Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ -27

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம்- 27

சற்று நேரம் வெளியே வீசும் காற்றையும் புயலையும் பார்த்தபடி அமர்ந்தவர்கள் "இன்னும் வேலு வரலையே ? ப்ரித்வி " என்றாள் சம்யு.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகியிருக்க அவன் திரும்பியப்பாடாக இல்லை.

"வழியில் ஏதாவது தடை இருக்கலாம். மரங்கள் ஏதாவது விழுந்து கிடைக்கலாம்..இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்தவன் அவன் .எப்படியும் வந்திடுவான். " என்று கூறும்போதே பிள்ளை முழித்து அழத்தொடங்கியது.

உள்ளே சென்று குழந்தையை தூக்கி வந்தவள் லேசாக அணைத்து தட்டிக் கொடுக்க அப்படியும் அழுகை நிற்கவில்லை.

"பசிக்குது போல ப்ரித்வி. என்ன கொடுக்கிறது?" என்றபடி வெளியே வர ..சமையலைக்கு சென்று பால் காய்ச்சி எடுத்து வந்தான் ப்ரித்வி.

முதலில் தெரியாத முகங்களை பார்த்து அழுத பிள்ளை ..பால் பாட்டிலை பார்த்து சிறிது சமாதானமானது.

குழந்தையை மடியில் சாய்த்தபடி சம்யு பாலை புகட்ட ... நல்ல பசியில் இருந்த பிள்ளை மடமடவென்று குடித்தது. அதை பார்க்கையில் என்னவோ செய்தது சம்யுவுக்கு. இவளது தாயும் என்னானாள் என்று தெரியவில்லை.உதவ போன தந்தையும் திரும்பி வரவில்லை. என்ன செய்வாள் இந்த சிறு பிஞ்சு ? எப்படி இந்த பிள்ளையை சமாதானப் படுத்த போகிறோம் ? இந்த இரவு எப்படி கடக்க போகிறது என்று உள்ளூர ஒரு பயம் ஊறியது.

அந்த அறையிருளில் ஒரு பக்கத்தில் இருந்த லேசான விளக்கொளியில் முகத்தில் தாய்மை மின்ன தேவதையாய் தெரிந்தவளை ரசித்தபடி இருந்தான் ப்ரித்வி. மனதிற்குள் தங்கள் பிள்ளையை அவள் கொஞ்சிக் கொண்டிருப்பதுபோல் ஒரு பிம்பம்.

'இப்போ தான் சண்டையே சமாதானமாகியிருக்கு. அதுக்குள்ள குழந்தை வரைக்கும் போய்ட்டியா ப்ரித்வி?' தனக்குத்தானே கேட்டுக் கொண்டவன் குழந்தை பாலை அருந்தி முடித்ததும் அவளிடம் இருந்து வாங்கினான்.

இப்போது இருவர் முகங்களையும் உற்று பார்த்த பிள்ளை .. பார்த்த முகங்கள் தான் என்பதில் சற்றே அமைதியானது.

பிள்ளையை தூக்கி சென்று கழிவறையில் விட்டு இயற்கை கடன்களை கழிக்க உதவ ..அதுவும் நல்ல பிள்ளையாய் சொன்னபடி கேட்டது.

வேலையாள் பிள்ளை என்று எந்த வித்தியாசமுமில்லாமல் அவன் செய்த செயல்கள் அவளை அசைத்தன.
சத்யபாமா இங்கிருந்தால் அவ்வளவுதான்.. அந்தஸ்து தராதரம் என்று ஒரு சொற்பொழிவே நடைபெற்றிருக்கும். தங்கள் குடும்பத்தையே எப்படி பேசினார் ?

அவன் தோளின் இதத்தில் தலை சாய்த்தபடி கண்கள் சொருக வந்த குழந்தையை கண்டவள் தன் அறையின் கட்டிலில் படுக்க வைத்து இருபுறமும் தலையணை வைத்து அணைகட்ட .. மீண்டும் உறக்கத்தை தொடர்ந்தது பிள்ளை.

சற்று நேரம் சோபாவில் அமர்ந்தவர்கள் தங்கள் பிள்ளை பருவ கதைகளையும் அம்ரு ரஞ்சித்தின் திருமணம் குறித்தும் பேசியபடி இருக்க ..நேரம் போனதே தெரியவில்லை. இடையிடையே இயல்பாக அவளுக்கு பழங்கள் நறுக்கி கொடுத்து உண்ண வைத்திருந்தான்.

