Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒற்றை கால் மண்டபம் EPISODE 24

Advertisement

niranjana subramani

Well-known member
Member
24.



மறுநாள் காலை வண்டியில் சரத்தை பார்க்க சதாசிவம் இல்லத்திற்கு ஹர்ஷாவும் கிஷோரும் கிளம்பினர்.

“ மச்சி உனக்கு சதாசிவம் வீடு தெரியுமா??” என கிஷோர் கேட்க

“ ஹம்ம்ம்ஹும் தெரியாது. அதான் தெரிஞ்சுக்க வேலுவை வரசொல்லிருக்கேன்.” என ஹர்ஷா கூறினான்

“ வேலுவா????”

“ ஆமாடா அவன் தானே நமக்கு வண்டிய வாங்கிக்கொடுத்தான். அதான் நாம ரெண்டு பேரும் நேருல பார்த்து வண்டிய கொடுக்க போறோம். அதனால சதாசிவம் வீட்டு முகவரியை சொல்ல சொன்னேன்.

ஆனா வேலு அவனே வந்து வீட்டை காட்டுறேன்னு சொல்லிட்டான்”

“ நீ எப்போடா வேலுகிட்ட பேசுன???” என குழப்பத்துடன் கிஷோர் வினவ

“ காலையில நமக்கு சாப்பாடு சாமி அண்ணே அவன்கிட்ட தானே கொடுத்துவிட்டாங்க.
நீ எங்க அவனை எல்லாம் பார்த்த சாப்பாட்டை மட்டும் பார்த்து சாப்பிட்டு. மறுபடியும் நல்லா தூங்க போய்ட்ட” என ஹர்ஷா கிஷோரை கிண்டல் செய்துகொண்டிருக்கையில் அங்கு வந்த வேலு,

“ ஐயா நான் முன்னாடி சைக்கிள்ள போறேனுங்க. நீங்க என்னைய பின்தொடர்ந்து வரிங்களா??” என கூற

“ அதுசரி ஏன் வேலு நீங்க எப்போ சைக்கிள ஓட்டி, உங்க வேகத்துக்கு நாங்க வண்டிய ஓட்டி, எப்போ நாம சதாசிவம் சார் வீட்டுக்கு போறதாக்கும்” என சலிப்புடன் கிஷோர் கேட்க

“ ஐயா……” என வேலு எதோ கூற வருகையில்

“ நீங்க போங்க வேலு நாங்க உங்க பின்னாடியே வரோம்” என ஹர்ஷா வேலுவிடம் கூறிவிட்டு,

“ ஏன்டா நாம என்ன NH ரோட்லய போகப்போறோம். இந்த ஊருல இருக்குற ரோடு எல்லாம் ஒருவழிப்பாதை மாதிரித்தான் இருக்கு.

பத்தாததுக்கு நாமளே நினைச்சாலும் வேகமா போகமுடியாது. ஏன்னா இங்க இருக்குற ரோடு அப்படி பள்ளம் மேடுமா இருக்கு. நீ பேசாம வா எனகூட” என கிஷோரிடம் பொரிந்து தள்ளிவிட்டு வண்டியை எடுத்தான். பின் வேலுவை தொடர்ந்து சதாசிவம் வீட்டை அடைந்தனர்.

“ ஐயா இதுதானுங்க சதாசிவம் ஐயா வீடு” என வேலு ஹர்ஷாவிடம் கூற

“ சரி வேலு நாங்க பார்த்துக்குறோம். நீங்க இப்போ கிளம்புங்க. அப்புறம் சிரமம் பார்க்காம எங்களுக்கு உதவுனதுக்கு ரொம்ப நன்றி வேலு” என ஹர்ஷா கூற

“ ஐயா!!!.... என்ன நீங்க நன்றி எல்லாம் சொல்லிக்கிட்டு….
எங்க பண்ணையார் ஐயா வீட்டுக்கு வந்துருக்கீங்க. உங்களுக்கு நாங்க செய்யாம வேற யாருங்க செய்வாங்க. சரி நான் கிளம்புறேனுங்கய்யா” என வேலு விடைபெற்று கிளம்பிச்சென்றான்.

