மனைவி - 11

Advertisement

Nivi Ammu

Well-known member
Member
மனைவி - 11

“ராமு...” என்று கலை தன் பாச வலை வீசும் குரலில் அழைக்க,

“சொல்லுங்கம்மா,” என்றான் ஸ்ரீராம்.

“நீ வந்த உடனே இதெல்லாம் பேச கூடாதுன்னு தான் நான் அமைதியா இருந்தேன். இந்த அலர் வாயை வச்சுகிட்டு சும்மா இல்ல... இதெல்லாம் நீ எதுவும் யோசிக்காதப்பா. நீதான் இப்ப வந்துட்டல்ல, எல்லாம் சரியாயிடும்,” என்று கலை மெல்லக் காய் நகர்த்தினாள்.

“என்னம்மா சரியாகும்? நீங்க ஏன் இதுவரைக்கும் என்கிட்ட எதுவும் சொல்லல?” என்று ஸ்ரீராம் ஆவேசமாகக் கேட்டான்.

“என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல ராமு. ராதை நடவடிக்கை கொஞ்சம் கூடச் சரியில்லை. அவகிட்ட எதைக் கேட்டாலும் மரியாதை இல்லாம பேசுறா. நமக்கு ஒரு வாரிசு இல்லை... இந்த குடும்பம் வாழ ஒரு வாரிசு இல்லையேன்னு அவ யோசிக்கவே இல்லை. உன்னைப் பத்தியோ, இந்த குடும்பத்தைப் பத்தியோ அவளுக்கு ஒரு சதவீதம் கூடக் கவலை இல்லை.”

மேலும் கலை தொடர்ந்தாள், “நம்ம தெரு முனையில கடைசியா இருக்கானே அந்தப் பையன்... அவன் கூடத்தான் பேசிட்டு இருக்கா. என்னன்னு கேட்டதுக்கு, ‘உன் பிள்ளை தான் ஊர்ல இல்லையே, நான் எதுக்குத் தனியா இருக்கணும்’னு என்கிட்ட நேரடியாவே கேக்குறா. என்னால எதையுமே தாங்க முடியலப்பா,” என்று கொளுத்திப் போட்டாள்.

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் ஸ்ரீராமின் கைகளில் நரம்புகள் புடைத்தன. கண்கள் சிவந்தன. 'தன் மனைவி இப்படிப்பட்டவளா? எனக்குத் துரோகம் செய்கிறாளா?' என்று உள்ளுக்குள் ஒரு எரிமலையைச் சுமந்தபடி கலங்கி நின்றான் அந்த ஆண்மகன்.

அன்னை என்பதால் அவரின் நச்சு வார்த்தைகளை கூட அமுதமென நம்பி ஏமாந்தான் இந்த அறிவற்ற பைத்தியக்காரன்.

பெத்த தாயாகவே இருந்தாலும், தன் மனைவியைப் பிரிதொருவன் மேல் தவறாகச் சந்தேகப்படுவது மகாப் பிழை என்கிற ஒரு சதவீத யோசனை கூட அவன் மூளைக்கு எட்டவே இல்லை.

"அப்படிப்பட்ட குணம் கொண்டவளை எதுக்குமா இன்னும் இந்த வீட்டுக்குள்ளேயே வச்சிருக்கீங்க? தூக்கி எறிய வேண்டியதுதானே?" ஸ்ரீராம் ஆத்திரத்தில் கத்தினான்.

"எல்லாம் உனக்காகத் தான்டா... நீ வந்ததும் நீயே முடிவு பண்ணிக்கட்டும்னு தான் இத்தனை நாள் பொறுமையா இருந்தேன்," கலை தன் முகத்தில் போலிப் பரிதாபத்தைப் பூசிக்கொண்டு கூறினாள்.

ஸ்ரீராம் பதில் பேசாமல் அமைதியாக வெறித்தபடி சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குள் கோபம் எரிமலையாய் குமுறியது.

ராதை, வீட்டு வேலைகளை எல்லாம் ஒரு வழியாக முடித்துவிட்டு, காய் வாங்குவதற்காக பையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே கிளம்பினாள்.

தாய், மகன் இருவரும் அங்கே வாசலில் தான் நின்று கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் இருவரிடமும் ஒரு வார்த்தை கூடச் சொல்லிக் கொள்ளாமல் அவள் பாட்டுக்குச் சென்றாள்.

