Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியே தொடரட்டுமே!- 25

Advertisement

praveenraj

Well-known member
Member
அன்றைய தினம் ஏனோ ஆதிராவுக்கு எந்த வேலையிலும் மனம் லயிக்கவில்லை. ஒரு நியூஸ் ஆர்ட்டிகளை எடிட் செய்ய இவளிடம் அனுப்பப்பட அதைச் சரியாக எர்ரர் ப்ரூப் செய்யாமல் எடிட்டரிடம் அனுப்ப அவரோ அதைப் படித்துவிட்டு ஆதிராவை அழைத்து சொல்ல திருதிருவென விழித்தாள் அவள். அவரும் இங்கே அவள் வந்த நாளிலிருந்து அவளைப் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார். தனக்குக் கொடுக்கப்படும் வேலைகளை செவ்வனே செய்து முடிக்கும் கூடவே வேலையில் சுறுசுறுப்பாக இருப்பவள் முகத்தில் இன்று நிறைய குழப்ப ரேகைகளைப் பார்த்தவர்,

"ஆர் யூ ஒகே மிஸ் ஆதிரா?" என்று வினவ முதலில் இல்லை என்று தலையை ஆட்டி பிறகு ஆமாமென்று தலையை ஆட்டி குழப்ப என்ன செய்வதென்று புரியாமல் தவித்தாள். அவளின் முகபாவங்களைக் கண்டவர்,"டேக் ஹாப் எ டே லீவ். கம் நார்மல் டுமாறோ..." என்று சொல்லி அவளை வீட்டிற்கு அனுப்பினார். அவளுக்கும் அந்த விடுப்பு அவசியம் என்று பட்டதால் அவளும் அங்கிருந்து கிளம்பினாள். ஆனால் மனம் மட்டும் எதிலும் லயிக்கவில்லை. இதுவரையே செழியனைப் பற்றி எல்லாமும் தெரிந்திருந்தாலும் இங்கே வந்த இந்த இரண்டு வாரக் காலத்தில் அவனை அருகே கூர்ந்து கவனிக்கும் அவளுக்கு செழியன் மீது ஒரு வித ஈர்ப்பு இருப்பதை அவளும் அறிந்துகொண்டாள். அது அன்று மழையில் நனைத்த நாளை விட இன்று தான் நிவேதிதாவிடம் பேசியதை நினைக்கையில் அவளுக்கே ஆச்சரியம், கோவம் எல்லாம் வந்தது.

முன்பெல்லாம் செழியன் என்றால் ஒரு நட்புக்கே உண்டான ஒரு உணர்வு தோன்றும். ஆனால் இன்று அதையும் தாண்டி அல்லவா ஏதோ இருக்கிறது என்று அவளுள் ஒரு பிரக்ஞை(awareness நம்மை அறிதல் என்று பொருள்). இந்த மூன்று நாட்களாய் அவனோடு சரியாகப் பேசமுடியாமல் இருப்பதற்கு காரணம் என்ன? நானா இன்று இவ்வளவு ஸ்ட்ரெஞ்சா நடந்துகொள்கிறேன்? என்று நினைத்து குழம்பினாள். 'சும்மா கிடந்த சங்கை நான் தானே அன்று ஊதிக் கெடுத்தேன்? நான் தானே அன்று நிவேதிதாவைச் செழியனோடு சேர்த்து கிண்டல் பேசினேன். இன்று அதைத் தானே நிவேதிதாவும் சொன்னாள்? அன்று அதைச் சாதரணமாக எடுத்துக்கொள்ள முடிந்த என்னால் இன்று ஏன் இதைச் சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை?' என்று யோசிக்கையில் அவளுக்கு தலையெல்லாம் விண்ணென்று இருக்க அதற்குள் மீண்டும் மழை வருவதைப் போல் வானிலை மாறவும் ஏனோ அந்த நாள் அந்த நிமிடம் கண்களில் தோன்றி மறைந்தது அவளுக்கு. தங்கள் அபார்ட்மெண்ட்டிற்குள் நுழைந்தவள் ரூமிற்கு சென்று கொஞ்சம் காஃபீ போட்டுக் கொண்டு அந்த பால்கனி வந்து அமர்ந்து பருக அன்று இதே பால்கனியில் இதே இடத்தில் அவளுக்குத் தோன்றிய குறுகுறுப்பை நினைக்க இப்போதும் அவள் உடல் சிலிர்த்தது. அந்த நேரம் மீண்டும் அன்று அனன்யா கேட்ட கேள்விகள் நினைவுக்கு வந்தது. 'செழியன் யாரையாவது லவ் பண்றாரா? இல்ல அவருக்கு யாரேனும் க்ரஷ் இருக்கிறதா?' என்ற கேள்வி தோன்ற உடனே அங்கிருந்து விரைந்தவள் செழியனின் அறை வாசலில் நின்றாள்.

