அத்தியாயம் 131

Advertisement

SHALU shalu

Well-known member
Member
ருத்ராக்ஷியின் பிறந்த வீட்டு ஆட்கள் அனைவரும் கிளம்பி அவளது புகுந்த வீட்டின் வாயிலை அடைந்தவுடனேயே,

கவிபாரதி, ஸ்வரூபன் மற்றும் ருத்ராக்ஷியும் வெளியே வந்து,“வாங்க! வாங்க” என்று அவர்களைப் புன்னகை முகமாக வரவேற்றனர்.

தாங்களும் பதில் புன்னகை கொடுத்து விட்டு வீட்டினுள் நுழைந்தனர்.

தன்னுடைய தந்தை மற்றும் தமையனைப் பார்த்த ருத்ராக்ஷிக்குக் கண்கள் கலங்கி, அவளால் அவர்களிடம் பேசக் கூட முடியவில்லை. அப்படியே அவர்களைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

ஆனால், அந்தச் சூழ்நிலையை இலகுவாக்கும் வகையில்,”ஹேய் ருத்ரா! என்ன அமைதியாக இருக்கிற? நீ எங்களை எதிர்பார்க்கலையோ?”எனத் தன் நாத்தனாரை வம்புக்கு இழுத்தாள் மஹாபத்ரா.

“அதெல்லாம் இல்லை அண்ணி” என்றவளுக்குப் பேச்சு வராமல் வாய் முரண்டியது.

“சரி விடு. நாங்க வந்து இவ்வளவு நேரமாச்சு! எங்களுக்குக் காஃபி போட்டு எடுத்துட்டு வர மாட்டியா?” என்றவுடன்,

“ஆங்! இதோ போட்டுக் கொண்டு வரேன் அண்ணி” என்றவள், துரிதமாகச் சமையலறைக்குப் போய் விட்டாள் ருத்ராக்ஷி.

அவளை இயல்பாக மாற்றுவதற்கு முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்த மஹாபத்ராவைக் கண்டு அனைவரின் இதழ்களிலும் குறுநகை துளிர்த்தது.

ஆனாலும்,”அவளே பதட்டமாக இருக்கிறா! நீ மேலும் வம்பிழுக்காதடி” என்று மகளை அதட்டினார் கனகரூபினி.

“விடுங்க ம்மா. மஹாவால் தான், ருத்ரா சாதாரணமாக நடந்துக்கிறாள்” என்று அவளுக்குப் பரிந்து பேசினார் கவிபாரதி.

சந்திரதேவ்,“ருத்ராவைப் பார்க்காமல் கிளம்புறோமேன்னு ஒரு மாதிரி சங்கடமாக இருந்துச்சு. அதான், பார்த்துட்டுப் போகலாம்ன்னு வந்தோம். அப்படியே மறு வீட்டுக்கும் அழைச்சிட்டுப் போக வந்தோம்” என்றுரைத்தார்.

அதை உள்ளிருந்து கேட்டவளுக்கோ, ஆனந்தக் கண்ணீர் ஊற்றெடுத்தது.

அதைத் துடைத்து விட்டு அனைவருக்கும் காபி போட்டுக் கொண்டு வந்தவள், தந்தையிடமும், தமையனிடமும் கொடுக்கப் பிரம்மப் பிரயத்தனப்பட்டாள் ருத்ராக்ஷி.

“கையிலேயே வச்சிட்டு இருந்தால் எப்படி? இரண்டு பேருக்கும் கொடுத்துட்டு எங்களுக்கும் கொண்டு வா. காலையில் சாப்பிடக் கூட இல்லை. அப்படியே கிளம்பி வந்தாச்சு. ரொம்ப பசிக்குது!” என்று அவளைச் செல்லமாக கடிந்தாள் மஹாபத்ரா.

அவளது அதட்டலுக்கும் பலன் இருந்தது.

தன்னிடமிருந்த காபி தம்ளரை முதலில் சந்திரதேவ்விடம் நீட்ட, அவரோ அதைப் பெற்றுக் கொண்டு மகளைப் பார்த்துப் புன்னகைத்தார்.

ஆனால், தமையனிடம் நீட்டிய கோப்பையை அவன் எந்த வித உணர்வையும் வெளிக்காட்டாமல் எடுத்துக் கொண்டதைக் கண்டு முகம் சுருங்கிப் போனாள் ருத்ராக்ஷி.

