Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 23

Advertisement

Aathirai

Well-known member
Member
Episode 23

அன்று தன் அப்பாவிற்கு இப்படி ஆகி விட்டதே என வருத்ததுடன் பெங்களூர் சென்ற அஞ்சலிக்கு, இன்னும் ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவள் அக்கா ஸ்வேதா, அவள் காதலித்த ரோஹனை திருமணம் செய்து கொண்டாள்.. இந்த விஷயம் தெரிந்து தான் அவள் அப்பாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்தது..

அவளால் இதை ஏற்கவே முடியவில்லை.. அக்கா இப்படியா அவசரப்படுவாள் என வெறுப்பானாள்.. அவள் அனைவரிடமும் கேட்டாள். பானுமதியோ, மீனாவோ எதுவும் சொல்லவில்லை. மகேஷ் அவளைத் தனியே அழைத்துக்கொண்டு போனார்.

“ஏன் மாமா, அக்கா இப்படிப் பண்ணா.? அப்பாக்கு இப்போ என்னா ஆயிடுச்சு பாத்தீங்களா.? அப்பாவோட சம்மதம் இல்லாம ஏன் இப்படி அவசரப்பட்டு கல்யாணம் பண்ணா.?” என்று அஞ்சலி தன் அக்காவின் மேல் உள்ள கோபத்தை வெளிப்படுத்தினாள்.

ஆனால், அவள் எந்த சூழ்நிலையில் அதைச் செய்தாள் என்பதை மகேஷ் தான் சொன்னார்..

“இல்ல அஞ்சலி மா, நீ நினைக்கிற மாதிரி ஸ்வேதா எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்கல. உங்க அப்பா இந்த நிலைமைல இருக்கறதுக்குக் காரணம் அவரே தான். ஸ்வேதா இல்ல.” என்றதும் புரியாமல் விழித்தாள் அஞ்சலி.

“என்ன மாமா சொல்றீங்க.? அப்பா காரணமா.? எனக்குப் புரியல.” என்றாள்.

“மாமா, ஸ்வேதாவுக்கு அவரோட பாட்னரோட பையன் நிரஞ்சனை மேரேஜ் பண்ணிக்க டிசைட் பண்ணிட்டார். அதை அவகிட்ட சொன்னதும் தான், உடனே ஸ்வேதா புனேவில் இருந்து மும்பைக்குப் போய் மாமாகிட்ட, தைரியமா நான் ரோஹன்னு என்னோட கூட படிச்சவரை விரும்பறேன்னு சொல்லிட்டா. ஆனா, மாமா கோபப்பட்டார், கடைசி வரைக்கும் ஒத்துக்கவே இல்லை.. பிடிவாதமாக இருந்தார்.. எவ்வளவோ முயற்சி செஞ்சும் முடியாம போகவே, கடைசில ரோஹன் வீட்ல அவங்க எல்லாரும் கல்யாண ஏற்பாட்டைப் பண்ணிட்டாங்க. அவளும் வேறு வழியில்லாம மேரேஜ் பண்ணிட்டா. இந்த சிச்சுவேஷன்ல யாரா இருந்தாலும் என்ன பண்ணுவாங்களோ அதைத்தான் ஸ்வேதாவும் பண்ணியிருக்கா. ஆனா, அவ அப்பாவோட சம்மதம் வேணும்னு தான் நினைச்சா. மத்தபடி அவர ஏமாத்தனும்னு நினைக்கல.” என்று சொல்ல, அஞ்சலிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“இதைக் கேள்விப்பட்டதும் அவரால தாங்கமுடியல.. ப்ரெஷர் கொஞ்சம் அதிகமாகி நெஞ்சு அடைச்சிடுச்சு.. அவருக்கு இப்படி ஆயிடுச்சுன்னு கேள்விப்பட்டதும், ஸ்வேதாவும், ரோஹனும் வந்தாங்க.. ஆனா, அவருக்கு தெரியாமயே அக்கா அவளைத் திட்டி அனுப்பிட்டாங்க. பாவம் அவ, வேறு வழியில்லாம அழுதுட்டே போனான்னு உங்க அத்தை மீனாதான் என்கிட்ட சொன்னா. நான் அப்போ ஆஃபீஸ்ல இருந்தேன். இல்லன்னா அவங்ககிட்ட பேசவாது செய்திருப்பேன். என்னைப் பொறுத்தவரை இதுல அவ தப்புங்கறது எதுவும் இல்ல. அவளுக்குப் புடிக்காத ஒரு லைஃப்ப எப்படி அவளால லைஃப் லாங்க் வாழ முடியும் சொல்லு. எல்லாம் கொஞ்ச நாளைக்கு, அதுக்கப்பறம் எல்லாம் சரியாகிடும்னு நான் போன் பண்ணி அவளை சமாதானப்படுத்தினேன். மனசுக்குப் பிடிச்ச வாழ்க்கை அமைஞ்சும் அவளால நிம்மதியா இருக்க முடியல. ஏதோ அவங்க ஃபேமிலில தான் எல்லாரும் அவளை சமாதானப்படுத்திட்டு இருக்காங்கன்னு கூட சொன்னா. இந்த மாதிரி யார்க்கு அமையும் சொல்லு.? இதெல்லாம் உங்க அப்பாக்கு எங்க புரியப் போகுது..” என்று அனைத்தையும் சொல்லி முடித்தார் மகேஷ்.