இப்பொழுது கதவைத் திறந்து உள்ளே செல்லலாமா இல்லை கூடாதா என்று அவளுக்குள் ஒரு குழப்பம். ஏதோ திருட்டுத் தனம் செய்வதைப்போல ஒரு உணர்வு. இருந்தும் இந்தச் செயலின் நோக்கத்தை உணர்கையில் இது அவசியம் என்று தோன்ற டோரில் கையை வைக்க அனிச்சையாக தலையைத் திருப்பி வாசல் கதவைப் பார்த்தாள். மெல்ல அவன் அறைக்குள் புகுந்தாள். நிசப்தமான அந்த வீட்டில் தற்போது வெளிய மழை பெய்யும் சப்தம் தெளிவாகக் கேட்டது. அவனின் அறையைச் சுற்றி நோட்டமிட்டாள். மெதுவாக அங்கிருக்கும் கப்போர்டு ஷெல்ப் எல்லாம் திறந்து பார்க்க அங்கே அவளுக்குத் தேவையானது என்று எதுவும் கிடைக்க வில்லை. எங்கே அவன் வந்து விடுவானோ என்று பயந்து அப்பப்போ கண்கள் அறையின் வாசலைத் தீண்டி வந்தது. எல்லாம் தேட இறுதியாக அந்த ஷெல்ப் மட்டும் இருக்க அதையும் திறந்தாள். திறந்ததும் ஒரு புகைப்படம் தலைகீழாக விழ அதை எடுத்தவள் அப்படியே உறைந்து நின்றாள். அது அவர்களது சின்ன வயது புகைப்படம். முதன்முதலில் அவளின் தந்தை ஒரு கேமெரா வாங்க அப்போது அவளையும் அவனையும் சேர்த்து எடுத்த புகைப்படம் அது. அதில் ஒரு ஸ்பெஷல் என்னவென்றால் அவன் சிரித்தவாறு இருக்க அவன் தோளில் கையைப் போட்டுக் கொண்டு நின்றவள் அவன் கன்னத்தில் முத்தமிட்ட படியே இருந்தாள். பத்து வயது ஆதிராவும் செழியனும் அது.

இப்படியொரு புகைப்படம் எடுக்கப்பட்டதே அவளுக்கு நினைவில்லை. ஆனால் அந்தப் புகைப்படத்தின் பின்னால் எழுதப்பட்டிருந்த வாசகத்தைப் படித்தாள். 'நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்... காதில் தில் தில் தில் தில்... கன்னத்தில் முத்தமிட்டால்... நீ கன்னத்தில் முத்தமிட்டால்!' என்று எழுதியிருந்தது. அந்த வாசகத்தைப் படிக்கும் போதே அது செழியனின் கையெழுத்து என்று அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

அந்த ஷெல்பை எல்லாம் திறந்து அதிலிருக்கும் ஒவ்வொன்றையும் எடுத்து பார்த்துக்கொண்டு இருந்தாள். எல்லாம் அவர்களின் நினைவுச் சின்னங்கள். அவர்கள் நட்பின் நினைவுச் சின்னங்களில். அவன் காதலின் நினைவுச் சின்னங்களையும் அவள் பார்த்தாள். பொதுவாக அவன் இந்த டைரி எழுதும் பழக்கமெல்லாம் இல்லாதவன் தான். ஆனால் இரண்டு டைரி இருக்க அதை எடுத்தாள்.

