Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 30

Advertisement

Aathirai

Well-known member
Member
Episode 30

ரகுராம் அழைத்த நிமிடம் அனைவரும் ஒரு நிமிடம் பயந்து தான் போயினர். என்ன சொல்லப் போகிறாரோ என்ற பயத்தில் அவர் அருகில் சென்றான் அர்ஜூன். அதே சமயம் ரமேஷையும் வருமாறு சைகை காட்டினார்.

அர்ஜூனின் கையைப் பிடித்தவர், “ரொம்ப நன்றி பா. எனக்கு சில சமயம் எப்படி பிஹேவ் பண்றதுன்னு தெரியாது. ஆனா, நீங்க செஞ்ச உதவிய என்னால மறக்க முடியாது. அவள எங்களுக்குத் திருப்பித் தந்ததுக்கு உங்களுக்கு என்ன கைமாறு பண்ணப் போறேன்னு தெரியல.? கண்டிப்பா உங்களுக்கு என்ன உதவின்னாலும் நான் செய்யறேன்.” என்று அவர்களிடம் பேச அனைவரும் ஒரு நிமிடம் வாயடைத்து தான் போயினர்.

அந்த இடைவெளியில் ரமேஷ், அர்ஜூனிடம், “டேய். உங்க மாமனாருக்கு என்ன கைமாறு பண்றதுன்னு தெரியலையாம். அதனால, உங்க பொண்ண மட்டும் குடுங்கன்னு கேளு.” என்று அவனின் காதில் முணுமுணுத்தான் ரமேஷ்.

“டேய். சும்மா இருடா. நானே பயந்து போயிருக்கேன்.” என்று அவனை மெதுவாக அதட்டினான் அர்ஜூன்.

“என்னப்பா, உங்களுக்குள்ளேயே பேசிட்டிருக்கீங்க. என்ன உதவி வேணும்னாலும் தயங்காம கேளுங்கப்பா.” என்றார் அவர் எதார்த்தமாக.

“இல்ல அங்கிள், அப்படி எந்த உதவி தேவைப்பட்டாலும் நாங்க உங்ககிட்டதான் முதல்ல கேட்போம்.” என்று எதையோ சொல்லி மழுப்பினான் ரமேஷ்.

“கண்டிப்பா. சரி, எல்லாரும் போய் சாப்பிடுங்க. இன்னைக்கு முழுக்க எங்க வீட்ல இருந்து நல்லா என்ஜாய் பண்ணுங்க.” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

நிஜமாகவே பேசியது இவர் தானா என்று அவர்கள் நால்வரும் திகைத்து நிற்க, இவர்கள் மூவரும் அவர் மிக நல்லவர் என்ற எண்ணத்தில் இருந்தனர். எப்படியோ அவர் வேறு எதுவும் சொல்லவில்லை என்று சற்று நிம்மதியாக இருந்தது அஞ்சலிக்கு.

அனைவரும் மதிய உணவை சாப்பிட்டனர். அவர்களுக்கென்று சில சிறப்பான உணவுகளை அஞ்சலியும், மீனாவும் பார்த்துப் பார்த்து செய்திருந்தனர். அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு முடிக்க, ஜானகி சிறிது நேரம் பானுமதி அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து சிறிது நேரம் ஓய்வெடுத்தார். ரகுராமும் ஒரு தனி அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

அர்ஜூனும், ரமேஷூம், வருண் மற்றும் பூஜாவுடன் கார்டனில் சென்று பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களின் உற்சாகத்தில் மகேஷூம் சேர்ந்து கொண்டு விளையாடினார். நீண்ட நாள் கழித்து அவர் பிள்ளைகளுடன் விளையாடுவதை மீனா நின்று ரசித்துக் கொண்டிருந்தாள்.

அஞ்சலிக்கு அப்போது அர்ஜூனிடம் பேசினால், நன்றாக இருக்கும் என்று தோன்றியது. எப்படியாவது வாய்ப்பு கிடைக்குமா.? என்று ஏங்கினாள். அவளின் மனது அவளைத் திட்டியது, “உனக்கு நன்றாக வேண்டும், அவன் பேச வரும் போதெல்லாம் ஏதோ பெரிய மகாராணியைப் போல் சிலுப்பிக் கொண்டு சென்றாய் தானே.? இப்போது அவனிடன் பேச உன்னால் முடியவில்லையே.? என்ன செய்வாய்.?” என்று சொல்ல, அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

