Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 22

Advertisement

Aathirai

Well-known member
Member
Episode 22

விநாயகம் திடீரென்று கிளம்பலாம் என்று சொல்லிவிட, கேட்கக்கூடாததை எதுவும் கேட்டுவிட்டோமோ என்று வெங்கடேசன் குடும்பத்திற்கு மிகவும் தர்மசங்கடமாகி விட்டது. இருப்பினும் வீடு வந்து சேரும் வரை எதுவும் நினைக்க வேண்டாம் என்று எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் வீடு வந்து சேர்ந்தனர்.

வீட்டிற்கு வந்த போது, அங்கே விநாயகத்தின் மகனும், மதுவின் தம்பியுமான விஜி என்கிற விஜயேந்திரன் இருந்தான். அவர்கள் வருவதைப் பார்த்ததும், அவர்களை இன்முகத்துடன் வரவேற்றான்.

“ஆங்.. வெங்கி இது என் பையன் விஜி.. மதுவோட தம்பி. இன்ஜினியரிங்ல இசிஇ பண்ணிட்டிருக்கான். மோஸ்ட்டா 6 மணிக்கு மேல தான் வருவான். வர வழில ட்ராபிக்கா இருக்கும். அதனால, அவன் வரதுக்கு கொஞ்சம் லேட் ஆகும். நாம அதுக்குள்ள கோவிலுக்கு போனதால, அவன நீங்க பார்க்க முடியல.” என்றார்.

“ஓ.. அப்படியா!! இருக்கட்டும் விநய். பரவால்ல.. இப்போ பார்த்துட்டோம் இல்ல. ரொம்ப சந்தோஷம்.” என்றார் வெங்கடேசன்.

“ஹாய்.. இசிஇ எந்த காலேஜ்.? எந்த இயர்.?” என்று பிரவீன் கை கொடுத்தவாறே, விஜியிடம் கேட்டான்.

அவனும் அவனிடம் கை கொடுத்தவாறே, “பிஎஸ்ஜி டெக். இது தேர்ட் இயர்.” என்றான் புன்னகை புரிந்தவாறே.

“ஓ.. சூப்பர்.. நான் கேள்விப்பட்டிருக்கேன். ரொம்ப நல்ல இன்ஸ்டியூஷன்னு. சீட் கிடைக்கிறதே ரொம்ப கஷ்டம்ன்னு சொல்வாங்க.” என்று சொல்ல.,

“ம்ம். ஆமாம்பா, ஆனா, அவனுக்கு மெரிட்லயே சீட் கிடைச்சிடுச்சு. பிளஸ் டூல, நல்ல மார்க் வாங்கினதால பரவால்ல.” என்றார் விநாயகம் பெருமையாக.

விஜி, தன்னடக்கத்தோடு நிற்க, அவனும் மதுவைப் போல் நல்லவிதம் என்றே அவர்களுக்குத் தோன்றியது.

“சரி வெங்கி, நான் நீங்க கோவில்ல சொன்ன விஷயத்துக்கு வரேன். நீங்க மதுவ பொண்ணு கேட்டப்போ, சட்டுன்னு என்னால எதுவும் சொல்ல முடியல. ஏன்னா, இது அவளோட வாழ்க்கை பத்தின விஷயம் இல்லையா, எதையும் அலசி, ஆராயாம முடிவெடுக்க முடியாது. அதுவும் இல்லாம, கோவில்ல கூட்டம் அதிகமாயிடுச்சு. நாம இந்த மாதிரி விஷயத்த யாரோ ஒருத்தவங்க முன்னாடி பேசிக்க வேண்டாம்னு தோணுச்சு. எல்லாத்துக்கும் மேல, விஜி எங்க வீட்டு ஆம்பிளைப் பிள்ளை. என்னதான், அவன் வயசில சின்னவனா இருந்தாலும், அவனுக்கும் இதுல முக்கியப் பங்கு இருக்கு. அவனும் இதைத் தெரிஞ்சிக்கனும். அவன்கிட்ட திடீர்னு இந்த விஷயத்தை சொன்னா, அவனுக்கும் கொஞ்சம் வருத்தமா இருக்கும். அதனால தான் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்னு சொன்னேன்..” என்று விநாயகம் சொன்ன பிறகு தான், அவர்கள் மனதில் இருந்த குழப்பம் நீங்கியது.

