என் ஆயுள் ரேகை நீயடி 9

Advertisement

Sagee Elumalai

Active member
Member
Chapter 9
எதிர்படும் எதுவும் வேண்டாம் என்று
கடந்து செல்கிறேன்

உன்னை மட்டும் மனதில் வேண்டிகொண்டே...

இரவில் சரியாக சாப்பிடாததிலும், நேற்றைய பொழுது செம்மையாக கடந்து போகாததாலும் இருந்த களைப்பிற்கு அயர்ந்து உறங்கி இருந்தாள் மேகவினி. அவளுக்கு முன்னர் எழுந்தவனோ இன்னுமே உடலை குறுக்கி படுத்திருந்தவளை சற்று நேரம் நின்று பார்த்தான்.

உறங்கும்போதும் அழுத்தமாக முகத்தை வைத்து கொண்டு உறங்கி கொண்டிருந்தவளை பார்த்தான், “இவளை சமாளிக்கிறது அவ்வளவு சுலபம் இல்லைடா வீரா” என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவன் கதவை மெல்ல சாற்றி விட்டு வெளியே வந்தான்.

கீழே வரும்போதே அவன் மொபைல் ஃபோன் அலறியது, எடுத்து காதில் வைத்தவன் ஏதோ பேசி கொண்டே இறங்கி வர, சோபாவில் மீனாவும் அவர் அண்ணன் மனைவி கனகாவும் அமர்ந்து இருந்தனர்.

இவனை கண்டதும் இன்னும் கொஞ்சம் அதிகமாக விசும்ப துவங்கினார் கனகா. இவனுக்கு என்ன சொல்வது என்று இருந்தது.

அம்மாவை பார்க்க அவரோ கனகாவை சமாதானம் செய்வதில் முனைப்பாக இருந்தார்.

ஒரு சலிப்புடன் தலையை அசைத்தவன் அவர்களை கடந்து வெளியே வந்தான். அவனது காரின் அருகே நின்று இருந்தான் அஜய் இவனின் அசிஸ்டண்ட்.
இவனை கண்டதும் சார் என்று ஓடி வந்தான். “அஜய் இன்னும் ரெண்டு நாளைக்கு என்னால ஆபீஸ்க்கு வர முடியாது. முக்கியமான ஹியரிங் கேஸ் ஃபைல் மட்டும் இங்கே வச்சிட்டு போ, மீதியை நீயும் ஜனாவும் பார்த்துகோங்க” என்றான்.

எல்லாவற்றுக்கும் சரி சரி என்று தலையாட்டி கொண்டிருந்தவன் தலை மீது ஒரு தட்டு தட்டியவன், “புரியுதா” என்றான்.

“நல்லாவே புரிஞ்சுது சார்” என்றான் அவன் அவசரமாக.

“காலையில சாப்பிட்டியா”

“மம் சாப்பிட்டேன் சார்” என்றான் அவசரமாக.

“இதுக்கு கூட ஏண்டா இப்படி பதற”

“அது.. அது.. இல்லை சார்” என்றான் அவன் இப்போதும்.

“சரி கிளம்பு” என்று அவனை அனுப்பி வைத்தவன், போனை எடுத்து யாருக்கோ அழைத்தான்.
எதிர் முனை போனை எடுத்தது,

“பிரெச்சனை எந்த அளவில இருக்கு அத்தை” என்றான்.

“சரியா சொல்ல முடியலை வீரா, அமைதி போராட்டமா இருக்கு” என்றார் அருணா.

“ஏன்னா அவர் பொண்ணு என்கிட்டே இருக்காளே”, என்றான் அவன்.

“அவ என்னோட பொண்ணும் தான் வீரா, அவளை காயப்படுத்திடாத” என்றார் கலக்கமாக.

“நிச்சயமா இல்லை அத்தை, ஆனா என்னோட அத்தைக்கு நடந்ததுக்கு கொஞ்சமாவது அந்த மனுஷனுக்கு திருப்பி கொடுக்க வேண்டாமா” என்றான்.

“வீரா, அவரை பழி வாங்கறதா நினைச்சு உங்க ரெண்டு பேர் வாழ்க்கையை பணயமா வைக்காதடா. எனக்கு அது தான் முக்கியம்”.

“எனக்கும் மேகவியோடான வாழ்க்கை முக்கியம் தான் அத்தை. அவளை நானோ என்னை அவளோ பிரியற அளவுக்கு விட மாட்டேன்.