அஞ்சலிக்கு இந்த விஷயத்தில் நியாயம் எது, தர்மம் எது, என்று தெளிவாக யோசிக்க முடியவில்லை. அக்காவிற்கே இந்த நிலைமையில் அப்பா இருக்கிறாரே, இனி தான் அர்ஜூனை விரும்புவது தெரிந்தால் என்னாகுமோ.? என்று எண்ணி கவலைப்பட்டாள்.

அதன் பிறகு, அவள் அப்பா ஓரளவு குணமாகி வீடு வந்ததும், கூறிய விஷயம் அஞ்சலியை இடி போல் தாக்கியது.. ஆம், இப்போது அந்த நிரஞ்சனை அவள் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமாம்.. இல்லை என்றால், தன்னை உயிருடன் பார்க்க முடியாது என ஒரே அடியாக சொல்லி விட்டார்..

அஞ்சலிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. “இது என்ன ஒரு முட்டாள் தனம்.? அக்கா ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அதற்க்கு நான் என்ன செய்ய முடியும்.? நான் அர்ஜுனை விரும்புகிறேன் அல்லவா..?? என்னால் முடியாது.. என்னை விட்டு விடுங்கள்..” எனக் கத்தி அவரிடம் சொல்லி அழ வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. ஆனால், அவரிடம் அது முடியாது அல்லவா.?

தன் அம்மாவிடம் சென்றாள். அங்கே பானுமதி அஞ்சலியின் அப்பாவிற்காக ஜூஸ் பிழிந்து கொண்டிருந்தாள்.

“அம்மா, அப்பா ஏன் மா இப்படி ஒரு முடிவெடுத்தார்.? அக்கா லவ் பண்ணி, மேரேஜ் பண்ணிட்டா. அதுக்காக அவளுக்குப் பார்த்த மாப்பிள்ளைய நான் கல்யாணம் பண்ணிக்கனுமா.? இது எந்த விதத்துல நியாயம்.? மா, ப்ளீஸ் மா.. அப்பாகிட்ட சொல்லு மா. யார்.? என்ன்ன்னு தெரியாதவனப் போய் நான் எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்.? என்னால முடியாது மா..” என்று பானுமதியிடம் கதறினாள் அஞ்சலி. பானுமதியிடம் பதிலில்லை.

“அக்கா. ஏன் கா.. மாமாவுக்கு என்ன ஆச்சு.? என்னைத் தப்பா நினைக்காத. அவருக்கு கிறுக்கு புடிச்சிருச்சா.?” என்று மகேஷ் கேட்க. அதுவரை அமைதியாய் இருந்த பானுமதி, “டேய்.. என்னடா பேசற.? வார்த்தையை அளந்து பேசு.” என்றார் கோபத்துடன்.

“பின்ன, என்ன.? அவளுக்குப் பார்த்த மாப்பிள்ளைய அஞ்சலிக்கு கட்டி வைக்கணும்னா இது என்ன ஒரு நியாயம்.? ஒரு பொண்ண பலி குடுக்க முடியலன்னா, அதுக்கு இன்னொரு பொண்ண பலி குடுக்கணும்னு நினைக்கிறாரா.?” என்றார் மகேஷ்.

“தம்பி.. நீ ரொம்ப அதிகமா பேசற. போதும்..” என்றார் பானுமதி பொறுக்க முடியாமல்.

“அக்கா, அஞ்சலி உன் பொண்ணு கா. நியாயமா இதெல்லாம் நீ தான் அவர்கிட்ட போய் பேசணும். ஆனா, நீ என்னை அடக்கப் பார்க்கற. உனக்கே இதெல்லாம் சரியாப் படுதா சொல்லு.?”

“இங்க பாருடா, இப்போ அவர் மரணப்படுக்கைல இருந்து மீண்டு வந்திருக்கார். இப்போ அவர் என்ன பேசினாலும், என்ன சொன்னாலும் நான் அதுக்குத் தலையாட்டித்தான் ஆகணும். ஏன்னா, எனக்கு அவர் உயிரோட வேணும். அவருக்கு அப்பறம் தான் மத்ததெல்லாம். அவர் ஒண்ணும் அவள ரெண்டாந்தாரமா கட்டி வைக்கலையே. ஸ்வேதாவுக்குப் பார்த்த வரன், அவ இப்படிப் பண்ணிட்டா. அதனால, அவரோட இன்னொரு பொண்ணுக்கு கட்டி வைக்கணும்னு நினைக்கிறாரு. இதுல ஒண்ணும் பெரிய தப்பு இருக்கறதா எனக்கு ஒண்ணும் தெரியலையே.” என்று பானுமதி சொன்ன பதிலில் அதிர்ந்துதான் போயினர் அனைவரும்.

