அத்தியாயம் 130

Advertisement

SHALU shalu

Well-known member
Member
தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுக்கு உணவளித்து விட்டுத் தானும் சாப்பிட்டு விட்டு,”சரி. நீங்க தூங்குங்க. நான் கவிபாரதியம்மா வீட்டுக்குப் போயிட்டு வரேன்” என்றார் மிருதுளா.

“நான் உன்னைக் கொண்டு போய் விட்றேன்” எனத் தன் மனைவியை வண்டியில் அழைத்துக் கொண்டு போய் அங்கே இறக்கி விட்டுச் சென்றார் வித்யாதரன்.

“ம்மா!” என்ற அழைப்பில் வாசலிற்கு வந்த கவிபாரதியோ,”வா மிருதுளா” என்று அவரை உள்ளே அழைத்துப் போனார்.

தன் மருமகளிடம் கூட்டிச் சென்று,”ருத்ராவுக்கு அலங்காரம் பண்ணி அனுப்பி வச்சிட்டு வா ம்மா. நான் வெளியே இருக்கேன்” என்று அங்கேயிருந்து அகன்று விட்டார் ஸ்வரூபனின் அன்னை.

தன்னை அலங்கரிக்க வந்த மிருதுளாவை,”வாங்க அக்கா” என்று வரவேற்றுப் புன்னகை செய்தாள் ருத்ராக்ஷி.

“ம்ம். நானே சேலையைக் கட்டி விடவா ம்மா?” என அவளிடம் கேட்க,

“சரிங்க அக்கா” என்றவளுடைய முகம் சோபையிழந்து காணப்பட்டது.

அவள் குழப்பத்தில் இருப்பதால் அவளால் புடவையை நன்றாக உடுத்த முடியாதோ என்ற எண்ணம் இருந்தது போலும். அதனால் அந்த வேலையைத் தன்னிடம் கொடுத்து விட்டாள் என்றெண்ணி, அவளுக்குப் பொறுமையாகச் சேலையைக் கட்டி விட்டார் மிருதுளா.

அதன் பின்னர், அவளது சிகையையும் வாரி ஜடை போட்டு விட்டவர்,”எனக்குச் சாதாரணமாகத் தான் பின்ன வரும்டா. இது உனக்கு ஓகேவான்னுப் பாரு?” என்கவும்,

உடனே அதைக் கண்ணாடியில் பார்த்து விட்டு,”எனக்கு ஓகே தான் அக்கா” என்று அவரிடம் உரைத்து விடவும்,

அந்தப் பின்னலில் மல்லிகைப் பூவைச் சூடியவர், கவிபாரதியை அழைத்து,”எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு உனக்கு அலங்காரம் செய்திருக்கேன் ம்மா” என்றார் மிருதுளா.

“இதுக்கு என்னக் குறைச்சல்? அழகாக இருக்கும்மா” என்று அவரைப் பாராட்டியவர்,

“அடுப்படிக்குப் போய்ப் பாலை எடுத்துட்டு வர்றேன்” என்று கூறிப் போய் விட்டார் கவிபாரதி.

“ஏன் ஒரு மாதிரி இருக்கிற ருத்ரா?” என அவளிடம் வினவினார் மிருதுளா.

அவளோ,“ஒன்னும் இல்லை க்கா” என்று சமாளிக்க முயன்றாள்.

“ஒன்னும் இல்லாமலா ஏனோ தானோன்னு உட்கார்ந்து இருக்கிற?” என்றவரிடம்,

“ஏன்னு உங்களுக்கே தெரியும்ல க்கா?” எனப் பதில் கேள்வி கேட்டாள் ருத்ராக்ஷி.

“தெரியும்…அது நடந்து முடிஞ்சிருச்சு. வாழ்க்கையைத் தொடங்கப் போகிற நேரத்தில் அதையே யோசிச்சிட்டு இருக்கிறது நல்லாவா இருக்கும்? நீயே சொல்லு?”

“வேற என்னக்கா பண்ண சொல்றீங்க? என்னால் முடியலை. ஒரு மாதிரி மனசைப் போட்டுப் பிழியிறா மாதிரி இருக்கு!” என்று அவரிடம் தன் மனக்குறையை வெளிப்படுத்தினாள்.

