Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 41

Advertisement

Aathirai

Well-known member
Member
Episode 41

அன்று நடந்த சம்பவத்திற்க்குப் பிறகு, அர்ஜூனும், ரவியும் தாங்கள் புக் செய்த பஸ்ஸில் பயணம் செய்து பெங்களூருவில் உள்ள ரமேஷின் வீட்டிற்க்கு வந்தனர். எப்பொழுதும் வரும் அர்ஜூனின் வரவை விட, இந்த முறை எதிர்பாராமல் வந்த ரவியின் வரவால் வீடே சற்று அதிக கலகலப்பானது.

அவனுடைய துடுக்குத்தனமான பேச்சை வெகுவாக ரசித்தனர் ரமேஷின் வீட்டினர். ஆனால், அர்ஜூனோ அதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் இல்லை. போனில் மதுவின் திருமணத்தின் போது மருதமலையில் அஞ்சலிக்குத் தெரியாமல் எடுத்த அவளின் போட்டோவையே பார்த்தபடி இருந்தான்.

அப்படியே மெல்ல நகர்ந்து மொட்டை மாடிக்கு வந்து அஞ்சலிக்கு பொன் செய்தான். ஆனால், அவளோ இந்த முறை சற்று அதிக கோபத்தில் மட்டுமல்ல, வெறுப்பிலும் இருந்தாள். அதனால், அவன் அழைக்கும் போது போனை எடுக்கவே இல்லை.

அர்ஜூன் திரும்பத் திரும்ப அழைத்தாலும், அவள் அதை கட் செய்து கொண்டே தான் இருந்தாள். பொறுமை இழந்தவள் ஒரு கட்டத்தில் போனை சைலண்ட் மோடில் போட்டு விட்டு ரூமை விட்டுச் சென்றாள்.

நீண்ட நேரமாக அர்ஜூனைக் காணவில்லை என்று ரமேஷூம், ரவியும் அவனை அழைக்க மொட்டை மாடிக்கு வந்தனர். வந்தவர்கள் அவன் போனைக் காதில் வைப்பதும், பிறகு எடுப்பதையும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“என்னாச்சு டா மாப்ள.? எதுக்கு போனையே பார்த்துட்டு நின்னுட்டிருக்க.? ஏதாவது பிரச்சினையா.?” என்று ரமேஷ் கேட்க, அவன் அமைதியாகவே நின்றான்.

அவன் ஏன் அப்படி இருக்கிறான் என்று தெரிந்துகொண்ட ரவியோ, ரமேஷிடம் சொன்னான். “ஹூம்ம்.. பிரச்சினையப் பண்ணதே அவன் தானே. அதனால தான் பேசாம நிக்கறான்.” என்று ரவி அவனை முறைத்துக்கொண்டே சொன்னான்.

“ஏன், ரவி.? என்னதான் ஆச்சு.? நீயாவது சொல்லேன்.” என்று ரமேஷ் கேட்க, ரவி நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான்.

“அடப்பாவி, ஏண்டா மாப்ள இப்படிப் பண்ண.? தானா வந்த தேவதைய அடிச்சு விரட்டின கதையா இருக்கு உன் கதை.” என்றான் ரமேஷ்.

“இதுல ஒரு விஷயம் என்ன தெரியுமா.? நான் இவனும், அஞ்சலியும் பஸ்ல சேர்ந்து ஒண்ணா வரணும்னு, அஞ்சலி புக் பண்ணிருந்த பஸ் டிக்கட்ட எடுத்து வைச்சிட்டேன். அப்படியாவது அவங்க ரெண்டு பேரும் பேசிக்குவாங்கன்னு. ஆனா, இவன் இருக்கானே அதையும் கெடுத்துட்டான்.” என்று ரவி தான் அன்று அஞ்சலியின் பேகில் இருந்து டிக்கட் எடுத்த உண்மையையும் கூறினான்.

“ஹூம்ம்.. பாரு, ரவி கூட உன் லவ்வுக்காக எவ்ளோ மெனக்கெட்டு திருடனா மாறியிருக்கான். ஆனா, நீ எந்த ஒரு விஷயத்தையுமே சீரியஸா எடுத்துக்காம எல்லாத்தையும் சொதப்பி வைச்சிருக்க. உனக்கு என்னதாண்டா பிரச்சினை.?” என்று ரமேஷ் திரும்பவும் கேட்க,

“இல்லடா மாப்ள, அவளுக்கு இன்னொருத்தனோட நிச்சயம் ஆயிடுச்சுன்னு தெரிஞ்ச நாள்ல இருந்தே மனசளவுல நான் எவ்ளோ கஷ்டப்பட்டுட்டு இருக்கேன் தெரியுமா.? இப்போவரைக்கும் என்னால அதை ஏத்துக்க முடியல. அப்படி இருக்கும் போது, நான் எப்படி அவகிட்ட சாதாரணமா பேச முடியும்.? அதனால தான், அவளா பேச வந்தப்போ கூட நான் எதுவும் பேசாம இருந்தேன். அவள அவாய்ட் பண்ணேன்.” என்று தன் மனவலியை அவர்கள் இருவரிடமும் சொல்லி அழுதே விட்டான் அர்ஜூன்.

