Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 116

Advertisement

SHALU shalu

Well-known member
Member
அனைவரும் சந்தோஷமான மனநிலையில் இருக்கும் போது அவர் மட்டும் ஏன் இவ்வாறான முக பாவனையுடன் நின்று கொண்டிருக்கிறான்? என்பதைக் கண்டு புருவத்தைச் சுழித்துக் கொண்டே தன்னவனைப் பார்த்தாள் ருத்ராக்ஷி.

அவள் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதைக் கண்டு கொண்டதும், தனது முகத்திலிருந்த பாவனைகளை உடனுக்குடன் மறைத்துக் கொண்டு சாதாரணமாகி விட்டான் ஸ்வரூபன்.

அதை அவதானித்தவளுக்கு, இந்தப் பரிசுப் பொருட்களை வழங்கியதில் அவனுக்கு ஏதாவது பிரச்சினை உள்ளதோ? என்ற ஐயம் எழுந்தது அவளுக்கு.

அதனால், அவனை மேலும் கூர்மையானப் பார்வையால் துளைத்து எடுத்து விட்டு மற்றவர்களின் புறம் தன் கவனத்தைத் திருப்பிக் கொண்டாள் ருத்ராக்ஷி.

“எல்லாமே அருமையாக இருக்கு ம்மா! நாங்க கேட்டதையும் ஞாபகம் வச்சு செஞ்சுக் கொடுத்ததுக்குத் தாங்க்யூ சோ மச் ம்மா” என்றார்கள் அங்கேயிருந்த நான்கு பெண்மணிகளும்.

அதைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டவளோ,”இன்னும் நிறைய வித்தியாசமான வடிவமும், சூப்பரான வாசனையும் இருக்கிறா மாதிரி நிறையப் பார்த்து வச்சிருக்கேன். அதை எல்லாத்தையும் முயற்சி செஞ்சுப் பார்க்கனும்ன்னு நினைச்சு இருக்கேன்” என்று அவர்களிடத்தில் கூறினாள் ருத்ராக்ஷி.

“இன்னும் மேலே மேலே நிறைய கத்துக்கோ ம்மா!” என்று அவளை வாழ்த்தினார்கள் அனைவரும்.

அதற்குப் பிறகு,”அப்போ நாங்க கிளம்புறோம் ங்க” என்று அனைவரிடமும் உரைத்தார் கவிபாரதி.

“உடனே கிளம்பக் கூடாது! சாப்பிட்டுட்டுத் தான் போயாகனும்” என்று அவர்களிடம் கறாராக சொன்னார் சந்திரதேவ்.

அதைக் கேட்ட பிறகும், அவர்களுக்குக் கிளம்ப மனம் வருமா?

உடனே அவரது வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு அமைதியாகி விட்டனர்.

“நான் எல்லாத்தையும் டைனிங் டேபிளில் ரெடி பண்ணி வச்சுட்டுக் கூப்பிட்றேன்” என்று அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்ற மஹாபத்ராவை மட்டும் தனித்து வேலை செய்ய விடாமல் அவளைப் பின் தொடர்ந்து சென்றாள் ருத்ராக்ஷி.

“நிச்சயத்தார்த்தம் பிரமாதமாக நடந்துச்சு. கல்யாணமும் இதே மாதிரி நல்லபடியாக நடக்கனும்” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

“நீ ஏன் என் கூட வந்த? அங்கே உட்கார்ந்து அவங்க கூடப் பேசிட்டு இருக்கலாம்ல?” என்று தன் நாத்தனாரிடம் வினவினாள் மஹாபத்ரா.

“உங்களை மட்டும் தனியாக வேலை பார்க்க விட்ருவேனா அண்ணி? அதான், உங்க கூடவே வந்துட்டேன்” என்று அவளிடம் பதில் சொன்னாள் ருத்ராக்ஷி.

அவர்கள் இருவரும் மளமளவென்று அனைவருக்குமான உணவுகள் அடங்கிய பாத்திரங்களைச் சாப்பாட்டு மேஜையில் எடுத்து வைத்து விட்டார்கள்.

“எல்லாம் தயார். சாப்பிட வாங்க” என்று இங்கேயிருந்தே அனைவருக்கும் குரல் கொடுத்தாள் மஹாபத்ரா.

