Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஓவியப்பாவை 3.....

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 3:



புலிப்பட்டியில் அந்த வீடே ஒரு மாதிரியாக இருந்தது. சில பாகங்களில் மேற்கூரை இல்லை. வசதி இல்லாததால் அந்தப்பகுதியை அப்படியே விட்டிருக்கிறார்களோ என்று எண்ண இடம் இல்லாமல் மற்ற பாகங்கள் மிகவும் செழுமையோடு காணப்பட்டன. அந்த வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த பெரியவரின் தோற்றம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. நெற்றியில் திரிசூல முத்திரை கறுப்பு மையினால் வரையப்பட்டிருந்தது. அவரது சிவந்த முகத்தில் அது மிகவும் எடுப்பாகவே தெரிந்தது. நல்ல பட்டினால் செய்த மேல் துணியைக் கொண்டு உடலைப் போர்த்தியிருந்தார். பளீரன்ற வெண்மை வேட்டியில் இரு புறமும் கருப்புக்கரைகள். முகத்தில் தாடி. அவரது கண்களை சிறிது நேரம் கூடப் பார்க்க முடியாத வண்ணம் தாடியும் மீசையும் மறைத்தன. அவர் தான் இப்போது தமிழ் நாட்டிலேயே ஏன் இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாந்திரீகர். ஏதோ மந்திரத்தால் மாங்காய் வரவழைப்பது, அந்தரத்தில் விபூதி வரவழைப்பது எல்லாம் அவருக்கு தண்ணீர் பட்டபாடு. அதற்கு மேல் போய் அதர்வண வேதத்தைக் கரைத்துக் குடித்தவர். பெயர் ரணதீரன்.



"ஐயா!" என்று அழைத்தபடி வந்தவன் அவரது பணியாள், தோழன் எல்லாமுமான பரமன்.



"என்ன பரமா? பூஜை பிரசாதத்தை வினியோகம் பண்ணிட்டியா?"



"ஆமா பூஜை செஞ்சு என்னவோ சர்க்கரைப் பொங்கலை வினியோகம் செஞ்சிட்டியான்னு கேக்குறா மாதிரி கேக்குறாரு? பண்றது மயான பூஜை அதுல எருமையை பலி குடுக்குறாரு. அதைக் கொண்டு போயி கழுகு மேட்டுல போடுறதுக்குள்ள எனக்கு உசிர் போகுது" என்று எண்ணிக்கொண்டான்.



"என்னடா? உனக்கு உசுரு போயிடுமா எனக்குத் தெரியாம?" என்று கேட்டு அவனை அதிர வைத்தார் அவர்.



"சாமி தப்பு தப்பு! நான் நினைக்குறதெல்லாம் எப்படித்தான் உங்களுக்குத் தெரியுதோ?" என்றான் பரமன் அப்பாவியாக.



"எல்லாம் என் குருநாதர் சொல்லிக்குடுத்த பீதாம்பர வித்தைடா! அதர்வண வேதம். அதை நான் கரைச்சுக்குடிச்சிருக்கேன். எதிராளியோட மனசுல என்ன இருக்குன்னு என்னால ஊடுருவ முடியும்"



"ஐயா! சென்னையில இருந்து தொழிலதிபர் ராஜலிங்கம் ஃபோன் செஞ்சாருங்க! இன்னைக்கு உங்களைப் பார்க்க வரதா சொன்னாருங்க"



"உம் வரட்டும் வரட்டும்! பின்ன சும்மாவா? அவன் மகனை எமன் வாயில இருந்து மீட்டுக்கொடுத்திருக்கேன் இல்ல? நன்றி சொல்ல வரானாமா?" என்று எகத்தாளமாக சிரித்துக்கொண்டார்.



"ஐயா! நானும் உங்க கிட்ட பத்து வருஷமா இருக்கேங்க! நீங்க அப்பப்ப வெளியூர் போயிட்டு பல பெரிய பணக்காரங்களுக்கு பெரிய பெரிய வேலையெல்லாம் செய்து கொடுக்கறீங்க. ஆனா, ஏன் புலிப்பட்டிக்கே திரும்ப வந்துடறீங்க ஐயா? சென்னையில இருந்தா இன்னமும் நிறைய சம்பாதிக்கலாம் இல்ல?"



முதலில் கோபத்தில் சிவந்த அவரது விழிகள் பரமனின் அப்பாவி முகத்தைப் பார்த்தத்தும் தணிந்தன.



