Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ -18

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம் -18


பிளைட்டிற்குள் அமர்ந்த அம்ருவுக்கு மிகவும் வெறுமையாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது.

முதல் முறையாக தன் குடும்பத்தை பிரிந்து இவ்வளவு தூரம் செல்கிறாள்.

இந்த இரண்டு வருடங்களில் ரஞ்சித்தையும் பாராமல் இவ்வளவு நாட்கள் இருந்ததில்லை. வாரஇறுதியே இவளுக்கு கசந்துவிடும்.. திங்கட்கிழமை எப்போது வரும் என்று காத்து நிற்கும் இரு ஜீவன்கள் அந்த அலுவலகத்திலேயே இவர்களாகத்தான் இருப்பார்கள் .

இப்போது தற்காலிகமாக என்றாலும் ..எல்லாரையும் பிரிந்து இருப்பது அவ்வளவு சுலபமாக இருக்கும் என்று தோன்றவில்லை.

அம்ரிதாவுக்கு எப்போதும் யாராவது கூட இருக்க வேண்டும்.. யாராவது அவளை கவனிக்கவும், அவள் மீது அக்கறை கொள்ளவும் அவளை கடிந்து கொள்ளவும் கொஞ்சி கொள்ளவும் என்று யாராவது இருக்க வேண்டும்.

இவளது அருகில் இருந்த யஷ்வந்த்தை திரும்பி பார்த்தாள்.

அவன் மும்முரமாக மொபைலில் எதையோ ஆராய்ந்து கொண்டிருக்க .. அவனுக்கு அந்த புறம் அமர்ந்திருந்த சந்தோஷ் உறங்கவே ஆரம்பித்திருந்தான்.

சன்னல் புறம் பார்வை திருப்ப கீழே நீலக்கடல் பறந்து விரிந்து தெரிந்தது. எங்கு காணினும் நீலக்கடல் மட்டுமே! கரையென்று ஒன்றே தென்படவில்லை.

பொங்கி பாய்ந்து கொண்டிருந்த அலைகளை பார்க்கையில் இன்னுமே ஒரு அலைப்புறுதல் ஏற்பட்டது மனதில்.


இந்த வாய்ப்புக்காக எவ்வளவு பாடுபட்டோம்? எல்லாரையும் சமாதானப் படுத்தி ..ஈடு கொடுத்து .. எல்லாம் செய்து இப்போது விமானமும் ஏறியாயிற்று. ஒரு நாள் பொழுதில் உலகின் மறு பகுதிக்கு சென்று விடுவாள். இந்த வாய்ப்புக்காக அலுவலகத்தில் பாதி பேர் போட்டி போட..அது தனக்கு வாய்த்திருக்கும் மகிழ்ச்சி கூட இல்லை. ரஞ்சித் முழுமனதாக சம்மதிக்கவில்லை என்று புரிந்தது.

ஓரளவு சரியாகிவிட்டான் என்று நினைக்கும்போது .. இப்படி ஒரு சண்டை ..அதுவும் பிரிவின் கடைசி நிமிடம்!

அவன் குடும்பத்தாருக்கும் அத்தனை சந்தோஷமில்லை என்பதும் புரிந்தது.
எப்போதும் தனக்கு துணை நிற்கும் தந்தை கூட இப்போது வேறு மாதிரி யோசிக்கிறார்.அது ஏனோ ஒரு சோர்வை கொடுத்தது.
தாயும் தங்கையும் மட்டுமே கூட நிற்கின்றனர்.

மனதை ஒருமுகப்படுத்தி 'எண்ணி துணிக கருமம் ' என்பதாக இந்த விஷயத்தில் இறங்கியாயிற்று ..இனி மறு யோசனை என்பது கூடாது என்று மனதை திடப்படுத்தியவளாய் நிமிர்ந்து அமர்ந்தாள்.

ஓரக்கண்ணால் அவளையே கவனித்துக் கொண்டிருந்த யஷ்வந்த் மெல்ல மெல்ல அவளிடம் தன்மையாய் பேசத்தொடங்கினான்.

அவனது சூது அறியாத மங்கையவளோ அவனது கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தாள்.
யு எஸ் சென்று இறங்கும் வரை அவ்வபோது அவளை கவனிப்பதுவும் .. பேச்சு கொடுப்பதும் ..அவளுக்கு வேண்டியது பார்த்து செய்வதுமாக வந்தான். கலிபோர்னியா சென்று இறங்கும் போது இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டிருக்க .. தயக்கம் நீங்கி அவனிடம் பேசத் தொடங்கியிருந்தாள் அம்ரு.

