Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ - 9

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம்- 9


ப்ரித்விக்கு சம்யுக்தாவை பார்த்ததில் இருந்தே உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தது.
காரின் ஓட்டுநர் இருக்கக்கண்டு அமைதியாக வந்தான்.

வீட்டுக்குள் நுழைந்ததும் அனைவரும் சோபாவில் அமர்ந்திருக்க .. நவநீ " ரொம்ப நல்ல குடும்பம் ..இல்லையா சத்யா ?" என்று ஆரம்பிக்க அவனால் அதற்குமேல் அடக்க முடியவில்லை.

"அப்பா மத்தவங்கள பத்தி எனக்கு தெரியாது.ஆனால் அந்த சம்யுக்தா இருக்காளே ..என் கூட தான் காலேஜ் படிச்சா .. ஒண்ணா தான் இன்டெர்ன்ஷிப் ,வேலை எல்லாம். .தேவையில்லாமல் சண்டை இழுப்பா என்கிட்டே. சரியான திமிரு புடிச்சவ அப்பா . அவளோட அக்கான்னும் போது கொஞ்சம் யோசிக்கிறது நல்லது. டேய் அண்ணா ..உனக்கு அண்ணியை பத்தி நல்லா தெரியும் தானே " என்றான் .

"டேய் ..எனக்கு அவளை நல்லா தெரியும்டா . நான் இந்த ஆபிஸ்ல சேர்ந்ததில் இருந்தே எனக்கு பழக்கம் டா. அவ ரொம்ப அமைதி . கோபமே வராதுடா . அவள் தங்கச்சிய பத்தி கூட சொல்லிருக்கா . நல்ல ஜாலி டைப்புன்னு சொல்லுவா."

"அது சரி ரஞ்சித் கண்ணா ..இன்னும் சின்ன புள்ளையாவே இருக்கியே .என்னதான் காதலிக்கிறவனா இருந்தாலும் புருஷனாவே இருந்தாலும் எந்த பொண்ணும் தன் பொறந்தவீட்டை விட்டுக் கொடுத்து பேச மாட்டாடா " என்றார் சத்யா .

"நல்லா ஜாலியா இருப்பாளா .. சரியான சண்டைக்காரி டா அவ. இதில அவங்கப்பா வேற சொன்னாரு பாரு ..ரொம்ப அடக்கம்னு. அதைத்தான் என்னால ஜீரணிக்க முடியல ." என்று பொருமினான்.

"இன்னிக்கு நீங்க மட்டும் வரதட்சணை ஏதாவது கேட்டிருந்தீங்க ..அப்போ தெரியும் அவ அடக்கமெல்லாம். கிழிச்சி தொங்க விட்டிருப்பா"

எதற்குமே டென்ஷானாகாத தன் தம்பியே இவ்வளவு டென்ஷானாகிறானே என்று ரஞ்சித் கவலை கொள்ள ..

அதை கவனித்த நவநீ " நம்மளுக்கு தான் வரதட்சணை வாங்கறதெல்லாம் பிடிக்கதேடா. நீயும் சொல்லி தானே கூட்டிக்கிட்டு போன? அப்போ அதையே அந்த பொண்ணு சொன்னா மட்டும் எப்படிடா தப்பாகும்? அதோட குடும்பம்னா ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி தான் இருப்பாங்க .. வரப்போற மருமக அவங்கப்பாம்மா எல்லாரும் தன்மையானவங்களா இருக்காங்க . இந்த பொண்ண பத்தியும் நீ சொல்றது எவ்வளவு சரின்னு தெரியல ப்ரித்வி. ஆனால் ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ. எந்த பொண்ண பத்தியும் எடுத்தோம் கவுத்தோம்னு பேசக் கூடாதுப்பா " என்றவர் ரஞ்சித்தை நோக்கி "நீ கட்டிக்க போற பொண்ண பத்தி மட்டும் யோசி ரஞ்சித். வேற எதுவும் முக்கியமில்லை" என்றார்.