“ம்ம். இங்கேயும் கொஞ்சம் வரலாம்” என்ற மஹாபத்ராவிற்குத் தம்ளரைக் கொடுத்து விட்டு, அவளது பெற்றோருக்கும் கோப்பைகளைத் தந்தாள்.

இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கவிபாரதியும், ஸ்வரூபனும், அவர்கள் சமாதானம் ஆகும் வரை அதில் தலையிடுவது தவறு என்று ஒதுங்கி இருந்தனர்.

ருத்ராக்ஷியும் கூட அவர்களைத் தன் துணைக்கு அழைக்கவில்லை.

அந்த நேரத்தில், வித்யாதரனும், மிருதுளாவும் அங்கே வந்து சேர்ந்தனர்.

“வாங்க! உங்களைக் காணோமேன்னு இப்போ தான் நினைச்சேன்” என அவர்களை வரவேற்றார் கவிபாரதி.

“பிள்ளைங்களைத் தூங்க வச்சிட்டு வர்றதுக்குத் தாமதம் ஆகிடுச்சு ம்மா” என்றார் மிருதுளா.

“வணக்கம் ங்க” என்று ருத்ராக்ஷியின் பிறந்த வீட்டாருக்கு வணக்கம் வைத்தார்கள் கணவனும், மனைவியும்.

அவர்களுக்கும் குடிக்க காபி தயாரித்துக் கொடுத்தாள் ருத்ராக்ஷி.

அவளது முகத்தில் அருள் இல்லாமல் இருப்பதைக் கண்டாலும் அதற்கான காரணம் என்னவென்று அவருக்குத் தான் தெரியுமே? அதைப் பற்றிக் கேட்காமல் இருந்து விட்டார் மிருதுளா.

கவிபாரதி,“காலைச் சாப்பாடு இன்னும் சாப்பிடலைன்னு சொன்னீங்களே? இங்கே சமையல் முடிச்சாச்சு. இட்லி ஊத்துறேன். சாப்பிட்டுத் தான் போகனும்” என்று அவர்களுக்கு அன்புக் கட்டளை விடுக்கவும்,

“உங்களுக்கு எதுக்குச் சிரமம்? நாங்க ஊருக்குப் போகிற வழியில் சாப்பாட்டைப் பார்த்துக்கிறோம்” என்றார் பிரியரஞ்சன்.

“என்ன இப்படி சொல்லிட்டீங்க? நம்ம வீட்டில் சாப்பிடறதுக்குச் சங்கட்டமா இருக்கா உங்களுக்கு?” என்று கேட்டான் ஸ்வரூபன்.

“ஐயோ! அப்படி இல்லை மாப்பிள்ளை” என்ற கனகரூபினியிடம்,

“அப்போ சாப்பிட்டுப் போங்க” என அவர்களிடம் கறாராக உரைத்தவர்,”நான் போய் இட்லி ஊத்துறேன். நீ இவங்க கூடப் பேசிட்டு இரு” என்று மருமகளுக்கு அறிவுறுத்தினார் கவிபாரதி.

“நீங்க மட்டும் எப்படி இவ்வளவு பேருக்கும் இட்லி ஊத்துவீங்க அத்தை? நானும் வர்றேன்” என்றவளிடம்,

“அதான் நான் இருக்கேனே? நானும், அவங்களும் சமையல் வேலையைப் பார்த்துக்கிறோம். நீ உட்காரு” என அவளை அமர வைத்து விட்டுக் கவிபாரதியுடன் இணைந்து சமையலறைக்குப் போனார் மிருதுளா.

“நேத்து நீங்க கிளம்பிப் போனதுக்கு அப்பறம் இருந்து நடந்ததை நினைச்சு இவ இப்போ வரைக்கும் ரொம்ப ஃபீல் பண்ணிட்டு இருக்கா! நான் எவ்வளவு சமாதானம் செஞ்சும் பிரயோஜனமே இல்லை. அப்படியே தான் இருக்கிறா!” என்று ருத்ராக்ஷியின் தந்தை மற்றும் தமையனிடம் சொல்லி வருந்தினான் ஸ்வரூபன்.

அதில் அவர்களுக்கு மன வருத்தம் ஆகி விடுமோ என்ற பயத்தில்,”ஏங்க! சும்மா இருங்க” என்று அவனை அடக்கினாள் மனைவி.

