Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயம் கேட்கும் காதல் 12

Advertisement

Riyaraj

Tamil Novel Writer
The Writers Crew
இதயம் கேட்கும் காதல்…

பகுதி 12.

செழியனிடம் கொடுத்த வாக்கு படி.. செழியனுக்கும், இதழினிக்கும் நிச்சயதார்த்தமும், மறுநாளே திருமணமும் என்று ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது ஒருபுறம்… ஆனால் இதுவரை, "மாப்பிள்ளை யார் ?!" என அறியாதது இதழினி மட்டுமே.

செழியன், மதி கார்மெண்ட்ஸ் வந்து சென்ற அடுத்த நாளே, இதழினியின் தந்தை மாரியப்பனை வீட்டிலேயே சென்று சந்தித்தனர், மதியும் சந்திராவும், உடன் சந்துரு மட்டும். அதுவும் இதழினி அன்று வேலைக்கு வந்திருப்பதை உறுதி செய்து கொண்டு...

இதழினி வீட்டில், ஆனந்திற்கு மட்டும் மதியையும், சந்துருவையும் நன்கு தெரியும் என்பதால், அவனே அவர்களை வரவேற்று அமர வைத்தான். என்னவென்றாலும் முதலாளி அல்லவா.!!

வந்தவர்களில், இருவரை பார்த்த மாரியப்பன் மட்டுமல்லாது அனைவரும் குழப்பமாய் பார்த்திருக்க, அவர்கள் குழப்பம் எதுவாய் இருக்கும் என்பதை யூகித்தது போன்று,

"வணக்கம். நா மதிவதனி. உங்க பொண்ணு இதழினி வேலை பார்க்கற கம்பெனி முதலாளி. இது என்னோட அக்கா சந்திராவதனா. நாங்க ரெட்டைபிறவி" என்றதுமே, அவர்களின் உருவ ஒற்றுமைக்கான காரணம் இப்போது தெளிவாகி போனது அனைவருக்கும்…
ஆனந்துக்குமே மதியை பார்த்திருந்தாலும் சந்திராவை இதுவரை பார்த்திராத காரணத்தால், இருவரின் ஒற்றுமையை அதிசயமாய் பார்த்திருந்தான்.

மதி, "எனக்கு கல்யாணம் ஆகி ரொம்ப நாளா குழந்தை இல்லாம இருந்தது. அக்காவுக்கு என் கல்யாணத்தின் போதே பொண்ணு பிறந்திட்டா, அடுத்து அவளுக்கு ரெண்டாவதா பையன் பிறந்த நேரத்தில தான், எனக்கு இருந்த பிரச்சனை தெரிய வந்தது.. அதாவது கர்ப்பபைல வந்த கட்டியால தான் இதுவரை குழந்தை தங்காம போச்சுன்னு.

அதோட விளைவு கர்ப்பபையையே வெட்டி எடுக்கணும். இல்லையென்றால் என்னோட உயிருக்கு ஆபத்துங்கற மாதிரி சூழ்நிலை. என் கணவருக்கு குழந்தையை விட என் உயிர் பெருசா தெரிஞ்சதால, கர்ப்பபையை எடுக்க சொல்லிட்டார்" என தனது அன்றைய நிலையை சொல்லும் போதே, சிறிதாய் கண்கள் கலங்கி வார்த்தைகள் கரகரக்க..
ஆதரவாய் கரம் பற்றினார் சந்திரா.

அக்காவின் கரத்தில் தொடுகையில் தன்னை மீட்டுக்கொண்டவர், சந்திராவை பார்த்து மென்மையான புன்னகையை சிந்திவிட்டு, "அதனால என்னோட அக்கா பையன் செழியனை அவங்க எனக்காக விட்டு கொடுத்தாங்க. செழியன் சந்திராவிற்கு மட்டுமல்ல, எனக்கும் அவன் தான் வாரிசு. அவன் சந்திரா கிட்ட வளர்ந்ததை விட அதிகமா என்கிட்ட தான் வளர்ந்தான்.

கொஞ்சம் விளையாட்டு குணம் இருந்தாலும் ரொம்ப நல்லவன். இப்ப அவனே தொழிலை தனியா நடத்தி முன்னேறி வந்துட்டான்.
இதெல்லாம் ஏன் சொல்றேன்னு குழப்பமா இருக்கா உங்களுக்கு" என்றதும்.. அவரும் அதையே சிந்தித்துக்கொண்டிருந்ததால்.

"ஆமாங்க.. மேடம்" என்றதும்.