“ ஏன் மச்சி இது ரோடா இல்ல வேற எதுவுமாடா???.. ஊருக்குள்ள வர வர ரொம்ப மோசமா இருக்கு”
என கிஷோர் புலம்பிக்கொண்டிருக்கையில்

சத்தம் கேட்டு வாசலுக்கு வந்த ஜெகதீஸ்வரி, ஹர்ஷா மற்றும் கிஷோரை கண்டு,

“ நீங்க
ரெண்டு பேரும் யாரு தம்பி????. இங்க என்ன செய்றீங்க???” என ஜெகதீஸ்வரி வினவ

“ நாங்க சரத்த பார்க்க வந்துருக்கோம்” என ஹர்ஷா ஜெகதீஸ்வரியிடம் கூற

“ சரத்தா!!!!!.... நீங்க ரெண்டு பேரும் சர்த்தோடா நண்பர்களா????”

“ இல்லமா நாங்க ஆதிலிங்கம் சார் வீட்டுல தங்கிருக்கோம். சரத்தோட வண்டிய நேத்து வேலு வாங்கிட்டு வந்தாப்புல. எங்களுக்கு” என ஹர்ஷா கூறிக்கொண்டிருக்கையில்

“ ஓ!!!!.. ஆதி அண்ணே வீட்டுல வெளி
ஊருல இருந்து தங்கிருக்க தம்பிக நீங்க ரெண்டு பேரும்தானா???”

“ ஆமா நாங்கதான்”

“ சரிப்பா உள்ள வாங்க. சரத் உள்ள தான் இருக்கான். நான் போய் கூட்டிட்டு வரேன்” என ஜெகதீஸ்வரி கூறி ஹர்ஷா மற்றும் கிஷோரை வீட்டினுள் அழைத்து வந்து அமர வைத்துவிட்டு சரத்தை அழைக்க அவனுடைய அறைக்கு சென்று விட்டார்.

“ ஏன் மச்சி இந்த அம்மா நம்மள இப்படி பாசமா வீட்டுக்குள்ள கூப்டுருக்கு. ஆனா இவுங்க பையன தான் விசாரிக்க வந்துருக்கோம்ன்னு தெரிஞ்சா நம்மள
ரொம்ப மோசமா அடிச்சு வீட்டைவிட்டு துரத்திடுமோ” என கிஷோர் ஹர்ஷாவிடம் முணுமுணுக்க

“ டேய் நீ செத்த நேரம் சும்மா இரு” என ஹர்ஷா கூறவும் சரத் வருவதற்கும் சரியாக இருந்தது.

அங்கு வந்த சரத் ஹர்ஷா மற்றும் கிஷோரை கண்டு,

“ சொல்லுங்க என்கிட்ட என்ன கேட்குறதுக்கு இப்போ என்னைய பார்க்க வந்துருக்கீங்க???.” என சரத்
வினவ

“ நாங்க உங்ககிட்ட பேசத்தான் வந்துருக்கோம்ன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?????....” என ஹர்ஷா வினவ

“ நேத்தே அப்பா எனக்கு ஆஸ்பத்திரில நடந்த எல்லாத்தையும் சொல்லிட்டாங்க. அதோட வண்டிய நீங்க திரும்ப குடுக்க வந்துருந்தா சாவிய அம்மாகிட்டையே குடுத்துட்டு போயிருக்கலாம்.

என்னைய பார்க்கணும்ன்னு சொல்லி நீங்க இப்போ காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சரி சொல்லுங்க என்ன பேசணும் என்கிட்ட” என சரத் கூற

“ சரிதான் நாங்க உன்கிட்ட முக்கியமான விஷயம்தான் பேசவந்துருக்கோம். ஆனா கொஞ்சம் தனியா பேசலாமா???” என ஒரு மெச்சுதலான பார்வையோடு ஹர்ஷா கேட்க

“ ஓ!!!... வாங்க பின்னாடி தோட்டம் இருக்கு நாம அங்க இருந்து பேசலாம்” என சரத் கூறி ஹர்ஷா மற்றும் கிஷோரை அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்றான்.

தோட்டத்தில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் மூவரும் அமர,

“ சரத் நான் நேரடியா விஷயத்துக்கு வரேன். உங்களுக்கும் மயிலரசி இறப்புக்கும் தொடர்பு இருக்குமான்னு எங்களுக்கு சந்தேகமா இருக்கு” என ஹர்ஷா கேட்க

“ என்ன!!!.... எதை வச்சு எனக்கு நீங்க சம்மந்தம் இருக்கும்ன்னு நினைக்குறீங்க????.. அதோட மயிலரசி இறந்தது தற்கொலைதானே. அதுல நான் எப்படி சம்மந்தம் ஆகிருப்பேன்????....
அதை கொலைன்னு சொல்றதே சுத்த பைத்தியக்காரத்தனம்.

