அத்தியாயம் 125

Advertisement

SHALU shalu

Well-known member
Member
அடுத்த நாள் காலையில் எழுந்ததும், மிகத் துரிதமாகத் தயாராகி விட்டு அழகு நிலையப் பெண்களிடம் தன்னுடைய கைகள் மற்றும் கால்களை ஒப்படைத்து விட்டு பொறுமையாக அமர்ந்திருந்தாள் ருத்ராக்ஷி.

மிகவும் எளிமையான டிசைன் போடுமாறு அவள் கேட்டுக் கொள்ள அவளை அதட்டி விட்டு அந்தப் பெண்களிடம் இருப்பதிலேயே அழகான டிசைனாகப் போட்டு விடச் சொன்னாள் மஹாபத்ரா.

அவள் சொன்னபடியே அவர்களும் தங்களிடமிருந்த பிரபலமான மெஹந்தி டிசைன்களை ருத்ராக்ஷியின் கரங்கள் மற்றும் கால்களுக்குப் போட்டு விட்டு முடித்தனர்.

“எனக்குப் போட்டு முடிச்சாச்சு அண்ணி. இப்போ உங்க டர்ன்” என்று சொல்லி மஹாபத்ராவை அமர வைத்தாள் ருத்ராக்ஷி.

சில மணி நேரங்களிலேயே அவளுக்கும் மெஹந்தி போட்டு விட்டனர் அந்த அழகுநிலையப் பெண்கள்.

“நலங்கு ஃபங்க்ஷன் எத்தனை மணிக்கு ஆரம்பிக்கும் மேடம்?” என்று சந்தேகம் கேட்டார்கள்.

“ஈவ்னிங் ஆறு மணிக்கு மேலே ஆகிடும் மா” என்றார் கனகரூபிணி.

“அப்போ அதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே மேக்கப் போட ஸ்டார்ட் பண்ணனும் மேடம்” என்கவும்,

“ஓகே ம்மா” என்று அவர்களிடம் கூறி விட்டு, நலங்கு வைபவத்திற்கானப் பொருட்களை எல்லாம் முன்கூட்டியே மண்டபத்திற்கு எடுத்துச் செல்லத் தொடங்கினர் காஷ்மீரன் மற்றும் பிரியரஞ்சன்.

இங்கோ, மாலையில் மாப்பிள்ளை அழைப்பு இருப்பதால் தன் மகனை எங்கும் நகராமல் வீட்டிலேயே இருக்க வைத்துக் கொண்டார் கவிபாரதி.

வித்யாதரன் மற்றும் மிருதுளாவை நலங்கு வைபவம் நடக்கும் நேரத்தில் வந்தால் போதும் என்றும், அதுவரைக்கும் அவர்களுடைய பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்குமாறு அறிவுறுத்தி இருந்தனர் இரு வீட்டாரும்.

“ஏன் ப்பா, ஃபோட்டோகிராஃபர் ரெடியாகத் தானே இருக்கார்?” என மகனிடம் விசாரித்தார் சந்திரதேவ்.

“ஆமாம் ப்பா. ஃபங்க்ஷன் ஆரம்பிக்கும் போது கரெக்டா வந்துருவாங்க” என்றான் காஷ்மீரன்.

தான் போட்டிருந்த மெஹந்தி நன்றாக காய்ந்ததும் அதைக் கழுவி விட்டு வந்த ருத்ராக்ஷிக்கு முதலில் மதிய உணவைக் கொடுத்து உண்ண வைத்தார்கள்.

தங்கள் பிள்ளைகளை உடன் அழைத்துக் கொண்டு ருத்ராக்ஷியின் வீட்டிற்கு வந்து விட்டனர் வித்யாதரன் மற்றும் மிருதுளா.

அவர்களிடம் பேசிக் கொண்டு இருப்பது தான் தனது தலையாயக் கடமை என்பதைப் போன்று அவர்களுடன் ஒட்டிக் கொண்டாள் ருத்ராக்ஷி.

