Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 3

Advertisement

Aarpita

Active member
Member
தாரிகாவின் பெயர் ஒளிரும் கைபேசியின் திரையை கண்டவனுக்கோ, சிறிது நேரம் மறைந்து இருந்த கோபம் அனைத்தும் வெளிவந்து, முகம் சிவக்க நின்றவனின் தோற்றம் விளங்காத சக்தி, கைபேசியை எட்டி பார்த்ததுமே அனைத்தும் விளங்கியது அவனுக்கு.

"அடிப்பாவி. என்னை மாட்டி விடவே கால் பண்ணுவியா. இவன் வேற மொறைக்குறானே. போனை ஒடச்சிடுவானோ..??!!" நினைத்தவன் உடனே பாய்ந்து தர்ஷன் கையில் இருக்கும் தன் போனை பிடுங்கியவன்,

"ஹலோ" என்றான் காதில் வைத்த படி.

"என்னடா ரொம்ப நேரமா போன் அடிக்குது. அதை கூட எடுக்காம சார் என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க?" குறும்பாய் கேட்டாள் தாரிகா.

"இவ ஒருத்தி நேரம் காலம் தெரியாம வம்பு பண்ணிக்கிட்டு" நினைத்தவன்.

"நீ எங்க இருக்கன்னு சொல்லு" நேரடியாய் கேட்டான் சக்தி.

"உன் புடனிக்கு பின்னால தான் இருக்கேன் ஓவர் ஓவர்" என்றாள் லேசாய் சிரித்த படி.

அவள் பதிலில் பதறியவன், "என்னது வந்துட்டியா?" அதிர்ச்சியுடன் திரும்பியவனுக்கு நேர் எதிரே கையில் பூங்கொத்துடன் நடந்து வந்து கொண்டு இருந்தாள் தாரிகா.

"ஹைய்யயோ இவ என்ன நேரா இங்க வாறா, இவன் மட்டும் அவளை இங்க பார்த்தா, என்னை கொன்னுடுவானே" நினைத்தவன் பதறி போய் அவள் அருகே ஓட. அவளோ,

"இந்தாடா வருங்கால அப்பா.. பிடி" என்றாள் பூங்கொத்தை சக்தி கையில் கொடுத்த படி.

"இதெல்லாம் கரெக்ட்டா பண்ணு" என்றவன், ஸ்டேஜ் அருகே நிற்கும் தர்ஷன் மேல் தான் பார்வையாய் இருந்தான்.

இவர்களுக்கு முதுகு காட்டி நின்று கொண்டு இருந்த தர்ஷனுக்கு, காது மட்டும் அவளின் பேச்சில் தான் இருந்தது. அவள் குரல் கேட்டதும் உறங்கி கொண்டு இருந்த காதல் அணுக்கள் அனைத்தும் எழுந்து கொண்டு அவளிடம் போக துடிக்க பெற்றவன், கோபம் சென்ற இடம் தேடிக் கொண்டு இருந்தான்.

"ஆமா, விழா ஸ்டார்ட் ஆச்சா இல்லையா? எல்லாரும் வந்துட்டதா சொன்ன? யாரையும் காணோமே?" கேட்டாள் சுற்றும் முற்றும் பார்த்த படி.

"நான் உன் கூட பேசுறத மட்டும் அவன் பாத்தான், அவளோ தான். இங்கயே கொன்னு , திவசம் பண்ணி, இதோ இதே பூங்கொத்தை வெச்சிட்டு போயிடுவான்" நினைத்தவன்.

"நீ நல்லா சுத்தி பாரு தாரு.. நான் இதோ வரேன்" என்றான்.

"எங்கடா போறே.. எனக்கு இங்க யாரையும் தெரியாது" என்றாள் தாரிகா.

"ஆமாம், எனக்கு இங்க இருக்க எல்லாரையும் தெரியும்.. இங்க மாப்பிள்ளை விருந்துக்கு வந்து இருக்கேன் பாரு. நான் வரு கிட்ட போறேன். ரொம்ப நேரமா அவளை காணோம். நீ அந்த ஸ்டேஜ் பின்னாடி இருக்க ஆபீஸ் ரூம்க்கு வந்துடு" என்றவன் அடுத்த நொடி அவ்விடம் நிற்கவே இல்லை.