உண்மையில் இது கலையின் மறைமுக உத்தரவு. 'அவன் முன்னாடி நிற்காதே' என்று அவர் போட்ட கட்டளையைத் தான் ராதை பின்பற்றினாள்.

பாவம், அந்த அப்பாவி ராதைக்கு தெரியாது... இதுவே அவளுக்கு எதிரான ஒரு சதி வலை என்று! ஸ்ரீராம் இதை அறியாமல் அவள் திமிராகப் போவதாகவே நினைத்துக் கொண்டான்.

"பாத்தியா ராமு... நீ இங்கதான் நிக்கிற. இப்பதான் ஊருக்கு வந்திருக்க... உன்கிட்ட ஒரு வார்த்தை பேசினாளா? 'நான் வெளியில போறேன்'னு ஒரு சொல்லு சொன்னாளா? உன்னை மதிக்காம அவ பாட்டுக்கு எப்படிப் போறா பாரு!" கலை அவன் காதில் விஷத்தைக் கக்கினாள்.

"எங்க போறா அவ?" ஸ்ரீராம் பற்களைக் கடித்தான்.

"வேற எங்க போவா? அந்த ஊர் சுத்திப் பயலைத் தான் பாக்கப் போறா!"

ஸ்ரீராமின் கண்கள் ரத்த நிறத்தில் சிவந்தன. கண்ணிருந்தும் அவன் குருடனாகவே இருந்தான். தாயின் வார்த்தைகளை வேதவாக்காக ஏற்று, தன் மூளையைச் சற்றும் பயன்படுத்தாமல் போனான். தாயின் மீது அவன் வைத்திருந்த குருட்டுப் பாசம் அவனது சிந்தனையை மழுங்கச் செய்திருந்தது.

வேகமாகத் தன் செருப்பை மாட்டிக் கொண்டு, ஒரு நிழல் போல அவளுக்குப் பின்னாடியே துரத்திச் சென்றான். தன் கணவன் தன்னைச் சந்தேகப்பட்டுப் பின்தொடர்கிறான் என்று கூடத் தெரியாமல், அவன் தன்னைத் தொடர்ந்து நிராகரிக்கும் வலியோடு, கண்களில் ததும்பிய கண்ணீரோடு நடந்து கொண்டிருந்தாள் ராதை.

பதற்றத்தில் செருப்புக் கூடப் போடாமல் அவள் வெறும் காலோடு நடந்ததை அவன் கவனிக்கத் தவறினான்.

அப்போது அலர் யாருக்கோ போன் செய்து இரகசியமாகப் பேசிக் கொண்டிருந்தாள்.

"அம்மா... நம்ம பிளான் படி எல்லாம் சூப்பரா நடக்குது. இனிமே எல்லாம் உன் கையில தான் இருக்கு. இவளை இன்னும் ஒரு நாள் வீட்டுக்குள்ள விட்டாலும் அண்ணன் மனசு மாறிடும் போல. இப்போவே காரியத்தை முடிக்கணும்," என்று அலர் உற்சாகமாகச் சொல்ல,

"இல்லடி, அதுக்கு வாய்ப்பே இல்லை. இவன் அந்த ரூமுக்குள்ள நின்னு யோசிக்கும்போதே என் மனசு பக்குன்னு இருந்துச்சு. அதான் நீ பேசும்போது நான் பேசாம அமைதியா இருந்துட்டேன். இன்னைக்கு எப்படியாவது இவளை இவன் கையாலேயே அடிச்சு வெளியில துரத்திடணும்," கலை உறுதியாகக் கூறினாள்.

இவர்கள் இருவரும் ஸ்ரீராமுக்கு தெரியாமல் அவனுக்குப் பின்னாடியே ஓடி வந்தனர். அதற்குள் ராதையை ஒருவன் வழிமறித்துப் பேசத் தொடங்கினான்.

அவள் அவனை அடையாளம் கண்டு கொண்டு சாதாரணமாகப் பேசினாள். ஆனால், தூரத்தில் நின்ற ஸ்ரீராமுக்கு அவள் சிரித்துப் பேசுவது போலத் தோன்றியது.

அவனது கை முட்டிகள் ஆத்திரத்தில் இறுகின.

