Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்சத்திர காட்டில்...(E2)

Advertisement

Yagnya

Tamil Novel Writer
The Writers Crew
Helloooo makkale!!!!

Thanksss alottt for your comments...:love:

Here comes the next part ?

Share your thoughts makkale!!!!

292


நட்சத்திர காட்டில்...2

"அனு... ஏப்ள அனு!! இங்காருப்ள!!" என்று முடிந்தளவு பலம்கொண்ட மட்டிலும் உலுக்கிப் பார்த்துவிட்டேன். குப்புற கவிழ்ந்தபடி கிடந்தவள்தான் எழுந்தபாடில்லை. திடீரென தோன்றிய எண்ணத்தில் புருவ மத்தியில் சிறு முடிச்சிட அவளை எழுப்புவதை நிறுத்திவிட்டு திருப்பிப்போடும் முயற்சியில் நான்.

திருப்பிய என்னையே திருப்பிப்போட்டது அவ்வுருவம்!! காரணம் அந்த மங்கிய சிவப்பு நிற தரையில் மூச்சு பேச்சின்றி கிடந்தது அன்னமே இல்லை!! சற்று முன் என்னைக் கடந்து பக்கத்து முடுக்கினுள் நுழைந்து படிகளில் ஏறியோடிய அதே சிவப்பு பாவாடைக்காரி!!!!

'இவ எப்படி இங்க.. அதுவும் அன்னத்தோட துணில?? அப்போ அன்னம்மா??' என்றெண்ணம் அதன்பாட்டில் ஓடிக்கொண்டிருக்க அதை தகர்த்தெறிந்தது அந்தச்சத்தம்.

"ஸ்ஸ்..ஸ்ஸ்.." என்று என்னை யாரோ அழைக்கும் சத்தம். பார்வையை திருப்பி அந்த இருட்டிற்குள் துழாவினால் கனத்த மச்சுபடிகளுக்கு பின் மறைந்து நின்ற அன்னத்தின் உருவம்!! உள்ளுக்குள் எழுவது நிம்மதியா..இல்லை சந்தேகமா?? என்று புரியாமல் போக அவளிடம் விரைந்தேன்.

ஆட்காட்டி விரலை வாயில் வைத்து அமைதியாய் வரும்படி அழைத்துக் கொண்டிருந்தாள் அன்னம். இது அவளது சுபாவமில்லையே!! வெங்கலத்தொண்டையில் உரக்க பேசித்தான் அவளுக்கு வழக்கம்.

'சின்ன வயசுல இந்த தொண்டையால எத்தன மொற அகப்பட்றுக்கேன்..ஒருவேள இதுவும் மாயையா?'

"என்னப்ள?? ஏன் ஒழிஞ்சிட்டிருக்க??"

"ஷ்ஷு!! கத்தாதட்டீ!! அப்புறம் வந்துறப்போறாக..."

'யாரு வந்துருவாங்கனு இப்படி பயப்படுதா??' என்ற எண்ணமெழ பின்பே உரைத்தது இத்தனை நேரம் கலவரத்தில் அன்னம்மா என்னுடன் இல்லாமல் போனது..

"யாரு வந்துருவாங்க?? இவ்ளோ நேரம் எங்கருந்தே நீ?? அந்த குரல் யாரோடது?? தெளிவா சொல்லுப்ள!!!" என்று அதட்டலாய் வெளிவந்தது என் குரல்தானா?? எனக்கே சந்தேகம்தான்.

"நீ இங்க வந்துருக்க கூடாதுப்ள!!" என்ற அன்னத்தின் குரல் வித்தியாசமாய் ஒலித்தது. இது அன்னந்தானா??!!

"அனு..??" புரியாத பாவனை என்னிடம்.

"தப்பு பண்ணிட்ட ருக்கு!! இனி அவங்க சும்மாயிருக்க மாட்டாங்க.. கிராமத்தையே அழிச்சிட்டியேடி பாவீ!!!!" அவள் வாயில் நுழையாத என் பெயர் எப்பொழுதுமே ருக்குதான்.

