Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

திருமதி. பாலா தியாகராஜன் அவர்கள் எழுதிய "பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்"

Advertisement

ஓம் ஸ்ரீ சாயிராம்.

இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி கதையில் எனக்குப் பிடித்த விஷயங்களை உங்களுடன் பகிர்கிறேன் ஆத்தரே.

காதலித்தப் பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணமான போதும், அவளை மறக்க முடியாமல் தவிக்கும் நாயகன் எனத் தொடங்கும் இக்கதையில் சவால்களுக்குப் பஞ்சமில்லை எனப் புரிந்தது.

நீங்கள் கதையை காலச்சக்கரத்தின் முன்னும் பின்னுமாய் நகர்த்திய விதம் அருமை.

இத்தனை ஆத்மார்த்தமாக நந்தகுமாரனைக் காதலித்த ராதா, முரளியைத் திருமணம் செய்துகொள்ள எப்படிச் சம்மதித்தாள் எனத் தெரிவதற்குள் என் மண்டையே வெடித்துவிட்டது.

ஆனால் ராதாவின் முடிவு, அவள் முடிவெடுத்த சூழ்நிலை என அனைத்தையும் மிக நேர்த்தியாக நியாயப்படுத்திவிட்டீர்கள். அதை அவள் நந்தகுமாரனிடம் நேருக்கு நேர் சொன்ன விதம் இன்னும் சூப்பர்.

ராதாவைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் மணந்துகொள்ள மாட்டேன் என்ற நந்தகுமாரின் மனவுறுதி மெய்சிலிர்க்கவைத்ததில் சந்தேகமே இல்லை. ஆனால் தக்க நேரத்தில், சம்பந்தபட்டவர்களிடம் பேசாமல் ஒத்திப்போட்ட அவன் தயக்கமும் தடுமாற்றமும் தான் அவன் காதல் கைகூடாததற்கு முக்கிய காரணம் என்று தோன்றியது.

ஆக உங்க ஹீரோவுக்கு, சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் இரண்டையும் அள்ளி அள்ளி கொடுக்கலாம்.

முரளி கதாபாத்திரம் எதிர்மறையான ஒன்று என்று கதையின் தொடக்கத்திலேயே புரிந்தது. அவன் ஏதாவது ஒரு கட்டத்தில் திருந்துவான் என்ற நப்பாசை பிரொஃபஸருக்கு மட்டுமில்லை; படிக்கும் எனக்கும் தான் இருந்தது ஆத்தரே.

பெற்றவர்கள் ஒவ்வொருவரின் அன்பிலும், கோபத்திலும், எதிர்பார்ப்பிலும், ஏமாற்றத்திலும் அவரவவர் பிள்ளைப்பாசமே பிரதிபலித்தது.

இதில் காயத்ரி முதல் சுந்தரம் வரை, தேவகி முதல் கௌரி வரை யாரையுமே குறைசொல்ல முடியாது.

மகனின் குணமறிந்தும் ப்ரொபஸர் ராதாவைப் பெண் கேட்டு வந்திருக்கிறாரே என அவர்மேல் கோபம் கோபமாக வந்தது. உணர்ச்சிப்பூர்வமாக ராதவை கார்னர் செய்கிறாரே எனவும் எரிச்சல் மண்டியது.

ஆனால் தன் எண்ணம் தவறு என ஒப்புக்கொண்டு பின்வாங்கியும், மருமகளாய் வந்தவளுக்கு மறு தந்தையாக மாறி தார்மீக ஆதரவு தந்தும், அவள் எதிர்காலத்திற்காக முற்போக்கு சிந்தனையுடம் செயல்பட்டும் என ஒவ்வொரு இடத்திலும் மனத்தைக் கொள்ளை கொண்டுவிட்டார்.

இந்தக் கதையில் என்னை மிகவும் கவர்ந்த ஜோடி என்றால், அது ஜானகியும்-ஸ்ரீராமனும் தான்.

அவர்கள் இருவரின் காதல், மோதல், செல்லச்சண்டைகள், நட்பு என ஒவ்வொன்றையும் ரசித்தேன். அழுத்தமான காட்சிகளுக்கு மத்தியில் அவர்களின் கலகலப்பான பேச்சும், பாவனையும் மனத்திற்கு இதமாக இருந்தது.

குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால், காரில் அழைத்துச் செல்கிறேன் என நந்தகுமாரன் தோழிகளை அழைத்தபோது, ஜானகியின் அதிரடி சரவெடி வம்பு படு தூள்.

பாட்டியின் கண்டிப்பு, மூடநம்பிக்கைகள் என அனைத்தும் வெகு இயல்பாக இருந்தது. காலம் கடந்த ஞானம் என்றபோதும், அவர் வயதிற்கு அத்தனை பகிரங்கமாய் மன்னிப்புக் கேட்டும் உளமாற வருந்தியதும் கண்கலங்கிவிட்டேன்.

மீனு குட்டி ஒரு சில காட்சிகளே வந்திருந்தாலும், ஜோடிப் புறாக்களுக்குப் பாலமாகத் திகழ்ந்த அவள் குறும்புகள் சூப்பர்.

நட்புக்கு இலக்கணமாய் ரேகா, மோகன், சுஜாதா மூவரின் கதாபாத்திரங்களும் ஒவ்வொரு விதமாக அழகாக இருந்தது.

தீபக்கின் மரணம் யாரைத் தண்டிப்பதற்கு என்று இறைவனிடம் கேட்கும் வண்னம் காட்சிகளை அமைத்த உங்கள் பாங்கு தனித்துவமாக இருந்தது.

கதைமாந்தர்களின் சம்பாஷணைகளை அக்ரஹாரத்தின் பேச்சு வழக்கில் படிக்க மிக மிக ரசனையாக இருந்தது. குறிப்பாக, பெற்றவர்கள் கதாபாத்திரத்தில், சுந்தரம்-காயத்ரி மற்றும் வெங்கட்ராமன்-கௌரி அவர்களின் அன்றாட வாக்குவாதங்கள் படு ஜோர்.

வாசலில் மாக்கோலம், விடியற் காலையில் பால்காரனுடன் வாக்குவாதம், கோவிலில் Love at First Sight, பேருந்துப் பயணங்கள், College Cultural Day என அனைத்தும் 80-90s காலகட்டத்தைக் கண்முன் நிறுத்தியது என்றால், சரளமான தமிழ் உரையாடல்களுக்கு இடையே மிடுக்கான ஆங்கில வசனங்களைப் படிக்க, இயக்குனர் பாலச்சந்தர் அவரின் 80-90s திரைப்படம் பார்ப்பதைப் போல உணர்ந்தேன்.

மொத்தத்தில் “செல்வி ராதாவின்” வாழ்க்கையை ரம்மியமான காதல் காவியமாகவும், “திருமதி ராதாவின்” வாழ்க்கையை விறுவிறுப்பான த்ரில்லர் கதையாகவும் என எங்களை ஒரு ரோலர்கோஸ்டரில் அழைத்துச்சென்றீர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

இன்னார்க்கு இன்னாரென்று கடவுள் எழுதிவைத்த தீர்ப்பை மாற்றும் சக்தி, பெற்றவர்கள் உட்பட யாருக்குமே இல்லை எனச் சொல்லும் விதமாக அழகிய கதை தந்த ஆத்தருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
Top