"எனக்கு அது தெரியாதா பரமா? ஆனா எனக்கு வேலை இங்க தான் இருக்கு. நான் செண்பகவல்லியோட வாரிசுக்காகக் காத்துக்கிட்டு இருக்கேண்டா! அவ வந்து அதை எடுத்துக்கொடுக்கணும். அப்புறம் அவளை பலி கொடுத்து நான் நினைச்சதை அடைஞ்சிடுவேன். அப்புறம் எனக்கு இந்த பூமியில அழிவே கிடையாதுடா" என்று சொல்லி பயங்கரனாகச் சிரித்தார் ரணதீரன்.



அவரது பதிலில் ஆடிப்போனான் பரமன்.



"இவரு என்ன சொல்றாரு? செண்பகவல்லி யாரு? அவங்க வாரிசுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்? அவங்க வந்து எதை எடுத்துக்கொடுக்கணும்? அவங்களையே பலி கொடுப்பேன்னு வேற சொல்றாரே? இதெல்லாம் எங்கே போய் முடியும்?" என்று யோசித்தான்.



"ரொம்ப யோசிக்காதே பரமா! உன்னோட வேலை நான் சொல்றதை செய்யுறது தான். அவ்வளவு தான் உனக்கு விதிக்கப்பட்டிருக்கு. அதை மீறினா நீ நல்லா இருக்க மாட்டே" என்று சிரித்தபடியே சொன்னாலும் அவரது கண்களில் தெரிந்த அனல் அவனை மிரட்டியது.



அவர்கள் பேசிக்கோண்டிருக்கும் போதே படகு போல ஒரு பெரிய கார் வீட்டு வாசலில் வந்து நின்றது. அது தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான ராஜலிங்கத்தின் கார். காரிலிருந்து இறங்கு முன் மிகவும் பணிவாக தோள் துண்டை எடுத்து இடுப்பில் கட்டியபடி இறங்குபவரை ஆச்சரியத்துடன் பார்த்தான் பரமன். பத்து கம்பெனிகள் கொடிக்கணக்கில் சொத்து எனக் கொழிக்கும் ஒரு கொடீசுவரர் தன் குருவிடம் இப்படிப் பணிவு காட்டியது அவனுக்கு வியப்பாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.



"கும்புடறேன் சாமி" என்றார்.



"வா! ராஜலிங்கம்! நல்லா இருக்கியா? இனி உன் மகனுக்கு எந்த குறையும் இல்ல! நூறு வருஷம் வாழ்வான்" என்றார்.



"சாமி எனக்கு அது போதுங்க!" என்றவர் சைகை காட்ட டிரைவர் பெரிய தாம்பாளத்தை எடுத்து வந்தார். அதில் பல வகையான பழங்கள் வெற்றிலை பாக்கு அதோடு ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்றும் இருந்தது. எல்லாம் 2000 ரூபாய் நோட்டு. எப்படியும் ஒரு லட்சம் இருக்கும் என எண்ணிக் கொண்டான் பரமன். அவனுக்கு மூச்சு முட்டியது. இத்தனை பணத்தை அவன் ஒரு சேர பார்த்ததே இல்லை.



"சாமி! நீங்க என்னை தப்பா நினைக்கக் கூடாது! நான் என் மகன் உயிருக்கு குடுக்குற விலைன்னும் நீங்க நினைக்கக் கூடாது. ஏதோ என்னால முடிஞ்ச காணிக்கை 10 லட்ச ரூபா தான் வெச்சிருக்கேன். ஏத்துக்கிட்டு என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க சாமி" என்றார்.



மூச்சு விடவும் மறந்து நின்றிருந்தான் பரமன். பத்து லட்சமா? இந்த ஜென்மத்துல் இத்தனை காசை பார்ப்பது சாத்தியம் தானா? என அதையே உற்றுப் பார்த்தபடி இருந்தான்.



"பணத்தாலே என்னை வாங்க முடியாது ராஜலிங்கம்! 6000 ரூவா எனக்குப் போதும். மீதியை கல்யாணமாகாத ஏழைபெண்கள் கல்யாணத்துக்கு என்பேரைச் சொல்லி தானமாக் கொடுத்துடு. ஆனா இது எல்லாத்துக்கும் மேல நான் சொல்றபடி தான் நீ கேப்பேங்குற உத்திரவாதத்தை நீ தரணும்" என்றார் ரணதீரன்.



பரமனுக்கு ஐயோ என்றிருந்தது. வலிய வரும் ஸ்ரீதேவியை இப்படி வேண்டாம் என்கிறாரே என்று இருந்தது. மூன்று 2000 ரூபாய்த்தாள்களை எடுத்துக்கொண்டு மீதத்தை அவரிடமே கொடுத்தார்.