“ஆங்! வர்றோம் மா” என்று அங்கே சென்று அமரவும், இரு பெண்களையும் அமரச் செய்து விட்டுத் தாங்களே உணவைப் பரிமாறிக் கொண்டு உண்டு முடித்தனர்.

அந்தச் சமயத்திலும் கூட, ஸ்வரூபனுடைய முகத்தைத் தான் ஆராய்ந்து கொண்டே இருந்தாள் ருத்ராக்ஷி.

தான் இயல்பாக இருக்க மிகவும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருப்பது அவளைத் துணுக்குறச் செய்தது.

அனைவரும் இருக்கும் கிளம்பும் சமயம் வந்து விட்டதும், வித்யாதரன் மற்றும் மிருதுளாவின் குழந்தைகளுக்கும் பரிசுகள் கொடுத்து அவர்களை மகிழ்வுறச் செய்திருந்தாள் ருத்ராக்ஷி.

“இதெல்லாம் எதுக்கு ம்மா? நீ ஏற்கனவே எல்லாருக்கும் நிறைய பண்ணிட்ட. இப்போ இது வேறயா?” என்று அவளிடம் குறைபடவும்,

“என்னைக்காவது தான், இங்கே வர்றீங்க. அதுவும் உங்கப் பிள்ளைங்களை ரொம்ப வருஷம் கழிச்சுப் பார்க்கிறேன். அவங்களை வெறுங்கையோட அனுப்பிடுவேனா? இருக்கட்டும் விடுங்களேன்” என்று அவர்களைச் சமாதானப்படுத்தினாள்.

அதன் பின்னர், கவிபாரதி, ஸ்வரூபன் மற்றும் வித்யாதரன், மிருதுளாவும், அவர்களது மகன் மற்றும் மகளும் ருத்ராக்ஷியின் வீட்டாரிடம் உரையாடிக் கொண்டே வாசலுக்குப் போனார்கள்.

எப்போதும் போல, தன்னிடம் கண்களால் விடைபெறுபவன் இப்போதும் அதைத் தவறாமல் செய்யவும், அவனுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இருக்கிறது தான் என்பதை ஆணித்தரமாக உணர்ந்து கொண்டவளோ, தானும் விழியசைத்து ஸ்வரூபனுக்கு விடை கொடுத்தாள் ருத்ராக்ஷி.

அதற்குப் பிறகு, அவர்களைக் கார் வரைக்கும் சென்று ஏற்றி விட்டுக் கையசைத்து வழியனுப்பி வைத்தனர்.

அவர்கள் சென்றதும், மஹாபத்ராவின் பெற்றோரும் கிளம்பத் தயாரானார்கள்.

“இப்படி எல்லாரும் ஒரே நாளில் கிளம்பினால் எப்படி சம்பந்தி? நீங்களாவது இங்கே தங்கிட்டுப் போகலாமே?” என்று அவர்களிடம் விண்ணப்பம் வைத்தார் சந்திரதேவ்.

அதை வழி மொழிவதைப் போல,”ஆமாம் அத்தை, மாமா. நீங்க ஒரு நாள் கூட இங்க தங்கியதே கிடையாது. இப்போதாவது இருந்துட்டுப் போங்க” என்றான் அவர்களது மருமகன் காஷ்மீரன்.

“இப்போ தான், ஃபங்க்ஷன் முடிஞ்சு எல்லாரும் ரிலாக்ஸாக இருக்கோம். நீங்களும் ரெஸ்ட் எடுக்கனும்ல? நாங்க ரெண்டு பேரும் இங்கே உட்கார்ந்துட்டு இருந்தால், உங்களுக்கு எக்ஸ்ட்ரா வேலை தானே இருக்கும்” என்று அந்த மூவரிடமும் உரைத்தார் பிரியரஞ்சன்.

“என்ன இப்படி சொல்லிட்டு இருக்கீங்க மாமா? இதில் எங்களுக்கு என்னச் சிரமம்? நீங்க எத்தனை நாளுக்கு வேணும்னாலும் இருந்துட்டுப் போங்க” என்று அவர்களை வற்புறுத்தியவளோ, மஹாபத்ராவிடம் திரும்பி,

“என்ன அண்ணி அமைதியாக நிற்கிறீங்க? இவங்களை இங்கே இருக்கச் சொல்லுங்க!” என்றாள் ருத்ராக்ஷி.