அந்த நிலவரசனும் வனிதாவும் தான் அப்படி சொல்லிக்கிட்டு தெரியுறாங்கன்னா. நீங்களும் அதை நம்பி விசாரிக்குறேன்னு என் வீட்டுக்கே வந்து என் மேலையே பழி போடுறீங்க” என சரத் அதிர்ச்சியாகவும் கோவமாகவும் பதில் கூற

“ இல்ல சரத் நிச்சயம் மயிலரசி இறப்பு தற்கொலையா இருக்காது. அதோட மயிலரசி அம்மா தில்லைநாயகிகிட்ட நீங்க நிலவரசனுக்கும் மஞ்சரி அதாவது உங்க தங்கைக்கும் நிச்சயம்ன்னு பொய்ச்சொல்லி சண்டை போட்டிருக்கீங்க. அதேமாதிரி மயிலரசிகிட்டையும் பேசி பார்த்து அந்த பொண்ணு நிலவரசனை விட்டு பிரிய ஒத்துவரலைன்னு கொலை பண்ணிருக்கலாம்”
ஹர்ஷா தன் சந்தேகத்தை கூற

“ இல்ல மயிலரசி இறப்புக்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. நீங்க சொன்ன மாதிரி நான் தில்லைநாயகிகூட சண்டைபோட்டது என்னமோ உண்மைதான்.

ஆனா அதுக்கு அடுத்த நாளே எங்க அப்பா ஆதி மாமாகிட்ட என் தங்கச்சிக்கு நிலவரசனை மாப்பிள்ளைக்கேட்டு கல்யாணம் பேச போனாங்க. அதனால எப்படியும் நிலவரசனுக்கும் என் தங்கச்சிககும் கல்யாணம் ஆகிடும்ன்னு நினைச்சேன்.

ஆனா நானே எதிர்பார்க்காதது மயிலரசியோட தற்கொலைதான். அதோட நான் இதுவரைக்கும் மயிலரசிகிட்ட பேசினது கூட கிடையாது”
என சரத் பிசிறு இல்லாத குரலில் கூறினான்.

“ ஓ!!!..” என ஹர்ஷா நம்பாத தன்மையுடன் பார்க்க அந்த பார்வையை கண்ட சரத்,

“ நீங்க நம்பலைன்றதுக்காக ஒரு தற்கொலையை கொலைன்னு சொல்லி. அதையும் நான்தான் செஞ்சுருப்பேன்னு நீங்க சந்தேகபட்டிங்கன்னா. அதுக்கு நான் பொறுப்பாக முடியாது.

உங்ககிட்ட வலுவான ஆதாரம் எதுவும் இருந்தா என்கிட்டே பேசுங்க, விசாரிங்க இல்லைனா கிளம்புறீங்களா எனக்கு வேலை இருக்கு”
என எரிச்சலுடன் சரத் கூற

“ ஆதாரம் தானே சரத்???. கூடிய சீக்கிரம் கிடைக்கும். நீங்க சொன்னமாதிரி அது கிடைச்சவுடன் நான் மயிலரசி இறப்பு பத்தி உங்ககிட்ட விசாரிக்குறேன்.

ஆனா நான் கிளம்புறதுக்கு முன்னாடி எனக்கு இன்னொரு கேள்வி மட்டும் இருக்கு

வனிதாவுக்கு நடந்த கொலை முயற்சி பத்தி என்ன நினைக்குறீங்க. உங்களுக்கு யாரு மேலையாவது சந்தேகம் இருக்கா???” என ஹர்ஷா நிதானமாக கேட்க

“ வனிதா தற்கொலைதான் பண்ண பார்த்துருக்கான்னு இத்தனை நாள் நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா நேத்துதான் அப்பா சொன்னாங்க. அது கொலை முயற்சின்னு.

அவ சும்மா சொல்லிருப்பா சார். யாரு என்ன காரணத்துக்கு அவளை கொலை பண்ண போறாங்க???”
என அலட்சிய குரலில் சரத் கூற

“ ஏன்???.... நீங்ககூட செய்ய முயற்சி பண்ணிருக்கலாம்” என ஹர்ஷா
கூறினான்.

அதனை கேட்ட சரத் பத்தட்டமாகவும் கோபமாகவும்,

“ என்ன????.. நானா!!!!.... என்ன சார் இந்த ஊருல எது நடந்தாலும் நான்தான் காரணமா???. மயிலரசி தற்கொலைக்கு நான்தான் காரணமுன்னு சொன்னிங்க. சரி நான் அதுல சில வேண்டாத வேலையெல்லாம் பார்த்தேன்.

