Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 6

Advertisement

Aathirai

Well-known member
Member
1993

Episode - 6

மொட்டை மாடியில் தெரியும் நிலவை ரசித்தபடி, பெங்களுருவின் அந்த குளிரிலும் தன்னை மறந்து சிரித்துக்கொண்டே நின்றுகொண்டிருந்தான் அர்ஜுன்... வெகு நேரமாக இவனைக் காணோமே என்று தேடிக்கொண்டு வந்தான் அவன் நண்பன் ரமேஷ்...

ரமேஷ் அவனது சிறு வயது நெருங்கிய நண்பன்.. ரமேஷின் அப்பாவும், அர்ஜுனின் அப்பாவும் நண்பர்கள் என்பதால், அவர்கள் நட்பும் தொடர்ந்தது.. ரமேஷின் அப்பா மத்திய ரயில்வேயில் பணிபுரிந்துகொண்டிருந்தார். ஆகவே, அடிக்கடி பணி இடமாற்றம் ஏற்படும். நீண்ட வருடங்களாக சேலத்தில் இருந்தனர்.

அப்போது தான் அவர்கள் நட்புடன் இருந்தனர். அதன் பிறகு, ரமேஷின் குடும்பம் பெங்களூருவுக்கு குடி பெயர்ந்தது.. அது முதல், வருடம் ஒரு முறையாவது அவர்கள் வீட்டுக்கு வந்து தங்கி விட்டுச் செல்வான் அர்ஜுன்.. அதே போல தான் ரமேஷும்.. அவ்வப்போது சேலத்தில் உள்ள அர்ஜுன் வீட்டுக்கு வந்து செல்வான்..

அர்ஜுனின் தந்தை இறந்தது முதல், ரமேஷின் அப்பாவும், அம்மாவும் அவனைத் தங்கள் பிள்ளை என்றே கூறி அவனிடம் பாசம் காட்டுவர்.. அவனும் இங்கே வந்தால் தன் வீட்டில் எப்படி இருப்பானோ அப்படித் தான் இருப்பான்.. அதே போல தான் இந்த முறை கல்லூரி இளங்கலை படிப்பு முடிந்து இங்கே வந்திருந்தான்..

“டேய்... உன்ன எங்க எல்லாம் தேடறது...? எப்போ பாரு எங்கயாவது காணாம போயிடற... நேத்து கூட அப்படி தான், அந்த பிருந்தாவன் கார்டன்ல உன்னத் தேடி கண்டுபுடிக்கறதுக்குள்ள நான் ஒரு வழியாயிட்டேன்..”

என்று ரமேஷ் பேசிக்கொண்டிருக்க, அர்ஜுனோ எதையும் கேட்காமல், கண்டுகொள்ளாமல் மேலே வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்....

“டேய்... மவனே... உன்ன....” என்று அடிக்கப் போய்விட்டான் ரமேஷ்...

“டேய்.. டேய்.. வேணாம் டா.. விட்ரு... விட்ரு...” என்று அவன் கையைப் பிடித்தான் அர்ஜுன்...

“பின்ன என்ன டா... நான் பாட்டுக்கு இங்க பேசிட்டே இருக்கேன்... நீ ஏதோ கனவு உலகத்துல மிதந்துட்டு இருக்கியா...?” என்றான் ரமேஷ்...

“இல்லடா மாப்ள... நேத்து பிருந்தாவன் கார்டனுக்கு போயிருந்தோமே, அங்கே வாட்டர் டான்ஸ் பாக்க போன இடத்துல ஒரு பொண்ணப் பார்த்தேன் டா... சடர்ன்னா கரன்ட் போனதுல அவ என்னோட கையப் புடிச்சுட்டா... ஹும்ம்ம்... நிஜமா சொல்றேன்டா, அந்த நிமிஷம் எனக்குள்ள ஏதோ ஷாக் அடிச்ச மாதிரி இருந்தது...” என்று பரவசப்பட்டான் அர்ஜுன்..

