Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஓவியப்பாவை 16....

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 16.



வாளோடு நின்ற வசந்த மாலையை ஏளனமாகப் பர்த்தான் ரணதீரன்.



"நீ என் எதிரி அல்ல! உனக்கு உயிர்ப்பிச்சை அளிக்கிறேன் வாளை எறிந்து விட்டு ஓடி விடு" என்றான்.



அவனைக் கண்டு சீறினாள் வசந்த மாலை. "சீ! துரோகியே? நீயும் ஒரு ஆண் மகனா? உறங்கும் மனிதர்களை கொல்லத் துணிந்தாயே? என் வாளுக்கு பதில் சொல்லி விட்டு பிறகு இளவரசியை பார்" என்றாள். ஒரு புறம் காவலர்களோடு மார்த்தாண்டன் போராடிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவர்கள் பக்கம் இருந்தது இரு காவலர்கள் தான். ஆனால் மற்ற பத்து காவலர்களையும் மிகத் திறமையாக சமாளித்தான் மார்த்தாண்டன். ஆனால் எத்தனை நேரம் அவனால் தாக்குப்பிடிக்க்க முடியும்? அப்படி அனைவருமே வீழ்ந்து விட்டால் காளி சிலை அந்தக் கயவனின் கைகளுக்கு அல்லவா போய் விடும்? பிறகு அவனை அழிக்கவே முடியாதே இப்படிப் பல சிந்தனைகள் அலைக்கழித்தன செண்பகவல்லியை. அவளுக்கு நொடியில் தன் நிலைமை புரிந்து விட்டது.



குருவை மனதால் நினைத்துக்கொண்டாள். காளி சிலை இருந்த பெட்டியை வணங்கினாள். வடக்கு நோக்கி அமர்ந்தவள் ஏதோ மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்தாள். அவள் மந்திரம் ஜெபிக்க ஜெபிக்க ரணதீரன் கால்களிலிருந்து ரத்தம் வடியலாயிற்று. அவன் வலியால் துடித்தான்.



"அடியே செண்பகவல்லி! என் மேல் ரக்த மந்திரம் பிரயோகிக்கும் அளவு வந்து விட்டாயா? இதற்கு மாற்று பூஜை செய்து விட்டு உன்னை வந்து கவனித்துக்கொள்கிறேன்" என்று கத்தி விட்டு விந்தி விந்தி ஓடி விட்டான். அவன் செல்லும் வழியெங்கும், ரத்தம் வழிந்தது. அவன் சென்றதும் பரபரப்பு தொற்றிக்கொள்ள தோழி வசந்த மாலையை அழைத்தாள்.



"மாலை! நாம் பிரியும் நேரம் வந்து விட்டது. இப்போது நான் சொல்வதை கவனமாகக் கேள். இதோ இந்தப் பெட்டியில் தான் காளி சிலை இருக்கிறது. இது ரணதீரனுக்கு இப்போது மட்டுமல்ல எப்போதுமே கிட்டக் கூடாது. அதற்காக என்ன செய்ய வேண்டும் எனச் சொல்கிறேன். சென்று மார்த்தாண்டனை அழைத்து வா" என்று கூறினாள்.



மிகச் சரியாக அதே நேரம் மார்த்தாண்டனுடன் போரிட்ட ரணதீரனின் ஆட்களும் ஓடி விட்டனர், அவன் இளவரசி எப்படி இருக்கிறார் என்பதை அறிய வந்தான். அவள் பத்திரமாக இருப்பதைப் பார்த்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.



"மார்த்தாண்டா! நல்ல நேரத்தில் வந்தாய்! நீ வசந்த மாலைக்குக் காவலாக இருக்க வேண்டும். நீங்கள் இருவரும் பாண்டிய நாடு சென்று இந்தச் சிலையை பத்திரப்படுத்த வேண்டும். இனி சில நூற்றாண்டுகள் இதற்கு பூஜை நடக்காது. அதனால் இதனை ஒரு கிணற்றில் போட்டு விடு. ஆனால் அந்தக் கிணற்றை நீ காவல் காக்க வேண்டும். நீயும் வசந்த மாலயும் மணந்து கொண்டு பல்லாண்டு வாழ வேண்டும். உம் சீக்கிரம் இப்போதே புறப்படுங்கள்" என்றாள். அவள் உடலிலிருந்து வியர்வை வெள்ளம் போல பெருகியது.