அதனால என் மேல சந்தேகப்படுறீங்கன்னு பொறுமையா பதில் சொன்னா. இந்த வனிதா திமிரெடுத்து தற்கொலை பண்ண பார்த்துட்டு. இப்போ இல்ல அவளை யாரோ கொலை பண்ண பார்த்துருக்காங்க. அது ஏன் நானா இருக்க கூடாதுன்னு என்கிட்டே கேள்வி வேற கேட்குறீங்க” என கத்தினான்.

“ நீங்க இப்படி கோவமா கத்தி பேசுறதால உண்மை இல்லைன்னு ஆகிடாது Mr.sarath”
என ஹர்ஷா நிதானமாக கூற

“ எதைவச்சு சார் வனிதாவை நான் கொலை பண்ண பார்த்தேன்னு சொல்றீங்க???. உங்ககிட்ட காரணம் இருக்கா???...” என சரத் கேட்க

“ ஏன் இல்லாம. நீங்க வனிதாவை ரொம்ப விரும்பிருக்கலாம். அதனாலதான் ஆதி சார் கிட்ட பொண்ணு கேட்டு கல்யாணம் வேலையும் ஆரம்பிச்சுருக்கீங்க. ஆனா இடையில வனிதா கதிர் காதல் விஷயம் தெரிஞ்சவுடன், வேற வழி இல்லாம விசித்ராவை கல்யாணம் செய்ய சம்மதிச்சுருப்பீங்க.

ஆனா காதல் தோல்வியில நீங்க வனிதாவை கொல்லமுயற்சி செஞ்சுருப்பிங்க” என ஹர்ஷா தொடர்ந்து காரணத்தை கூற

‘ என்னடா நான் நேத்து இந்த காரணத்தை சொன்னதுக்கு. சரத் வனிதாவை காதலிச்சுருக்க வாய்ப்பு இல்ல. வேற எதோ காரணம் இருக்குன்னு சொல்லிட்டு. இப்போ அதே காரணத்தை சரத் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கான்’ என கிஷோர் மனதில் எண்ணிக்கொண்டு ஹர்ஷாவை காண,

ஹர்ஷா கிஷோரைப்பார்த்து கண்ணடித்தான். அதனை கண்ட கிஷோர் ‘ ஓ!!!!.. சரத்கிட்ட உண்மைய வாங்க சும்மா சொல்லிக்கிட்டு இருக்கானா’ என எண்ணிக்கொண்டிருக்கையில்

“ என்ன???... நான் வனிதாவை காதலிச்சேனா!!!... இல்ல இல்லவே இல்ல சார்” என உடனடியாக மறுத்தான் சரத்

“ என்ன சரத் நீங்க இப்படி சொல்றீங்க. ஒரு பொண்ணை உங்களுக்கு பிடிக்காம எப்படி உங்க வீட்டுல பொண்ணுக்கேட்டு போனாங்க???” என ஹர்ஷா கேட்க

“ அது…… அது….” என சரத் திணறினான்

“ சொல்லுங்க. ஒன்னு உங்களுக்கு பொண்ணை பிடிச்சுருக்கணும். இல்ல அந்த பொண்ணு மூலமா எதாவது உங்களுக்கு காரியம் நடக்கணும். இல்லையா???.

அதனாலதான் வனிதா இல்லைனாலும் பரவா இல்லைன்னு உடனே விசித்திராவை கல்யாணம் பண்ண சம்மதிச்சுருக்கீங்க. நான் சொல்றது சரிதானே சரத்????...” என மீண்டும் ஹர்ஷா கேட்க

சரத் எதுவும் கூறாது அமைதியாக இருந்தான்.

“ இவ்வளவு நேரம் கத்திக்கிட்டு இருந்திங்க. இப்போ ஒன்னும் சொல்லாம இருக்குறத பார்த்தா ஆதி சார் குடும்பத்தோட நீங்க எதோ ஒரு வகையில தொடர்புல இருக்கனும்ன்னு இந்த கல்யாண ஏற்பாடு நடக்குறாப்புல இருக்கு” என ஹர்ஷா நிறுத்த

“ அது…. அது…. “ என சற்று திணறவிட்டு பின் அமைதியாக தன் விழிகளை மூடி திறந்து பின் ,

“ ஆமாம் சார் இந்த கல்யாணம் ஒரு காரணத்துக்காக தான் நடக்குது” என சரத் மெல்லிய குரலில் கூற

“ ஹ்ம்ம்….” என ஹர்ஷா சற்றே தன் புருவங்களை தூக்கி கூற

சரத் பெருமூச்சொன்றினை விட்டு,

“ ஆமா சார் வனிதாவை நான் கல்யாணம் செஞ்சுக்க ஒரு காரணம் இருக்கு. அது மஞ்சரி நிலவரசன் கல்யாணம் தான். நிலவரசன் வனிதா சொன்னா எது வேணும்னாலும் செய்வான்.

