Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 114

Advertisement

SHALU shalu

Well-known member
Member
அவர்களது காதல் பார்வைகள் ஒருவரையொருவர் இப்படி அழுத்தமாக வருடிக் கொண்டிருந்த வேளையில்,

“எல்லாரும் வந்தாச்சு. இப்போ கிளம்புவோமா?” என்று பொதுவாகக் கேட்டார் சந்திரதேவ்.

அதற்கு அனைவரும் சம்மதம் தெரிவிக்கவும், காரில் ஏறி மண்டபத்திற்குச் சென்றனர்.

அங்கே அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அனைத்து ஏற்பாடுகளும் நன்றாகவே செய்திருக்க, அதில் திருப்தியடைந்தவர்கள், அனைவருக்குமான அறைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தனர்.

“நீங்க என் கூடத் தங்கப் போறீங்க அத்தை” என்று ஸ்வரூபனின் அன்னையிடம் சொன்னாள் ருத்ராக்ஷி.

“சரிம்மா” என்றவரோ, அவளைப் பின்பற்றி அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு சென்றார் கவிபாரதி.

இரவுச் சாப்பாட்டை வரவழைத்து உண்டு விட்டு உறங்கிப் போயினர்.

அடுத்த நாள் காலையில், தனது திருமணத்தின் போது ருத்ராக்ஷி எப்படி தனக்கு உதவி செய்தாளோ, அதே மாதிரி, அவளுடைய நிச்சயத்தில் இருந்து திருமணம் வரை அவளுக்கு உதவியாக இருக்க முடிவு செய்திருந்ததால்,

விடியலில் எழுந்ததும், துரிதமாகத் தயாராகி விட்டு,”என்னங்க! இன்னைக்கு ஃபுல்லா நான் ருத்ரா கூடத் தான் இருப்பேன்” என்று தன் கணவனிடம் தெரிவித்தாள் மஹாபத்ரா.

“ஓகே ம்மா” என்று கூறி அவளைத் தன் தங்கையிடம் அனுப்பி வைத்தான் காஷ்மீரன்.

“புது இடம், புது ரூம். தூக்கமே வரலை அத்தை” என்றபடியே போர்வையை மடித்து வைத்தாள் ருத்ராக்ஷி.

“எனக்கும் தான் ம்மா” என்றார் கவிபாரதி.

“ஹலோ எக்ஸ்கியூஸ்மி! நான் உள்ளே வரலாமா?” என்று அறைக்கு வெளியே இருந்து குரல் வரவும்,

“வரலாமே அண்ணி!” என்று அவளிடம் புன்னகையுடன் கூறினாள் ருத்ராக்ஷி.

உடனே கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவளைப் பார்த்து,”என்னம்மா நீ சீக்கிரம் தயாராகிட்ட?” என்று அவளிடம் வினவினார் கவிபாரதி.

“ஆமாம் மா. நான் எழுந்து குளிச்சு ரெடியானதும் நேராக இங்கே தான் வர்றேன்” என அவரிடம் சொன்னாள் மஹாபத்ரா.

“அப்போ நாங்களும் கிளம்புறோம்டா” என்று அவளிடம் கூறி விட்டுத் தயாராகப் போனார்கள்.

அதன் பின்னர், காஷ்மீரனும் தயாராகி, ஸ்வரூபனின் அறைக்குச் சென்றான்.

“ஏதாவது ஹெல்ப் வேணும்னா தயங்காமல் கேளுங்க மாப்பிள்ளை!” என்று அவனிடம் அறிவுறுத்தினான்.

“சரிங்க சார்” என்றவனோ, தானும் கிளம்பத் தொடங்கி விட்டான் ஸ்வரூபன்.

அதற்குப் பிறகு, மற்ற அனைவரும் எழுந்து தயாராகிக் கொண்டிருக்க, ருத்ராக்ஷியின் முக அலங்காரத்தின் போது தன்னுடைய பெற்றோரைப் பார்க்கப் போனவளோ,

“ம்மா, ப்பா! காஃபி குடிச்சிட்டீங்களா?” என்று அவர்களிடம் விசாரித்தாள் மஹாபத்ரா.