இப்படியே நேரம் கழிய, மாலை ஆனதும், மணமகன் மற்றும் மணப்பெண்ணைத் தயாராகச் சொல்லி விட்டுத் தாங்களும் கிளம்பத் தொடங்கினர்.

“இங்கேயே மேக்கப் போட்டுட்டுப் போனால் நல்லா இருக்காது ம்மா. அதனால், பொண்ணை மண்டபத்துக்கு அழைச்சிட்டுப் போனதுக்கு அப்பறம் மேக்கப் போட்டு விடுங்க” என அழகுநிலையப் பெண்களுக்கு அறிவுறுத்தினாள் மஹாபத்ரா.

அதற்கு அவர்களும் ஒப்புக் கொண்டுக் காத்திருந்தார்கள்.

தலைக்குக் குளித்து விட்டு நன்றாக காய வைத்தப் பின்னர், புடவையை உடுத்திக் கொண்டாள் ருத்ராக்ஷி.

அதே நேரத்தில், தன்னுடைய வீட்டில் தயாராகி வந்த ஸ்வரூபனோ, வேட்டி, சட்டையை அணிந்து கொண்டான்.

தனக்குக் கோட், சூட் வேண்டாம், அனைத்தும் வேட்டி, சட்டையாகவே இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவன் தான் அப்படியான உடைகளைத் தேர்ந்தெடுத்தான்.

தன் கணவனின் புகைப்படத்திற்கு முன்னால் மகனை அழைத்து வந்து,”உங்க அப்பாகிட்டே ஆசீர்வாதம் வாங்கிக்கோ ப்பா” என்று அவனிடம் கலங்கிய கண்களுடன் உரைத்தார் கவிபாரதி.

“சரிம்ம” என்றவன், தனது தந்தையின் நிழற்படத்தைப் பார்த்ததும், தன்னுடைய விழிகளும் கலங்குவதை ஒரு பொருட்டாக மதியாமல், அவரை இரு கரங்களைக் குவித்து வணங்கினான் ஸ்வரூபன்.

தங்கள் மகனுக்கு ஒரு நல்லது நடக்கும் சமயத்தில் அவரும் தன்னுடன் இணைந்து அதைப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் மற்றும் துயரத்துடன்,’நம்மப் பையன் எப்பவும் நல்லா இருக்கனும்னு ஆசீர்வாதம் பண்ணுங்க’ என்று இறைவனடி சேரந்த தனது கணவனிடம் விண்ணப்பம் வைத்தார் கவிபாரதி.

இதே போன்றதொரு நிகழ்வு மணப்பெண் வீட்டார் தங்கியிருந்த வீட்டிலும் நடைபெற்றது.

தன்னுடைய தாயின் நிழற்படத்தை உடன் எடுத்துக் கொண்டு வந்திருந்ததால்,

அதைக் கையில் எடுத்துக் கொண்டவளோ, அதிலிருந்த தனது அன்னையின் வதனத்தைத் தன் கரங்களால் வருடிக் கொடுத்தாள் ருத்ராக்ஷி.

“உங்கப் பொண்ணோட கழுத்தில் நாளைக்குத் தாலி ஏறப் போகுது ம்மா! ஆனால் அதைப் பார்க்கிறதுக்கும், என் பக்கத்தில் இருந்து புகுந்த வீட்டில் எப்படி நடந்துக்கனும்ன்னு எல்லாம் அட்வைஸ் செய்றதுக்கு நீங்க இல்லைன்னு நினைக்கும் போது ரொம்பவே கஷ்டமாக இருக்கு ம்மா” என்று அவரிடம் புலம்பினாள்.

அதை அந்த அறைக்கு வெளியே இருந்து சந்திரதேவ் மற்றும் காஷ்மீரனும் கேட்டு விட்டு உடனே உள்ளே நுழைந்து,”ருத்ரா ம்மா!” என அவளை அழைத்துத் தங்களுடன் அணைத்துக் கொண்டு கண்ணீர் சிந்தினர்.

