Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 21

Advertisement

Aathirai

Well-known member
Member
Episode 21

கோயம்புத்தூர் மாநகரம். சென்னைக்கு அடுத்து பெரிய மாநகரம் என்றால் அனைவருக்கும் இந்த ஊர் தான் நினைவுக்கு வரும். தமிழ்நாட்டில் தொழில்துறையிலும், பொறியியல் துறையிலும், மற்றும் தொழில்நுட்பத் துறையிலும் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக இருக்கும் நகரம்.

கேரளாவின் எல்லையில் இருப்பதால் எப்பொழுதும் மிதமான, ரம்மியமான வானிலையைப் பார்க்க முடியும். மருதமலை முருகன் கோவில், ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் உள்ள ஈச்சனாரி கோவில், உலகின் மிக ருசியான தண்ணீரென அழைக்கப்படும் சிறுவாணி ஆறு, கொஞ்சும் கொங்கு தமிழ், இப்படி இதன் அருமை, பெருமைகளைக் கூறிக்கொண்டே போகலாம்.

அப்படிப்பட்ட ஊருக்கு மதுவுடன், வெங்கடேசன் குடும்பம் வந்து சேர்ந்தது. மதுவின் வீடு வடவள்ளியில் இருந்தது. மருதமலை முருகன் கோவில் அவர்களது வீட்டில் இருந்து பார்த்தாலே தெரியும். வெறும் 5 கிமீ தொலைவில்தான் இருந்தது. அவர்கள் சென்ற வழி முழுக்க பெரிய, பெரிய பல்கலைக்கழகங்கள் இருந்தன.

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, வேளாண்மைப் பல்கலைக்கழகம், மருதமலை செல்லும் வழியில், பாரதியார் பல்கலைக்கழகம், மற்றும் கோவை அரசு சட்டக் கல்லூரி போன்ற பன்மை மிக்க, பெருமை மிக்க கல்விக் கழகங்களைப் பார்க்க முடியும்.

இதுவே முதல் முறை பிரவீன் இங்கே வருவது. அவர்கள் மதியம் வரும்போது கூட அங்கே மழை பெய்து ஓய்ந்திருந்ததால் அந்த வானிலை மிக அருமையாக இருந்தது. மழை வந்தால் எப்போதும், அந்த இடத்தின் ரம்மியமும், அழகும் நம்மை அங்கேயே இருந்துகொள்ளலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடும். அப்படித்தான் இருந்தது பிரவீனுக்கு.

கிட்டத்தட்ட சென்னையைப் போலவே மிகப் பெரிய மாநகரம் என்றாலும், அதனுள்ளே ஒரு மண்வாசனை தெரிந்தது. நகரத்துப் பிண்ணனியில் ஒரு கிராமத்து வாழ்க்கை என்றால், அந்தப் பெருமை நம் கோவை மாநகரையே சேரும்.

மது சொன்ன வழியில் பிரவீன் காரைச் செலுத்த, ஒருவழியாக மதுவின் வீடு வந்தது. அழகான, அளவான வீடு. உள்ளே நுழையும் போது, அது மதிய வேளை போல் இல்லை. சில்லென்று இருந்தது. ஒருவித நறுமணம் அவர்கள் வீட்டில் வீசிக்கொண்டிருந்தது. அது நம் மனதில் நல்ல எண்ணங்களை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.

அவர்களை மதுவின் அப்பா விநாயகமும், அம்மா சித்ராவும் “வாங்க, வாங்க..” என்று அன்போடு வரவேற்றனர். சித்ரா அவர்களுக்கு குடிக்கத் தண்ணீரும், அதைத் தொடர்ந்து எலுமிச்சை ஜூஸூம் கலந்து கொடுத்தார். சில்லென்ற சிறுவாணி ஆற்றுத் தண்ணீரை அவர்கள் குடித்ததும், அது அவ்வளவு அருமையாக இருந்தது. சென்னையில் எப்பொழுதும் கேன் தண்ணீரைக் குடித்து சலித்தவர்களுக்கு, இது ஒரு மாறுதலாக இருந்தது.

“என்ன மா, பத்மா இப்போ உடம்புக்கெல்லாம் பரவால்லையா.? ஒண்ணும் பிரச்சினை இல்லையே.?” என்று விசாரித்தார் விநாயகம்.

“ஆங்.. பரவால்ல ணா, இப்போ நார்மலாயிட்டேன். அன்னைக்கு திடீர்னு பிரஷர் வந்துடுச்சு. மதுதான் கடந்த ரெண்டு நாளா என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டா. எனக்கு ஒரு பொண்ணு இருந்தா எப்படி இருப்பாளோ அது மாதிரி இருந்தது.” என்று அவளைப் பிடித்தவாறு பத்மா பேச, விநாயகத்துக்கும், சித்ராவிற்கும், மதுவை நினைத்து பெருமையாக இருந்தது.

