Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நள(ன்)தமயந்தி - 2

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம் 2
சிங்கார சென்னையில் இருக்கும் மயிலாப்பூர் காலைவேளையில் மிகுந்த பரபரப்புடன் இருந்தது. அதில் இருக்கும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பிலிருந்து பேச்சு சத்தம் கேட்டது.
“நளா கிளம்பிட்டியா?”
“ரெடிம்மா, நீங்க டிபன் எடுத்துவைங்க.”
“ஊருக்கே நீ சமைச்சு போட்டாலும் உனக்கு என் கையால் தான் சாப்பிடனும்.”
“ஹா..ஹா.!!. எல்லாரும் பையனுக்கு சமைச்சு கொடுக்கறதை பாக்கியமா நினைக்கறாங்க.!! நீங்க என்னடான்னா இப்படி சொல்றீங்க? என்னமா நீங்க இப்படி பண்றீங்களேம்மா.?”
“அய்யோ போதும்டா அரட்டை..!! காலாகாலத்தில் கல்யாணம் செஞ்சிருந்தா நான் ஏன் இப்படி சொல்லப்போறேன். எனக்கு என்ன வயசா திரும்புது? என்னால முன்ன மாதிரி நின்னுக்கிட்டு சமைக்க முடியல.. அதான் இப்படி கேக்கறேன். சீக்கிரமே எனக்கு ஒரு மருமகளை தேடி பிடிடா.”
“நானென்ன பிடிக்க மாட்டேன்னா சொல்றேன்.. எனக்கேத்த தமயந்தி இன்னும் கிடைக்கலைமா. கிடைச்சா டும் டும் கொட்டிடவேண்டியது தான்.” என்று சிரிப்புடன் கூறியவன் பின் நிறுத்தி, “கொஞ்சம் டைம் கொடுங்கம்மா. லைப்ல இன்னும் கொஞ்சம் செட்டில் ஆன பிறகு பிடிக்கறேன் மா. எனக்கு அப்படி ஒண்ணும் வயசாகல, இருபத்தியேழு தான் ஆகுது.”
“என் அண்ணன் பொண்ணை கட்டிக்க உனக்கு விருப்பம் இல்லைன்னு சொன்ன, நானும் சரின்னு சொல்லிட்டு இப்போ அவதிப் படறேன். அப்பவே நான் திடமா மறுத்திருந்தா, நீ டைம் கொடுங்கன்னு கேட்டிருக்க மாட்ட,”
“விசாலிப் பத்தி பேசாதீங்கம்மா, எனக்கும் சரி அவளுக்கும் சரி மனசுல சகோதர பாசத்தை தவிர வேறெதுவும் இல்லை. இப்போ அவளுக்கு கல்யாணம் ஆகி குழந்தைப் பிறந்து, தாய் மாமன் சீரை நான் செஞ்சுட்டு இருக்கேன்.
அப்படி இருக்கும்போது அவளுடன் என்னை இணைத்து பேசாதீங்க. இப்போதைக்கு ஆளை விடுங்க, டைம் ஆச்சு.. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிறேன்.” என்றபடியே காலை உணவை முடித்து வெளியே கிளம்பினான்.
நளன் தந்தை காசியின் மறைவிற்குப்பின் தாய் மாமா வீட்டில் தான் வளர்ந்துவந்தான். கூடப் பிறந்தவர்கள் யாரும் அற்ற நிலையில் வளர்ந்தவனுக்கு, குட்டியாய் இருந்த விசாலியை அவனுக்கு மிகவும் பிடித்தது.
அதனால் அவளை ‘அண்ணா’ என்று மட்டுமே அழைக்க பழக்கியிருந்தான். விசாலிக்கும் உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லை. அதனால் அவளுக்கும் நளன் மீது சகோதர பாசத்தை தவிர்த்து வேறெதுவும் தோணியதில்லை.
நளன் மிகவும் நன்றாக படிப்பவன். பனிரெண்டாம் வகுப்பில் கணிதவியல் பிரிவு எடுத்து பள்ளியிலேயே முதல் மாணவனாக வந்தான். எல்லோரும் அவன் கணிதவியல் சம்பந்தப்பட்ட மேற்படிப்பு ஏதேனும் படிப்பான் என்று நினைத்திருக்க அவன் எடுத்ததோ கேட்டரிங் டெக்னாலாஜி.