இங்கே சம்யுவும் பொங்கி வழிந்து கொண்டிருந்தாள்." ஏன் அக்கா ..உனக்கு வேற ஆளே கிடைக்கலையா ? அந்த வானரத்தோட அண்ணனையா லவ் பண்ணுவ ? "

இடைபுகுந்தார் தனுஜா "யாரடி வானரங்கிற?"

" வேற யாரை ? எல்லாம் அந்த பனைமரம் ப்ரித்வியை தான். ஆளு மட்டும் தான் வளந்துருக்கான் .அறிவு வளரல "

"ஏய் சம்யு ! யாரையும் இப்படி மரியாதை இல்லாமல் பேசக் கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல ? அந்த பையன் உனக்கு அத்தான். அந்த மரியாதையோடு பேசு " என்று கண்டிக்க

"அம்மா ப்ளீஸ் .. அத்தானா அவன்? சரியான சாத்தான் ..அதுவும் குட்டி சாத்தான் இல்ல பெரி….ய சாத்தான்.காலேஜ்ல தான் தினமும் இவன் முகத்தை பாக்க வேண்டிய தலையெழுத்து. காலேஜ் முடிச்சப்போ எவ்வளோ சந்தோசப் பட்டேன்னு தெரியுமா ? இவனை இனி பாக்க வேண்டியிருக்காதுன்னு . கடைசில இவனும் எங்க சார் கிட்டயே வந்து சேந்துருக்கான்.. தெனம் தெனம் இவன் மூஞ்சிய பாக்க வேண்டியிக்கேன்னு நானே வருத்தப் பட்டுக்கிட்டு இருக்கேன்.இதில இவன் அத்தானோட தம்பியா ?" என்றவள் வானத்தை நோக்கி "ஓஹ் மை கடவுளே ! என்ன இப்படி சோதிக்கிறியே ? இதில இந்த சாத்தானை அத்தான்னு கூப்புட சொல்லி என்ன எல்லாரும் சோதிக்கிறாங்களே " என்று புலம்ப .. நடு மண்டையில் நச்சென்று ஒரு குட்டு விழுந்தது .

வேறு யார் தனுஜா தான்.

" மாப்பிள்ளை நல்லவரா இருக்காரு .. அவர் அப்பாவும் நல்ல மாதிரி தான் . அந்த அம்மாவையும் பொண்ணையும் பார்த்தாதான் கொஞ்சம் யோசனையா இருக்கு . இருந்தாலும் அம்ருவுக்கு பிடிச்சிருக்கு அந்த பையன ..இது நாம் பாக்கிற சம்பந்தமா இருந்தால் பரவாயில்லை ..ஒவ்வொருத்தரையும் பத்தி யோசிக்கலாம் . அம்ருவும் மாப்பிள்ளையும் .. ரெண்டு பெரும் ஒருத்தர ஒருத்தர் விரும்பறாங்க ..மத்த விஷயமெல்லாம் நாம கொஞ்சம் அனுசரிச்சு போகணும் சம்யு. நீ தயவு செஞ்சு கல்யாணம் முடியற வரை வாயே தொறக்காதேடி " என்று விட .. அதோடு வாயை மூடிக் கொண்டாள் சம்யு.




பி அண்ட் பி அஸோஸியேட்ஸ் நிறுவனம்.

முதல் 'பி ' ... பானுமதி ! புகழ்பெற்ற குடும்ப வக்கீல் . அவரது துணைவர் பாஸ்கரன் ..இரண்டாவது ‘பி’! கிரிமினல் லாயர் . இருவருமாக தொடங்கியது தான் இந்த நிறுவனம்.

இதில் பல சட்ட வல்லுநர்கள் பணியாற்ற கடைசியாக சேர்ந்தது நம் ப்ரித்வியும் சம்யுவும் தான்.

