அத்தியாயம் 129

Advertisement

SHALU shalu

Well-known member
Member
தனது பெட்டி வந்ததும், தன்னுடைய தந்தை மற்றும் தமையனைக் கண்கள் கலங்க ஏறிட்டுப் பார்த்தாள் ருத்ராக்ஷி.

சந்திரதேவ்வோ வேதனையின் விளிம்பில் தவித்துக் கொண்டிருக்க, காஷ்மீரனுக்கோ, தன் உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியவில்லை. அந்தளவிற்கு மனமுடைந்து போயிருந்தான்.

ருத்ராக்ஷியின் பையை காரின் பின்புறத்தில் வைத்தார் வித்யாதரன்.

இவ்வளவு நேரமாக அனைவரும் ஒருவித இறுக்கமான சூழ்நிலையில் இருந்ததால் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தங்களுடைய பிள்ளைகளிடம் சென்றார் மிருதுளா.

“ம்மா! வெளியே ரொம்ப சத்தமாக கேட்டுச்சு. என்னம்மா நடந்துச்சு? எங்களையும் வரக் கூடாதுன்னு சொல்லிட்டீங்க!” என்கவும்,

“ஒன்னும் இல்லைடா. ருத்ராக்ஷி அக்கா கிளம்பப் போறாங்கள்ல? அதைப் பத்தி தான் பேசிட்டு இருந்தோம்” என்று அவர்களுக்கு சமாதானம் உரைத்து விட்டு வெளியே அழைத்து வந்தார்.

“வாங்கடா. உங்களுக்குப் பசிக்குதா?” என அவர்களிடம் கேட்டு விட்டு,

மிருதுளாவிடம்,”அவங்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடும்மா. அதுக்கப்புறம் கூடக் கிளம்பலாம்” என்றார் கவிபாரதி.

ஆனால், ருத்ராக்ஷி மற்றும் ஸ்வரூபனின் திருமண சடங்குகளைப் பார்க்கும் ஆர்வத்தில் இருந்த இருவரும்,”எங்களுக்குப் பசிக்கலை பாட்டி. நாம கிளம்பலாம்” என்றார்கள்.

கவிபாரதி,“அப்படின்னா சரி. ஸ்வரூபா, ருத்ரா! ரெண்டு பேரும் பெரியவங்க கிட்ட ஆசீர்வாதம் வாங்குங்க”

உடனே, மணமக்கள் இருவரும், முதலில் சந்திரதேவ்வின் பாதம் பணிந்தனர்.

என்னதான், மகளுடைய பேச்சினால் இதயம் நொறுங்கிப் போயிருந்தாலும் அவள் தனது புகுந்த வீட்டிற்குச் செல்லும் சமயத்தில் ரசாபாசம் ஆகி விடக் கூடாது என்ற எண்ணத்தில் அவளுக்கும், அவளது கணவனுக்கும் மனதார ஆசி வழங்கினார் ருத்ராக்ஷியின் தந்தை.

அதன் பின்னர், கனகரூபிணி மற்றும் பிரியரஞ்சனிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர்.

கடைசியாகத், தன் அண்ணனிடம் வரவும்,”எப்பவும் சந்தோஷமாக இருங்க” என்று தங்கையின் தலையில் கையை வைத்துக் கூற,

அதற்கு மேல் தாளாமல் அவனை அணைத்துக் கொண்டு அழத் துவங்கி விட்டாள் ருத்ராக்ஷி.

“ஸ்ஸூ! புருஷன் வீட்டுக்குப் போகும் போது இப்படி அழாதே!” என அவளை மெல்ல அதட்டினான் காஷ்மீரன்.

“சாரிண்ணா” என்றதொரு வார்த்தையை உச்சரித்துக் கொண்டே இருந்தாள் அவனது தங்கை.

“பரவாயில்லை. முதல்ல கண்ணைத் துடை” என்றான் தமையன்.

காஷ்மீரன்,“உன் அண்ணிகிட்டே பேசு”

அவனது கட்டளைக்கு இணங்கி, தன்னிடம் வந்தவளை ஆதரவாகத் தோளில் சாய்த்துக் கொண்டாள் மஹாபத்ரா.