"லொகேஷன் சொல்றவன் கூடவே கூட்டிட்டு போகலாம்ல.. இவன் எதுக்கு வித்தியாசமா நடந்துக்குறான்.. ஏதோ கால்ல சூடு தண்ணி கொட்டுன மாதிரியே இருக்கானே.. என்னவா இருக்கும்??" யோசித்து கொண்டே இருந்தவள், ஸ்டேஜ் நோக்கி தன் அடிகளை எடுத்து வைத்தாள்.

திரும்பி நின்ற வண்ணம் இருந்த தர்ஷனுக்கோ, காதும் நினைவும் நிற்காமல் பேசும் அவள் பால் தான் இருந்தது.. திடீரென அவள் பேசும் ஓசை அவன் செவியை எட்டாமல் போகவே,

"என்ன சத்தத்தையே காணோம். ஒருவேளை வேற எங்கயாச்சும் போயிருப்பாளோ..??!" நினைத்தவன்,

"அந்த பைத்தியம் போன் வேற வாங்கிட்டு போய்ட்டான். ஹோட்டலுக்கு வேற கால் பண்ணனுமே" யோசித்த படியே நின்றவனின் தோள் தொட்ட ஒரு கை.,

"சார், ஆபீஸ் ரூம் எந்த பக்கம் போகணும்" என்றதின் குரல் கேட்டதுமே அது தாரிகா தான் என்பதை உணர்ந்தவன், பதில் எதுவும் சொல்லாமல், அமைதியாய் நிற்க.

"என்ன இவருக்கு காது கேட்காதோ.. பதிலே சொல்லாம இருக்காரே…??" எண்ணிவள்.

"சார் உங்களை தான், ஆபீஸ்கு எப்படி போகணும்?" என்றாள் இம்முறையும் அவன் தோள் தட்டி.

இப்போதும் அவளை பார்க்க மன தைரியம் அற்றவன் அமைதியாகவே நிற்க,

"இது சரிப்படாது…" நினைத்தவள்.

அவனின் கை பற்றி கழுத்தை மட்டும் முன் நோக்கி கொண்டு வந்தவள், அவன் கைகளை பிடித்து தொங்கிய படி, அவன் முகம் பார்த்து,

"சார்.. ஆபிஸ்....." என்றவள் பேசிக் கொண்டே அவனின் முகம் பார்க்க, அது கூறிய குறிப்பில் இதயம் ஒரு முறை நின்றே துடித்தது.

"தன் தோள் தொட்டவள், பின் தன் கையில் பின்னி கொண்டு, அதை கொண்டு தன் முன் தொங்கி நிற்பதை போல் வந்து நிற்க, விழுந்து விடுவளோ என்று பதறியவன், சற்றே குனிந்து அவளின் தலையில் ஒரு கை வைத்து தாங்க, இருவரின் விழிகளும் பல காலம் கடந்து இன்று வெகு அருகே மோதிக் கொண்டன, மனதில் புயல்களை உருவாக்கி.

மிக அருகே கண்டவளின் விழி மலர் கூட விரிந்து அதிர்ச்சியை வெளிப்படுத்துவதை கண்டவனுக்கோ, அந்த நொடி, மீண்டும் அவளுள் கரையவே தூண்டிக் கொண்டு இருந்தது அவனின் மனம்.

மறுநொடி அன்றைய தினத்தின் நினைவு மூளையில் புதுப்பித்து இருக்க, அதனின் விளைவாய் கோபம் குடி கொள்ள பெற்றவன், அவளின் தலை தாங்கிய கையை அகற்றி, அவளின் கழுத்தை காற்றில் வேகமாய் விட, அது ஏற்படுத்திய திடீர் வலியில்,

"ஸ்ஆஆஆஆ" முனகலோடு அவன் கை பின்னி கிடந்த தன் கையை பிரித்து எடுத்து, சரியாய் நின்றவள், தன் கழுத்தில் கை வைத்து அதை நீவி விட்ட படி,

"என்ன பாஸ். திடீர்னு இப்டி வீட்டுடீங்க? வலிக்குது பாருங்க" என்றாள் தர்ஷனை பார்த்த படி.