இதுவரை தனக்கென்று பரிந்து பேசிய அம்மாவும் இப்படி பேசியதில் அஞ்சலிக்கு பெருத்த சங்கடம். அவளுக்கு தொண்டைக்குழி அடைத்தது. அவளால் பேச முடியவில்லை.

“ஒண்ணு தெரிஞ்சுக்கோ அஞ்சலி. உனக்கு உங்க அப்பா வேணும்னு நீ நினைச்சின்னா, அவர் சொல்ற பையன கல்யாணம் பண்ணிக்க. இல்ல, உங்க அக்கா மாதிரியே நீயும் ஏதாவது ஒரு பையன விரும்பறேன்னு சொன்னா, உனக்கு அப்பா, அம்மா ரெண்டு பேருமே இல்லைன்னு நினைச்சுக்கோ.. அவ்வளவுதான்.” என்று ஒரே மூச்சில் சொல்லி முடிக்க, சிலையாகிப் போனாள் அஞ்சலி.

“அக்கா.. நீயும் என்ன முட்டாள்தனமா..” என்று பேசப்போன மகேஷை, “மாமா ஒரு நிமிஷம்..” என்று தடுத்தாள் அஞ்சலி..

“அம்மா, நீங்க சொல்ற பையன நான் கல்யாணம் பண்ணிக்கறேன்.” என்று சொன்னபடியே திரும்பி, “மாமா, நீங்க எனக்காக எதுவும் பேச வேண்டாம். நான் அவங்க இஷ்டப்படியே நடந்துக்கறேன். இந்த விஷயத்த இதோட விட்ருங்க” என்று சொன்னபடி அங்கிருந்து கணத்த இதயத்துடன் நகர்ந்தாள்.

“ஏய்ய்.. அஞ்சலி மா.. அக்கா..நீயெல்லாம்..” என்றபடியே அவளின் பின்னாலேயே சென்றார் மகேஷ்.

பானுமதிக்கு வேறு வழியில்லை. இதை அவளிடம் சொல்ல எத்தனை பாடுபட்டார் என்று அவருக்கு மட்டுமே தெரியும். என்னதான் அவர்களுக்கு அம்மா என்றாலும், முதலில் அனைவருக்கும் கணவன் தானே தெய்வம். அவர் வேண்டும் என்றால் அதற்குத் தன்னையே இழக்கத் துணிபவள் தான் உண்மையான மனைவி என்பதற்கு எடுத்துக்காட்டாக அன்று பானுமதி இருந்தார்.

மகேஷ், மீனா இருவரும் எவ்வளவோ முயன்றும் அவர்களால் அவளை சமாதானம் செய்ய முடியவில்லை.

மீனா, “அம்மா, ஏதோ அப்பாவோட இந்த நிலைமைக்காக அப்படிப் பேசிட்டாங்க அஞ்சலி. மத்தபடி அவங்க உன்ன அப்படிப் பேசறவங்களா சொல்லு.? உன் மாமா எல்லாத்தையும் பார்த்துப்பார். அவர் இருக்கும்போது நீ எதுக்கும் கவலைப்படாதே.” என்று தன் பங்குக்கு சமாதானம் சொன்னாள்.

அஞ்சலி அப்போதும் பதில் ஏதும் பேசவில்லை. பித்துப்பிடித்தவள் போல் இருந்தாள். அப்போது தான் மது அவளுக்குப் போன் செய்தாள். அவள் எடுத்துப் பேசும் நிலையில் இல்லாததால், மீனா அவளிடம் எதையோ பேசி சமாளித்தாள்.