“இல்ல.. பரவால்ல விநய்.. எங்களுக்கு ஏதும் சங்கடம் இல்ல. உங்க எல்லார்கிட்டயும் இதுமாதிரி கேட்டு நாங்க சங்கடப்படுத்திட்டோமோன்னு தான் கஷ்டமா இருந்துச்சு. நீ சொல்றது ரொம்ப சரி, நம்ம பிள்ளைங்ககிட்ட நாம எப்படி நடந்துக்கறோமோ, அப்படி தான் அவங்களும் நடந்துப்பாங்க. அந்த விஷயத்துல நீ செஞ்சது சரிதான்.” என்றார் வெங்கடேசன்.

இவர்கள் பேசிக்கொண்டதை, முதலில் என்னவென்று புரியாமல் குழம்பிக்கொண்டிருந்தான் விஜி. அதன் பிறகுதான், விஷயம் என்னவென்று புரிந்தது அவனுக்கு.

“அண்ணா, எங்கள நீங்க தப்பா எடுத்துக்க வேண்டாம். எங்களுக்கு மதுவை ரொம்பவும் புடிச்சுப் போச்சு. நான் தான் மொதல்லயே சொன்னேனே. அவ எவ்வளவு தூரம், தான் பழகறவங்ககிட்ட அன்பும், மரியாதையும் வைச்சிருக்கா. அது யாருக்கும் அவ்வளவு எளிதில் வர குணம் கிடையாது. அதே மாதிரி, அவளுக்கும் மனசுக்குள்ள எத்தனையோ கனவுகளும், கற்பனைகளும் இருக்கும். அதைத் தெரிஞ்சுக்காம, நாங்களும் அவளைக் கேட்டுட்டோம். எனக்கு அதுவும் சங்கடமா இருந்தது.” என்று சொன்னபடியே மதுவின் அருகில் வந்தார் பத்மா.

“மது, நாங்க உன்னோட விருப்பம் இல்லாம உன்னை பொண்ணு கேட்டுட்டோம். ஏன்னா, எங்களுக்கு உன்னை அவ்வளவு பிடிச்சிருக்கு. எங்களால உன்னை விட முடியாது. நீ எங்க வீட்டுப் பொண்ணாவே இந்த ரெண்டு நாளா எங்க வீட்ல இருந்த. அதை வாழ்நாள் பூராவும் நாங்க மறக்க மாட்டோம். இதை நான் உணர்வுப்பூர்வமா சொல்றேன். அதுக்கு நாங்க என்ன கைமாறு பண்ணுவோம்னு தெரியல. உன்னை எங்ககூடவே வைச்சு, அழகு பார்க்கணும்னு தோணுது. ஆனா, உன் அனுமதி இல்லாம எதுவும் நடக்காது. நீ எதுவும் தப்பா நினைக்காத. எங்களை மன்னிச்சிடு.” என்று அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்கலங்கிவிட, அனைவருக்கும் அது உணர்வுப்பூர்வமான தருணமானது.

“ஆண்ட்டி, ஐயோ.. அழாதீங்க. நான் எதுவும் நினைக்கல. எனக்கு உங்க எல்லாரையுமே ரொம்பப் பிடிக்கும். ஆனாலும், என்னைப் பெத்தவங்க தான் எனக்கு முதலில். என்னோட வாழ்க்கையை நான் யாரோட வாழணும்னு அவங்க விருப்பப்படறாங்களோ அதை நான் முழு மனதா ஏத்துக்குவேன். அது யாரா இருந்தாலும் சரி. எனக்கு அவங்க சம்மதம் தான் முக்கியம்..” என்று சொல்ல, அவர்கள் மனதில் கோபுரம் கட்டி அதில் அமர்ந்து விட்டாள் மது.