எதிரெதிரே அமர்ந்திருந்தவர் எப்போது அருகருகே வந்தனர் என்று அவர்களுக்கே தெரியவில்லை.

"ப்ரித்வி உன்கிட்ட ஒன்னு கேக்கணும் " என்றாள் தயக்கமாய்.

கேள்வியாய் ஏறிட்டவனிடம் "நீ உண்மையாவே இன்னிக்கு குடிச்சியா?" எனவும் அவள் முகத்தில் இருந்த சஞ்சலம் ஏதோ செய்ய ..அவளது கரத்தை பற்றியவன் "நான் இது வரைக்கும் குடித்ததில்லை . இனிமேலும் குடிக்க மாட்டேன். ஐயாம் எ டீடோட்டலர் ..ஓகேவா ?" என்று சிறு பிள்ளைக்கு சொல்வது போல் சொல்லவும் அவள் முகம் பல்ப் எரிய விட்டது போல் ஒளிர்ந்தது.

மெல்ல அவனது கரம் அவளை சுற்றி வளைக்க அதன் வெம்மையில் தன்னை பறிகொடுத்தவளாய் சம்யு அமர்ந்திருக்க ..இருவரின் மோன நிலையை கலைப்பதுபோல் குழந்தையின் அழுகுரல் கேட்டது.

இருவரும் ஒருவரை ஏறிட்டு பார்க்க கூச்சம் கொண்டு, உள்ளறைக்கு சென்று பார்க்க குழந்தை கட்டிலில் எழுந்து அமர்ந்து அழுது கொண்டிருந்தது.

ஓடி சென்று பிள்ளையை தூக்கினாள் சம்யு ..கட்டிலில் ஈரம் படர்ந்திருக்க ..உடைகளும் தொப்பலாக நனைந்திருந்தன. அவளிடம் இருந்து குழந்தையை வாங்கியவன் அதன் உடைகளை களைந்துவிட்டு டவல் கொண்டு துடைத்துவிடவும் சமாதானமாகியது. எப்படியும் பசிக்கும் என்று நினைத்தவனாய் ஒரு பிரெட் துண்டை பாலில் நனைத்து கொடுக்க நல்ல பிள்ளையாய் உண்டாள் அச்சிறுமி.

டவலைக் கொண்டு நன்கு சுற்றி தன் அருகில் அமர்த்திக்கொள்ளவும் அதன் முகத்தில் ஒரு சிங்கார புன்னகை!

அதை பார்த்ததும் சம்யுவுக்கும் எல்லாம் மறக்க அவளும் புன்னகைத்தாள்.

இப்படியே எப்படி உட்கார என்று நினைத்தவனாய் எழுந்த ப்ரித்வி "சரி சம்யு. ரொம்ப டல்லா இருக்கு இந்த சூழல் ..லெட்ஸ் சியர் அப்." என்றவன் தன் அலைபேசியில் பாடல்களை ஓடவிட ..அனைத்தும் துள்ளலிசை பாடல்கள்.. ஒவ்வொன்றாக கேட்க கேட்க இவளுக்குள்ளும் உற்சாகம் பொங்க ஆரம்பித்தது.

சட்டென்று ஒரு பாடலுக்கு ப்ரித்வி எழுந்து ஆடவும் பார்த்து கொண்டிருந்த பிள்ளையும் கைதட்டி சிரிக்க ஆர்மபித்தது.

அப்பிள்ளையை தன் தோளில் தூக்கி ஆட அதன் உற்சாகம் கரை புரண்டது. சட்டென்று குழந்தையை சோபாவில் விட்டவன் இவளது கைபிடித்து இழுக்க ..எதிர்பார்க்கவில்லை அவள் ..தன் கைதொட்டு இழுப்பான் என்று.

முதலில் தனித்தனியாக ஆடியவர்கள் எப்போது கைகோர்த்து ஆட தொடங்கினர் என்றும் அறியவில்லை ..எப்போது அணைத்தபடி ஆடத்தொடங்கினர் என்பதும் புரியவில்லை .. அந்த இருளும் குளிரும் துணை செய்ய ..ப்ரித்வியின் காதல்தீ , மெல்ல குளிர் காய்ந்தது.