“அஞ்சலி மா.. உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா.? நான் எல்லாத்தையும் பாத்துக்கறேன். கண்டிப்பா, உனக்கு மனசுக்கு பிடிச்சவன தான் நாங்க கல்யாணம் செய்து வைப்போம். உங்க அப்பா எதையோ சொல்லிட்டுப் போகட்டும். உன் படிப்பு முடியற வரை எதுவும் நடக்காது. நான் அவர்கிட்ட பேசிட்டேன். அவர் முதல்ல அவசரப்பட்டார். அதுக்கப்பறம் நான் தான் பேசி ஒத்துக்க வைச்சேன். அதனால, இப்போதைக்கு எதையும் மனசில போட்டு குழப்பிக்காத. இன்னும் ஒன்றரை வருஷத்துக்கு நீ டென்ஷன் இல்லாமப் போய் படிச்சிட்டு வா. மீதியெல்லாம் அப்பறம் பார்க்கலாம். இந்த லீவ்ல எப்படி என்ஜாய் பண்ணனும்னு யோசி. வருண், பூஜாவைக் கூட்டிட்டு வெளில போயிட்டு வா. உன் ஃப்ரெண்ட்ஸ் கூட பேசு. அத விட்டுட்டு, ஏதோ வாழ்க்கையே போயிடுச்சுன்னு நினைச்சு ரொம்ப ஃபீல் பண்ணாத. சரியா.” என்று என்னவெல்லாமோ தன்னால் முடிந்தவரை பேசி அவளை சமாதானம் செய்ய முயன்றார் மகேஷ்.

அப்போதைக்கு அவர் சொன்னது ஒரு புறம் ஆறுதலாய் இருந்தாலும், அவ்வப்போது அவளுக்குள், “இனி எல்லாம் அவ்வளவு தானா..?? யாரென்று தெரியாத எவனோ ஒருவனோடு தன் வாழ்க்கை தீர்மானிக்கப்பட்டு விட்டதா..?” என பல கேள்விகளை அவள் கேட்டுக்கொண்டிருந்தாள்.

அதன் பிறகு, ரகுராம் ஒரு மாதம் நன்றாக வீட்டில் ஓய்வெடுத்து புதிதாக தனது பிஸினசிற்குத் தயாரானார். மும்பை செல்லும் முன்பு, அஞ்சலியிடம் திரும்பவும் அதே வார்த்தைகளைக் கூறினார்.

“நான் சொன்னது நியாபகம் இருக்குல்ல.? உன்னோட படிப்பு முடியற வரைக்கும் தான் எல்லாமே. அதுக்கப்பறம் நீ நிரஞ்சனைத் தான் கல்யாணம் செய்துக்கணும். எப்போன்னு நான் சொல்வேன். நீ தயாரா இருக்கணும்.” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

“நான் என்ன இவர் உருவாக்கிய மிஷினா நான்.? இவர் எப்போது எதைச் சொன்னாலும் அப்படியே கேட்டு நடக்கும் உயிரில்லா ஒரு பொருள் தான் நான் என்று நினைத்துவிட்டாரா.?” என்று தனக்குள்ளே கேட்ட கேள்வியைக் கேட்கத் தெரியாமல், வந்த அழுகையை அப்போது அடக்கிவிட்டு, அவர் கிளம்பிய அடுத்த நொடி அவளின் அறைக் கதவைச் சாத்திவிட்டு தலையணையில் முகத்தைப் புதைத்து அழுதாள்.

நாட்கள் வேகமாய் நகர்ந்தன. இன்னும் ஒரே வாரம் தான். அதற்க்குள் அவள் சென்னை செல்ல வேண்டும். விடுமுறை விடுமுறையாக இல்லை அவளுக்கு. யாரிடமும் சொல்ல முடியாமல், நிம்மதி இழந்து தவித்தாள்.. வீட்டில் யாருடனும் அதிகமாக பேசுவதில்லை. பானுமதியிடமோ, முற்றிலுமாகப் பேசுவதைத் தவிர்த்தாள். கேட்டால் பதில் மட்டுமே சொல்வாள். இது தெரிந்தாலும், பானுமதி அவளை எதுவும் சொல்வதில்லை.

தோழிகளிடம் பேசினால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். இதற்க்கும், மது அவளுக்கு அவ்வப்போது போன் செய்து கொண்டே தான் இருந்தாள். ஆனாலும், ஏனோ அவளிடம் பேசவேண்டும் என்று தோணவில்லை அஞ்சலிக்கு. அவளின் அழைப்பை வேண்டுமென்றே தவிர்த்தாள்.

போனில் தாங்கள் அனைவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது பார்த்துக்கொண்டிருப்பாள். அப்போது அர்ஜூனோடு தான் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்தாள். தன் கண்ணே பட்டு விடும் போல் இருந்தது ஜோடிப்பொருத்தம். ஆனால், ஆண்டவன் தன்னை இந்த வாழ்க்கையில் யாரோடு இணைக்கப் போகிறார்.? என்பது அவளுக்குப் புரியாத புதிரானது.

விடுமுறை முடிந்து கல்லூரிக்குச் செல்லும் போது அர்ஜூனை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றி மட்டுமே அவள் யோசனை இருந்தது.. மேலும், “நீயும், ஏதேனும் செய்தால் என்னை உயிரோடு பார்க்க முடியாது...” என்று அப்பா கூறிய வார்த்தைகளும் அவள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.. உயிரில்லாத ஊணானாள் அஞ்சலி...


(தொடரும்...)
 
Top