வனிதாவை நான் கல்யாணம் செஞ்சுக்கிட்டா. எப்போ நிலவரசனுக்கு குணமானாலும் வனிதாவை வச்சு மஞ்சரிக்கும் நிலவரசனுக்கும் கல்யாணம் பண்ணிவைக்கணும்ன்னு நானும் எங்க அப்பாவும் நினைச்சு வனிதாவை பொண்ணு கேட்டு கல்யாணம் ஏற்பாட்டை செஞ்சோம்.

ஆனா திடீர்ன்னு ஆதி மாமா ஒருநாள் வந்து, வனிதா கதிர்ன்னு ஒருத்தனை விரும்புறதா சொல்லி விசித்ராவை கல்யாணம் பண்ண சம்மதமான்னு கேட்டாரு. எங்களுக்கு முதல்ல அதிர்ச்சிதான்.

ஆனா எப்படியாவது ஆதி மாமாவோட நெருங்குன சொந்தம் ஆகணும். அதே நேரம் நிலவரசனுக்கு விசித்ராவை பத்தி தெரிய வரும் போது நிச்சயம் அவ சொன்னாலும் எதுவும் செய்வான்னு நினைச்சோம். அதோட மயிலரசி இல்லாதது எங்களுக்கு சாதகமா போச்சு
.அதான் இந்த கல்யாண ஏற்பாடு” என சரத் கூறி முடித்தான்.

“ ஓ அப்போ நீங்க விசித்ராவை உங்க சுயலாபத்துக்குத்தான் கல்யாணம் செய்ய போறீங்க” என அதுவரை அமைதியாக சரத் ஹர்ஷா சம்பாஷணைகளை கேட்ட கிஷோர் வினவ

“ இல்ல சார் வனிதாவை நான் அப்படி நினைச்சுதான் கல்யாணம் செய்ய பார்த்தேன். ஆனா விசித்ராவோட இந்த ரெண்டு மூணு நாளா பேசுறதுல இருந்து பிடிச்சுதான் கல்யாணம் செய்ய போறேன் சார்” என மிருதுவான குரலில் சரத் கூற

தன் கடிகாரத்தை பார்த்துவிட்டு,

“ ஓ சரி சரத் நாங்க இப்போ கிளம்புறோம். எங்களுக்கு எதாவது சந்தேகம்ன்னா உங்ககிட்ட பேச வரோம். அதேநேரம் உங்களுக்கு எதிரான ஆதாரம் எதுவும் கிடைச்சாலும் உங்ககிட்ட எங்க விசாரணை ஆரம்பிக்கும்” என சற்றே அழுத்தி கூறிவிட்டு

“ அப்படியே உங்க வண்டியையும் எடுத்துட்டுதான் போறோம்” என ஹர்ஷா கூறி சரத்தின் பதிலை எதிர்பாராது கிளம்பினார் ஹர்ஷாவும் கிஷோரும்.

வனிதாவை காண மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கும் வழியில்,

“ ஏன் மச்சி அவசரம் அவசரமா கிளம்பிட்டோம்???” என
கிஷோர் வண்டி ஓட்டிக்கொண்டிருந்த ஹர்ஷாவிடம் கேட்க

“ இல்லடா இப்போவே மணி 10.30. இன்னும் முக்கால் மணி நேரத்துல மருத்துவமனையில பாரவையாளர் நேரம் முடிஞ்சுடும். நாம அதுக்குள்ள வனிதாகிட்ட பேசணும். அதான் வேகமா கிளம்புனேன்” என ஹர்ஷா கூறினான்.

பின் மருத்துவமனைக்கு வந்த ஹர்ஷாவும் கிஷோரும் வனிதாவின் அறைக்கு சென்றனர். அங்கு கட்டிலில் அமர்ந்து எதோ யோசனையில் இருந்த வனிதாவிடம்,

“ வனிதா நாங்க உள்ள வரலாமா???” என ஹர்ஷா அனுமதி கேட்க

திடீரென்ற கேட்ட குரலில் தன் யோசனையில் இருந்து வெளி வந்த வனிதா அறையின் வாசலில் நின்ற ஹர்ஷாவையும் கிஷோரையும் பார்த்து சிறு புன்னகையுடன்,

“ வாங்க சார்” என அழைத்தாள்.

