Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 6 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 6❤️‍🔥


"புதைகுழியில் வாழ்வு மூழ்க
கைகொடுத்து வாழ்வித்தாய் ஆரணனே...!!!"



காலம் கரைந்தாலும் சிலரின் கவலைகள் மட்டும் சீனத்து சுவராக நீளுமாம்.

அது போல தான் நீண்டிருந்தது ரிதத்தின் கவலை.

ஊரில் இருந்தவரை,'கோயம்புத்தூர் சென்றால் சரி செய்துவிடலாம்!' என்று நம்பிக்கையாக இருக்க.

கை இருப்பை வைத்து இங்கே வந்தால், 'கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும்!' என்கின்றனர்.

கையில் இருக்கும் தொகை சில நாட்கள் வரை மருத்துவ செலவிற்கு வரலாம். ஆனால் அறுவை சிகிச்சைக்கு 'கட்டுபடியாகாதே!'

அவ்வாறு இருக்க, எங்கிருந்து ஆசையாய் வளர்த்து, உயிராய் காத்த தாத்தாவிற்கு 'அறுவை சிகிச்சை செய்வது!?'

'எப்படி அவரின் உயிரைக் காக்கும் பணத்தை ஏற்பாடு செய்வது !?'

இதற்கே நிவேதாவின் கையிருப்பையும் சேர்த்து அல்லவா அவள் யோசியாது கொடுத்திருந்தாள்.அதையும் சேர்த்து தான் சில நாட்களை கடத்தும் முடிவில் இருந்தாள் ரிதம்.

ஆனால் இங்கோ சூழல் வேறாகி போக.
'இனி யாரிடம் கேட்பது ரேணுவின் வீட்டில் எத்தனை நாட்கள் தங்கமுடியும்!?'

அவளும், அவள் கணவன் பிரபாவும் நல்ல குணம் தான் ஆனால் ரேணுவின் மாமியார் வார்த்தையால் வாள்வீச்சு நடத்திவிடுவார்.

தன்னால் அவளுக்கும் சிக்கல் உண்டாகும். இத்தனையும் அறைக்கதவை திறந்து வெளியே வருவதற்குள் அவளின் மூளைக்குள் ஓடியது.

'கடவுளே! எப்படியாவது என் தாத்தாவை காக்கும் வழியை எனக்கு காட்டிவிடு' என்ற வேண்டுதலோடு தேக்கமாய் நின்ற அம்பக நீரை உள்ளிழுத்தவாறு மருத்துவரின் அறையை விட்டு வெளியே வந்தாள்.

தாத்தா தெளிந்த நிலையில் இருந்தவர் ரேணுவிடம், "யாருக்கு என்ன!?" என்று கேள்வி கேட்க தொடங்கி இருந்தார்.

"பாப்புமா யாருக்கு என்னடா ஆச்சு!? ஏன் ஹாஸ்பிடல் வந்திருக்கோம்!?" திடீரென தாத்தா தெளிவார் என நினையாத ரேணுவோ பதறிவிட.

அத்தகைய அவசர சூழலிலும்," தாத்தா இந்த ஹாஸ்பிட்டல்ல தான் எனக்கு இன்டர்வியூ அதுக்கு தான் வந்தோம்.
வேலை கிடசுட்டா உங்ககிட்ட சொல்லலாம்னு நினைச்சேன்.ஆனா அதுக்குள்ள உங்ககிட்ட மாட்டிக்கிட்டேன்!"
அவருக்கு ஏற்றாற் போல பதிலை வழங்கிட
அதில் திருப்தியுற்றவர் நிவேதா பற்றி கேட்க.

"அவளுக்கு திருமணம் அல்லவா அதனால் வரவில்லை!" என்று கூறி சமாளித்து வைத்தாள் ரிதம்.

"பாப்புமா அப்போ நீ செலக்ட் ஆகிட்டியா!?" பேத்தியின் மீதான அக்கறையை நிலைநாட்ட

"இல்ல தாத்தா! இன்னும் குவாலிஃபையான கேண்டிடேட்டா தேடுறாங்க போல தாத்தா" என்று தாத்தாவோடு தன் பதிலை எதிர்பார்த்திருந்த தோழிக்கும் சேர்த்து கூறிவிட்டாள்.


அவள் குரலில் மனச்சோர்வை உணர்ந்த பெரியவர்," விடு பாப்புமா இதைவிட நல்ல வேலை உன்னை தேடி வரும்பாரு!" ஆறுதல் மொழிய

ஒரு நொடி தன் வாட்டம் பொறுக்காது தனக்காய் பேசும் இந்த அன்பிற்காகவே 'எதையும் செய்யலாம்!' என்றது உள்ளம்.