"நீங்க எங்களுக்கு தெய்வம் சாமி! நீங்க என்ன சொல்றீங்களோ அதைக் கேக்க வேண்டியது எங்க கடமை" என்றார் ராஜலிங்கம்.



"நல்லது! இதோ இந்த ஃபோட்டோவைப் பார்த்தியா?"



"பார்க்குறது என்ன சாமி! எங்க ஆள்கள்ல ஒருத்தன் போய் தானே ஃபோட்டோவே எடுத்தான். யாரு சாமி இந்தப் பொண்ணு? "



"நீ கேக்குற கேள்விக்கு ஒரு வரியில பதில் சொல்ல முடியாது ராஜலிங்கம். பல யுகத்துக் கதை இது. இதுல என் பூர்வ ஜென்மம் வரையில இருக்கும் வரலாறு இது. என் குரு நாதர் கோரக்க சித்தர் அருளால நான் கண்டுபிடிச்சேன்" என்றார். அவரது கண்கள் எங்கோ வெறித்தன.



ராஜலிங்கத்துக்குக் கேள்விகள் குடைந்தன.



கோரக்க சித்தரா? அவர் வாழ்ந்தது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அல்லவா? சாமிக்கு வயசு 65 தானே இருக்கும்? பின்ன எப்படி கோரக்க சித்தர் இவருக்கு குரு?? ஒண்ணுமே புரியலையே?" என நினைத்துக்கொண்டார்.



அவரது கேள்விக்கு விடையே போல பேச ஆரம்பித்தார் ரணதீரன்.



"சித்தர்கள் ஜீவ சமாதி ஆனாலும் அவங்க ஆன்மா அழியாது ராஜலிங்கம். அவர் சூட்சும உருவத்தோட தான் எனக்கு இந்த அதர்வண வேதம் மற்றும் அஷ்டமா சித்து இவைகளைக் கற்பித்தார். அதோட பூர்வ ஜென்ம பலனும் இருந்தது"



மீண்டும் வணங்கினார் அந்தத் தொழிலதிபர்.



"சாமி இந்தப் பொண்ணு யாருன்னு..."



"இவ தான் உன் மருமக" என்றார் அசராமல்.



பேச நா எழாமல் தத்தளித்தார் அந்தத் தொழிலதிபர்.



"என்ன சாமி சொல்றீங்க? கொஞ்சம் விளங்கும்படியா சொல்லுங்களேன்" என்று கெஞ்சினார்.



"புரியலையா? இவளைத்தான் உன் மகனுக்கு கட்டி வையுன்னு சொல்றேன்" என்றார் மீண்டும் அழுத்தமாக.



"சாமி சாமி! இவ ரொம்ப சுமாரான வசதி உள்ள குடும்பத்தை சேர்ந்தவ சாமி! வெறும் டிகிரி தான் படிச்சிருக்கா! என் மகன் ஃபாரின்ல போயி படிச்சுட்டு வந்தவன் சாமி! அவனுக்கு இந்தப் பொண்ணை எப்படி சாமி?" தயங்கினார் அவர்.



"நீ எனக்கு வாக்குக் கொடுத்திருக்கே! அதை நினைப்பில் வெச்சுக்கோ! அதை மீறி நடந்தா நான் என்ன செய்வேன்னு உனக்குத் தெரியும் இல்ல? உயிரைக் காப்பத்தத் தெரிஞ்சவனுக்கு எடுக்கவும் தெரியும்" என்றார் அலட்சியமாக.



உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டியது அவருக்கு.



"சரி சாமி! நீங்க சொன்னீங்கன்னு சொல்லி நாளைக்கே பொண்ணு கேட்டுடறேன்" என்றார்.



"அது தான் கூடாது! என் பேரோ புலிப்பட்டி கிராமத்துப் பேரோ எக்காரணம் கொண்டும் கல்யாணம் முடியற வரையில் உன் வாயில வரக்கூடாது. உன் மகன் எங்கேயோ வெச்சி அந்தப் பொண்ணைப் பார்த்தான். கட்டுனா அவளைத்தான் கட்டுவேன்னு ஒத்தைக் கால்ல நின்னான்னு சொல்லணும். புரியுதா"



"சரி சாமி" பலியாடு மாதிரி தலையாட்டினார் அவர்.



"இன்னும் பத்தே நாள்ல கல்யாணம் நடக்கணும்"



"பத்து நாள்லயா?"



"ஆமா! கவலைப் படாதே! உன் ஸ்டேட்டசுக்குத் தகுந்த பொண்ணாப் பார்த்து சீக்கிரமே உன் மகனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணும் போது ரொம்பப்பெருசா செஞ்சிடலாம் என்ன?"