உள்ள வந்த ஹர்ஷாவும் கிஷோரும் அவளிடம் நலம் விசாரித்துவிட்டு,

“ அப்புறம் என்னமா நாங்க வரும்போது எதோ தீவிர யோசனையில் இருந்த???” என கிஷோர் வினவினான்

“ அது ஒன்னும் இல்ல சார் எங்க அப்பா காலையில வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி என்கிட்ட வந்து உங்ககிட்ட மயிலரசியோட இறப்பு பத்தி விசாரிக்க சொல்லிருக்கறதா சொல்லிட்டு போனாரு.

அதான் அதைப்பத்தி யோசிச்சுகிட்டு இருந்தேன். அப்படியே பழைய நினைவுகளுக்கு போயிடுச்சு” என கலங்கிய விழிகளோடு சற்றே கரகரப்பான குரலில் வனிதா கூற.

சிறுது நேரம் எதுவும் கூறாது ஹர்ஷாவும் கிஷோரும் அமைதியாக இருந்தனர்.
பின்

“ ஆமா வனிதா. உங்க அப்பா மயிலரசி இறப்பு பத்தி விசாரிக்க சொன்னாரு. அதான் நாங்களும் விசாரணையில் இறங்கிட்டோம். அதைப்பத்தி சில சந்தேகங்கள் இருக்கு. அதான் உங்ககிட்ட கேட்டுட்டு போகலாம்ன்னு வந்தோம்” என ஹர்ஷா வனிதாவை சந்திக்க வந்ததற்கான காரணத்தை கூறினான்.

“ ஓ!!!... எங்க அப்பா உங்ககிட்ட மயிலரசி இறப்பு பத்தி விசாரிக்க சொல்றதுனால அவரு மேல எந்த தப்பும் இல்லைன்னு நிரூபிக்க பார்க்குறாரு போல.
அதை பார்த்து நான் அவரை நம்பிருவேன்னு நினைக்குறார்.

பாம்பு சட்டையை மாத்துற மாதிரி இவரு நேரத்துக்கு ஏற்றாற்போல அவருக்கு சாதகமா பேசுவாரு.

எப்படியும் இவருக்கு எதிரா எந்த ஒரு ஆதாரமும் இல்லைன்னு நினைச்சுகிட்டு தைரியமா உங்கள விசாரிக்க சொல்லிருப்பாரு.
ஆனா நிச்சயம் உண்மை ஒரு நாள் தெரிய வரும். அப்போ இருக்கு இவருக்கு.

சரி கேளுங்க சார்.
எதோ சந்தேகம்ன்னு சொன்னிங்களே. எனக்கு தெரிஞ்ச விஷயத்தை சொல்றேன்” என வனிதா கூற

“ மயிலரசி இறப்புல உங்க அப்பா, அதாவது ஆதிலிங்க மூர்த்தி எப்படி சம்மபந்தம் பட்டுருப்பாருன்னு நினைக்குறீங்க???..” என ஹர்ஷா கேட்க

“ எங்க அப்பா அண்ணனுக்கும், மயிலரசிக்கும் கல்யாணம் நடக்காதுன்னு சொல்லி மிரட்டிருக்கலாம். அதனால அவ தற்கொலை பண்ணிருக்கலாம்ன்னு நானும் எங்க அண்ணனும் நினைச்சோம் சார். அதான் எங்க அப்பத்தான் மயிலரசிய கொன்னுட்டதா சொன்னோம்”

“ அதாவது தற்கொலைக்கு தூண்டிவிட்டுருக்கலாம்ன்னு???...”

“ ஆமா சார் அதுவும் ஒருவிதத்துல கொலைதானே???...” என வனிதா சற்றே குரல் உயர்த்தி கேட்க

“ சரி நீங்க இன்னொரு விஷயம் சொல்லுங்க. மயிலரசி இடது கை பழக்கமுள்ளவரா இல்ல வலது கை பழக்கமுள்ளவரா???...” என ஹர்ஷா கேட்க

“ வலது கை பழக்கமுள்ளவள் தான் சார். ஏன் கேட்குறீங்க???” என வனிதா குழப்பத்துடன் வினவ

“ அப்போ நிச்சயம் மயிலரசி இறப்பு கொலைதான்” என ஹர்ஷா உறுதியாக கூறினான்.

“ எப்படி மச்சி உறுதியா சொல்ற???” என கிஷோர் கேட்க

“ கிச்சா நீ வலது கை பழக்கமுள்ளவன்தானே???”

