Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ -16

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம் - 16

ராஜீவ் காந்தி மருத்துவமனை .
குடும்ப வன்முறையில் பாதிக்கப் பட்ட அப்பெண் சிகிச்சை முடிந்து முழுக்க குணமடைந்துவிட்டாள்

அவளை சென்று பார்த்து சில விவரங்கள் சேகரிக்கவும் அவளது மருத்துவ அறிக்கைகளை வாங்கவும் சிவாவையும் சம்யுக்தாவையும் பணித்திருந்தார் பானுமதி.


அவர்களும் வந்து பார்க்க இப்போது அப்பெண்ணும் சற்று தெளிவாக இருந்தாள். இவர்களிடம் சிரித்து பேசினாள்.

"இப்போ நல்லாயிருக்கேன் கா .கால்ல எலும்பு உடைஞ்ச இடம் கூட வலி இல்லை.வாக்கர் வச்சு நடக்கிறேன் . டாக்டர் வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க " என்று சந்தோஷப்பட்டாள்.

"ஆமாம்மா ..என் பொண்ணு முகத்தில இத்தனை மாசம் கழிச்சி இப்போதான் சந்தோஷம் தெரியுது." என்று அவளது தாயும் ஆமோதித்தாள்.

"முதல்லயே நீங்க கண்டிச்சிருந்தா இந்த அளவுக்கு வந்திருக்காதுல்ல அம்மா ?" சம்யு கோபமாய் கேட்க .

"எப்படிம்மா கேக்கிறது? என்ன இருந்தாலும் மருமக பிள்ளை .. கொஞ்சம் விட்டு தானே புடிக்கணும். கல்யாணத்துக்கு முன்னாடி கொஞ்சம் அப்பப்போ தண்ணியடிப்பான்னு சொன்னாங்க ..சரி இந்த காலத்தில யார் குடிக்கலைன்னு நெனச்சோம் . பார்த்தா முழு நேரமும் அதுதான். அவங்கப்பன் வேற பெரிய ரௌடியாம் அந்த ஏரியால ..நாங்கல்லாம் கிராமத்து ஆளுங்கம்மா . எங்க ஊருக்குள்ள எப்படிம்மா பொண்ண வாழாம வச்சிருக்கறது ? எல்லாரும் நாக்கு மேல பல்ல போட்டு பேசுவாங்க. கடைசி வரை இவளுக்கு வாழாவெட்டின்னு பேரு மட்டும் தான் மிச்சம். கொஞ்சம் இவ விட்டு குடுத்து போனா சரியாயிடுவான்னு நெனச்சோம். இப்படி உயிருக்கே உலை வைப்பான்னு நெனக்கல ம்மா "

"உயிர் போறது தான் கஷ்டமா ? தினமும் உடலாலயும் மனசாலயும் பணக்கஷ்டத்துலயும் உங்க பொண்ணு தவிச்சிருக்கா ..அதைவிட நமக்கு உதவி செய்ய யாருமே இல்லைன்னு அவநம்பிக்கையோட போராடியிருக்கா ..இதெல்லாம் உயிர் போறத விட பெரிய கஷ்டம்மா. இனி எக்காரணத்தை கொண்டும் உங்க பொண்ண விட்டுக் கொடுக்காதீங்க " என்றாள் சிவா .

சம்யுக்தாவுக்கும் மனம் தாளவில்லை " காலம் எவ்வளவோ மாறிடிச்சும்மா ..இப்பவும் புருஷன் எப்படி இருந்தாலும் அந்த பொண்ணு சகிச்சிக்கணும்னு ஏன் நினைக்கிறீங்க ..பொண்ணை பெத்த நீங்களே அப்படி நெனச்சா ..அப்புறம் மத்தவங்க என்ன நினைப்பாங்க ? இவளோட கணவன் குடிக்கிற குடிக்கு அவன் இன்னும் எத்தனை வருஷம் தாங்குவானு கூட தெரியல ..அப்பவும் உங்க பொண்ணு தான் கஷ்டப்படணும்..அதைவிட அவளுக்கு மேல படிக்கிறதுக்கோ ஏதாவது தொழில் கல்வியோ குடுத்தா அவள் வாழ்க்கை நல்லா இருக்கும். இப்போ எத்தனையோ தொண்டு நிறுவனங்கள் இருக்கு இந்த மாதிரி உதவிகள் செய்ய . அவ சொந்த கால்ல நிக்கட்டும் .அதுக்கு பிறகு வேற நல்ல மாப்பிள்ளை பாருங்க ."