'இத்தனை வருஷம் கழிச்சு நான் வீட்டுக்கு வந்திருக்கேன். என்கிட்ட ஒரு வார்த்தை கூடப் பேசாதவ, இவன்கிட்ட மட்டும் நடு ரோட்டுல நின்னு சிரிச்சுப் பேசிட்டு இருக்காளா? அப்ப அம்மா சொன்னது எல்லாம் உண்மைதானா? இவனைப் பாக்கத் தான் இவ்வளவு அவசரமா கிளம்பி வந்தாளா? வேற ஒருத்தனை மனசுல வச்சுக்கிட்டு எதுக்கு என் வீட்ல இருக்கணும்? எதுக்கு என் காசுல தின்னுட்டு இருக்கணும்? எதுக்கு என் கூட வாழணும்?' அவன் மனமும் புத்தியும் பேதலித்துச் சாக்கடையைப் போலச் சிந்தித்தது.

அந்த நேரத்தில், ராதையிடம் பேசிக் கொண்டிருந்தவன் அவளது தோளைத் தட்டிப் பேச, ஸ்ரீராமுக்கு உலகமே இருண்டது. அவர்கள் இருவருக்கும் நிச்சயம் ஏதோ தொடர்பு இருக்கிறது என்று அவன் ஆழமாக நம்பிவிட்டான்.

"பாத்தியா? இதுதான் நாங்க சொன்னது. கண்ணு முன்னாடியே நடக்குது பாரு. நீ எதுக்கு இந்த அசிங்கத்தை எல்லாம் நின்னு பாக்குற? உனக்கு இது தேவையா? வா வீட்டுக்கு போயிடலாம்... அவளும் எப்படியும் அங்க தானே வரணும்," கலை மகனின் கையைப் பிடித்து இழுத்தாள்.

ஸ்ரீராம் தாயின் கையை வேகமாகக் உதறிவிட்டு, ஒரு பித்தன் போல வீட்டை நோக்கி ஓடினான்.

"அம்மா... சீக்கிரம் போங்க! அவன் மனசுல இன்னும் விஷத்தை ஏத்துங்க. அப்பதான் இன்னைக்கே அவளை வீட்டை விட்டுத் துரத்துவான்," என அலர் தன் தாயை அவசரப்படுத்தினாள்.

மூவரும் வீட்டிற்கு வந்து சேர, ஸ்ரீராம் தன் தலைமுடியை பிடித்துக் கொண்டு வெறி பிடித்தவன் போல வாசலில் அமர்ந்திருந்தான்.

அவனால் தன் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ராதை மட்டும் இப்போது அவன் முன்னால் நின்றால், அவளைக் கொன்றே விடுவான் போல அத்தனை வெறி அவன் கண்களில் தாண்டவமாடியது.

'நான் இல்லாத நேரத்துல இவ வேற ஒருத்தனோட சுத்துறாளா?' என்கிற கேள்வி அவனது இதயத்தை ஈரம் இல்லாமல் அறுத்துக் கொண்டிருந்தது.

"ராமு... கொஞ்சம் அமைதியா இருடா. நீ இத்தனை வருஷம் ஊர்ல இல்லைங்கிற தைரியத்துல ஏதோ தப்பு பண்ணிட்டா. இப்ப நீ இங்க தான் இருக்கப் போற? அவ இனிமே அடங்கி உன் கூடத் தான் வாழப்போறா. உனக்கு உண்மையா இருப்பாடா. பொம்பளப் புள்ள வாழ்க்கை இது... நம்ம வீட்லயும் ரெண்டு பொண்ணுங்க இருக்குல்ல? அதை மனசுல வச்சு யோசிச்சுப் பாரு. சண்டையை பெருசு பண்ணாதடா," கலை மீண்டும் ஒரு தந்திர நாடகத்தை ஆடினாள்.

"அம்மா! என்ன பேசிட்டு இருக்க நீ? அவ கூட என்னை திரும்ப வாழச் சொல்றியா? இத்தனை நாள் அவளை இந்த வீட்டுக்குள்ள வச்சிருந்ததே ஒரு மகா பாவம். என் வருமானத்துல வாழ்ந்துட்டு, என் காசுல வயிறு வளர்த்துட்டு, எனக்கே துரோகம் பண்ணிட்டு இருக்கா அந்தச் சிறுக்கி!" ஸ்ரீராம் கத்தினான்.

"அண்ணா... நாங்களும் அம்மாகிட்ட எவ்வளவோ சொல்லிட்டோம். அம்மா தான் பாவம்னு பாத்துக்கிட்டே இருக்காங்க. நீங்களாவது அம்மாவுக்குப் புரிய வைங்கண்ணா," மலர் தன் தாயைப் புனிதவதி போல் காட்டினாள்.

இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த அசோக் அதிர்ந்து போனான். அந்த மூன்று பெண்களின் வஞ்சகமான முகத்தைக் கண்டவனுக்கு உள்ளுக்குள் உடல் நடுங்கியது.

'பெத்த புள்ள வீட்டுக்கு வந்து அரை நாள் கூட ஆகல. அதுக்குள்ள அவன் வாழ்க்கையை அறுத்தெறியப் பாக்குறாங்களே இந்த மூணு பேரும்! இவனுக்கு என்ன அறிவு மழுங்கிப் போச்சா? வந்தவுடனே இவங்க சொல்றதை எல்லாம் அப்படியே நம்புறானே? இதுல ஏதோ சதி இருக்குன்னு யோசிக்க மாட்டானா? இவன் என்ன இவ்வளவு பெரிய அம்மா முட்டாளா இருக்கான்? எதுக்கு இவன் எல்லாம் கல்யாணம் பண்ணினான்? இவனை எப்படித் தான் அந்தப் பொண்ணு இத்தனை வருஷம் நம்பிக் காத்துட்டு இருந்தாளோ? இவனை மாதிரி ஒரு முட்டாள் உலகத்துலயே இருக்க மாட்டான். அம்மா பிள்ளையா இருக்கலாம்... ஆனா இப்படித் தாய்க்கு அடிமையா இருக்கக் கூடாது. இவன் எல்லாம் ஒரு குடும்ப வாழ்க்கைக்குத் தகுதியே இல்லாதவன்!' அசோக் மனதிற்குள் ஸ்ரீராமைச் சாடினான்.

நீண்ட நேரம் கழித்து ராதை வீட்டுக்குத் திரும்பினாள். அவளின் துரதிர்ஷ்டம், அவள் சென்ற கடை பூட்டியிருந்ததால் கையில் எந்தப் பொருளும் இல்லாமல் வெறும் பையோடு வந்தாள். அந்த வெறும் பை, அவளுக்குப் பெரும் வினையாக மாறியது.

குடும்பமே வாசலில் நிற்பதையும், தன் கணவன் கோபத்தில் கணன்று கொண்டிருப்பதையும் பார்த்த ராதைக்கு உடல் ஒரு நிமிடம் நடுங்கியது.

அனைவருடைய பார்வையும் அவள் மேல் ஒரு குற்றவாளியைப் பார்ப்பது போல படியவே, அவள் அவர்களிடம் செல்ல தயங்கி தோட்டத்துப் பக்கம் ஒதுங்க பார்த்தாள்.

"எங்க போயிட்டு வர்ற நீ?" ஸ்ரீராமனின் அந்த இடி முழக்கக் குரலில் ராதையின் கால்கள் அப்படியே உறைந்து நின்றன.

'என்கிட்ட தான் பேசுறாரா? என்னைத் தான் கேள்வி கேக்குறாரா?' என்கிற ஒரு சின்ன சந்தோஷம் அவள் மனதின் ஓரத்தில் மின்னியது.

அந்த ஏக்கத்தோடு கணவனை நிமிர்ந்து பார்த்தாள்.

"உன்கிட்ட தான் கேக்குறேன்... எங்க போயிட்டு வர்ற?" அவன் குரலில் இருந்த விபரீதம் அவளுக்கு ஏதோ ஆபத்தை உணர்த்தியது.

தொடரும்......
 
ராதைக்கு இந்த நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கப் போகுது.

அசோக்கு என்ன பயமா இருக்கா? நீ உண்மையிலேயே ஒரு மனுஷனா இருந்தா இவளுங்க வண்டவாளத்தை ராமு கிட்ட சொல்லு பார்க்கலாம்.
 
Last edited:
ஶ்ரீராம் - இவனுக்கு பெயர் சரியில்லையே.... 🤦‍♀️ இவனை இந்த குடும்பத்தை விட்டு வெளியே வந்தால் தான் ராதை வாழ்க்கையில் ஒரு விடிவு வரும். அங்க நின்னு பார்த்திருந்தால் அந்த setup ஆளுக்கு அறை விழுந்துதா? அவன் யாரு தெரிஞ்சிருக்கும்.
 

Advertisement

Advertisement

Back
Top