“இல்லமா, தங்கச்சி.. மது மட்டுமில்ல, நாங்களும் எதுவும் சங்கடப்படல. எங்களுக்கு சொல்லப்போனா, சந்தோஷம் தான். எங்க மதுவுக்கு, இந்த மாதிரி ஒரு குடும்பம் கிடைக்குதுன்னா, எங்கள விட யாரு சந்தோஷப்படுவா சொல்லு.? ஆனாலும், எங்க சைட்ல பெரியவங்க இருக்காங்க. அவங்ககிட்டயும் ஒரு வார்த்தை கேட்கணும் இல்லையா.? எனக்கு அப்பா, அம்மா ரெண்டு பேருமே இறந்துட்டாங்க. ஆனா, சித்ராவோட அப்பா, அம்மா இருக்காங்க. அதனால, மாமாகிட்டயும், அத்தைகிட்டயும் ஒண்ணா கலந்து பேசிட்டு கண்டிப்பா ஒரு நல்ல முடிவா சொல்றோம் மா. நீ ஒண்ணும் கவலப்படாத.” என்றார் விநாயகம்.

அப்போதுதான், அவர்களுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. “ரொம்ப சந்தோஷம் டா விநய்.. நாங்க ரொம்ப பயந்தோம். நீங்க என்ன நினைப்பீங்களோ.? நம்முடைய இத்தனை வருட ஃப்ரெண்ட்ஷிப் என்னாகுமோன்னு பயந்தேன். நல்லவேளையா, என்னோட வயித்துல பால வார்த்த..” என்று அவரும் சற்று எமோஷனலாக,

விநாயகம், “டேய்.. அதெல்லாம் ஒண்ணுமில்லடா. இதுல என்ன இருக்கு.? பொண்ணுன்னு இருந்தா எல்லாரும், கேட்க தான் செய்வாங்க. இப்போவே மதுவை உறவுக்காரங்க கேட்கறாங்க தான். ஆனா, அவங்களுக்கெல்லாம் மதுவை குடுக்க எனக்கு விருப்பம் இல்ல. ஏன்னா, அவங்கல்லாம் உள்ள ஒண்ண வைச்சுக்கிட்டு, வெளிய ஒண்ணு பேசறவங்க. நானே, என் கண்ணால பார்த்திருக்கேன். அப்போவே அவள சொந்த்த்துல கல்யாணம் பண்ணி குடுக்க்க்கூடாதுன்னு முடிவெடுத்துட்டேன். சித்ராகிட்ட கூட நிறைய தரம் சொல்லிருக்கேன். என்ன பண்றது, என்னமோ கூப்பிட்ட மரியாதைக்காக, போக வேண்டி இருக்கு, பேச வேண்டி இருக்கு. மத்தபடி மனசில வேற எண்ணம் கிடையாது.” என்று சொன்னார்.

பிரவீனுக்கோ, ஒரு ராஜகுமாரன் போல் அவளைத் தூக்கிக்கொண்டு போய்விட வேண்டும் போல் இருந்தது. ஆனால், அவளின் மனதில் உள்ளதை உணர்ந்த பிறகு, கடவுள் தான் தன் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தோன்றியது. அந்த மருதமலை முருகனை மனதில் நினைத்துக்கொண்டான்.

பத்மா இவ்வளவு இயல்பானவர் என்றும், அதே போல் அவர் மதுவிடம் சொன்ன வார்த்தைகளில் அவரின் குணமும் தெரிய சித்ராவுக்கு அவர்களை பிடித்துப் போனது. ஆனால், விநாயகத்தின் சம்மதம் ரொம்ப முக்கியம் என்று நினைத்தவர் அமைதியாகவே நின்றார்.

அக்காவிற்கு ஒரு நல்ல குடும்பம் கிடைக்கப் போவதை எண்ணி, விஜிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. பிரவீனுடன் சிறிது நேரம் பேசியதிலேயே அவன், மிகவும் எதார்த்தமாகவும், இயல்பாகவும் இருப்பது தெரிந்தது. அதனால், அவனுக்கும் இவர்களைப் பிடித்துப் போனது.