“நிஜமாவாடா சொல்ற... என்னால நம்ப முடியலையே... நீ அவ்ளோ சீக்கிரம் பொண்ணுங்கள ஏறெடுத்துப் பாக்கற ஆள் இல்லையே...” என்றான் ரமேஷ் சந்தேகத்தோடு...

“டேய்... எல்லா பொண்ணுங்களையும் அப்படி பாக்க முடியாதுடா...ஆனா, எனக்காக ஒரு பொண்ணு பிறந்திருப்பா இல்லையா, அவள நான் பாக்காம, வேற யார் பார்ப்பா...??” என்றான் அர்ஜுன்...

“ஹும்ம்ம்... சூப்பர் சினிமா டைலாக்... சரி அப்பறம் என்னதான் ஆச்சு...” என்றான் ரமேஷ் சிரித்துக்கொண்டே...

“அப்பறம் என்ன, கரன்ட் வந்ததும் அவ என்னைப் பார்க்க, நான் அவளைப் பார்க்க... ஹும்ம்ம்... எனக்கு அப்படியே இருந்திருக்கலாம்னு தோணிச்சு...” என்று எங்கேயோ பார்த்துக் கொண்டு சொன்னான் அர்ஜுன்...

“அப்படியே இருந்திருக்க வேண்டியது தான மாப்ள...” என்றான் ரமேஷ்...

“ஹும்ம்... எங்க... அதுக்குள்ள நீதான் கரடி மாதிரி வந்து என்ன இழுத்துட்டு வந்துட்டயே...” என்று அவனை சலித்துக்கொண்டான் அர்ஜுன்...

“அடப்பாவி, கடைசில என்ன கரடின்னு சொல்றியா..!! நான் இப்படின்னு தெரிஞ்சிருந்தா, அங்க வந்திருக்கவே மாட்டேன்... அவ்ளோ நேரம் என் பக்கத்துல நின்னுட்டு இருந்தவன, திடீர்ன்னு காணலைன்னா எப்படி இருக்கும்.. அதுவும், கரன்ட் வேற போயிடுச்சு... நான், ஒரு நல்ல எண்ணத்துல தாண்டா உன்னத் தேடி வந்தேன்... ஆனா, நீ இப்படி சொல்லிட்டயே மாப்ள...” என்று ஒப்பாரி வைத்தான் ரமேஷ்...

“சரி விடு மாப்ள... பிரண்ட்ஸ் லைப்ல இதெல்லாம் சகஜம்... ஹும்ம்... எனக்கு மறுபடியும் அவளப் பாக்கணும் போல இருக்கு டா...” என்று திரும்பவும் வானத்தைப் பார்த்தான் அர்ஜுன்..

“அதென்ன சும்மா சும்மா வானத்தைப் பார்த்துட்டே பேசிட்டு இருக்க... அப்படி அதுல என்னடா தெரியுது...??”

“நிஜமா மாப்ள... அந்த நிலாவப் பார்த்தா அவ தெரியுறா டா... அதான், அதையே பாத்துட்டு இருக்கேன்...”

“டேய்... ஓவரா சினிமா டயலாக்கெல்லாம் விட்டுட்டு இருக்காதே... இந்த குளிர்ல பேய் கூட இங்க இருக்காது. நீ என்னடான்னா..! இவ்ளோ பெரிய சிட்டில அவ எங்க இருக்கான்னு உனக்குத் தெரியுமா...?? அவள எங்கேன்னு போய் தேடுவ..?”

“தேடறதா... நான் எதுக்கு போய் தேடனும்...? இதெல்லாம் நாம எதிர்பார்த்து நடக்கறது இல்ல மாப்ள... எல்லாம் தானாவே நடக்கறது... நானா தேடிப் போயா அவளப் பார்த்தேன்.. அவளா வந்து என் கையப் புடிச்சா... ஏன் புடிச்சான்னு அவளுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது... ஆனா, ஏதோ ஒண்ணு இருக்கு... இல்லன்னா எனக்கு அப்படி பீல் ஆகாது...” என்று உணர்ச்சிவசப்பட்டான் அர்ஜுன்...