மூவரும் மருத்துவமனை வாயிலை கடப்பதற்காக வாகனங்களின் வருகையை நோட்டமிட.

திடீரென ரிதமின் கரத்தை வெடுக்கென்று உதறிக்கொண்டு வாகன நெரிசல் அதிகமான இடத்திற்குள் தாத்தா நுழைந்து விட... பார்த்தவள் உயிரே அவளிடம் 'இல்லாது போனது!'

இதயம் கூட தன் துடிப்பை நிறுத்தி 'பின் துடிக்க!'

"தாத்தா!!!" என பின்னால் ஓடப் பார்த்தவளை ரேணு தன் புறமாக இழுத்து பக்கவாட்டில் வரும் வாகனத்தில் இடி படாது காத்தாள்.

வாகன நெரிசல் சற்று குறைய ஓடோடி சென்றவள் கண்டதோ ஏகன் அருகில் நின்று அன்பாய் பேசிடும் தாத்தாவைத் தான்.

தாத்தா பேசிட....அவரிடம் பேச விரும்பாது முகம் திருப்பி நின்றிருந்த ஏகனையும் கண்டவள்

"தாத்தா" அழைப்போடு நெருங்கி அவரின் உடலில் 'காயம் ஏதும் உள்ளதா!?'
ஆராய்ந்திட தெய்வாதீனமாக அப்படி ஒன்றும் நேரவில்லை அவருக்கு.

'அப்பாடா!' என்ற நிம்மதி பெருமூச்சு அடிமனதில் இருந்து வெளிவந்தது.

"தங்கம் அப்பாவுக்கு ஒன்னுமே இல்லம்மா. இங்க பாரு இது யாருன்னு தெரியுதா!? தியாகுடா. உன் தியாகு மாமா!" என்றாரே பார்க்கலாம்.

"காளை அவனே வேல் தாத்தாவின் 'மாமாவில்' கதிகலங்கினான் என்றால்; மாதுளை நிறத்தாளின் நிலை என்னவாக இருக்கும் நான் சொல்லவா வேண்டும்!"

இமை கணம் தாத்தாவை முறைத்தவன். ரிதம் புறம் திரும்பி ஏற இறங்க ஒரு பார்வை பார்க்க.

அப்பார்வையில்,'இப்படித்தான் நாடகமாடி அன்பாய் பேசி வலைவீசிடுவீர்களா!?' எனும் மறைபொருள் ஆழ்ந்திருக்க வேங்கையள் வெகுண்டெழுந்தாள்.

"ஹலோ! இந்த ஏற இறங்க பார்க்கற பார்வை எல்லாம் இங்க வேண்டாம்.இவர் என் தாத்தா இவருக்கு கொஞ்சம் மறதி.
நீங்க பார்கறதுக்கு அவரு நண்பன் போல இருக்கீங்க போல; அதனால உங்களை தேடி வந்து அவரு நண்பர்னு நினச்சு தன் உயிரைக்கூட பெருசா நினைகாம ஓடி வந்து பேசறாரு அவ்வளவு தான்.இனி அவர் உங்களை இப்படி நெருங்கினால் நீங்க எப்பவும் போல ஒதுங்கி போய்டுங்க இப்படி நின்னு முறைச்சுட்டு இருக்காதீங்க உங்களுக்கும் டைம் வேஸ்ட்!"

"எனக்கும்..." என்று சத்தமாக ஆரம்பித்து

"எனர்ஜி வேஸ்ட்!" என்பதை வாய்க்குள் முணுமுணுத்தாள்.

அவன் பதிலை எதிர்பாராது தாத்தாவின் கரத்தை பிடித்துக் கொண்டு ரேணு நீட்டிய தண்ணீர் பாட்டிலை காலி செய்த பிறகுதான் உக்ரம் தணிந்தாள்.


ஏகனிடம் இருந்து வெளியேறிய உஷ்ண மூச்சுக்காற்று ஓசோனிலே மீண்டும் ஓட்டையிடும் அளவிற்கு பெருக.

சுற்றி நின்ற உதவியாளர்களும் பாதுகாவலர்களும் தான் அதில் நொந்து வெந்து போயினர்.

'இனி இவளை பார்க்கவே கூடாது!!' எனும் சங்கல்பம் ஏற்றிட.

அவன் கோபம் தணியவிடாது பெருக செய்யவே வந்தான் அவன் மகன் அகரன்.

"அப்பா அது ரசகுல்லா தானே நம்ம வீட்டுக்கு எப்போ வர்றேன்னு சொன்னாங்க!?" ஆசையாக அரிசி பல் தெரிய சிரித்துக்கொண்டே கேட்டிருந்தான்.