"இந்த மேடத்த விட்டுட்டு சம்மந்தின்னு சொன்னா நல்லா இருக்குமின்னு நினைக்கிறேன்.
அதாவது.. என்னோட பையனுக்கு உங்க பொண்ணு இதழினிய கட்டிக்கொடுங்கன்னு கேட்க வந்திருக்கோம்" என நேரடியாக விசயத்திற்கு வர.
மாரியப்பன் நிலை தான் வார்த்தையில் வடிக்க முடியாததாய் இருந்தது.

காரணம் அவர்களின் வசதி பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பவர் .
'அவர்களுக்கு தன்னால் எப்படி ஈடாக செய்ய முடியும்?' என்ற பயமும், பதட்டமும் ஒருங்கே தோன்றியது. சாதாரண அரசு வேலையில் இருக்கும் ஹரிஹரனின் வீட்டினர் எதிர்பார்ப்பை நேரில் கண்டவராயிற்றே.. சூடு கண்ட பூனை நிலை…

அதனால், "நீங்க ரொம்ப பெரிய இடம். உங்க கிட்ட சம்பளம் வாங்கற சாதாரண வேலைகாரிய மருமகளாக்கிக்க நீங்க நினைக்கலாம்.
ஆனா எங்களுக்கு அது எப்படி முடியும்? நாளைக்கு உங்க வசதிக்கு செய்ய எங்களால முடியுமா? அதோட எனக்கு அடுத்தும் பொண்ணுங்க இருக்காங்க. இவ்வளவு பெரிய இடத்துல சம்மந்தம் பண்ணறது எங்களுக்கு ஒத்து வராது. தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க" என மனதை கல்லாக்கி கொண்டு மகளுக்கு கிடைக்க போகும் வசதியான வாழ்க்கையை தட்டிவிடுகிறோமே என்ற குற்ற உணர்வோடு சொல்லிட,

அதுவரையிலும் மதியை பேசவிட்டு அமைதியாய் அமர்ந்திருந்த சந்திரா முதல் முறையாக, மாரியப்பனிடம் சென்று, உரிமையோடு அவரின் கரம் பற்றி, "அண்ணா, என்னோட மருமகளை என் மகளா எனக்கு தர்றீங்களா? என் மகனோட சந்தோஷம், நிம்மதி எல்லாமே இதழினி கிட்ட தான் இருக்கு. அவ மட்டும் போதும் எங்களுக்கு.." என்ற சந்திராவின் வார்த்தையில், அவரின் உரிமையான அணுகுமுறையில், தனது பதட்டத்தையும், பயத்தையும் துறந்தவர், அவரின் வார்த்தைக்கு மறுப்பு தெரிவிக்கும் எண்ணத்தை விடுத்து சம்மதம் தெரிவித்தார் இந்த திருமணத்திற்கு….

மதியின் கம்பீரமான தோற்றம் கண்டு வந்த பதட்டம், சந்திராவின் சாத்வீகமான தோற்றத்தாலும், அவரின் பேச்சிலும் தெளிவாகி போனது மாரியப்பனுக்கு.

மாரியப்பனின் சம்மதம் கிடைத்ததும், செழியனை அங்கேயே வரவைத்து அவருக்கு அறிமுகபடுத்த, அவனின் எளிமையும், பேச்சும், கலகலப்பும் அவரை மருமகனின் தீவிர விசிறியாக்கி விட்டது என்றால் மிகையில்லை.
 
கிடைத்த சந்தர்ப்பத்தில், இதழினியிடம் காதல் சொன்ன செழியன் இவர் தான் என்பதை தெரிந்து கொண்ட சகோதரிகளுக்கு இரட்டிப்பு சந்தோஷம். அக்காவின் மனதில் இருப்பவரே மணவாளனாய் வந்ததை எண்ணி…

அதோடு, செழியனின் பந்தா இல்லாத அழகான பேச்சும் நடத்தையும், அந்த பெண்களை மேலும் அவன் பக்கமாய் சாய்த்துவிட்டது.

ஆனந்த் எப்போதும் போல தனித்து நிற்க, அவனிடம் தானே வழிய சென்று பேச்சில் இழுத்து, அவனையும் சகஜமாய் பேச வைத்துவிட்டான் வந்த சிறிது நேரத்திலேயே.

அதனாலேயே, அபிதாவும், வினிதாவும் இருவரும், 24 மணி நேரமும் மாமா புகழ் பாடாத குறை தான்.

எல்லாம் சரியாக இருந்தாலும், மாரியப்பனுக்கு சிறு பயமும் மனதில் இருக்கத்தான் செய்தது, அது, 'இதழினியின் சம்மதம் கிட்டுமா?' என்பதே.

