Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 31

Advertisement

Aathirai

Well-known member
Member
Episode 31

பானுமதியின் இந்தக் கேள்வியால் சிறிது தடுமாறித்தான் போனாள் அஞ்சலி. என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தாள்.
“நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீ பதிலே சொல்லல.” என்று அவளையே ஆழமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தார். இதற்க்கு மேல் அவளால் மறைக்க முடியவில்லை.

“என்ன பதில் சொல்ல சொல்ற மா.? நான் என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கற. நான் எது நினைச்சாலும் எப்படியும் நடக்கப் போறதில்ல. அப்பறம் எதுக்கு நான் சொல்லணும்.” என்றாள் ஒரு வழியாக.

“அப்போ உனக்கு அந்தப் பையனப் பிடிச்சிருக்கு. ஆனா, எங்களுக்காக நீ எல்லாத்தையும் மறைக்கற. அப்படித்தானே.?” என்றார் பானுமதி.

அஞ்சலியிடம் பதிலில்லை. அமைதியாகவே இருந்தாள். சிறிது கண்ணீர் கூட எட்டிப் பார்த்தது. அவளின் முகத்தை நிமிர்த்திய பானுமதி, “எனக்கு நல்லாவே தெரியும். இன்னைக்கு நான் எல்லாத்தையும் கவனிச்சேன். நீ அந்தப் பையன் கூட இருக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருந்த. அதே மாதிரி, அந்தப் பையனோட அம்மாவும் உன்னைப் பத்தியே தான் என்கிட்ட பேசிட்டு இருந்தாங்க. அவங்களுக்கும் உன்னை ரொம்பப் பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். அந்தப் பையன பார்க்கும் போது நல்ல பையனா தான் தெரியறான். இல்லன்னா என்னை இவ்ளோ தூரம் அவனும், அவன் ஃப்ரெண்டும் சேர்ந்து காப்பாத்திருப்பாங்களா.?” என்றார்.

“நல்லவனா இருந்தா என்னம்மா பிரயோஜனம். அப்பா எதிர்பார்க்கிற மாதிரி பெரிய பிஸினஸ்மேன் பையனா இல்லையே அர்ஜூன். அவன், சாதாரண மிடில் கிளாஸ் பையன் தானே.? நல்லவனா இருக்கறத விட, பணக்காரனா இருக்கறது தான் முக்கியம்னு நீங்க நினைக்கும் போது என்ன சொல்ல முடியும்.” என்று சலித்துக்கொண்டவாறே பேசினாள் அஞ்சலி.

அவளின் மனநிலையை புரிந்தவறாக பானுமதி, “அப்படியெல்லாம் இல்ல அஞ்சலி. உனக்கு வரவனும் நல்லவனா இருக்கணும்னு தான் நாங்களும் நினைக்கிறோம்.” என்றார்.

“நீ நினைக்கிறன்னு சொல்லு மா. அப்பாவும் நினைக்கிறார்ன்னு சொல்லாத. அத நான் ஏத்துக்கவே மாட்டேன்.” என்றாள் வெறுப்பாக.

“சரி, அப்படின்னா ஸ்வேதா கல்யாணம் பண்ணிப் போன பையன் கூட நல்ல வசதியான வீட்டு பையன்னு தான் நாங்க கேள்விப்பட்டோம். ஆனா, அப்போ கூட அப்பா ஒத்துக்கலையே. அவர மீறி அவ காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கறது தான் அவர் பிரச்சினையே தவிர, ஒரு பணக்காரன் தான் வேணும்னு அவர் சொல்லவே இல்லையே.” என்று வாதிட்டார் பானுமதி.

ஒரு வகையில் யோசித்துப் பார்த்தால், அதுவும் உண்மைதான். அப்போது அப்பாவின் மனதில் என்னதான் இருக்கிறது. அவர் என்ன நினைக்கிறாரோ அதை செய்ய வேண்டும் என்பதையா.? என்று தனக்குள் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தாள்.

“ஏய்.. அஞ்சலி..” என்று உலுக்கினார் பானுமதி.

“சரி மா. அப்படின்னா, வேறென்ன தான் அப்பா எதிர்பார்க்கிறார்.? சொல்லுங்க. எனக்குப் புரியல.” என்றாள்.

“அது இப்போ வரைக்கும் எனக்கும் தெரியாது. இத்தனை வருஷம் அவர் கூட குடும்பம் நடத்தின எனக்கே அதைப் புரிஞ்சுக்க முடியலங்கறப்போ, உனக்கு எப்படிப் புரியும்.?”

“ஆனா, இப்போ கேட்கறேன் மா, நீங்களே சொல்லுங்க. அப்பா பண்ணது சரியா.? என்னோட மனசுல என்ன இருக்குன்னு தெரியாம, ஒருத்தன எனக்காக முடிவு பண்ணது எந்த விதத்துல நியாயம்.?” என்றாள்.

