Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான் இமையாக நீ 14

Advertisement

TNWContestWriter080

Well-known member
Member

அத்தியாயம் 14

வெண்ணிலாவின் பெயரை மருத்துவர், சொல்வதைக் கேட்ட, வாசு தனது கவனத்தை, முழுக்க அவளது தொலைபேசி உரையாடலில் பதித்துக் கொண்டான்.

அதன் பின், மருத்துவர், " சார், ஒன்னும் கவலைப் படாதீங்க. இப்படி, ஒரு தடவை ஐவிஎப் ஃபெய்லியர் ஆகிறது எல்லாம் ஒரு மேட்டரே கிடையாது. நம்பிக்கையோட இருங்க. அது என்ன இருந்தாலும், இந்தப் பிள்ளைங்க எல்லாரும் கல்யாணம் ஆகாதவங்க இல்லயா? அதனால, ஒரு கருவைச் சுமக்கிறதுக்கான உணர்வு பூர்வமான ஒட்டுதல் அவங்க கிட்ட இல்லை. அதுவும் கூட, இப்படி ஃபெய்லியர் ஆகறதுக்குக் காரணமா இருக்கலாம் " என்று சொன்னாள்.

அப்போது தான் ஷீபா எதனைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பது வாசுவுக்குப் புரிந்தது! தங்கை விஷயத்தில் ஏற்கனவே சூடு கண்ட பூனை அல்லவா அவன்! ஒரு கணம், அவனது ரத்தம் சூடேறி, கோபம் தலைக்கு ஏறியது. ஆனால் மறு கணமே, ' குளிர்வாய் மனமே. வேகம் எடுபடாது. விவேகம் தான் வேண்டும் ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் வாசு.

தங்கை ரம்யாவின் நினைவில் , மௌனமாகி விட்டிருந்த அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் வெண்ணிலா. அவளுக்கு, இப்பொழுது வாசு சொல்லிய நிகழ்வுகள் எதுவுமே நினைவில் இல்லை. அப்படி ஒரு சந்திப்பு எப்போது நிகழ்ந்தது என்று தனது நினைவு அடுக்குகளில் தேடிக் கொண்டிருந்தாள் வெண்ணிலா.

மௌனத்தின் கனம், பெருத்துப் போய் விட வெண்ணிலா அதற்கு இடர் செய்தாள்.

" ரம்யா, ரம்யாவுக்கு என்ன ஆச்சு? " என்ற அவளுக்கு , வாசு, ' அவ, கணவன் வீட்டில் இருக்கா. மாமியார் வீட்டில இருக்கா ' என்று ஏதாவது சொல்லி, தன்னிடம் சாரதா அம்மா சொல்லிய மரண நிகழ்வினைப் பொய் ஆக்கி விடமாட்டானா, என்ற எண்ணத்துடன் தான் அவள் அப்படி கேட்டாள்.

வாசு தொடர்ந்தான். " அவ சென்னையில என் கூடத் தான் இருந்தா. அவளும், ஒரு ஹாஸ்பிட்டல்ல ரிக்கார்டு மேனேஜ்மெண்ட் செக்ஷனில தான் வேலை பார்த்துட்டு இருந்தா. ஆனா அவளுக்கே தெரியாம, அவ வயித்துல கட்டி இருக்குன்னு சொல்லி , அதை எடுக்கறேன்னுட்டு அவ உடம்புக்குள்ளே, பிரச்சினையை விதைச்சுட்டாங்க பாவிங்க " என்றான்.

" அப்படின்னா, நீ என்ன சொல்றே வாசு " என்று, நடுங்கும் குரலில் கேட்டாள் வெண்ணிலா .

" எவனோ ஒருத்தனுக்குக் குழந்தை பெத்துக் கொடுக்கறதுக்காக வேண்டி இவளோட அனுமதி இல்லாமலேயே,, ரம்யாவுக்கு ஐ.வி.எப் பண்ணிட்டாங்க " என்று சொன்னான்.