அபியும் , வினிதாவும் அவரின் குழப்பத்திற்கு விடையாக, அன்றைய இதழினின் வார்த்தையை கூற, முழு மனதாய் சம்மதம் தெரிவித்தார்.

அங்கிருந்தே தங்களின் ஜோதிடரிடம் நாள் குறிக்க கேட்க.. வரும் முகூர்த்தத்தை விட்டால்.. நான்கு மாதம் சென்று தான் இவர்களின் ஜாதகத்திற்கான முகூர்த்தம் இருப்பதாக கூற,
இதுவரை செழியனை காக்க வைத்ததே போதும் என நினைத்த மதி..

"அண்ணா அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்த வச்சுக்கலாம். செலவு எல்லாமே எங்களோடது. நீங்க எங்க வீட்டு மகாலட்சுமிய முறையா, சந்தோஷமா அனுப்பிமட்டும் வைங்க போதும்" என்றதும்,

மாரியப்பனோ, "என்னால உங்க அளவுக்கு முடியாதும்மா. இருந்தாலும் ஏதோ என்னால முடிஞ்சது, என் மகளுக்கு செய்து அனுப்பறது தானே நல்லா இருக்கும்" என மாரியப்பன் சொல்லி முடிக்கும் முன்பே, செழியன்,

"மாமா, இதழினிக்கு வேண்டிய அளவு, நான் சேர்த்து வச்சிருக்கேன். நீங்க அவளுக்கு செய்ய நினைக்கறதையும் சேர்த்து, அடுத்து இருக்குற.. இந்த அராத்துங்களுக்கு செய்ங்க" என்று, அவரின் பாரத்தை குறைப்பதற்கு சொன்னதோடு, அந்த சூழலை சகஜமாக்க, அபி, வினியை வம்பிழுக்க, அவன் நினைத்து போலவே,
அபிவும் வினிவும் முறைத்திட, அடுத்த கணம், "மச்சினிச்சிய பகைச்சுக்க கூடாதில்ல. அதுக்காக வேணுமின்னா, நீங்க அழகிங்கன்னு சொல்லிடுறேன், ஓகே வா" என்று அந்தர்பல்டி அடித்து, அப்படியே பேச்சை மாற்றிட, அந்த இடமே சிரிப்பால் நிறைந்தது.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் இதழினி அலுவலகம் சென்ற நேரத்தில் நடந்ததால் அவளுக்கு எதுவும் தெரிய வாய்ப்பில்லை.

இதழினி வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும், கொஞ்சம் அவகாசம் கொடுத்து, அவளை அழைத்த மாரியப்பன், "அப்பா எது செஞ்சாலும் உன்னோட நல்லதுக்கு தான்னு நீ நினைத்தால், எந்த கேள்வியும் கேட்காமல், நான் பார்த்து முடிவு செய்திருக்கும் கல்யாணத்திற்கு சம்மதிக்கணும்" என்று கோரிக்கை வைக்க,

இதுவரை அவரின் எந்த வார்த்தைக்கும் மறுப்பு தெரிவிக்காத இதழினியும் மனதில் சிறு பாரத்துடன் இந்த திருமணத்திற்கு சம்மதித்தாள்.

'எதனால் அந்த பாரம்' என்பதை அவளே சரியாக உணராத போது . அதை யாரிடம் அவள் கூறுவாள்.
அவளின் சிறு சுணக்கமும், தாய் இருந்தாள் தெரிந்திருக்குமோ என்னவோ, மற்ற யாருக்கும் தெரியாது போனதை என்ன சொல்ல…

அவ்வாறு தெரிந்திருந்தால், செழியன் சொன்ன சர்ப்ரைஸுக்கு சம்மதம் சொல்லாமல், எல்லாவற்றையும் சொல்லியிருப்பார்கள், அபிதாவும், வினிதாவும்..

இதழினிக்கு தெரிந்தது எல்லாம், தான் வேலை பார்க்கும் கம்பெனியின் முதலாளி மகன் தான், தனக்கு முடிவு செய்யப்பட்ட மாப்பிள்ளை என்பது மட்டுமே. அந்த மாப்பிள்ளையின் பேரை கூட அறிந்து கொள்ள அவள் முயலவில்லை என்பதை கவனிப்போர் தான் அங்கு யாருமில்லை…

அபிதா, செழியன் வார்த்தையை மீறி அன்று அவனோடு எடுத்துக்கொண்ட செல்பியை காட்ட முயற்சித்தும், அதை பார்க்காமல் போனது இதழினியின் போறாத நேரம் தான்.
 
Top