“ ஆமாடா”

“ அப்போ நீ ஒருவேளை கையை அறுத்து தற்கொலை பண்ண நினைச்சா எந்த கைய அறுத்துக்க பார்ப்ப???”

“ நான் ஏன்டா சாக பார்க்கணும்???” என கிஷோர் அலற

“ டேய் ஒரு பேச்சுக்கு கேட்குறேன் சொல்லு. கத்தி எந்த கையில பிடிப்ப???” என ஹர்ஷா கேட்க

“ என்னோட வலதுகைல பிடிச்சு இடது கையை கீறிக்குவேன்” என கிஷோர் கூற

“ அப்போ அதேமாதிரி வலது கை பழக்கமுள்ள மயிலரசியும் இடதுகை மணிக்கட்டைதானே அறுத்துருக்கணும். ஆனா காயம் பட்ட கை வலதுகை அப்படின்னா என்ன அர்த்தம்???” என ஹர்ஷா கேட்க கிஷோரும் வனிதாவும் எதுவும் கூறாது ஹர்ஷாவையே நோக்க

ஹர்ஷாவே தொடர்ந்து “ யாரோ மயிலரசிய கத்தியோ இல்ல வேற ஏதோ ஒரு கூர்மையான பொருளை வச்சு தாக்க வந்துருக்காங்க. அப்போ தன்னை தற்காத்துக்க மயிலரசி தன்னோட வலது கையை தூக்கும்போது, அந்த கையில கீறல் விழுந்துருக்கும். அதனால அந்த பொண்ணு இறந்துருக்கணும்.

அதுக்கப்புறம் இதை தற்கொலையா மாத்த அதே கூர்மையான பொருளை வச்சு அந்த ஒத்தை காலு மண்டபத்து தூணுல அரசன் அரசின்னு எழுதிருக்காங்க.
இதுல அந்த கொலைகாரன் கவனிக்காம விட்டது நான் நேத்து சொன்னமாதிரி தூணுல எழுதுனதை அந்த கொலையாளி உயரத்துக்கே எழுதிருக்கான். அதனால மயிலரசி இறப்பு நிச்சயம் கொலைதான்” என உறுதியாக ஹர்ஷா கூறினான்.

“ சரி மச்சி நீ சொல்ற மாதிரி மயிலரசி இறப்பு கொலைன்னா. யாரு செஞ்சுருப்பா???.
எதுக்கு செய்யணும்???. ஆதிலிங்க மூர்த்தி இல்லைன்னு சொல்லி நம்மளையே கண்டுபிடிக்க சொல்லிட்டாரு. சரத்தும் இல்லன்னு சொல்றான்.

சதாசிவம், மஞ்சரி, ஏழுமலைன்னு எல்லாரு மேலையுமே நமக்கு சந்தேகம் வருது. நம்ம கிட்ட வேற எந்த ஆதாரமும் இல்ல அந்த கொலைகாரனை கண்டுபிடிக்குறது” என கிஷோர் புலம்ப

“ டேய் நீ புலம்புறதை நிப்பாட்டு. எதாவது ஒரு தடயம் நிச்சயம் கிடைக்கும்” என கிஷோரிடம் கூறிவிட்டு ஹர்ஷா வனிதாவிடம்,

“ வனிதா எனக்கு இன்னொரு சந்தேகம்” என
கூற

“ என்னது????.... இன்னொரு சந்தேகமா!!!....’ என அலறினான் கிஷோர்.

“ டேய் சும்மா இருடா” என கூறிவிட்டு மீண்டும் வனிதாவிடம்

“ ஒருத்தவங்களுக்கு அதிர்ச்சியில மனநிலை சரி இல்லாம போகுதுன்னா மயிலரசி இறந்தப்பவே நிலவரசனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்கும். ஆனா மூணுமாசம் நல்லா இருந்தவரு எப்படி திடீர்ன்னு மனநிலை பாதிக்கபட்டது???” என ஹர்ஷா கேட்க

“ அது நீங்க சொன்ன மாதிரி எங்க அண்ணன் மூணு மாசம் எங்க யாருக்கூடவும் நல்லா பேசலையே தவிர நல்லா தெளிவா அவரோட வேலையை பார்த்துகிட்டு தான் இருந்தாரு சார்.

அதோட மயிலரசி இறந்த அப்புறம் அரங்கநாதபுரத்துல இருக்க பிடிக்கல அதனால நான் வெளியூருக்கு போய் படிச்ச படிப்புக்கு ஏத்த வேலைய பார்த்துகிட்டு அங்கேயே தங்க போறதா சொன்னாங்க.

