Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ -42

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம் -42

இனி இவர்களது கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்தால் அவ்வளவுதான் என்று தோன்றியது ப்ரித்விக்கும் சம்யுவுக்கும்.

சேர்ந்து விடுவார்கள் என்று நினைக்கும்போது தான் புதிதாக ஒரு சண்டையை ஆரம்பிக்கிறார்கள்.

மறுபடியும் முதல்ல இருந்தா என்று தான் தோன்றுகிறது. இனிமேல் வழ வழா கொழ கொழா என்று குழப்பியடிப்பதில் பயனில்லை என்று முடிவெடுத்தவர்கள் தங்களுக்குள் பேசி முடிவெடுத்துக் கொண்டனர்.

மறுநாள் காலையிலேயே ப்ரித்வி சம்யு வீட்டிற்கு வந்தான்.

"ஏய் ப்ரித்வி ! நான் இப்பதான் கிளம்பறேன்.. அதுக்குள்ள நீயே இங்க வந்திட்டே. என்ன விஷயம்?' "

"மொதல்ல அத்தை மாமாவை கூப்பிடு "

இதற்குள் மோகன் அலுவலகம் கிளம்பியவர் கூடத்திற்கு வர ..பின்னோடு தனுஜாவும் வந்தார்.

மோகன் அமைதியாய் நிற்க "வாங்க மாப்பிள்ளை" என்று வரவேற்றார் தனுஜா.

"அத்தை , மாமா! உக்காருங்க" என்றவன் ஒரு பத்திரிக்கையை எடுத்து " எங்க அண்ணனுக்கும் என் அத்தை பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் .. நாளைக்கு காலையில்! கோவில்ல வைத்து . எனக்கு உங்களை கூப்பிடாமல் இருக்க முடியலை.. எல்லாம் சரியா நடந்திருந்தால் அம்ரிதா அண்ணிதான் எங்க வீட்டு மருமகளா வந்திருப்பாங்க . என்னெல்லாமோ நடந்திடுச்சி. ஆனால் சம்யு சார்பில் நீங்க வரணும்" என்று அழைக்க.. மோஹனுக்கோ கடுங்கோபம்.

"என்ன நெனச்சிக்கிட்டிருக்கீங்க? உங்கம்மா எங்களை அவ்வளவு பேச்சு பேசினாங்க. இப்போ உங்க வீட்டு விசேஷத்துக்கு வந்தால் எங்ககிட்ட முகம் குடுத்து பேசுவார்களா ? ஏன் வந்தீங்கன்னு தான் கேப்பாங்க. நாங்க வரமுடியாது" என்றார் கட் அண்ட் ரைட்டாய்.

தனுஜாவோ இரு தலை கொள்ளி எறும்பாக தவித்தார். மூத்த மகளுக்காக நிற்பதா இளைய மகளுக்காக தழைத்து போவதா என்று புரியவில்லை.

"மாமா நீங்க நடந்தையே நினைக்காமல் கொஞ்சம் உங்க 'மகளுக்காக' யோசிங்க. உங்களை மட்டும் நான் அட்வைஸ் பன்றேன்னு நெனைக்கதேங்க . எங்க அம்மாகிட்டயும் இதேதான் சொல்றேன். நீங்கல்லாம் வாழ்ந்துட்டீங்க உங்க வாழ்க்கையை. நாங்க இன்னும் வாழவே ஆரம்பிக்கலை. இப்பவே ரெண்டு குடும்பமும் எதிரும் புதிருமாக இருப்பதை பார்த்தால் கஷ்டமாக இருக்கு." என்றான் வருத்தத்தோடு. மகள் என்று அவன் சொன்னது அவரது இரு மகள்களையும் சேர்த்துதான் என்பது மோகனுக்கு புரியவில்லை.

"ஆமாம்பா.. நாம் பேருக்காவது அங்க போய் தலையை காட்டி தான் ஆகணும்" என்று சம்யு ஆரம்பிக்கவும் மோகன் எகிறத் தொடங்கினார்

"ஆமா! நீயா போய் உன் விருப்பத்துக்கு கல்யாணம் செஞ்சிப்ப . பாரு தனு ? இவளுக்கு எவ்வளவு சுதந்திரம் குடுத்து வளர்த்திருப்போம்? எவ்வளவு அன்பா வளர்த்திருப்போம்? யாருக்கோ சொல்ற மாதிரி வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு சொல்றாங்க! அந்தளவுக்கு அந்நியமா போயிட்டோமா ?" இவர்கள் திருமணம் என்ற நாளில் இருந்து அவர் மனதுக்குள் பொங்கி கொண்டிருந்ததெல்லாம் வெளிவர... அதற்கான விளக்கங்கள் அளிக்க வேண்டியது தங்கள் பொறுப்புதான் என்பதை உணர்ந்தாள் சம்யு .