“ம்ம். குடிச்சாச்சு. பந்தி எப்போ ஆரம்பிக்குமாம்?” என்ற கனகரூபிணியிடம்,

“இன்னும் ஒரு மணி நேரத்தில் ஸ்டார்ட் ஆகிடும் மா” என்றாள் அவரது மகள்.

“ஆமா நீ இங்கே என்னப் பண்ற டா? பொண்ணோட ரூமில் இருக்கலாம்ல?” என்று அவளிடம் வினவினார் பிரியரஞ்சன்.

“அங்கேயிருந்து தான் வர்றேன் ப்பா. ருத்ராவுக்கு மேக்கப் போட்டுட்டு இருக்காங்க. அதனால் உங்களைப் பார்க்க வந்தேன்” என்று தந்தையிடம் உரைத்தாள்.

அவர்களிடம் ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டுத் தான் மீண்டும் ருத்ராக்ஷியின் அறைக்குப் போய்,

அங்கே, தன்னுடைய அலங்காரங்கள் முடிந்து ஆசுவாசமாக அமர்ந்திருந்த நாத்தனாரைப் பார்த்ததும்,”வாவ்! இன்னும் பியூட்டிஃபுல் ஆக இருக்கிற ம்மா” என அவளைப் பாராட்டினாள் மஹாபத்ரா.

“தாங்க்ஸ் அண்ணி”

“உன்னோட ஸ்பெஷல் கெஸ்ட்ஸ் எப்போ வருவாங்க?”

“நான் இப்போ தான், அவங்களுக்குக் கால் பண்ணிக் கேட்கப் போறேன்” எனத் தன் செல்பேசியை எடுத்து தன்னிடம் பயிற்சி பெறும் பெண்களில் ஒருவருக்கு அழைத்து எப்போது வருவீர்கள்? என்று விசாரிக்கவும்,

“நாங்க எல்லாரும் கிளம்பி உட்கார்ந்து இருக்கோம் மா. நிச்சயத்தார்த்தம் எத்தனை மணிக்கு நடக்கப் போகுதுன்னு சொன்னால் அதுக்கேத்த மாதிரி வந்துருவோம்” என்று கூறவும்,

“எனக்கு மேக்கப் முடிஞ்சிருச்சு க்கா. இன்னும் கொஞ்ச நேரத்தில் பந்தியும் ஸ்டார்ட் ஆகிடும். நீங்க எல்லாரும் இப்போ கிளம்பி வந்தால் சரியாக இருக்கும்” என அவரிடம் கூறினாள் ருத்ராக்ஷி.

“இதோ கிளம்புறோம் மா. நீ எங்களைப் பத்திக் கவலைப்படாதே” என்று அவளிடம் சொல்லி விட்டு அனைவரும் நிச்சயித்தார்த்த விழா நடைபெறும் மண்டபத்திற்குச் சென்றார்கள்.

“அவங்க கிளம்பியாச்சு அண்ணி” என்று மஹாபத்ராவிடம் சொல்லி விட, அவளும் அனைவருக்கும் இந்தத் தகவலை அறிவித்தாள்.

தன்னைத் தயார்படுத்திக் கொண்டு காத்திருக்கலானான் ஸ்வரூபன்.

நிச்சயம் நடக்கப் போகும் ஜோடியைப் போலவே, காஷ்மீரனும், மஹாபத்ராவும் ஒருவரையொருவர் கள்ளத்தனமாக ரசித்துக் கொண்டனர்.

சாப்பாட்டுப் பந்தி ஆரம்பித்து விட்டதால், உணவருந்த விருப்பப்படுபவர்களை அங்கே அனுப்பி வைத்தார் சந்திரதேவ்.

தங்கள் இரு வீட்டாருடைய உறவினர்களையும் எந்தவொரு பேதமும் பார்க்காமல் இன்முகத்துடன் வரவேற்று அவர்களுக்குத் தேவையானதைக் கேட்டுச் செய்த ருத்ராக்ஷியின் குடும்பத்தைக் கண்டு மன நிறைவடைந்த கவிபாரதியோ, அதைத் தானும் பின்பற்றினார்.

