொட்டுக்க?" என்று கேட்க, தன் அம்மாவைப் பார்த்தது.

"டாக்டர் கேட்குறாங்க இல்ல.. சொல்லு பாப்பா!" என்ற தாயின் குரலுக்கு,

"ஜாம்!" என்றாள்.

"ஓகே! இப்ப வலிக்குதா உங்களுக்கு?" என்று ஜெய் கேட்கவும் இல்லை என தலையசைத்தாள் குழந்தை கண்ணீருடன்.

"ஊசி போட்டுட்டாங்களா அந்த அக்கா.. அடிச்சிடலாம் சரியா?" என்றவன்,

"ஃபூட் பாய்சன் தான்..அடலீஸ்ட் ஹோட்டல் சாப்பாடு ரெண்டு மூணு நாளைக்காச்சும் தர வேண்டாம்.. பிவேர் கொஞ்ச நேரத்துல கம்மி ஆகிடும்.. மூணு நாளைக்கு கண்டிப்பா இந்த மருந்து கொடுக்கணும்" என்றவன் குழந்தைக்கு கையசைக்க, அது அழுகையுடன் திரும்பிக் கொண்டது.

ஜெய பிரகாஷ் எம்பிபிஸ் எம்டி.. குழந்தைகள் நல மருத்துவர்.. ஜெய்யின் அடையாளம் இது.

"இன்னும் எத்தனை பேர் இருக்காங்க?" என்று கேட்டவன், முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டான்.

அடுத்தடுத்த குழந்தைகளிடம் அவன் அக்கறையான பேச்சுடன் தனக்கு வேண்டிய விபரங்களை கூட அவர்களிடமே வாங்கி அதற்கான எளிய மருத்துவத்தையும் கூறி என தன் பணியை சிறப்பாய் செய்பவன். ஊரில் அதன் மூலம் பிரபலமானவனும் கூட.

இரண்டு மணி அளவில் வேலையை முடித்துக் கொண்டு கையில் மொபைலுடன் கிளம்பினான் வீட்டிற்கு.

"என்னப்பா இது? மணி என்ன ஆச்சு? நேரத்துக்கு சாப்பிட்டு வேலையை பார்க்க மாட்டியா?" அன்னை மல்லிகா கடிந்து கொள்ள,

"எடுத்து வையுங்கள் மா!" என்றவன் கை அலம்பி வந்தான்.

"எங்க யாரையும் காணும்?" என்றபடி அமர,

"எல்லாரும் வீட்ல தான்" என்ற மல்லிகா,

"ஏன் டா அந்த பொண்ணு போன் பண்ணிச்சா?" என்றார் ரகசியம் போல மெதுவாய்.

"அது என்ன அந்த பொண்ணு? மருமகன்னு சொல்ல முடியாதா?" என்றான் புன்னகையுடன்.

"விளையாடாத டா பிரகாஷ்! உன் அப்பா கோபமா இருக்கார்.. கல்யாணத்துக்கு கார்டு செலக்ட் பண்ண வர்றேன்னு சொல்லிட்டு போகலையாமே!" என்று கேட்க,

"பசிக்குது ம்மா!" என்ற வார்த்தை அதற்கு மேல் அவரை பேச விடவில்லை.

"இன்னைக்கு பார்த்து மனுசன் ஆபீஸ்க்கும் போகாம வீட்டுல இருக்கார்.. எப்ப வந்து பிரச்சனை பண்ண போறாரோ!" என தன் கணவன் பால நாதனை நினைத்து மல்லிகா பயந்து போய் புலம்பிக் கொண்டிருக்க,

"ஈஸிம்மா! பார்த்துக்கலாம்" என்றான் அமைதியாய்.

"ஹாய் டா அண்ணா!" என்று வந்தான் சூர்ய பிரகாஷ்.. பால நாதனின் தம்பி கிருஷ்ண வேந்தனின் மகன்.

கிருஷ்ண வேந்தன் இறந்து ஆறு வருடங்கள் ஆகின்றது. அவரின் மனைவி பிரேமாவும் மகன் சூர்ய பிரகாஷும் பால நாதனின் குடும்பத்துடன் தான் இருக்கின்றனர்.

பால நாதனுக்கு ஒரு மகன் ஒரு மகள். மகன் ஜெய் பிரகாஷ். மகள் நிவிதா.

"வா சூர்யா! சேலம் போயிருக்குறதா அம்மா சொன்னாங்க.. எல்லாம் ஓகே தானே?" என்று ஜெய் கேட்க,

"பக்கா ண்ணா! இனிமேல் இந்த சூர்யா.. சூர்ய பிரகாஷ் பிஏ பிஎல்.. எப்படி ண்ணா இருக்கு?" என்று கேட்க,

"சூப்பர் டா.. காங்கிரட்ஸ்.. சீக்கிரமா யார்கிட்டயாவது ஜூனியரா ஜோயின் பண்ணிடு.." என்று ஜெய் கூற,

"அதுவும் பார்த்துட்டேன் ண்ணா.. பெரியப்பா பிரண்ட்டோட பையன் இருக்காரே! தங்கராஜ் எம்ஏபிஎல்.. அவர்கிட்ட தான் அடுத்த வாரம் ஜோயின் பண்றேன்.. பாலா பெரியப்பா கூட பேசிட்டார்" என்று சூர்யா கூற,

"சுத்தம்! அங்கேயும் இந்த மனுசனோட ரெகமன்ட்ல தான் போறியா?" என்று முறைத்தான் ஜெய்.