"அப்பா.. அக்கா கல்யாணம் முடிஞ்சதும் உங்க எல்லார் சம்மதத்தோட பண்ணிக்கனும்னு தான் நாங்க நினைச்சோம். ஆனால் நடக்கறது எதுவுமே சரியாயில்லை. அத்தையும் ஸ்ரீயும் வேண்டாவெறுப்பா தான் முதல்ல இருந்தே இருந்தாங்க.. அதனால் வாய்ப்பு கெடைச்சப்போ பயன்படுத்திக்கிட்டாங்க. ஆனால் அந்த வாய்ப்பை யாரு குடுத்தா ? அக்காவும் ரஞ்சித் அத்தானும் அவங்களா தான் சேரணும்னு நெனச்சாங்க. இப்போ அவங்களே தான் பிரியணும்னு நெச்சிருக்காங்க . இதனால தேவையில்லாத மனக்கசப்பு ரெண்டு குடும்பத்துக்குள்ளயும் . அக்காவும் சரி நீங்களும் சரி எல்லா விஷயத்திலயும் அவசரப்பட்டு முடிவெடுத்தீங்க .கொஞ்சம் டைம் கொடுத்திருந்தால் பல விஷயங்களை சரி பண்ணியிருக்கலாம். இதெல்லாம் பாக்கும்போது எங்க கல்யாணம்னு நாங்க எப்படி பேச முடியும்? அதுக்காக என்னால ப்ரித்வியை விட்டு கொடுக்க முடியாது. அவனாலயும் தான்! அதனால் இப்படி அவசரமா கல்யாணம் பண்ணிக்க வேண்டியதா போச்சு. உங்ககிட்ட சொல்லாமல் செய்யணும்னு எந்த ஆசையும் இல்லப்பா. தனியா ரெஜிஸ்டர் ஆபிஸ்ல,ஆசீர்வாதம் பண்ண கூட யாருமில்லாமல் இப்படி கல்யாணம் பண்ண எனக்கென்ன வேண்டுதலா ? எல்லாம் என் நேரம் " என்று கண்ணீர் குரலில் கூறிய மகளை அணைத்துக் கொண்டார் மோகன்.

நீங்களும் அத்தையும் எனக்காக வாங்க.. நீங்க தலை குனிய மாதிரி எதுவும் நடக்காமல் நான் பாத்துக்கிறேன்" என்றான் ப்ரித்வி உறுதியாய்.

தனுஜாவும் ஒரு முடிவுக்கு வந்தவராய்..."சரி மாப்பிள்ளை. சம்யுவுக்காகவாவது நாங்க வந்து தான் ஆகணும். நான் இவரை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வர்றேன். எத்தனை மணிக்கு வரணும்?"

ஆசுவாசம் கொண்டவனாய் " எட்டு மணிக்கெல்லாம் வந்திடுங்க அத்தை" என்று கோவிலின் பெயரை சொல்லிவிட்டு சென்றான் ப்ரித்வி .

அவ்வளவு நேரம் தன் அறை வாயிலில் நின்று அவன் பேசியதையெல்லாம் கேட்ட அம்ரிதாவிற்கு இதயத்தை யாரோ கத்தியால் கீறியது போல் இருந்தது.

அவளது ரஞ்சிக்கா வேறு பெண்ணுடன் நிச்சயம்? முந்தாநாள் பார்த்தபோது கூட தன்னிலையில் இல்லாவிட்டாலும் ரித்து ரித்து என்று ஜெபித்தானே! அதெல்லாம் பொய்யா? அவன் தாய் சொல்லிவிட்டால் என்னை தூக்கி எறிந்து விடுவானா ? அவ்வளவு தானா என் முக்கியத்துவம் ? என்மேல் அளவில்லா காதல் பாசம் நேசம் என்றெல்லாம் சொன்னானே .. அதெல்லாம் ஒன்றுமில்லை என்று ஆகிவிட்டதா ? முழுதாக வேறு ஒருத்தியை மனைவியாக ஏற்று கொள்ள சம்மதித்துவிட்டானா?

அவள் மனம் என்னென்னவோ கேள்விகள் எழுப்ப.. வேலைக்கு கிளம்பியவள் அப்படியே தன்னறைக்குள் சென்று அமர்ந்துவிட்டாள்.

