அத்தியாயம் 133

Advertisement

SHALU shalu

Well-known member
Member
இந்தக் கதை இன்னும் சில அத்தியாயங்களில் முடிவடைந்து விடும் நண்பர்களே 🩶

🌸🌸🌸🌸

“வாங்க சம்பந்தி. வா ப்பா, வாடா மஹா. நல்லா இருக்கீங்களா?” என்று அவர்களை முறையாக வரவேற்க,

“நாங்க மூனு பேரும் நல்லா இருக்கோம். நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?” என்றதும்,

“எங்களுக்கு என்னக் குறை இருக்கப் போகுது? நாங்களும் சௌக்கியமா இருக்கோம்”என்றார் கவிபாரதி.

அதன் பின், அவர்களை அமர வைத்து தண்ணீர் கொடுத்து உபசரித்த கவிபாரதிக்கும், அவரது மகன் மற்றும் மருமகளுக்கும் சந்தோஷம் தாளவில்லை.

அதுவும் ருத்ராக்ஷியைக் கேட்கவே வேண்டாம். அவர்கள் மூவரும் இங்கே வந்ததில் இருந்து அவள் தான் அவர்களை விழுந்து, விழுந்து கவனித்துக் கொண்டிருக்கிறாள்.

அதைக் கண்டுப் புன்னகை முகிழ்த்தது அனைவருக்கும்.

“நீ முதல்ல வந்து உட்கார்” என ருத்ராக்ஷியை அழைத்துத் தன்னருகில் அமர வைத்துக் கொண்டாள் மஹாபத்ரா.

அதன் பின்னர் அவர்களுக்குக் காஃபி கலக்கிக் கொடுத்தாள் ருத்ராக்ஷி.

அவர்கள் மூவருக்கும் காலை உணவிற்கு என்று இட்லி, சட்னி, சாம்பார் மட்டும் போதும். மதியத்திற்கு விருந்து சாப்பாடு செய்து உண்ணக் கொடுக்கலாம் என்று முடிவெடுத்து இருந்தார்கள் கவிபாரதி, ருத்ராக்ஷி மற்றும் ஸ்வரூபன்.

அதேபோல், அவர்கள் வந்து இறங்கியதும், மூவருக்குமான உணவு சுடச்சுட தயாராகி விட்டிருக்க,

“காலையில் லைட் ஃபுட்டைச் சாப்பிடக் கொடுக்கனும்னு நீங்க வர்ற நேரத்துக்குத் தயாராகச் செஞ்சி வச்சிருக்கோம். நீங்க குளிச்சிட்டு வந்ததுமே சாப்பிடலாம்” என்று அவர்களைத் தன் மகன் மற்றும் மருமகளின் பொறுப்பில் விட்டார் கவிபாரதி.

அவர்கள் மூவருக்கும் எந்தவித சௌகரியக் குறைச்சல் ஆகி விடக் கூடாது என்று மனைவியின் பிறந்த வீட்டு ஆட்களுக்குத் தேவையானதை தானே முன்னின்று செய்தான் ஸ்வரூபன்.

அதன் பின்னர், மிருதுளா மற்றும் வித்யாதரனுக்கும் அழைத்து விஷயத்தைச் சொல்லி விட, அவர்களும் கூடக் கிளம்பி இங்கே வந்து விட்டனர்.

“நாங்க எங்களோட லக்கேஜை ருத்ரா இருந்த வீட்டிலேயே வச்சுடவா அத்தை?” என்று கவிபாரதியிடம் வினவினான் காஷ்மீரன்.

“சரிப்பா” என்றவுடன்,

“இங்கே என்கிட்ட கொடுங்க. நான் கொண்டு போய் வச்சிட்டு வர்றேன்” என்று அவர்களது பையை வாங்கிக் கொண்டுச் சென்றார் வித்யாதரன்.

“அப்பா! இப்படி ஃபேனுக்குக் கீழே வந்து உட்காருங்க” என்று தந்தையிடம் அனுசரணையாக கூறினாள் ருத்ராக்ஷி.

சந்திரதேவ்வோ இந்த வீட்டிலேயே குளித்துக் கொள்வதாகச் சொல்லி விட அவரைக் குளியலறைக்கு அனுப்பி விட்டுக் காஷ்மீரன் மற்றும் மஹாபத்ராவை அழைத்துக் கொண்டு ருத்ராக்ஷி தங்கியிருந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.

அந்த ஜோடிகளும் குளித்து விட்டு வந்ததும், சந்திரதேவ், காஷ்மீரன் மற்றும் மஹாபத்ராவிற்கு உணவைப் பரிமாறினர்.