சமையல் கலையில் இருக்கும் ஆர்வத்தால் அவன் அதை எடுத்திருந்தான். அங்கும் அவன் நன்றாகவே தேறியிருந்தான். அதிலேயே மேற்படிப்பும் முடித்ததுமே 5 நட்சத்திர ஹோட்டலில்(five star hotel) வேலை கிடைக்க அங்கு சேர்ந்தான்.
சேர்ந்த சில நாட்களிலேயே அந்த வேலையை விட்டான். சொந்தமாக ரெஸ்டாரென்ட் ஆரம்பிக்க வேண்டும் என்பதே அதற்கு காரணம்.
இப்பொழுது கூடப் படித்தவனுடன் இணைந்து சிறிய அளவில் நடத்திக்கொண்டிருக்கிறான். முதல் முழுவதும் நண்பன் போட, நளன் அங்கே வொர்கிங் பார்ட்னராக சேர்ந்தான்.
சிறு தானிய உணவு வகைகளுக்கு அங்கே நல்ல வரவேற்பு. இதை தொடங்கி ஐந்து வருடங்கள் ஆகிறது. கணிசமான லாபம் கிடைத்ததால் நகரில் சில இடங்களில் கிளைகளையும் தொடங்கினார்கள்.
வேறு ஊர்களிலும் கிளைகள் தொடங்க திட்டமிட்டிருக்கிறார்கள். முதல் படியாக திருச்சியில் தொடங்க இடம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
“நள்ஸ்..!!, அப்பா உன் கிட்ட ஏதோ பேசனும்ன்னு சொல்றாங்க.. டீ.நகர் பிரான்ச்ல இருக்காங்க..!! போயிட்டு வரியா?” என்று கேட்டான் வளவன். கேட்கும்போது அவன் உதட்டில் சிரிப்பு நிறைந்திருந்தது.
“வளவா..!!, வேண்டாம் நான் உன் பேரை வள்ஸ்ன்னு கூப்பிட்டா ரொம்ப கேவலமா இருக்கும். இருக்கிறதே மூணு எழுத்து அதையும் ஏண்டா இப்படி கொலைசெய்யற? சரி விடு அங்கிள் என்ன பேசப்போறார் என்கிட்டே?”
“என்னைக் கேட்டா? , போ..!! போய் உன் அங்கிளையே கேளு.!!”
“உனக்கு தெரியாமலா இப்படி சிரிச்சுட்டு இருக்க?”
“எனக்கு தெரியும். ஆனா சொல்லக்கூடாதுன்னு ஸ்டிர்க்ட்டா ஆர்டர் போட்டிருக்காங்க.. நீயே போய் கேட்டுக்கோ. இங்க நான் பார்த்துகிறேன்.
“சொன்னா என்ன கொறஞ்சா போய்டுவான்.” என்று முனுமுனுத்தவாறே வண்டியில் ஏறி திநகர் புறப்பட்டான்.
நேராக அவரின் முன் நின்று “சொல்லுங்க அங்கிள்...!!” என்றான்.
“வாப்பா நளா..!!, நாம திருச்சியில இடம் பார்த்துட்டு இருந்தோமே அது விஷயமா பேச தான் உன்னை இங்க வர சொன்னேன்.”
“சொல்லுங்க அங்கிள், ஏதாவது இடம் வந்திருக்கா? நான் போய் பார்த்துட்டு வரணுமா?”
“நீ போகணும் தான் ஆனா இடம் பார்க்க இல்லை..!!” என்று புதிர் போட்டார்.
“வேறென்ன அங்கிள்?”
“அங்க ஒரு ஹோட்டல் விலைக்கு வருது. நல்ல மெயின் ஏரியால இருக்கு. மலைகோட்டை உச்சி பிள்ளையார் கோவிலுக்கு பக்கத்துலேயே வருது. அதை வாங்கி புதுப்பிச்சா, நல்லா அமோகமா ஓடும்.”
“அப்போ அப்படியே பண்ணிரலாம் அங்கிள்...!! நான் போய் அந்த இடத்தை முடிச்சுட்டு வந்துடட்டுமா?”
“பொறு நளா..!!, நான் சொல்லவருவதை முழுசா சொல்ல விடு...”
“சாரி அங்கிள்..!!, நீங்க சொல்லுங்க...!!”
