Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உனக்காக நான்-அத்தியாயம் 4

Advertisement

Subhashri

Member
Member
உனக்காக நான்...!! - அத்தியாயம் 42932 சுபஸ்ரீ எம்.எஸ். " கோதை"

என்னை எனக்கே புரியவில்லை...
எப்போது தொலைந்தேன் விளங்கவில்லை...
நீ துவண்டு விழுந்தால்...
என் நெஞ்சு துடிக்குதடி...
உன்னைப் பார்த்து நான் கொண்டது என்ன?

மயக்கமா? கலக்கமா?

#########$$$$$$$######


மயக்கமா? கலக்கமா?

அர்ஜுன்:
என்ன நடந்தது இங்கே? எனக்கு ஒன்றும் புரியவில்லை. மணமேடையின் அருகில் மணமகள் அறையின் வாசலில் கூட்டமாக யாரையோ சூழ்ந்து கொண்டு எல்லோரும் நின்றிருந்தார்கள். என் அப்பா அம்மா அனைவரும் மிகுந்த படபடப்புடனும் கவலையோடும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

நான் நேராக என் அப்பாவிடம் சென்று," அப்பா!! என்னப்பா ஆச்சு!! ஏன் எல்லாரும் படபடன்னு இருக்கீங்க?" என்று அங்கு நடப்பது ஒன்றும் புரியாமல் கேட்டேன்.

என் அப்பா என்னை பார்த்ததும். மிகுந்த கோபத்துடன், " என்ன ஆச்சா? முகூர்த்த நேரத்தில எங்கடா போய் தொலஞ்ச? உன்னை உன் ரூம்ல காணோம்னு சொன்னவுடனே எனக்கே ஒரு நிமிஷம் கதி கலங்கி போயிருச்சு. அந்த பொண்ணு என்ன பண்ணும் ? பாவம்!! உன்னை காணும்னு சொன்னவுடனே அதிர்ச்சில மயக்கம் போட்டு விழுந்துட்டாடா. அப்படி எங்கதான் போயிருந்த?" என்று கத்தினார்.

நான் உடனே," அமெரிக்காவிலிருந்து என் நண்பன் சிவா எனக்கு ஃபோனில் வாழ்த்து சொல்ல கால் பண்ணினான். அறையில் அவன் பேசினது சரியா கேட்கலை. அதனால மண்டபத்திற்கு வெளிய போய் அவனோட பேசிட்டு வர்றேன்." என்று விளக்கம் கொடுத்து விட்டு விரைந்து சென்று சூழ்ந்திருந்தவர்களை விலக்கிக்கொண்டு போய் திவ்யாவை பார்த்தேன். அவளுடைய அப்பாவின் மடியில் துவண்ட கொடி போல் மயங்கி விழுந்து கிடந்தாள்.

திவ்யாவின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவளுக்கு அப்போதுதான் மயக்கம் தெளிந்து கண்ணைத் திறந்து பார்த்தாள். அவளுடைய கண்களில் முதலில் கலக்கமும் பயமும் தெரிந்தது. ஆனால் என்னை பார்த்ததும் லேசாக புன்னகை பூத்தாள்.

அவளுடைய அப்பா ," இதோ பாரும்மா!! மாப்பிள்ளை எங்கேயும் போகல. இங்கேதான் இருக்காரு. உன் கல்யாணம் நிச்சயம் நடக்கும். கவலைப்படாதே. மாப்பிள்ளை அப்படியெல்லாம் உன்னை விட்டுட்டு எப்பவும் எங்கேயும் போயிட மாட்டாரு. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. அவரை மாதிரி தங்கமானவர் உலகம் முழுக்க தேடினாலும் கிடைக்கமாட்டார்மா. நீ சந்தோஷமா அவரோட நிறைய வருஷம் வாழப் போற. அதை நானும் பார்த்து சந்தோஷப்படப்போறேன்." என்றார் கண்கலங்க.

திவ்யாவின் பாட்டி," உன் கல்யாணத்த பார்க்கத்தான் இந்த உயிரை வெச்சுண்டு இருக்கோம் நானும் உன் தாத்தாவும். நீ சந்தோஷமா மாப்பிள்ளையோட வாழறத பார்க்காம எங்க கட்டை வேகாது. அதனால எதையும் நினைச்சு கவலைப்படாம எழுந்து ஒரு அஞ்சு நிமிஷம் அமைதியா உட்கார்ந்துட்டு அப்புறம் மணமேடைக்கு வா" என்று ஆறுதலாய் பேசினாள்.

