Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஓவியப்பாவை 17....

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 17.



காலை உணவு முடிந்து ரணதீரனைக் கண்டு வரலாம் என புறப்பட்டான் அருண். ராகுலும் ஸ்வேதாவும் கண்டிப்பாக தன்னுடன் வரக்கூடாது என்று சொல்லி விட்டான். அவனது திட்டம் புரிந்த மற்ற இருவரும் சரி என்றனர். ரணதீரன் வீட்டுக்கு வழி கேட்டதும் மாலாவின் முகம் மாறியது. ஆனாலும் சொல்லத் தயங்கவில்லை. அவளிடம் எல்லாவற்றையும் பிறகு விவரமாகச் சொல்லலாம் என எண்ணியபடியே நடந்தான்.



ரணதீரன் வீட்டு வாசலில் இருந்த வேலைக்காரன் அவனை அமரச் சொன்னான். ரணதீரன் பூஜையில் இருப்பதாகவும் சற்று நேரத்தில் வந்து விடுவார் என்றும் தெரிவித்தான்.



சிறிது நேரம் பொறுத்து வந்தவன் "வா தம்பி! சொன்னபடியே கூட்டிக்கிட்டு வந்துட்டியே? உங்கப்பா வரலையா?" என்றான் எடுத்த எடுப்பில்.



"நான் வந்து என்னை எப்படி...?" என்று திணறினான் அருண்.



ஹா ஹா என்று பெரிதாகச் சிரித்தான் அந்த மந்திரவாதி.



"ஜாதகத்தை வெச்சே அவன் உருவம் எப்படி இருக்கும்னு கணக்குப் போடத் தெரிஞ்சவன் நான். எங்கிட்டயா?" என்று பூடகமாக சிரித்தான்.



"மன்னிச்சுக்குங்க சாமி! நீங்க சொன்ன பொண்ணு வந்திருக்காங்க. அம்மாவுக்கு உடம்பு சரியில்ல அதனால அப்பாவாலயும் வர முடியாமப் போயிட்டுது" என்றான்.



"இருக்கட்டும் இருக்கட்டும். உங்க கூட வந்த அந்தப் பையன் யாரு?" என்றான் அதிரடியாக.



"அவன் ஸ்வேதாவோட தம்பி"



"அவனைக் கேக்கல்ல! இன்னொருத்தன்."



இந்தக் கேள்விக்கு அவன் தயாரில்லாததால் திகைத்தான்.



"வந்து அவரு என் ஃபிரெண்டு" என்றான். நமுட்டுச் சிரிப்புன் சிரித்தான் ரண தீரன்.



"சரி! நான் சொல்றபடி செய்யி. இன்னைக்கு வியாழக்கிழமை. வெள்ளிக்கிழமை ராத்திரி சுமார் பத்து மணிக்கு நீயும் உன் மனைவியும் மட்டும் வரணும் அரண்மனைக்கு. கூட உன் நண்பன் உன் மனைவி குடும்பம் எதுவும் வரக்கூடாது. இது ரொம்பவும் முக்கியமான பூஜை. அதனால தான் சொல்றேன்" என்றான்.



தலையை ஆட்டி விட்டுப் புறப்பட்டான் அருண். அவன் சென்றதும் தன் உதவியாளனான பரமனை அழைத்தான்.



"என்ன ஐயா?"



"எனக்கு சில நிமித்தங்கள் தெரியுது. இப்ப வந்துருக்குறது அருணோட நண்பன் இல்ல. அவன் யாருன்னு என்னால அனுமானிக்கவே முடியல்ல. அதுவே விபரீதமாப் படுது. அதோட இத்தனை நாள் இல்லாமல் வசந்த மாலையோட நடமாட்டமும் தெரியுது. " என்றான் ரணதீரன்.



பூர்வ கதை முழுவதும் பரமனுக்குத் தெரியும் என்பதால் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தான்.



"நான் சொன்னபடி நாளைக்கு ராத்திரி அவன் அந்தப் போண்ணை கூட்டிக்கிட்டு வருவான்னு எனக்கு நம்பிக்கையில்ல" என்றான்.



"அப்ப என்ன செய்யப் போறீங்க சாமி?"



"என்னை மடையன்னு நெனச்சுட்டாங்க அவங்க! விக்கிரமாதித்தனோட காளி சிலையை பூஜை செய்ய இவங்களுக்கு என்ன தகுதி இருக்கு? அது மட்டும் எனக்குக் கெடச்சா இந்த நாட்டையே ஆட்டி வெக்க என்னால முடியும். கிறுக்கனுங்க! அதோட மகிமை தெரியாம விளையாடுறானுங்க" என்றான். அவனது கண்கள் சிவந்து பார்க்கவே பயமாக இருந்தது பரமனுக்கு.