"இளவரசி! இது என்ன பேச்சு? உங்களை விட்டு நாங்கள் மட்டும் எப்படிச் செல்வோம்? நீங்களும் எங்களுடன் வாருங்கள்" என்றான் வசந்த மாலையும் கெஞ்சினாள். ஆனால் அதற்குள் இளவரசியின் மூச்சு சிரமமாக வெளிப்பட்டது. திணறலாகப் பேசினாள்.



"எனக்கு சமயம் இல்லை வசந்த மாலை! ரணதீரன் செய்யும் மாற்றுப் பூஜையால் எனக்குள் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. என் உயிர் பிரியும் நேரம் வந்து விட்டது. ஆகையால் என் கட்டளையை நிறைவேற்றுங்கள். இருவரும் புறப்படுங்கள். ஆனால் நான் இதோ இந்த ஓவியத்தில் இருப்பேன். மார்த்தாண்டா நீ தான் இனி எனக்குக் காவல். தென்காசிக்குச் செல்லாமல் புலிப்பட்டிக்குச் சென்று இதோ இந்த ஓவியங்களைப் பெட்டியில் வைத்து விடுங்கள். காளி சிலை பத்திரம் . அது தண்ணீரில் மூழ்க வேண்டும். இதோ வாள். இதனை வைத்துப் பூஜியுங்கள். நான் எப்போதும் உங்களோடு தான் இருப்பேன்" என்றாள் மெல்ல.



"எங்களை இப்படிக் கட்டிப் போட்டு விட்டாயே செண்பகம்? நீயில்லாமல் நான் வாழ்வது உண்டா? நானும் உன்னுடனே வருகிறேனடி! என்னையும் அழைத்துப் போ" என்று கதறினாள் வசந்த மாலை. மெல்லிய நகை ஒன்று பிறந்தது செண்பகவல்லியின் உதடுகளில்.



"என் கட்டளையை மீறாதே மாலை! உம் இப்போதே புறப்படு. எல்லா விவரங்களையும் இதோ இந்த ஓலையில் எழுதியிருக்கிறேன். எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு செல்லுங்கள். புலிப்பட்டி தான் உங்கள் எல்லை. அதைத் தாண்டக் கூடாது நீங்கள். உம் செல்லுங்கள் என் நேரம் நெருங்கி விட்டது" என்று தள்ளாடியபடியே கூறினாள். வசந்த மாலையும் மார்த்தாண்டனும் திரும்பிதிரும்பிப் பார்த்தபடியே கண்ணீர் வழிய சென்றனர். அவர்கள் சென்ற சில வினாடிகளுக்கெல்லாம் செண்பகவல்லியின் உடல் பல விதமாக முறுக்கிக் கொண்டது. எந்தக் காயமுமே இல்லாமல் வயிற்றிலிருந்து ரத்தம் வெளியேற ஆரம்பித்தது. வலியைப் பொறுத்துக்கொண்டு வடக்கு நோக்கி அமர்ந்து மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்தாள் அவள். அவள் சொல்லச் சொல்ல அவளது உடல் அப்படியே வேரற்ற மரம் போல சாய்ந்தது. அந்த உடலிலிலிருந்து உயிர்ப்பறவை விடை பெற்றிருந்தது.. அதே நேரம் வசந்த மாலை கொண்டு சென்ற ஓவியப்பாவையின் கண்கள் சீற்றத்தோடு திறந்தன.



கொஞ்ச நேரத்தில் அங்கு வந்த ரணதீரன் யாரையும் காணாமல் தேடினான். இளவரசியின் உயிரற்ற உடலைப் பார்த்து வெறி பிடித்தவன் போல கூவி அழைத்தான். அவளது மந்திரக்கட்டு அவனுக்குப் புரிந்து போனது.



"என்னை ஏமாற்றி விட்டாய் இல்லையா? நான் யார் தெரியுமா? ரணதீரன். இந்த ஜென்மம் மட்டுமல்ல உன்னை எந்த ஜென்மத்திலும் விட மாட்டேன். எங்கேயடி வைத்திருக்கிறாய் காளி சிலையை?" என்று அலறினான். அங்கேயே அமர்ந்து மந்திரங்களை உச்சரித்தபடி அவனும் தனது உடலை விட்டு விட்டான் அவன். ஆனால் அவனது ஆன்மா அமைதியின்றி அலைந்தது. உய் உய் என்று சுழன்றடிக்கும் காற்றில் அலைப்புற்றதில் அந்தக் காட்டில் இருள் இன்னமும் சூழ்ந்தது. மான்கள் மயில்கள் எல்லாம் ஓடி விட்டன. அவனது ஆன்மா தக்க தருணம் வரும் வரையில் அங்கேயே நிம்மதியின்றி அல்லல் பட்டு அலைந்து கொண்டிருந்தது.