வீட்டிற்கு வந்த ரஞ்சித் நேராக சென்று தன் அறைக்குள் அடைந்துவிட ..அவனது நிலையை உணர்ந்தவராக நவநீ அமைதியாக இருந்தார்.

சத்யாவோ பொங்கி கொண்டிருந்தார்." என் பையனை விட இந்த பொண்ணுக்கு அப்படி என்னங்க வேலை முக்கியம்? அவன் எப்படி சோர்ந்து போய் வர்றான் பாருங்க "

"வேலையும் முக்கியம் தான் சத்யா .. இதே அந்த பொண்ணு கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம கம்பனிலேயே ஒரு பொறுப்பிலே இருக்கான்னு வை.. அவளை இப்படி ஏதாவது வேலைக்காக வெளியூருக்கு அனுப்பமாட்டோமா? அதே போல தானே இது?"

"ஓ.. அப்படி வேற உங்களுக்கு எண்ணம் இருக்கா ? இவளுக்கு நம்ம கம்பெனில பொறுப்பு குடுக்கணுமா ? யாருக்கோ கீழே கை கட்டி வேலை பாக்கும்போதே இவ்வளவு தெனாவட்டு ? இதில இவ கையில பொறுப்பை கொடுத்தா என்ன ஆட்டம் ஆடுவா "

"என்ன சத்யா இது ? நீயும் ஒரு சாதாரண மாமியார் மாதிரி பேசற ? நீ தினமும் ஆபிசுக்கு வர்றதில்லைன்னாலும் அப்பப்போ வந்து எல்லா விஷயமும் கவனிக்கதானே செய்யிற ? அதே போல அந்த பொண்ணும் ஒரு பொறுப்பெடுத்து பாத்தா நமக்கு நல்லதுதானே "

"இன்னும் நம்ம பசங்களே பொறுப்பெடுக்கல .. இதில நீங்க மருமகள் பொறுப்பெடுக்கறத பத்தி பேசறீங்க . எல்லாம் நேரம் " என்று சலித்துக் கொண்டவர் எழுந்து சென்று விட்டார்.

ரஞ்சித் காலையில் அறைக்குள் சென்று முடங்கியவன் ..மாலை வரை வெளியே வரவில்லை.

நவநீ தன் இளைய மகனை அழைத்தவர் .."கொஞ்சம் அண்ணனை என்னன்னு பாருப்பா" என்று சொல்லிக் கொண்டிருக்க ..அந்நேரம் ஸ்ரீஜா தன் கணவனோடு உள்ளே நுழைந்தாள்.

"என்னாச்சும்மா ?" என்று தன் தாயை நோக்கி கேட்க .. சத்யாவோ சும்மாவே ஆடுவார் .. இதில் சலங்கை கட்டி விட மகள் வேறு வந்துவிட்டாளே.. இனி தாங்குமா என்று நினைத்தவராய் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டார் நவநீ.

"வா ஸ்ரீ ..வாங்க மாப்பிள்ளை " என்று வரவேற்ற சத்யா .."வேறென்ன ஸ்ரீ . உங்கண்ணன் ஒரு அழகியை பாத்து வச்சிருக்கான் இந்த வீட்டு மருமகளா ..அவ அடிக்கிற கூத்து தான் எல்லாம் "

"ஏன் மா ? என்னாச்சு? ஒரு வாரம் தானே துபாய் போயிருந்தோம் ..உங்ககிட்ட சரியா பேச முடியலை ..அதுக்குள்ள என்னாச்சு?"

"உங்கப்பாவையே கேளு . நான் ஏதாவது சொன்னா என் மேல பாய்வாங்க " என்று தன் மாப்பிள்ளையின் முன் பாவம் போல பேசினார்.
என்னாச்சு என்பதாய் தந்தையின் முகம் நோக்கிய மகளிடம் "பெரிய விஷயம் ஒன்னும் இல்லை ஸ்ரீ ..அம்ரிதாவுக்கு அவ ஆபிஸ்ல ஆன்சைட் வாய்ப்பு வந்திருக்கு ..மூன்று மாதம் யு எஸ்ஸில் ப்ராஜக்ட் .அதுக்காக போயிருக்கா " எனவும் ஸ்ரீயின் முகத்தில் சீற்றம் பொங்க..

