Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஓவியப்பாவை 8....

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 8:



ஆபீசில் ராஜலிங்கத்தின் அறையில் எதிரெதிராக அமர்ந்திருந்தனர் தந்தையும் மகனும். சாமி படங்கள் மாட்டப்பட்டு அவற்றில் அழகான ரோஜாப்பூக்கள் வைக்கப்பட்டிருந்தன. பெரிய மேஜையின் மேல் கம்ப்யூட்டரும் பக்கத்திலேயே ஒரு பிரிண்டரும் இருந்தது. அந்த பிரிண்டரில் எதையோ பிரிண்ட் செய்தவாறே பேசினார் ராஜலிங்கம்.



"அருண்! நீ உன் மனசுல என்ன இருக்குன்னு திறந்து சொல்லு! மூணு நாள் முன்னால அம்மா கிட்ட இன்னும் ஒரு வாரம் கழிச்சு எனக்கு திரும்பவும் பொண்ணு கேட்டு அந்த வீட்டுக்குப் போங்கன்னு சொல்லியிருக்க! ஏன்ப்பா அப்படிச் சொன்ன?"



"காரணம் இருக்குப்பா! நான் அப்படிச் சொல்லலின்னா அம்மா சதா கவலைப்பட்டுக்கிட்டே இருப்பாங்க! நான் சாதாரணமா தும்மல் போட்டாக்கூட அதுக்கும் அந்த சாமியார் தான் காரணம்னு பதறுவாங்க. அதுக்காகத்தான் அப்படிச் சொன்னேன்"



"ஆனா இது விளையாட்டு இல்லை அருண். உன் வாழ்க்கை விஷயம் அதை மறக்காதே"



"நான் மறக்கல்லப்பா! அதனால நானே அந்தப் பொண்ணு ஸ்வேதாவை நேர்ல பார்த்து பேசலாம்னு இருக்கேன்"



"என்ன அவளைக் கெஞ்சப் போறியா நீ?"



"இல்லவே இல்ல! ஏன் அந்த சாமியார் குறிப்பா ஸ்வேதாவைத்தான் நான் கல்யாணம் செஞ்சுக்கணும்னு சொன்னாரு? அந்தப் பொண்ணு குடும்பத்துக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? ஒரு வேளை அந்தப் பொண்ணு குடும்பமும் சாமியாரும் சேர்ந்து ஏதாவது சதியில ஈடுபட்டிருக்காங்களா? அப்படீன்னா ஏன்? அந்த சதி என்ன? இது எல்லாத்துக்கும் எனக்கு விடை தெரியணும்பா"



மகனைப் பெருமையுடன் பார்த்தார் ராஜலிங்கம்.



"அப்ப உனக்கு சாமியார் மேல பயமில்லையா?"



தலையை அசைத்து மறுத்தான் அருண்.



"எனக்குக் கடவுள் மேல அளவு கடந்த நம்பிக்கை இருக்கு! அதனால தான் இந்த சாமியார் மாதிரி மனுஷங்களை என்னால நம்ப முடியல்ல! என்ன தான் மந்திரம் தந்திரம் இருந்தாலும் கடவுள் அருளுக்கு முன்னால எல்லாமே தூசி தான்"



"வெரி குட்! உன் பிளான் என்ன?"



"முதல்ல எனக்கு அந்த பொண்ணு வீட்டு அட்ரஸ் வேணும்! முடிஞ்சா அந்தப் பொண்ணோட ஃபோன் நம்பரும் வேணும். "



"அவ வீட்டு அட்ரஸ் தரேன். ஆனா நம்பர் இல்ல! ஆனா அந்தப் பொண்ணு வேலை பார்க்குறா ஆபீஸ் அட்ரஸ் இருக்கு"



"அப்ப அதைக் குடுங்க! வீட்டுக்குப் போய் பேசுறதை விட ஆபீஸ்லயே பார்த்துப் பேசிடறேன். " என்றான். அட்ரசை கொடுத்தார் ராஜலிங்கம். அந்த ஆபீஸ் பெயரை இண்டெர் நெட்டில் போட்டு ஃபோன் நம்பரைக் கண்டு பிடித்தான். தனது செல்ஃபோனிலிருந்து அந்த நம்பருக்குப் போட்டான். அந்த ஃபோனை டெலி ஃபோன் ஆப்பரேட்டர் எடுத்தாள்.



"ஹலோ!"



"குட் மார்னிங்க் மேடம்! உங்க கம்பெனியில வேலை செய்யுற ஸ்வேதா கிட்டப் பேசணும். கனெக்ஷன் கொடுக்கறீங்களா?"



"ரெண்டு ஸ்வேதா இருக்காங்க! அதுல எந்த ஸ்வேதாவுக்கு கனெக்ஷன் குடுக்க?"



சங்கடத்தில் ஆழ்ந்தான் அருண். சட்டென தோன்றிய யோசனையில் பேசினான்.



"கேகே நகர்ல இருக்காங்களே அந்த ஸ்வேதா"



"ஓ! ஃபினான்ஸ் ஸ்வேதாவா? லைன்ல வெயிட் பண்ணுங்க கொடுக்கறேன்"



ஏதேதோ இசை கேட்டது. அடுத்த சில நொடிகளில் பேசினாள் ஸ்வேதா.