ஆனால் இளவரசி அதைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து விட்டாள். மார்த்தாண்டனும், வசந்தமாலையும் இளவரசி வம்சத்தில் வந்த பெண்ணும் சேர்ந்து தேடினால் தான் தான் காளி சிலை இருக்கும் இடத்தைக் கண்டு பிடிக்க முடியும் என ஏற்டுத்தி விட்டாள். அதன் படி நாங்கள் புலிப்பட்டி வந்தோம். பாண்டிய மன்னர் இளவரசியின் மறைவைக் கேட்டு மனம் இரங்கினார். எங்களுக்கு நிறைய நிலமும் கிராமமும் கொடுத்தார். நாங்கள் அரண்மனை கட்டிக்கொண்டு இளவரசியை பூஜை செய்து வாழ்ந்து வந்தோம்.



ஆனால் ரணதீரனின் ஆன்மா எங்களுக்கு பல தொந்தரவுகளைச் செய்தது. அதனால் எங்களுக்குப் பிறந்த குழந்தைகளை வேறு இடங்களுக்கு அனுப்பி விட்டோம். செண்பகவல்லியின் மூதாதையர்களும் கேரளத்தை விட்டு தமிழகத்துக்கு வந்து விட்டார்கள். அவர்கள் எங்கே எப்படி இருக்கிறார்கள் என எதுவும் தெரியவில்லை. ஆனால் ரணதீரன் வரும் போது கட்டாயம் இளவரசியும் மார்த்தாண்டனின் வழி வந்த ஆண்மகனும் வசந்த மாலையும் வருவார்கள் எனக் காத்து இருக்கிறோம். இதைப் படிக்க முடிந்தவர்களால் தான் காளி சிலையைக் காப்பாற்ற முடியும். ஆகையால் விரைந்து புலிப்பட்டிக்குச் செல்லுங்கள்.



அந்த கடிதம் போன்ற ஓலை முடிந்து போயிருந்தது. திடுக்கிடும் நெஞ்சங்களோடு நிமிர்ந்தார்கள் மூவரும். நடுங்கும் குரலோடு பேசினாள் ஸ்வேதா,



"அப்ப நான் தான் இளவரசி செண்பகவல்லி வழியில வந்தவளா? அருண் தான் மர்த்தாண்டன் வழி வந்தவரா?"



"அப்படித்தான் இருக்கணும் ஸ்வேதா! அதனால தான் அந்த ரணதீரன் உன்னைத்தான் நான் கல்யாணம் பண்ணனும்னு ரொம்பப் பிடிவாதமா இருந்தான். இப்ப எனக்கு எல்லாமே புரியுது" என்றான் அருண்.



"உம் எனக்கும் புரியுது. யாராவது உதவிக்கு வருவாங்கன்னு போட்டிருந்தாங்க இல்ல? அந்த ஆள் நான் தான்னு நினக்கறேன்." என்றான் ராகுல்.



"இப்ப நாம என்ன செய்யணும்?"



"முதல்ல புலிப்பட்டிக்குப் போவோம். அங்க போயி ரணதீரனோட திட்டம் என்னானு கண்டு பிடிப்போம். அவன் கிட்ட இருந்து எப்படி காளி சிலையைக் காப்பாத்துறதுன்னு பிறகு யோசிப்போம். " என்றான் ராகுல். அவன் சொன்னது சரியென்றே பட்டது மற்றவர்களுக்கு.



"சரி ஆனா புலிப்பட்டிக்கு நாம மூணு பேரும் மட்டும் எப்படி போறது? அம்மா கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க" என்றாள் ஸ்வேதா.



"வேற வழியில்ல ஸ்வேதா! அவங்களையும் கூட்டிக்கிட்டு தான் போகணும். ஆனா நாம கவனமா திட்டம் போடணும். அந்த ரணதீரனை நாம நம்புறா மாதிரியே இருக்கணும். அவன் சொன்ன படியே தான் செய்யுறோம்னு அவன் நம்பணும். புரியுதா?" என்றான்.