“டேய்.. என்னடா நீ இப்படி அழற.? அவளே நிச்சயம் ஆனதுக்கப்பறம் வந்து பேசறான்னா, உனக்கு ஏன் பேச கஷ்டமா இருக்கு.? அவளுக்கு நிச்சயம் தானடா ஆயிருக்கு. இன்னும் கல்யாணம் ஆகலையே. அதுவும், அவளுக்கு இதுல விருப்பம் இருக்கா, இல்லையான்னு யாருக்குத் தெரியும்.? நீ அதெல்லாம் கேட்டியா.?” என்றான் ரமேஷ்.

“ஹூம்ம். இவன் மொதல்ல அவகிட்ட பேசினாத்தானே. இந்த டைம் சார் கொஞ்சம் ஓவராவே பண்ணிட்டார். அதான், ஓவர்டோஸ் ஆயிடுச்சு.” என்று ரவி சொல்ல, அர்ஜூன் அவனை முறைத்தான்.

“சரி, விடு மாப்ள. நீ ஒண்ணும் ஃபீல் பண்ணாத. அவளுக்கு போன் பண்ணிப் பேசு.” என்றான் ரமேஷ்.

“ஹூம்ம். இதோட இருபது தடவைக்கு மேல கூப்பிட்டிருப்பேன். எடுக்கவே மாட்டிங்கறா. போன சைலண்ட்ல போட்டுட்டான்னு நினைக்கிறேன்.” என்றான் அர்ஜூன்.

“ஹூம்ம்.. அவளாவது பரவால்ல, சைலண்ட் மோட்ல தான் போட்டா. நானா இருந்தா போன ஸ்விட்ச் ஆஃபே பண்ணிருப்பேன்.” என்றான் ரவி.

“ரவி, நீ கொஞ்சம் சும்மா இரு. மாப்ள, நீ ஒண்ணு பண்ணு. நாளைக்கு நீ அவங்க வீட்டுக்கே போயிட்டு நேர்ல பார்த்து உன்னோட பிரச்சினைய அவகிட்ட டைரக்டாவே சொல்லிடு. என்னைக் கேட்டா அதுதான் ஒரே வழி. நீ இப்படியே பண்ணிட்டு, தயங்கிட்டு இருந்தா வேலைக்கே ஆகாது. சரியா.?” என்று சொல்ல, அவனுக்கும் அதுவே சரியென்று தோன்றியது.

“சரிடா மாப்ள. நாளைக்கு நேர்ல போய் பேசிக்கிறேன்.” என்றான் அர்ஜூன் உறுதியாய்.

அடுத்த நாள் ரமேஷ் சொன்னது போலவே, அர்ஜூனும், ரவியும் அஞ்சலியின் வீட்டுக்குக் கிளம்பிச் சென்றனர். எதிர்பாராத இவர்களின் வரவினால் சற்று ஆடித்தான் போனாள் அஞ்சலி.

ஆனால், அஞ்சலியின் வீட்டிலோ அவர்களுக்கு ஏகபோக வரவேற்பு. அதுவும் பானுமதிக்கு அர்ஜூனைப் பார்த்ததும் அத்தனை சந்தோஷம். ஜூஸ், ஸ்நேக்ஸ் என்று கொடுத்து அவர்களை மகிழ்வித்தார். அஞ்சலி “வாங்க..” என்று சொன்னதோடு சரி, வேறு எதுவும் பேசவில்லை. நல்லவேளை, மகேஷ் அன்று வீட்டில் இருந்ததால் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

“ம்ம். படிப்பு முடிஞ்சுது. இனிமேல் என்ன பண்ணலாம்னு ஐடியா.? சும்மா தா கேக்கறேன். நீங்க ஒண்ணும் தப்பா நினைக்க வேண்டாம்.” என்றார் மகேஷ் கேஷூவலாக.