"டேய்! ஏன் டா!" என மகனை முறைத்த மல்லிகா,

"அப்பாவோட பிரண்ட்னா கணேசன் அண்ணா பையனா?" என்று கேட்க,

"ஆமா மல்லிகா ம்மா! அவரு பையனே தான்.." என்று கூற பிரேமாவும் வந்து சேர்ந்தார்.

"இப்ப தான் சாப்பிட வந்தியா ஜெய்? மாமா உன்னை ரொம்ப தேடினார்" என்று கிண்டல் செய்தார் பிரேமா.

"ஆமா சித்தி வந்துட்டேன்.. வேணும்னா நீங்களே போய் உங்க மாமாவை உங்க பையன் வந்துட்டான்னு கூட்டிட்டு வாங்களேன்" என்று ஜெய்யும் சரிக்கு சாரி பேச,

"சத்தம் போடாத டா.. வந்துட போறாரு.. தூங்குறார்னு நினைக்குறேன்.. அதான் இன்னும் கீழே வர்ல.. நீ சாப்பிட்டு ரூம்ல போய் ரெஸ்ட் எடு.. அதுக்கு முன்னாடி அந்த பொண்ணுக்கு போன் பண்ணி சமாதானமா நாலு வார்த்தை பேசிடு" என்று அனுப்பி வைக்க பார்க்க,

"பண்ணலாமே! வாய் நிறைய மருமகன்னு சொல்லுங்க.. சமாதானம் பண்ணிடலாம்.. என்ன டா சூர்யா?" என்று சிரித்தான் ஜெய்.

பாவமாய் பார்த்தார் மல்லிகா.. எப்படி கூறுவார்.. சுத்தமாய் மகனுக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்த பின் அப்படி கூப்பிட அவருக்கும் விருப்பம் இல்லை. கணவனின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசவும் முடியவில்லை.

மொத்த குடும்பத்தையும் ஆட்டி வைப்பது கணவர் தான். ஜெய் அவரின் எந்த விருப்பத்திற்கும் உட்பட்டது இல்லை.. இந்த திருமணத்திலும் தான். ஆனாலும் நிச்சயம் முடிந்தது அவன் தப்பில்லையே.. அவனே இல்லாத நேரத்தில் தானே நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்து இருந்தார் பால நாதன்.

"அய்யோ இப்படி பாவமா முழிக்காதீங்க அக்கா.. நீங்க தான் மாமாகிட்ட பேசணும் உங்க மகனுக்காக.. நான் பேசிடுவேன் தான்.. ஆனா அவர் முறைச்சு பார்த்தாலே எனக்கு பயம்.. உங்க புருஷன் தானே பேசுங்க அக்கா" என்றார் பிரேமா.

"எங்க சித்தி! என் அம்மாக்கு அந்த அளவுக்கு எல்லாம் வீரம் இல்ல.. சும்மா எல்லாருக்கும் சமைச்சு போட்டு எல்லாரும் வயிறு நிறைய சாப்பிட்டா போதும்.. மகன் மனசு தெரிஞ்சு மட்டும் என்ன பிரயோஜனம்? என்ன செஞ்சிட முடியும்? இல்லைம்மா?" என்று கூறியவன் பேச்சு அன்னைக்கு புரியாமல் போகுமா என்ன?.

"நீ என்னை ரொம்ப அழ வைக்குற டா.. எனக்கு மட்டும் என்ன ஆசையா?" என்று கண்ணீர் வடிய மல்லிகா கேட்க,

"ய்யோ ம்மா! இது என்னை புதுசா? எப்பவும் நடக்குறது தான்.. நானும் அந்த மனுசன் மேல இருக்குற காண்டுல எப்பவும் பேசுறது தான்.. நான் என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றேனா? அதுக்காக சும்மா அங்க வா இங்க வா'ன்னு எல்லாம் சொன்னா யார் இஷ்டத்துக்கும் நான் ஆட முடியாது.. அதை மட்டும் தெளிவா மிஸ்டர் பால நாதன்கிட்ட சொல்லிடுங்க போதும்.." என்றான் ஜெய்.

"உனக்கு ஏன் ண்ணா அந்த பொண்ணை பிடிக்கல?" சூர்யா கேட்க,

"டேய்! முதல்ல அது பொண்ணே இல்ல டா" என்றவன், "உன் பெரியப்பாகிட்ட கேளு! தேவதைனு டயலாக் விட்டாலும் விடுவாரு.." என்று கிண்டல் செய்துவிட்டு,

"நிவி எங்கே ம்மா?" என்றான்.

"அவ காலேஜ் போயிருக்கா டா.. செர்டிபிகேட் வாங்கிட்டு வர்றேன்னு போனா" என்றார் பிரேமா.

"சரி ம்மா! அந்தாளு கேட்டா நான் வீட்ல இல்லைனு சொல்லிடுங்க.. நான் தூங்க போறேன்" என்று விட்டு படியேற,

"இவனுக்கு அந்த பொண்ணை பிடிக்கவே இல்லை சூர்யா.. புடிக்காத கல்யாணம் எப்படி?" என்று மல்லிகா கவலையாய் கூற,

"இப்படி அழுது எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது அக்கா.. மாமாகிட்ட பேசுங்க.. அவ்வளவு தான் சொல்லுவேன்" என்றார் பிரேமா.

"நானும் வேணா அந்த பொண்ணுகிட்ட பேசி பாக்குறேன் மல்லிகாம்மா.. நீங்க கவலைப்படாதீங்க" என்றான் சூர்யா.

தொடரும்..
 
Top