ஒரு ஏகாந்த நிலை இருவருக்கும் அவன் கரங்கள் பதிந்த இடங்களெல்லாம் ஏதோ ஒரு நூதன உணர்வு போங்க ..உடல் சிலிர்க்க நின்ற சம்யுவை கலைத்தது வெளியில் இருந்து டமார் என்ற சத்தத்தோடு ஏதோ ஒன்று விழும் சப்தம்.

தங்களுக்குள் பின்னிக் கொண்டிருந்த மாயவலை கட்டறுந்துவிட வெளியே எட்டி பார்த்தான் ப்ரித்வி..பின்கட்டிலிருந்த ஒரு பெரிய மரம் .. பின்புறமிருந்து ஷெட்டின் மேல் விழுந்திருக்க ... ஷெட்டும் பாதி உடைந்திருந்தது.

அந்த சத்தத்தில் குழந்தை வீறிட்டு அழ தொடங்கியது. காற்றுமேலும் வலுத்து வருவது புரிந்தவனாய் ...அதனை அணைத்து சமாதானப்படுத்தியவன்.. மறுபடி கொஞ்சம் பாலை புகட்ட மடியிலேயே குழந்தை உறங்கிவிட்டது.

"எங்கே தூங்க வைக்கிறது? ஏற்கனவே என்னோட பெட் நனைந்துவிட்டது ப்ரித்வி.”

"நீயும் பாப்பாவும் கீழே இருக்கும் அறையில் படுத்துக்கிறீங்களா ?” என்று கேட்க ..

'அய்யய்யோ ..இந்த புயலும் மழையும் அறையிருட்டுமான சூழலில் தனியாகவா ? ' என்று உள்ளம் பதற .. “இல்லை ப்ரித்வி ..இங்கேயே அடஜஸ்ட் பண்ணி படுத்துக்கலாம்” என்றாள் சம்யு .

"என் அறையில் படுக்க வைப்போம்" என்று உள்ளே அழைத்து சென்றவன் ..கட்டிலில் குழந்தையை படுக்க வைத்தால் தாங்கள் படுக்க இடமிருக்காது என்று யோசித்தவனாய் நிற்க... "தூளி கட்டி விடுவோமா ப்ரித்வி ?" என்று கேட்டாள் சம்யு.

வேறு அறைக்கு சென்று தன் தாயின் புடவை ஒன்றை எடுத்து வந்தவன் அதனை தொட்டிலாக கட்டிவிட ,பிள்ளையை அதில் கிடத்தினாள் சம்யுக்தா. அணைவாக இருந்த அந்த புடவையின் இதத்தில் பிள்ளை சுகமாக உறங்கிவிட .. தன் தலையணையை எடுத்துக் கொண்டு ஹாலில் இருந்த சோபாவில் சென்று படுக்க போனாள் சம்யு.

எப்போதும் போல் படுத்தவுடன் உறங்கிவிட அறை வாயிலில் இருந்து இவளை பார்த்தபடி நின்ற ப்ரித்விக்கு தான் உறக்கம் அண்டுவதாகஇல்லை .
எப்படி தன் மனதில் இப்படி ஒரு மாற்றம் ? பார்த்த நாளில் இருந்தே அவளுடன் வம்பும் சண்டையும் தான் .. எதற்கு சண்டை என்று தெரியாமலே சண்டையிடுவார்கள்.

நண்பர்கள் கூட சொல்லத்தான் செய்வார்கள் சம்யு நல்ல டைப் என்று . ஆனால் இவன் ஏற்று கொண்டதே இல்லை.

சரியான திமிர் என்று தோன்றும். ஏதோ ஒரு பிடிவாதம் அவளிடம் இறங்கி போக கூடாதென்று. அவளை புரிந்து கொள்ள முயலவுமில்லை. இந்த சில தினங்களில் அவளை ஒரு உறவினளாக பார்க்கும் போது அவள் மேலான பார்வை மாறிவிட்டது.

அவளது அறிவுபூர்வமான சிந்தனை , குடும்பத்தின் மீதான பாசம் , விட்டுக் கொடுத்தல் , துணிவு , நேர்மை என்று எல்லாமே அவனை கவர்ந்து இழுக்க ..இந்த சில நாட்களுக்குள் எத்தனை மாற்றம் தன்னுள் ?