"என்னோட இத்தன வருச கனவ குழித்தோண்டி புதைச்சிட்டியேடீ!!!!" என்ற குரல் மண்டையினுள் ரீங்காரமிட்டது. இது எனக்கு பரிச்சயமான குரல்தான். ஆனாலும் பட்டென பிடிபடாமல்போனது.

"போயிருப்ள!! இங்கனருந்து போயிரு!! கருக்கலுக்குள்ள கிராமத்தவிட்டு போயிரு ருக்கு!!" என்ற அன்னத்தின் குரலில் இருந்தது என்ன?? எச்சரிக்கையா..பயமா..இல்லை கட்டளையா??

"அனு..." என்ற என் குரல் அவளை தீண்டும் முன்னரே அவளை விழுங்கியிருந்தது இருள்.

பார்வையை திருப்பிய என்னை திடுக்கிட வைத்தது அதே தரையில் அன்னம்மா அறுவாமனையில் காய் நறுக்கியபடி இருந்தது.

என்னையறியாமலே இரண்டடி பின்னோக்கி வைக்கிறேன் சிறு தடுமாற்றத்துடன்.

"அனு..." என்று மெல்லமாய் சில எட்டுக்கள் வைத்தபடி மென்குரலில் அழைத்தேன்.

மொறத்தில் கிடந்த வெள்ளை கத்திரிக்காயிலேயே அவள் கவனம் இருந்தது. அத்தனை நேரம் பொறுமையாய் அரிந்துக்கொண்டிருந்த அன்னம்மாவிடம் திடீர் வேகம்.

டீவி வால்யூம ஒன்னுல இருந்து ஒம்போதுக்கு ஒரே மூச்சுல ஏத்துனாப்ல.. விறுவிறுனு ஏறுது வேகம் அவகிட்ட.. கூடவே குரலும் ஆனா பார்வைய திருப்பாம..

"போ ருக்கு..போ ருக்கு... போ!!" என்று தொடங்கியவளின் குரலில் வேகம் கூடிக்கொண்டே போனது.

குழப்பங்கள் நெட்டித்தள்ள வெளியேறினேன். வெளியறையில் அப்படியே கண்ண தொறந்துவாக்குல படுத்திருந்தான் அந்த பய.. அசைவேயில்ல.. ஆனா மூச்சு மட்டும் ஏறி இறங்குனது தெரிஞ்சிது.

நடுத்தெருவுல நிக்கறேன்.. விளங்காத ஒரு விஷயம் என்னன்னா.. நல்லா பேசின அன்னம்மாக்கு என்னாச்சு?? நான் வந்ததுனாலன்னா.. நான் என்ன பண்ணேன்?? நான் இங்க வந்துருக்கதே கிட்டத்தட்ட பத்து பதினஞ்சு வருசம் கழிச்சு.. என்னால வந்ததுனா?? அப்போ சாபம்தான் என்ன இழுத்துட்டு வந்துச்சுனும் சொன்னா.. என்ன சாபம் அது?? இத்தன வருசத்துல எனக்கு தெரியாத சாபம்... அந்த வெள்ளை வேட்டி மனுசன ஹிப்னாட்டைஸ் பண்ணது யாரு?? அந்த குரல்... தோன்றிய மறுகணம் படிகிறது என் பார்வை சுற்றத்தில்..

ஏதோ யுத்த பூமியில் நிற்பதைபோலொரு உணர்வு எழுகிறது அந்த நாற்சந்தியில் நிற்க..

அத்தனை அமைதி..அசாத்திய அமைதி..

இதே திண்ணைல எத்தன தடவ உக்காந்து விளையாடிருப்பேன்.. என்று தோன்றிய மறுநொடி கண்முன் வந்து விழுந்த பிம்பத்தில் நெறிகிறது என் புருவம். அது வெத்தல ஆச்சி உருவம்!! அதுவும் இப்படிதான் ஜமீன் வீட்டு எதித்த கோயில் திண்ணையில பாக்க இடிச்சிட்டு உக்காந்துருக்கும்..