இந்த வார்த்தைகளை உரைக்கும் பொழுது அவனது குரல் தழுதழுத்தது . அதில் தெரிந்த கம்பீரம் எங்கோ காணாமல் போய் விட்டிருந்தது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத் தங்குவதற்கான புரொஜஸ்டிரான் மாத்திரைகளோடு வீட்டுக்கு வந்த ரம்யாவிற்கு, அவளது உடம்பிற்குள் முதல் பத்து நாட்கள், எந்த விதமான மாற்றங்களும் தெரியவில்லை. அதன் பின் தான் , அவளுக்குத் தன்னிடம் ஏதோ மாறுதல் தெரிவது போன்ற உள்ளுணர்வு ஏற்பட்டது.

அதைத் தனது மருத்துவரிடம் கேட்ட போது, " அது ஆபரேஷன் பண்ணி இருக்கு இல்லையா. அதனால் ஒரு மூணு மாதத்துக்காவது அப்படி தான் இருக்கும் " என்று சொன்னாள் அவள்.

அதன் பின், எப்பொழுதும் போலத் தனது வேலைகளைத் தொடர்ந்து கொண்டே இருந்தாள் ரம்யா. அந்த மாதம், அவளுக்கு மாத விலக்கு ஏற்படவில்லை. ' சரி, வயித்துல இருந்து கட்டியை எடுத்து இருக்காங்க இல்லியா? அதனால கூட இப்படி இருக்கலாம் ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

ஆனால், மாதவிடாய் நின்ற, இருபது நாட்களில், அவளுக்கு மருத்துவமனையில் இரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவருக்கு அது அனுகூலமான பதிலைத் தான் தந்தது . ஆனால் ரம்யாவிற்கு??!!!

அதன் பின், மருத்துவரின் கவனிப்பே, சற்று வேறுபடுவது போலத் தெரிந்தது அவளுக்கு .

" ரம்யா, நீங்க கன்சீவ் ஆயிட்டீங்க. பதினைஞ்சு வருஷமா குழந்தை இல்லாம தவிச்சுட்டு இருந்த ஒரு தம்பதிக்கு உங்க மூலமா, ஒரு குழந்தை கிடைக்கப் போகுது.அதுக்காக அவங்க உங்களுக்குக் கொடுத்து இருக்கிற செக், இரண்டு லட்சம் ரூபாய்க்கானது. இதோ , என் கிட்டே இருக்கு பாருங்க . இந்தாங்க வாங்கிக்கோங்க " என்று சொல்லித் தனது கைகளில் இருந்த, செக்கை அவளிடம் நீட்டினாள் , அந்த மருத்துவர்

மருத்துவரின், அந்த வார்த்தைகளைக் கேட்டதும், ரம்யாவுக்கு மயக்கமே வந்து விட்டது .தான் கெட்டது சரியா என்று ,மறு முறை மருத்துவரை நோக்கினாள்

" டாக்டர் என்ன டாக்டர் சொல்றீங்க ? முதல்ல வயித்துல கட்டின்னு சொல்லித் தானே ஆபரேஷன் பண்ணினீங்க. இப்ப குழந்தைன்னு சொல்றீங்க. வேணாம் டாக்டர், எனக்குப் பணமும் வேணாம், உங்க வேலையும் வேண்டாம் . என்னை விட்டுடுங்க. நான் வீட்டுக்குப் போய்டறேன் " என்று தவிப்பாக கேட்டாள் அவள்.

அவளது மனத்தில், வேறொரு கணக்கு எழுந்தது . ' ஐம்பது நாள் தானே ஆகி இருக்குது; ஏதாவது மாத்திரை போட்டு நாமளே குழந்தையைக் கலைச்சிடலாம். ஆனா அதுக்கு முதல்ல இந்த இடத்தில நாம இருக்கக் கூடாது ' என்பது தான் அது.