தனது தந்தை மற்றும் தமையனின் அன்பான அணைப்பு மற்றும் அவர்களது இதமான வார்த்தைகளும் தனக்குப் போதுமானதாக இருப்பதை உணர்ந்து தன்னைச் சமாளித்துக் கொண்ட,”நான் அம்மாவை ரொம்ப மிஸ் பண்ணிட்டேன். அதான்” என்று அவர்களிடம் சொல்லி விட்டுக் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் ருத்ராக்ஷி.

“நாங்களும் தான்” என்றவர்கள், அவளைச் சமாதானம் செய்து முன்னறைக்கு அழைத்து வந்தனர்.

ருத்ராக்ஷியின் அருகே சென்று,”எதை நினைச்சும் ஃபீல் பண்ணாதே ம்மா. அதான், நாங்க எல்லாரும் இருக்கோம்ல” என்று அவளை ஆறுதல்படுத்தினாள் மஹாபத்ரா.

“பொண்ணை மண்டபத்துக்கு அழைச்சிட்டுப் போக இன்னும் எவ்ளோ நேரம் இருக்கு?” என்றார் பிரியரஞ்சன்.

“முக்கால் மணி நேரம் தான் இருக்கு ங்க” என்று தன் கணவனிடம் கூறினார் கனகரூபிணி.

அதைக் கேட்டதும், அனைவரும் தங்களைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள நினைத்து ஆளுக்கொரு நாற்காலிகளை ஆக்கிரமித்துக் கொண்டனர்.

நல்ல நேரம் வந்ததும், கவிபாரதியிடமும், வித்யாதரன் மற்றும் மிருதுளா தம்பதியிடமும் அறிவித்து விட்டுத், தங்களது காரில் ருத்ராக்ஷியை ஏற்றிக் கொண்டு அவளது அருகில் மஹாபத்ராவை அமர வைத்தார்கள்.

“நீயும் சேர்ந்து தானே பொண்ணுக்கு ஆரத்தி எடுக்கனும். அதனால் நீ கிளம்பி முன்னாடி போ ம்ருது. நானும், பிள்ளைங்களும் ஸ்வரூபன் கூட வர்றோம்” என்று தன் மனைவியிடம் சொல்லி அவரை மண்டபத்திற்கு அனுப்பி வைத்தார் வித்யாதரன்.

அனைவரும் மண்டபத்தை அடைந்ததும், கீழிறங்கிய போது, தான் தயாராக வைத்திருந்த ஆரத்தித் தட்டை எடுத்துக் கொண்டு வந்த மிருதுளாவோ,”மஹா! வா ம்மா. நாம ரெண்டு பேரும் தான் உன்னோட நாத்தனாருக்கு ஆரத்தி எடுக்கனும்” என்று அவளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டார்.

அவர்கள் இருவரும் ருத்ராக்ஷிக்கு ஆரத்தி எடுப்பதை மற்றவர்கள் புன்னகையுடன் பார்த்தனர்.

அதன் பின்னர்,”நான் போய் இதை ஊத்திட்டு வர்றேன்” என்று அனைவரையும் உள்ளே போகச் சொன்னார் மிருதுளா.

மணமகள் அறைக்குள் சென்றதும், அவளை ஆசுவாசப்படுத்திக் கொள்ளச் சொல்லி விட்டு, மாப்பிள்ளை வீட்டாருக்குத் தகவல் தெரிவித்தான் காஷ்மீரன்.

உடனே,”ஸ்வரூபா! உனக்கு வண்டி வந்துடுச்சு பாரு” எனத் தன் மகன் மற்றும் வித்யாதரன், அவரது பிள்ளைகளுடன் சேர்ந்து பயணம் செய்து திருமண மண்டபத்தை அடைந்தார் கவிபாரதி.

மணமகன் வந்து விட்டான் என்ற செய்தியைக் கேட்டவுடன் தன்னவனின் நினைவில் இதழ் பிரித்துப் புன்னகை செய்தாள் ருத்ராக்ஷி.