“அவர் பண்ணது தப்புதான் அஞ்சலி. ஸ்வேதா மேல இருக்கற கோபத்துல, அவர் அப்படியொரு முடிவு எடுத்திருக்கார். அதுவும் இல்லாம, அவரோட பார்ட்னர் கேள்வி கேட்பாரேன்னு ஒரு பயத்துல கூட அவர் இதை செஞ்சிருக்கலாம். அவர் இதுவரைக்கும் அவன் யாரு.? என்ன.? எப்படிப்பட்டவன்.? இதெல்லாம் என்கிட்ட கூட சொல்லல. ஒவ்வொரு பொண்ணுக்கும் கல்யாணம்னு வந்துட்டா, இந்த மாதிரி விஷயத்துல அவங்க அம்மாகிட்டயும் கலந்து பேசி முடிவு பண்ணுவாங்க. ஆனா, இங்க எல்லாமே தலைகீழ். என்ன பண்றது.? என்னோட சேர்த்து உங்களோட தலையெழுத்தும் இப்படின்னு ஆயிடுச்சு. வேறென்ன பண்ண முடியும்.?” என்று நொந்து கொண்டார் பானுமதி.

அம்மாவைப் பார்க்கும் போது அஞ்சலிக்கு பாவமாக இருந்தது. அப்பாவால் பாதிக்கப்படுபவர்கள் எத்தனை பேர் என்று தோன்றியது.

“சரி அஞ்சலி. இப்போதைக்கு உன்னோட படிப்பு முடியற வரைக்கும் உங்கப்பா உன்னோட கல்யாணப் பேச்சை எடுக்கப் போவது இல்லை. அதனால, நீ கொஞ்சம் தைரியமா இரு. இப்போதைக்கு எதப் பத்தியும் யோசிக்காத. உனக்கு அர்ஜூனைப் பிடிச்சிருக்கறது ஒண்ணும் தப்பில்ல. ஆனா, அது நல்லபடியா உங்கப்பா சம்மத்ததோட நிறைவேறினா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். ஏன்னா, என் பொண்ணுகளாவது அவங்க மனசுக்கு பிடிச்சவங்களோட சந்தோஷமா இருக்கணும். அவ்ளோ தான்.” என்று சொல்லி முடித்தார்.

“அம்மா, நீ தான் நிஜமா பேசறியா.? என்னால நம்ப முடியல. அன்னைக்கு அப்பா ஹாஸ்பிடல்ல இருந்தப்போ நீ என்ன சொன்ன.? ஆனா, இப்போ அப்படியே மாத்திப் பேசற.? நான் எதை எடுத்துக்கறது.? நிஜமா இந்த விஷயத்தினால நான் அர்ஜூன் கிட்ட பேசறதக்கூட நிறுத்திட்டேன். அவன் மனச எவ்ளோ காயப்படுத்திருக்கேன் தெரியுமா.? பாவம் மா அவன். ஆனா, பாரு அவன திரும்பத் திரும்ப என்கிட்டயே வர மாதிரி ஏதாவது ஒரு வழில இந்த விதி விளையாடுது. எனக்கு என்ன பண்றதுன்னு ரொம்ப குழப்பமா இருக்கு.” என்று தன் மனதில் உள்ளவற்றையெல்லாம் சொன்னாள்.

“அவனும், நீயும் சேரணும்னு விதி இருந்தா அத யாராலையும் தடுக்க முடியாது அஞ்சலி. அது, உங்கப்பாவா இருந்தாலுமே. பார்க்கலாம் விடு. இன்னும் ஒரு வருஷத்துக்கு நீ இதப்பத்தி யோசிக்காத. நல்லா படி. எப்பவும் உம்முன்னு இருக்காம, வீட்ல மொதல்ல எல்லாம் எப்படி இருப்ப.? அந்த மாதிரி இருக்கணும். என்னோட பழைய அஞ்சலியப் பார்க்கணும். அதே மாதிரி என்கிட்ட எப்பவும் பேசு. தயவு செய்து என்னை விலக்கி வைக்காதீங்க. என்னால் அத ஏத்துக்கவே முடியல. அதனால கூட எனக்கு இந்த மாதிரி ஆயிடுச்சோன்னு தோணுது. நீ சண்டை போட்டாலும் என்கிட்ட பேசு. அதுவே எனக்குப் போதும்.” என்று கையைப் பிடித்துக் கெஞ்சிய அம்மாவை அப்படியே அணைத்துக் கொண்டாள் அஞ்சலி.

“ஸாரி மா. உனக்கு இப்படி ஆகறதுக்கு நானும் ஒரு காரணமாயிட்டேன். இனிமேல் அப்படி நடந்துக்க மாட்டேன். நான் எப்பவும் போல இருக்கேன். ஆனா, நீ எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணனும்.” என்றாள்.