ஆனால், அவளுக்குத் தெரியவில்லை, விலை கொடுத்துப் பிள்ளை பெறச், செய்திடும் இத்தகைய கீழ்த்தரமான மனிதர்கள் எந்த எல்லைக்கும் சென்று தாங்கள் நினைப்பதை முடித்துக் கொள்வார்கள் என்பது. தனது அருகாமையில் இருந்த பஸ்ஸரை அழுத்தினாள் அந்த ஈவிரக்கம் இல்லாத மருத்துவர்.

அறைக்குள் வந்த செவிலியிடம், " சிஸ்டர் இவங்களை, நம்ப மதர்ஸ் ஹாஸ்டலுக்குக் கூட்டிட்டுப் போயிடுங்க. நான், இவங்க ஃபைலை, சீக்கிரமே அனுப்பி வக்கிறேன் " என்று சொன்னாள்.

சட்டென, எழுந்து கொண்ட ரம்யா எழுந்து, ஓடத் தொடங்கினாள்.ஆனால் உடலும், மனமும் மிகவும் பலவீனமாக இருந்த நிலையில் அவளால் வேகம் எடுத்துக் கொண்டு ஓட முடியவில்லை. தன்னைத் துரத்திக் கொண்டு வந்த பணியாளர்களிடம் சிக்கிக் கொண்டாள் அவள்..

அதன் பின், மதர்ஸ் ஹாஸ்டல் என்று சொல்லப் படும் இடத்தில் இவளைப் போன்ற, பெண்களுடன், ரம்யாவும் தங்க வைக்கப்பட்டாள். எதிர் பாராத விதமாக தனது வாழ்வில் நிகழ்ந்த அந்த சம்பவத்திற்குப் பிறகு, தன்னை இந்த உலகம் எப்படி பார்க்கப் போகிறது? தன் வீட்டினர் தன்னை ஏற்றுக் கொள்வார்களா? என்ற குழப்பமும் அழுகையுமாக அவளது நாட்களும் அங்கே நகர்ந்து கொண்டிருந்தன.

வாசுவினால் அதற்கு மேல் பேச முடியவில்லை. தனது பேச்சை நிறுத்தி விட்டு " அவ இப்போ உயிரோட இல்லை, என் தங்கச்சி போய்ட்டா.. அவ இல்ல இல்லை.." என்று சொல்லி விட்டுப் பெருங் குரலெடுத்து அழத் தொடங்கினான் வாசு.

வெண்ணிலா ?? கண்ணீர் விட்டவனை கண்ணும் மனமும் கலங்க பார்த்திருந்தாள்........அவளுக்கு ரம்யா ஒரு மருத்துவரால் ஏமாற்றப் பட்டாள் என்று வாசு சொன்ன நிமிடத்திலேயே உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்து விட்டிருந்தது.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரோகிணி மருத்துவமனையில், காலை நேரப் பணிகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. எக் கலெக்ஷன், அறைக்குள்ளேயே வெண்ணிலாவை எதிர்பார்த்துக் கொண்டு இருந்த மருத்துவர் ஷீபாவுக்கு, அங்கே அவள் இல்லை என்பதை அறிந்து கொண்டதும் கடுங் கோபம் எழுந்தது.

ரிசப்ஷனுக்கு, அழைத்து, " வெண்ணிலா சிஸ்டர் வந்தாச்சா, அவங்களை உடனே என் ரூமுக்கு அனுப்புங்க " என்றாள்.

" அவங்க இன்னும் வரலியே டாக்டர். வந்ததும் கண்டிப்பாக அனுப்பி வக்கிறேன் " என்றாள் அங்கிருந்த பெண்.