“அது தான், எல்லாரும் சொல்றாங்கள்ல ப்பா, ம்மா! இங்கேயே இருங்க. ப்ளீஸ்!” என்று தன்னுடைய பெற்றோரிடம் கெஞ்சினாள் அவர்களது மகள்.

அவர்கள் மூன்று பேரும், பேசிப் பேசியே கனகரூபிணி மற்றும் பிரியரஞ்சனின் மனதைக் கரைத்து விட்டனர். அவர்களும் அங்கே தங்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்தார்கள்.

தங்களது பெண்ணின் புகுந்த வீட்டில் வாசம் செய்து கொண்டிருக்கிறோம் என்ற சங்கடம் எதுவும் நேராமல் உணவிலிருந்து அனைத்தையும் அவர்களுடைய விருப்பத்திற்கேற்ப செய்து மகிழ்வித்து, அவர்கள் இருவரையும் நன்றாக கவனித்துக் கொண்டனர் சந்திரதேவ், காஷ்மீரன் மற்றும் மஹாபத்ரா.

“நீ இனிமேல் வேலைக்குப் போவ தான?” என்று மகளிடம் கேட்டார் கனகரூபிணி.

“ஆமாம் மா. ருத்ராவோட நிச்சயதுக்காகத் தான் லீவ் போட்டேன். நீங்களும், அப்பாவும் இங்கே இருக்கிறதால், இன்னைக்கு லீவ் எடுத்தாச்சு” என்று அவருக்குப் பதிலளித்தாள் அவருடைய மகள்.

“எப்போ குழந்தைப் பெத்துக்கிறதாக இருக்கீங்க?” என்றார் அவளது அன்னை.

அவளுடைய முகம் மாறுவதைக் கண்டவுடனேயே,”அதுக்குள்ளே, நான் உங்களைப் பெத்துக்கோங்கன்னு நெருக்குறேன்னு ஆரம்பிச்சுடாதேடி! ஒரு சந்தேகத்துக்குத் தான் கேட்டேன். மத்தபடி, நீங்க எப்போ குழந்தைப் பெத்துக்க ஆசைப்பட்றீங்களோ, அப்போவே பெத்துக்கோங்க!” என்று அவளுக்கு அவசரமாக அறிவுறுத்தினார் கனகரூபிணி.

“ம்மா! இப்போ எல்லாம் நீங்க எனக்கு ரொம்ப பயப்பட ஆரம்பிச்சுட்டீங்க!” என்று அவரிடம் கூறிப் புன்னகைத்தாள் மஹாபத்ரா.

“க்கும், வேற என்னப் பண்றது? நான் சாதாரணமாக ஏதாவது சொல்லப் போய் அதுக்கு வேற அர்த்தம் ஆகிடுது! அதுவும் நீ எனக்குப் புத்திமதி சொல்ற அளவுக்கு வந்துருச்சு” என்று அவளிடம் நொடித்துக் கொள்ளவும்,

“ஹாஹா! நீங்களே எல்லாத்தையும் வலிய வந்து வாங்கிக்கிறீங்களே!” என்றாள் மகள்.

“சரிடி. சொல்லு! ரெண்டு பேரும் என்ன முடிவில் இருக்கீங்க?” என்றார் அவளது தாய்.

“அதையெல்லாம் நாங்க தள்ளிப் போடலைம்மா. நீங்க சீக்கிரம் தாத்தா, பாட்டி ஆகிடுவீங்க” என்று வெட்கத்துடன் சொன்னாள் மஹாபத்ரா.

“ஹப்பாடா! இப்போ தான் நிம்மதியாக இருக்கு” என்று மகளிடம் சொல்லிப் புன்னகை செய்தார் கனகரூபிணி.

அவரோ, காஷ்மீரனுடன் ஓரிரு வார்த்தைகள் பேசினார் என்றால், மஹாபத்ராவின் தந்தை பிரியரஞ்சனோ, தனது மருமகனுடனும், சம்பந்தியுடனும் தான், அதிக நேரம் செலவழித்துக் கொண்டு இருந்தார். அவர்களது தொழிலைப் பற்றி நிறையக் கேட்டறிந்தார்.

அவர்களுடன் அவ்வப்போது பேசினாலும், ஸ்வரூபனின் வித்தியாசமான சுபாவம் தன்னை எதையும் யோசிக்க விடவில்லை.

எனவே, அவனுக்கு அழைத்துப் பேசினாள் ருத்ராக்ஷி.