"என் வாழ்க்கையிலே இன்று மிக மிக சந்தோசமான அதேநேரம் மிகவும் சோகமான நாள். ஆம் இரண்டும் ஒன்றே அமைந்த நாள். இன்று என் ஆதிரா என்று நினைத்திருந்தவள் அவள் காதலன் என்று ஒருவனை அறிமுகப்படுத்தி நீ எனக்கு என்றுமே ஒரு தோழன் தான் என்று சொல்லாமல் சொல்லிவிட்டுச் சென்றாள். வருத்தம், அவள் இனி எனக்கில்லை என்பதிலும் சந்தோசம், அவளுக்கு இதில் தான் சந்தோசம் இந்த உறவு இப்படி இருப்பதில் தான் சந்தோசம் என்று உணர்த்திய பொழுதும் ஏற்பட்டது.ன் படிக்க வேடிக்கையாக இருக்கிறதா? உண்மையான சந்தோசம் எனப்படுவது நமக்குப் பிடித்தவரின் சிரிப்பும் சந்தோஷமும் தானே? நல்ல வேளை அவள் அதை என்னிடம் சொன்ன பொழுது என் அழுகையைக் காட்டிக்கொடுக்காமல் உதவிய அந்த மழைக்கு என் நன்றிகள்..." என்று எழுதியிருந்தது.

ஏனோ இதைப் படிக்கும் பொழுதே அவளுக்கு அழுகை வந்தது. அதற்குள் யாரோ பெல் அடிக்கும் சப்தம் கேட்டு எல்லாம் எடுத்து அதே போல் வைத்துவிட்டு வந்து கதவைத் திறந்தாள். எதிர்வீட்டு அக்கா தான் இருக்க, புரியாமல் இவள் பார்க்கவும்,"மழை வருது மேல உன் ஆளோட துணியெல்லாம் காயுது..." என்று சொல்லவும் வேகமாய்ச் சென்று அதையெல்லாம் எடுத்து வந்தவள் அவர் சொன்ன உன் ஆளு என்றது அவளை என்னவோ செய்தது. அவளால் இதை நம்பவும் முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை. யாரோ ஒரு முகம் தெரியாத காதலியைத் தேடப் போய் இன்று அது தானாகவே இருக்கிறோம் என்ற உண்மை அவளுக்குப் புரிந்தாலும் அவளுக்கு இது ஒரு மாதிரி இருந்தது.
இப்பொழுது அன்று கீழே மழையில் செழியன் தன்னை நெருங்கிவந்தது எல்லாம் நினைவுக்கு வந்தது. அப்போது அவனின் கண்களில் தெரிந்த ஒரு மயக்கம், ஒரு தேடல் எல்லாம் அவளுக்கு அதிர்ச்சியான உண்மைகளைத் தந்து சென்றது. இருந்தும் இப்பொது தான் அனன்யா சொன்னதெல்லாம் நன்கு யோசித்தாள். "தேடு... சீக்கிரம் தேடு ஆதி..." என்று அவள் சொன்னது அக்கறையாக இல்லை பரிகாசத்தால் என்று புரிந்தவள் அனன்யாவுக்கு அழைத்தாள்.

"சொல்லு ஆதி. என்ன கிரேட் எஸ்கேப் போல? நான் தான் மழையில மாட்டிகிட்டேன். நியூஸ் ரிப்போர்ட் பண்ணனும். இது விட்டாத்தான் போகமுடியும்..." என்று சொன்னவள் அந்தப்பக்கம் அவள் அமைதியாவே இருப்பது உணர்ந்து,"ஆதிரா? ஆதி இருக்கிறயா?"

"ஹ்ம்ம்..."

"என்ன விஷயம் டி?"

"நீ கண்டுபிடி கண்டுபிடினு சொன்னேயே அதைக் கண்டுபிடிச்சிட்டேன். இருந்தும் ஒரு க்ளாரிபிகேஷன் அதுக்காகத் தான்..." என்று ஆதி உரைக்க,

"என்ன கண்டுபிடிக்க சொன்னேன்?" என்று இழுத்தவள் புரிந்து இப்போது எப்படி ரியாக்ட் செய்வதென்று குழம்பினாள்.