அவரது சொந்தங்கள் யாவரும், அங்கே வந்ததில் இருந்து ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்.

அவர்களில் சிலர் மட்டுமே, ஸ்வரூபன் மற்றும் கவிபாரதியின் குணத்திற்காகவும், அவர்களது அன்பான அமைப்பிற்காகவும் இந்த விழாவிற்கு வந்திருந்தார்கள்.

அந்தச் சமயத்தில், ருத்ராக்ஷியின் சிறப்பு விருந்தினர்கள் மண்டபத்திற்குள் வந்து விட்டிருக்க, உடனே காஷ்மீரன், மஹாபத்ரா மற்றும் கவிபாரதியும் வாயிலுக்குச் சென்று,“வாங்க! வாங்க!” என அவர்களை வரவேற்று, உரிய இடத்தைப் பார்த்து, அமர வைத்து விட்டு,”பந்தி நடந்துட்டு இருக்கு. சாப்பிடப் போகலாமா ங்க?” என்று அவர்களிடம் விசாரித்தார்கள்.

“ஆமாம் ங்க. சாப்பிட்டுட்டு ருத்ராவைப் பார்க்கனும். இதோ வர்றோம்” என்று எழுந்து அவர்களுடன் நடந்தனர்.

அவர்களைப் பந்தியில் உட்காரச் செய்ததும், நன்றாக உணவருந்துமாறு அறிவுறுத்தி விட்டு, மற்ற வேலைகளைப் பார்க்கப் போயினர்.

இங்கே கவிபாரதியின் உறவினர்களின் ஆண் மகவுகளோ, ஸ்வரூபனின் அறைக்குப் படையெடுத்து,”டேய்! எப்புட்றா இவ்வளவு பெரிய பணக்கார குடும்பத்தைப் பிடிச்ச?” என்று அவனிடம் பொறாமையுடன் கேட்டான் அவனுக்குச் சகோதரன் உறவில் இருந்த ஒருவன்.

அவனது அமில வார்த்தைகளைக் கேட்டு ஸ்வரூபனுடைய முகம் கோபத்தில் செந்தணலாகிப் போனது.

“நானும் இதைத் தான் கேட்கனும்னு இருந்தேன். பொண்ணுக்கு ஏதாவது பிரச்சனையா?” என்றெல்லாம் நாக்கில் நரம்பில்லாமல் கேட்டான் இன்னொருவன்.

“அப்படி இருக்கிற மாதிரி தெரியலைடா! பார்க்க அழகாக இருக்கா!” என்றான் மூன்றாமவன்.

தன்னுடைய வேஷ்டி, சட்டை கசங்கினாலும் பரவாயில்லை இவர்கள் மூவரையும் அடித்து துவைக்கத் தயாராகி தனது சட்டையின் கைப்பகுதியை மேலேற்றிக் கொண்டிருந்தான் ஸ்வரூபன்.

அப்போது, அறையினுள் வந்த காஷ்மீரனோ,”அட! மாப்பிள்ளை! என்னப் பண்றீங்க? இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களை ஸ்டேஜூக்குக் கூப்பிடப் போறாங்க! நீங்க ரெஸ்ட் எடுங்க. இவங்க உங்களோட ரிலேடிவ்ஸ்ஸா?” என்றான்.

“தூரத்து சொந்தக்காரங்க” என்று தன் கோபத்தை மறைக்காமல் அவனுக்குப் பதிலளித்தான் ஸ்வரூபன்.

ஏற்கனவே, அவனுடைய உடல்மொழி மற்றும் சினத்தைப் பார்த்துப் பம்மிக் கொண்டிருந்த அந்த மூன்று ஆண்களும், இப்போது அறைக்குள் வந்த காஷ்மீரனின் கம்பீரமான தோற்றத்தைக் கண்டு மேலும் பயந்து போனார்கள்.