வயலில் வேலை செய்து கொண்டிருந்தவனோ, அலைபேசி ஒலிக்க அதை எடுத்துப் பார்த்ததில் அழைத்த நபர் யாரெனப் பார்த்ததும் இதழ்களில் தோன்றிய புன்னகையுடன் ஏற்று,”ஹலோ” என்றான் ஸ்வரூபன்.

“ஹலோ! உங்ககிட்ட இப்போ பேசலாமா? ஃப்ரீயா இருக்கீங்களா?” என அவனிடம் வினவினாள்.

“வயல்ல இருக்கேன் ம்மா. சொல்லு”

“ஓஹ்! நான் எதுவும் டிஸ்டர்ப் பண்ணிடலையே?” என்கவும்,

“ஊஹூம். கண்டிப்பாக கிடையாது” என்று அவளிடம் பதிலளித்தான் ஸ்வரூபன்.

“சரி. நான் உங்ககிட்ட ஒன்னுக் கேட்கலாமா?” என்று அவனிடம் தீர்க்கமாக வினவினாள் ருத்ராக்ஷி.

“ம்ம். கேளும்மா” என்று சொல்லும் போதே அவனுக்குப் பதட்டம் அதிகரித்து விட்டது.

“அன்னைக்கு ஊருக்குக் கிளம்பும் போது ஏன் அப்படி முகத்தை வச்சிருந்தீங்க?” என்று நேரடியாக விஷயத்தைக் கேட்கவும்,

“அப்படியெல்லாம் இல்லை ம்மா” என்றவனுக்கு அடுத்த வார்த்தை வரவில்லை.

“அப்பறம் அதை நான் வேற எப்படி எடுத்துக்கனும்? ஏன் திடீர்னு உங்களுக்கு மனக் குழப்பம் வந்துச்சு?” என்றவளது கூரிய கேள்வியில் அமைதியாகி விட்டான் ஸ்வரூபன்.

“ஹலோ” என அவனை மீண்டும் அழைக்க வேண்டியதாகப் போய் விட்டது.

“ஹாங்! லைன்ல இருக்கேன் ம்மா” என்று அவளிடம் சொல்லவே,

“நான் கேட்டதுக்கு மட்டும் பதிலே வரலையே ங்க!” என்று தன் ஆதங்கத்தைக் கூறவும்,

“அது வேற ஏதோ விஷயத்தை நினைச்சுக் குழப்பத்தில் இருந்தேன் ம்மா” என்று பொய்யுரைக்க முயன்றவனை, மேலும் தொடர விடாமல் இடைமறித்து,”சத்தியமாக வேற எதுவும் விஷயம் இல்லைன்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும் ங்க. பொய் சொல்றீங்களா?” என்று அவனிடம் வருத்தத்துடன் கேட்டாள் ருத்ராக்ஷி.

அதில் பதறியவனோ,”ஹேய்! ப்ளீஸ் ம்மா. நீ எதுவும் ஃபீல் பண்ணாதே! நான் உண்மையைச் சொல்லிடறேன்” என்று தன்னவளிடம் வேகமாக உரைத்தான் ஸ்வரூபன்.

“சொல்லுங்க”

“உன்னோட நல்ல மனசைப் பார்க்கப் பார்க்க, நான் உனக்குத் தகுதியானவனான்னு சந்தேகம் வந்துருச்சு ம்மா” என்று எச்சிலை விழுங்கிக் கொண்டு உடைத்துப் பேசி விட்டவனை நினைத்து
க் கவலைப்பட்டுப் போனாள் ருத்ராக்ஷி.

- தொடரும்

இந்த மாசத்துக்குள்ளே இந்தக் கதையைக் கண்டிப்பாக முடிச்சிடலாம் ஃப்ரண்ட்ஸ் 🙏
 
அடேய் ஸ்வரூபா நீயும் குழம்பி ருத்ராக்ஷியையும் feel பண்ண வைக்குற. அவள் முழுசா கல்யாணத்தை enjoy பண்ண விடு🤷‍♀️
 
அடேய் ஸ்வரூபா நீயும் குழம்பி ருத்ராக்ஷியையும் feel பண்ண வைக்குற. அவள் முழுசா கல்யாணத்தை enjoy பண்ண விடு🤷‍♀️
Apdi solunga sis. Thank you so much ❤️
 

Advertisement

Latest Posts

Top