அவள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அதற்க்குள் மீனா, அனைவருக்கும் டீ போட்டு எடுத்துக்கொண்டு வந்தாள். அதை பருக வேண்டி அனைவரும் கை, கால் கழுவிக்கொண்டு வந்து குடித்தனர். அப்போது, அர்ஜூன், “இங்கே மொட்டை மாடி இல்லையா.?” என்று எதார்த்தமாகக் கேட்க,

மகேஷோ, “மொட்டை மாடி இல்லாம வீடு கட்டுவேனா பா. அதோ அங்க தான் இருக்கு. அஞ்சலி உன் ஃப்ரெண்ட் வந்திருக்கான். நீ வீட்ட சுத்திக் காட்ட மாட்டியா.? போய் காட்டு.” என்று சொல்ல, எப்படியோ மாமாவே அவனிடம் பேச வழிகாட்டி விட்டதாய் உணர்ந்தவள், சரி என்று தலையை மட்டும் ஆட்டினாள்.

அவன் டீ குடித்து முடித்ததும், அர்ஜூனும், கூடவே ரமேஷூம் வந்தனர். அவன் இருக்கும் போது அர்ஜூனிடம் எப்படி பேச முடியும் என்று நினைத்தாள். ஒவ்வொரு அறையாக சுற்றிக் காட்டியவள், கடைசியில் மொட்டை மாடிக்கு அவர்களை அழைத்து வந்தாள். அவள் ஒரு மாதிரி இருப்பதைப் பார்த்த ரமேஷ், அதை புரிந்து கொண்டு போன் பேசுவதைப் போல் கீழே சென்று விட்டான். அப்போது தான் அஞ்சலிக்கு சற்று நிம்மதியாய் இருந்தது.

அர்ஜூன், ஒரு சுவரின் மேல் தன் இரு கைகளையும் வைத்தபடி அந்த வீடு, மற்றும் சுற்றிலும் கார்டன் இவை எல்லாவற்றையும் நோட்டமிட்டான். எவ்வளவு ரசனையாய் கட்டியிருக்கிறார்கள் என்று தோன்றியது. தன், சந்தேகத்தை அஞ்சலியிடம் கேட்டான்.

“அஞ்சலி, இந்த வீடு யார் கட்டினது. ஐ மீன், இங்க எந்த இஞ்சினியர வைச்சு கட்டினது.? ரொம்ப ரசிச்சு கட்டிருக்காங்க.” என்றான் அர்ஜூன்.

நாம் என்ன பேச வந்தோம், இவன் என்ன பேசிக்கொண்டிருக்கிறான் என்று தோன்றியது அவளுக்கு. இருந்தாலும், அவன் கேட்கும் போது தான் பேசாமல் நின்றால், நன்றாக இருக்காது என்று உணர்ந்து,

“இந்த வீடு எங்க மாமாவே பார்த்துப் பார்த்து, ரசிச்சு கட்டினது. அவர் ஒரு பில்டர். பெங்களூர்ல இருக்கற ஒன் ஆஃப் த லீடிங் கன்ஷ்ட்ரக்டர்.” என்று அஞ்சலி சொல்ல,

“ஓ. அதனால தான், மொட்டை மாடி இல்லாம வீடு கட்டுவேனான்னு சொன்னாரா.?” என்றான். அவளும் தலையாட்டினாள்.

இதற்க்கு மேல் தயங்கினாள் இவனிடம் பேச முடியாமலே போய் விடும் என்று எண்ணி, “அர்ஜூன், உன்கிட்ட ஒண்ணு சொல்லணும். ரொம்ப தேங்க்ஸ். என் அம்மாவ எனக்கு திருப்பித் தந்ததுக்கு.” என்று சொன்னபடி சிறிது கண்ணீரும் சிந்தினாள்.

“அதான், நேத்தே ஹாஸ்பிடல்ல சொல்லியாச்சே அஞ்சலி. அப்பறமும் எதுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டிருக்க.?” என்றான் அர்ஜூன் சாதாரணமாய் பார்க்க,

“இல்ல, தனிப்பட்ட முறைல நான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்னு நினைச்சேன். அதனால தான் சொன்னேன்.” என்றபடி அவனைப் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தாள்.

“ஆனா, நான் உனக்கு ஸாரி சொல்லணும்னு நினைக்கிறேன் அஞ்சலி.” என்று அர்ஜூன் சொன்னதும், எதுக்கு என்பதைப் போல் பார்த்தாள்.