“நீங்களும் உட்கார்ந்து சாப்பிடுங்க” என்று வித்யாதரன் மற்றும் மிருதுளாவிடம் கூறினார் கவிபாரதி.

“நாங்க சாப்பிட்டுத் தான் வந்தோம்மா” என்றவர்கள்,

அவரையும், ஸ்வரூபன் மற்றும் ருத்ராக்ஷியையும் அமரச் செய்து மூவரையும் சாப்பிட வைத்தனர்.

காலை உணவு முடிந்ததும்,”கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திருங்க. அதுக்குள்ள மதிய சாப்பாட்டைச் செஞ்சிடுவோம்” என்றார் கவிபாரதி.

“நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்றேனே?” என்று முன்னால் வந்த மஹாபத்ராவிடம்,

“அதெல்லாம் வேண்டாம் மா. இன்னைக்கு நாங்க ருத்ராவையே அடுப்படிக்குள்ளே விடப் போறது இல்லை. உன்னை மட்டும் வேலை பார்க்க விட்ருவோமா? நீ ரெஸ்ட் எடு” என்று அவளிடம் அறிவுறுத்தினார் கவிபாரதி.

அதைக் கேட்டு,“அத்தை!”என்று சிறு பிள்ளைத் தனமாக சினுங்கினாள் ருத்ராக்ஷி.

“ஆமாம். நீ அடுப்படிப் பக்கம் வரவே கூடாது” என அவளுக்குத் தடை விதித்தார் மாமியார்.

அதற்கு மேல் அவரிடம் மறுத்துப் பேசவில்லை அவள்.

சந்திரதேவ்,”எனக்கு அலுப்பாக இருக்கு. நான் போய்த் தூங்கவா?” என்றவுடன்,

“என் கூட வாங்க மாமா. நான் உங்களை அழைச்சிட்டுப் போறேன்” என்று அவரைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு ருத்ராக்ஷியின் வீட்டிற்குச் சென்று, அவருக்குத் தேவையான சௌகரியத்தைச் செய்து கொடுத்து அவரை உறங்க வைத்து விட்டு வந்தான் ஸ்வரூபன்.

“உங்களுக்குத் தூக்கம் வரலையா?” என்று காஷ்மீரன் மற்றும் மஹாபத்ராவைப் பார்த்துக் கேட்டார் மிருதுளா.

“இல்லைங்க. நாங்க கொஞ்ச நேரம் உங்க வயலில் போய் இருந்துட்டு வரவா?” என்றதும்,

“தாராளமாகப் போயிட்டு வாங்க. டேய் நீயும், ருத்ராவும் அவங்க கூடப் போங்க. அதுக்குள்ளே நாங்க சமையலுக்குத் தயார் செஞ்சி வச்சுருவோம்” என்று மகனையும், மருமகளையும் அவர்களுடன் அனுப்பி வைக்க முடிவெடுக்க,

“சரி வாங்க. நானும் உங்க கூடத் துணைக்கு வர்றேன்”என்று அவர்களைக் கூட்டிக் கொண்டுப் போய் விட்டார் வித்யாதரன்.

மிருதுளா,”அப்படியே பேசிக்கிட்டே மதிய சமையலுக்குத் தயார் பண்ணிடலாம். வாங்க ம்மா” என்று கவிபாரதியிடம் கூறி விட்டு, அசைவ சமையலுக்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினர்.

இங்கே வித்யாதரனுடன் சேர்ந்து வயலை அடைந்த காஷ்மீரன், மஹாபத்ரா மற்றும் ஸ்வரூபன், ருத்ராக்ஷியும் அங்கே வேலை பார்த்துக் கொண்டு இருந்தவர்களிடம் இயல்பாகப் பேச்சுக் கொடுத்தவாறே சுற்றிப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

“கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் பச்சைப் பசேல்ன்னு இருக்கு! பார்க்கவே கண்ணைப் பறிக்குது!” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டு இருந்தவர்களைப் புன்னகையுடன் பார்த்தார் வித்யாதரன்.

ஒரு மணி நேரம் சென்றதும்,“வெங்காயம், தக்காளி எல்லாத்தையும் உரிச்சு வச்சாச்சு. மசாலாவையும் அரைச்சிடலாம்” என்ற கவிபாரதியிடம்,

“இதையெல்லாம் செஞ்சி முடிச்சதும் அவர்கிட்ட ஃபோன் பண்ணிக் கறி வாங்கிட்டு வரச் சொல்லிட்றேன்ம்மா” என்று கூறினார் மிருதுளா.

உடனே வேலைகளை மடமடவென்று பார்க்கத் தொடங்கி விட்டார்கள் இருவரும்.