“என்னப்பா, பிரவீன் எங்க ஊரு எப்படி இருக்கு.?” என்று பிரவீனிடம் பேச்சு கொடுத்தார் விநாயகம்.

“சோ பியூட்டிஃபுல் அங்கிள். நிஜமா எதிர்பார்க்கல, கோயம்புத்தூர் இவ்ளோ நல்லா இருக்கும்னு தெரியாம போச்சு. நான் பிறந்ததில இருந்தே சென்னை தான். என்னோட ஃபேமிலி அண்ட் ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிளும் அங்கேயே அமைஞ்சிடுச்சு. அதனால, இங்கல்லாம் வரதுக்கு சான்ஸே அமையல. அப்பா, நிறைய டைம் வேலை விஷயமா வந்திருக்கார். ஆனா, நானும், அம்மாவும் இதுதான் ஃபர்ஸ்ட் டைம்.” என்று மெய்சிலிர்க்க பேசிக்கொண்டிருந்தான்.

“எங்களுக்கு நீங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம். சரி எல்லாரும் கை கழுவிட்டு வாங்க சாப்பிடலாம்.” என்று அன்புடன் அழைத்தார் சித்ரா.

அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். சாப்பிடும் போதுதான் தெரிந்தது, மதுவின் கைப்பக்குவம் இப்போதே யாரால் வந்தது என்று. பத்மா, சித்ராவின் சமையலை வெகுவாக பாராட்டிக் கொண்டிருந்தார். சித்ராவின் உபசரிப்பு அவர்களை இன்னும் வெகுவாக ஈர்த்தது.

மதுவும், தனக்கென்ன.? என்று இருக்காமல், சித்ராவுடன் சேர்ந்து அவர்களை உபசரித்துக்கொண்டிருந்தாள். அவர்கள் வீட்டிற்கு வந்தது மிக நிறைவாக இருந்தது வெங்கடேசன் குடும்பத்திற்கு.

மாலை வேளை, 5 மணி அளவில் மருதமலை முருகனை தரிசிக்கலாம் என்று தோன்ற அனைவரும் கோவிலுக்கு தாயாராகி கிளம்பி விட்டனர். போவதற்கு முன் தங்கள் வீட்டில் பூத்திருந்த ஜாதிமல்லிப் பூவைக் கட்டி பத்மாவிற்கும், மதுவுக்கும் கொடுத்து விட்டு மீதியைத் தானும் வைத்துக்கொண்டார் சித்ரா. பத்மாவிற்கு சின்ன வயதிலிருந்தே ஜாதிமல்லிப் பூ என்றால் மிகவும் பிடிக்கும். அதன் மணத்தில் கிறங்கிப் போவார். சித்ரா அதைத் தந்ததும், மனதிற்கு மிக நெருக்கமான தோழி போல் அவரை நினைத்தார் பத்மா.

அதன் பிறகு, கடவுளுக்கென்று தனியாக வீட்டின் முன்பு இருந்த சிகப்பு அரளிப்பூவைப் பறித்து மாலை போல் கட்டினார் சித்ரா. மிக எளிதாகவும், வேகமாகவும் அவர் கட்டி முடித்ததைப் பார்த்து வியந்து போனார் பத்மா.

மருதமலை முருகன் கோவில், மலை மேல் அமைந்த அழகிய கோவில். முருகனின் ஏழாம் படை வீடு, என்று அழைக்கப்படும் சிறப்பு மிக்கத் தலம். மிகவும் நிறைவான தரிசனம். முருகன், சின்னக் குழந்தை போல் சிறப்பு அலங்காரத்தில் சிரித்துக் கொண்டிருந்தார். தரிசனம் முடிந்து கர்ப்பக்கிரகத்தைச் சுற்றிவிட்டு வெளியே வந்து, அங்கே உள்ள பெரிய வராண்டாவில் அனைவரும் அமர்ந்தனர்.

அப்போது வெங்கடேசன் குடும்பத்திற்கு ஒரு சின்னத் தயக்கம் உருவானது. அவர்கள் தங்களுக்குள்ளாகவே ஏதோ பேசிக்கொண்டனர். ஆனால், என்ன என்றுதான் புரியவில்லை மதுவின் குடும்பத்திற்கு.