எந்த கணத்தில் இந்த மாற்றம் வந்தது? எந்த நொடியில் காதல் புகுந்தது என்று தன்னையே கேட்டுக் கொண்டவனுக்கு பதில்தான் இல்லை.

எப்படியோ இது மனதிற்கு மிக இதமான ஒரு மாற்றமாக இருக்க ..வெளியில் புயல் வீசிக் கொண்டிருக்க மங்கையின் நினைவுகள் அவன் மனதில் தென்றலாய் வலம் வந்து கொண்டிருந்தன.

அண்ணனின் திருமணம் முடிந்ததும் அவளிடம் காதலை சொல்லிவிட வேண்டும் . பின் திருமணம் அவளுடனான வாழ்வு என்று நினைத்தபடி அவன் உறங்கிவிட ..

திடீரென்று யாரோ உலுக்கி எழுப்புவது போல் இருக்க ..திடுக்கிட்டு எழுந்தவனுக்கு எதிரில் கையில் மொபைல் டார்ச்லைட் வெளிச்சம் முகத்தில் விழ நின்றவளை பார்த்ததும் பழைய ப்ரித்வி திரும்பிவிட்டான்.

"என்ன இது காஞ்சனா மாதிரி வந்து நிக்கிற? என்னை பயமுறுத்த பிளான் போட்டியா ?"

"நீயே ஒரு பிசாசு .உன்னை போய் பயமுறுத்த முடியுமா? திடீர்னு லைட் அணைஞ்சிடுச்சி . இருட்டா இருக்கேன்னு உன்னை எழுப்பினா , கிண்டலா பண்ற ?"

"இருட்டுன்னா பயம்னு சொல்லு " என்று அவளை வாரியவன் .. "என்னனு பாத்துட்டு வரேன் " என்று வெளியே கிளம்ப ..பின்னோடு வந்தாள் சம்யு... அதுவும் அவனது ஜெர்கின் முனையை லேசாக பற்றியபடி.

தன் உடை இழுப்படுவது உணர்ந்து திரும்பி பார்க்க ..தாயின் முந்தானையை பற்றியபடி நிற்கும் பிள்ளையின் முகபாவனையோடு நின்றாள் சம்யுக்தா.

அப்படியே அவளை அள்ளிக் கொள்ளும் ஆவல் எழுந்ததை மறைத்தபடி "இருட்டுன்னா பயம்தானே! சரியான பயந்தாகொள்ளியா இருந்துட்டு சவுண்டு மட்டும் விடுவியே " என்று அவளை கலாய்த்து தள்ளினான்.

அவனருகே வந்து மெல்லிய குரலில் "இந்த மலைக்காட்டுக்குள்ள.. தன்னந்தனியா இருக்க ஒரு பங்களா ..அதுல புயலும் மழையுமா காத்து வீசும்போது ..ராத்திரி நேரத்தில ..மரமெல்லாம் வேரோட சாயுது ..செல்போன்ல சிக்னல் இல்லை.. திடீர்னு ஜன்னலெல்லாம் அடிக்குது .. எல்லா விளக்கும் அணைஞ்சிடிச்சி. இதிலேருந்து என்ன தெரியுது? " என்று கேட்க ..

"நீ அதிகமா பேய் படம் பாப்பேன்னு தெரியுது" என்றவன் அவள் முறைக்கவும் .. ஜெனெரேட்டரின் மெல்லிய சப்தம் கேட்காததை அனுமானித்து " ஜெனெரேட்டரில் டீசல் தீர்ந்திருக்கும். அதை நிரப்பிவிட்டால் விளக்கு எரியும். மத்தபடி புயல் மழையை நிறுத்துற சக்தியெல்லாம் எனக்கில்லைம்மா " என்று வெளியே வந்தான்.

அவன் கலாய்த்தாலும் பரவாயில்லை என்று அவன் பின்னோடு வந்தாள் சம்யு.
மழை நின்று விட்டிருக்க ... எங்கும் ஒரு அமைதி..மெல்ல டார்ச் ஒளியில் இருவரும் வீட்டின் பின்புறம் செல்ல பின்புற ஷெட் மரம் விழுந்து சேதமாகியிருந்தது.