“அப்படித்தான் இருக்கும் ருத்ரா. போகப் போகச் சரி ஆகிடும். காலம் மாறும் போது எல்லாமே மாறிடும்” என்று அவளுக்கு அறிவுரை வழங்கினார் மிருதுளா.

“அப்படியே மாறினாலும் பழையபடி இருக்காதுல்ல க்கா?” என்று கம்மிய குரலில் கேட்டாள் ருத்ராக்ஷி.

“இருக்காது தான்டா. அதுக்காக நீயும், அவங்களும் இப்படியே இருக்க முடியாது இல்லையா? அதனால், இப்போ எல்லாத்தையும் மறந்துட்டு உன் வாழ்க்கையைத் தொடங்குறது தான் சரியானதாக இருக்கும்” என்றவரின் போதனைகளை மூளையில் ஏற்றிக் கொண்டுத் தன் அத்தையிடம் ஆசி பெற்றாள் ருத்ராக்ஷி.

அவள் மேலிருந்தச் சங்கடங்களை மறந்து அவரும் மருமகளை ஆசீர்வதித்தார் கவிபாரதி.

அதன் பிறகு, ருத்ராக்ஷியிடம் பால் செம்பைக் கொடுத்து, அவளது கணவன் இருக்கும் அறைக்கு அனுப்பி வைத்து விட்டு வந்தவர், ஸ்வரூபனின் அன்னையிடம் சொல்லி விட்டுத் தன் கணவரை வரவழைத்து அவருடன் வீடு திரும்பினார் மிருதுளா.

தன் மனக்கலக்கம் நீங்காமல் தான் அறைக்குள் நுழைந்தாள் ருத்ராக்ஷி.

அவள் உள்ளே வந்ததுமே, மனைவியைக் கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்தான் ஸ்வரூபன்.

அவளுடைய ஒவ்வொரு அசைவுகளும் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தான்.

எப்பொழுதும் தன்னுடைய மனைவியின் உடல்மொழி இப்படியாக இருந்ததில்லை என்பது அவனுக்குப் புரிந்தது.

அதற்குக் காரணம் என்னவென்றும் அவனுக்குத் தெரியுமல்லவா?

அதனால், தன்னை நோக்கி வந்தவளிடம்,”ருத்ரா” என்று அழைத்தவுடன்,

“ஹாங்! என்னங்க?” என்றவளின் கரங்களில் இருந்த பால் செம்பை வாங்கியவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

“இப்படிப் பார்க்கிறதை விட்டுட்டு ஏதாவது பேசும்மா” என அவளுக்கு அறிவுறுத்தினான் ஸ்வரூபன்.

“என்னப் பேசனும்ங்க?” என்ற மனைவியை இன்னும் ஆச்சரியமாகப் பார்த்து வைத்தவன்,

“இப்படி வந்து உட்கார்” என அவளைத் தன்னருகே அழைத்தான் அவளது கணவன்.

அவளும் மறு வார்த்தை பேசாமல் அமைதியாகச் சென்று அமர்ந்தாள் ருத்ராக்ஷி.

தனது கரங்களால் அவளது முகத்தைத் தாங்கிக் கொண்டவன்,”என்கிட்ட உன்னோட மனக் கஷ்டத்தைப் பகிர்ந்துக்க மாட்டியா ம்மா?” என்று மிருதுவான குரலில் வினவினான் ஸ்வரூபன்.

“அப்படி எல்லாம் இல்லை ங்க. இன்னைக்கு நடந்த விஷயம் அதுவும் என்னால் ஆனப் பிரச்சினையால் என்னோட புகுந்த வீட்டு ஆளுங்களை வார்த்தையால் கஷ்டப்படுத்துனது மட்டுமில்லாமல், நானும் ரொம்பவே பாதிக்கப்பட்டு இருக்கேன். அதான், அமைதியாக இருக்கேன்” என்று அவனிடம் எடுத்துரைத்தாள் மனைவி.

“இது தான் விஷயமா?”

“ஆமாம் ங்க” என்றவளைக் கனிவாகப் பார்த்தவன்,

“வேறெதைப் பத்தியும் குழப்பமோ, பிரச்சினையோ இல்லையே?” என்றான் ஸ்வரூபன்.

“இதுக்கப்புறம் நீங்களும், அத்தையும் என்னைப் பத்தி என்ன நினைப்பீங்கன்னு ஒரே கவலையாக இருக்குங்க” எனக் கணவனுக்குப் பதிலளித்தாள் ருத்ராக்ஷி.