“என்ன வெங்கி., உங்களுக்குள்ளயே ஏதோ பேசிட்டு இருக்கீங்க. என்னாச்சு.? ஏதாவது பிரச்சனையா.? எதுவா இருந்தாலும் சொல்லுங்க.” என்று விநாயகம் கேட்க.,

அவர்கள் மூவரும் ஒருவரை, ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு வெங்கடேசனே ஆரம்பித்தார். “இல்லடா, விநய் (வெங்கடேசன் தன் நண்பனை அழைக்கும் விதம்) நாங்க பிரவீனுக்கு இப்போ கொஞ்ச நாளா தான் பொண்ணு பாக்கலாம்னு பாத்துட்டிருந்தோம். ஆனா, எதுவும் சரியா அமையல.” என்று அவர் மீண்டும் எதையோ சொல்லத் தயங்க,

விநாயகமோ, “அதுதான் பிரச்சனைனா, இதோ இந்த மருதமலை ஆண்டவர் கிட்ட சொன்னா, அவரே அந்தப் பிரச்சனைய நல்லபடியா தீர்த்து வைச்சுடுவார்.” என்று எதார்த்தமாக சொன்னார்.

உடனே வெங்கடேசன், “இங்க வறதுக்கு முன்னாடியே எங்க பிரச்சனைய கடவுள் தீர்த்து வைச்சுட்டார் டா.” என்று சொன்னார்.

“அப்படியா.. பரவால்லயே, ரொம்ப சந்தோஷம். பொண்ணு எந்த ஊர்.? நல்லா படிச்சிருக்கா.?” என்று அவர் கேட்டுக்கொண்டே போனார்.

“அதெல்லாம் ரொம்ப நல்ல பொண்ணு. பிரவீனுக்கும், எங்க குடும்பத்துக்கும் ஏத்த பொண்ணு தான். ஆனா, பொண்ணு சைட்ல இன்னும் எதுவும் பேசல.” என்றார்.

“சரிடா.. அதெல்லாம் ஒரு பிரச்சனையா.? எந்த ஊருன்னு சொல்லு, நாம போய் பேசிப் பார்ப்போம்.” என்று சொன்னார்.

திரும்பிய தயங்கியவர்கள், “பொண்ணு இந்த ஊர் தாண்டா. இங்க தான் இருக்கு பொண்ணு.” என்றதும், விநாயகம், மது, சித்ரா மூவரும் குழம்பியபடி பார்த்துக்கொள்ள.

“என்னடா சொல்ற. பொண்ணு இந்த ஊருன்னா, எங்கிட்ட சொல்ல வேண்டியதுதான.? நானே பார்த்து பேசிடுவேனே. ஆனா, இங்க தான் இருக்குன்னு சொல்ற. அதுதான் எனக்கு புரியல.” என்று திரும்பவும் குழம்ப.

அவர்கள் மூவர் கண்களும் மதுவைப் பார்த்தன. அவர்கள் பார்த்த மாத்திரத்திலேயே மது அதனைப் புரிந்து கொண்டாள். ஆனால், அவள் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தாள். ஆனால், விநாயகத்துக்கும், சித்ராவுக்கும் தான் புரியவில்லை.

“நாங்க பேசிட்டு இருக்கறது மதுவைப் பத்தி தாண்டா. உனக்கு இன்னுமா புரியல. எங்களுக்கு மதுவை ரொம்பப் பிடிச்சிருக்கு. எங்க வீட்டுக்கு ஏத்த பொண்ணுன்னா அது மது தான். அவள விட வேற யாரும் எங்களுக்கு பெஸ்ட்டா இருப்பான்னு தோணல.” என்று ஒரு வழியாக சொல்லி முடிக்க.

விநாயகமும், சித்ராவும் சற்று அதிர்ச்சியாயினர். மது, அமைதியாய் தலையைக் குனிந்தவாறு இருந்தாள். அவர்களுக்கோ, தாங்கள் ஏதேனும் தப்பாகக் கேட்டு விட்டோமா என்று சங்கடமாக இருந்தது.

அதற்குள் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் வந்துவிட, நிலைமையை உணர்ந்த விநாயகம், “நாம, வீட்டுக்குப் போய் பேசிக்கலாம். கூட்டம் அதிகமாயிடுச்சு. சரியா.” என்றபடி எழுந்துவிட்டார்.

அவர்களும் வேறு வழியில்லாமல் எழுந்தனர். படிக்கட்டில் இறங்கும் போது அனைவர் மனதிலும் பல கேள்விகள். என்ன நடக்குமோ, அது அந்த மருதமலை முருகனுக்கு மட்டுமே தெரியும்...

(தொடரும்...)





 
Top