"என்ன சொல்ற? யாருனு..." என்று இழுத்தாள் அனன்யா,

"நான் தானே அந்தப் பொண்ணு..." என்று பட்டென அவள் உடைக்கவும் அதிர்ந்தாள் அனன்யா. பின்னே அவள் குரலில் ஒரு தெளிவில்லாத நிலையே இருந்தது...

"ஆதி, நீ எங்க இருக்க இப்போ? வீட்டுலையா?"

"நான் கேட்டதுக்கு நீ இன்னும் எஸ் ஆர் நோ சொல்லலையே?"

"ஆதி நீ பொறுமையா இரு. அவசரப் பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் ..." என்று சொல்ல,

"நான் எந்த முடிவும் எடுக்கப் போறதில்லை. எனக்கு இப்போ அடுத்து என்ன பண்ணனும்னே தெரியில அனன்யா... அப்போ இதுக்காகத் தான் செழி என்ன காப்பாத்துனானா? இதனால தான் என்ன கூடவே வெச்சியிருக்கானா?" என்று இன்னதென்று வரையறுக்க முடியாத ஒரு உணர்வில் கேள்வி எழுப்ப,

"ஆதிரா நீ எதையும் அவசரப் பட்டு முடிவெடுக்காத... கொஞ்சம் பொறு ஆதி..." என்று சொல்ல,

"ஆமா இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்? நீயும் இந்த பிளான்ல கூட்டா?"

"முட்டாள் மாதிரி பேசாத ஆதிரா? இதுல என்ன பிளான்? இது எல்லாமே தற்செயல்... பிளான் போட்டு எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்ல. அதும் செழியன் அப்படிப் பண்ண மாட்டாரு..."

"ஓ என்னைவிட உனக்கு அவனைப்பத்தி அதிகம் தெரியுமா?" என்று அந்நேரத்தில் ஏற்பட்ட பொசெசிவ் உணர்வால் அவள் கேட்க,

"தெரியும். எனக்குத் தெரியும். என்ன நெனச்சிட்டு இருக்க ஆதி? இந்த மாதிரி பிளான் போடறவர் தான் உன் ஒர்க்ல இருக்க சேப்டியை பார்த்திட்டு அதுக்காக என்கிட்ட தனியா பேசி அப்றோம் உன்ன வேலைக்கு அனுப்பினாரா? இல்ல பிளான் பண்றவர் தான் உனக்காக உங்க ஊர்ல எல்லோர் முன்னாடியும் அசிங்கப் படுவாரா? சரி எல்லாம் விடு ஆதி... பிளான் பண்றவர் தான் அவர் தங்கச்சி கல்யாணத்துல சிக்கல் வரும் போது அதும் உன் மாமாவால சிக்கல் வரும் போதும் உன்ன வெளிய அனுப்பாம அந்தப் பிரச்னையையும் சரி பண்ணுவாரா?"

"என்ன சொன்ன? இனியா கல்யாணத்துல என்ன சிக்கல்?" என்று சொல்ல அன்று இரண்டு நாட்கள் செழியன் முகத்தில் இறுக்கமாக இருந்ததும் அன்று காலை அவ்வளவு களேபரத்திலும் என்னிடம் நார்மலாக பேசிவிட்டு சென்றது எல்லாம் நினைவுப்படுத்தி பார்க்க இதற்கெல்லாம் பின்னால் தன் மாமா தான் இருந்திருக்கிறார் என்று ஆதிரா அதிர,

"இது எல்லாம் விடு, இப்போ அவர் எங்க போயிருக்கார் தெரியுமா?"

"எங்க?"

"அவர் தங்கச்சி கல்யாண விஷயமாவோ இல்ல அவர் வேலை விஷயமாவோ இல்ல... உனக்காக. உன்மேல விழுந்த எல்லாப் பழிச்சொற்களுக்கும் நியாயம் கேட்கவும் உன் மேல எந்தத் தப்பும் இல்லைனு நிரூபிக்கவும் தான்..."

"புரியில?"