“நாங்க உன்னைப் பத்தி தப்பாக எதுவுமே நினைக்க மாட்டோம் மா” என்று அவளுக்குப் புரிய வைக்க முனைய,

“நமக்கு மேரேஜ் ஆகிக் கொஞ்ச நேரம் தான் ஆச்சு. அதுக்குள்ளே இப்படி பேசி எல்லாரையும் சங்கடப்படுத்திட்டேன்னு ஒரு மாதிரி ஆயிடுச்சு” என்றாள் அவனுடைய மனைவி.

“நாம அப்படி பண்ணி இருக்கக் கூடாதுன்னு உனக்குத் தோனுது தானே? நீ அதை நினைச்சு வருத்தப்பட்ற தானே?” என அவளிடம் கேட்டான் ஸ்வரூபன்.

“ஆமாம் ங்க. அதுவே போதும். ஆனால், இதையே உங்க அப்பா, அண்ணா கிட்டே பேசிக்கிட்டே இருந்தால் அவங்களுக்கு இன்னும் கவலையும், வெறுப்பும் தான் அதிகமாகும். அதனால், இத்தோட இதையெல்லாம் மறந்துரு. அவங்க ரெண்டு பேரும் உன் கூட சகஜமாகப் பேசுற வரைக்கும் பொறுமையாக வெயிட் பண்ணும்மா” என்று அவளுக்கு அறிவுரை வழங்கினான் கணவன்.

“நான் அதுக்காக எவ்வளவு வருஷம் ஆனாலும் காத்திருப்பேன்ங்க” என்று திடமாக கூறியவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.

“சாரிங்க. இப்போ நமக்கு ஃபர்ஸ்ட் நைட். ஆனால், இந்த நேரத்திலேயும் நான் வேறதைப் பத்திப் பேசிட்டு உங்களைக் காக்க வச்சிட்டு இருக்கேன்” என்று வருந்தியவளிடம்,

“ஹேய்! ஃபர்ஸ்ட் நைட் ஆக இருந்தால் ஏன்ன? உள்ளே வந்தவுடனேயே நம்மளோட வாழ்க்கையை ஆரம்பிச்சிடனும்னு இல்லை ம்மா. கொஞ்ச நேரம் மனசு விட்டுப் பேசிட்டு நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் இருக்கிற தயக்கம் எல்லாம் உடைஞ்சதுக்கு அப்பறம் தான் அடுத்தக் கட்டத்துக்குப் போகனும்னு நான் நினைச்சேன். அது தான் இப்போ நடந்திருக்கு” என்றவனைக் காதலுடனான வெட்கப் பார்வைப் பார்த்தாள் ருத்ராக்ஷி.

அதன் பொருள் புரிந்தவனோ,”இப்போ அடுத்தக் கட்டத்துக்கான நேரம் வந்துடுச்சு போலயே?” என்று அவளது கன்னத்தை நிமிண்டினான் ஸ்வரூபன்.

அதில் மேலும் நாணம் கொண்டு சிவந்தவளோ,”ம்ம்” என்று மட்டும் மொழிந்தாள் அவனது காதல் மனைவி.

அதற்குப் பிறகு, அவளது அச்சம் மற்றும் நாணத்தைத் தன்னால் முடிந்தவரைக் களைந்தவன், அவளது உடைகளைக் களைக்கும் பொறுப்பையும் அவளது சம்மதத்துடன் ஏற்றுக் கொண்டான் ஸ்வரூபன்.

ஈருடல் ஓருயிராகும் தருணத்தில் தயக்கம் தேவையில்லை என்பதைப் புரிந்து கொண்டவள், தன் உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுத்தவனுக்குத் தன்னைத் தாராளமாகத் தந்தாள் ருத்ராக்ஷி.

இல்லறத்தில் கணவனும், மனைவியும் சமம் என்பதற்கு இணங்க, மனைவியின் நேசப் பரிமாற்றங்களையும் தயங்காமல் பெற்றுக் கொண்டான் ஸ்வரூபன்.

அவளது உதடுகள் கொடுத்த அழுத்தமான முத்தங்கள் யாவும் அவனது இதயம் வரை ஊடுருவிச் செல்வதை உணர்ந்தவனுக்கு,

மனைவியின் அதரங்களைக் காதல் சினுங்களை மட்டுமே உதிர்க்க வைக்க வேண்டும், அவள் ஒரு போதும் வலியினால் முகத்தைச் சுழித்து, முனகல் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான் ஸ்வரூபன்.