நான் சிறிது கவலையோடு," சாரி திவ்யா!! என்னாலதான் இவ்வளவு குழப்பமும்.. வெளியே ஃபோன் பேசப் போனேன். அதுக்குள்ள இவ்வளவு அமர்க்களம் ஆயிடுச்சு.. இப்ப எப்படி இருக்கு. தலை சுத்துதா? உங்க பாட்டி சொன்ன மாதிரி அஞ்சு நிமிஷம் ரெஸ்ட் எடுத்துட்டு வா." என்றேன்.

உள்ளுக்குள் என் மனமோ என்னை திட்டிக் கொண்டிருந்தது. இவள் மீது எனக்கு ஏன் இவ்வளவு அக்கறை? அன்பு ? இவள் மயங்கி விழுந்ததைப் பார்த்து நான் சந்தோஷப்பட வேண்டும் அல்லவா? மாறாக இவள் மயங்கி விழுந்திருப்பதைப் பார்த்து எனக்கு ஏன் அவ்வளவு பதைபதைப்பாக இருந்தது?

திவ்யா எழுந்திருக்க முற்பட்ட போது தடுமாறி விழப்போனாள். அவளை தாங்கினாற்போல் பிடித்து அழைத்து சென்று கட்டிலில் அமர வைத்தேன்.

" இப்போ பரவாயில்லையா திவ்யா?" என்று என்னையும் அறியாமல் அக்கறையுடன் விசாரித்தேன்.

அவள்," ம்ம்.. " என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள். அதற்கு மேல் அங்கு இருந்தால், நான் எதற்கு அவளைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்பதையே மறந்து விடுவேன் என்றெண்ணி அந்த அறையில் இருந்து வெளியேறினேன். அடுத்த பத்து நிமிடங்களில் திவ்யாவின் கழுத்தில் நான் கட்டிய தாலி ஏறியது. எல்லோர் முன்னிலையிலும் அக்னி சாட்சியாக அவள் என் மனைவியானாள்.


திவ்யா:

திவ்யா அர்ஜுன். இரண்டு பெயர்களையும் சேர்த்து சொன்ன போது எனக்குள் ஒரு சின்ன பூரிப்பு ஏற்பட்டது. நான் அர்ஜுனின் மனைவி. நினைக்க நினைக்க என் வயிற்றுக்குள் பல பட்டாம்பூச்சிகள் படபடத்தன. என் புகுந்த வீட்டிற்கு புறப்பட்டேன்.

காரிலிருந்து வீட்டு வாசலில் இறங்கியதும் என் அத்தை உள்ளே சென்று ஆரத்தி கரைத்து எடுத்து வந்து ஆரத்தி எடுத்தார். பிறகு நான் அர்ஜுனுடன் என் அப்பா அம்மா உறவினர்கள் பின்தொடர உள்ளே சென்றபோது என் அத்தை," அம்மா திவ்யா என்னோட வாம்மா." என்று கூறியபடி என்னை பூஜையறைக்கு அழைத்துச் சென்றார்.

" அம்மா!! சாமி முன்னாடி இருக்கிற அந்த விளக்கை ஏத்தி நம்ம குடும்பத்தில நீ வந்த நேரம் சந்தோஷமும் நிம்மதியும் என்னிக்கும் நிலைச்சு இருக்கணும்னு சாமி கிட்ட மனசார வேண்டிக்கிட்டு கும்பிட்டுக்கம்மா!!" என்று சொன்ன என் அத்தை என்னிடம் வத்திப்பெட்டியையும் நீட்டினாள்.

அதை வாங்கிய நான் விளக்கேற்றி," இந்த வீட்டில் எல்லோரும் விரும்பும் மருமகளாக வாழவேண்டும் என்றும், இந்த வீட்டில் அனைவருக்கும் சந்தோஷத்தையும் நிம்மதியையும் அள்ளித் தருபவளாக நான் இருக்க வேண்டும்,"என்று வேண்டிக் கொண்டு சாமி முன் விழுந்து கும்பிட்டேன்.

பின்னர் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு மாலையில் என் அம்மா, அப்பா, பிறந்த வீட்டு உறவினர்கள் அனைவரும் வீட்டிற்கு கிளம்பியபோது, எனக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. நான் அழுவதைப் பார்த்து என் அம்மாவும் கண் கலங்க, என் பாட்டி," திவ்யா கண்ணு!! புகுந்த வீட்டில வாழப் போற பொண்ணு இப்படி அழக்கூடாது. இங்கே நீ எப்பவும் சந்தோஷமா சிரிச்சுக்கிட்டு இருக்கணும். மாப்பிள்ளை வீட்டில எல்லாரும் ரொம்ப அன்பானவங்களா தெரியறாங்க. நீ நம்ம வீட்டுல எப்படி இருந்தியோ, இங்கேயும் அதேபோல ராணி மாதிரி இருக்கப் போற. நீ அழறத பார்த்துட்டு எங்களால நிம்மதியா வீட்டுக்கு போக முடியுமா? சிரிச்சுக்கிட்டே வழியனுப்பி வைம்மா. " என்றாள்.