நீங்க தைரியமா இருங்க. அப்புறம் என்னோட மச்சான் என்ன சொல்றான்”

“அவனுக்கு ஒரே குழப்பம், எதுக்காக இதெல்லாம் நடந்ததுன்னு புரியாம இருக்கான்”

“நான் அவங்கிட்டே பேசறேன் அத்தை, நீங்க கவலை படாதீங்க” என்று வைத்து விட்டு அடுத்து சஞ்சுக்கு அழைத்தான்.

அத்தான் முதல் ரிங்கிலேயே போனை எடுத்தவன் குரலிலேயே எண்ணற்ற கேள்விகள் அவனுக்குள் அடங்கி இருப்பதை உணர்ந்து கொண்டான் பெரியவன்.

“என்ன சஞ்சு என் மேலே உனக்கு கோபமா”

“இல்லை அத்தான், ஆனா எதுக்காக இதெல்லாம் செய்யறீங்கன்னு தான் தெரியலை”

“நான் தான் சொன்னேன் சஞ்சு, நாம எல்லாரும் ஒண்ணா இருக்கலாம்னு அதுக்காகத்தான். இப்போதைக்கு என்னால இதை மட்டும் தான் சொல்ல முடியும். நீ என்னை நம்பறியா”

“நிச்சயமா அத்தான்”.

“தாங்க்ஸ் டா, உங்க அக்காவும் உன்னை போலவே இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்”

“அத்தான் அக்கா நல்லவ, அவளுக்கு அப்பா மேலே ரொம்ப பாசம், அதுல கொஞ்சம் கிறுக்கு தனமா ஏதாவது செய்தா நீங்க கோபப்படாதீங்க”

“சரிடா பெரிய மனுஷா, உங்க அக்காவுக்கு எக்ஸாம்ஸ் வருது அவளோட புக்ஸ் எல்லாம் எடுத்து பேக் பண்ணி கொரியர் பண்றியா,” என்றான்.

“சரித்தான், உடனே செய்யறேன்”

“எதுவா இருந்தாலும் இந்த நம்பர்க்கு கால் பண்ணு”
அவனிடம் பேசிவிட்டு திரும்ப, அவனை பார்த்து கொண்டே வந்தார் கனகா, “புதுசா உறவுகள் கிடைச்சதும் எங்களை எல்லாம் மறந்துட்டியா வீரா. இது வரைக்கும் என் பொண்ணு எப்படி இருக்கான்னு ஒரு வார்த்தை கூட கேட்கலை” என்றார் விசும்பலோடு

“அப்படி எல்லாம் இல்லை அத்தை, நான் வந்து ராகவியை பார்க்கிறேன்” என்றான்.

“என்ன அண்ணி இன்னுமா இவன் பேச்சை நம்பிக்கிட்டு இருக்கீங்க. பெத்தவளே இவனுக்கு பெருசா தெரியலை, நீங்க எல்லாம் எப்படி தெரிவீங்க” என சொன்னார் மீனா.

“ம்மா” என்ன இதெல்லாம் என்பது போல அன்னையை பார்த்தவன், “ராகவி காலேஜ் போறாளா” என்றான்.

“ஒரு வாரமா என் புள்ளை சரியா சாப்பிடாமலே கிடக்கிறா, இதுல காலேஜ் ஒண்ணு தான் எங்களுக்கு குறைச்சல்” என முகத்தை திருப்பி கொண்டார் கனகா.

“என்ன அத்தை அவ தான் சின்ன பொண்ணு நீங்க பெரியவங்க சொல்லி புரிய வைக்க மாட்டீங்களா. ஆமா நீங்க எப்படி சொல்லுவீங்க அவளை தூண்டி விட்டு இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறதே நீங்க ரெண்டு பேரும் தானே” என்றான் சலிப்பாக.

“பார்த்தியா மீனா உன் பையன் எப்படி பேசாராரு. உங்கண்ணன் இருந்திருந்தா எங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்குமா. நானும் என் பொண்ணு அவர் போன இடத்துக்கே போய்டறோம். நீங்க எல்லாரும் நிம்மதியா இருங்க” என கண்ணை கசக்கி கொண்டே சென்று விட்டார்.

“அண்ணி இருங்கண்ணி சொல்றதை கேளுங்க” என அழைத்த மீனா, மகனின் புறம் திரும்பினார்.