“எதுக்குன்னு தானே பார்க்கற.? உன்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டேன். நான் பண்ணது தப்புன்னு இன்னைக்குத்தான் நான் புரிஞ்சுக்கிட்டேன். இனிமேல் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். என்னை மன்னிச்சிடு. நீ இனிமேல் நிம்மதியா இருக்கலாம். என்னால எந்தப் பிரச்சினையும் உனக்கு வராது. நான் என்ன சொல்ல வரேன்னு உனக்குப் புரியும். சரியா.?” என்றவனை, எதுவும் சொல்லத் தோன்றாமல் அமைதியாக நின்றாள். கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

அவள் சோகமாக இருப்பதைப் பார்த்ததும், அவனுக்கு கஷ்டமாக இருந்தது. மனதில் இருக்கும் எல்லாவற்றையும் அவளிடம் சொல்லி விட வேண்டும் என்று நினைத்த மனதை அடக்கிக் கொண்டு வேறு எதை எதையோ சொல்லி விட்டதாய் எண்ணினான்.

அஞ்சலிக்கோ, அவனை நீண்ட நாள் கழித்து சந்தித்த வேளையில் அவன் இப்படி ஒரு விஷயத்தை சொல்வான் என்று எதிர்பார்க்கவில்லை. ஏனோ, அவன் தோளில் சாய்ந்து அழத் தோன்றியது. ஆனால், இனி எதற்க்குமே வாய்ப்பில்லை என்று நினைத்தாள்.

அதற்க்குள் மீனா, அஞ்சலியை அழைக்க இருவரும் கீழே வந்தனர். மூவரும் கிளம்பத் தயாராக இருந்தனர். அர்ஜூனும், ரமேஷூம், ஜானகியும் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினர். அர்ஜூன், அப்போது சொன்ன விஷயம் மட்டுமே அஞ்சலியின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அவன் வரும் போது இருந்த சந்தோஷமும், உற்சாகமும் அவன் செல்லும் போது அவளிடம் இல்லை.

மகேஷ், தானே அவர்களை கொண்டு சென்று விடுவதாகச் சொல்லி தனது காரிலேயே அழைத்துச் சென்றார். கூடவே வருணும், பூஜாவும் சென்றனர். அவர்களைப் பிரிய மனமில்லாமல் நின்றாள் அஞ்சலி.

அவர் திரும்பி வந்ததும், இரவு உணவு முடிந்து அன்றே விமானத்தில் கிளம்பிச் சென்றார் ரகுராம். அவரையும் மகேஷே சென்று ட்ராப் செய்தார். அனைவரும் அவரவர் அறையில் இருக்க, பானுமதி அஞ்சலியை அவரது அறைக்கு அழைத்தார்.

“சொல்லுங்க மா. கூப்பிட்டீங்க.” என்றபடி அவரின் மெத்தையில் வந்து அமர்ந்தாள் அஞ்சலி. அவளின் முகம் வாடியிருப்பதை அறிந்து கேட்டார் பானுமதி.

“ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்க.? என்னாச்சு.?” என்றார்.

“இல்லமா. நான் நல்லா தான் இருக்கேன்.” என்று பெயருக்கு சொன்னாள்.

“நான் உன்னோட அம்மா டி. எனக்குத் தெரியாதா.? அவங்க எல்லாரும் வரும் போது இருந்த சந்தோஷம், அவங்க கிளம்பினதும் கூடவே போயிடுச்சு. நான் எதையும் கவனிக்கலன்னு நினைச்சிட்டு இருக்கியா.? நான் எல்லாத்தையும் கவனிச்சுட்டு தான் இருந்தேன்.” என்று பானுமதி அவளது முகத்தைப் பார்த்து சொல்லிக்கொண்டிருக்க, அஞ்சலி கீழே குனிந்தபடி மௌனமாகவே இருந்தாள்.

மெல்ல அவளது தாடையை மேலே தூக்கியவர், “நான் உன் அம்மாதானே, என்கிட்ட சொல்ல மாட்டியா.?” என்று அவர் அவளை அக்கறையுடன் கேட்க, அவளோ அவரது கையை எடுத்து விட்டபடி பேசினாள்.

“என்ன சொல்ல சொல்ற மா.? நான் எது சொன்னாலும் இந்த வீட்ல மொதல்ல அப்பா, அப்பறம் நீ நினைக்கறது மட்டும் தான் நடக்கும். நான் சொல்லி எந்தப் பிரயோஜனமும் இல்லைன்னு ஆனதுக்கப்பறம் எதுக்கு சொல்லணும்.? அதனால தான், எதுவும் சொல்றது இல்ல.” என்று இதுவரை மனதில் இருந்த வெறுப்பை உமிழ்ந்தாள்.