“நான் பேசியது உங்களுக்கும் வருத்தமாக இருக்கும்ன்னு எனக்குத் தெரியும். அதனால் ரொம்ப சாரி அண்ணி!” என அவளிடமும் மன்னிப்பு வேண்டினாள் ருத்ராக்ஷி.

“அதெல்லாம் எதுவும் இல்லை. நீ அழுகுறதை நிறுத்து” என்று அவளுக்கு அறிவுறுத்தினாள் காஷ்மீரனின் மனைவி.

அதைக் கேட்டு,”ஓகே அண்ணி” என்று கூறித் தன் விழிகளின் ஈரத்தை அழுந்த துடைத்துக் கொண்டாள் அவளது நாத்தனார்.

“ரெண்டு பேரும் ஹேப்பியா இருங்க” என்று ருத்ராக்ஷி மற்றும் ஸ்வரூபனை வாழ்த்தினாள் மஹாபத்ரா.

வித்யாதரன் மற்றும் மிருதுளாவிடமும், வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டவுடன், அனைவரும் காரில் பயணம் செய்து கவிபாரதியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

தனது கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு இருந்த கணவனைத் தான் கலக்கத்துடன் பார்த்தவள்,

அவனுக்குத் தன் மேல் ஒரு அதிருப்தி ஏற்பட்டு விட்டதோ? அதேபோல், அவனது தாயும் தன்னைத் தவறாக எண்ணி விடுவாரோ? என நொந்து கொண்டிருந்தாள் ருத்ராக்ஷி.

“ஒன்னுமில்லை. ரிலாக்ஸ் ஆக இரு” என்று அவளிடம் மென்மையான குரலில் தைரியம் அளித்தான் ஸ்வரூபன்.

அதன் பிற்பாடு தான், அவளது கலக்கம் குறைந்தது. ஆனால், மறைந்து போகவில்லை.

தன் மகளைப் பிரியும் நேரம் வந்து விட்டதை அறிந்து கொண்டதும்,

அவளிடம் போய்,”நாங்க உன்னை எப்பவும் மிஸ் பண்ணுவோம். நானோ, அல்லது உன்னோட அண்ணனோ அடிக்கடி வந்து பார்த்துட்டுப் போவோம்ன்னு வாக்குக் கொடுக்கிறேன்” என்றவுடன்,

தந்தையின் மார்பில் சாய்ந்த ருத்ராக்ஷியோ,”எனக்குள்ளே இருந்ததை எல்லாம் இடம், பொருள், ஏவல் பார்க்காமல் கொட்டிட்டேன் ப்பா. அதுக்கு என்னப் பிராயச்சித்தமோ அதை நான் பண்றேன். இதனால் தயவு செஞ்சு நீங்களும், அண்ணாவும் என்னை வெறுத்துடாதீங்க!” என்று கூறி விசும்பினாள்.

“நாங்க எதுக்குடா உன்னை வெறுக்கப் போறோம்? நீ உன்னோட புருஷன் கூடச் சந்தோஷமாக வாழ்றதைப் பார்க்கனும்ன்ற எங்களோட ஆசையை நிறைவேத்தி வை. எங்களுக்கு அது போதும்” என்று அவளுக்கு வலியுறுத்தினார் சந்திரதேவ்.

“சரிங்க ப்பா” என்றாள் அவரது மகள்.

“மாப்பிள்ளை! நீங்க அவ பேசியதை எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்!” என்று நெகிழ்வுடன் கேட்டுக் கொள்ளவும்,

“ஓகே மாமா. நான் பார்த்துக்கிறேன்” என்று அவருக்கு உறுதி அளித்தான் ஸ்வரூபன்.

“நாங்க இன்னைக்கு நைட் ருத்ராவோட வீட்டில் தங்கிட்டுக் காலையில் சீக்கிரம் கிளம்பிப் போகலாம்ன்னு இருக்கோம்” என்று அனைவருக்கும் பொதுவாக அறிவித்தான் காஷ்மீரன்.

அதற்குள் ஏன் கிளம்புகிறீர்கள்? என்ற கேள்வியை யாரும் கேட்கும் நிலையில் இல்லை. ஏனென்றால், ருத்ராக்ஷியின் பிறந்த வீட்டு ஆட்களின் மனநிலை என்னவென்று அவர்களுக்குத் தான் நன்றாகத் தெரியுமல்லவா?

அதனால், அவர்களது பயணத்தைப் பற்றிய பேச்சைத் தடுத்தும், மறுத்தும் யாரும் பேசவில்லை.