விழிகள் தானாக நீரை சொரிய .. தலையணையில் முகம் புதைத்து அழ தொடங்கினாள் அம்ரிதா.

மாலை சம்யு கோர்ட்டில் இருந்து திரும்பி வர .. அம்ரிதா தன்னறையில் கட்டிலில் சுருண்டிருந்தாள்.

விளக்குகள் ஏற்றப்படாமல் அறையில் இருள் சூழ்ந்திருக்க .. தாயை தேடி சென்றாள் சம்யு .

"அக்கா படுத்திருக்காளே.. என்னம்மா ஆச்சு ?"

"காலைல ப்ரித்வி வந்திட்டு போனதில் இருந்து பித்து பிடிச்சவ மாதிரி உக்காந்திருக்கா சம்யு . ஒரு வார்த்தை பேசக்கூட இல்லை. அந்த அழைப்பிதழை கையில் வச்சிட்டு உக்காந்தவள்தான். எனக்கு என்ன செய்யன்னு தெரியலை சம்யு. அம்ரு மேலயும் தப்பு இருக்கு.. இல்லைன்னு சொல்லலை.ஆனால் கண்டிப்பா அந்த பையன் மேல உயிரையே வச்சிருக்கான்னு சொல்ல முடியுது. அதனாலதான் செலவு அதிகமா ஆனாலும் இவங்களை சேர்த்து வச்சிடணும்னு நெனச்சேன். ரஞ்சித்தும் நல்ல பையன் தான் அம்ருவை ரொம்ப விரும்பறார். ஆனால் தன்னைவிட தன் விருப்பத்தை விட தன் தாயை முன்னாடி வச்சி பார்க்கிறார். அது கல்யாணம் ஆகாதவரை சரி..அனால் அதற்குப்பிறகு மனைவி தான் முதன்மையா இருக்கணும். இதை பாலன்ஸ் பண்ண முடியாமல் தான் பல ஆண்கள் திணறுறாங்க. ஒரு பொண்ணு எதை வேண்ணா தாங்கிக்குவா. ஆனால் தன்னை கணவன் மத்தவங்க கிட்ட விட்டுக் கொடுக்கறதை மட்டும் தாங்கமாட்டா. என்னவோ போ.. நமக்குன்னு என்ன எழுதியிருக்கோ அதுதான் கிடைக்கும். காலையில இருந்து என்னென்னவோ சமாதானம் செஞ்சி பாத்துட்டேன். இன்னும் ஒரு வாய் காபி கூட குடிக்கலை. நீ கொஞ்சம் சமாதானப்படுத்தி பாரேன் " என்றார்.

தமக்கையின் அறைக்கு சென்று அவளது கட்டிலில் அமர்ந்த சம்யு எதுவும் பேசாமல் அவளது கரத்தை மெல்ல வருடிக் கொடுக்க .. அவ்வளவு நேரமாக அடங்கியிருந்த விம்மல் மறுபடி வெளிப்பட்டது.

அவளருகே காலை ப்ரித்வி தந்து சென்றிருந்த அழைப்பிதழ் கண்ணீரில் நனைந்திருந்தது .

அதை சம்யு தன கையில் எடுக்க "பாத்தியா சம்யு. என் பேர் இருக்க வேண்டிய அழைப்பிதழ்ல வேற யார் பேரோ போட்டிருக்கு" என்று கேவினாள் அம்ரிதா .

சரி அவள் மனதில் இருப்பதை கொட்டட்டும் என்று அமைதியாக இருந்தாள் சம்யு.

" இவன் எப்படி இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ண ஒத்துக்கலாம்? அன்னிக்கு அவங்க அம்மாவும் தங்கையும் அவ்வளவு கேவலமா பேசறாங்க.. என்னை பத்தி .. இவன் எதுவுமே பேசலையே! ஒரு வேளை ரெண்டு பெரும் காதலிச்சது தப்பாவே இருந்தாலும் ..அந்த தப்பை ரெண்டு பெரும் சேர்ந்து தானே செஞ்சோம்? ஆனால் எல்லா பழியும் பெண்கள் மேல தான் விழணுமா? பெண்களே பெண்களுக்கு எதிரியாயிருந்தால் எப்படி? அவங்க பொண்ணோட வாழ்க்கையாயிருந்தால் இப்படி நடந்திருப்பாங்களா ? அவங்க பேசியதெல்லாம் நான் பெருசா நினைக்கலை சம்யு. ஆனால் அந்த இடத்தில எனக்காக ஒரு வார்த்தை கூட பேசாமல் எப்படி மரம் மாதிரி நிக்க முடிஞ்சிது அவனால? அம்மான்னா எல்லாருக்கும் பாசமும் மரியாதையும் இருக்கும்தான். ஏன் பயம் கூட இருக்கலாம். அதுக்காக காதலையும் காதலிச்சவளையும் விட்டு கொடுத்திடுவானா? "


