Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ -41

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம் -41

ப்ரித்வியின் அலைபேசி மீண்டும் மீண்டும் வைப்ரேஷனில் அதிர .. கோர்ட்டில் இருந்ததால் அவனால் எடுக்க முடியவில்லை . வேலை முடிந்து வெளியே வந்தவன் எடுத்து பார்க்க.. மிஸ்ட் கால்கள் எக்கச்சக்கம்.. தாயும் தந்தையும் பலமுறை அழைத்திருக்க... தந்தைக்கே முதலில் அழைத்தான்.

"என்னப்பா?"
"ரஞ்சித் காலையில நான் கிளம்பி கொஞ்ச நேரத்தில புறப்பட்டுட்டானு சந்தியா பொண்ணு சொல்லுச்சு. ஆபீசுக்கு வந்து சேரலையேன்னு போன் பண்ணா ரிங் போய்க்கிட்டே ருக்கு ..எடுக்க மாட்டேங்கிறான் பா " என்றார் கவலையுடன்..

நேரத்தை பார்க்க மாலை நான்கு மணி ..காலையில் கிட்ட தட்ட ஒன்பது மணிபோல் கிளம்பியவன் இவ்வளவு நேரம் எங்கு போயிருக்க கூடும் .. எங்கு போயிருந்தாலும் அதை தெரிவித்து விடுவானே.. யாருக்காவது மெசேஜாவது போடுவான் . இப்போது தகவல் ஒன்றுமில்லை என்பது கவலை ஏற்படுத்த.. சித்துவுக்கு அழைத்தான்.

அவனுக்கும் தெரியவில்லை ரஞ்சித் எங்கே சென்றான் என்று.
அவனும் அவனுக்கு தெரிந்த இன்னும் சில நண்பர்களுக்கு அழைத்து பார்க்க பலன் பூஜ்ஜியம் தான்.

சித்து மறுபடி ப்ரித்விக்கு அழைத்து விவரம் சொல்ல.. ப்ரித்வியோ அவனை வறுத்து எடுத்து விட்டான் "உங்களுக்கு உங்க பிரெண்டை பத்தி கவலை கொஞ்சம் கூட இல்லையா ? அவனுக்கு புத்தி சொல்லி ப்ரயோஜனமில்லைன்னாலும் கூடவாவது இருக்கலாமில்லையா ?" என்று.

சம்யுவிற்கு அழைத்தவன் " சம்யு.. அண்ணனை காலையில் இருந்து காணலை.. தகவலும் எதுவும் சொல்லாமல் எங்கே போனான்னு தெரியலை " என்று தன் கவலையை பகிர்ந்தான்.

"அத்தானை காணோமா ? என்ன சொல்றே ப்ரித்வி?" என்று கவலையாய் கேட்டாள் சம்யு.

இவர்கள் பேசுகையில் அப்புறம் இருந்து அம்ரிதாவின் குரல் கேட்டது. "சரி. அண்ணிக்கு எதுவும் தெரிய வேணாம்" என்று சொல்லும்போதே இவர்கள் பேசுவதை கேட்டுவிட்டிருந்தாள் அம்ரிதா.

"என்னாச்சு சம்யு? ரஞ்சிக்கு என்னாச்சி?" என்று அவள் பதறுகையிலேயே அம்ருவின் நம்பருக்கு தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வர "இது ரஞ்சித் கிருஷ்ணன் போன் தானே ?' அந்தப்புத்தில் கேட்ட அறிமுகமில்லாத குரல் பதட்டத்தை கூட்ட .. உள்ளுக்குள் வேண்டுதல் எழுந்தது அவனுக்கு எதுவும் ஆகியிருக்க கூடாதென்று.

அந்த ஒரு கணத்தில் அவன் மீது தான் எத்தனை காதலும் நேசமும் கொண்டிருக்கிறோம் என்பது தெள்ளத்தெளிவாக புரிந்தது அம்ரிதாவுக்கு.