“நீ ஏன் அப்படி நினைக்கிற.? எனக்கு உங்க அப்பா மட்டுமில்ல, நீங்க ரெண்டு பேரும் முக்கியம் தான்.” என்று சொல்ல, அவள் அம்மாவை உற்றுப் பார்த்தபடி,

“ரெண்டு பேருமா.? அக்காவையும் தான சொல்ற.? மனசுக்குள்ள அவளப் பத்தி நினைச்சிட்டு தான் இருக்க.? அப்பறம் ஏன் மா பேச மாட்டிங்கற.? அக்கா எவ்ளோ ஃபீல் பண்றா தெரியுமா.?” என்று அவள் அம்மாவின் பதிலை எதிர்பார்த்தாள்.

“ஹூம்ம். உனக்குப் புரியாது அஞ்சலி. எங்களுக்கு மட்டும் தான் அந்த வேதனை புரியும். நான் அவ பண்ணத தப்புன்னு சொல்லமாட்டேன். ஆனா, இத்தனை வருஷமா கூட இருந்த நம்மள விட்டுட்டு எப்படி அந்தப் பையன் கூட போய் இருக்க முடியுது.? அப்போ நாமெல்லாம் முக்கியம் இல்ல. அப்படித்தானே.?” என்றார் பானுமதி.

“அம்மா, அப்படி நினைச்சிருந்தா அவ எப்பவே கல்யாணம் பண்ணிட்டு போயிருப்பா. உங்க சம்மதம் வேணும்னு தானே மூணு வருஷமா காத்திருந்தா. அதே மாதிரி அப்பாக்கு ஹார்ட் அட்டாக்னு சொன்னப்போ உடனே ஓடி வந்தா தானே. எனக்கென்னன்னு இருக்கலையே. பொண்ணா பிறந்த எல்லாருமே தான் எத்தனை வருஷமா கூடவே இருக்க அப்பா, அம்மா, கூட பிறந்தவங்க எல்லாரையும் விட்டுட்டு கல்யாணத்துக்கப்பறம் புருஷன் தான் முக்கியம்னு போறாங்க. அதுமாதிரி தானே மா இதுவும். அக்கா பண்ணது தப்புன்னா, அப்போ மாமாவ நம்பி வந்த மீனா அத்தையும் செஞ்சது தப்பு தானே. இப்போ வரைக்கும் அவங்க பெத்தவங்கள நினைச்சு எத்தனை நாள் அத்தை அழுதிருப்பாங்க. அவங்களோட மன வேதனைய அவங்க அதிகமா நம்மகிட்ட காட்டறது இல்ல அவ்ளோதான். இப்போ, அக்காவும் கிட்டத்தட்ட அத்தை நிலைமைல தான் இருக்கா. நீ போன் பண்ணா எடுக்க மாட்டிங்கற, உன்கிட்ட பேசணும் போல இருக்குன்னு எவ்ளோ சொல்லி அழறா தெரியுமா உனக்கு.?” என்று சொல்லிக்கொண்டே போக, இப்போது பானுமதியிடம் பதிலில்லை.

“நீ இப்படி உடம்பு சரியில்லாம இருக்கும் போது நான் இதெல்லாம் பேசக்கூடாது மா. ஆனா, என்னால பேசாம இருக்கவும் முடியல. நீ உன்னோட மனச லேசா வைச்சுக்கணும்னு டாக்டர் சொல்லிருக்கார். நீ அக்கா கிட்ட பேசினாலே உன்னோட மன இறுக்கம் குறையும் மா. ப்ளீஸ் மா அக்காகிட்ட பேசுங்க.” என்று கெஞ்சினாள்.


“சரி நான் ஸ்வேதாகிட்ட பேசறதெல்லாம் அப்பறம் இருக்கட்டும். இப்போ நான் கேக்கறதுக்கு பதில் சொல்லு. இன்னைக்கு உன் ஃப்ரெண்ட் வந்தானே அவன் பேரு... ஆங்.. அர்ஜூன். அவனை உனக்குப் பிடிச்சிருக்கா.?” என்று பானுமதி கேட்ட கேள்வியில் அதிர்ச்சியானாள் அஞ்சலி.

(தொடரும்...)
 
Top