பற்கள் பளிச்சிட மகன் கேட்கும் போது பிள்ளைக் கனியமுதின் அப்பழுக்கில்லா மனதிற்காக.அவன் ஒருவனின் சிரிப்பிற்காக 'எதுவும் செய்யலாம்!' மனம் மறுபரிசீலனை செய்ய மனு விண்ணப்பிக்க.

மித்ரனாய் சில நேரம், மித்ர துரோகியாக பல நேரம் மாறிமாறி வேடமிடும் தன் மனமதை கரித்துக்கொட்டியவன்.

மகனை காரில் அமருமாறு கூறியவன் தன் தலைமை உதவியாளனையும், பாதுகாவலனையும் கூப்பிட்டு ரிதமை அழைத்துக்கொண்டு வருமாறு கூறினான்.

அவளை அழைத்து வராவிட்டால் திரும்பி 'வரவே வேண்டாம்!' என்று விரட்ட.
இருவரும் தெறித்து ஓடினர் அவள் சென்ற திசை நோக்கி.


கட்டளை விதித்துவிட்டு ஏசி காற்று வாங்கிட சொகுசு காருக்குள் ஏறிக்கொண்டான் ஏகன்.

மகன் முதலில் ஏற அவன் பின்னால் ஏறி அமர்ந்தான் அப்பன் மகன் இருவருக்கும் இடையே மலை அளவு இடைவெளி வேறு.
ஒரு நொடி அந்த இடைவெளியை வெறுப்பாக பார்த்தான் ஏகன்.

இமையாடலில் தன்னை சமன் செய்து தன் வேலை சம்மந்தமான கோப்புகளை ஏகன் பரிசோதிக்க.

மூன்றுவயது பண் உருண்டையோ கைகளில் ரூபி கியூபை வைத்து உருட்டத் தொடங்கியது.

பாஸின் கட்டளையை ஏற்று சென்ற இக்னேஷ் ரிதம் முன் சென்று நிற்க.

"யாரு நீங்க என்ன வேணும் உங்களுக்கு!?" என்று மிரட்டலாய் ரேணு கேட்க

"மேடம்! ஏகன் சார் உங்க ப்ரெண்டை கூப்பிட்டு வர சொன்னாரு.
கொஞ்சம் அவங்களை கூப்பிட்டு போகட்டுமா!? திரும்பி நீங்க எங்க கொண்டுவந்து விட சொல்றீங்களோ அங்கேயே அவங்களை இறக்கி விடுறேன் மேடம்!" என்றான் அவன்.

"முதல்ல நீங்க யாரு!? நான் எதுக்கு உங்க கூட வரணும்!?" மிதப்பாய் கேட்டாள் ரிதம்.

"மேடம் நான் இக்னேஷ்!அன்னைக்கு கூட பஸ் ஸ்டான்ட்ல பார்த்தோமே.அகரன் உங்களை கேட்டு அழுதிட்டு இருக்கான் அதுனால எங்க பாஸ் உங்களை கூப்பிட்டு வர சொன்னாரு!" என்றவன் தொடர்ந்து

"நீங்க வரலைன்னா எங்க வேலையே போய்டும் மேடம்.கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க!!" என்றதோடு அருகில் நின்றவனுக்கும் கண்ணை காட்ட அவனும் கெஞ்சத் தொடங்கி...காலில் விழுகாத குறையாக மாறிமாறி வந்த இருவரும் கெஞ்சிய கெஞ்சலில் மனம் இறங்க.

அவர்களின் வேலை தன்னால் போவதை விரும்பாது தாத்தாவை ரேணுவோடு விட்ட ரிதம் இன்னும் இரண்டு மணி நேரத்தில் வீட்டிற்கு வரவில்லை எனில் காவல்துறைக்கு செல்லுமாறு இக்னேஷை பார்த்துக்கொண்டே கூற.

"கண்டிப்பா உங்களை நீங்க சொல்ற இடத்தில இறக்கி விட்டுடுறேன் மேடம்!" என்றவன் ரேணுவிடம் முகவரியை பெற்றுக்கொண்டு தன் கைபேசி எண்ணை அவளிடம் பகிர.

அவன் கொடுத்த "எண் சரியானதா!?" என்று அந்த இடத்திலேயே நின்று அழைப்பு விடுத்து அனைத்தும் 'சரி' என்று தோன்றிய பிறகுதான் ரேணு ரிதமை அவனுடன் செல்ல அனுமதித்தாள்.

வந்த வேகத்தில் காரின்கண்ணாடியை விரைந்து தட்டினாள் அவள்.

வேலையின் குறுக்கே குண்டூசி விழும் சத்தமும் பேரிரைச்சல் என கருதும் பேர்வழியின் தொழில் தவத்தை கலைக்க அவள் முயல துர்வாசனாய் நிமிர்ந்தான் ஏகன்.