ராஜலிங்கத்துக்கு மனதில் கிலி அதிகரித்துக்கொண்டே போனது. ரணதீரன் பேசுவது எல்லாமே வில்லங்கமாகப்பட்டது அவருக்கு. மிகப்பெரிய தொழிலதிபர் தான். எத்தனையோ சிக்கலான பிரச்சனைகளை அசால்டாக கையாண்டவர் தான். ஆனால் அவரது திறமை சாமர்த்தியம் எல்லாமே ரணதீரனின் முன் செல்லாக்காசாக மாறி விட்டது போன்ற பிரமையில் இருந்தார்.



"என்ன முழிக்கற? இன்னும் நான் பேசி முடிக்கல்ல! கல்யாணம் முடிஞ்சப்புறம் முத ராத்திரி நடக்கக் கூடாது. அது ரொம்ப முக்கியம் என்ன புரியுதா?"



வாய் உலர்ந்து போனது ராஜலிங்கத்துக்கு. பயப்பந்து ஒன்று உருண்டு வந்து தொண்டையில் அடைத்தது.



"சாமீ..."



"ஆமாடா! உன் மருமக அதான் இந்தப் பொண்ணு, அவ கழுத்துல தாலி இருக்கணும் ஆனா கன்னி கழிஞ்சிருக்கக் கூடாது. அந்த நிலையில நீ அவளை எங்கிட்டக் கூட்டிக்கிட்டு வரணும். "



ரணதீரனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அம்பாக மாறி ராஜலிங்கத்தைத் துளைத்தன. அவரது எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டதைப் போல பேசினார் ரணதீரன்.



"நீ நினைக்குறா மாதிரி பெண் சுகத்துக்கு ஆசைப்படும் கேவலமான ஆசாமி நான் கிடையாது. என்னால உன் மருமக கற்புக்கு ஒரு பங்கமும் வராது. இது என் குருநாதர் கோரக்கர் மேல ஆணை" என்றார்.



சற்றே முகம் தெளிந்தது.



"கல்யாணத்தை எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாம நடத்து. கேட்டா மாப்பிள்ளைக்கு அதான் உன் மகனுக்கு ஏதோ தோஷம்னு சொல்லு! நானும் உன் கூட வருவேன் ஆனா எனக்கு இங்க முக்கியமான வேலை இருக்கு" என்றார்.



"சரி சாமி" என்றார் ராஜலிங்கம்.



"நீ இப்பக் கிளம்பு! நான் சொன்னதையெல்லாம் நல்லா நினைவுல வெச்சிக்கோ! சின்ன தவறு கூட வந்துடக் கூடாது. ஜாக்கிரதை" என்று எச்சரித்தார்.



மன முழுக்க குழப்பமும் பயமும் இருந்தன ராஜலிங்கத்துக்கு. எத்தனையோ கேள்விகள் மனதில் ஆடின. ஆனால் எதற்கும் குரு விடை சொல்ல மாட்டார் எனத் தெரிந்து போனதால் அவரை வணங்கி விட்டு புறப்பட்டார்.



"எப்படியோ! பெண் பார்க்க லட்சணமாகத்தான் இருக்கிறாள். புத்திசாலியாகவும் இருக்கிறாள். எனக்கு மருமகளா வந்த பிறகு தொழில் முறைகளை சொல்லிக்கொடுத்து விட்டால் போதும். ஆனால் ஏன் முதலிரவு நடக்கக் கூடாது என்றார்? அதோடு இன்னொரு கல்யாணம் பண்ணும் போதுன்னு ஒரு கொக்கி போட்டாரே அதுக்கு என்ன அர்த்தம்? குரு நாதர் மேல் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார் அதனால் இந்தப் பெண்ணின் கற்புக்கு பங்கம் இல்லை" என்று ஏதேதோ நினைவில் ஆழ்ந்தபடி சென்னையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தார் ராஜலிங்கம்.



இந்தப் பெண்ணின் கற்புக்குத்தான் என்னால் பங்கம் வராது என்று சத்தியம் செய்தேனே அன்று உயிருக்கு பங்கம் வராது எனச் சொல்லவில்லையே? என்று கேட்டு சத்தமாக சிரித்தார் ரணதீரன். அவரைக் கலவரமாகப் பார்த்துக்கொண்டிருந்தான் பரமன்.
 
அடப்பாவி இது என்ன
அந்த பெண்ணை பலி
குடுக்க ப் போறாங்களா
 
Top