அவனைப் புரியாமல் பார்த்தனர் ஸ்வேதாவும் அருணும். அவர்களை அருகில் அழைத்துக் காதில் ஏதோ சொன்னான் ராகுல். அவர்கள் திடுக்கிட்டாலும் வேறு வழியின்றி அதற்கு சம்மதித்தனர். மறு நாள் மாலை ஸ்வேதா அவளது குடும்பம். ஸ்வேதா மற்றும் அவள் குழும்பம், அருண் என பெரிய கூட்டமே புலிப்பட்டியை நோக்கிக் கிளம்பியது. ராகுல் சொன்னபடியே பெரியவர்களிடம் அந்த மகானை வணங்கத்தான் செல்கிறோம் எனச் சொன்னார்கள்.



அவர்களை சுமந்து சென்ற வேன் அதிகாலை நேரத்தில் புலிப்பட்டிக்குச் சென்றது. முற்றிலும் பழக்கமில்லாத அந்த கிராமத்தில் எங்கே தங்குவது? எங்கே குளிப்பது என இவர்கள் தடுமாறிக்கொண்டிருக்கும் போது ஸ்கூட்டியில் ஒரு யுவதி இவர்களைக் கடந்தாள். சற்று நேரத்தில் திரும்பியும் வந்தாள்.



"நீங்க தானே கோயம்புத்தூர்ல இருந்து வர கல்யாண கோஷ்டி? உங்களுக்குத் தங்க இடம் ஏற்பாடு செஞ்சிருக்கேன். வாங்க" என்று அழைத்தாள்.



வந்தவர்கள் திருதிருருவென விழித்தனர்.



"என்ன சார் முழிக்கறீங்க? பத்து நாள் முன்னால நீங்க தானே ஃபோன் செஞ்சீங்க?" என்று அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஓடி வந்தார் ஒரு பெரியவர்.



"மாலா! அது இவங்க இல்லைம்மா! அவங்க வரலையாம். கல்யாணத்தை கோயம்புத்தூர்லயே வெச்சுக்கப் போறாங்களாம். இப்பத்தான் ஃபோன் வந்தது. பத்து நாள்ல கல்யாணம் முடிஞ்சதும் இங்க வந்து சாமி கும்பிட்டுட்டுப் போயிடுவாங்களாம். " என்றார்.



அசடு வழிய இவர்கள் பக்கம் திரும்பினாள் மாலா.



"சாரி சார்! நான் யாரோன்னு நெனச்சுப் பேசிட்டேன். " என்று சொல்லி வண்டியை திருப்ப எத்தனித்தவளை தடுத்து நிறுத்தினான் அருண்.



"மேடம்! நாங்களும் கல்யாண கோஷ்டின்னே வெச்சுக்குங்க. இந்த ஊருக்கு ஒரு வேலையா வந்திருக்கோம். அது வரைக்கும் நாங்க தங்க இடம் கொடுக்க முடியுமா? லாட்ஜுக்கு என்ன வாடகையோ அதைக் கொடுத்துடறோம்" என்றான் அருண். அவன் கண்கள் அந்தப் பெண்ணின் முகத்திலிருந்து அகலவே இல்லை.



"அதுக்கென்ன சார்! நீங்க தாராளமா தங்கிக்கலாம். இது லாட்ஜ் இல்ல. எங்களுக்கு இங்க ரெண்டு வீடு இருக்கு. அதுல தான் தங்கணும். சாப்பாடு நாங்க செஞ்சு குடுத்திருவோம். ஒரு நாளைக்கு சாப்பாடு ஒரு ஆளுக்கு 200 ரூபா டிஃபன் சாப்பாடு ராத்திரி டிஃபன் காப்பி எல்லாம் சேர்த்து. இது உங்களுக்கு ஓகேன்னா வாங்க" என்றாள். மிகவும் கம்மியாகத் தோன்றியதால் உடனே ஒப்புக்கொண்டனர். அவர்களை அழைத்துக்கொண்டு புறப்பட்டாள் மாலா.



அவர்கள் செல்வதை இரு ஜோடிக்கண்கள் வெறித்துப் பார்த்த வண்ணம் இருந்தன. அதில் ஒன்று ரணதீரனுக்கு உரியது. அவன் திருப்தியான சிரிப்போடு "சொன்னபடி வந்துட்டாங்க" என்று சொல்லிக்கொண்டு வீட்டுக்குள் விரைந்தான். திருமணமான பெண் ஆனால் கன்னிப்பெண்ணை பலி கொடுக்க வேண்டும் என்பது அவனது எண்ணம். அதிலும் அவள் செண்பகவல்லியில் வழி வந்தவளாக இருந்தால் காளி சிலை என் வசப்பட்டு விடும் எனச் சொல்லிக்கொண்டே பூஜை செய்ய அமர்ந்தான் அந்த மந்திரவாதி.
 

Advertisement

Latest Posts

Top