"எனக்கும் விஷயம் எதுவும் முழுசா தெரியாது. ஆனா இன்னையோட உன் பிரச்சனை எல்லாமும் தீரப் போகுது. உன் மேல எந்தத் தப்பும் இல்லைனு நிரூபிக்கப் போறார். இதுக்காக அவர் எவ்வளவு கஷ்டப்படுறார் தெரியுமா?"

"................."

"ஆதிரா, இப்போ நான் ஒரே ஒரு கேள்வி கேட்கறேன். அன்னைக்கு கேட்டது தான். நீ சொல்லப்போற ஒரே ஒரு வார்த்தையிலே தான் உன் எதிர்காலம் எவ்வளவு சிறப்பா இருக்கப் போகுதுனு தெரியும். நீ மட்டும் செழி கிட்ட உன் காதலைச் சொல்லு உன் வாழ்க்கை எப்படி மாறும் தெரியுமா? ஓவர்நைட்ல ஒபாமா ஆகலாம்னு சொல்லுவாங்க இல்ல? உண்மையிலே நீ ஆகலாம். அவர் கண்ணுல உனக்கானக் காதலை நான் பல முறை பார்த்திருக்கேன். பிளான் போடுறவர் எதுக்குடி இவ்வளவு நல்லவரா இருக்கனும்? நல்லவனா இருக்கறதுக்கு நல்லவனா நடிக்கிறதுக்கு நிறைய நிறைய வித்யாசம் இருக்கு ஆதிரா. ஆமா அவர் பிளான் போட்டாருன்னே வெச்சிக்கலாம், இப்போ சொல்றேன் கேளு உன் பிரச்சனை எல்லாம் தீர்த்திட்டு கூட உன்ன உன் அப்பா கூடச் சேர்க்கணும்னு தான் நெனைக்கிறாரே ஒழிய உன் கிட்ட அவர் காதலைச் சொல்லணும்னு அவரு இதுவரை யோசிச்சதில்லை. அதுக்கு தான் இன்னைக்கு நிவேதிதாவை நாங்க போன் பண்ணி இப்படிப் பேச வெச்சோம். ஆமா நிவேதிதா ஜான் நான்னு நாங்க மூணு பேரும் சேர்ந்து தான் உன் பொசெசிவ்னெஸ்ஸை தூண்டி விட்டோம். சரி அவரு பிளான் போட்டாரு அப்படி இப்படினு சொல்றியே, நீ இப்போ என்ன பண்ண? செழியன் யாரை லவ் பண்ணா உனக்கென்ன? இல்ல நிவேதிதா செழியனை ப்ரபோஸ் பண்ணா உனக்கென்ன? அண்ட் உன்ன கண்டுபிடின்னு சொன்னேன் அதுக்காக இப்படியா அவர் இல்லாத போது அவர் ரூம்க்கு போய்த் தேடுவ? ஏன் தேடணும்? அவரோட லவ்வர் ஒரு xஆ இருந்தா அவங்களைத் தெரிந்துக்க உனக்கென்ன அவ்வளவு ஆவல்? சரி எல்லாம் விடு அன்னைக்கு உங்களுக்குள்ள அவ்வளவு நடந்திருக்கு ஒரே ஒரு வார்த்தை இதுவரை என்கிட்ட நீ சொல்லியிருப்பியா? ஏன் சொல்லல? உன் மனசுல எந்தத் தப்பான எண்ணமும் இல்ல தான் அம்மா. நீ தான் இங்க ஏமாற்றப்பட்ட... சரி அன்னைக்கு நடந்ததைச் சொல்றதுக்கு என்ன தயக்கம் உனக்கு?" என்ற அனன்யா இடைவெளி விட்டுத் தொடர்ந்தாள்,

"ஓகே நானே உன்கிட்ட போன் பண்ணி விஷயத்தைச் சொல்லணும்னு நெனச்சன். இப்போ நீயே தெரிஞ்சிகிட்ட. தப்பில்ல. என் வேலை மிச்சம். நீயும் செழியனை விரும்பினா நீயா அவருகிட்ட எஸ் சொல்லு. இல்லனா ஒன்னும் பிரச்சனை இல்ல நிவேதிதா நானு இப்படி நிறைய பேர் ரெடியா இருக்கோம்..." என்று சொல்ல அந்த நான் என்ற வார்த்தை ஆதியை மேலும் கோவம் செய்ய,

"என்ன சொன்ன? நீயா?" என்று ஆதிரா பொங்கினாள்.