இவர்கள் தேவையான விவரம் சேகரித்துவிட்டு , வீட்டிற்கு போனாலும் வெகு ஜாக்கிரதையாக இருக்கும்படியும் ..தனியே எங்கும் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்திவிட்டு கிளம்பினர்.


இவர்கள் பேசிக் கொண்டே வண்டி நிறுத்தியிருந்த இடத்திற்கு வர .. அந்நேரம் வேறு யாரும் இல்லை. அன்றொருநாள் இவர்களை மிரட்டி சென்ற அந்த பெண்ணின் மாமனார் தன் சகாக்களோடு வந்துவிட்டான். இவர்கள் வண்டியை எடுத்து கிளம்ப தயாராக ..வழி மறைத்தபடி நின்றனர் அவர்கள் நால்வரும்.

"ஏய் வக்கீலு.. அன்னிக்கே உன்னை எச்சரிச்சேன் ..மறுபடியும் எதுக்கு வந்தே ? ஒழுங்கா இந்த கேச விட்டுட்டு வேற வேலையை பாருங்க " என்று மிரட்டலாய் சொல்லவும்.

நேரடியாக பதிலேதும் சொல்லாமல் "இங்க பாருங்க ..நாங்க கேஸ்ல ஆஜர் ஆக மாட்டோம் .பெரிய வக்கீல் தான் ஆவாங்க. நாங்க அவங்க கிட்ட வேலை பாக்கிறவங்க அவ்வளவுதான். இப்போ வழிய விடுங்க. எங்க கிட்ட பேசி எந்த ப்ரயோஜனமுமில்லை." என்று பொறுமையான குரலில் சொன்னாள் சம்யு. இப்போது இவனை கோபப் படுத்தாமல் இருப்பதே நல்லது என்ற முடிவில்.

சற்றே ஒதுக்குப்புறமான அந்த பார்க்கிங் இடத்தில் பெரிதாக ஆள் நடமாட்டமில்லை. எப்படியாவது இங்கிருந்து நகர்ந்து மக்கள் நடமாட்டமுள்ள இடத்திற்கு சென்றுவிட்டால் பயமில்லை என்று கணக்கிட்டவள் அவர்கள் வண்டியை பிடித்தபடி நிற்கவும் வண்டியை விட்டு மெல்ல நகர ஆரம்பித்தாள்.

"சரி நீங்க அவங்க கிட்ட வேலை பாக்கிறவ தானே ..நீ போய் சொல்லு .. " என்றான் ஒருவன்.

"அவங்க கிட்ட நாங்க சொன்னா கேக்க மாட்டாங்க . ஒன்னு அந்த பொண்ணு சொல்லணும். இல்லை நீங்களே உங்க வக்கீலோட நேர்ல வந்து பேசணும் "

இதற்குள் ஒருவன் இடையிட்டான்.. "சும்மா ஏண்டா பேசிக்கிட்டிருக்கீங்க ..இதுங்க ரெண்டு மூஞ்சிலயும் கோடு போட்டு விட்டா அந்தம்மா தானா கேட்டுட்டு போகுது. ஏய் குமாரு ..நீ அந்த மூஞ்சில கீசு .நான் இத பாத்துக்கிறேன் " என்றபடி கத்தியை எடுத்து இவர்களை நோக்கி பாய .. சட்டென்று ஒரு வலிய கரம் குமாரின் கரத்தை பற்றியிருக்க .. சம்யுவும் தன்னை நோக்கி பாய்ந்தவனை தான் பயின்ற தற்காப்பு கலையை பயன்படுத்தி கீழே வீழ்த்தியிருந்தாள்.

சிவா ஒரு கணம் தன்னை நோக்கி பாய்ந்தவனை கண்டு அரண்டு போய் நிற்க ..ப்ரித்விதான் அவனை பிடித்திருந்தான் .