அதேபோல், தன்னுடலில் கணவனின் அன்பின் வெளிப்பாடுகள் தந்த வலியைச் சுகமாக ஏற்றுக் கொண்டாள் ருத்ராக்ஷி.

அவளுக்கு ஸ்வரூபனின் ஸ்பரிசம் ஒன்றும், விரும்பத்தகாதது இல்லையே? பிறகென்ன, அவன் மீது தான் கொண்ட வலுவான நேசத்தை எவ்வித தயக்கமும் இன்றி வெளிப்படுத்தினாள் ஸ்வரூபனின் மனைவி.

கூடலின் இறுதியில், உச்சந்தலையில் கொடுக்கப்பட்ட வேண்டிய முத்தம் இடம் மாறி ருத்ராக்ஷியின் கைகளுக்கு அளிக்கப்பட்டது.

அதில் தன் கன்னம் சிவக்கத் தொடங்கவும், கணவனின் கன்னத்தையும் முத்தத்தால் சிவந்து போக வைத்து இப்போது இரண்டாவது கூடலுக்கு அடி போடுவது அவளது முறையானது.

அந்தக் கூடல் முடிந்த பின்னர் இருவரும் உறக்கத்தை மேற்கொண்டனர்.

உடல் சோர்வாக இருந்தாலும், காலையில் குறிப்பிட்ட நேரத்தில் ஸ்வரூபனுக்கும், ருத்ராக்ஷிக்கும் விழிப்பு தட்டியது.

“இந்நேரம் அவங்க ஊருக்குக் கிளம்பி இருப்பாங்கள்ல ங்க?” என்று கணவனிடம் வினவினாள்.

“ம்ஹ்ம். ஆனால் அவங்க கிளம்பறதைப் பத்தி இன்னும் நமக்கு எந்தத் தகவலும் வரலையே?” என்றவனிடம்,

“ஒருவேளை புறப்படும் நேரத்தில் வந்து சொல்லிட்டுப் போகலாம் ங்க” என்று அவனிடம் சோகமாக உரைத்தாள் ருத்ராக்ஷி.

“கண்டிப்பாக உன்னை வந்து பார்த்துட்டுத் தான் போவாங்க ம்மா” என்று அவளுக்குத் தைரியம் சொல்லிக் குளித்து விட்டு வருமாறு மனைவியை அனுப்பி வைத்தவன், அவள் வந்த பின்னர் தானும் குளிக்கச் சென்றான் ஸ்வரூபன்.

அதே சமயம், அவன் சொன்னதைப் போலவே,”ருத்ராவைப் பார்த்துட்டுப் ஊருக்குப் போவோமாடா?” என்று தன் மகளை நினைத்து வருந்தியவர் மகனிடம் கேட்டார் சந்திரதேவ்.

அதைத் தாங்க முடியாத காஷ்மீரன்,”சரிப்பா” என்று கூறி விட்டுத், தன் மனைவி மற்றும் மாமனார், மாமியாரிடமும் தெரிவித்தான்.

அவர்களும் கூட,”ஆமாம். அப்போ தான், அவளுக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். எனக்கும் அவளைப் பார்க்கனும்னு தான் தோனுச்சு ங்க. உங்க கிட்ட கேட்கலாம்னு கூட நினைச்சேன்” என்றாள் மஹாபத்ரா.

உடனே வித்யாதரனுக்கு அழைத்து,”நாங்க இன்னும் ஊருக்குக் கிளம்பலை சார். ருத்ராவைப் பார்த்துட்டுப் போகலாம்ன்னு இருக்கோம். நான் மாப்பிள்ளை கிட்டே கால் செய்து சொல்லிட்றேன். நீங்களும் அங்கே வந்துடுங்க” என்றதும்,

“ஓகே சார்” என்று அழைப்பை வைத்து விட்டுத் தன் மனைவியிடம் இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொண்டார் வித்யாதரன்.

“பிள்ளைங்க இன்னும் முழிக்கலை ங்க. அவங்களை எழுப்பி விஷயத்தைச் சொல்லிட்டுப் போவோம். ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்” என்றார் மிருதுளா.