சம்யுவின் தாத்தா ராமானுஜம் பானுமதியின் தந்தையின் உற்ற நண்பர் ..அதனாலேயே சுலபமாக சம்யுவிற்கு இந்த வாய்ப்பு கிடைத்துவிட ..பானுமதிக்கும் சம்யுவை மிகவும் பிடிக்கும்.அவளது அறிவு ,துறுதுறுப்பு , சட்டென்று யோசித்து முடிவெடுக்கும் தன்மை , வார்த்தைகளில் இருக்கும் நிதானம், தெளிவு எல்லாமே அவரை மிகவும் கவர்ந்தது. சம்யு ஒரு நல்ல வக்கீலாக பிற்காலத்தில் உருவெடுப்பாள் என்று அவ்வபோது அவருக்கு தோன்றும் . அதையே தன் கணவர் பாஸ்கரனிடமும் அடிக்கடி கூறி வருகிறார் அவள் இன்டெர்ன்ஷிப்பிற்காக வந்த நாளில் இருந்தே.

நவநீ தன் நண்பரின் நண்பரான பாஸ்கரனிடம் ப்ரித்வியை சேர்த்துவிட ..நவநீயே சமூகத்தின் முக்கிய புள்ளி .. அரிமா சங்கத்தில் அடிக்கடி பாஸ்கரன் பார்த்திருக்கிறார் என்பதால் யோசிக்காமல் ப்ரித்வியை வேலைக்கு சேர்த்து கொண்டார் .

நாளை பாஸ்கரன் ஒரு முக்கியமான வழக்கில் ஆஜராகிறார். அதற்காக ஜுனியர்கள் அனைவரும் மாங்கு மாங்கென உழைத்துக் கொண்டிருக்க .. இவர்கள் இருவர் மட்டும் ஒருவரை ஒருவர் முறைத்தபடி அமர்ந்திருந்தனர்.

அந்த அலுவலகத்தில் முன்னறை ஒன்று பெரிதாக இருக்கும். வெளி நபர்கள் காத்திருப்பதற்காக. அதை தாண்டி உள்ளே வந்தால் பெரிய ஹால் ஒன்று சுற்றிலும் கணினிகளும் அதை ஒட்டிய இருக்கைகளுமாக இளம் வக்கீல்கள் வேலை செய்ய வசதியாக இருக்க.. ஹாலின் இருபுறமும் நூலக அறையும் , முக்கிய ஆவணங்கள் பாதுகாக்க ஒரு அறையும் இருக்கும். ஹாலை தாண்டி உள்ளே சென்றால் இரண்டு பெரிய அறைகள் இரண்டு 'பி 'க்களுக்கும் உண்டு.

முகத்தை உம்மென்று வைத்து சம்யு அமர்ந்திருக்க ..
" ஹேய் சம்யு . ஏன் சோகமா இருக்க ? தேர்வு முடிவுகள் வந்தாச்சுன்னு கேள்விப்பட்டேன். மார்க் எதுவும் கம்மியாயிடுச்சா ? அதுக்கெல்லாம் வருத்தப்படாத! உனக்கிருக்கிற திறமைக்கு நீ நல்லா ஷைன் ஆவே" என்று தானே கேள்வி தானே பதிலாய் ஷாந்தினி பேசிக் கொண்டே போக...

இடைமறித்தாள் சிவரஞ்சனி.
இருவரும் சம்யுவுக்கு சில வருடம் மூத்தவர்கள்.

"வேண்டாம் சாந்த்ஸ் ... காரணத்தை கேட்ட காண்டாகிடுவே "

"அப்படி என்ன நடந்துச்சு?"

"இவதான் காலேஜ் ஃபர்ஸ்ட்"

"அப்படியா ..கங்கிராட்ஸ் சம்யுக்தா. அப்புறம் வொய் சோகம் ? டோன்ட் வொரி..பீ ஹாப்பி "

"அதில தான் வில்லங்கமே.. ப்ரித்வியும் இவளும் ஒரே மார்க் தான்."

"ஓ ஓ .." என்று நீளமாக 'ஓ' போட்டவள் "எலியும் பூனையா இருந்துக்கிட்டு சொல்லி வச்சு மார்க் வாங்குறீங்க போலவே " என்றாள் சாந்தினி.

"அது மட்டும் இல்லை ஷாந்த்ஸ் .முக்கியமான விஷயமே இனிதான் இருக்கு .." என்றவள் "சொல்லு சம்யு " என்று சம்யுவை முடுக்கிவிட ..