'ஒருவேள...' என்று எண்ணியது ஒரு நொடிக்கும் குறைவாகத்தான். அடுத்த கணமே முடிவெடுத்தவளாய் நடையைக் கட்டினேன்.

"ருத்வி..." என்ற குரலில் இரண்டெட்டு எடுத்து வைத்த நான் தடைப்பட புலன்கள் அத்தனையும் விழித்துக் கொண்டன..

இது... இது..அவன் குரலாச்சே!! ப்ருத்வி-ன்ற என் பேர ருத்வினு கூப்பிடுத ஒரே ஆள்னா அது என் கிருஷ்ணாதான்!!

ஏன் நேத்து கருக்கல்ல நான் வண்டிய எடுத்துட்டு கெளம்பினப்பக்கூட அவன்தானே போயே ஆகனுமா??னு சுத்தி சுத்தி வந்தான்.

அவனுக்கு என்ன விட்டு..பாக்காம இருக்கதுக்கு யோசிக்கானுல நெனைச்சேன்..

உஸ்..புஸ்ஸென சில கோப மூச்சுக்களுடன் பைக் சாவியை பிடுங்கியவனிலேயே என் கவனமிருக்க அவனோ என்னையே பார்த்திருந்தான்.

"இப்ப என்ன கிருஷ்?? இது எப்பவும் நடக்கதுதான??" என்றேன்..

அடிக்கடி இப்படிதான் பைக்கை கிளப்பிக்கொண்டு ஒரே ஒரு தோள்பையுடன் கிளம்பிவிடுவேன். நீண்ட தூர பயணத்திற்கு..

எனக்கு பிடித்தனமான ஒன்று!!

"திடீர்னு என்ன வந்துச்சு இப்போ??" என்றவனையே உற்று பார்த்த நானோ,

"என்னவோ தெரியல..போயிட்டு வந்தா நல்லாருக்கும்னு தோணுது.. உன்ன கூப்டேன் நீதான் வரல!"

"அய்யே!! உன்ன காதலிச்ச பாவத்துக்காக நானும் காட்டுலையும் மேட்டுலயும் அலையனுமாக்கும்??" என்று கேலியாய் தொடங்கியவன் பின்னர் "வேளை இருக்கு ருத்விமா.. உனக்கு தெரியும்ல.. உன்ன மாதிரி என்னால திடீர்னுலாம் எங்கயும் கெளம்ப முடியாதபடி சிச்சுவேஷன்.." என்று இழுத்தான்.

எனக்குதான் இது மொதல்லயே தெரியுமே!! அவனுக்கும் எனக்கும் இடையில ஏகப்பட்ட வித்தியாசம்!! ஆனாலும் எங்கள பிடிச்சு வைக்கறது.. இப்ப அவன் கூப்டானே.. ருத்விமானு.. அதுதான்!!

"ருத்வி..." என்றொலித்த குரலில்தான் எத்தனை வலி!?

சுற்றுமுற்றும் சுழலும் பார்வை தோல்வியை தழுவியது.

ஒருவேள..இதுவும் அம்மாவப்போல.. மாயையா?? என்ன கொழப்ப.. என்றோடிய எண்ணங்களின் நடுவே

'சரியான ஆளத்தான் அனுப்பிருக்காங்க..' என்ற வரிகள் பதிந்தன. யாரு அனுப்பினா??

நோ! ப்ருத்வி.. உன்ன கொழப்ப பாக்கறான்!! உணர்ச்சிவசப்படாத!! என்று சொல்லிக் கொண்டவளாய் முன்னேறினேன்.

"வா வாரியர்!! உன் கிருஷ்ணா உனக்காக வெய்ட்டிங்!!..நானும்..." என்ற குரலும் அதை தொடர்ந்த "ருத்வி..." என்ற தீனமான ஒலியும் காற்றோடு காற்றாய் தேய்ந்துப்போயின...

தொடரும்...
 
Top