அப்போது, அரக்கப் பறக்க , அங்கே வந்து பிருந்தா சிஸ்டர், " ஏய், வெண்ணிலா சிஸ்டர் வந்தாச்சாடி " என்று ரிசப்ஷனில் கேட்க

" என்னடி இது. இன்னிக்கு என்ன எல்லாரும் வெண்ணிலா சிஸ்டரைக் கேட்கறீங்க. இப்பத் தான் டாக்டர் கேட்டாங்க. பதில் சொல்லிட்டு போனை வச்சேன். நீ என்னடான்னா வந்தவுடனே அவங்களைக் கேக்கற? என்ன ஆச்சு? என்ன விஷயம் " என்று பிருந்தாவிடம் கேட்டாள் அந்தப் பெண்.

பிருந்தாவிடம் தான் முன் தினம் தீபக் வந்து விசாரித்து விட்டு, அவளிடம் இருந்த ஃபைலைப் போட்டோ எடுத்துக் கொண்டு இருந்தான். " ம்ப்ச், ஒன்னும் இல்லைடி, சும்மாதான் கேட்டேன்" என்று அவளிடம் மழுப்பி விட்டுத் தனது பணி இடம் நோக்கிச் சென்றாள் பிருந்தா.

மருத்துவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வெண்ணிலாவும் வரவில்லை! அங்கே மகளைக் காணாமல் இரவு முழுவதும் கண்ணீரோடு கழித்து விட்டு கிட்டத்தட்ட அரை மயக்கத்துக்குச் சென்று விட்டிருந்த , மேனகாவின் கண்ணீரும் வற்றவில்லை.


விடியற்காலையில் சற்று அசந்து தூங்கிப் போய் விட்டிருந்த மிருதுளா எழுந்து, வாசலைப் பெருக்கிக் கோலம் போட்டு விட்டுத் தனது பெற்றவர்களுக்குக் காபி கலந்து எடுத்து வந்தாள். சபாபதி, இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தார்.

' சரி அப்பாவை எழுப்ப வேணாம். நாம இன்னிக்கு பஸ்லேயே காலேஜ் போயிடலாம் ' என்று எண்ணிக் கொண்டவள் வழக்கம் போலக் கிளம்பத் தொடங்கினாள் . மேனகாவை எழுப்பி, " அம்மா நான் காலேஜ் போயிட்டு வர்றேன் " என்று சொன்ன போது அவள், " வேணாம், நீ எங்கேயும் போக வேண்டாம்.வீட்டில இரு பத்திரமா. காலேஜ் போறேன்னு சொல்லிட்டு காணாமப் போறதுக்கா? " என்று கேட்டாள் மேனகா.

" அம்மா , என்னம்மா நீ இப்படி கேக்கறே. நான் இன்னிக்குக் கண்டிப்பா காலேஜ் போகணும்மா. ரெக்கார்டு நோட்டில கையெழுத்து வாங்கணும். இன்னும் ரெண்டு நாள்ல எனக்குப் பிராக்டிகல் எக்ஸாம் ஆரம்பிச்சுடும் " என்று கெஞ்சும் தொனியில், மேனகாவிடம் கேட்டாள் மிருதுளா.

ஆனால், மேனகாவிடம் இருந்து, மீண்டும் மீண்டும், நீ எங்கேயும் போக வேண்டாம், நீயும் காணாமப் போயிடுவே என்ற வார்த்தைகளே வந்து கொண்டிருந்தன.

இதற்குத் தீர்வு தான் என்ன? பெண்களுக்கு எதிரான வன்முறைகள் முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டே வரும் இந்த சமுதாயத்தில், அவர்களது நியாயமான விருப்பங்களும் கூட, தள்ளிவைக்கப் படத் தான் வேண்டுமோ .??

( வரும்)
 
அட கொடுமையயே..
இப்படி வேலைக்கு வந்த பொண்ணு காணாமல் போன அது கேஸ் ஆகாத... அப்படி யாரும் கேஸ் கொடிக்கவே இல்லையா
 
அட கொடுமையயே..
இப்படி வேலைக்கு வந்த பொண்ணு காணாமல் போன அது கேஸ் ஆகாத... அப்படி யாரும் கேஸ் கொடிக்கவே இல்லையா
next next varum sis
Thank you
 
Top