அவர்கள் இருவரும் சிரித்துக்கொண்டே பேசினர், “அப்படியெல்லாம் இல்லைங்க. நான் அல்ரெடி நிறைய ப்ராஜக்ட்ஸ் பண்ணதால, இந்தியாவோட ஒன் ஆஃப் த லீடிங்க் கம்பெனியோட கேம்பஸ் இண்டர்வியூல செலக்ட் ஆயிருக்கேன். நெக்ஸ்ட் மன்த்ல இருந்து ஜாயின் பண்ண சொல்லியிருக்காங்க. ரவி என்னோட ரெஃபரென்ஸ்ல அங்கேயே இண்டர்வியூ அட்டன்ட் பண்ணான். அவனும் செலக்ட் ஆயிட்டான்.” என்று தாங்கள் இண்டர்வியூவில் செலட்க் ஆன கதையை சொல்லி முடித்தான் அர்ஜூன்.

“ஆமா சார். அர்ஜூன் இல்லைன்னா, நான் என்ன பண்ணிருப்பேன்னே தெரியல. ஏதோ அவனோட சிபாரிசால தான் நானும் செலக்ட் ஆக முடிஞ்சது. இல்லைன்னா யாரு சார் எனக்கெல்லாம் வேலை தரா.?” என்று சொன்னான்.

“அப்படி உன்னை நீயே குறைச்சு எடைப் போட்டுக்காதப்பா. இண்டர்வியூல கேட்கற கேள்வில பாதி அவங்களுக்கே தெரியாது. ஆனா, பாரு பதில் சொல்லியே ஆகணும். அனுபவம் தர பாடம் தான் அதிகம். ஏன், உங்க ஃப்ரெண்ட் ரமேஷ் கூட இப்படித்தான் சொல்லிட்டு இருந்தான். ஆனா, பாரு இப்போ ஒன் ஆஃப் த பெஸ்ட் எம்ப்ளாயி இன் த கம்பெனின்னா அது ரமேஷ்தான். அவனுக்கே, அவனுக்குள்ள இவ்ளோ திறமை இருக்கான்னு ஆச்சர்யமா இருக்கு. இப்போதான் அவனே அதைப் புரிஞ்சுக்கிட்டான். அது மாதிரி தான் இதுவும். எதையும் உன்னோட கம்ப்பேர் பண்ணிக்காம இருந்தாலே, நமக்குள்ள இருக்கற டேலண்ட் என்னன்னு நமக்குத் தன்னால தெரிஞ்சிடும்.” என்றார் மகேஷ்.

அவர் அப்படிச் சொல்லும் போது, அர்ஜூனுக்கு ரமேஷை நினைத்து மிகவும் பெருமையாய் இருந்தது. அதே சமயம் அஞ்சலியின் மாமாவை நினைத்தும் ஆச்சர்யமாக இருந்தது. யாரையும் குறைவாக எடை போடக் கூடாது என்பதை எத்தனை அழகாக விவரித்தார். இது போல் ஒருவரின் அன்பும், வழிகாட்டுதலும் இருந்தால் இந்த உலகத்தையே ஜெயித்து விடலாம். அந்த விஷயத்தில் அஞ்சலியும் சரி, ரமேஷூம் சரி கொடுத்து வைத்தவர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தான் அர்ஜூன்.

திடீரென அஞ்சலியைப் பற்றி நினைத்தவன், அவள் இன்னும் சரியாக முகம் கொடுத்துப் பேசாமல் இருந்ததை நினைத்துக் கவலை கொண்டான். அவளோ, ஒரு பார்வை கூட பார்க்காமல் அவனை ஏங்க வைத்தாள்.

“அப்பறம், அஞ்சலிக்கு திடீர்னு நிச்சயம் பண்ணிட்டீங்க. அவ நிச்சய போட்டோ எடுத்து வாட்ஸாப்ல அனுப்பினதும் எங்களுக்கெல்லாம் ஒரே ஷாக் ஆயிடுச்சு. மாப்பிள்ளை எந்த ஊரு.? என்ன பண்றார்.?” என்று ரவி திடீரென்று அஞ்சலியின் மாப்பிள்ளையைப் பற்றி விசாரிக்க, மகேஷூக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“அது அஞ்சலியோட அப்பா, திடீர்னு ஏற்பாடு பண்ணிட்டதால எங்களுக்கே என்ன பண்றதுன்னு தெரியாம போயிடுச்சு. எல்லாமே சடர்ன்னா நடந்து முடிஞ்சிடுச்சு. நல்ல வேளையா உடனே மேரேஜ்ன்னு சொல்லாம விட்டாங்க. அதுவும், அஞ்சலியே இப்போ முடியாது. படிப்பு முடிஞ்சு அட்லீஸ்ட் ஒன் இயர் வொர்க் பண்ணதுக்கு அப்பறம் தான்னு சொல்லிட்டா. அதுவும் அவங்க அப்பா ஒத்துக்கல. மாப்பிள்ளை வீட்டுல ஓகே சொன்னதால சரின்னு சொல்லி விட்டுட்டார். எல்லாம் அவரோட கம்பல்ஷன்ல நடந்ததுதான். இதுல, அவரைத் தவிர யாருக்குமே விருப்பம் இல்ல.” என்று சொல்ல,

“அப்போ, அஞ்சலிக்கு.?” என்று அர்ஜூன் அவசரமாய்க் கேட்டான்.