அந்த மூவரும் பேசியவற்றைக் கேட்டு விட்டுத் தான் உள்ளே வந்திருந்ததால், அவர்களை எரித்து விடுபவனைப் போலப் பார்த்தவனோ,”நீங்க ரிலாக்ஸாக இருங்க. நான் இவங்களைப் பாத்துக்கிறேன்” என்று அவர்களது மிரண்ட பார்வையைக் கண்டு கொள்ளாமல் மூவரையும் வெளியே அழைத்துச் சென்றான் காஷ்மீரன்.

“சாரி சார்! எங்களை விட்ருங்க!” என்று அவனிடம் கெஞ்சிப் பார்த்தாலும் விடாமல் அவர்களை மண்டபத்திலிருந்து வெளியில் இழுத்து வந்து,

“ஸ்வரூபன் உங்களுக்கு அண்ணன் மாதிரி தானே! அப்படியிருக்கும் போது அவரைக் கட்டிக்கப் போகிறப் பொண்ணு உங்களுக்கு அண்ணி! இதையெல்லாம் யோசிக்காமல் என்னென்ன வார்த்தை பேசி இருக்கீங்க?” என்று அவர்களுக்கு ஆளுக்கொரு அடியை இடியாக இறக்கினான்.

“ஐயோ வலிக்குது!” என்றவர்களுடைய அலறலைக் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை அவன்.

அடங்காத கோபத்தில் மேலும் அவர்களை அடித்துக் கொண்டே,”ஏன்டா! என் தங்கச்சியும், அவரும் லவ் பண்ணிக் கல்யாணம் செய்துக்கப் போறாங்க டா! அவளுக்குப் போய் எதுவும் பிரச்சினை இருக்கான்னா கேட்கிறீங்க?” என்று அவர்களை நன்றாக அடித்து துவைத்து எடுத்து விட்டான் காஷ்மீரன்.

அவர்களுடைய பெற்றோர்கள் என்ன சொல்வார்கள் என்றெல்லாம் அவனுக்குக் கவலையில்லை. தனது தங்கையைப் பற்றி அவதூறு பேசியவர்களைக் கொல்லும் ஆத்திரம் வந்தது அவனுக்கு.

அது குறையும் வரை அவர்களை வெளுத்து வாங்கி விட்டுத் தன் உடையைச் சரி செய்து கொண்டு உள்ளே வந்தான் காஷ்மீரன்.

அவர்களோ, தங்கள் பெற்றோர்களிடம் கூடச் சொல்லாமல், அந்த மூன்று பேரும் அவ்விடத்தை விட்டு ஓடி விட்டார்கள்.

நேராக ஸ்வரூபனுடைய அறைக்குள் நுழைந்தவனோ,”மாப்பிள்ளை! என்னாச்சு? இப்படியே உட்கார்ந்து இருக்கீங்க?” என்று அவனிடம் வினவவும்,

“அவங்க எங்கே சார்?” என்று ஆத்திரத்துடன் கேட்டவனிடம்,

“இந்நேரம் சொந்த ஊருக்கே போயிருப்பாங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“ஏங்க?” என்று அறைக்கு வெளியே இருந்து குரல் தந்தாள் மஹாபத்ரா.

“என்னம்மா?” என்றான் காஷ்மீரன்.

“மாப்பிள்ளையை மேடைக்குக் கூப்பிட்றாங்க” எனவும்,

“ஓஹ்! நான் அவரைக் கூட்டிட்டு வர்றேன் ம்மா. நீ போ” என்றவனோ,

“முகத்தைக் கழுவிட்டுக் கூட வாங்க ஸ்வரூபா” என்று அவனிடம் சொன்னான் காஷ்மீரன்.

“இல்லை வேண்டாம் சார்” எனக் கூறி விட்டுத் தனது முகத்தைத் துண்டால் துடைத்துக் கொண்டு அவனுடன் மேடைக்குச் சென்றான் ஸ்வரூபன்.