"ஹலோ! நான் ஸ்வேதா பேசுறேன். நீங்க யாரு?"



"வணக்கம் ஸ்வேதா! நான் அருண் பேசறேன். உங்க வீட்டுக்கு வந்தாங்களே ராஜலிங்கம் ராஜேஸ்வரி அவங்க மகன் நான்"



மறு முனை சட்டென மௌனமானது.



"ஹலோ! என்னங்க லைன்ல இருக்கீங்களா?"



"உம் இருக்கேன் இருக்கேன். நீங்க என்ன விஷயமா எனக்கு ஃபோன் பண்றீங்க?" தயக்கத்துடன் கேட்டாள் ஸ்வேதா.



"நேர்ல தான் நிறைய விஷயம் பேசணும் ஸ்வேதா! நிச்சயமா நான் கெட்டவன் இல்ல! என்னால உங்களுக்கு எந்த ஆபத்தும் வராதுன்னு நான் உறுதியாச் சொல்றேன். ஆனா இப்ப நாம சந்திச்சுப் பேசுறது நம்ம ரெண்டு குடும்பத்துக்குமே நல்லதுன்னு நினைக்கறேன்" என்றான் பக்குவமாக.



"எதுக்கு நாம பேசணும்? எங்களுக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு அன்னைக்கே நாங்க சொல்லிட்டோமே? அப்புறம் என்ன?"



"நிச்சயமா என்னைக் கல்யாணம் செய்துக்கச் சொல்லி உங்களை வற்புறுத்தவோ மிரட்டவோ நான் கூப்பிடல்லை! பிளீஸ் புரிஞ்சிக்கோங்க! நீங்க நேர்ல வந்தீங்கன்னா நான் எல்லாத்தையும் விவரமாச் சொல்றேன்"



"எங்கே எப்ப வரணும்?"



"நீங்களே ஒரு இடத்தைச் சொல்லுங்க! அங்க நான் வரேன். உங்களுக்கு இன்னமும் தயக்கம் இருந்ததுன்னா உங்க நம்பிக்கைக்கு பாத்திரமான யாரையாவது நீங்க கூட்டிக்கிட்டு வாங்க! "



"சரி! இன்னைக்கு சாயங்காலம் எங்க ஆபீஸ் கிட்ட இருக்குற கோயிலுக்கு வந்துடுங்க! சரியா அஞ்சு மணிக்கு நாங்க அங்க இருப்போம்" என்று சொல்லி ஃபோனை வைத்தாள் ஸ்வேதா. அவளது முகம் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது. தன்னை அறியாமல் ராகுலின் சீட்டைக் கண்கள் நோட்டமிட்டன. வழக்கம் போல அவன் வெளியில் போயிருந்தான் போலும். எதற்காக அருண் என்னைப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறான்? என்ற கேள்வி மீண்டும் மீண்டும் எழுந்தது.



"ஸ்வேதா! சரியா சாப்பாட்டு நேரத்துக்கு வந்துட்டேன் பார்த்தியா?" என்று சிரித்தபடியே உள்ளே வந்து நின்ற ராகுலை பார்த்ததும் தான் நிம்மதியானது அவளுக்கு. அக்கம் பக்கம் பார்த்தவளை ரசனோயோடு பார்த்தான் ராகுல்.



"என்ன ஸ்வே? என்னைக் கிஸ் பண்ணப் போறியா? அப்படி சுத்தும் முத்தும் பார்க்குற?" என்றான் குறும்புடன். முகம் சிவந்து போனது ஸ்வேதாவுக்கு. சமாளித்துக்கொண்டு கிசுகிசுப்பான குரலில் பேசினாள்.



"ராகுல்! உங்க கிட்ட நான் கொஞ்சம் தனியா பேசணும்" அவளது முகம் சீரியசாக இருந்ததைக் குறித்துக்கொண்டான் ராகுல்.



"ரெக்கார்டு ரூமுல எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. அங்க போயிடலாம் வா" என்று பதிலுக்குக் காத்திராமல் விடு விடுவென நடந்தான். இரும்புக் கதவுகளைக் கொண்டது அந்த ரெக்கார்டு ரூம். கண்காணிப்புக் காமிராவும் கிடையாது. அதிகமாக யாரும் அங்கே வர மாட்டார்கள். கதவைச் சாத்தி விட்டு ஸ்வேதாவை ஏறிட்டான் ராகுல்.



"என்ன விஷயம் ஸ்வேதா? வீட்டுல ஏதாவது பிரச்சனையா? அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா?'



"இல்ல ராகுல்! அப்படி எதுவும் இல்ல! கொஞ்ச நேரத்துக்கு முன்னால அருண் எனக்கு ஃபோன் செஞ்சாரு"



முகம் இருண்டு போனது ராகுலுக்கு. காட்டிக்கொள்ளாமல் பேசினான்.



"அந்த இண்டஸ்டிரியலிஸ்டோட மகனா?"