"ஆமா நானே தான். இந்த மாதிரி ஒரு பையனை யாரு தான் மிஸ் பண்ணுவா? தான் விரும்புற பொண்ணு தன்னை விரும்பலைன்னு தெரிஞ்சு அமைதியா ஒதுங்கிப் போனவர் அவளுக்கு வேறையொருத்தனோட கல்யாணம் நடந்து அவள் ஏமாற்றப்பட்டிருகிறாள் என்று தெரிந்தும் அவளுக்காக அவ மேல எந்தத் தப்பும் இல்லைனு ப்ரூவ் பண்ண இவ்வளவு ஸ்டெப்ஸ் எடுத்து எங்க இந்தச் சமயத்துல தன்னோட காதலைச் சொன்னா அது அவளை கார்னெர் பண்றதுக்கு சமம்னு தெரிஞ்சு அவ கிட்ட தன்னோட காதலையும் சொல்லாம ஏன் அதை உணர்த்த கூட முடியாம... முயலாம உன்னால உன் குடும்பத்தால அவர் தங்கை வாழ்க்கை பாதிக்கப்படும் போதும் உன்ன திடீர்னு வெளிய அனுப்ப கூடாதுனு நினைச்சி கூடவே வெச்சி இருக்காரு. இவருக்கு நான் எல்லாம் கண்ணை மூடிட்டு ஓகே சொல்லுவேன். சரி எப்படியும் உன் மேல எந்தத் தப்பும் இல்லைனு தெரிஞ்சு அவர் உன் அப்பாவைச் சமாதானப் படுத்தி இங்க கூட்டிட்டு வருவாரு. நீயும் அப்பாகூடப் போகப்போற. போ..." என்று சொல்லிவிட்டு வைக்கப்போனவள் இறுதியாக,"ஆதிரா ஒரே ஒருமுறை உன் மூளையைக் கொஞ்சம் யூஸ் பண்ணு ஆதி. உன் வாழ்க்கையில நீ ரெண்டு தவறான நபர்களைச் சந்தித்து இருக்க தான்... நான் அதை மறுக்கவில்லை. அதுக்காக அவர்களோட செழியனையும் கம்பேர் பண்ணாத. பை..." என்று சொல்லி வைத்துவிட்டாள்.

எல்லாவற்றையும் நினைத்துக்கொண்டு அப்படியே அங்கே அமர்ந்தாள் ஆதிரா. இதுவரை செழியன் தன் வாழ்வில் இருந்த நொடிகளையும் அவன் இல்லாத நொடிகளையும் நினைத்தாள். அன்றைய தினம் என்ன செய்யப் போகிறோம்? அடுத்து என்ன? என்று எதையுமே யோசிக்காமலே அங்கிருந்து ஊருக்குக் கிளம்பி வந்துவிட்டாள் தான். ஆனால் அங்கே அவள் கஷ்டப்பட்ட நாட்களை நினைக்கும் போது அவளுக்கு செழியனின் நினைவும் வந்துதான் போகும். அவள் செழியனுடன் பழகிய நாட்களிலும் சரி அவள் இளங்கோவை விரும்பிய நாட்களிலும் சரி இப்போதும் சரி அவன் பார்வை நடவடிக்கை எதிலும் எவ்வித மாற்றமும் இல்லை அன்றைய மழை தினத்தை தவிர்த்து. அப்படியே அமர்ந்திருக்க அவளுக்கு அழைப்பு வந்தது எடுத்தால் ஜானிடமிருந்து தான் அது என்று தெரிந்தவள் அதை அட்டென்ட் செய்து காதில் வைத்தாள். (தொடரும்...)
 
ரொம்ப அருமையான பதிவு
தெளிவான முடிவு எடுப்பாளா
 
வானிலை சட்டென்று மாறியது....
ப்ரபோசல் டைம்க்கு வெயிட்டீங். (y)(y)
 
Top