அவன் மேடையேறியதும், கவிபாரதியிடம் சென்ற ஒரு சிலர்,”எங்கப் பசங்களைக் காணோம் மா. இங்கே தான் இருந்தாங்க. கடைசியாக ஸ்வரூபனோட ரூமுக்குத் தான் போனாங்களாம்! இப்போ அவனே வந்தாச்சு. அவனுங்களைக் காணலையே!” என்று அவரிடம் பரிதவிப்புடன் வினவினர்.

“அப்படியா? அப்போ இங்கே தான் எங்கேயாவது இருப்பாங்க. நான் போய் என் பையன்கிட்டே கேட்கிறேன்” என்கவும்,

அதற்குள்ளாகவே, அவர்களில் ஒருவருக்குச் செல்பேசி அழைப்பு வந்தது.

அலை ஏற்றுப் பேசியவருடைய முகமோ சிறிது நேரத்திலேயே இயல்பு நிலைக்குத் திரும்பியது.

“எதுக்குடா கிளம்புனீங்க? சாப்பிட்டாச்சும் போயிருக்கலாம்ல?” என்று திட்டி விட்டு அழைப்பை வைத்தவர்,

“அவனுங்க ஊருக்குப் போயிட்டு இருக்காங்களாம்! ச்சே! இது தெரியாமல், நாங்க உங்களையும் போட்டு பயப்பட வச்சிட்டோம். நீங்கப் பையனோட நிச்சய வேலையைப் பாருங்க” என்று இவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டுச் செல்லவும் தான், கவிபாரதிக்கும் பதற்றம் குறைந்தது.

அதற்குப் பிறகு, மணப்பெண்ணை அங்கே அழைத்து வர வேண்டும் என்பதால், அந்த வேலையை மஹாபத்ராவிடம் ஒப்படைத்து விட, அவளும் ருத்ராக்ஷியைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு போய் மேடையில் விட்டு விட்டு கீழே இறங்கி விட்டாள் காஷ்மீரனின் மனைவி.

அவளைக் கண்டதும், தன்னுடைய மனநிலை மொத்தமாக மாறி விட்டதை உணர்ந்து, புன்சிரிப்புடன் நின்றான் ஸ்வரூபன்.

தாங்கள் இருவரும் இப்படி மேடையில் ஒன்றாக நின்று கொண்டிருப்பதை எண்ணி ருத்ராக்ஷி மற்றும் ஸ்வரூபனுக்கு வெட்கமும், ஆனந்தமும் ஒரு சேரத் தோன்றியது.

தங்களது மண்டபத்தில் அனைத்தும் சரியாக நடக்கிறதா என்பதை மேற்பார்வை இட்டுக் கொண்டே இருந்தனர் கனகரூபிணி மற்றும் பிரியரஞ்சன்.

ருத்ராக்ஷியின் விருந்தாளிகள் அனைவரும் உணவுண்டு முடித்ததும், அவர்களிடம் சென்று,”ருத்ராவும், ஸ்வரூபனும் மேடை ஏறியாச்சு” என்ற தகவலைத் தெரிவித்தார்.

“சாப்பிட்டுப் போய்ப் பொண்ணைப் பார்த்துப் பேசலாம்ன்னு இருந்தோமே! ப்ச்” என்றவர்களது வதனம் சுருங்கிப் போனது.

“இப்பவும் ஒன்னும் இல்லை. மோதிரம் மாத்தினதுக்கு அப்பறம் பார்க்கலாம். இப்போ என் கூட வாங்க” என அவர்களைக் கூட்டிச் சென்று அமர வைத்து விட்டுத் தன் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் ஐக்கியமாகி விட்டார் மிருதுளா.

மணமக்கள் மேடையில் தோன்றிய பிறகு, இன்னும் தாமதம் எதற்கு? என்று நிச்சயத்தார்த்த விழா தொடங்கும் வகையில், அவர்களிடம் இரண்டு மோதிரங்களைக் கொடுத்தாள் மஹாபத்ரா.