"உம்!"



"என்ன வேணுமாம் அவனுக்கு?"



"என்னை நேர்ல மீட் பண்ணணுமாம். எதுக்குன்னு விவரம் சொல்ல மாட்டேங்குறாரு"



தாடையைத் தேய்த்து விட்டுக்கொண்டான் ராகுல் அவன் மனதில் இடி இடித்துக்கொண்டிருந்தது. வீட்டில் ஸ்வேதாவை தான் காதலிப்பதைச் சொல்ல அவன் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே இப்படி ஒரு இடைஞ்சலா? என வேதனைப் பட்டது அவன் மனம்.



"நீ என்ன சொன்ன?"



"வரேன்னு சொல்லிட்டேன் ராகுல்" என்றாள்.



சட்டெனக் கோபம் வந்தது அவனுக்கு.



"நீ முடிவு செஞ்சப்புறம் எங்கிட்ட ஏன் சொல்ற? உனக்கும் காசும் பணமும் தான் பெரிசுன்னா அவன் கிட்டயே போ! உன் பின்னாடி ஒருத்தன் லோ லோன்னு சுத்தறது பெருசாப் படல்ல! உன்னையே நெனச்சு உருகுறவன் பெருசாத் தெரியல்ல! நேத்து வந்த அவன் தான் உசத்தி இல்லை?" என்றான் கண்கள் சிவக்க.



மனதுக்குள் குளிர் தென்றல் வீசியது போல உணர்ந்தாள் ஸ்வேதா. அவர்கள் இருவரும் ஆடிய கண்ணாமூச்சியின் இறுதி வந்து விட்டது. ஒருவரை ஒருவர் காதலிப்பது தெரிந்தும் யார் முதலில் சொவது என்ற கேள்விக்கு பதிலை இதோ ராகுல் சொல்லி விட்டான். மனது சந்தோஷத்தில் குதியாட்டம் போட்டாலும் இயல்பான குறும்பு தலை தூக்க ராகுலைப் பார்த்து சிரித்தாள்.



"யார் அது ராகுல் என் பின்னாடி லோ லோன்னு அலையுறது? எனக்குத் தெரியவே தெரியாதே?"



அவளது குறும்பை உணராத ராகுல் கோபமாகவே பேசினான்.



"ஏண்டி கேக்க மாட்ட? உன் மேல கிட்டத்தட்ட பைத்தியமாவே இருக்கேன் இல்லை? என்னைப் பார்த்து ஏன் கேக்க மாட்ட?" என்றான் எரிச்சலுடன். அவனை நோக்கி சிரித்தாள் ஸ்வேதா.



"ஏன் ராகுல் காதலை இப்படித்தான் காதலி கிட்ட சொல்றதா? உனக்கு காதலிக்கவே தெரியல்ல போ" என்றாள் சிரிப்புடன், அப்போது அவளது முகத்தில் தெரிந்த சந்தோஷத்தையும் குறும்பையும் கவனித்தான்.



"அடிப்பாவி! காதலைச் சொல்ல வைக்கத்தான் இப்படி நாடகமாடினியா? ரொம்பத்தான் கொழுப்பு உனக்கு" என்று அவளது காதைத் திருகினான்.



"வலிக்குது விடு ராகுல்"



"சொல்லு! அருண் ஃபோன் பண்ணதா சொன்னது பொய் தானே?"

சீரியசானது ஸ்வேதாவின் முகம்.



"இல்ல ராகுல்! அது பொய்யில்ல! உண்மையாவே அவரு ஃபோன் செஞ்சாரு."



"உம்! மீட் பண்ணப் போறியா?"



"போய்த்தான் ஆகணும் ராகுல்! என்னைக் கட்டாயப்படுத்த மாட்டேன்னு வாக்குக் கொடுத்திருக்காரு. அதோட நம்பிக்கையான ஆளைக் கூட கூட்டிக்கிட்டும் வரச் சொல்லியிருக்காரு. "



"யாரைக் கூட்டிக்கிட்டுப் போகப் போற ஸ்வே? உன் தம்பியையா?" என்று சீண்டினான்.



"விளையாடாதே ராகுல்! அஞ்சு மணிக்கு பக்கத்துல இருக்குற கோயிலுக்குப் போகணும். அங்க வெச்சு தான் பார்க்கறேன்னு சொல்லியிருக்கேன். நீயும் வந்துடு. என்னால தனியா சமாளிக்க முடியாது. "

"இனிமே நீ சொல்றதைக் கேக்குறது தானே என் வேலை! அப்படியே செய்யுறேன் மகாராணி! ஸ்வேதா தேவியார் பின்னால் வருவது தானே இனி என் கடமை" என்றான் நாடக பாணியில். சிரித்தபடியே ஒரு முத்ததைக் காற்றில் பறக்க விட்டு விட்டு வெளியேறினாள் ஸ்வேதா.



அங்கே புலிப்பட்டியில் மயானத்தில் பூஜை செய்வதற்காக கறுப்புக்கோழி, முட்டை என்று பொருட்களை சேகரித்துக்கொண்டிருந்தார் ரண தீரன்.
 
Top