“அந்த ஹோட்டலின் விலை ஐம்பது லட்சம். தொகை கொஞ்சம் பெரிது தான். ஆனா மெயின் ஆன இடத்தில் இருக்கு. சென்னையில் இருக்கும் கடைகளின் அளவை விட பெரிது.
அதான் நான் கொஞ்சம் யோசிக்கறேன். இந்த இடத்தையே முடிச்சா, நல்லா இருக்கும்ன்னு எனக்கு தோணுது. எந்த வில்லங்கமும் இல்லை. எல்லா அமௌன்டையுமே வைட்லேயே கொடுக்க சொல்லிருக்காங்க.” என்று நிறுத்திவிட்டு அவனை பார்த்தார்.
நளன் தலையை மட்டுமே ஆட்டி கேட்டுக்கொண்டிருந்தான். மறந்தும் வாயை திறக்கவில்லை.
“இந்த ஹோட்டலை நீயே வாங்கிக்கொள் நளா.”
இம்முறை வாயை திறக்காமல் இருக்க அவனால் முடியவில்லை. “ஹா.ங்!! என்ன அங்கிள் சொன்னீங்க?” என்று கேட்டு விட்டான்.
“இதை உன்னையே வாங்கிக்க சொல்றேன்.”
“புரியலை அங்கிள்..!!”
“உன்னோட ஆசையே சொந்தமா ரெஸ்டாரன்ட் வைப்பது தானே, அதான் இதை உன்னையே வாங்கிக்க சொல்றேன். நான் கொஞ்சம் அமௌன்ட் குறைந்த வட்டியிலே தரேன். மீதியை நீ போட்டு அந்த இடத்தை வாங்கிப்போடு. இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தான் வொர்கிங் பார்ட்னராவே இருப்ப? உங்க அப்பா இருந்திருந்தா உனக்கு சரியான ஆலோசனை கிடைச்சிருக்கும். இப்போ என்னை உன் அப்பாவா நினைச்சு, நான் சொல்வதை கேளு நளா..!!”
“என்..ன. அங்கி..ள் ?”
“நளா எனக்கு நீயும் ஒரு பிள்ளை மாதிரி தான், திருச்சியில் அந்த இடத்தை வாங்கி ஹோட்டலை நடத்து.. உனக்கு நாங்க எல்லாரும் சேர்ந்து, எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம்.”
“சரி அங்கிள். ஆனா.!!” என்று நிறுத்தி, “சோழிங்கநல்லூர்ல வீடு கட்டிட்டு இருக்கேன்னு உங்களுக்கே தெரியும் அங்கிள். என்னோட முக்கால்வாசி சேமிப்பு எல்லாமே அதில போட்டாச்சு. எமெர்ஜென்சி செலவுக்காக ஐந்து லட்சம் மட்டுமே இருக்கு. நீங்க பாதி அமௌன்ட் கொடுத்தாலுமே மீதிக்கு என்ன செய்யறதுன்னு எனக்கு தெரியல. நான் கொஞ்சம் யோசிச்சு சொல்லட்டுமா அங்கிள்?”
“நளா எனக்கு உன்னைப் பத்தி தெரியாதா? கவலைப்படாதேடா, பேங்க் லோன்க்கு அப்பளை செய்யலாம். நான் ஷ்யூரிட்டி சைன் பண்றேன். உங்கம்மா கிட்ட பேசிட்டு முடிவ சொன்னா போதும்..
“ப்ளீஸ் அங்கிள்..!! எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் வேணுமே.. டூ டேஸ்ல என்னோட முடிவ சொல்றேனே.”
“சரிப்பா நளா.!!. சீக்கிரம் சொல்லு...!” என்றவரிடம் தலையை ஆட்டி விடைப்பெற்று வெளியே வந்தான் நளன்.
தன் கைபேசியை எடுத்து வளவனை அழைத்தான்.
“சொல்லு நள்ஸ்..!!” – வளவன்
அங்கிளிடம் பேசியதைப்பற்றி கூறிவிட்டு, “எனக்கு யோசிக்க டைம் வேணும்டா, நான் வீட்டுக்கு போயிட்டு மத்தியானத்துக்கு மேல அங்க வரேன் டா, இன்னிக்கு ஈவ்னிங் ஸ்நாக்ஸ்க்கு திணை கட்லெட் செய்ய சொல்லித்தரேன்னு மாஸ்டர் கிட்ட சொல்லியிருக்கேன். அதை நீ கொஞ்சம் பார்த்துக்கோ வளவா. பை டா ஈவ்னிங் பார்க்கலாம்.”