அதைப் பெற்றுக் கொண்ட ஸ்வரூபனும், ருத்ராக்ஷியும் இதழ்களில் மென்நகை தவழ, தங்களது இணைகளின் விரல்களில் மாறி மாறிப் போட்டு விட்டனர்.

இந்த தருணத்தை அனைத்து அங்கேயிருந்த அனைவரும் மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் பார்த்தனர்.

மோதிரங்கள் மாற்றப்பட்ட தும், இருவருடைய வதனங்களிலும் சந்தோஷம் மின்னியது.

இந்த அழகான தருணத்தைப் புகைப்படங்களாகவும் எடுத்துக் கொண்டிருக்க, ஸ்வரூபன் மற்றும் ருத்ராக்ஷியின் பெற்றோருக்கு ஆனந்தக் கண்ணீரை அடக்க வழியில்லை.

நேசம் கொண்ட இரு நெஞ்சங்கள் தங்களுக்கான இந்த நன்னாளில் அகமும், புறமும் மகிழ்ச்சியில் திளைக்கும் காட்சி எழிலாக இருந்தது.

இப்போது அனைவரும் ஒவ்வொருவராகச் சென்று அவர்களுக்கு வாழ்த்தை தெரிவிக்கும் சமயம் ஆதலால், முதலில் இருவரது குடும்பத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

ஸ்வரூபனுடைய அன்னை கவிபாரதியை மேடையேற்றி விடவும்,

அவரும் தன்னிரு கண்களும் பனிக்க, தன் மகன் மற்றும் மருமகளின் தலையில் கரத்தைப் பதித்து மனதார ஆசி வழங்கி விட்டுக் கீழே இறங்கினார்.

அஃது போலவே, சந்திரதேவ்வும் செய்து விட்டு வந்து விட்டதும்,

காஷ்மீரன் மற்றும் மஹாபத்ராவும் மணமக்களிடம் சென்று, அவர்களுக்கு வாழ்த்தைச் சொன்னார்கள்.

அதன் பின்னர், கனகரூபிணி மற்றும் பிரியரஞ்சன், மிருதுளாவின் குடும்பம் மற்றும் அனைத்து விருந்தினர்களும் அவர்களுக்குத் தங்களது வாழ்த்தைக் கூறி முடித்ததும், ஸ்வரூபனும், ருத்ராக்ஷியும் ஒன்றாக நின்று அனைவருக்கும் காட்சி அளித்தனர்.

அவர்கள் இருவரும் மட்டும் இன்னும் சாப்பிடவில்லை என்பதால், பசியைப் பொறுத்துக் கொண்டு தான் இருந்தார்கள்.

அதைக் கண்டு கொண்ட மஹாபத்ராவோ,”அவங்களைச் சாப்பிடக் கூட்டிட்டுப் போறேன். அப்பறமாக வந்து ஸ்டேஜில் நிற்கட்டும்” என அவர்களை அழைத்துச் சென்று உண்ண வைத்துக் கூட்டி வந்தாள்.

மேடையிலேயே மாலை வரை நின்றவர்களுக்குக் கால்கள் வலித்ததால், இத்துடன் நிச்சயத்தார்த்த விழா நிறைவடைந்தது என்று அறிவித்து விட்டு ஸ்வரூபனையும், ருத்ராக்ஷியையும் அவரவர் அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.

அந்தச் சமயத்தில் தான், ருத்ராக்ஷியின் விருந்தினர்கள் அவளைக் கண்டு பேசுவதற்காக அங்கே போனார்கள்.

- தொடரும்
 
அருமையான நிகழ்ச்சி 💐🎁

ஸ்வரூபனோட தூதூதூரத்தூ சொந்தக்காரர்களை காஷ்மீரின் சிறப்பாகவே கவனிச்சு அனுப்பியாச்சு👏
 
அருமையான நிகழ்ச்சி 💐🎁

ஸ்வரூபனோட தூதூதூரத்தூ சொந்தக்காரர்களை காஷ்மீரின் சிறப்பாகவே கவனிச்சு அனுப்பியாச்சு👏
Haha 😆 thank you so much sis ❤️
 
Top