"அவர் 'வைஃப்' நம்பர்னு போட்டிருந்தது அதுதான் கால் பண்ணினேன்" என்றதும் 'இன்னும் என் பெயரை 'வைஃப்' என்றே பதிந்திருக்கிறானா என்று ஒரு மனம் ஆறுதல் கொள்ள .. இன்னொரு மனமோ என்னவானதோ என்று பதறியது.

"ஒன்னும் இல்லீங்க.. நாங்க" என்று ஒரு பெரிய நட்சத்திர விடுதியின் பேரை சொல்லி "பப்பிலேருந்து கால் பண்றோம் .காலைலேருந்து குடிச்சு குடிச்சு சுயநினைவே இல்லாமல் கிடக்கிறார். இதுக்கு மேல குடிக்க கூடாதுன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறார்" என்று கூற ஒருபுறம் அசம்பாவிதமாய் ஏதுமில்லை என்றாலும் .. இன்னொருபுறம் இதுவும் ஒரு வகையில் அவன் மிகவும் மனமுடைந்திருக்கிறான் என்பதன் அடையாளம் தானே என்று தோன்ற .. துவண்டு போய் சோபாவில் அமர்ந்துவிட்டாள் அம்ரு.

உடனே ப்ரித்விக்கு அழைத்து சொன்னாள் சம்யு.

"ப்ரித்வி ..எங்க வீட்டிலிருந்து அந்த ஹோட்டல் பக்கம் தான். நாங்க போய்கிட்டே இருக்கோம். நீ வா" என்று சொல்லி அம்ருவையும் தன் ஸ்கூட்டியில் அமர வைத்து கிளமப " சரி சம்யு. நீங்க அவனை அங்கேயே ஏதாவது ரூமில் படுக்க வைக்க சொல்லுங்க .. நான் டாக்டரை கையோடு அழைத்து வர்றேன்" என்றான்

இவர்கள் சென்றபோது அங்கே ரஞ்சித் தரையில் விழுந்து கிடைக்க .. பார்த்த அமருவிற்கு மனம் தாளவில்லை.

எப்படி இருப்பான் ரஞ்சித்?
கல்லூரியில் அலுவலகத்தில் எல்லாம் பல பெண்களின் 'ஹார்ட் த்ராப்' என்பார்களே அது போன்று தான் அவன்.

மிடுக்கும் தோரணையும் என்றுமே குறைந்ததேயில்லை. அளவு மீறி குடிக்கவும் மாட்டான்.

இப்போது?

அவனது நிலைக்கு தான்தான் காரணமோ என்று அவள் தவிக்கையிலேயே .. ஆட்களை வைத்து அவனை ஒரு அறைக்குள் படுக்க வைத்துவிட்டனர்..
படுக்கையில் புரண்டபடி "ரித்து.. ரித்து" என்று முனகியவன்.."இப்படி ஏமாத்திட்டியே ! என்னை விட்டுட்டு யார் கூடவோ போக போறியா? " என்றெல்லாம் தெளிவற்று முனக .. சம்யுவுக்கு புரிந்தது.. காலையில் அம்ரு அந்த பையனை பார்த்து பேசியதை இவன் பார்த்திருக்கிறான் என்று.

இவர்கள் இருவரும் என்று தான் மனம் விட்டு பேசி பேதங்களை சரி செய்ய போகிறார்களோ என்று சலிப்பு தான் ஏற்பட்டது..

சற்று நேரத்தில் ப்ரித்வி ஒரு வயதானவரோடு வந்து சேர்ந்தான். அவரது மரியாதையான தோற்றம் அவர் மருத்துவர் என்று சொல்லாமல் சொன்னது . சித்துவும் விவரம் அறிந்தவன் அங்கு வந்துவிட்டான். தன் நண்பனை அப்படி பார்க்க அவனுக்கும் மனம் தாளவில்லை.