“சரிடா. சீக்கிரம் நல்ல முடிவா சொல்லு. பை மச்சி.”
வளவனிடம் பேசி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நளனை “என்ன நளா? போன சுருக்குலேயே வந்துட்ட? ஏதாவது வச்சிட்டு போயிட்டியா?”
“அதெல்லாம் இல்லைம்மா.. இங்க வந்து உக்காருங்க, கொஞ்சம் பேசணும்.” என்று அவரின் கை பிடித்து அழைத்துவந்து இருக்கையில் அமர செய்துவிட்டு, அருகிலேயே அவனும் அமர்ந்தவாறே வளவனின் தந்தை கூறியதை சொல்ல ஆரம்பித்தான்.
முழுவதையும் கேட்ட விசாலாட்சி, “நல்ல யோசனைதான் ப்பா, திருச்சில கூட உன்னோட ஒண்ணுவிட்ட சித்தப்பா இருக்காங்கப்பா. துணிக்கடை வச்சு நடத்திட்டு இருந்தார். கடை பேரு எனக்கு மறந்திடுச்சுப்பா.., வயசாச்சுல்ல அதான்.. உனக்கு அவரை நினைவிருக்கா நளா?”
ஏதோ நிழல் போல ஞாபகம் இருந்தாலும் அதை மேற்கொண்டு பேச அவனுக்கு விருப்பம் இல்லை. “ம்மா..!!, நான் என்ன பேசிட்டு இருக்கேன், நீங்க என்ன சொல்றீங்க? சம்பந்தமில்லாம எதையாவது பேசாதீங்க.”
“இல்லைடா, உறவு விட்டு போச்சு.. நாம குளித்தலை பக்கமா இருந்தபோது அடிக்கடி வீட்டுக்கு வருவார், உன் மேல ரொம்ப பாசமா இருப்பார். நீ திருச்சின்னு சொன்னதும் அதெல்லாம் எனக்கு நினைவு வந்திடுச்சு... சரி விடு நீ சொல்லுப்பா.. என்ன பண்ணலாம்?”
“அம்மா, எனக்கும் அந்த இடத்தை வாங்க ஆசையாத்தான் இருக்கும்மா.. ஆனா, அங்கிள் கிட்ட பணத்தை வாங்கி செய்யறது தான் என்னை யோசிக்க வைக்குது. என்னோட பணத்துல வாங்கனும்னு தோணுது. அம்மா உங்க பிள்ளை மேல நம்பிக்கை இருக்குல்ல.?”
“ஏண்டா நான் உன்னை நம்பாம வேற யாரை நம்ப போறேன்?”
“அதில்லம்மா..!!, நம்ப சோழிங்கநல்லூர் இடத்தை வித்துட்டா, நான் யார் கிட்டயும் கடன் வாங்க வேண்டியதில்லை. ஆனா, உங்க சொந்த வீடு கனவு பலிக்க சிலகாலம் ஆகும். அதுக்கு தான் உங்க கிட்ட கேட்டுட்டு இருக்கேன்.”
அவனையே யோசனையுடன் பார்த்திருந்த விசாலாட்சி, “நளா, என்னோட சொந்த வீடு கனவு உனக்காக தான் கண்ணா. இந்த வீட்டை கட்டி முடிச்சா இதை சொல்லியாவது உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்கலாமேங்கற அக்கறை தான். “
“அம்மா அதுக்கென்ன இப்போ அவசரம்?”
“சரி நளா, இந்த இடத்தை வித்துட்டு அங்க வாங்கிப்போடு. ஆனா ஒரே ஒரு நிபந்தனை.. அது என்னன்னா, திருச்சி போனதுமே நீ கல்யாணம் செய்துக்கணும்.”
அவர் சொல்வதை சிரிப்புடன் கேட்டிருந்த நளன், “அதான் காலையிலேயே சொல்லிட்டேனே, எனக்கேத்த தமயந்தி கிடைச்சவுடனே டும் டும் தான்னு...!!” என்று சொல்லிவிட்டு அடுத்து செய்ய வேண்டியதை செய்வதற்கு ஆயத்தமானான்.
 
Top