அதே சமயம், அந்த வயலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த ருத்ராக்ஷியிடம்,”என்னப் புதுப் பொண்ணும், மாப்பிள்ளையும் எப்படி இருக்கீங்க? உன் பொறந்த வீட்டு ஆளுங்களும் ஊருக்கு வந்திருக்காங்க போலவே?” என்று அவளிடம் மெழுகுவர்த்திகள் செய்யப் பயிற்சி பெறும் பெண்கள் வினவினர்.

அவர்கள் பக்கத்து வயலில் தான் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

அதனால் தான், ருத்ராக்ஷியை அடையாளம் கண்டு கொண்டு இப்போது பேச்சுக் கொடுத்தனர்.

ருத்ராக்ஷி,“நல்லா இருக்கோம் க்கா. நீங்க எப்படி இருக்கீங்க?” என அவர்களிடம் விசாரித்து விட்டு,

“ஆமாம் க்கா. மறு வீட்டு விருந்துக்காக வந்திருக்காங்க” என்றாள்.

அவர்களது உரையாடலைக் கேட்டுப் புன்னகையுடன் நின்றிருந்தார்கள் வித்யாதரன், காஷ்மீரன் மற்றும் மஹாபத்ரா.

“ஓஹோ! ஆமாம். அந்த மெழுகுவர்த்தி சொல்லித் தர்ற வகுப்பை மறந்துட்டியே ம்மா? இல்லைன்னா இனிமேல் அதை நடத்துற யோசனை இல்லையா?”என்று அவளிடம் விசாரித்தார் ஒரு நடுத்தர வயது பெண்மணி.

“என்னக்கா இப்படி சொல்லிட்டீங்க? அதை மறுபடியும் கண்டிப்பாக ஆரம்பிப்பேன். எங்க மறு வீட்டு விருந்து எல்லாம் முடிஞ்சதும் நானே உங்க எல்லாரையும் கூப்பிட்டு வச்சு இதைப் பத்திப் பேசுவேன்” என்று அவருக்கு உறுதி அளித்தாள் ருத்ராக்ஷி.

“சரி ம்மா” என்றவர்கள், அவளிடம் சொல்லி விட்டுத் தங்களது வேலையைப் பார்க்கச் சென்றனர்.

“அப்படிய ஊரில் இருக்கிற கடைத் தெருவுக்குப் போயிட்டு வரலாமா?” என்று மற்றவர்களிடம் வினவினான் ஸ்வரூபன்.

“ஆமாம் அண்ணா, அண்ணி அங்கே நிறைய நல்ல, நல்லப் பொருட்களை எல்லாம் விப்பாங்க. போவோமா?”என்றாள் ருத்ராக்ஷி.

மஹாபத்ரா,“ம்ம். போகலாம்!”என்று உற்சாகமாக உரைத்தாள்.

உடனே அவர்களை அழைத்துக் கொண்டுக் கடைத் தெருவுக்குப் போயினர் ஸ்வரூபன் மற்றும் வித்யாதரன்.

அங்கேயிருந்த அனைத்துக் கடைகளையும் அலசி ஆராய்ந்து பார்த்து தங்களுக்குப் பிடித்தவற்றை ருத்ராக்ஷியும், மஹாபத்ராவும் கை நிறைய வாங்கிக் கொண்டார்கள்.

அப்போது, சமையலுக்குத் தேவையானதை தயார் செய்து விட்டதும்,”நான் அவருக்கு போன் பண்றேன் ம்மா” என்று தன் கணவர் வித்யாதரனுக்கு அழைத்தார் மிருதுளா.

“ஹலோ சொல்லு ம்மா”

“எங்கே இருக்கீங்க?”

“எல்லாரும் கடைத் தெருவுக்கு வந்து இருக்கோம் மா” என்று பதிலளித்தார் வித்யாதரன்.

“ஓஹ். இங்கே சமையலுக்கு எல்லாத்தையும் ரெடி பண்ணி வச்சாச்சு. நீங்க கறி வாங்கிட்டு வந்து கொடுத்துட்டா சமையலை ஆரப்பிச்சிடலாம்” என்க,

“சரி ம்மா. இதோ உடனே வாங்கிட்டு வந்து தர்றேன்” என்றவரிடம்,

“அப்படியே நாம பேசி வச்சு இருந்த அந்த சமையல் ஆளுங்க கிட்டேயும் நேரத்துக்குச் சாப்பாடு கொண்டு வந்துடனும்னு சொல்லிட்டு வந்துருங்க” என்று அறிவுறுத்தி விட்டு அழைப்பை வைத்தார் மிருதுளா.