“ ஷாந்திக்கா .. எங்கக்காவை பொண்ணு பாக்க வந்தாங்கன்னு சொன்னேனே ..யார் தெரியுமா ..இந்த வானரம் இருக்கே அதோட அண்ணன் தான்.. லவ் மேரேஜா போச்சு .இல்லைனா இப்போவே சம்பந்தம் பேசறதை நிறுத்திடுங்கன்னு சொல்லியிருப்பேன்" என்று

சம்யு மேடை ரகசியம் போல் சொல்ல ..

ப்ரித்வி எதிர்புறத்தில் தான் அமர்ந்திருந்தான் .
"ஆமாமா .. டேவிட் அண்ணா .. இந்த பஜாரியோட அக்கானு தெரிஞ்சிருந்தா எங்கண்ணனுக்கு மேரேஜ் கௌன்சலிங் குடுத்து முதல்லயே கலைச்சு விட்டிருப்பேன்.. அவன் வாழ்க்கை தப்பிச்சிருக்கும். இப்போ வசமா சிக்கிட்டான்." என்று பதில் பேச ..
அதுவரை ஜாடையாக பேசிக் கொண்டிருந்தவள் பொங்கிவிட்டாள் " ஏய் .. யாரை பாத்து பஜாரின்னு சொல்றே ?"

"உன்னைத்தான் சொல்றேன்னு இந்த அறைல இருக்க எல்லாருக்கும் தெரியும்."

“நான்லாம் தப்புநடக்கிறதை பார்த்தா பொங்கிறவ. உன் அம்மாவும் தங்கையும் போல இல்லை. அவ்வளவு துச்சமா எங்களையும் எங்க வீட்டையும் பாக்கிறாங்க.. எவ்வளவு பெருந்தன்மை ! வரதட்சணை வேண்டாமாம். ஆனால் இருக்கிறதிலேயே பெரிய நட்சத்திர விடுதியில ஃபங்ஷன் வைக்கணுமாம். அதுவும் எங்க செலவுல” என்று நொடித்தாள்.

இவர்களின் சத்தத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் கணினியிலும் கோப்புகளிலும் இருந்து பார்வையை திருப்பி இவர்களை வேடிக்கை பார்க்க .. இது அடிக்கடி நடப்பது தான் !

பானுமதி அன்று வந்திருக்கவில்லை.
பாஸ்கரன் மட்டும் உள்ளே அமர்ந்திருக்க ..அவரது அறைக்கு கண்ணாடி சுவர்தான்.. மறைப்புக்காக இருந்த வெனீஷியன் பிளைன்ட் ஏற்றி விடப்பட்டிருக்க ..

கண்ணாடி வழி இருவரையும் பார்த்தவர் .. வழக்கமாக இவர்கள் அடிக்கும் கூத்து தான் என்பதால் ஒரு பெருமூச்சை வெளியேற்றியபடி தன் வேலையை கவனிக்கலானார்.

பானுமதியோ அப்போது தான் உள்ளே நுழைந்தவர் ஒரே பார்வையில் இருவரும் சண்டையிட்டுக் கொள்வதை புரிந்து கொண்டார்.

சிவாவை அழைத்தவர் அவளுக்கு ஒரு வேலை கொடுக்க "வா சம்யு.. நம்ம ரெண்டு பேரையும் மேம் ஒரு க்ளையண்ட்டை பார்த்து வர சொல்லியிருக்காங்க " என்று இவளை அழைத்து கிளம்ப .. இவளுக்கும் அங்கிருந்து கிளம்பினால் போதும் என்றிருந்தது.

"சரிக்கா வாங்க போவோம் ..இங்கேயே இருந்தா என் பிபி ஏறிடும் போலருக்கு" என்றபடி கிளம்ப..
"ம்ம் ம்ம் கிளம்பு கிளம்பு காத்து வரட்டும் .ஆளை பாரு சரியான காட்ரேஜ் பீரோ மாதிரி ” என்றவனை முறைத்தபடி இவள் நின்றுவிட "ஏய் சம்யு ..வா இப்போ நேரமாச்சு " என்று இழுத்து சென்றாள் சிவரஞ்சனி.
 
Top