மணமக்கள் இருவரும் தயாராகி வந்த பின்னர், தங்கள் அறையிலிருந்து வெளியே செல்ல யத்தனிக்கும் போது, ஸ்வரூபனின் செல்பேசி ஒலி எழுப்பியது.

அதை எடுத்துப் பார்த்தவன்,”காஷ்மீரன் சார் தான் கால் பண்றார்”என்றவுடன்,

“அண்ணாவா? அட்டெண்ட் பண்ணிப் பேசுங்க” என அவனை உந்தினாள் ருத்ராக்ஷி.

அழைப்பை ஏற்று,”ஹலோ சார்” என்றான் ஸ்வரூபன்.

“ஹலோ மாப்பிள்ளை. நாங்க அங்கே வீட்டுக்கு வந்துட்டு ஊருக்குப் போகலாம்னு இருக்கோம்” என்று அவனிடம் தெரிவித்தான் காஷ்மீரன்.

“அப்படியா? வாங்க சார். உங்க எல்லாருக்காகவும் காத்திருக்கோம்” எனக் குதூகலித்தான்.

காஷ்மீரன்,“சரிங்க மாப்பிள்ளை. கிளம்பி வர்றோம்” என்று அழைப்பை வைத்தவுடன்,

அவன் சொன்ன சேதியை மனைவியிடம் உரைத்தான் ஸ்வரூபன்.

“உண்மையாகவா ங்க?” என்று வியப்புடன் கேட்டாள் ருத்ராக்ஷி.

“ஆமாம் மா” என்று பதிலளிக்கவும்,

“அப்போ நான் உடனே போய் அத்தைகிட்ட விஷயத்தைச் சொல்லிட்டு அவங்களுக்குக் காபி, டிஃபன் எல்லாம் செய்றேன் ங்க” என்று ஆனந்தத்துடன் கூறினாள் மனைவி.

“சரி ம்மா” என்று அவளுடன் தானும் அறையிலிருந்து வெளியேறினான் ஸ்வரூபன்.

தனக்கு எதிரில் வந்து கொண்டிருந்த மகன் மற்றும் மருமகளின் வதனங்களை ஆராய்ந்தார் கவிபாரதி. அவர்களது முகங்கள் இரண்டும் சந்தோஷத்தில் பளபளவென்று மின்னியது. அவை சொன்ன விஷயத்தில் மிகவும் நிம்மதியாக இருந்தது அவருக்கு.

“அத்தை! எங்க வீட்டிலிருந்து எல்லாரும் இங்கே வர்றாங்களாம்” என்று மகிழ்வாக கூறியவளைப் புன்னகையுடன் ஏறிட்டார் அவளது மாமியார்.

“இதை எப்போ சொன்னாங்க?” என்று கேட்கவும்,

“இப்போ தான் ஃபோன் பண்ணாங்க ம்மா” என்றான் ஸ்வரூபன்.

“ஓஹ்! அப்படின்னா முதல்ல உங்களுக்குக் காபி போட்டுக் கொடுத்துட்டு, அவங்களுக்குத் தேவையானதையும் தயார் பண்றேன்” என்றவரிடம்,

ருத்ராக்ஷி,“அவங்க வந்ததும் நான் காபி போட்டுத் தர்றேனே அத்தை?”

“உன் இஷ்டம் போலச் செய் ம்மா” என்று அவளுக்கு அனுமதி அளித்தவர்,

தன் மகனுக்கும், மருமகளுக்கும் காபி போட்டுத் தந்து விட்டுச் சமையலில் இறங்கினார் கவிபாரதி.

- தொடரும்
 
அருமையான பதிவு 😍😍😍😍😍
அடுத்து கறி விருந்து சாப்பிடாமல் சம்பந்தி வீட்டை அனுப்பக்கூடாதுங்க கவிபாரதி மா. அவங்கள நல்லா கவனிச்சு அனுப்புங்க🤗🤗🤗🤗🤗🤗
 
Last edited:
அருமையான பதிவு 😍😍😍😍😍
அடுத்து கறி விருந்து சாப்பிடாமல் சம்பந்தி வீட்டை அனுப்பக்கூடாதுங்க கவிபாரதி மா. அவங்கள நல்லா கவனிச்சு அனுப்புங்க🤗🤗🤗🤗🤗🤗
Sure sis. Thank you so much 🤗🙏
 

Advertisement

Back
Top