Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 88

Advertisement

SHALU shalu

Well-known member
Member
தாங்கள் அனைவரும் உங்கள் வீட்டிற்கு வந்து சம்பந்தம் பேசப் போகிறோம் என்று எப்போது மஹாபத்ரா தன்னிடம் சொன்னாளோ! அப்போதிருந்தே தனது கை, கால்களை ஓரிடத்தில் வைத்துக் கொள்ள முடியாமல் அங்குமிங்கும் ஓடியாடி ஏற்கனவே சுத்தமாக இருந்த தங்களது வீட்டை மறுபடியும் சுத்தப்படுத்திப் பளிச்சென்று வைத்தார் கவிபாரதி.

அதைப் பார்த்து,”ம்மா! நிற்க நேரமில்லாமல் ஓடியாடி இப்படி வேலை செய்துக்கிட்டு இருக்கீங்களே?” என்று கேட்டுச் சிரித்தான் ஸ்வரூபன்.

“இருக்காதா பின்னே? நம்ம வீட்டுக்கு வரப் போகிற மருமகளும், அவளது குடும்பமும் முதல் முறையாக இங்கே வந்து நம்ம வீட்டுக்குள்ளே காலடி எடுத்து வைக்கப் போறாங்க! அப்படி இருக்கிறப்போ அவங்களை முறையாக வரவேற்கிறது தானே நமக்கு அழகு!” என்று அவனிடம் சொன்னார் அவனது அன்னை.

“ஆஹான்! சூப்பர் ம்மா. ஆனால் எல்லா வேலையையும் நீங்களே செய்யாமல், எங்கிட்டே சொல்லுங்க. நான் செய்றேன். நீங்கப் போய் ஓய்வெடுங்க” எனத் தன்னிடம் கூறிய மகனிடம்,

“இருக்கட்டும் ப்பா. நானே எல்லாத்தையும் செஞ்சு முடிச்சிட்டேன். அவங்களுக்குச் சமைக்கிறதுக்கு மட்டும் காய்கறி எல்லாமே புதுசா, சுத்தமா இருக்கனும். அதனால், அவங்க வர்ற‌ அன்னைக்குக் காலையிலேயே சீக்கிரமே போய் வாங்கிட்டு வந்துரு ப்பா” என்று தெரிவித்தார் கவிபாரதி.

“சரிங்க ம்மா. உங்களுக்கு வேறெதாவது தேவைப்படுமா?” என்று அவரிடம் வினவினான் ஸ்வரூபன்.

“ம்ஹூம். இல்லை ப்பா” என்று கூறி விட்டார் அவனுடைய தாய்.

ஆனால், மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ருத்ராக்ஷியின் மொத்த குடும்பமும் கிளம்பித் தங்கள் வீட்டிற்கு வந்து திருமணச் சம்பந்தப் பேச்சு வார்த்தை நடத்தப் போவதை அந்த ஊர் மக்கள் ஏன் அவளுடைய வகுப்பிற்கு வந்து கவனிக்கும் பெண்களுக்குக் கூடத் தெரியாமல் பார்த்துக் கொண்டனர் கவிபாரதி மற்றும் ஸ்வரூபன்.

அதனாலேயே அவர்களது வருகை ரகசியமாகவே பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்தது.

வழக்கம் போல், எதுவும் தெரியாத மாதிரியே, ருத்ராக்ஷி, கவிபாரதி மற்றும் மிருதுளாவும் தங்களது மெழுகுவர்த்திகள் செய்ய கற்றுக் கொடுக்கும் வகுப்பில் இயல்பாகவே வளைய வந்தார்கள்.

ஒரு சில நாட்கள் கழிந்ததும்,”என்னப்பா, ரெடி ஆகிட்டியா?” என்று தன்னுடைய மகனுக்குக் குரல் கொடுத்தார் சந்திரதேவ்.

“யெஸ் ப்பா. இதோ வர்றோம்” என்றவனோ,

“மஹா! வா ம்மா. கீழே போகலாம்” எனத் தன் மனைவியிடம் கூறினான் காஷ்மீரன்.

“இதோ வந்துட்டேன் ங்க” என்று அவனுடன் சேர்ந்து கீழே ஹாலிற்கு வந்தாள் மஹாபத்ரா.

“அந்த ஊருக்கு நான் போய் ரொம்ப நாளாச்சு. அதே மாதிரி, நீயும் அங்கே போனதே இல்லை. இவன் மட்டும் தான், சமீபத்தில் உங்க கல்யாணத்துக்கு எல்லாரையும் இன்வைட் செய்யப் போயிட்டு வந்திருக்கான். இப்போ அங்கே முதல் முதலாகப் போறதைப் பத்தி என்ன நினைக்கிற ம்மா?” என்று தனது மருமகளிடம் கேட்டார் சந்திரதேவ்.

“அதை நினைச்சாலே எனக்கு ரொம்பவே ஆர்வமாக இருக்கு மாமா! அதுவும் அந்த ஊரைப் பத்தி நிறைய விஷயங்களை நீங்க மூனு பேரும் சேர்ந்து என்கிட்ட சொல்லி அந்த ஆர்வத்தை அதிகப்படுத்தி வச்சிட்டீங்க! அதனால், நான் அங்கே வந்தே ஆகனும்னு உங்க கூட ஜாயின் பண்ணியதுக்கு இதுவும் ஒரு காரணம் மாமா” என்று அவரிடம் ஆவலாக உரைத்தாள் மஹாபத்ரா.

“ஹாஹா!” என அவளது கணவனும், மாமனாரும் வாய் விட்டுக் கொல்லெனச் சிரித்துக் கொண்டார்கள்.