“நீ முதல்ல அமைதியாக இரு” என்றவன்,”நானும், அம்மாவும் இதில் தலையிடக் கூடாதுன்னு இருந்தோம். ஆனால் மனசு கேட்கலை. அதான் இதைச் சொல்லிட்டேன்”என்றுரைத்தான் ருத்ராக்ஷியின் கணவன்.

“நாங்களும் அதை நினைச்சுத் தான் இங்கே வந்துட்டு ஊருக்குப் போகலாம்னு முடிவெடுத்து வந்தோம் மாப்பிள்ளை” என்றான் காஷ்மீரன்.

“இங்கே வந்ததில் இருந்து அவகிட்டே நீங்க ரெண்டு பேரும் ஒரு வார்த்தைக் கூடப் பேசவே இல்லை. அதுவே இவளுக்குக் கஷ்டமாக இருக்கு. அதைக் காட்டிக்க மாட்டேங்குறா” என்றவனிடம்,

“புரியுது மாப்பிள்ளை. நாங்க இனிமேல் சகஜமாகப் பேச முயற்சிக்கிறோம்” என்றார் சந்திரதேவ்.

அவர்களிடம் மன்னிப்புக் கேட்பதைப் போன்றதொரு பாவனையைக் காட்டினாள் ருத்ராக்ஷி.

அவளைக் கண்ணாலேயே சமாதானம் செய்தார்கள் அவளது தந்தையும், தமையனும்.

“மறு வீட்டுக்கு அழைக்கும் போது முகத்தைச் சிரிச்சா மாதிரி வச்சுக்கோங்களேன் ப்ளீஸ்!” என்று கணவனிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள் மஹாபத்ரா.

“சரி ம்மா” என்று அவளுக்கு உறுதி அளித்தான் காஷ்மீரன்.

அப்போது”ருத்ரா!” என அடுக்களையில் இருந்து அழைப்பு வரவும் அங்கே சென்றாள் ருத்ராக்ஷி.

“நீ ஏன் அவங்க எல்லார் கூடயும் தடுமாறிப் பேசிட்டு இருக்கிற? தள்ளி நிற்கிற? அவங்க எல்லாம் உன்னோட குடும்பம் தானே? அப்பறம் பேசுறதுக்கு என்னக் கூச்சம்?” என இட்லிப் பாத்திரத்தில் மாவை ஊற்றிக் கொண்டே மருமகளிடம் வினவினார் கவிபாரதி.

“நான் செஞ்ச விஷம் அப்படி அத்தை. அதான் ஒதுங்கி இருக்கேன்” என்று விரக்தியாகப் பதிலளித்தாள் ருத்ராக்ஷி.

மிருதுளா,“உன் வீட்டு ஆளுங்க கிட்டேயே ஒதுங்கி இருந்தால் எப்படி? குடும்பம்னா இப்படி ஏதாவது நடக்கத் தான் செய்யும். அதுக்காக ஒரேயடியாக ஒதுங்கி விடக் கூடாது! நீயாகப் போய்ப் பேசலாம்ல? அதுக்கு மனசு தடுக்குதோ?”

அதில் சுருக்கென்று ஆகி விட,”அப்படி இல்லை அக்கா. உடனே எப்படி பேசுறதுன்னு சங்கடமா இருக்கு” என்றவளிடம்,

“சாப்பாடுப் பரிமாறுவதில் இருந்து ஆரம்பி” என்று அவளுக்கு யோசனை கூறினார் கவிபாரதி.

“சரிங்க அத்தை” என்று கூறி விட்டு, உணவு தாயாராகியதும்,

அனைவரிடமும் வந்து,”இட்லி ரெடி ஆகிடுச்சு. சாப்பிட வாங்க” என்றவள்,

தன் கணவனிடம்,”ஏங்க! பாயை எடுத்து விரிச்சு எல்லாரையும் உட்கார வைங்க” என்று வலியுறுத்தி விட்டு அடுக்களைக்குச் சென்று தன் மாமியாரிடம் இருந்து உணவுப் பாத்திரங்களை வாங்கி வந்தாள் ருத்ராக்ஷி.

மனைவியின் வார்த்தைகளைச் செயலாக்கிய ஸ்வரூபனிடம்,”அப்படியே நீங்களும் அவங்க கூட உட்கார்ந்து சாப்பிட்டு முடிங்க. உங்களுக்குப் பரிமாறிட்டு நானும், அத்தையும் சாப்பிட்றோம்” என்றாள்.