அவளின் பேச்சில் நெற்றிக்கண் திறந்தவன், அவளை இயன்ற வரை முறைத்து விட்டு,

"சொல்லாம கொள்ளாம விட்டுட்டு போறது எல்லாம் என்னோட பழக்கம் இல்லை. அது இல்லாம, ஒருத்தர் மனசை காயப்படுத்திட்டு, திடீர்னு விட்டுட்டு போறது உன்னோட பழக்கம். மத்தவங்க வலியை கூட புரிஞ்சிக்காம போற உனக்கெல்லாம் இதை விட பெரிய வலி நிச்சயம் கிடைக்கும்" கிட்டத்தட்ட சபித்தே விட்டவன், இறுதியில் அதை உணர்ந்தவன்.,

அவளின் இரு கைகளையும் பற்றி, தன் அருகே இழுத்தவனின் செயலில் அவன் மார்பில் மோதி நின்றவளை,

"இதோ பார்.. இந்த விழா முடிஞ்சி போற வரைக்கும் என்னோட முகத்துல கூட முழிச்சிடாத.. சொல்லிட்டேன்.. முடிஞ்சவரை என் கிட்ட இருந்து தள்ளியே இரு" என்றவன் அழுத்தமாய் அவளின் கை பற்றி இருந்த அதே வேகத்தில் அவளை விட்டுச் செல்ல, இரண்டு அடி பின்னால் சென்று பின் நின்றவள், போகும் அவனையே கண் இமைக்காமல் பார்த்து விட்டு,

"நான் என்ன தான் நியாயம் சொன்னாலும், உனக்கு நான் பண்ண துரோகத்தை நியாயப்படுத்த முடியாது. அதுக்கு பதிலா எவ்ளோ பெரிய சாபத்தை நீ எனக்கு குடுத்தாலும் நான் ஏத்துக்க தயாரா இருக்கேன்" வெற்று புன்னகை புரிந்தவள், ஆபீஸ் நோக்கி சென்றும் விட்டாள், மகிழ்ச்சியில் குதிக்கும் ஒரு மனமும், துக்கத்தில் மருகும் மறு மனத்துடனும்.

வருத்தத்துடன் செல்லும் தாரிகாவையும், கோபமாய் செல்லும் தர்ஷனையும் தொலைவில் இருந்து பார்த்து கொண்டு இருந்த சக்தி,

“நல்ல வேளை, இத்தனை வருஷம் கழிச்சி ரெண்டு பேரும் நேருக்கு நேர் வர அப்போ நான் பக்கத்துல இல்லை. இல்லனா கைக்கு வாக்கா இருக்கேனு என்னை இழுத்து போட்டு கும்மி இருப்பான் அந்த சிடு மூஞ்சி" நினைத்து கொண்டவன்,

"இப்படியே போனா, இதுங்க எப்போ தான் மனச திறந்து பேச போகுதுங்கனே தெரியலையே. இதுக்கு என்ன தான் வழினே புரியலையே" புலம்பியவனுக்கு தெரியாது, காலம் வழியை எப்போதோ திறந்து விட்ட கதை.

ஆபீஸ் இருக்கும் இடத்தை கேட்டு அறிந்து கொண்ட தாரிகா, அங்கு செல்ல, அதே நேரம் பார்த்து அந்த அறையை விட்டு வெளியே வந்தாள் ஸ்ரீஜா.

அவ்விடம் தாரிகாவை எதிர்பாராதவள்,

"சில ஜென்மங்கள் எல்லாம் வெட்கமே இல்லாம எப்படி தான் சுத்துதுங்களோ தெரியல.. ச்சீ.. மூஞ்சில முழிச்சாலே பாவம்" பேசியவள், இயன்ற வரை முகத்தில் வெறுப்பை காட்டிய படி தான் அங்கிருந்து நகர்ந்தாள்.

அவளின் வார்த்தைகள் நெஞ்சை தைக்கும் ஊசிகளாய் இருந்தாலும் கூட அதையும் புன்முறுவலுடன் ஏற்று கொண்டவள், உள்ளே நுழைய, அங்கு ஏற்கனவே அமர்ந்து சிஸ்டர் மேரியிடம் பேசி கொண்டு இருந்தான் தர்ஷன்.