“என்ன.? சொல்லு.” என்றார் பானுமதி.

“நீ அக்காகிட்ட பேசு மா. அவ ரொம்ப ஃபீல் பண்றா. நீ பேசினா அவ ரொம்ப சந்தோஷப்படுவா. அன்னைக்கு ஒரு நாள் ரொம்ப அழுதா. அவளுக்கு நல்ல ஃபேமிலி கிடைச்சும் அவளால சந்தோஷமா இருக்க முடியல. நீயாவது அவகிட்ட பேசினா தான் பரவால்ல.” என்றாள் அஞ்சலி.

அவளை செல்லமாக முறைத்த பானுமதி, “அவ மேல எப்போ கோபம் குறையுதோ அப்போ கண்டிப்பா பேசறேன். சரியா.?” என்றார் வேண்டுமென்றே.

“மா. அது எப்போ குறையறது.? நீ எப்போ பேசறது.?” என்றாள்.

“அதெல்லாம் தெரியாது. எப்போ வேணாலும், அடுத்த நிமிஷம் கூட இருக்கலாம்.” என்றார் விளையாட்டாக.

“ப்ச்ச். மா. விளையாடாத. எனக்குத் தெரியாது நீ அக்காகிட்ட பேசியே ஆகணும். இதோ இப்போவே நீ பேசணும்.” என்று தன் போனில் ஸ்வேதாவிற்க்கு போன் செய்தாள்.

“ஏய்.. அஞ்சலி வேண்டாம். ப்ளீஸ் நான் அப்பறமா பேசிக்கறேன். சொன்னா கேளு.” என்றபடி அவளிடம் சொல்லிக்கொண்டிருக்கவே, அஞ்சலியின் அழைப்பில் ஸ்வேதா எடுத்தாள்.

அவளோடு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவள், பிறகு போனைக் கொண்டு வந்து பானுமதியிடம் நீட்டினாள். முதலில் வாங்க மறுத்தவர், பிறகு அஞ்சலியின் வற்புறுத்தலால் போனை வாங்கி பேச ஆரம்பித்தார்.

அவர்கள் பேசட்டும் என்று அவள் வெளியே வந்துவிட்டாள். அந்த நிமிடம் தான், அவள் மனது சற்று தெளிவாக இருந்தது. அம்மா இப்படியொரு அதிர்ச்சியை கொடுப்பாள் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதே போல், அவளுக்கு ஆதரவாகவும் பேசுவாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதுதான் கடவுளின் விளையாட்டா.? கடவுள் என்னதான் தன் வாழ்க்கையை முடிவு செய்து வைத்திருக்கிறார்.? என்று தெரியாமல் யோசித்துக்கொண்டிருந்தாள்.

உள்ளே அம்மா அழைக்கும் சத்தம் கேட்டது. உள்ளே ஒரு எதிர்பார்ப்புடன் சென்றாள். “ம்ம். பேசிட்டியா மா. என்ன சொன்னா அக்கா.?” என்றாள்.

“முதல்ல அழுதா. அப்பறம் எப்பவும் போல பேசிட்டிருந்தா. ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு சொன்னா. இதே மாதிரி அப்பாவும் ஒரு நாள் பேசுவார்ன்னு நம்பறேன்னு சொன்னா. வீட்ல இருக்கறவங்களப் பத்தி பேசிட்டிருந்தா. அவ்ளோ தான்.” என்று முடித்து விட்டார்.

“ம்ம். இனிமேல் பாரு. தினமும் நாலஞ்சு தடவையாவது ரெண்டு பேரும் போன்ல பேசிக்கிறீங்களா, இல்லையான்னு.?” என்று அவள் சொல்லி கிண்டலடித்தாள்.

“ஏய்.. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல.” என்றவர், “ஆங்.. உனக்கு ஒரு கால் இடையில வெயிட்டிங்க்ல வந்துச்சு. நான் அதை கவனிக்கல. நீ யாருன்னு பார்த்துரு.” என்றார் பானுமதி.

யார் என்று பார்த்தவள், அர்ஜூன் அழைத்திருந்ததைப் பார்த்ததும் முகம் மாறினாள். “ஏய்.. யாரு அஞ்சலி.” என்றார் பானுமதி.

“அர்ஜூன் தான் மா.” என்றாள் அவரைப் பார்த்தவாறே.

“போ. போய் பேசு. என்னன்னு கேளு.” என்று சிரித்தார்.