“சரி, அங்கிள்.. நாங்க கேரளா போகணும்னு தான் இந்த ட்ரிப் ப்ளான் பண்ணோம். ஆனா, இடைல இந்த ஒரு விஷயம் நடக்கும்னு நினைக்கல. அப்பா, அம்மா எப்பவும், மதுவைப் பத்தியே தான் பேசுவாங்க. சொல்லப்போனா, நேத்துதான் அவங்கள நேர்லயே பார்த்தேன். கொஞ்சம் நேரம்தான் பேசியிருப்பேன். அதுலயே எனக்கு அவங்கள ரொம்பப் பிடிச்சுது. ஆனாலும், இதுல மதுவோட விருப்பமும், உங்களோட விருப்பமும் ரொம்ப முக்கியம்னு நான் சொன்னதால தான், அப்பாவும், அம்மாவும் உங்ககிட்ட நேரடியா பேச நினைச்சாங்க. அதனால தான் வந்தோம். இப்போ, எங்களுக்கு ஒரு பாசிட்டிவான விஷயத்த சொல்லிருக்கீங்க. நான் கண்டிப்பா மதுவை, நல்லபடியா பாத்துக்குவேன். அவங்களுக்கு என்ன கனவிருந்தாலும், அதுக்கு ஒரு தடையா இல்லாம, நாங்க எல்லாருமே அவளுக்கு சப்போர்ட் பண்ணுவோம். நீங்க அதை நினைச்சு எப்பவும் கலங்கவேண்டாம். நாங்க கேரளா போயிட்டு வரதுக்குள்ள ஒரு நல்ல பதில எதிர்பார்க்கறோம்.” என்றான் பிரவீன்.

அப்போது தான் மதுவுக்கு பிரவீனின் மேல் ஒரு பெரிய மரியாதையே வந்தது. அவளுக்கு அவனைப் பிடித்துப் போனது. அவர்கள் அனைவர் மனதையும் பிரவீன் தன் வாக்குறுதியால் வென்று விட்டான் என்றே சொல்ல வேண்டும்..

பேசிவிட்டு அவர்கள் கேரளா செல்ல விடைபெற, இரவு நேரத்தில் எப்படி செல்வார்களோ என்று விநாயகம் குடும்பத்தில் கவலை கொண்டனர்.

“இல்ல அங்கிள், நான் அல்ரெடி ரூமெல்லாம் புக் பண்ணியாச்சு. அதனால, கண்டிப்பா போயே ஆகணும். எங்களுக்கு ஒண்ணும் பிராப்ளம் இல்ல. என்ன பாலக்காடு பக்கம் தானே, எப்படியும் ஒன் அண்ட் ஹால்ப் ஏன் அவர்ல போயிடுவோம். அப்பறம் செக் இன் பண்ணிட்டு ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதான். நாளைக்குதான் போய் சுத்திப் பாக்கணும்.” என்றான் பிரவீன்.

“அதுக்கில்லப்பா, ரொம்ப டைம் ஆகப்போகுது. நீங்க பாத்து பத்திரமா போகணுமில்ல.?” என்றார் விநாயகம் அக்கறையுடன்.

“டேய் விநய்.. ரொம்ப பயப்படாத.. நாங்க பத்திரமா அங்க போய் சேர்ந்துட்டு கண்டிப்பா உனக்கு போன் பண்றேன்.” என்றார் வெங்கடேசன்.

“நீங்களும் எங்க்கூட கேரளா வரலாம் தானே. நல்லா இருக்குமே.” என்று தன் ஆசையை வெளிப்படுத்தினார் பத்மா.

“ஹய்யோ.. இல்ல மா, எனக்கு வேலைக்குப் போகணும். அவன் காலேஜ் போகணும். திடீர்னு அப்படி வர முடியாது இல்லையா.? கண்டிப்பா இன்னொரு நாள் நாம எல்லாரு சேர்ந்து இதே மாதிரி ஒரு ட்ரிப் போகலாம். அதற்க்கான நேரம் வரணும்னு நான் அந்த முருகனை வேண்டிக்கறேன்.” என்றார் விநாயகம்.

அவர்களும் தலையாட்ட, வெங்கடேசன் குடும்பம் கிளம்பியது. கிளம்பி வெளியே வரும்போது, அனைவரும் அவர்களை வழியனுப்ப வெளியே வந்தனர். அப்போது, பிரவீன் மதுவின் பார்வைக்காக காத்திருந்ததைப் போல், மதுவும் அவனை ஒரு காதல் பார்வையில், பத்திரமாக செல்லுமாறு பணித்தாள். அதை புரிந்துகொண்டவன் சிரித்துக்கொண்டே அவளுக்கு தலையசைத்தான். அனைவரும் விடைபெற்றனர்.