உள்ளே வரும் அவளை கண்டதும்,

"இதுக்கு மேல இங்க இருக்க வேணாம். ரெண்டு பேருக்குமே அது நல்லது இல்லை" நினைத்தவன் எழுந்து வெளியே செல்ல முற்பட, அப்போது தாரிகா பின்னால் இருந்து வந்தான் சக்தி. எழுந்து வெளியே செல்ல முற்படும் அவனை கவனித்தவன்,

"எங்கடா போறே. சைன் பண்ணிட்டியா? இன்னும் விழா ஸ்டார்ட் ஆகல. சோ இங்கயே உக்காரு. வெளிய நல்ல வெயில்" என்றான் இருவருக்கும் இடையே பாலமாய்.

அவ்விடம் அவனை மறுத்தோ, கோவபட்டோ எதுவும் பேச இயலாது என்பதை உணர்ந்தவன், அமைதி காத்து அமர்ந்து கொள்ள, அவ்விடம் வந்த தாரிகாவிடம்,

"நீங்க தான் தாரிகாவா!!! ஃபர்ஸ்ட் டைம் பாக்குறேன். உங்களுக்காக தான் நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். ஃபைனலி நீங்க வந்துட்டீங்க. இதோ தர்ஷன் கிட்ட இருக்க பேப்பர்ஸ் வாங்கி அதுல சைன் பண்ணுங்க" என்றார் சிஸ்டர் மேரி.

“அதே சமயம், சிஸ்டர் இது என்ன அட்டை.. இது எதுக்கு... அதுவும் இங்க இருக்கு. இதை வெளியில கொண்டு போய் டெகரேஷன் பண்ற இடத்துல வெச்சிடவா?" கேட்டான் சக்தி.

“நோ நோ சக்தி.. இது ஷீலாக்காக ஒரு ஹார்ட் வடிவத்துல வெட்டி வெச்சி இருக்கேன்.. அது மேல டிசைன் போட்டுட்டேன்.. பட் இன்னும் வெட்டனும்.. அதான் பாக்கி.. நான் இந்த பேப்பர் ஒர்க் பாக்குறதால பண்ண முடியல" என்றார் காகிதம் ஒன்றை சரி பார்த்த படி.

"அதுல என்ன இருக்கு மேம்.. தாங்க நான் பண்ணித் தரேன்" என்றவன், நெருங்கும் போதே, அவன் கைபேசி அலற, அதை எடுத்து யார் என்பதை பார்த்தவன்.,

"டேய் தர்ஷா, வரு கால் பண்றா.. நீ கொஞ்சம் வெட்டி வெய்டா.. நான் வரு கிட்ட போய்ட்டு வரேன்" என்றவன் அவசரமாய் கைபேசியில் பேசியபடி வெளியே சென்று விட்டான் சக்தி.

"மேடம், இதை வெட்டக் கத்தி எதுவும் இல்லையா?" கேட்டான் தர்ஷன்.

"இருக்கு தர்ஷன்.. பட் சின்ன ஃபோல்டிங் நைப் தான் இருக்கு.. அதுவுமே ரொம்ப பழசு.. அதோ டேபிள் மேல இருக்கு பாரு" அவர் காட்டிய இடத்தில் இருந்து அந்த கத்தியை எடுத்தவன், அதனை திறக்க முயற்சிக்க, அது சரியாய் திறக்காமல் போகவே, அதை இரண்டு முறை காற்றில் வீசி பார்த்தவனுக்கு, அது பாதி திறந்து, மீதி சிக்கி கொண்டது.

அதை வெளியே எடுக்கும் பொருட்டு, வேகமாய் அதை அவன் காற்றில் வீசவும், அவனிடம் இருக்கும் பேப்பர்களை எடுக்க தாரிகா அவன் அருகே வரவும் சரியாய் போக, அந்த கத்தி முழுதாய் திறந்து, தாரிகாவின் வலது முன்கையை ஆழமாய் பதம் பார்த்து இருந்தது.

அது அவள் தசைகளை கிழித்து வெளி வந்த அடுத்த நிமிடம், காயத்தில் இருந்து குருதி நிற்காமல் வழிய, வலி தாங்காதவள் கத்தி கொண்டு கீழே விழுந்தாள், கிட்டத்தட்ட மயங்கிய நிலையில்.
 
Top