முதலில் ரஞ்சித்தை பரிசோதித்த மருத்துவர்" பிராப்லெம் எதுவுமில்லை ப்ரித்வி . அதிகமாக குடிச்சிருக்கான் அவ்வளவுதான். நான் ட்ரிப்ஸ் போடுறேன். கொஞ்ச நேரத்தில தெளிஞ்சிடுவான்" என்றவர் " இப்படி குடிக்கிற அளவு என்ன நடந்தது?" என்று கேட்க மௌனமாய் தலை குனிந்தான் ப்ரித்வி.

இவர்கள் இருவரையும் கேள்வியாய் நோக்க.."இவங்க அண்ணனோட வருங்கால மனைவி.. " என்று அறிமுகப்படுத்த..

"யா !யா! ஐ நோ .நான் தான் நிச்சயதார்த்தத்தில் பார்த்தேனே " என்றவர் "பார்த்துக்கோங்க . நான் என் நர்ஸை அனுப்புகிறேன் . அவங்க வந்து கூட இருந்து பாத்துப்பாங்க " என்று கிளம்ப "அங்கிள் ..அப்பாம்மா ரெண்டு பேருக்கும் தெரிய வேணாம் " என்று வேண்டுதலாய் கூற தலையசைத்துவிட்டு விடைபெற்றார் அவர்.

அம்ரிதா ரஞ்சித்தை விட்டு அந்தப்புறம் இந்தப்புறம் நகரவில்லை.அவன் கைகளை பிடித்தபடி அங்கேயே அமர்ந்திருக்க.. ப்ரித்வியும் சம்யுவும் சித்துவும் முன்னறையில் அமர்ந்தனர்.

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள ..'இதுகளை ஒண்ணா சேர்க்கும் முன்னாடி நமக்கு வயசாயிடும் போலவே ' என்பதே இருவரின் மைண்ட் வாய்சாக இருந்தது .

ட்ரிப்ஸ் இறங்க இறங்க ..லேசாக தெளிய தொடங்கினான் ரஞ்சித். அவன் மெல்ல அசைவதை பார்த்த அம்ரு ,அவனை சற்றே சாய்த்து அமரவைத்து , அருகில் இருந்த ஜூஸை எடுத்து மெல்ல புகட்ட.. கொஞ்சம் உள்ளேயும் கொஞ்சம்வெளியேயுமாய் சிந்தி சிதற ..அதை பார்க்கையிலே ஏனோ கண்கள் கலங்கி நீரை சொரிந்தன அம்ருவிற்கு.

அவளது விழி நீர் சூடாக அவனது கன்னங்களில் உருண்டோட ..
அதுவரை அமைதியாக இருந்தவன் உளற தொடங்கினான்.

" ரித்து.. ரித்து டால் .. ஏன் அழுகிற? நான் உன்னை அந்த மடையன் யஷ்வந்த் கிட்டயிருந்து காப்பாத்திட்டேன்னு அழறியா ? அவன் மூஞ்சியை பார்த்தாலே எழுதி ஒட்டியிருக்கு சரியான அயோக்கியன்னு. ஆனால் உனக்கு மட்டும் எப்படி அவன் நல்லவனா தெரியிறான். நான் கெட்டவனா தெரியுறேனா ? இன்னிக்கு ஒருத்தன் வந்தானே .. பாக்க நல்லா அழகா வாட்டசாட்டமா ஜிம்பாய் மாதிரி இருக்கான். அவனை தானே கட்டிக்க போற ? அவன் கூட உக்காந்து அவ்வளவு நேரம் பேசுற ? என் கூட ரெண்டு வார்த்தை பேச கூட உனக்கு நேரமில்லை. கேட்டா வேலை..வேலை வேலை ! புரிஞ்சி போச்சி.. உனக்கு என்னை பிடிக்கலை..அதுதான் என்னை அவாய்ட் பண்ண வேலை அது இதுன்னு காரணம் காட்டி... என்னை கழட்டி விட்டுட்டு அவன் கூட ஊரை சுத்தலாம்னு பாக்கிற " என்று அவன் பேசிக் கொண்டே போக.. அதற்குமேல் அவன் பேசுவதை கேட்க முடியாதவளாய் ..வேகமாய் எழுந்து வெளியே வந்தவள்.. சம்யுவை பார்த்து "நான் போறேன் சம்யு. நீ வர்றதா இருந்தால் வா " என்று வேகமாய் நடந்துவிட்டாள்.