காரின் கண்ணாடியை விறுவிறுவென்று இறக்கியவன் இறக்கிய வேகத்தில் கோபமாக திட்டத் தொடங்கி இருந்தான்

இது இவன் நேரம் போல.அப்பொழுது அவள் பேசியதற்கு பதில் பேசாது இருந்ததற்கும் சேர்த்து வைத்து ஆடித்தீர்த்தான் இப்போது.

"ஹேய் யூ.." என்று தொடங்கியது தான் ஆங்கில அகராதியிலும் சேர்க்கப்படாத ஏன் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலை கழகம் அறியாத சொற்களையும் சேர்த்து வசவு பாட.

திறந்த கண்ணாடி வழியே கண்களால் அலசியவள் ரூபி கியூபை இடகரத்தில் வைத்துக் கொண்டு தன்னை அன்பாய் ஆச்சர்யமாய் ஆசையாய் பார்க்கும் பிஞ்சின் முகம் கண்டு வேறெதுவும் பேசாது வந்தவழியே நடையைக் கட்டினாள்.

"ஏன் செல்கிறாள்!?" என்பது புரியாத ஏகன்

"வாட் ஹெபெண்ட் இக்னேஷ்!?" என்றான்.

"பாஸ் அது அவங்க வரமாட்டேன் சொன்னாங்க.அதுனால நாங்க அகரன் அவங்களை கேட்டு அழுகறதா சொல்லி தான் கூப்பிட்டு வந்தோம்!" பயத்துடன் ஒப்பித்தான்.

'என் பிள்ளையை பணயம் வைத்தாயா பதரே!?' எனும் கேள்வி வந்தால் கூட பரவாயில்லை.

'இங்கு பார்க்கும் வேலை இல்லை என்றால் வேறு எங்கும் எவரும் இவனுக்கு வேலை கொடுக்க முன்வர மாட்டரே!' என்ற பயம் அவனுக்கு

'உன்னோடு வந்த பாவத்திற்கு என்னையும் குற்றவாளி ஆக்கிவிட்டாயே பாவி!' என தலைமை பாதுகாவலன் முறைக்க.

உன் முறைப்பெல்லாம் என்னை ஒன்றும் செய்துவிடாது என்று மிதப்பான பார்வை பார்த்து.

தன் பாஸ் "யூ.." எனத் தொடங்கி தங்களின் நதி மூலம் ரிஷி மூலம் வரை சென்று கழுவி ஊற்றுவதற்கு முன்பாக இடையிட்ட பாதுகாவலன்

"பாஸ் ஷி வென்ட்" என்றிட

தாங்கள் மீண்டும் சென்று அழைத்தால் அவள் வருவதற்கு வாய்ப்பே இல்லாத சூழலை உண்டாக்கி இருந்தனர் இருவரும்
.

காரைவிட்டு மெதுவாக இறங்கிய அகரன் கோபத்தில் திட்டிக்கொண்டே நடந்த நங்கையின் கரம் பிடிக்க.

பிஞ்சின் மென் தீண்டலில் சுயம் பெற்று திரும்பி அகரன் முகம் கண்டாள் ரதம்.
 

Good going.....
இப்போ ரிதத்தோட தான் போகணும்னு அகரன் பிடிவாதம் பிடிச்சா இந்த ஏகன் என்ன பண்ணுவான்? கெஞ்சுவானா ? 🫢 🫢 🫢
 
சூப்பர் ஜி 👌 ஹீரோ பெரிய அப்பாடக்கரா இருப்பான் போலயே...ரிதமும் குட்டி பையனும் சேர்ந்து ஹீரோவை சுத்தல்ல விட போறாங்க.....💞💞💞💞💞
 
Good going.....
இப்போ ரிதத்தோட தான் போகணும்னு அகரன் பிடிவாதம் பிடிச்சா இந்த ஏகன் என்ன பண்ணுவான்? கெஞ்சுவானா ? 🫢 🫢 🫢
பின்னாடியே ஓட வேண்டியது தான்... தேன்துளி நன்றிகள்💐
 
சூப்பர் ஜி 👌 ஹீரோ பெரிய அப்பாடக்கரா இருப்பான் போலயே...ரிதமும் குட்டி பையனும் சேர்ந்து ஹீரோவை சுத்தல்ல விட போறாங்க.....💞💞💞💞💞
அதேதான்.... இனிய நன்றிகள்💐
 
அடப்பாவி எதோ போனாப்போவுதுன்னு வந்தா மறுபடியும் முருங்கைமரமேறுன வேதாளமாட்டம் சண்டை நிக்கறியேடா.😓😓😓
 
Top