அவர்கள் ஊருக்குச் செல்வதற்கு முந்தைய தினமே, ருத்ராக்ஷி, கவிபாரதி மற்றும் ஸ்வரூபனிடம் தகவல் சொல்லி இருந்ததால்,

தன்னுடைய மெழுகுவர்த்திகள் சொல்லிக் கொடுக்கும் வகுப்பிற்கு விடுப்பு அளித்திருந்தாள் ருத்ராக்ஷி.

கவிபாரதியும், மிருதுளாவும் கமுக்கமாக இருந்து கொள்ள, தனது வயல் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து கொண்டான் ஸ்வரூபன்.

தன்னுடைய சொந்த ஊருக்குச் செல்லும் வேலை கூட ருத்ராக்ஷிக்கு இல்லை எனும் போது, அவள் ஏன் அடுத்த நாளைய வகுப்பிற்கு விடுப்பு கொடுத்துள்ளாள் என்ற சந்தேகம் அந்த ஊர்ப் பெண்களுக்கு எழுந்தது.

அதை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று கவிபாரதி மற்றும் மிருதுளாவின் வாயைக் கிண்டப் பார்த்தனர். ஆனால், அவர்களோ அதற்குப் பிடியே கொடுக்கவில்லை.

‘தங்களுக்கு எதுவுமே தெரியாது’ என்று அடித்துப் பேசி விட்டார்கள் அவ்விருவரும்.

ஆனால், அன்றைய தினம் இரவில்,”காய்க்குச் சொல்லி வச்சிட்ட தானே ப்பா?” என்று மீண்டுமொரு முறை மகனிடம் கேட்டுக் கொண்டார் கவிபாரதி.

“அதெல்லாம் சொல்லியாச்சு ம்மா! நீங்க ரிலாக்ஸாக இருங்க!” என்று அவரிடம் பரிவுடன் கூறினான் ஸ்வரூபன்.

“எப்படி அப்படி இருக்கிறது ப்பா? நாளைக்கு நாளை நினைச்சாலே படபடப்பாகத் தான் இருக்கு! அவங்களோட விருப்பச் சாப்பாடு என்னன்னுக் கூடத் தெரியலையே?” என்றுரைத்தார் அவனது அன்னை.

“நீங்க அன்பாக எந்தச் சாப்பாடு செஞ்சுக் கொடுத்தாலும் அவங்க கண்டிப்பாக சாப்பிடுவாங்க ம்மா” என்று தன்னுடைய தாயிடம் சொன்னான் அவரது மகன்.

அதன் பிறகு, காலை வேளையில், எழுந்து குளித்து விட்டு, மகனைக் காய்கறிக் கடைக்கு அனுப்பி வைத்து விட்டுச் சமையலுக்கான மற்ற ஏற்பாடுகளைச் செய்து வைத்து விட்டார் கவிபாரதி.

அந்தச் சமயத்தில், தாங்கள் மூவரும் அந்த ஊரை அடைய இன்னும் இரண்டு மணி நேரங்கள் இருக்கிறதென்று மிருதுளாவிற்கு அழைத்துச் சொன்னார் சந்திரதேவ்.

அதைக் கேட்டவரோ, உடனே அந்த விஷயத்தை ஸ்வரூபனுக்குத் தெரிவித்து விட்டார் மிருதுளா.

அந்தச் செய்தியைக் கேட்டதும், துரிதமாக காய்கறிகளை வாங்கிக் கொண்டுத் தன் வீட்டிற்குச் சென்றான் ஸ்வரூபன்.

சந்திரதேவ், காஷ்மீரன் மற்றும் மஹாபத்ரா அங்கே வரும் போது தனக்குத் தகவல் தெரிவிக்குமாறு கூறி விட்டு வேலைக்குப் போனார் வித்யாதரன்.

அவர்கள் மூவரும் அங்கே வரும் வரை அவர்கள் வீட்டுப் பெண்ணான ருத்ராக்ஷியைத் தன்னுடைய வீட்டில் தங்க வைத்துக் கொண்டவர்,

“உனக்குப் பதட்டமாக இருக்கா?” என்று தனக்கு எதிராக அமர்ந்திருந்தவளிடம் வினவினார் மிருதுளா.

“ஊஹூம்! எனக்கு அப்படி எந்த உணர்வும் இல்லை க்கா. என்னோட மனசு நிதானமாக, அமைதியாக இருக்கு” என அவருக்குப் பதிலளித்தாள் ருத்ராக்ஷி.

“அது எப்படி?” என்று அவளிடம் வியப்புடன் கேட்டவரிடம்,

“புதுசா வர்றவங்களைப் பார்த்தோ, நான் புது ஊருக்குப் போகிற மாதிரி இருந்திருந்தால் எனக்கு அப்படியெல்லாம் இருந்திருக்கலாம். ஆனால், வரப் போகிறது என்னோட வீட்டாளுங்க! நான் கல்யாணம் ஆகித் தங்கப் போறது இதே ஊரில் தான்! அப்படியிருக்கும் போது எனக்கு ஏன் பதட்டம், பயம் எல்லாம் வரப் போகுது க்கா?” என்று கூறி மெல்லிய புன்னகையை உதிர்த்தாள்.

“பார்றா! செம்ம! செம்ம!” என்று அவளை மெச்சிக் கொண்டார் மிருதுளா.

- தொடரும்

சனி மற்றும் ஞாயிறு விடுமுறை. திங்களன்று சந்திப்போம் நண்பர்களே!
 
Top