மூன்று நாட்கள் எப்படி சென்றதென்றே தெரியவில்லை. முதலில், பாலக்காட்டில் அங்கே உள்ள மலம்புழா அணைக்கட்டிற்கு சென்றனர். பிறகு, அங்கிருந்து கிளம்பி குருவாயூர் கோவில், பிறகு சாலக்குடி (புன்னகை மன்னன்) நீர்வீழ்ச்சி, அதன் பிறகு அங்கிருந்து ஆழப்புழா படகு இல்லம். என்று வரிசையாக சென்று முடித்தனர்.

செல்லும் இடமெல்லாம் பிரவீனுக்கு, மதுவின் நியாபகமாகவே இருந்தது. அவ்வப்போது அவளுக்கு மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தான் பிரவீன். அவளும் பதிலுக்கு அனுப்பினாள்.

இதற்கிடையில் மதுவின் கல்யாண விஷயமாக சித்ராவின் பெற்றோரிடம் விநாயகம் கூற, அவர்களுக்கு முழு சம்மதம்.

“யாரோ தெரியாதவங்க, எப்படிப்பட்டவங்கன்னு தெரிஞ்சுக்காம, நம்ம பொண்ண குடுக்கறத விட, இந்த மாதிரி தெரிஞ்ச நல்லவங்க குடும்பத்துக்கு நம்ம மதுவைக் கட்டிக்குடுக்கறது தப்பே இல்ல. மதுவுக்கு ஏதோ புது இடத்துக்கு போகிற உணர்வு இருக்காது. அவளும் சந்தோஷமா இருப்பா.” என்று அவர்களும் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர்.

அப்பொழுதே, வெங்கடேசனுக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்ல அவர்கள் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்றனர். திரும்பி கேரளாவிலிருந்து, சென்னை செல்லும் வழியில் கோயம்புத்தூர் வந்து அவர்களைச் சந்தித்தனர். பெரியவர்களும் அங்கே இருக்க, அவர்களுக்கும் நேரில் சந்தித்த திருப்தி ஏற்பட்டது.

முதலில் மதுவின் படிப்பு முடியட்டும், பிறகு அவள் வேலைக்கு செல்ல விருப்பம் இருப்பின் அதன் பிறகு திருமணம் என்று இரு வீட்டாரும் பேசி முடிக்க, மதுவுக்கு அனைத்தும் ரயில் வேகத்தில் தன் வாழ்க்கை செல்வது போல் தோன்றியது. ஆனாலும், அது இனிமையான பயணம் போல், மனதிற்கு பிடித்தவன், பாசம் காட்டும் குடும்பம் என்று நன்றாகவே அமைந்தது கடவுள் செயல் என்று எண்ணினாள்.

இத்தனை நடந்தும், தன்னால் தன் உயிர் தோழியிடம் இந்த சந்தோஷமான தருணத்தைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லையே என்று நினைத்து வருத்தம் கொண்டாள். திரும்பவும் அஞ்சலிக்கு போன் செய்தாள். இம்முறையும் ஏமாற்றமே மிஞ்சியது அவளுக்கு. அவள் போனை எடுப்பதாகத் தெரியவில்லை.

பேசாமல் நேரிலேயே போய் அவளைப் பார்த்துவிடலாமா என்று கூட தோன்றியது. ஆனால், ஏனோ அது முடியாது என்று நினைத்தாள். இந்த விடுமுறை நாட்களில் தான், இங்கு இருந்து தன் குடும்பத்தினரிடம் நேரத்தை செலவழிக்க முடியும் என்று அந்த நினைப்பையும் கைவிட்டாள்.

என்ன காரணமாக இருக்கும் என்று எதைஎதையோ, யோசித்துக்கொண்டிருந்தாள் மது. ஆனால், அஞ்சலியின் நிலைமை அங்கே தலைகீழாய் மாறியது, பாவம் மதுவுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்...


(தொடரும்...)
 
Romba viruvirupa poguthu katha.really very nice feel good story.

ரொம்ப நன்றி மா.. உங்களைப் போன்ற வாசகிகள் விமர்சனம் தான் எங்களை இன்னும் மெருக்கேற்றும்.. இதே போல் உங்கள் ஆதரவை என்றும் எதிர்பார்க்கிறேன். நன்றி ??????
 
Top