" நீதானே அக்கா பிரேக்கப் பண்ணனும்னு சொன்னே .. இப்போ வந்து புலம்பினா என்ன செய்ய முடியும். அவர் வேண்டாம்னு முடிவெடுத்திட்டல்ல ..அப்போ தூக்கி போட்டுட்டு வேற வேலை என்னவோ அதை பாரு." என்றாள் சம்யுக்தா கறாரான குரலில்.

"நான் தான் பிரேக்கப் பண்ணினேன். அந்த நேரத்தில என்னென்னவோ கோபம், மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்ஸ் , ஒரு பக்கம் லைஃப்ல முன்னேற்றத்தை மிஸ் பண்ணிடுவோமோன்னு பயம்.. இன்னொரு பக்கம் லைஃபயையே மிஸ் பண்ணிடுவோமோன்னு பயம் . இதுபோதாதுன்னு இந்த யஷ்வந்த் வேற என்னென்னவோ வேலையெல்லாம் பண்ணியிருக்கான். அவனை பத்தி ரஞ்சித் சொன்னப்போ கூட பொறாமையால் சொல்றான்னு நெனச்சேன் . எவ்வளவு முட்டாளா இருந்திருக்கேன் சம்யு. ஒண்ணா இருந்தப்போ பெருசா தெரிஞ்ச விஷயமெல்லாம் இப்போ ஒண்ணுமே இல்லாததா தெரியுது . இப்போ அவன் கூட இருந்தால் மட்டும் போதும்னு தோணுது. "

"நீ என்கிட்டே சொன்னதெல்லாம் உன் ஆளுகிட்ட சொல்லியிருந்தால் எப்போவோ பிரச்சனையெல்லாம் தீர்ந்திருக்கும் அக்கா . என்கிட்டே கேட்ட கேள்வியெல்லாம் அவர்கிட்ட நேரடியா கேளு . உனக்கான விடை கிடைக்கும்"

"கெடைக்காது சம்யு... நாளை அவனுக்கு வேற பெண்ணோட நிச்சயம். "

"சோ வாட் ? உங்க நிச்சயம் கேன்சல் ஆச்சுல்ல ..இதை மட்டும் கேன்சல் பண்ண முடியாதா? பெட்டர் லேட் தென் நெவெர் அக்கா . " என்றவள் சமையலறை சென்று ஒரு தட்டில் சாதம் போட்டு கொண்டு வந்தாள்.

" இப்போ இதை சாப்பிட்டு படு . இப்பவே நடுராத்திரி ஆயிடுச்சி . நாளைக்கு காலையில உனக்கு நெறைய எனர்ஜி வேணும். கொஞ்ச நேரம் தூங்கி ஏழு " என்று சொல்லி " இன்னிக்கு உன் கூடவே படுத்துகிறேன் " எனவும் "அய்யய்யோ உன் கூட படுத்தால் நான் தூங்கின மாதிரி தான் .. கட்டில்லேயே கபடி ஆடுவியே " என்றாள் சிரித்தபடி .

தமக்கையின் சிரிப்பை ரசித்தபடி "ப்ரித்வி கூட அப்படிதான் சொல்றான்கா" என்று சம்யு உளறிவிட .."ப்ரித்விக்கு எப்படி தெரியும்? அடிப்பாவி " என்று அம்ரு வாயை பிளக்க " ஓவர் இமாஜினேஷன் பண்ணாத .. நீ நெனைக்கற சீனெல்லாம் எதுவும் நடக்கலை. ஜஸ்ட் ஒரே பெட்ல தூங்கினோம் அவ்வளவுதான் " என்று பாவம் போல் சொல்ல "ஒன்னும் நடக்கலைன்னு வருத்தப்படுற மாதிரியில்ல தோணுது".

தமக்கை ஓரளவு இயல்புக்கு திரும்பி விட்டாள் என்பது புரிந்து "இப்போ எங்களை மறந்துட்டு உன் ஆளை பத்தி மட்டும் யோசி. குட் நைட் " என்று தன்னறைக்கு ஓடிவிட்டாள் சம்யு.
 
Top