பின்னோடு ஓடி வந்த டேவிட் மற்ற இருவரையும் சமாளிக்க ஆட்கள் வந்துவிட்டதை அறிந்து ஒரு வழியாக அவரகள் ஓடி விட்டனர் .

ப்ரித்வியும் டேவிட்டும் வேறு ஒரு கேஸ் விஷயமாக பிரேத பரிசோதனை அறிக்கை பற்றி விவரம் சேகரிக்க வந்திருந்தனர்.

சிவரஞ்சனி அதிர்ச்சியில் ஒரு ஓரமாக இருந்த பெஞ்சு ஒன்றில் சென்று அமர்ந்து தலையை பிடித்துக் கொண்டாள். டேவிட் அவளை ஆசுவாசப் படுத்த ப்ரித்வி சம்யுவை நோக்கி போனான்.

சம்யு கோபத்தில் முகம் சிவக்க நிற்க .."அப்பா ரொம்ப பயமாயிருக்கே .. தாயே காளி மாதா! கொஞ்சம் மலையிறங்கும்மா. இப்படி யாராவது சந்தேகப்படும்படி பின்னால் வந்தா இப்படி ஒதுக்குபுறமான இடத்திலயா நிப்பாங்க ? உடனே வேறுபக்கம் ஓட வேண்டியதுதானே .அவங்க வந்து சுத்தி வளைக்கிற வரைக்கும் என்ன செஞ்ச ? " என்று கிண்டலாய் ஆரம்பித்து கோபமாய் முடித்தான் ப்ரித்வி.

"என்ன ? உனக்கும் கொஞ்சம் வேணுமா ?" என்று சட்டை கையை மடித்து விடுவது போல் பாவனை செய்ய .."எப்பா ரொம்ப பயமா இருக்கு மேடம். என்ன விட்டுடுங்க மேடம் " என்று போலியாய் கெஞ்சியவன் "எங்களுக்கும் கராத்தே எல்லாம் தெரியும்..வந்தவர்களுக்கும் தெரிஞ்சிருந்தா என்ன செய்வ?"

"ஹலோ ..நாங்க ப்ரவுன் பெல்ட்டு . எங்களை சாச்சுக்க முடியாது. நீ வரலேன்னாலும் அடிச்சு தொரத்தியிருப்பேன் " என்று வீம்பாய் சவால் விட ..

சட்டென்று அவள் எதிர்பாராத கணத்தில் அவளை பின்னிருந்து இறுக்கி கைகளையும் கால்களையும் முடக்கிவிட ..சற்று நேரம் திணறி விட்டாள் சம்யு.
"பாரு உன்னால பிளாக் கூட பண்ண முடியல ..இதில அடிச்சு தொரத்துவியா..வீண் வீறாப்புக்காக ஏதாவது சொல்லாதே. இப்போ கூட நாலு பேரா வந்தா அவங்களுக்கு சண்டையே தெரியாதுன்னாலும் உன்னால சமாளிக்க முடியாது. அந்த நேரத்தில ஓட்டம் பிடிக்கிறது தான் புத்தி சாலித்தனம் " என்று அவன் பேசிக் கொண்டே போக பாவையவளிடமோ பேச்சுமில்லை அசைவில்லை.

அவன் அவளை இறுக்கி பிடித்திருந்த விதம் ஏதோ செய்ய ..செயலற்று நின்றுவிட்டாள் சம்யு .

அப்போதுதான் அவளது முகத்தை பார்த்தவன் அதில் சொல்ல முடியாத ஒரு உணர்வு ஓடுவதை அறிந்து அவள் விழிகளில் ஆழமாக நோக்கினான்.

அவள் விழிகளில் தெரிவது என்ன ? ஒரு கணம் குழம்பிப் போய் நின்றவன் அவளை மெல்ல விடுவிக்க மௌனமாய் நகர்ந்து சென்றாள் சம்யு. ஓரமாக அமர்ந்திருந்த சிவாவிற்கு டேவிட் தண்ணீர் கொடுத்து குடிக்க வைத்துக் கொண்டிருக்க இவளும் சென்று தண்ணீர் பாட்டிலை வாங்கி தொண்டையில் சரித்துக் கொண்டாள்.

