எழுத்தாளர்கள் மது ஹனி மற்றும் வத்சலா ராகவன் அவர்கள் எழுதிய வான் தழுவிடிலோ வெண்ணிலவே!

Advertisement

ஓம் ஶ்ரீ சாய்ராம்

#கனவுபட்டறை2026
#வான்_தழுவிடிலோ_வெண்ணிலவே
#வித்யா_விமர்சனங்கள்

🌕 எழுத்தாளர்கள் மது ஹனி மற்றும் வத்சலா ராகவன் அவர்கள் எழுதிய வான் தழுவிடிலோ வெண்ணிலவே 🌕

இது கதைக்கான விமர்சனம் என்பதை தாண்டி, கதையில் எனக்குப் பிடித்த விஷயங்களை பகிர்கிறேன் ஆத்தர்களே.

எழுத்தாளர் வத்சலா ராகவன் அவர்களின் மாயாஜால எழுத்துநடையின் பரம விசிறி நான். எழுத்தாளர் மது ஹனி அவர்களின் படைப்புகளில் நான் படிக்கும் முதல் கதை இது.

இருவரின் புரிதலையும் உயர்ந்த சிந்தனைகளையும், கதையை தொய்வு இல்லாமல் நகர்த்தும் பாங்கும் அத்தியாத்திற்கு அத்தியாயம் கண்டு பிரமித்தேன். You both truly complement each other.

கதைக்கரு:

அன்பும் அறிவும் நிறைந்த நாயகன் விக்ரம் பார்த்தசாரதி; நாயகி ஆராதனா வாசுதேவன்;

தங்கள் அயராத உழைப்பாலும், புத்தி சாதுரியத்தாலும் தங்களுக்கென ஓர்
அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்கள். வங்கியில் பணியாற்றி நட்புறவாடி வந்த இவர்கள் பெற்றோர்கள் பல வருடங்களுக்குப் பின் எதேச்சையாகச் சந்திக்க, பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்கள்.

தொழில் ரீதியாக முன்னமே சந்தித்துக்கொண்ட இளையவர்களும், ஒருவரைப் பற்றி ஒருவர் நன்கு அறிந்திருக்க, திருமணத்திற்குச் சம்மதிக்கின்றனர்.

பெருங் காதலுடன் தொடங்கும் நிச்சயதார்த்த விழா, சில பல பெண் வீட்டு விருந்தாளிகளின் அளவுக்கு மீறிய குறுக்கீட்டால் மனஸ்தாபத்தில் முடிகிறது. எரிச்சல் தலைக்கேறிய நாயகன் எடுக்கும் முடிவில் அவன் ஆளுமை மட்டுமே பிரிதபலிக்க, திருமணமே வேண்டாம் எனப் பிரிந்து செல்கிறாள் நாயகி. சரி எது தவறு எது என உணர்ந்து இணைந்தார்களா இல்லையா என்பதே கதையின் நகர்வு.

விக்ரம் பார்த்தசாரதி:

‘உன் திமிரும் கூட அழகு’ எனச் சொல்லும் விதமாக அத்தனை ரசனையான கதாபாத்திரம். தொழில் ரீதியாகச் சீண்டியவர்களை, ‘உன்னை ஏன் சீண்டினோம்’ என நொந்துபோகும் அளவுக்கு உண்டில்லை என்று ஆக்கியவன், மகனாக, சகோதரனாக, நண்பனாக அவர்கள் அன்பில் சரணாகதி ஆவது அவன் உண்மை குணமான, “நல்லவனுக்கு நல்லவன்; கெட்டவனுக்கு கெட்டவன்;’ எடுத்துச்சொல்கிறது.

காதலனாக கேட்கவே வேண்டாம். காண்பது எல்லாம் அகம் நுழைந்தவளை நினைவுபடுத்த, Mind voiceலேயே உருகி மறுகி, படிக்கும் நம்மை ஆட்கொண்டுவிடுகிறான்.

குறிப்பாக குட்டி ஆராவிடம் பழகிய அவன் தூய உள்ளம். பட்டர் மசாலா சம்பாஷணைகளில் குட்டி ஆராவின் அன்பில் கரைந்தது அவன் மட்டுமல்ல; நானும் தான்.

அடுத்த முறை கோபம் வரும்போது, ‘உங்களுக்குத் தானே வலிக்கும் விக்ரம் அங்கிள்’ அவள் மழலை மொழிகள் என் செவிகளிலும் ரீங்காரமிடும்.