இந்த விஷயத்தைத் தன்னுடன் வந்தவர்களிடம் சொல்லி விட்டு மனைவி கூறியதைப் போல,

கறியை வாங்கி விட்டு வரும் வழியிலேயே சமையல் ஆட்களிடமும் மதிய சாப்பாட்டைக் குறிப்பிட்ட நேரத்திற்குக் கொண்டு வருமாறு தெரிவித்து விட்டு வீட்டிற்கு வந்தார் வித்யாதரன்.

“என்னங்க கறி வாங்கிட்டு வந்துட்டீங்களா?”எனக் கேட்டுக் கொண்டே அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தார் மிருதுளா.

அதை வாங்கிப் பருகி விட்டு,“ஆமாம் மா. சமையல் ஆளுங்க கிட்டடேயும் சொல்லிட்டேன். வேற எதுவும் வேணுமா?”

“இல்லைங்க. எல்லாமே வீட்டிலேயே இருக்கு” என்றவரோ,

“கறியைக் கழுவிச், சுத்தம் பண்ணிக் கொடுத்துடுங்க” என்று அவரிடம் கூறிக் கொண்டு இருக்கும் போதே,

“இதையெல்லாம் ஸ்வரூபனையே வாங்கிட்டு வர சொல்லலாம்னு சொன்னா நீங்க ரெண்டு பேரும் கேட்கவே இல்லை. எல்லா வேலையையும் நீங்களே செய்றீங்களே ப்பா!” என்று அவர்களிடம் சங்கடத்துடன் கூறினார் கவிபாரதி.

“அதனால் என்ன ம்மா? இதெல்லாம் நம்ம வீட்டு வேலை தானே!” என்று கூறியவர்,”நான் போய் வேலையைப் பார்க்கிறேன்” என்று பொதுவாக உரைத்து விட்டுப் பின் வாசலுக்குச் சென்று கறியைச் சுத்தம் செய்து கொண்டு வந்து தந்தார் வித்யாதரன்.

“ஹேய் என்ன நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு பொருட்களை வாங்கி இருக்கீங்க?” என்று தன் மனைவியிடமும், தங்கையிடமும் கேட்டுச் சிரித்தான் காஷ்மீரன்.

“ஆமாங்க. இதெல்லாம் ரொம்ப நல்லா இருக்குப் பாருங்க” என்றாள் மஹாபத்ரா.

“ம்ம். எஸ்” என்றவனிடம்,

“நீங்க எங்க வீட்டுக்கு எங்களைப் பார்க்க வந்திருக்கீங்க! அப்போ நாங்க தானே உங்களுக்குத் தேவையானதை செய்யனும்? அதனால் இதுக்கெல்லாம் நான் தான் காசு கொடுப்பேன்”என்று கூறி அவர்களது மறுப்பைச் சட்டை செய்யாமல் அந்தப் பொருட்களுக்கான பணத்தைக் கொடுத்தான் ஸ்வரூபன்.

அதன் பிறகு, அனைவரும் வீட்டிற்குக் கிளம்பிச் செல்ல, அங்கே சமையல் வேலைகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது.

“அத்தை” என்று அழைத்துக் கொண்டே அடுக்களைக்குள் செல்லப் போன ருத்ராக்ஷியை,

“அங்கேயே நில்லு. உள்ளே வராதே” என்று அவளைத் தடுத்தார் கவிபாரதி.

“நான் தண்ணீர் குடிக்க வந்தேன்த்தை. ரொம்ப வெயில்!” என்றவளிடம்,

“தண்ணீர் தானே? நான் எடுத்துட்டு வரேன்” என்று அவர்களுக்கு நீரைக் கொணர்ந்து தந்தார் மிருதுளா.

அதற்குப் பின்னர், தாங்கள் சமையலை முடித்து விட்டதை அனைவரிடமும் உரைத்து விட்டு, அவர்களை உணவுண்ண அழைக்கும் சமயத்திலேயே வெளியே செய்யச் சொல்லி இருந்த சில அசைவ உணவுகளும் அங்கே வந்து சேர்ந்தது.

உடனே அனைவரையும் அமர வைத்து தலைவாழை இலை போட்டதும்,

“அத்தை! நீங்க ரெண்டு பேரும் எங்களை அடுப்படிக்குள்ளேயே விடலை. அதனால் பரிமாறுற வேலையையாவது நாங்க செய்றோம்” என்று அவரிடம் வலியுறுத்தி உட்கார வைத்து அனைவருக்கும் தங்களது கரங்களால் உணவைப் பரிமாறினர் ருத்ராக்ஷி மற்றும் மஹாபத்ரா.

- தொடரும்
 

Advertisement

Back
Top