அந்த கயவர்களின் செயலை விட ப்ரித்வியின் தீண்டல் அவளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

அவளையே பார்த்தபடி தன் சட்டையை இழுத்து விட்டு சரி செய்து கொண்ட ப்ரித்வியின் கண்களுக்கு தன் வெள்ளை சட்டையின் இடது தோள்பட்டையின் மேல் இருந்த ரத்தக்கறை தென்பட ... சட்டென்று ஒரு பதட்டம் அவனுக்குள்!

வேக வேகமாக பார்வையால் சம்யுவை ஆராய .. அவளது தோளில்ஒரு சிறு வெட்டு ! லேசாக ரத்தம் கசிந்தவாறு இருக்க .. அவளது கருப்பு நிற உடையில் முதலில் தெரியவில்லை .. இப்போது ஆராய்ந்து பார்க்கும் போது நன்கு தெரிந்தது.

உடை கிழிந்து ஒரு கோடாக ரத்தம் கசிந்திருக்க .. அதை பற்றிய பிரஞை அற்றவளாய் அவள் நின்றிருக்க பார்த்தவனுக்கோ கோபம் உண்டானது. அப்படி என்ன தொழில் ஆர்வம் என்றாலும் தன் நலனை கவனிக்காமல் போவதா என்று . அதே கோபத்தை அவளை மீது காட்டவும் செய்தான் .

"சம்யுக்தா ..இங்கே பாரு உன் மேல ..காயம் பட்டிருக்கு. அது கூட தெரியாம நிக்கிற ?" என்று கடிய ..அப்போதுதான் தன் தோளில் இருந்த காயத்தை உணர்ந்தவளாய் அதை லேசாக தடவி பார்த்தாள் சம்யு.

"சின்ன காயம் தான் ..டீ.டீ ஒன்னு போட்டால் சரியாயிடும் "என்று அவள் அசட்டையாய் சொல்ல மேலும் கோபம் பொங்கியது ப்ரித்விக்கு. உண்மையில் அவளுக்கு அவன் அத்தனை நேரம் அணைத்து பிடித்திருந்ததில் மனம் சமைத்திருந்தது..வலி கூட உணரவில்லை அவள்!

"ஓஹ்..இதென்ன போரில் பெற்ற விழுப்புண்ணு..வீரத்தின் அடையாளம்னு நெனச்சியா? இல்லை.. அவன் என்ன உனக்காக தனியா கத்தியை ஸ்டெரிலைஸ் பண்ணி கொண்டு வந்தான்னு நெனச்சியா ? எத்தனை அழுக்கு இருந்ததோ ..எவ்வளவு துரு ஏறி இருந்ததோ .. " என்று கூறிக் கொண்டே வந்தவன் அவள் முகத்தில் திகில் பரவுவதை பார்த்ததும் வழக்கமான கேலியும் கிண்டலும் மீண்டுவிட “ செப்டிக் ஆகி ,சீழ் பிடிச்சி ,ரத்தக்கண்ணீர் எம் ஆர் ராதா மாதிரி ஆகப்போற .. ஒரு வேளை பாய்சன் தடவி இருந்தான்னா.. நீ வீட்டுக்கு போறதுக்குள்ள .." என்றவன் நாக்கை நீட்டி தலையை சாய்த்து இறப்பது போல் பாவனை செய்ய ..

"போடா லூசு " என்று அவனை திட்டியபடி .."சிவாக்கா நான் உள்ளே போய் டீ.டீ போட்டுட்டு வரேன். கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க " என்றுவிட்டு செல்ல ..

"என்னது லூசா ? நான் லூசா ? இருடி உன்னை கவனிச்சிக்கிறேன் " என்று வழக்கமான டாம் அண்ட் ஜெரி சண்டையை ஆரம்பிக்க .. அவ்வளவு நேரம் நடந்த களேபரத்தை மறந்து சிரிக்க தொடங்கினார்கள் சிவாவும் டேவிட்டும்.