"பரமா! இப்ப நான் ஒரு யட்சிணி பூஜை செய்யப் போறேன். அதுல எனக்கு எல்லாமே தெரிஞ்சிரும். அப்புறம் நான் என்ன சொல்றேனோ அதை அப்படியே நீ செய்யி. உனக்கும் நல்ல உயர்வு வரும்" என்றான் ரணதீரன்.



"சாமி! எனக்கு நல்ல வீடு, வேளா வேளைக்கு வடிச்சுப் போட பொண்டாட்டி இது கிடைக்குமா?" என்றான் பாவமாக. அட்டகாசமாக சிரித்தான் ரணதீரன்.



"இதெல்லாம் இந்த உஜ்ஜையினி மகாகாளிக்கு ஒரு பொருட்டா? அந்த வசந்தமாலையையே உனக்கு கட்டி வெச்சிடுறேன். தினமும் ஒரு தங்கக்காசு உனக்குக் கிடைச்சா போதாது?" என்றான் ரணதீரன்.



வசந்த மாலை, தினம் ஒரு தங்கக்காசு என்றதும் பேராசையால் பரமனின் முகம் மின்னியது.



"நான் என்ன செய்யணும் சொல்லுங்க சாமி" என்றான்.



"இன்னும் ஒரு மணி நேரத்துக்கு எனக்கு இடைஞ்சல் எதுவும் இல்லாமப் பார்த்துக்க! அப்புறம் நீ என்ன செய்யணும்னு சொல்றேன்" என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் போய் கதவை நன்றாகப் பூட்டிக்கொண்டான் ரணதீரன்.



மண்டை ஓடு, கோழி முட்டை பார்க்கவே பயங்கரமாக இருக்கும் வேரில் செய்த பொம்மை, எலுமிச்சம் பழம், இப்படி பொருட்களை எடுத்து வைத்து இரும்பினால் செய்த பூக்களால் அந்த வேர் பொம்மைக்கு அர்ச்சனை செய்ய ஆரம்பித்தான். மந்திரங்களை வாய் முணுமுணுத்தது. அரை மணி நேரம் சென்றிருக்கும் ரணதீரனின் உடல் வேர்க்க ஆரம்பித்தது. மெல்லிய வெப்பம் அந்தப் பகுதியைச் சூழ்வது போல இருந்தது. பார்த்துக்கொண்டிருக்கும் போதே அந்த வேர் பொம்மை தன் ரத்த சிவப்புக் கண்களைத் திறந்து பார்த்தது.



"என்ன வேண்டும் ரணதீரா? என்னை ஏன் அழைத்தாய்?" என்றது கடுமையாக.



"யட்சிணி! என்னைப் பற்றி தெரியும் அல்லவா உனக்கு? அந்தக் காளி சிலைக்காக நான் ஜென்ம ஜென்மமாய் போராடி வருகிறேன். ஆனால் வெற்றி கிடைக்கவே இல்லை. போன முறை கடைசி நிமிடத்தில் வசந்த மாலையும் மார்த்தாண்டனும் தப்பி விட்டனர். இம்முறை நான் ஏமாறுவதாக இல்லை. உன்னால் எனக்கு சில உதவிகள் ஆக வேன்டும்"



"சொல்"



"வந்திருப்பவர்கள் யார் யார்? அவர்கள் நோக்கம் என்ன? அவர்களுக்கு மந்திர வித்தை தெரியுமா? இவை தான் எனக்குத் தெரிய வேண்டும்"



"சொல்கிறேன் ரணதீரா! ஸ்வேதா இளவரசி செண்பகவல்லியின் வழி வந்தவள் என்பது உனக்குத் தெரியும். அதே போல அருண் தன் மார்த்தாண்டன் என்பதையும் நீ அறிவாய் இல்லையா? "



"எனக்குத் தெரிந்ததை சொல்வதன் நோக்கம் என்ன யட்சிணி?"



வெறுப்பான கண்களால் அவனைப் பார்த்து விட்டு சொல்லலாயிற்று யட்சிணி.