அதே சமயம், இங்கே மாப்பிள்ளையை ஆரவாரமாக அழைத்து வந்து மேடையில் நிறுத்தி வைத்து விட்டு அனைவரும் கலைந்து சென்றதும் தன்னவளுடன் மேடையில் இணைந்து நின்றது தங்களது நிச்சயத்தின் போது தான். அதற்குப் பிறகு இன்று தான் மீண்டும் ஒன்றாக நின்று சபையை நிறைக்கப் போகிறோம் என்ற உற்சாகமான மனநிலையுடன் இருந்தான் ஸ்வரூபன்.

தன்னுடைய மகனுடன் இருக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தாலும் கூட மருமகளை ஒருமுறையாவது பார்த்து விட்டு வருவது தான் முறை என்று ருத்ராக்ஷிடம் சென்றவரோ,

முகத்தில் எந்தவித சலனமும், பதட்டமும் இன்றி பளிச்சென தன்னைப் பார்த்துச் சிரித்த மருமகளிடம்,”என் மகன் மேடை ஏறியாச்சு ம்மா. இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னையும் கூப்பிடுவாங்க. அதுக்குத் தயாராக இரு” என்று கூறி விட்டுப் போனார் கவிபாரதி.

தன் தந்தையைத் தனது கணவன் மற்றும் மாமனாருடன் அனுப்பி வைத்து விட்டுத் தாயை ருத்ராக்ஷியின் அறைக்குள் இருக்குமாறு சொல்லி விட்டு மிருதுளாவுடன் சென்று மற்ற வேலைகளைப் பார்த்தாள் மஹாபத்ரா.

அப்போது, நலங்குச் சேலையை வாங்குவதற்காக ருத்ராக்ஷியை மேடைக்கு அழைத்து வரும் நேரம் வந்து விட,’ம்ஹ்ம்! இப்போதாவது அவளை என் கண்ணில் காட்டனும்னு நினைச்சாங்களே!’ எனப் பெருமூச்சு விட்டுக் கொண்டான் ஸ்வரூபன்.

“ருத்ரா! மேடைக்குப் போகலாமா?” என்றவர்களிடம்,

“நான் ரெடி!” என்று கூறவும், அவளுடன் நடந்து மேடையை அடைந்தனர் மஹாபத்ரா மற்றும் மிருதுளா.

அப்போது தான், ஸ்வரூபனின் தவிப்பான பார்வை ரசனையாக மாறியது.

அதை இங்கேயிருந்து உணர்ந்து கொண்ட ருத்ராக்ஷியின் கன்னங்களோ ஏகத்துக்கும் சிவந்து அவளைத் திண்டாடச் செய்தது.

அதை அறிந்து கொண்டவனுக்கோ, தன்னவள் அருகில் வந்ததும், அவளைச் சீண்டும் பார்வையை விடுத்துக், கனிவுடன் ஏறிட்டான் ஸ்வரூபன்.

அவனது ரசனைத் தோய்ந்த பார்வையை மென் புன்னகையுடன் எதிர்கொண்டவாறே தான் அவனருகில் நின்று கொண்டாள் ருத்ராக்ஷி.

அப்போது, மேடைக்கு வந்து மணப்பெண்ணிற்கான நலங்குப் புடவையை அவளிடம் நீட்டினார் மணமகனின் தாயார் கவிபாரதி.

அவரிடம் ஆசி பெற்றுக் கொண்டு அந்தப் புடவையை வாங்கிக் கொண்டாள் ருத்ராக்ஷி.

அதே போலவே, சந்திரதேவ், காஷ்மீரன் மற்றும் மஹாபத்ராவும் சேர்ந்து ஸ்வரூபனிடம் அவனுக்கான உடையைக் கொடுத்தனர்.

அவனும் அதைப் புன்னகையுடன் பெற்றுக் கொள்ள, இருவரும் தத்தமது அறைக்குச் சென்று உடை மாற்ற ஆயத்தம் ஆயினர்.

ருத்ராக்ஷியின் அறைக்குள் மிருதுளா மற்றும் மஹாபத்ராவும் செல்ல, இங்கே ஸ்வரூபனுக்கு உதவிக்கரம் நீட்டினான் காஷ்மீரன்.

தன்னுடைய சேலையை விரைவாக கட்டி முடித்த ருத்ராக்ஷிக்கு வேகமாக அலங்காரங்களைச் செய்து முடித்தார்கள் அந்த மூன்று அழகுநிலையப் பெண்கள்.