“ஏன் எல்லாரும் ஒன்னாக உட்கார்ந்து சாப்பிடுவோம். நீயும், சம்பந்தியும் எங்க கூட உட்கார்ந்து சாப்பிடுங்க” என்று அவளிடம் கூறினார் சந்திரதேவ்.

அதைக் கேட்டவுடன், ருத்ராக்ஷியின் முகம் மலர்ந்து விகசித்தது.

“சரிங்க அப்பா” என்றவள், தன் கணவனுடனும், அத்தையுடனும் பாயில் அமர்ந்து கொண்டாள்.

“நாங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுத் தான் வந்தோம். அதனால் நாங்களே உங்களுக்குப் பரிமாறுறோம்” என்ற வித்யாதரனும், மிருதுளாவும், அனைவருக்கும் உணவு பரிமாறினர்.

ஆனாலும்,“அண்ணா! உங்க தட்டில் சட்னி கம்மியா இருக்கே!” என்று தமையனின் தட்டில் சட்னி மற்றும் சாம்பாரை ஊற்றிய தங்கையை நிமிர்ந்து பார்த்தவன், மெல்லிய புன்னகையை உதிர்த்து விட்டு உண்டான் காஷ்மீரன்.

அதேபோல்,”அப்பா! இன்னும் இரண்டு இட்லி வச்சுக்கோங்க” என்று தந்தைக்கு அறிவுறுத்தினாள் ருத்ராக்ஷி.

அதைக் கண்ணுற்ற மற்றவர்களும் திருப்தியாக உணவுண்டு முடித்தனர்.

“மறு வீட்டுச் சம்பிரதாயத்தைப் பத்திப் பேசுவோமா?” என்று பேச்சைத் தொடங்கினார் கனகரூபினி.

“ம்ம். சரிங்க சம்பந்தி” என்றார் கவிபாரதி.

“ஒரு நாலு நாள் கழிச்சு மறு வீட்டு விருந்துக்கு மூனு பேரும் அங்கே வந்துடுங்க” எனக் கூறிய சந்திரதேவ்விடம்,

“நான் எதுக்குச் சம்பந்தி? அவங்க ரெண்டு பேரும் மட்டும் வரட்டுமே?” என்றார் ஸ்வரூபனின் தாய்.

“அதனால் என்னங்க? அவங்களை அனுப்பி வச்சிட்டு நீங்க மட்டும் இங்கே தனியாக இருக்கனுமா? மகன், மருமக கூட சேர்ந்து வர்றதுல உங்களுக்கு என்னப் பிரச்சினை?” என்று அவரிடம் வினவினார் கனகரூபினி.

“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை ங்க” என்றவுடன்,

“அப்பறம் எதுக்குத் தயக்கம்? போயிட்டு வாங்க ம்மா” என்று அவருக்கு அறிவுறுத்தினார் வித்யாதரன்.

“ஆமாம் அத்தை. நீங்களும் எங்க கூட வந்து தான் ஆகனும்” என்று ருத்ராக்ஷியும் கூறிட, அவர்களுக்குச் சம்மதம் தெரிவித்து விட்டார் கவிபாரதி.

“முதல்ல இங்கே மறு வீட்டுச் சாப்பாடு ஆக்கிப் போடனும். அதை முடிச்சிட்டு அங்கே அனுப்பி வைக்கிறோம்” என்றார் மிருதுளா.

“சரி ம்மா” என்றவர்கள், வந்த வேலை முடிந்தது என்பதைப் போல ஊருக்குக் கிளம்ப யத்தனிக்க,

“அப்பா, அண்ணா!” என்றவளது குரலில் நெகிழ்ந்து போன சந்திரதேவ் மற்றும் காஷ்மீரனோ, ருத்ராக்ஷியைத் தங்கள் அருகில் அழைத்தனர்.

உடனே அவர்களிடம் சென்று தஞ்சம் அடைந்தவளைத் தன் மார்பில் சாய்த்துக் கொண்டார் அவளது தந்தை.

“என் கூடப் பேசுங்க அப்பா! அண்ணாவும் முகத்தைத் தூக்கி வச்சிட்டுத் தான் இருக்கார்! என்னால் தானே எல்லாம்? எத்தனை தடவை சாரி கேட்க சொன்னாலும் நான் கேட்கத் தயாராக இருக்கேன்!” என்றவளின் அழுகையைக் காணத் தாங்க முடியாமல்,

“ருத்ரா ம்மா! நீ சாரி கேட்க வேண்டிய அவசியமே இல்லை! நீ என் செல்ல தங்கச்சிடா! உன் மேல் நான் எப்படி கோபத்தைப் பிடிச்சு வைக்க முடியும்? இந்த அண்ணன் எப்பவும் உன்கிட்டே பேசாமல் இருக்க மாட்டேன்! அழக் கூடாது” என்று அவளைச் சமாதானம் செய்தான் காஷ்மீரன்.