ஆராதனா வாசுதேவன்:

சர்வதேச அளவில் தொழிலபதிர்களிடம் தன் பேச்சுத் திறத்தால் சமரசம் செய்துவைப்பதற்குப் பெயர்போனவள், சரிபாதியுடன் ஏற்பட்ட மனத்தாங்கலில் விடாப்பிடியாகப் பேசா மடந்தையாக மௌனம் சாதித்தாள் என்றால் அதற்கு ஒரே காரணம், அவள் அவன்மேல் அத்தனை கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்திருக்கிறாள்.

பிடிவாதத்தில் அவள் தள்ளி நின்ற போதும் சரி; உண்மை அறிந்து துளியும் ஈகோ இல்லாமல் முதல் அடி எடுத்துவைத்த போதும் சரி; அவள் அவனை எந்தளவிறக்கு நேசிக்கிறாள் என்று சொல்லாமல் சொன்னது.

கழற்றிவிட்ட நிச்சய மோதிரத்தை அவள் பத்திரப்படுத்திய விதம் ஒன்றுபோதும் ஆத்தரே, அவள் காதலின் ஆழத்தை உணர்த்த. அப்படிக் கற்பனை செய்து எழுதிய உங்கள் thoughtfulnessக்கு ஒரு பெரிய சல்யூட்.

குட்டி ஆரா:

விக்ரமின் மனக் காயங்களுக்கு மருந்தாக ஆனவளின் வாழ்க்கையில் இத்தனை சவால்கள் வந்திருக்க வேண்டாம் என மனம்
கனத்தது. எந்தச் சூழ்நிலையிலும் அவளுக்காக விக்ரம் இருப்பான் என்பது சிறு ஆறுதலாக இருந்தது.

(குட்டி ஆரா பெரிய ஆராவா வளர்ந்ததுக்கு அப்பறம்ன்னு ஒரு தனி கதை வேணும் சொல்லிட்டேன்)

அர்ஜுன் & ஸ்வாதி:

அர்ஜன் பார்த்தசாரதி வந்த இடமெல்லாம் பாசிட்டிவ் வைப்ஸ் அடைமழையாய் பெய்தது. Down to the earth humble person என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இவன்.

ஸ்வாதி அவனுக்கும் ஒருபடிமேல். உலக விவகாரங்களை (appreciations and recognitions) பற்றி சற்றும் பொருட்படுத்தாமல், அண்ணா, அண்ணி எனப்
பாசத்தை மட்டுமே பொழிந்த இவர்கள் கதாபாத்திரங்கள் கதையின் பெரிய பலம். அச்சாணி என்றும் சொல்லலாம்.

அர்ஜுனனின் பார்த்தசாரதி என ஆரா நெக்குருகிய இடம். You made total justification to the character and the name.

எட்வர்ட்:
அன்பு, ஆத்திரம், காதல், நட்பு, பொறாமை, பெருமிதம், எரிச்சல், ஏக்கம் என அத்தனை உணர்ச்சிகளும் பொங்கி எழுந்தது இவன் காட்சிகளை படித்த இடங்களில் எல்லாம். ஒரு கட்டத்தில், “அடேய்! நீ் நல்வனா கெட்டவனா!” எனத் தலையைப் பிய்த்துக் கொண்டேன். Clara வந்து Clarify பண்ணதும்தான் அம்மாடின்னு ஆச்சு. மொத்தத்தில் Simply superb characterization.

மற்ற துணை கதாபாத்திரங்கள்:

லால் முதல் ஷ்யாம் வரை ஒருவரும் அநாவசியமாகத் தோன்றவில்லை.

💞ஓர் ஆரோக்கியமான பணி இடம் எப்படி இருக்க வேண்டும் என ஆராவின் பணி சார்ந்தவர்கள் வந்த காட்சிகள் எடுத்துக்காட்டியது.

💞பரம்பரை பணக்காரர்கள் என்று காட்சிபடுத்தாமல், உழைப்பால் தங்களையும் தங்கள் பிள்ளைகளையும் முன்னேற்றிய பெற்றோர்களின் பங்கு படிக்க, பெரும் inspirationஆக இருந்தது. Closely knit family எனப் பார்க்கவும் மிக அழகாக இருந்தது. Particularly, work-home balance பண்ண ஆராவின் அம்மாவின் ரோல் was very motivating.

💞நட்பின் உன்னதம் உணர்ந்தேன், சோனா, ஷ்யாம் & கௌதம் மூலம்.

(ஆஹான் ஹீரோ guest appearance தந்தது கொள்ளை மகிழ்ச்சி)

💞துணை கதாபாத்திரங்கள் தானே என எண்ணாமல் அவர்களின் திறனையும் மதிப்பையும் உணர்த்தும் விதமாக முக்கியத்துவம் தந்து காட்சிகள் வடிவமைத்த உங்கள் எண்ணம் உயர்ந்தது.