“இது உனக்கே நல்லா இருக்கா வீரா, இத்தனை நாளும் ராகவிக்கும் உனக்கும் தான் கல்யாணம்னு நாங்க எல்லாம் பேசிக்கிட்டு இருந்தப்ப நீ எதுவுமே எதிர்ப்பு சொன்னது இல்லையே. அப்போவெல்லாம் சும்மா இருந்துட்டு இப்போ இப்படி பேசறியே”.

“அம்மா சூழ்நிலையை புரிஞ்சு நடந்துகோங்க, யாரும் இங்கே திட்டம் போட்டு வாழறது இல்லை. அப்போ நீங்க ராகவியை பத்தி பேசும்போதெல்லாம் மறுக்க எனக்கு காரணம் இல்லை. அதுவுமில்லாம நடந்த எதுவும் நான் வேணும்னு செய்ததும் இல்லை. நீங்களே புரிஞ்சுக்கலைன்னா எப்படிம்மா” என்றான் சங்கடத்துடன்.

“ஆமாடா என்னோட மனசை மட்டும் இங்கே யாருமே புரிஞ்சுக்காதீங்க, ஆனா நான் மட்டும் உங்க எல்லாரையும் புரிஞ்சு நடந்துக்கனும். உங்க அத்தை இங்கே இருந்தப்பவும் எனக்கு பிரெச்சனை தான் இப்பவும் எனக்கு பிரெச்சனை தான்” என்று உள்ளே சென்று விட்டார்.

வீராவுக்கு மலைப்பாக இருந்தது, இங்கே யாரும் கெட்டவர்களோ அவனுக்கு கெடுதல் நினைப்பவர்களோ கிடையாது. எல்லாருமே நல்லவர்கள் தான். அவனுடைய உறவுகள், ரத்த சொந்தம். அவரவர்க்கு நியாயம் என்று படுவதை செய்கின்றனர். அப்படி இருக்கையில் ஒருவரை திருப்தி படுத்த இன்னொருவரை வருத்தி கொண்டிருக்கிறோமோ என்று மனம் வருந்தியது.
இன்னும் சமாளிக்க வேண்டியது நிறையவே இருக்கிறது என்று மனதை தட்டி திடப்படுத்தி கொண்டு உள்ளே சென்றான்.

ஹாலில் அமர்ந்து இருந்தார் வேதாசலம், அவரை பார்த்தவன் அவர் அருகில் சென்று அமர்ந்தான். “என்னால உனக்கு நிறைய கஷ்டம் வீரா” என்றார்.
வெளியே நடந்த சம்பாஷணைகளை அவரும் கேட்டிருக்க வேண்டும் என்பது புரிந்தது.

“அப்படி எல்லாம் எதுவுமில்லை தாத்தா” என்றான் அவர் கைகளை பற்றி கொண்டு.

“பிள்ளையை பெத்தவகிட்டே இருந்து பிரிச்சிட்டேனோன்னு கவலையா இருக்கு. மருமக பொண்ணு நல்லவதான், அவளுக்கும் அவ அண்ணன் மகளை உனக்கு கட்டி வைக்கனும்னு ஆசை இருந்தது. எல்லாமே என்னால கெட்டு போச்சு. அம்மாவுக்கும் பிள்ளைக்கு நடுவுல மனகசப்பை கொடுத்துட்டேன். எப்படியாவது நான் இருக்கும்போதே இந்த குடும்பத்தை ஒண்ணு சேர்த்துடுப்பா” என்றார் கண்கள் எங்கோ வெறித்தபடி.

“நிச்சயமா செய்வேன் தாத்தா, நீங்க வருத்தப்படாதீங்க. அம்மா தானே என்னை புரிஞ்சுப்பாங்க.
பெத்தவங்களை விட, பிள்ளைகளை புரிஞ்சுக்கிறவங்க யாரு இருக்காங்க” என்று ஆறுதல் கூறினான்.

ஆமோதிப்பாக தலையை ஆட்டினார் பெரியவர். அவரிடம் பேசிவிட்டு மேலே வர அங்கே வராண்டாவில் நின்று இருந்தாள் மேகவி.

“எழுந்துட்டியா” என அவள் அருகில் செல்ல, “உங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவங்களுக்கு ஒரு நியாயமா” என்றாள்.

“என்ன சொல்ற”

“இல்லை ஏதோ உங்களை உங்க அம்மாகிட்டே இருந்து பிரிச்சுட்டேன்னு உங்க தாத்தா”, அவளை இடை மறித்தவன் “நம்ம தாத்தா” என்றான் திருத்தமாக.