பாட்டி சொல்லும் வார்த்தை வேதவாக்கு எனக்கு. "சரி பாட்டி" என்றபடி கண்ணீரை துடைத்துக்கொண்டு புன்னகைத்தேன்.

" உனக்கு எங்களையெல்லாம் பார்க்கணும் போல இருந்தா மாப்பிள்ளை கிட்ட சொன்னா கூட்டிட்டு வரப்போறாரு. என்ன சொல்றீங்க மாப்ள?" என்றார் அப்பா அர்ஜுன் பக்கம் திரும்பி.

" நிச்சயம் மாமா. அவ ஆசைப்பட்டா நிச்சயம் கூட்டிட்டு வர்றேன். இதுல என்ன இருக்கு?" என்றார் அர்ஜுன்.

"அப்பறம் என்னம்மா? மாப்பிள்ளையே சொல்லிட்டார். அப்ப நாங்க வர்றோம்மா திவ்யா" என்றார் அப்பா வாஞ்சையுடன் என் தலையைக் கோதியபடி.

" பார்த்து பெரியவங்கள அனுசரிச்சு நடந்துக்கோ திவ்யா" என்று என்னிடம் சொன்ன அம்மா, அத்தையிடம் சென்று," இனிமே நீங்க தான் திவ்யாவோட அம்மா. அவ ஏதாவது தெரியாம தப்பு பண்ணாலும் உங்க பொண்ணு மாதிரி நினைச்சு மறந்துடுங்க" என்றாள்.

" பொண்ணு மாதிரி எல்லாம் இல்ல. திவ்யா இனிமே எனக்கு பொண்ணே தான். நித்யா எப்படியோ அப்படித்தான் திவ்யாவும் எனக்கு. நீங்க கவலைப் படாம போயிட்டு வாங்க. நான் அவள பத்திரமா பார்த்துக்கறேன்." என்றார் அத்தை.

பிரிய மனமில்லாமல் என் பிறந்த வீட்டினர் அனைவரும் பிரியா விடை பெற்று சென்றனர். அவர்கள் போகும் போது தான் கவனித்தேன். என் அண்ணனின் கண்கள் என்னையும் தாண்டி யாரையோ தேடுவது போல் இருந்தது. பிறகு முகத்தில் ஒருவித ஏமாற்றத்துடன் " வர்றேன் திவ்யா. பார்ப்போம்." என்று சொல்லி விட்டு சென்றான்.

பின்னர் இரவு உணவு உண்டபின் அத்தை என்னிடம் வந்து," திவ்யா!! அர்ஜுன் ரூமுக்கு போயிட்டான். இந்தாம்மா." என்றபடி கையில் பால் சொம்பை கொடுத்தார். அர்ஜுனின் அறை வாசல் வரை கூட்டி வந்து," ரெண்டு பேரும் இன்னிலேருந்து சந்தோஷமா வாழ ஆரம்பிங்க!! உள்ளே போம்மா" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

என் மனதில் பட்டாம்பூச்சிகள் பறந்தன. பலவித எதிர்பார்ப்புகளுடன் கதவை திறந்தேன். உள்ளே அர்ஜுன் யாருடனோ சத்தமாக சிரித்தபடி கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தான்.

நான் மெதுவாக கதவை தாழிட்டு விட்டு திரும்பியபோது என் மனதை இரண்டாக கிழிப்பது போல் அந்த வார்த்தைகள் என் காதில் வந்து விழுந்தன. " என்ன டார்லிங்!! என்ன பார்க்கணுமா? நீ சொல்லணுமா செல்லம்? ரெண்டு நாளா உன்ன பார்க்காம இருந்துட்டு உன்னை திரும்ப எப்ப பார்க்கப்போறோம்னு காத்துக்கிட்டு இருக்கேன். இதோ இப்பவே கிளம்பி வர்றேன். திவ்யாவா? அவள என் வீட்டில இருக்கறவங்களுக்காகத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நீதான் கடைசி வரைக்கும் என் உயிர். வேற யாரும் என் மனசுக்குள்ள வரமுடியாது." என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டு என் பக்கம் திரும்பி கூட பார்க்காமல் கதவைத் திறந்து கொண்டு போனான்.

நான் அப்படியே ஸ்தம்பித்து போய் சிலையாக நின்றேன்.

தொடரும்...
 
Top