“ஹும்ம்ம்... நீ மட்டும் பீல் பண்ணா போதுமா டா... அந்தப் பொண்ணுக்கும் உன்ன மாதிரியே பீல் ஆச்சான்னு தெரியுமா..??”

“கண்டிப்பா மாப்ள.. அவளும் என்ன மாதிரி தான் பீல் பண்ணா..”

“அதெப்பிடி டா... அடிச்சு சொல்ற... பொண்ணுங்க மனசுல என்ன இருக்குன்னு யாருமே சட்டுன்னு சொல்ல முடியாது... அப்படி இருக்கும் போது உனக்கு எப்படி தெரியும்...??”

“இல்ல டா... நான் அவ கண்ணுல அதப் பார்த்தேன்.. என்ன கண்ணு டா... சாமி.. அப்பா, மீன் மாதிரி கண்ணு... கண்ணே ஆயிரம் கதை சொல்லும்.. அவ பார்த்த பார்வையே அத சொல்லுச்சு... கண்டிப்பா எனக்காக பொறந்தவ அவ தான் டா...”

“ஏன்டா... இப்படியும் சொல்ற... அப்பறம் நான் ஏன் தேடனும்னு சொல்ற... என்னதான் டா சொல்ல வர...??”

“மாப்ள... உனக்கு புரியலையா...?? கடவுள் தானாவே எங்கள சந்திக்க வைச்சு, அப்பறமா சேர்த்து வைப்பாருன்னு சொல்றேன்... அவ எங்கே இருந்தாலும், எனக்காக வருவான்னு சொல்றேன்... போதுமா..” என்று சொல்லி சிரித்தான் அர்ஜுன்...

“என்னமோ டா... நீ எத வைச்சு இப்படியெல்லாம் பேசறன்னு தெரில... ஆனா, என் மனசுக்கு நீ கொஞ்சம் ஓவர் கான்பிடன்டா இருக்கறதா தோணுது... எதுக்கும் ஒரு தடவைக்கு, ரெண்டு தடவ யோசிச்சுக்கோ... ஏன்னா, நீ சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு... நீ மட்டும் தான் உலகம்ன்னு உன் அம்மா நம்பிட்டு இருக்காங்க... நீ இப்படி காதல், கீதல்னு சுத்திட்டு வாழ்க்கைல கோட்டை விட்டுடாதே டா மாப்ள...” என்று சற்று சென்டிமென்டாக பேசினான் ரமேஷ்...

“ஹே... நீ என்னப் பத்தி என்னடா நெனச்ச...?? நான் அப்படிப்பட்டவன் இல்ல டா... எனக்கு என்னோட லைப் ரொம்ப முக்கியம்... நிறைய சாதிக்கணும்னு கனவு இருக்கு... காதலுக்காக லைப்ப விட்டுட்டு போறவன் கிடையாது... நீ இத வைச்சு மட்டும் என்ன எடை போடாதே... இது இப்போ உண்டான உணர்வு... அது உண்மைன்னா, கண்டிப்பா எல்லாம் தானாவே நடக்கும்...” என்று அர்ஜுன் சற்று வருத்தமாகவே சொன்னான்.... கண்களில் இருந்து கொஞ்சம் கண்ணீர் கூட வந்து விட்டது...

“டேய்... எதுக்கு டா உன் கண்ணு கலங்குது... நீ சர்வ சாதரணமா எதுக்குமே கலங்க மாட்டியே... அந்த அளவுக்கு இது உன் மனச பாதிச்சுடுச்சா...?? ஆனா, கவலைப்படாதே டா... உன் நம்பிக்கை உண்மையாகனும்னு நான் கடவுள்கிட்டே வேண்டிக்கிறேன்... இப்போ வா... அம்மா எப்போவே சாப்பிடக் கூப்பிட்டாங்க...” என்றான் ரமேஷ்... அர்ஜுனோ எதுவும் பேசாமல் அவன் பின்னே சென்றான் மனதில் ஒன்றை நினைத்தவாறு...
 
Top