ஆனா சொல்லி ஒரு வாரத்துல ஒரு காய்ச்சல் வந்துடுச்சு. அதுக்கு அப்புறம் தான் மனநிலை பாதிக்கப்பட்டு எப்போ பார்த்தாலும் மயிலு மயிலுன்னு புலம்ப ஆரம்பிச்சாரு” என வனிதா கூறி முடிக்க

“ சரி அப்படியே மனநிலை பாதிக்கபட்டாலும் ஒரு நல்ல மருத்துவமனையில வச்சு வைத்தியம் பார்க்காம எதுக்கு வீட்டுலைய வச்சு வைத்தியம் பார்க்குறீங்க???. அதுவும் மூணு வருசமா???......” என தன் அடுத்த கேள்வியை ஹர்ஷா கேட்க

“ அது… அது… எங்க அண்ணனுக்கு வைத்தியம் பார்குறவங்க தான் சொன்னாங்க சீக்கரம் நானே குணபடுத்திடுறேன். இதுக்கு மருந்து அவுங்க கிட்டயே இருக்குன்னு. அதோட அவுங்க ரொம்ப கைராசியான ஆளுவேற.

நிறைய வியாதிகளை குணப்படுத்திருக்காங்க. அதான் அவுங்க பேச்ச நம்பி நாங்க அண்ணனை மருத்துவமனையில சேர்க்கல” என வனிதா மெல்லிய குரலில் கூற

“ அப்படி கைராசியான டாக்டர் யாரும்மா????..” என ஹர்ஷா கேட்க

“ அது… அது… எங்க ஊரு மருத்துவச்சி தில்லைநாயகி”
என வனிதா கூற

“ என்னது???... தில்லைநாயகியா!!!!...” என கிஷோர் அதிர

“ மயிலரசி அம்மா தில்லைநாயகியா???” என ஹர்ஷா கேட்க

“ ஆமாம் சார் அவுங்கதான்” என கூறினாள் வனிதா.

அப்போது அறைக்குள் ஒரு நர்ஸ் நுழைந்து,

“ சார் கொஞ்சம் வெளிய இருக்கீங்களா. நான் பேஷண்டுக்கு ட்ரிப்ஸ் மாத்திட்டு பிபி பார்க்கணும்” என்று கூற ஹர்ஷாவும் கிஷோரும் அறைக்கு வெளியே வந்தனர். அப்போது

“ என்னடா தில்லைநாயகின்னு சொல்லுது இந்த பொண்ணு” என கிஷோர் கூற

“ ஆமா கிச்சா எனக்கு இருக்குற சந்தேகம் தில்லைநாயகிதான் நிலவரசன் மனநிலை பாதிக்கப்பட்டதுக்கு காரணம்னா. நிச்சயம் அவுங்க பொண்ணு இறந்ததுக்கு பழிவாங்கதான் இருக்கும்.

ஆனா எந்த விதத்துல நிலவரசன் மயிலரசி இறப்புக்கு காரணமா இருப்பான்???... ஹ்ம்ம்…..” என சிறிது யோசித்த ஹர்ஷா, “ ஏன் கிச்சா ஒருவேளை நிலவரசன் மயிலரசியை கொன்னுருப்பானோ???” என சந்தேகமாக கேட்டான்.







நிலவரசன்தான் மயிலரசி இறப்புக்கு காரணமா????.....

நிலவரசனின் இன்றைய நிலைக்கு காரணம்

தில்லைநாயகியா????.....

வனிதாவிற்கு நடந்த கொலை முயற்சிக்கு காரணம் யார்???...


சரத் கூறுவது உண்மையா????....
 
எத்தனை கேள்விகள்
யார் அந்த வில்லன் வில்லி
அருமையான பதிவு
 
ரைட்டர் ஜி இந்த கேள்வியெல்லாம் நாங்க உங்களைப் பாத்து கேக்கனும் நீங்க அதுக்கு பதில் சொல்லனும்...நீங்களே கேள்விக்கேட்டா நாங்க எங்க போய் பதிலத் தேட........அப்ப அரசியோட அம்மா அரசியை விட உயரமாவா இருப்பாங்க...இந்த சரத் பதில் சொல்றதப் பாத்தா அவன் ஏற்கனவே யோசிச்சு வச்சு பதில் சொல்ற மாதிரியே இருக்கு....அரசனோட நிலைக்கு வேனா நாயகி காரணமா இருக்கலாம்
 
Top