Especially, Newyorkல் பிரபலமான சோனாவின் திறன்; அர்ஜுன் & ஸ்வாதி டென்னிஸ் திறன் கண்டுகொண்ட மாயா.

வசீகரமான வர்ணனைகள் & எழுத்துநடை:

கம்பீரமும் காதலும் வழிந்தோடும் வள்ளுவர் & பாரதி வரிகளையும், தன்னம்பிக்கையும், வாழ்க்கை நெறிகளையும் போதிக்கும் பகவத் கீதை ஸ்லோகங்களை அர்த்தத்துடன், கதையின் ஓட்டத்தோடு இணைத்த உங்கள் எண்ணம் அற்புதத்திலும் அற்புதம்.

💞நவராத்திரி பண்டிகையில் ஆண்கள் கலந்து கொண்டால் அதுவும் கூட அழகுதான் என உணர்த்தியது விஷ்ணு பிரசாத் வீட்டு நவராத்திரி பண்டிகை.

💞கிரஸ்த்துமஸ் ட்ரெடீஷன் பற்றி புதிய புதிய தகவல்களை அறிந்துகொண்டேன்.
(அழகா இருக்கேன்னு அதன் அர்த்தம் தெரியாயமல், பாக்குற இடத்தில் எல்லாம் நின்று selfi எடுத்துக்கொள்ளக் கூடாது எனப் பாடமும் கற்றுக்கொண்டேன் ஆராவின் எதிர்வினை படித்தப்பின்🫣🫣)

💞எந்த உயரத்தில் பணியாற்றினாலும், எந்த ஊருக்குப் போனாலும், நம் வேட்டி சேலைக்கு ஈடாகுமா என விக்ரம் ஆரா தங்கள் கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்காமல் முன்வைத்த இடங்கள் பிரமாதம்.

💞’அது அலைகளுக்கு நிலா கொடுக்கும் தைரியம்,’ என டைட்ஸ் பற்றிய குட்டிக் கதை, ஜேசன் மூலம் சொன்ன சாணக்கியன் கதை, ஆசை முகம் மறந்து போச்சு பாடலுக்கான
கதை அனைத்தும் மாஸ்.

💞நிலாவும் கடலும் குரல்வளம் பெற்று, ஆராவிடம் விக்ரமின் வருகையை உணர்த்திய வரிகளை எல்லாம் எத்தனைமுறை படித்தேன் என்று எனக்கே தெரியவில்லை. அத்தனை ரசனையாக இருந்துது.

💞கார்ப்பரேட் லா துறையில் படிப்பு, போட்டிகள், வெளிநாட்டு வேலை வாய்புகள், அங்கீகாரம், சவால்கள், எல்லாவற்றுக்கும் மேலாக, Negotiation Queen ஆரா மூலம் ரியலஸ்டிக் கேஸஸ் காட்சிபடுத்திய விதம் அசத்தலோ அசத்தல். அவள் கதாபாத்திரம் செதுக்க எத்தனை ஆத்மார்த்தமாக உழைத்திருக்கிறீர்கள் என அவை யாவும். பறைசாற்றியது.

💞கதாபாத்திரங்களுக்கான அடைமொழிகள் வேற லெவல். அனைத்தையும் சொல்லிவிட்டால், கதை படிப்பவர்களுக்குச் சுவாரசியம் இருக்காது.

ரசித்துப் படித்த ஓர் இடம் மட்டும் சொல்லிக்கொள்கிறேன். ஷேர்னீ முணுமுணுத்த விகரம், சரி ன்னு சொன்னேன் எனச் சமாளித்த இடம்.

முழுப்பெயர் சொல்லி அறிமுகம் செய்துகொள்ளும் கம்பீரம். கண்ணன் ஏன் அவள் ப்ரோ எனக் காரணம் சொன்ன ஆராவின் கற்பனையும், கண்ணம்மாவுக்கு இவள் புரிந்துகொண்ட அர்த்தமும் பாராட்ட வார்த்தைகளே இல்லை. அசத்திட்டீங்க.

Moral of the story:

உயிர் மூச்சாக நேசிப்பவர்களிடம் சண்டையிட மட்டுமில்லை; சமாதானமாகவும் ஒரே ஒரு நிமிடம் சுயத்தை இறக்கிவைத்துப் பேசிவிட்டால் பிரிவிக்கும் அது தரும் வலிக்கும் ஏது இடம் என உணர்த்தும் வகையாக அழகிய கதை வாசிக்க வழிவகுத்த உங்கள் இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
Very nice review ma. இதன் முற்பகுதி ஒரு கதை. அதன் தொடர்ச்சியாக தான் இது. But அந்த கதை தளத்தில் இருக்கும் என நினைக்கிறேன்.
 

Advertisement

Advertisement

Back
Top