“மூனு பேரும் கலக்கிட்டீங்க! அலங்காரம் சூப்பராக இருக்கு” என்று அவர்களைப் பாராட்டினார் கனகரூபிணி.

யாராலும் கால தாமதம் நிகழாது அனைத்தும் சிறப்பாக அமைய மணமக்கள் இருவரும் மீண்டும் மேடையில் ஏறி அனைவருக்கும் காட்சி அளித்தனர்.

அதைக் காணத் தானே இரு வீட்டாரும் காத்துக் கிடந்தார்கள்.

எனவே, அவர்களது கண்களில் அத்தனைப் பெருமித உணர்வு தோன்றி அவர்களுக்கு மனநிறைவைக் கொடுத்தது.

இதற்கிடையில், ருத்ராக்ஷி வேலை செய்யும் நூலக உரிமையாளர் துரைமுருகன் மற்றும் அவள் பயிற்சி அளிக்கும் பெண்களும் தங்களது குடும்பத்துடன் அந்த மண்டபத்திற்கு எப்போதோ வந்திருந்தனர்.

இந்த நலங்கு வைபவத்திற்குக் கவிபாரதியின் உறவினர்கள் மட்டுமில்லாமல் சந்திரதேவ் மற்றும் காஷ்மீரனின் தொழில்முறை நண்பர்கள் மற்றும் உறவினர்களும் தவறாமல் கலந்து கொண்டுள்ளனர்.

அவர்களுடைய நிச்சயத்தார்த்தம் எப்படி சிறப்பாக நடைபெற்றதோ? அதே போல், இந்த நிகழ்வும் உற்றார், உறவினர்களின் ஆசியோடு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அத்தோடு, உணவிலும் கூட, எவ்வித குற்றம், குறையும் சொல்ல முடியாத அளவிற்கு மாப்பிள்ளை வீட்டார் ஜமாய்த்து இருந்தனர் என்ற பேச்சு அந்த மண்டபத்தை நிறைத்து இருந்தது.

ஆனால், மணமகன் மற்றும் மணமகள் வீட்டாரோ, சாப்பாட்டைப் பற்றிய யோசனையே இல்லாமல் அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருந்ததால்,”வித்யாதரா! உன் பொண்டாட்டி, பிள்ளைங்களைக் கூட்டிட்டுப் போய்ச் சாப்பிட்டு வா” என்றவர், தனது மகன், மருமகள் மற்றும் மஹாபத்ராவின் மெற்றோரையும் சாப்பிட அனுப்பி வைத்தார் சந்திரதேவ்.

இதில், கவிபாரதி மட்டும் மணமக்களுடன் உணவருந்திக் கொள்வதாக உரைத்து விட்டதால் அதற்கு மேல் அவரைக் கட்டாயப்படுத்தவில்லை.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்கத் தொடங்கியதும், அனைவரும் தங்களது குடும்பத்துடன் மேடையேறி மணமக்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொள்ள,”இன்னும் மாமாவும், கவிபாரதி அம்மாவும் சாப்பிடாமல் இருக்காங்க” என்ற செய்தியைக் கேட்டவுடன்,

“ஏன் அண்ணி?” என்றாள் ருத்ராக்ஷி.

“உங்க கூட சேர்ந்து சாப்பிடலாம்னு வெயிட் பண்றாங்க ம்மா” எனப் பதிலளித்தாள் மஹாபத்ரா.

“அப்போ நாம அவங்க கூடச் சேர்ந்து போய்ச் சாப்பிட்டு வந்துடலாம்” என்று ஸ்வரூபனுடன், தன் தந்தை மற்றும் அத்தையை அழைத்துக் கொண்டு உணவருந்தி விட்டு வந்தாள் ருத்ராக்ஷி.

- தொடரும்

எல்லாரும் ஸ்வரூபன் & ருத்ராக்ஷியோட கல்யாணத்துக்கு வந்துருங்க ஃப்ரண்ட்ஸ் ❤

 

Advertisement

Back
Top