அதைக் கேட்டதும்,“தாங்க்ஸ் அண்ணா” என்ற ருத்ராக்ஷியின் அழுகை அடங்கியது.

“ஹப்பாடா! இப்போ தான் நிம்மதியாக இருக்கு” என்றவள்,

“இப்போதாவது சிரி ருத்ரா” எனத் தன் நாத்தனாருக்கு அறிவுறுத்தினாள் மஹாபத்ரா.

அதில் இலேசாகப் புன்னகைத்தவள்,”உங்க எல்லாருக்கும் தாங்க்ஸ்” என்று கூறவும்,

“நீ இப்படி நன்றி சொல்றதை ஒரு வேலையாகவே வச்சிருக்கிற! போதும் மா” என்றார் கனகரூபினி.

ருத்ராக்ஷியின் குடும்பத்தார்,“சரி அப்போ நாலு நாள் கழிச்சு நீங்க மூனு பேரும் ஊருக்கு விருந்துக்கு வாங்க” என்று புதுமணத் தம்பதியையும், சம்பந்தியையும் மறு வீட்டு விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.

அனைத்து சங்கடங்களையும், மனக்குறைகளையும் துடைத்து எடுத்து விட்டு அவ்விடத்தில் சந்தோஷத்தையும், கலகலப்பையும் நிரப்பி விட்டு,

“மனசில் எந்தக் கஷ்டத்தையும் சுமக்காமல் நல்லபடியாக சந்தோஷமாக வாழும்மா” என்று ருத்ராக்ஷியிடமும்,

“இனிமேல் இவ உங்க வீட்டுப் பொண்ணு. பார்த்துக்கோங்க” என்று அவளது கணவன் மற்றும் மாமியாரிடமும் சொல்லி விட்டு விடைபெற்றுக் கிளம்பினர்.

அவர்கள் சென்றவுடன், அப்போ நாங்களும் வீட்டுக்குப் போயிட்டு வர்றோம்” என்ற வித்யாதரன் மற்றும் மிருதுளாவிடம்,

“ம்ம். போயிட்டு வாங்க. இவங்களோட மறு வீட்டுச் சம்பிரதாயத்தில் நீங்களும் இருக்கனும்” என்றார் கவிபாரதி.

“நாங்க இல்லாமலா? எல்லா ஏற்பாட்டையும் நாங்க தானே பண்ணப் போறோம்! அதனால் நீங்க கவலையேபடாதீங்க!” என்றுரைத்து விட்டுப் போனார்கள் இருவரும்.

அதன் பின்னர், அவர்களது மறு வீட்டுச் விருந்திற்குச் செய்ய வேண்டிய ஏற்பாடுகளைப் பற்றிய பேச்சு வார்த்தையில் இறங்கினர் கவிபாரதி, ஸ்வரூபன் மற்றும் ருத்ராக்ஷி.

- தொடரும்
 
எனக்கு காஷ்மீரன பார்த்து இப்படி ஒரு அண்ணா நமக்கு இல்லையேனு ரொம்பவும் feel ஆகுது, அழுகை வருது. தங்கையின் மேல் எவ்வளவு அன்பு, அவ செய்த தவறைக் கூட பெருசாக்காமல், அதே சமையம் அவ பேசினது தப்புனு அதை அவளுக்கு எவ்வளவு நாசூக்காக புரியவச்சிட்டாப்புடி.
அருமையான பதிவு.
 
எனக்கு காஷ்மீரன பார்த்து இப்படி ஒரு அண்ணா நமக்கு இல்லையேனு ரொம்பவும் feel ஆகுது, அழுகை வருது. தங்கையின் மேல் எவ்வளவு அன்பு, அவ செய்த தவறைக் கூட பெருசாக்காமல், அதே சமையம் அவ பேசினது தப்புனு அதை அவளுக்கு எவ்வளவு நாசூக்காக புரியவச்சிட்டாப்புடி.
அருமையான பதிவு.
தங்களது அன்பிற்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள் சகி 💕✨🤗🙏
 

Advertisement

Back
Top