“அவளுக்கும் தான். ஆனா, இப்போதைக்கு டைம் இருக்குன்னு நாங்களும் கொஞ்சம் பொறுமையா இருக்கோம். இன்னும் ஒரு வருஷம் கழிச்சுத்தான் இதற்க்கு ஒரு சொல்யூஷன் கண்டுபுடிக்கணும். ஏன்னா, புடிக்காம எப்படி ஒருத்தரோட எங்க பொண்ணு எப்படிப் போய் வாழ முடியும் சொல்லுங்க.?” என்று சொன்னார்.

அப்போதுதான் அர்ஜூனுக்குத் தான் செய்த தவறு உரைத்தது. அவளுக்கு இதில் விருப்பம் இல்லை என்று தெரியாமல் அவளை எப்படியெல்லாம் தவிர்க்க முடியுமோ, அத்தனையும் செய்து விட்டோமே என்று மனதுக்குள் நினைத்து புழுங்கினான்.

அவளைப் பார்த்த போது, அவள் அவனை இப்பொழுதாவது புரிந்ததா.? என்று கேட்பதைப் போல் இருந்தது அவள் பார்வை. அவனோ, அவள் பார்வையை எதிர்கொல்ல முடியாமல் கீழே குனிந்தவாறு இருந்தான்.

“சரி, நீங்க உங்க இன்னொரு ஃப்ரெண்ட், அதான் அந்தக் கேரளா பொண்ணு மேரேஜ்க்கு எப்போ கிளம்பறீங்க.?” என்றார் மகேஷ்.

“ஞாயிற்றுக்கிழமை மேரேஜ். அதனால, சனிக்கிழமை சாயங்காலம் கிளம்பி அங்க போய் டூ டேஸ் ஸ்டே மாதிரி பிளான் பண்ணிருக்கோம். அப்பறம் அடுத்த ஒரு நாள் அங்கயே சுத்திப் பார்த்துட்டு, திங்கட் கிழமை நேரா சென்னைக்கு ட்ரெயின்ல போயிடுவோம்.” என்றான் ரவி.”

“ஓ.. நல்லா பிளான் பண்ணிருக்கீங்க. ஆனா, உங்க பிளான்ல ஒரு சின்ன சேஞ்ச் பண்ணிக்கோங்க. உங்ககூட சேர்த்து அஞ்சலியையும் கூட்டிட்டுப் போயிடுங்க. ஏன்னா, அவளும் மேரேஜ்க்கு கண்டிப்பா போணும்னு சொல்லிட்டிருக்கா. நாங்க யாரும் எதுவும் சொல்லலைன்னாலும், அவளோட அப்பா அவள எங்கயும் அனுப்பக் கூடாதுன்னு ரொம்ப ஸ்டிரிக்ட்டா சொல்லியிருக்கார். ஆனா, என்னால அப்படி இருக்க முடியாது. பாவம் அவள வீட்டுக்குள்ளயே அடைச்சு வைக்கணுமான்னு யோசிக்கறேன். ஏதோ, மது மேரேஜ்க்கு சம்மதிச்சுட்டார். ஆனா, இப்போ இன்னொரு மேரேஜ்க்குப் போகணும்ன்னா கண்டிப்பா ஒத்துக்கமாட்டார். அவ போயிட்டு வரட்டும், அவருக்குத் தெரிஞ்சா அப்பறம் பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன். ஆனா அவளைத் தனியா அனுப்பவும் கஷ்டமா இருக்கு. அதனால தான் நீங்க போறீங்கன்னு சொல்றதால உங்ககூடவே அவள அனுப்பலாம்னு நினைக்கிறேன்.” என்று மகேஷ் சொல்லிக்கொண்டிருக்க, அவர் அப்படிச் சொல்வார் என்று எதிர்பார்க்காத அஞ்சலி,

“மாமா, ஒரு நிமிஷம் இங்க வாங்க..” என்று தனியே அழைத்தாள்.

எதற்க்கு இவள் திடீரென்று அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அழைக்கிறாள் என்ற சந்தேகத்தினுடனேயே சென்றார் மகேஷ்.


(தொடரும்...)
 
Nice epi dear.
Author ji romba busy ah?epi late ah koduthu irrukingo. Aanalum nalla irruku.
Friends are friends no compromise.
 
Top