வெறும் ஆஸ்பேஸ்ட்டாஸ் கூரை வேயப்பட்ட அது அந்த பெரிய மரத்தின் பாரத்தை தாங்காமல் உடைந்திருக்க .. சம்யு விளக்கை பிடித்துக் கொள்ள ,உடைசல்களை மெல்ல அகற்றினான் ப்ரித்வி .ஒரு வழியாக எல்லாவற்றையும் அகற்றி விடவும் பார்த்த சம்யுவிற்கு அதிர்ச்சி .. இருந்த ஒரு டீசல் கேனும் உடைந்து கிடைக்க எரிபொருள் எங்கும் சிந்திக் கிடந்தது.

"அச்சச்சோ" என்றான் ப்ரித்வி.

"ஆமாம் ..இப்போ வருத்தப்பட்டு என்ன செய்ய ? எல்லா கேனையும் குடுத்தனுப்பும்போதே யோசித்திருக்கணும். இப்போ என்ன செய்றது?"

லேசாக அவள் தலையில் குட்டியவன் "நான் அதுக்காக வருத்தப்படவில்லை. கேனை உள்ளே எடுத்து வைக்கவில்லையே என்று தான் வருத்தப்படுகிறேன். மத்தபடி அவர்களுக்கு தந்ததாலேயே மற்றவையாவது உபயோகப் பட்டிருக்கும்." அவன் சொல்வது உண்மைதான் என்பதால் அமைதியாக இருந்தாள் சம்யு. அவளது கவலை இப்போது வேறு ! காலை வரை இருட்டிலும் குளிரிலும் இருக்க வேண்டுமே !

உடைந்த கேனின் அடியில் சிறிது எரிபொருள் இருக்க அதனை ..அருகில் ஒரு மக் இருக்க அதில் ஊற்றிக் கொண்டான். வீட்டு மராமத்து பணிகளின் போது அங்கு சேமித்து வைக்கப்பட்ட சில பிளைவுட் பலகைகள் இருக்க அவற்றையும் எடுத்துக் கொண்டவன் சம்யுவை அழைத்து உள்ளே வந்தான்.

அவனது அறைக்குள் பழங்காலத்து பாணியில் ஃபயர் பிளேஸ் இருக்க கட்டைகளை அடுக்கியவன் லேசாக எரிபொருளை ஊற்றி பற்றவைக்க தீ பற்றிக் கொண்டது.

மெல்ல குளிரும் இருளும் விலக மனம் திடமுற்றவளாய் தீயின் முன் ஒரு இருக்கையை போட்டு அமர்ந்தாள் சம்யுக்தா. குழந்தையும் தூளியில் அமைதியாக உறங்கி கொண்டிருந்தது.சற்று நேரம் அவளை பார்த்தபடி தன் கட்டிலில் அமர்ந்திருந்தவன் "இன்னும் எவ்வளவு நேரம் உட்க்காந்திருக்க போற சம்யு ?”

"ஹால்ல ரொம்ப குளிருது ப்ரித்வி"
என்ன செய்ய என்பதாய் அவனை நிமிர்ந்து நோக்கியவள் அவன் சைகையால் படுக்கையின் மறுமுனையை காட்ட "நோ " என்றாள் தலையை இடமும் வலமும் ஆட்டியபடி.

"அன்னிக்கு ட்ரைன்லயும் இதே டிஸ்டன்ஸ்ல தான் படுத்திருந்தோம் . ஞாபகமிருக்கா ?"

"நடுவுல கேப் இருந்ததே "

"இப்பவும் நடுவுல கேப் இருக்கிறதா நினைச்சிக்கோ " என்றபடி அவளருகே வந்தவன் மெல்லிய கிசுகிசுப்பான குரலில் அவளை போலவே "தனிமையான பங்களா.. இருட்டான அறை.. மெல்ல எரியும் தீயின் ஒளி ..இரவின் தனிமை .. அழகான ஆணின் அருகாமை .. இதெல்லாம் பாத்து பயமா இருக்கா?" என்று அவளை சீண்ட வீறு கொண்ட சிங்கமாய் எழுந்தவள் சென்று கட்டிலில் படுத்துக்கொள்ள ..தன்னிடத்தில் வந்து படுத்தவனுக்கோ தலை கால் புரியவில்லை. முதுகு காட்டி படுத்துக் கொண்டவளை ரசித்தபடி விழித்திருந்தான்.
 
Top