அம்ரிதாவை அவள் வீட்டில் விட்டு தன் வீடு வர .. வரவேற்பறையில் அமர்ந்திருந்த தன் வருங்கால மாமனார் மாமியாரைக் கண்டு தூக்கி வாரி போட்டது ரஞ்சித்திற்கு . இன்னும் அவன் தான் எதையுமே வீட்டில் சொல்லவில்லையே !

"நீங்க எதுக்கு வந்தீங்க .. ஐ மீன் எப்போ வந்தீங்க ?" என்று இவன் ஜெர்க்காக ..

வெள்ளந்தியாக பதிலளித்தார் மோகன் ."இப்போ தான் மாப்பிள்ளை வந்தோம். அம்ரு வெளிநாடு போய் முக்கியமான ப்ராஜக்ட் செய்ய வாய்ப்பு வந்திருக்கில்லையா ? அதை உங்க அப்பாம்மா கிட்ட சொல்லி அனுமதி வாங்க வேண்டாமா ..அதுக்காகத்தான் வந்தோம்" எனவும்... அப்படியே திருப்பி அனுப்பிவிடுவோமா என்று நினைக்க அதற்குள் வேலையாள் பழச்சாறுடன் வந்து "அம்மா பத்து நிமிசத்தில வரேன்னு சொன்னாங்க " என்று சொல்லி சென்றாள்.

இனி வேறு வழியில்லை.. அம்மாவிடம் நாமே சொல்லி விடுவது நல்லது என்ற முடிவுக்கு வந்தவனாய் தன் பெற்றோரை நோக்கி சென்றான் ரஞ்சித் .

சத்யா வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தார் ..

"கல்யாண தேதியை மாத்தணுமா ? அதெல்லாம் முடியாது ரஞ்சித் . அழைப்பிதழ் கூட அச்சடிச்சி வந்தாச்சு ..நாளைக்கு குலதெய்வம் கோயிலுக்கு போகலாம்னு முடிவு பண்ணிருக்கோம் இப்போ வந்து அம்ரிதா பாரின் போகப்போறான்னு சொல்றே. இதெல்லாம் முன்னாலேயே யோசிக்க வேணாமா? இப்போ போயே தீரணும்னு என்ன இருக்கு ? பேசாம இந்த ஆன்சைட்டும் வேண்டாம் வேலையும் வேண்டாம்னு சொல்லிட சொல்லு அம்ரிதாவை. பேப்பர் போட சொல்லு அவளை " என்று வழக்கமான அதிகார குரலில் அவர் கூறியது வெளியே வரவேற்பறையில் அமர்ந்திருந்த மோகனுக்கும் தனுஜாவுக்கும் நன்றாகவே கேட்க ..

"அம்மா ப்ளீஸ் ..கொஞ்சம் அமைதியா பேசுங்க அவங்களுக்கு கேக்க போகுது " என்று கெஞ்சலாய் கூறினான் ரஞ்சித்.

அவர்களுக்கு கேட்க வேண்டும் என்று தானே அவர் பேசியது.

"பாத்தியா ..அந்தம்மா கோவிச்சுக்கிறாங்க .."என்று மோகன் அங்கலாய்க்க ..

"அவங்க நிலையில இருந்து அப்படி தான் பேசுவாங்க .நாம தான் நம்ம பொண்ணு மனசுல இருக்கறத பேசணும் மோஹி. புரிஞ்சிப்பாங்க " என்று கணவரை சமாதான படுத்தினார் தனுஜா .


சத்யபாமாவிற்கு உள்ளூர சற்று சந்தோஷம் தான் ..திருமணம் தள்ளிப் போவதில் ..கணவரும் மகன்களும் தன்னை சமாதானப் படுத்தியதில் திருமணத்திற்கு அரைமனதாக ஒத்துக் கொண்டவர் தானே ? இப்போது தானாகவே தள்ளிப் போவது நல்லதுக்காகத்தான் என்று தோன்றியது.

சற்று நேரம் முரண்டியவர் பின் ஒத்துக்கொள்ள மூன்று மாதம் கழித்து நாள் பார்ப்பது என்று முடிவெடுத்து ஜோசியரை அழைக்க ..அவரோ ஆறு மாதம் கழித்து தான் என்றுவிட்டார். இப்போது சத்யாவிற்கு இன்னமும் குஷியாகிவிட்டது.
 
Top