ப்ரித்வியிடம் விழியசைவில் விடைபெற்றவள் வெளியே ஓட.. அம்ருவை காணவில்லை.. அங்குமிங்கும் தேடியவள் கடைசியில் பார்க்கிங்கிற்கு வர... ஒரு ஓரமாக நடைபாதையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் அம்ரிதா.

அப்படி தேம்பி தேம்பி அழும் தமக்கையை பார்க்க மனம் தாளவில்லை சம்யுவுக்கு.

சற்று நேரம் அழுது தீர்க்கட்டும் என்று பொறுத்தவள் அவளை மெல்ல தேற்ற .."பாரு சம்யு. இவன் வேற ஒரு பொண்ணோட நிச்சயம் பண்ணிட்டு ..இப்போ நான் இன்னொருத்தன் கூட ஊரை சுத்தறேன்னு பேசறான். அன்னிக்கு அவங்க அம்மா கூட அப்படிதான் ஏதோ சொன்னாங்க. இன்னிக்கு இவனும் சொல்றான்" விழிகளில் தாரை தாரையாய் நீர் வழிய சிறு பிள்ளை போல் தேம்பும் தமக்கையை ஆறுதலாய் அணைத்துக் கொண்டாள் சம்யு.

"நான் எதுக்கு இன்னிக்கு அவனை மீட் பண்ணேன்? எங்கப்பா தெரியாமல் சம்மந்தம் பேசிட்டார் .. எனக்கு கல்யாணத்தில் விருப்பமில்லைன்னு சொல்லத்தானே? இவன் என்னடானா என்னை ஃபாலோ பண்ணி வந்திருக்கான்.. என்னை உளவு பார்த்துட்டு இப்போ என் மேல எல்லா பழியையும் போடுறான். நான் இவனை எவ்வளோ லவ் பன்றேன்னு இவனுக்கு புரியவேயில்லையா ?"

"இங்க பாரு அக்கா . ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப லவ் பண்றீங்க . அனால் அதை வெளிப்படுத்தற விதம் தான் தப்பு. அத்தான் உன் மேல் இருக்கும் காதலை பொசஸிவ்னெஸ்ஸா காட்றாரு. அதனால அவரை தவிர நீ எந்த விஷயத்துக்காவது.. இல்லை யாருக்காவது முக்கியத்துவம் குடுத்தா , அவரால அதை தாங்கிக்க முடியலை. அதை உன்கிட்ட காட்டறாரு. நீயும் ரொம்ப 'டேக் இட் ஃபார் க்ராண்ட்டட் ' டா எடுத்துக்கிட்ட அக்கா . நீ என்ன செஞ்சாலும் அதை அவர் ஏத்துக்கணும்னு நெனைச்சே.. அவரோட பீலிங்ஸ்க்கு மதிப்பு கொடுக்கலை. வாழ்க்கைல ப்ரையாரிட்டிஸ் இருக்கலாம்.. லவ்ல ப்ரையாரிட்டிஸ் இருக்க கூடாது அக்கா.. லவ் மட்டும்தான் ப்ரையாரிட்டியா இருக்கணும். அதுக்காக என்ன வேண்ணா செய்யலாம்னு தோணனும் .. அந்த பீல் இல்லைன்னால் அது லவ்வே இல்லை . இப்போ அவர் தன்னிலையில் இல்லை . இப்போ அவர் பேசறதை வச்சு எந்த முடிவுக்கும் வராதே. வீட்டுக்கு போகலாம் " என்று தமக்கையை தேற்றி அழைத்து சென்றாள்.
 
Top