இடவலமாக தலையை அசைத்தவள், “உங்க தாத்தா” வேண்டுமென்றே அழுத்தி சொல்லி, “சொல்லிக்கிட்டு இருந்தாரே, அப்போ தந்திரமா திட்டம் போட்டு என்னை எங்கப்பா கிட்டே இருந்து பிரிச்சு கூட்டிட்டு வந்திருக்கீங்களே அதுக்கு பேர் என்ன” என்றாள் புருவம் உயர்த்தி.

“இது வேற அது வேற” என்றான் அவன்.

“என்ன சார் சொல்றீங்க, ஆம்பளைக்கு ஒரு நியாயம் பொம்பளைக்கு ஒரு நியாயமா. இல்லை எனக்கு ஒரு நியாயம் உங்களுக்கு ஒரு நியாயமா” என்றாள் நக்கலாக.
இடவலமாக தலையசைத்து மறுத்தவன், “அப்படி எல்லாம் இல்லை மேகவி” என்றான் பொறுமையாக.

“வேற எப்படி” அவள் கூர்ந்து அவனை பார்க்க அவன் என்ன சொல்வது என்று தயங்கிய ஒரு நொடியில், “சொல்ல முடியலை இல்லை” என்றவள் அறைக்கு சென்று விட்டாள்.

வக்கீல் அவனையே மடக்கி விட்டாளே என்று புன்முறுவல் மலர்ந்தது. அவளும் வக்கீல் தானே சும்மாவா அவள் தந்தை அவளை வக்கீலுக்கு படிக்க வைத்து இருக்கிறார் என்று நினைத்து கொண்டான். அறைக்குள் சென்றவள், போனை எடுத்து தந்தைக்கு அழைத்தாள்.

“அப்பா எப்படி இருக்கீங்க”

“எனக்கென்னப்பா நான் உங்க பொண்ணு, எந்த பிரெச்சனை வந்தாலும் சமாளிக்க எனக்கு சொல்லி கொடுத்திருக்கீங்க. நீங்க என்னை பத்தி கவலை படாதீங்க” என்று பேசிக்கொண்டிருந்தாள்.
வீரா அவள் எதிரே வந்து கை கட்டிகொண்டு நின்று அவளையே பார்த்து கொண்டிருந்தான். அவன் தெரிந்தே அப்பாவிடம் செல்லம் கொஞ்சி பேசி கொண்டிருந்தவள் அவனை சட்டை செய்யவில்லை.
ஒருவாராக பேசி முடித்தவள், அடுத்து கை பேசியில் மூழ்கி விட்டாள்.

அங்கேயே நின்று அவளையே உற்று பார்த்தவனை ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாமல், “என்ன எங்கப்பா கிட்டே நான் பேச உங்ககிட்டே அனுமதி வாங்கணுமா” என்றாள் கோபமாக.

“இல்லை அதுக்கெல்லாம் அவசியமில்லை, உன் விருப்பபடி நீ இருக்கலாம் அதுக்கான சகல உரிமையும் உனக்கே இருக்கு. ஆனா அங்கே தானே உன்னை பெத்த அம்மான்னு ஒரு ஜீவன் இருக்காங்க, அவங்களை பத்தி நியாபகம் கூட உனக்கு இல்லை அப்படித்தானே” என்றான்.

“அம்மாவா, யோசிப்பது போல செய்தவள், ஓஹ் அண்ணன் மகனோட கை கோர்த்துக்கிட்டு சதி வேலை எல்லாம் செய்தாங்களே அவங்களா. எனக்கு அவங்களை நியாபகம் இல்லையே” என்றாள் உதடு பிதுக்கி.

“மேகவி அத்தைக்கு இதுல எந்த சம்மந்தமும் இல்லை” என்றான் அழுத்தமாக.

“அப்படியா நிஜமாவா, சொல்லவே இல்லை” என மிகையாக நடிப்பது போல செய்தவள், “நம்பிட்டேன் போதுமா” என்று கேட்டுவிட்டு குளிக்க சென்று விட்டாள்.

சிறு பிள்ளை போல என்ன ஏதென்று கூட சொல்வதை கேட்க மறுப்பவளை என்ன செய்வது என்று அவன் நிற்க, அவனது போன் ஒலித்தது. எடுத்து பேசியவன், முகத்தில் தீவிரம் படர, வேகமாக அறையை விட்டு வெளியேறினான்.
 

Advertisement

Advertisement

Back
Top