அவளுக்கு அப்போது தான் சந்தோஷமாக இருந்தது. ஆசையுடன் அவனது நம்பருக்கு திருப்பி அழைத்தாள். ரிங் செல்லச் செல்ல மனதுக்குள் ஒருவித நடுக்கம் உண்டானது. அவன் போனை அட்டண்ட் செய்ததும், ஒரு நிமிடம் என்ன செய்வது என்று நெஞ்சம் ஸ்தம்பித்துப் போனது.

“ஹலோ.. அஞ்சலி.” என்றான் அர்ஜூன் எதிர்முனையில்.

“ஆங்.. ஹலோ.. அர்ஜூன். நீ கால் பண்ணிருந்தியா.? என்னோட போன்ல அம்மா பேசிட்டிருந்தாங்க. கால் வெயிட்டிங் வந்ததுன்னு சொன்னாங்க. இப்போ தான் யாருன்னு பார்த்தேன். சொல்லு அர்ஜூன்.” என்றாள்.

“ஆமா, அஞ்சலி. ஸாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா.?” என்றான்.

“ச்சே.. ச்சே அப்படியெல்லாம் இல்லை அர்ஜூன். சொல்லு.” என்றாள்.

“இல்ல, சும்மா தான் கூப்பிட்டேன். இன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்தது அங்க உங்க எல்லார் கூடயும் டைம் ஸ்பெண்ட் பண்ணது எல்லாமே ரொம்ப நல்லா இருந்துச்சு.” என்று அர்ஜூன் என்ன பேசுவதென்று தெரியாமல் பேசிக்கொண்டிருந்தான்.

“ஓ.. ம்ம். எனக்கும் ரொம்ப ஹேப்பியா இருந்துச்சு அர்ஜூன். நானும் எதிர்பார்க்கல. எங்க வீட்லயும் எல்லாரும் ரொம்ப ஹேப்பியா ஃபீல் பண்ணாங்க.” என்று அவளும் எதையோ சொல்ல, அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை இருவருக்கும்.

“சரி, வேற என்ன.?” என்றாள் அஞ்சலி.

“ஆங்.. மதுகிட்ட பேசினியா.?” என்று அவன் கேட்க, எதற்க்கு இவன் இப்படி தயங்குகிறான் என்றே யோசிக்கத் தோன்றியது.

“இல்ல.. இனிமேல் தான் பேசணும்.” என்றாள்.

ஏதோ, டிவியில் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்வதைப் போல் இருவரும் மாறி, மாறி பேசிக்கொண்டிருந்தனர்.

“சரி, போனை வைச்சிடட்டுமா.?” என்றான்.

இன்னும் கொஞ்ச நேரம் பேசினால் நன்றாகத்தான் இருக்கும் என்று தோன்றியது அவளுக்கு. ஆனால், அதை சொல்ல முடியாமல், “சரி அர்ஜூன்.” எவ்வித தயக்கமும் இல்லாமல் சொல்ல, அவனும் வேறு வழியில்லாமல், “ஓகே பை..” என்று வைத்துவிட்டான்.

“அர்ஜூன்...” என்று அவள் சொல்லும் போதே அவன் வைத்துவிட்டான்.

அவள் ஏதோ சொல்ல வந்ததைப் போல் தோன்ற திரும்பவும் அழைத்தான். அதைப் பார்த்ததும் அவள் மனதில் ஒருவித சந்தோஷம் ஏற்பட்டது.

“ஹலோ.. அஞ்சலி ஏதாவது சொல்ல வந்தியா.? நான் தான் அவசரப்பட்டு கட் பண்ணிட்டேனா.?” என்றான் ஆவலுடன்.

அவனின் ஆவலை எண்ணி அவளுக்கு சிரிப்பு வந்தது. “இல்ல, அர்ஜூன். ஜஸ்ட் குட் நைட் சொல்லலாம்னு தான் இருந்தேன்.” என்றாள்.

“ஓ.. அப்படியா. ம்ம். குட் நைட். இப்போ வைக்கட்டுமா.?” என்றான் திரும்பவும்.

“ம்ம்...” என்று அவளும் சொல்ல, இருவரும் ஒரே நேரத்தில் போனை வைத்தனர்.

ஏன் இந்த தயக்கம்.? என்று புரியவில்லை இருவருக்கும். ஏதோ ஒன்று மனதில் தோன்ற அர்ஜூனுக்கு அவளது குரலைக் கேட்க வேண்டும் போல் தோன்றவே அவன் அழைத்திருந்தான். ஆனால், அதை அவளிடம் சொல்ல முடியவில்லை. அதே போல், அவன் அழைத்த உற்சாகத்தில் ஆவலுடன் பேசியவளுக்கு எதுவும் சொல்ல முடியாமல் போகவே அவளும் விட்டுவிட்டாள்.

மனதைத் திறந்து பேச நேரம் எப்போது தான் வாய்க்கும் என்று தோன்றியது இருவருக்கும்.


(தொடரும்...)
 
Top