“நாங்க வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுக்கிறோம் சம்பந்தி. நைட் சடங்கை நீங்கப் பார்த்துக்கோங்க” என்று கூறி விட்டு ருத்ராக்ஷியை அவளது கணவனின் இல்லத்தில் சேர்ப்பித்த நிம்மதியில் அங்கேயிருந்து கிளம்பினர் அவளது பிறந்த வீட்டார்.

“நீங்க நாலு பேரும் வீட்டுக்குப் போய் ஓய்வெடுங்க.ஆனால், எனக்கு உன்னோட உதவி கண்டிப்பாக தேவை. உன்னால் முடிஞ்சா சாயந்தரமாக வீட்டுக்கு வர்றியா?” என்றவரிடம்,

“கண்டிப்பாக வர்றேன் ம்மா. இவங்களுக்குத் தேவையானதை செஞ்சிட்டு, வீட்டை ஒதுங்க வச்சிட்டு வர்றேன்” என அவருக்கு உறுதி அளித்து விட்டுத் தன் குடும்பத்துடன் அங்கிருந்து அகன்றார் மிருதுளா.

அவர்கள் சென்றதும், சிறிது நேரத்திற்கு முன்பு தான் தன்னுடைய திருமணம் நிகழ்ந்து முடிந்திருக்க, அனைவரும் ஆனந்தக் களிப்பில் இருந்த சமயத்தில், ஏன் இவ்வாறான அனர்த்தம் தன்னால் நடந்தேறியது? என்பதை யோசித்துக் களைத்துப் போயிருந்தாள் ருத்ராக்ஷி.

அப்போது,”ஸ்வரூபா! உன் பொண்டாட்டியைப் பூஜை ரூமுக்குக் கூட்டிட்டு வா” என்ற அன்னையின் உத்தரவின் படி தன் மனைவியிடம் வந்து,

“ருத்ரா!”என்று அவளைக் கனிவுடன் அழைத்தான் ஸ்வரூபன்.

“அத்தை சொன்னது எனக்கும் கேட்டுச்சுங்க” என்றவாறு எழுந்து அவனுடன் இணைந்து சாமியறைக்குப் போனாள்.

கவிபாரதி,“உள்ளே வந்து விளக்கை ஏத்தி வைம்மா” என்கவும்,

அவர் சொன்னதைச் செய்து, கண்களை மூடிப் பிரார்த்தித்தப் பின்,”அப்படியே அடுப்படிக்கு வா” என்றவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள் ஸ்வரூபன் மற்றும் ருத்ராக்ஷி.

அங்கே இருந்தப் பாத்திரத்தில் இருந்த பாலைக் காட்டி,”இதைக் காய்ச்சி டீ போட்டு எடுத்துட்டு வா” என்றார் அவளது மாமியார்.

“நீயும் அவளுக்கு உதவி செய்டா” எனத் தன் மகனிடம் உரைத்து விட்டு வெளியேறி விட்டார் கவிபாரதி.

பால் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி விட்டு,”ஏங்க! அத்தை என் மேல் கோபமாக இருக்காங்க போல?” எனக் கணவனிடம் கூறி வருந்தினாள் ருத்ராக்ஷி.

ஸ்வரூபன்,“அப்படின்னு அம்மா வந்து உங்கிட்ட நேரடியாக வந்து சொன்னாங்களா?” என்றவன், காய்ந்து கொண்டிருந்த பாலில் தேவையான அளவு டீத்தூள் மற்றும் சர்க்கரையைக் கலந்தான்.

“இல்லைங்க”

“அப்போ நீயா எதுக்கு அப்படி ஒன்னைக் கற்பனை பண்ணிக்கிற?”என்று மனைவியிடம் கேட்டாலும் கூட, அவனது கவனம் பாத்திரத்தில் தான் இருந்தது.

“அவங்களோட நடவடிக்கைகளைப் பார்த்தால் எனக்கு அப்படித் தான் தோனுது ங்க”

“நீ முதல்ல கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நடந்த விஷயத்தில் இருந்து வெளியே வா. அப்பறம் உங்கிட்ட அம்மா எப்படி நடந்துக்கிறாங்க - ன்னுப் பாரு” என அவளுக்கு வலியுறுத்தி விட்டுத்,

தேநீர் தயாரானதும் அதை மூன்று தம்ளர்களில் ஊற்றி,“இந்தா” என்று அதில் ஒன்றை எடுத்து அவளிடம் கொடுத்தான் ஸ்வரூபன்.