"என்னப்பா சொல்றீங்க ? கல்யாணத்துக்கு மூணு வாரம் தான் இருக்கு .இன்விடேஷன் கூட அடிச்சாச்சு . கல்யாணத்தன்னிக்கு மட்டும் வந்திட்டு போவாளா ?" என்று கொதித்தாள்.

தனக்கு சரியான துணை கிடைத்ததில் உற்சாகமான சத்யா .."வந்து போறதா ? நீ வேற ? கல்யாணத்தையே தள்ளி வச்சாச்சு . உங்கப்பாவும் அண்ணன்களும் சேர்ந்து அவங்க சொல்றதுக்கெல்லாம் தலையாட்டுறாங்க . அவளை வழியனுப்பிட்டு வந்தவன் தான் உங்கண்ணன் இன்னும் ரூமை விட்டு வெளியே வரல. என்னையும் எதுவும் கேக்க கூடாதுன்னு உங்கப்பா தடுக்கிறார்"

"என்னம்மா சொல்றீங்க ..கல்யாணத்தை தள்ளி வச்சாச்சா ?" என்றவள் நேராக தன் அண்ணன் அறையை நோக்கி புயலாக செல்ல ."ஸ்ரீ கொஞ்சம் நில்லும்மா. அவனை இப்போ தொந்தரவு செய்ய வேண்டாம் " என்றபடி நவநீ பின்னால் செல்ல .. மற்றவர்கள் பின் தொடர்ந்தனர்.

அறை கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவள் இருட்டாக இருந்த அறையின் விளக்கை ஆன் செய்ய ..நெற்றியின் மீது கையை வைத்து விட்டதை பார்த்தபடி படுத்திருந்த மகனை பார்த்ததும் சத்யாவுக்கு தாய்மனம் துடித்தது.

"ரஞ்சித் கண்ணா " என்று அவனருகே சென்று அமர அப்போதுதான் சூழ்நிலை உறைத்தவனாய் எழுந்து அமர்ந்தவன், பொறுப்புள்ள அண்ணனாக தங்கையையும் அவள் கணவனையும் வரவேற்றான்.

" என்ன அண்ணா இது? கல்யாணத்தை தள்ளி வைக்க ஏன் ஒத்துக்கிட்டீங்க ? இந்த குடும்பத்தோட கௌரவத்தை விட வேலை தான் முக்கியமா அவங்களுக்கு ? நம்ம கிட்ட வேலை பாக்கிறவங்களே எத்தனை ஆயிரம் பேர்? நீங்க ரெண்டு பெரும் இன்னொரு இடத்தில இருந்து வேலை பாக்கணுமா ? அதனாலே தானே இவ்வளவு சிக்கல் ? பேசாம ரெண்டு பெரும் ரிசைன் பண்ண வேண்டியதுதானே அண்ணா "

"நம்ம குரூப்லயே பத்து கம்பெனி இருக்கு ..இதில நீயும் உன் வருங்கால மனைவியும் வேற கம்பெனில போய் வேலை பாக்கறதும்.. அந்த வேலைக்காக கல்யாணத்தையே தள்ளி வைக்கிறதும் கொஞ்சம் கூட நல்லா இல்லை அண்ணா . இட்ஸ் அப்சர்ட்!"

அவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த ரஞ்சித் தன் தங்கையை நேராக பார்த்தான். "ஸ்ரீ ..எனக்கு சாப்ட்வெர் பீல்டுல தான் ரொம்ப இன்டரஸ்ட். அது மட்டும் இல்லை நம்ம கிட்ட அந்த கம்பெனி இல்லை.. நாமளே சொந்தமா ஒரு மென்பொருள் நிறுவனம் ஆரம்பிக்கணும் என்பது என் கனவு…அதுவும் சாதாரணமா இல்லை ..பெரிய அளவில்! அதுக்கு இந்த அனுபவம் எனக்கு உதவும். அதுக்காகத்தான் இந்த வேலையில சேர்ந்தேன். எப்போ என்னால தனியா பண்ணமுடியும்னு எனக்கு நம்பிக்கை வருதோ அப்போ கட்டாயம் ரிசைன் பண்ண தான் போறேன். பட் திஸ் இஸ் நாட் தி டைம் . நான் யாருங்கற பேக்ரவுண்ட் கூட யாருக்கும் தெரியாது. நான் ஒரு சாதாரண எம்பிளாயியா தான் இருக்கேன். அம்ரிதாவும் என்னை மாதிரி தான்.. வேலையில நல்லா தன்னுடைய திறமையை காண்பிச்சு முன்னேறுறவ .அவளுக்கு இந்த வாய்ப்பு கெடச்சிருக்கப்போ நான் அதை தடுக்க முடியாது. சொல்லப்போனா கல்யாணத்துக்கு அப்புறம் பிரிஞ்சிருக்கிறதை விட.. கல்யாணத்தையே கொஞ்சம் தள்ளி வைக்கிறது எவ்வளவோ பெட்டர் . ப்ளீஸ் எல்லாரும் புரிஞ்சிக்கோங்க" தீர்மானமாய் சொன்னவனை எதிர்த்து கேள்வி கேட்க முடியவில்லை யாராலும்.

மனதுக்குள் வலி இருந்தாலும் தன்னவளை விட்டு கொடுக்க மனமில்லை அவனுக்கு.

நீ சொல்வதை ஆதரிக்கிறேன் என்பது போல் தமையனின் கரத்தை அழுத்தி விட்டு வெளியேறினான் ப்ரித்வி.

"சரிப்பா ..அதுக்காக இப்படி சாப்பிடாம ரூமுக்குள்ளேயே அடைஞ்சிருந்தா எப்படி? வந்து எங்களோடு டின்னர் சாப்பிடு" என்று நவநீ அழைக்க .." ஆமாம் மச்சான் ..வாங்க " என்று ஸ்ரீயின் கணவன் ராகவ்வும் அழைக்க, அவர்களோடு உணவறைக்கு சென்றான் ரஞ்சித்.


அவ்வளவு நேரம் அவன் பேசியதெல்லாம் காலையில் இருந்து அவனுக்கு அவனே சொல்லிக் கொண்ட சமாதானங்கள் தான். அவனுக்கு முழு மனதாக அம்ரிதாவின் முடிவை ஆதரிக்க முடியவில்லை.
ஆனாலும் அவளை விட்டுக் கொடுக்கவும் மனதில்லை.
ராஜினாமா செய்யவும் சம்மதமில்லை .

இப்போது பேப்பர் போட்டுவிட்டால் அதை அலுவலகமும் வீடும் வேறு மாதிரி தான் பார்க்கும். தான் மணக்க போகும் பெண்ணிற்கு தன்னை விட அதிக மதிப்பு கிடைத்ததை தாங்க முடியாமல் இவன் வேலையை விட்டு நின்றுவிட்டான் என்று சக ஊழியர்கள் நினைக்க கூடும் ..அது வேறு விதமாக அம்ருவின் காதுகளிலும் விழக்கூடும் .அதுவே இருவருக்குள் ஏற்கனவே லேசாக விழுந்திருக்கும் விரிசலை அதிகப்படுத்தலாம்.

வீட்டிலோ ஏற்கனவே தாய்க்கும் தங்கைக்கும் இந்த திருமணத்தில் அத்தனை பிரியமில்லை. இவன் வேலைக்கு போவதும் பிரியமில்லை. எல்லாம் சேர்ந்து இவர்களின் திருமணத்திற்கு தடையாக வரலாம் என்று மிக சரியாக யோசித்துக் கொண்டிருந்தான்.

ஆனாலும் தாயறியாத சூலுண்டா? மகன் உள்ளுக்குள் மருகுவதும் அம்ருவுக்கும் அவனுக்கும் இடையில் லேசான ஒரு விரிசல் விழத் தொடங்கியிருப்பதும் தாய் தந்தை இருவருக்குமே நன்கு புரிந்தது.

நவநீயோ அதை போக்க முயற்சிக்க .. சத்யாவோ மேலும் அவ்விரிசலை எப்படி பெரும் பிளவாக்குவது என்று கணக்கிட்டுக் கொண்டிருந்தார்.
அதற்கு வசதியாக மகளும் வந்து சேர்ந்துவிட அவருக்கு மனம்திடப்பட்டது . எப்படி அவன் மனதை கலைப்பது என்று யோசனையில் இறங்கினார்.
 
Top