"இப்போது அவர்கள் மாலா எனப்படும் வசந்த மாலையின் பாதுகாப்பில் இருக்கிறார்கள். அருணுக்கும் ஸ்வேதாவுக்கும் இன்னும் திருமணமே நடக்கவில்லை. அது மட்டுமல்ல ஸ்வேதாவின் காதலனான ராகுல் என்பவன் யார் தெரியுமா? அவன் தான் போன ஜென்மத்தில் சேர மன்னனின் தளபதியாக இருந்தவன். ஒரு தலையாக இளவரசியைக் காதலித்தவன். இவர்களில் யாருக்கும் மந்திர வித்தை தெரியாது. ஆனால்…"



"ஆனால் என்ன?"



"இறைவன் அருள் பரிபூரணமாக இருக்கிறது அவர்களுக்கு. அதோடு நீ யார் என்பதையும் அவர்கள் அறிந்து கொண்டு விட்டார்கள். ஆகையால் மிகவும் எச்சரிக்கையாக இரு. ஜல பிரதிஷ்டையில் இருக்கும் காளியை வசந்த மாலையும் மார்த்தாண்டனும் மட்டுமே தான் எடுக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் ஜல பிரதிஷ்டை செய்தவர்கள். வேறு யாரேனும் எடுத்தால் கண்கள் நாவு இவை செயலை இழந்து விடும். "



"உம் தெரியும்! என் பலி பூஜையை காளி ஏற்பாளா? அதைச் சொல்"



"கடவுளர் விஷயங்களைச் சொல்ல எனக்கு அதிகாரம்ம் இல்லை. இதோடு உனக்கு கொடுத்த வாக்கு முடிந்து விட்டது. இனி என்னை அழைத்தாலும் நான் வர மாட்டேன். ஆனால் நீ எச்சரிக்கையாக இரு என்று மட்டும் சொல்வேன்" என்று சொல்லி விட்டு கண்களை மூடியது அந்த பொம்மை. சட்டென அந்த இடமே குளிர்ந்தது.



"என்னை கேவலமாக எடை போட்டு விட்டாய் யட்சிணி. என் அளவு மந்திரம் தெரிந்தவன் வித்தை கைவரப் பெற்றவன் யார் உண்டு? இந்த நாட்டை ஆள தகுதி படைத்தவன் என்னை விட யாருமில்லை." என்று சொல்லி விட்டு எழுந்தான். கவனமாக பூஜைப் பொருளை எல்லாம் எடுத்து வைத்து விட்டு கதவுகளைத் திறந்தான்.



"ஐயா! பூஜை முடிந்ததா?"



"உம்! முடிந்தது! "



"நான் என்ன செய்ய வேண்டும் சாமி?"

"நான் உனக்கு தருவதாகச் சொன்னவை நினைவு இருக்கிறதல்லவா?"



"இருக்கிறது சொல்லுங்க சாமி! அது கிடைக்க நான் என்ன வேணும்னாலும் செய்வேன்"



"ஆங்! அதான் வேண்டியது. இன்று இரவு நீ மாலாவின் வீட்டுக்குப் போ. அங்கே அருண், ராகுல் ஸ்வேதா இருப்பாங்க. அவங்க மேல நான் ஒரு பொடி தரேன். அதை தூவிடு. அந்தப் பொடியோட மயக்கத்துல அவங்க கண்ணே முழிக்க மாட்டாங்க. அதைப் பயன் படுத்திக்கிட்டு ராகுலைப் போட்டுத்தள்ளிடு. ஒரு வசிய மை தரேன். அதை அவங்க முழிச்சுக்குறதுக்கு முன்னால மத்தவங்க புருவத்துல பூசி விடு. அப்புறமா அவங்க நான் எது சொன்னாலும் கேப்பாங்க. அப்புறம் என்ன ஸ்வேதாவுக்கும் அருணுக்கும் கல்யாணம் செஞ்சு வெச்சுட்டு மஞ்சக்கயிறு காயு முன்ன அவளை பலி கொடுத்துருவேன். அவளைக் கொன்னுட்டான்னு அருணை ஜெயிலுக்கு அனுப்பிடுவேன். ராகுலை நீ போட்டுத்தள்ளிட்டா அப்புறம் மாலா உனக்குத்தான்." என்றான் நீளமாக.



ரணதீரன் சொன்னதைக் கேட்க கேட்க ஒரு புறம் பயமாகவும் மறுபுறம் ஆர்வமாகவும் இருந்தது பரமனுக்கு. அவர்கள் ஆவலோடு காத்திருந்த இரவும் வந்தது. அந்தக் கிராமம் எட்டு மணிக்கே அடங்கி விட்டது. இருந்தும் பத்து மணி வரை காத்திருந்து விட்டு கையில் மயக்கப் பொடியோடும், வசிய மையோடும் பதுங்கிப் பதுங்கி சென்றான் பரமன்.
 
Top