“நீங்க ஒரு தம்ளரை எடுத்துக்கோங்க. நான் இதை அத்தைக்குக் கொடுத்துட்டு வர்றேன்” என்றவள்,

மாமியாரிடம் சென்று,“அத்தை! டீ போட்டாச்சு. இந்தாங்க” எனத் தம்ளரை நீட்டினாள் ருத்ராக்ஷி.

“ம்ம்” எனக் கூறி அதைப் பெற்றுக் கொண்டவரது முகத்தை ஆராய்ந்தவளிடம்,

“நீயும், அவனும் உங்க டீயை எடுத்துட்டு வந்து என் கூட சேர்ந்து குடிங்க”

“சரிங்க அத்தை”

அவள் செல்வதற்குள், தானே அந்த இடத்திற்கு வந்தவன்,

“உன்னோடதையும் எடுத்துட்டு வந்துட்டேன்” என அவளிடம் தம்ளரைக் கொடுத்தான் ஸ்வரூபன்.

“உட்காருங்க” என அவர்களைத் தன்னுடன் அமர வைத்துக் கொண்டார் கவிபாரதி.

மூவரும் தேநீரைப் பருகி முடித்தவுடன்,”உடுப்பை மாத்திக்கோ ருத்ரா. சாயந்தரத்துக்குக் கட்ட வேண்டிய சேலையை எடுத்து வச்சிரு” என மருமகளிடம் சொல்லி விட்டுத் தேநீர்க் கோப்பைகளைச் சமையலறைக்குக் கொண்டு போனார்.

“நீங்க டிரெஸ் மாத்தலையா?”

ஸ்வரூபன்,”நானும் மாத்தனும் மா. நீ முதல்ல போய் மாத்திட்டு வா”

உடனே அறைக்குப் போய் மாற்றுச் சேலையை அணிந்து வந்தாள் ருத்ராக்ஷி.

அதன் பிறகு, தானும் தன் உடையை மாற்றிக் கொண்டான் அவளது கணவன்.

ருத்ராக்ஷியின் வீட்டில், உடல் அலுப்பினால் பெரியவர்கள் மூவரும் உறங்கச் சென்று விட, காஷ்மீரனும், மஹாபத்ராவும் தூங்காமல் இருந்தனர்.

இங்கே வந்ததில் இருந்து தன்னுடைய கணவனின் முகம் நலிவடைந்து காணப்பட்டதால்,

“ஏங்க!” என்றாள் அவனது மனைவி.

“என்னம்மா?”

“இன்னும் அதையே நினைச்சிட்டு இருக்கீங்களா?”

“ம்ஹ்ம்”

மஹாபத்ரா,“அதிலிருந்து வெளியே வர டிரை பண்ணுங்க. ப்ளீஸ்!”

“அதை என்னால் எப்படி ம்மா உடனே மறக்க முடியும்? அதோட பாதிப்பு இன்னும் அடங்கலை!” எனக் கூறியவனின் குரலில் அதிருப்தி மற்றும் வேதனை அளவுக்கு அதிகமாகத் தென்பட்டது.

“அவ ஏதோ குழப்பத்தில் இருந்து இருக்கா. அதான் அப்படி வார்த்தையை விட்டுட்டா. அதையே யோசிச்சிட்டு இருந்தால் உங்களுக்கு அவ மேலே வெறுப்பும், கோபமும் தான் இருக்கும். அதான் சொல்றேன்” என அவனுக்கு அறிவுரை வழங்கினாள்.

காஷ்மீரன்,“நான் அவளை எப்பவும் வெறுக்க மாட்டேன் ம்மா. ஆனால், கொஞ்ச நாள் மனசளவுல தள்ளி இருப்பேன். எனக்கு அந்த இடைவெளி கண்டிப்பாகத் தேவை” எனவும்,

இதற்கு மேல் அந்த விஷயத்தையே பேசிக் கொண்டிருக்கவும் வேண்டாம் என்று முடிவெடுத்து, கணவனைத் தன் அணைப்பில் வைத்துக் கொண்டாள் மஹாபத்ரா.

இரவு கவிழும் நேரமதைக் கண்டு கொண்டவர்களோ,”நைட் சாப்பாட்டுக்குக் கடையில் வாங்கிக்கலாமா?” என்றான் காஷ்மீரன்.

“சரிங்க” என்றவளோ,

தனது மாமனாரும், பெற்றோரும் உறங்கி எழுந்து விட்டார்களா? என்று பார்க்கப் போனாள்.

சந்திரதேவ் மட்டும் நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

மஹாபத்ரா,“என்ன மாமா அதுக்குள்ளே எழுந்திட்டீங்க?”

“அகதியாக இருக்குன்னு தான் ரெஸ்ட் எடுத்தேன் ம்மா. இதுக்கு மேலே தூங்கினால் அப்பறம் நைட் கொட்டக் கொட்ட முழிச்சிட்டு இருப்பேன். அதான்” என்றார் அவளது மாமனார்.

அவரிடமும், அப்போது தான் எழுந்து வந்த தன் பெற்றோரிடமும் இரவு உணவைப் பற்றிக் கலந்துரையாடி விட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கணவனிடம் அறிவுறுத்தினாள் மஹாபத்ரா.

“நீங்க ரெண்டு பேரும் குளிச்சித் தயாராகுங்க” என மகனிடமும், மருமகளிடமும் கூறி அனுப்பி விட்டுத்,

தன் செல்பேசியில் மிருதுளாவிற்கு அழைத்து,”நீ எப்போ கிளம்பி வர்றம்மா?” என்றார் கவிபாரதி.

“தோசை ஊத்திட்டு இருக்கேன் ம்மா. இவங்களுக்குக் கொடுத்துட்டு வந்துட்றேன்” என்றுரைக்க,

“நீ தான் ருத்ராவை ரூமுக்கு அனுப்பி வைக்கனும்மா. மறந்துடாதே!”

“சீக்கிரம் வந்துடுவேன் ம்மா” எனக் கூறி அழைப்பை வைத்தார் மிருதுளா.

ஸ்வரூபனும், ருத்ராக்ஷியும் குளித்து விட்டு வந்ததும், மகனை மட்டும் அறைக்கு அனுப்பினார் கவிபாரதி.

தன் கணவனுடன் உடலும், உயிருமாக கலக்கப் போகும் இந்தச் சமயத்தில் தனக்குள் ஏற்பட்டுள்ள மனக் கலக்கத்தை எவ்வாறு மறைப்பது? என்று வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் ருத்ராக்ஷி.

- தொடரும்
 
ருத்ராக்ஷி மனக்குழப்பத்தினால பிறந்த வீடு,புகுந்த வீட்டில் எல்லாருக்கும் மனசங்கடம்.அவளோட அம்மா இருந்திருந்தா இவளுக்கு இந்த குழப்பம் இருந்திருக்காது. காஷ்மீரன் மனைவி மஹாபத்ராவா இருக்கறதால பரவாயில்லை. இதுவே வேற யாருமா இருந்திருந்தா இன்னேரம் தேவையில்லாமல் வாக்குவாதம் ஆகியிருக்கும்.

ருத்ராக்ஷி விடைபெரும் இடத்தில் எனக்கு அழுகையை கட்டுப்படுத்த முடியலை🥺🥺🥺🥺🥺🥺🥺
 
ருத்ராக்ஷி மனக்குழப்பத்தினால பிறந்த வீடு,புகுந்த வீட்டில் எல்லாருக்கும் மனசங்கடம்.அவளோட அம்மா இருந்திருந்தா இவளுக்கு இந்த குழப்பம் இருந்திருக்காது. காஷ்மீரன் மனைவி மஹாபத்ராவா இருக்கறதால பரவாயில்லை. இதுவே வேற யாருமா இருந்திருந்தா இன்னேரம் தேவையில்லாமல் வாக்குவாதம் ஆகியிருக்கும்.

ருத்ராக்ஷி விடைபெரும் இடத்தில் எனக்கு அழுகையை கட்டுப்படுத்த முடியலை🥺🥺🥺🥺🥺🥺🥺
தங்களது பின்னூட்டம் எப்பொழுதும் என்னை உற்சாகப்படுத்துவதாக உள்ளது சகி... மிக்க நன்றி🙏💕
 

Advertisement

Back
Top